பக்குவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 6,466 
 

அலுவலகத்தை விட்டு கிளம்பும் போதுதான் மின்னஞ்சல் வந்திருந்தது. அடுத்த நாள் காலையில் மேனஜருடன் மீட்டிங். மேனஜருக்கு இது வாடிக்கையாகிவிட்டது. மறுநாள் காலை சரியாக ஒன்பது மணிக்கு மீட்டிங் என்று முந்தின நாள் மாலை ஏழு மணிக்கு மின்னஞ்சலை அனுப்புவார். ஏழு மணிக்கு முன்பாக வீட்டிற்கு கிளம்பியவர்கள் மீட்டிங் இருப்பதே தெரியாமல் லேட்டாக வருவார்கள். சீக்கிரம் கிளம்பிவிடுகிறீர்கள் லேட்டாக வருகிறீர்கள் என்று மேலேவிழுந்து பிறண்டாத குறையாக கும்முவார். தனசேகரனுக்கு இது பிரச்சினையாக இருந்ததில்லை. எப்பொழுதுமே காலை எட்டுமணிக்கு கர்மசிரத்தையாக அலுவலகத்திற்குள் நுழைந்துவிடுவான். இரவு பத்து மணிக்கு வாட்ச்மேன் லைட்டாக தூக்கத்தை தொடும் போது ”நான் கெளம்புறேண்ணே” என்று கலைத்துவிட்டு வருவான்.

தனசேகரனுக்கு வேறு வழியும் இல்லை. பன்னிரெண்டாவது வரைக்கும் தமிழ் மீடியத்தில் படித்தான், கல்லூரியிலும் தத்துபித்து. முப்பாதயிரம் சம்பளமாகக் கொடுத்து சாஃப்ட்வேரில் வேலை கொடுத்துவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் உருண்டு புரண்டு படித்துக் கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆயிற்று. இப்பொழுது கம்ப்யூட்டரில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆங்கிலம் பேசுவதுதான் பிடிபட்டாமல் போக்கு காட்டுகிறது. ஆனால் தனசேகரனின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இவன் சிரமப்படுவது எல்லாம் தெரியாது. இரண்டு பேருமே கூலி வேலைதான். பெரும்பாலும் விவசாயக் கூலிக்குத்தான் போவார்கள். தோட்டங்காடுகளில் வேலை இல்லையென்றால் கட்டடவேலைக்கு போவார்கள். இவர்களுக்கு தனசேகரன் ஒரே மகன் என்பதால் பாசத்திற்கும் செல்லத்திற்கும் பஞ்சமேயில்லை என்றாலும் வீட்டில் அவ்வப்போதுப் பஞ்சம் வந்துவிடும். இருபது ரூபாய்க்கு தனாவின் தந்தை அலைந்த கதையெல்லாம் உண்டு.

தான் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகியிருப்பதாக தனா சொன்னபோது அவனது அப்பாவுக்கு அது பெரிதாக தெரியவில்லை. சம்பளத்தை அவர் கேட்கவும் இல்லை. அவனாகத்தான் மாசம் முப்பாதாயிரம்ப்பா என்றான். அவரால் ஒரு கணம் நம்பமுடியவில்லை. தன் வாழ்நாளில் அவர் அதிகபட்சமாக பார்த்த தொகை பதினாலாயிரத்து முந்நூறு ரூபாய். அதுவும் தனாவின் காலேஜ் பீஸ் கட்டுவதற்காக கடன் வாங்கிக் கொண்டு போனபோது அத்தனை கவனமாக சுமந்து சென்றார். இதனாலேயே அவனது சம்பளம் திகைப்படையச் செய்தது. கிள்ளிப்பார்த்துக் கொண்டவர் அவரையும் அறியாமல் சில கண்ணீர்த்துளிகளை சிந்திவிட்டார். அவனது அம்மா ஊரில் இருக்கும் சாமிகளை எல்லாம் கும்பிட்டுக் கொண்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர்களது உலகம் மொத்தமாக மாறியிருந்தது. ஊருக்குள் அத்தனை பெருமையாக பேசிக் கொண்டார்கள்.

வேலைக்கு சேர்ந்த பத்து மாதங்களுக்கு பிறகாக பதினெட்டு சதவீத வட்டியில் தனசேகரன் பெர்சனல் லோன் வாங்கினான். குடிசையை முதலில் மாற்றிவிட வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது. ஒரு மாத இ.எம்.ஐ கூட கட்டி விட்டான். தனாவின் அம்மாவும் அப்பாவும் இத்தனை சிரித்து அவன் பார்த்ததில்லை. இப்பொழுது வாராவாரம் ஊருக்கு வந்துவிடுகிறான். வாழ்க்கையின் அத்தனை வசந்தங்களையும் பார்க்கத் துவங்கியிருந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் வழக்கம் போலவே எட்டு மணிக்கு போய்விட்டான். கொஞ்ச நேரம் மெயில், கொஞ்ச நேரம் செய்திகள் என்று கம்ப்யூட்டரில் மேய்ந்து கொண்டிருந்த போது மேனேஜர் வந்தார். கையில் கொஞ்சம் ஃபைல்களுடன் வந்தவர் தனது வழக்கமான உறுமலுடன் அறைக்கு அழைத்தார்.

**

“தனசேகரன் சொல்லுறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு ஆனால் டாப் லெவல் மேனேஜ்மெண்ட் ஆர்டர் உங்களை ஃபயர் பண்ணவேண்டியதாகிடுச்சு”

“சார் திடீர்ன்னு…என்ன சார் இப்படி சொல்லுறீங்க?”

“இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க நீங்களாவே ரிசைன் பண்ணிட்டு போற மாதிரி டாக்குமெண்ட்ஸ் தர்றோம்”

“சார்…எனக்கு வேற எதுவுமே தெரியாது சார்…லோன் எல்லாம் வாங்கியிருக்கேன்”

“அழாதீங்க தனா. நீங்க மட்டும் இல்லை இன்னைக்கு மட்டும் இன்னும் முந்நூறு பேரை வெளியே அனுப்ப போறோம்”

“என்ன ரீஸன் சார்?”

“சாரி..அதெல்லாம் கான்பிடென்ஷியல்”

“சார்..ப்ளீஸ் சார்”

“என்கிட்ட எதுவுமே இல்ல தனா. சொன்னா புரிஞ்சுக்குங்க”

“அம்மா அப்பா என் மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்காங்க சார்”

“ம்ம்ம்”

“வேற ஆப்ஷனே இல்லை”

**

கையெழுத்திட்டவுடன் தயாராக இருந்த சில தாள்களை கொடுத்துவிட்டு ‘ஆல் த பெஸ்ட்’ சொன்னார்கள். தனது டேபிளில் இருக்கும் உடைமைகளை எடுத்துக் கொள்ள தனசேகரன் அனுமதிக்கப்பட்டான். அலுவலகத்தில் இருக்கும்வேறு யாருடனும் பேசக் கூடாது என்று முன்பே சொல்லிவிட்டார்கள். தனாவின் முகம் வெளிறிக்கிடப்பதை பார்த்தவர்கள் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக்கொண்டார்கள். இது அவர்களுக்கு இன்னுமொரு ‘ஃபயரிங்’ அவ்வளவுதான். தனா இன்னமும் இத்தகைய இடிகளை தாங்கிக் கொள்ளும் பக்குவமற்றவனாக இருந்தான். பெர்சனல் லோன் வாங்கியதன் இ.எம்.ஐ தான் அவன் முன்பாக இருந்த பூதாகர பிரச்சினை. இன்னொரு வேலை தேடிவிடலாம் என்ற சிந்தனை துளியுமற்றவனாக இருந்தான். இந்த உயர்ந்த கட்டட நிறுவனங்கள் கருணையற்றதாகத் தோன்றின. ஒரு மாதம் முன்பாக அறிவித்திருந்தால் கூட வேறு ஏதேனும் வழிகளை தேடியிருக்கலாம் என்று நினைத்த போது அழுகை பீறிட்டது.

அம்மா அப்பாவை நினைத்து பெரும் வேதனையடைந்தான். அவர்களின் ஒரே பற்றுதலாக தான் மட்டுமே இருப்பதைவிடவும் இந்தத் தோல்வியை தெரிவித்து அவர்களை வருத்தமடையச் செய்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். தற்கொலை செய்துகொண்டால் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்று தோன்றியது. ரயில்வே ட்ராக் அருகேதான் நின்று கொண்டிருந்தான். தூரத்தில் மின்சார ரயில் வருவது தெரிந்தது. முடிவு செய்ய முடியாமல் குழம்பினான். மின்சார ரயில் நெருங்கிக் கொண்டிருந்தது. அவனது அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டான். இன்னும் ஒரே ஒரு வினாடிதான். பெரும் சப்தத்துடன் ட்ரெயின் தாண்டியது. நீங்களும் நானும் நினைத்ததும் நடக்கவில்லை. தனா நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். ட்ரெயின் அவனை தாண்டுவதற்கு முன்பான ஒரு வினாடியில் தனா முடிவு செய்திருந்தான். வாழ்வை இன்னொரு முறை எதிர்கொண்டு பார்க்கலாம் என.

– ஆகஸ்ட் 14, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *