கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 7,186 
 

இந்த விஷயத்தை எங்களுக்குச் சொன்னது, பக்கத்துப் போர்ஷன் ஆராவமுது சார். திருவல்லிக்கேணியில் ஒரு இருண்ட சந்தில், காற்றோட்டமில்லாத, எழுந்ததும் நாலு மணிக்கே வீட்டுக்கு வீடு எம்.எஸ்.ஸின் சுப்ரபாதம் ஒலிக்கும் ஜனத்திரட்சியில்தான் எங்கள் ஜாகை.

”மிஸ்டர். பத்மநாபன்! விஷயம் தெரியுமோல்லியோ?, கோமள விலாஸ் பக்கத்தில இன்னைக்கு ஸ்ரீ ஹனுமன் சமாதி அடைஞ்சிருக்கார்.”—-கைகளால் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“அய்யோடா என்னா கூட்டம்?. சித்த நாழி நின்னு அந்த கண்கொள்ளாக் காட்சியைப் பாக்கமுடியலேன்னா.”

ஒரு நிமிஷம் எங்களுக்கு எதுவும் புரியவில்லை. அய்யர் கொஞ்சம் கொஞ்சம் சுவாரஸ்யத்துக்காக சரடு சேர்ப்பவர்தான், அதுக்காக இப்படியா?.

“என்ன ஸ்வாமி! ஸ்ரீ ஹனுமன் திருவல்லிக்கேணியில சமாதி அடைஞ்சிட்டாரா?. அதுவும் இன்னைக்கா?.”

“ஆமான்னா.இப்பத்தான். சித்த நாழி முன்னாடிதான்.நானே பார்த்துட்டுன்னா வர்றேன்..”

சுந்தரம் உதடு பிரியாமல் சிரித்தான்..

“ஏண்டா பத்தூ! நாம இப்ப திரேதாயுகத்தில ஜீவிக்கிறோமா?.ஏன் ஸ்வாமீ! ஜாக்கெட் போடாம, கச்சை கட்டிண்டு அங்க சீதாப்பிராட்டி இருந்திருக்கணுமே. பர்த்தேளோ?.”——நான் சுந்தரத்தை அடக்கினேன்.

“நீங்க சொல்லுங்கோ.!.”

“நேக்கு என்ன?, கேள்விப்பட்டதை சொல்லிட்றேன். கோமள விலாஸுக்கு பக்கத்து காலிமனையில் டெண்ட் போட்டு தங்கிண்டு  ஒரு வடநாட்டு கும்பல் தெருத்தெருவா சுத்தி கம்பளி போர்வை, ப்ளாங்கெட்னு வித்து பொழப்பை நடத்திண்டிருந்தாளோல்லியோ.?. அவா கிட்ட எங்கிருந்தோ ஒரு குரங்கு வந்து ஒட்டிண்டதாம்.. அதில ஒரு அதிசயம் பாருங்கோ., போன வருஷம் ஒரு புரட்டாசி மாச சனிக்கிழமையிலதான் அவங்க கிட்ட வந்து சேந்திருக்கு. எவ்வளவோ துரத்திப் பார்த்திருக்கா. அது போவல. சரீன்னு விட்டுட்டா. அவாளுக்குள்ள ஒரு கிழவன். ரொம்ப ஆச்சாரமாம். தினசரி சுத்தபத்தமாய் குளிச்சிட்டு, நெத்தியில திரிசனம் இட்டுண்டு, பகவானை சேவிச்சுண்ட பிற்பாடுதான் அவாளுக்கு போஜனம் இறங்குமாம்.. ஒரு நா குரங்கு அதுக்கும் திரிசனம் போடச் சொல்லி கத்தி கலாட்டா பண்ணியிருக்கு.. சரீன்னு கிழம் போட்டு விட்டிருக்கு . அன்னையிலயிருந்து தினத்துக்கும் நாமத்தை போட்டுண்டு நேராய் ஸ்ரீபார்த்தசாரதி கோவிலுக்கு போயிட்றதாம்.”.

“அடடே!.நான்கூட கோபுர வாசல்ல அதைப் பார்த்திருக்கேன். பட்டையாய் நாமத்தை போட்டுக் கிட்டு தாவிக்கிட்டிருக்கும். பெருசு, திம்மாங் குரங்கு.”

‘அதேதான்…அதேதான்…அங்க போங்கோ கதைகதையாய் சொல்றாள். தேகம் சிலுத்துப் போறது. நேக்கு என்னமோ அது ஸ்ரீ ஹனுமனின் மறு அவதாரம்னுதான் பட்றது.’—–ஆராவமுது அய்யர் கன்னங்களில் படபடவென்று போட்டுக் கொண்டார்.

“ஹும்! ஒரு செங்கல்லுக்கு பொட்டு வெச்சி விட்டுட்டாலே விழுந்து விழுந்து கும்பிட்ற தேசமாச்சே இது. குரங்கை

விட்றுவாங்களா?..”—–இது சுந்தரம். ஆராவமுது சார் அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு, உதட்டை சுழித்தபடி போய்விட்டார்.. எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

“ டேய்! இது அவங்க நம்பிக்கை. உனக்கு எப்படி கடவுள் இல்லையென்பது நம்பிக்கையோ அதுபோல. மத்தவங்க மனசை நோகாடிக்கிறதில அப்படியென்ன திருப்தி உனக்கு?.”

நாங்கள் அங்கே போனபோது டெண்ட்டைச் சுற்றி ஒரே கூட்டமாய் இருந்தது.. உள்ளே அந்த வட நாட்டு கும்பல், ஏழெட்டுப் பேர் இருக்கும். தடிவாலா ஒருத்தன் ஹிந்துஸ்தானியில் காரேபூரே. என்று பாடிக் கொண்டிருக்க, குண்டாய் ஒரு பெண் டோலக் மாதிரி ஒன்றை தட்டிக் கொண்டிருந்தாள். பிரதானமாய், செத்துப் போயிருந்த அந்த குரங்கு கிடத்தப்பட்டிருந்தது.. உடல் முழுக்க மஞ்சள் பூசி, நெற்றியில் தடிமனாய் நாமம்.. தலைப்பக்கம் கற்றையாய் ஊதுபத்தி புகைந்துக் கொண்டிருந்தது. வெளியில் சேர் போட்டிருக்க, அதில் நகரத்தின் சமுதாய முன்னணி தலைவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“அட! அதுக்குள்ளார அங்கவரைக்கும் விஷயம் பரவியாச்சா?.. கிழிஞ்சிது.”

ச.மு. தலைவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்..

“சே! பகவானுடைய லீலையை என்னன்னு சொல்றது?. நெசமாவே இது ஸ்ரீஹனுமனின் மறு அவதாரம்தாம்பா. சனிக்கிழமைகள்ல ஒண்ணுமே சாப்பிடாதாமேய்யா. ட்ரை பண்ணிப் பார்த்திருக்காங்க.. ஊஹும்.அன்னைக்கு பூரா கொலைபட்டினியாமே. இதைப் போயி குரங்குன்னு எப்படி சொல்றது?. அதுக்கு விட்ட குறை தொட்ட குறை இருந்ததாலதான் ஸ்ரீபார்த்தசாரதி கோவிலே கதின்னு கிடந்திருக்கு..”—–கன்னத்தில் போட்டுக் கொண்டார். இதைக் கேட்டுவிட்டு பதில் சொல்லாமல் அல்லது நக்கல் பண்ணாமல் சுந்தரத்தால்  இருக்க முடியாது.

“இதுதான் சனிக்கிழமைன்னு அதுக்கு எப்படி சார் தெரியும்?. நமக்கே காலண்டர்களும்,தினசரிகளும், ரேடியோ டி.வி.களும் ஞாபகப் படுத்தலேன்னா கிழமை தெரியாம நாறிப் போயிருவோமே..”

“அதான் சார் கடவுள் மகிமை. உள்ளுணர்வு சொல்லிரும். அதுங்களைப் பாருங்க அப்பாவி ஜனங்க., வெகுளிகள். எவ்வளவு தூரம் மனமுருகிப் பாடுதுங்க?. சாவு வூடுமாதிரி நிஜமான அழுகை சார்.. வஞ்சமில்லாத ஜாதி.”

“உம்…ம்..ம்.!.எ..ப்..ப்..பா! ஒவ்வொண்ணும் அழுக்கு மூட்டைங்க. இங்கவரைக்கும் மூக்கைப் பிடுங்குதே. சார்! அநேகமா இதுங்க நாத்தத்திலியே அனுமன் உயிரை விட்டிருக்கணும் சார்.”—— தலைவர் சுந்தரத்தை வில்லங்கமாய் பார்த்தார். உள்ளே பஜனை பாடிக் கொண்டிருந்த அந்த நாமதாரி கிழவன் என்ன நினைத்தானோ.?. எழுந்து எங்களிடம் வந்து நின்றான். சுந்தரத்தை அழுத்தமாய் பார்த்தான்.. ஒரு வேளை அவனுடைய நக்கல் பேச்சை புரிந்துக் கொண்டிருப்பானோ?. மூக்கு விடைத்துக் கொள்ள, கண்கள் மின்னியது. சுந்தரத்தின் கையைப் பற்றிக் கொண்டான்.

“பாபூ!…பாபுஜீ! எக்ஹ் பந்தர் நஹீ, ஸ்ரீஹனுமான் ஹை. சம்ஜீ?.ஹம் ஜூட் நை போல்தாங். சச்…சச்..பில்குல்..சச் போல்தாங்….ஹே ராம்!.”—-மேலே கைகளை உயர்த்தி கடவுளைத் தொழுதான். அக்குளில் அடைஅடையாய் அழுக்கு. மற்ற அழுக்குகளும் எங்களைப் பார்த்து ஆவோஜீ  சாஹேப்! என்றதுகள். டோலக்கைத் தட்டிக் கொண்டிருந்த குண்டு பெண், குலுங்கக் குலுங்க ஓடிவந்து, சுந்தரத்தின் கையைப் பற்றி தன் மார்பில் வைத்துக் கொண்டாள்..

“மேரா பாயீ ! வக்ஹ் பந்தர் நஹீ, வக்ஹ் ஹனுமான் ஹை. ஜூட் நஹீ. சச்…சச் போல்தாங். ஹே ராம்! ஜெய் ஹனுமான்.”—கண்கள் குளமாகிப் போக, உள் பக்கம் திரும்பி உள்ளே சயனித்திருக்கும் ஸ்ரீ ஹனுமனை கும்பிட்டாள். சுந்தரம் நமட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்தான்.

“அப்பாவி ஜனங்கடா!.”

“டேய்! ஒரே வார்த்தையில் அப்படிச் சொல்லி முடிச்சிடாதே. நீ உணராத ஏதோ ஒன்றை அவங்க உணர்ந்திருக்காங்க..”

ச.மு.தலைவர் இப்போது சுந்தரத்தை எரிச்சலுடன் பார்த்தார்.

“சார் நாத்திகமா?. பரவாயில்லை. அனுபவம் பத்தலேன்னு அர்த்தம். இருபத்திநாலு வயசில இப்படித்தான் திமிர்றா பேசச் சொல்லும். இதுக்குமேல நான் கூட பேசியிருக்கேன். நாற்பதைத் தாண்டியாச்சின்னா எல்லாம் தன்னால வந்துடும். ரத்தம் சுண்டணும் அப்புறம் கும்பிட்டு தவடையில போட்டுக்கச் சொல்லும்..”——-நான் இடையில் புகுந்தேன்.

“விடுங்க சார்! சரி அப்படி என்னதான் சார் நடந்திச்சி?. திடீர்னு ஒரு குரங்கை ஸ்ரீ ஹனுமனின் மறு அவதாரம்னு எதை வெச்சி நம்பறீங்க?.”——தலைவர் உணர்ச்சிப் பொங்க என்னைப் பார்த்தார்.

“அத நான் என்னன்னு சொல்வேன்? எப்படி சொல்வேன்?. அவன் இல்லாம ஒரு அணுவும் அசையல சார். பரம்பொருளே!,ஆதிகேசவ பெருமாளே!, நாராயணா!.”—உணர்ச்சிப் பெருக்கில் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

“ இன்னைக்கு காலையிலே அதுக்கு நாமம் போட்டுவிட்டதும், கிழவன் கையைப் பிடிச்சி கிருஷ்ணர் படத்தாண்ட கூட்டிட்டுப் போயி, என்னவோ சைகை காட்டியிருக்கு.. கிழவனுக்கு எதுவும் விளங்கல. அப்புறம் அந்த படத்தையே பார்த்தபடி மூணு சுத்து சுத்திட்டு தடால்னு கீழே விழுந்திடுச்சாம். அவ்வளவுதான் ராமபிரான் அழைச்சிக்கிட்டார்….”

தலைவர் கண்களை மூடிக் கொள்ள, சுற்றியிருந்தவர்கள் கன்னங்களில் படபடவென்று போட்டுக் கொண்டார்கள்.. சுந்தரத்தை சற்று தூரமாக இழுத்துச்  சென்றேன்..

“இப்ப என்னடா சொல்ற?. இந்த அதிசயத்துக்கு என்ன காரணம் சொல்ல முடியும்?.. அறிவியலால் விளங்கிக் கொள்ள முடியாத சில மிரக்கிள்கள் எப்போதாவது நடந்துக் கொண்டுதானிருக்கின்றன..”

“த்சு! எனக்கு அதில இண்ட்ரஸ்ட் இல்லைடா. அந்த குண்டச்சியைப் பாரேன். கொழுக்மொழுக்னு வஞ்சனையில்லாத உடம்பு. எ..ப்..ப்..பா! அப்படி என்னதாண்டா சாப்பிடுதுங்க?..”

“டேய்! அவ உன்னை மேரா பாயீ! ன்னு கூப்பிட்டாள்.. பாயீன்னா சகோதரா!.”—–சுந்தரம் அவசரமாக கையை உதறிக் கொண்டான்.. தலைவர் எழுந்து விட்டார். கிளம்பும் போது தன் ஆள்கிட்ட கேட்டார்..

“அடுத்து என்ன செய்யப்போறாங்களாம்டா.?.”

“அடக்கம் பண்ணி மேலே கோவில் கட்டணுமாம்.”.

“வாஸ்தவமான பேச்சு.பிரமாதமாய் செஞ்சிடலாம்.. இப்பவே கூட்டத்தைப் பார்றா..இதுக்கெல்லாம் பப்ளிசிட்டியே தேவையில்லப்பா.. காத்துலியே பரவிடும். டேய்! சீத்தா! நம்ம ஆளுங்கள்லாம்  ஜரூரா இறங்கி வேலை செய்யணும்டா. மொதல்ல இந்த நியூஸ் சிட்டி முழுக்க ஃப்ளாரப் ஆவணும். ஜனா! இது உன் செக்‌ஷன் தெர்தா?.நேரா சங்கத்துக்குப் போ. நோட்டீஸுக்கும்,ஸ்பீக்கருக்கும் ஏற்பாடு செஞ்சிரு. நீயும், பெரியவரும் இதுக்கு இன்சார்ஜ் சாயரட்சை அடக்கம் பண்றப்போ ஊர்வலம் அசத்தலா இருக்கணும்.. கும்பல் செர்க்கிறத பெரியவர் கிட்ட விட்ரு. பூ அலங்காரம் பிரமாதமா இருக்கணும்னு சொல்லு, ஓட்றா. அப்புறம் ராத்திரி ஏழு மணிக்கு மேல ராமர் பட்டாபிஷேகம் உபன்யாசம் டேய், சேகரு! கொரட்டூரு கிருஷ்ணமாச்சாரிக்கு கால் போட்டு ஃபிக்ஸ் பண்ணிடு. பிரமாதமாய் கோவில் கட்டிடலாம்னு அவங்க கிட்ட சொல்லிட்டு வாடா.. கெளம்பலாம்.நெறைய வேலை கிடக்கு. கடற்கரையோரமா நம்ம இடத்திலேயே அடக்கம் பண்ணிடலாம்.. சே! ஒடம்பே சிலுத்துப் போறதுடா. மதுசூதனா! வெங்கட்ரமணா!.”—– அவர் சற்று மூச்சு வாங்கிக் கொண்டார். அப்போதுதான் கிட்டக்க போய் ஹனுமன் உடலை தரிசித்துவிட்டு, வந்து நின்ற யோகி ஒருத்தரைப் பார்த்து தலைவர் பவ்வியமாகக் கும்பிட்டார்..

“ குருஜீ! இதைப்பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க?..”

குருஜீ சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மந்தகாசமாய் புன்னகைத்தார்.

“பெரிய விஷயம். புண்ணியாத்மாக்கள் அந்த ராமதூதருடனேயே வாழ்ந்துவிட்டார்கள்.. அவர்களை ஒருமுறைப் பாருங்கள்.ஏழ்மை, அறிவின்மை, சுத்தமாக ஆச்சாரமில்லை.. ஆனால் இதெல்லாம் பெரிய விஷயமில்லை. இறைவனை நெருங்க மனத்தூய்மை வேண்டும். அழுத்தமான நம்பிக்கை வேண்டும்.அது அவர்களிடம் இருக்கு. யுகசந்திகளில் இது போன்ற அதிசயங்கள் ஒன்றிரண்டை பகவான் நிகழ்த்துவார். வரப் போகும் பிரளயத்தை பைபிள் கூட சொல்லியிருக்கு. அதை கொஞ்சம் கொஞ்சமாய் பார்த்திண்டுதானே வர்றோம்.?.. இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள். எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் வீரகேசரியாய், குதிரை மீதேறி, கல்கி அவதாரமெடுத்து வரப் போகிறார். அதற்கு கட்டியங்கூற அவருடைய தாசன் இப்போவுலகில் இதோ வந்து போய்விட்டார்.’ராம…ராம..”’—குருஜீ கைகளிரண்டையும் உயரத்தூக்கிக் கும்பிட, சுற்றியிருந்த பக்தகோடிகள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டார்கள்..

ராம….ராம….ஜய…ஜய…ராம…,/ ராம….ராம….ஜய….ஜய…ராம…”

கோவில் கட்டுவதற்கு தலைவரின் ஒத்துழைப்பைப் பற்றி சொன்னவுடன். அவர்களுக்குள் தலைவர் மாதிரி இருந்த அந்தக் கிழவன், பலமாக மறுத்து தலையாட்டினான். தாடி இளைஞன் ஒருத்தன் ஆவேசமாய் எழுந்து காச்மூச்சென்று கத்த ஆரம்பித்தான்.பெண்களேல்லாம் கூட கோபமாய் எதையோச் சொல்லி சத்தம் போட்டார்கள்..

“என்னடா சொல்றானுங்க சேட்டு பசங்க.”

“அவனுங்க வாணான்றானுங்க தலைவரே! நம்மள மாதிரி கட்சி ஆளுங்க வந்தா, வசூலாவற பணத்தை ஏப்பம் விட்ருவோமாம். சொல்றான். எல்லா கட்சிகளைப் பத்தியும் நல்லாத்  தெரியுமாம். அடீங்! எங்க தலைவரு தங்கம்டான்னு திட்டிட்டு வந்துட்டேன். கெழவன் சொல்றான். அவங்க சக்திக்கு சின்னதா ஒரு கோவில் கட்டுவாங்களாம்.. அது போதுமாம்..”—– தலைவர் நிமிர்ந்துப் பார்க்க கிழவன் அங்கிருந்தே அவரைப் பார்த்து கும்பிட்டான்.

“ப்ச்! நேர்மை, சத்தியமெல்லாம்  இப்ப இந்த மாதிரி ஏழை பாழைங்ககிட்டதான் இருக்குதப்பா. அவங்களை தப்பு சொல்லாதே. நாடு இப்ப அப்படித்தானே போய்க்கிட்டிருக்கு.?.நீ அவங்க கிட்ட எடுத்துச் சொல்லணும். நாங்க அரசியல் கட்சி இல்லைய்யா, ஒருமாதிரி தொண்டு மன்றம், மக்களுக்கு நல்லதை செய்யறதுக்காக. அந்த குரங்…சாரி…சாரி..ஹனுமாரின் அதிசயத்தைப் பார்த்து உருகிட்டோம்யா..கிருஷ்ணர் படத்தைச் சுற்றி வந்து உயிரை விட்றதுன்னா, நமக்கும் மேலே ஒரு சக்தி இல்லாம நடக்குமா?.இப்படியெல்லாம் சொல்லியிருக்கணும்.”

கிழவனுக்கு அவர் சொல்லில் என்ன புரிந்ததோ?. தலைவரின் முகத்தில் தெரிந்த தீட்சண்யம், அவருடைய நேர்மையைப் பறைசாற்றியிருக்க வேண்டும்.. கிழவன் ஒத்துக் கொள்ள, எல்லோரும் கூடிப் பேசி, அப்போதே டிரஸ்ட் ஒன்று ஆரம்பிக்கப் பட்டது.. குருஜிதான் கமிட்டியின் தலைவர். தலைவருக்கு செயலாளர் பதவி. பொருளாளராக அந்தக் கிழவனும், தாடி இளைஞனும். எல்லாம் முடிந்துக் கிளம்பும்போது ச.மு.தலைவரின் கைத்தடி ஒன்று கேட்டது

”தலைவா! இப்பிடி ஏமாளி மாதிரி பொட்டிசாவியத் தூக்கி அவனுங்க கிட்ட குடுத்திருக்க வேண்டாம். அவன்களைப் பத்தி நமக்கு இன்னா தெரியும்?.”

“மடையனே! இப்பவாவது உன்னை மாற்றிக் கொள். என்றைக்கும் நம்ம இயக்கத்துக்கு பணம் முக்கியமில்லை. சமூகத்தொண்டும், தெய்வ காரியங்களும்தான் நம்முடைய ஆஸ்தி. உண்மையாய் இருடா. அன்னாடம் வயித்துக்கு அலையற ஜாதி. கம்பளியை எவனாவது வாங்கினால்தான் அடுப்பில ரொட்டி வேகும். இல்லேன்னா குழாய்

தண்ணிக்குத்தான் ஏப்பம் விடணும்..அதுங்க நேர்மையைப் பார்த்தியா?. கட்சிங்க வந்தா பணம் சுவாஹா ஆயிடும்ன்னானே செருப்பால அடிச்சாப்பல் இல்ல?.”

சுற்றியிருக்கும் கூட்டம் மரியாதையுடன் ஒதுங்கி வழிவிட்டது. அவர்கள் நடந்து வந்து, எங்களருகில் நின்றிருந்த,சில்வர் க்ரே ஃப்யட் பேலியோ வில் ஏறினார்கள். ஏறவிட்டு கைத்தடி மீண்டும்

“எனக்கு ஒண்ணுமே புரியல தலைவா!.”

“புரியாதுடா, உனக்குப் புரியாது.”—-அவசரமாய் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு அடித் தொண்டையில் கிசுகிசுப்பாய்

“போனவாரம் அவனுங்க ஊர்வலம் போனானுங்களே, என்னா கூட்டத்தைக் காட்டினாங்கடா.?.அதுக்கு எங்கிருந்து ஆளுங்கள கூட்டியாந்தாங்கன்னு எனக்குத்தானே தெரியும். இன்னைக்கு நான் காட்டப்போறேன் பாரு கூட்டத்தை…”

“ஓ! அப்பிடிப் போடு வுட்டாலக்கிடி.”

அடுத்த நான்கு மணி நேரத்தில் விஷயங்கள் எதிர்பார்த்ததை விட விரைவாக நடந்தேறிவிட, நகரம் முழுக்க ஆஞ்சநேயசாமி ஒரு ஏழைக் குடும்பத்துடன் வாழ்ந்து முக்தியடைந்த அதிசயம், உணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்யப்பட்டது.. அது பற்றிய கிளைக்கதைகள் வேறு பலம் சேர்த்தன., கூடவே குருஜீயின் அருளுரைகள். நோட்டீஸ்கள் ஒரு பக்கம் செய்திகளைப் பரப்ப, மாலை நான்கு மணிக்கெல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது.

ஒரு பக்கம் ஆழ்வார்களின் பாசுரங்கள் ஒலிநாடா மூலம் ஒலி பரப்ப, எங்கும் இறைவனைப் பற்றிய ஒருமித்த சிந்தனை. ஒன்று சிலவாகி, சில பலவாகி…இப்போது பலப்பல கெட்டப்புகளில் சாதுக்கள் இந்த வைபோகத்தில் வந்து கலந்துக் கொண்டு அருளுரைகள் வழங்கியபடி மக்களை நல்வழிப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.. பூகம்பம், சுனாமி போன்ற இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பேரழிவு மக்களை அலறடித்துக் கொண்டிருக்கும் தருணம் இது. எல்லோருக்கும் உயிர் பயம். கல்கி அவதாரம் வருவதற்கான நேரம் வந்துவிட்டதோ என்ற பீதி. யுக முடிவின் கடைசிக் காலம் இதுவென்று கடைத்தேற வழி தேடிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் விஷயம் தெரிந்த ஏதோ ஒரு நற்பணிமன்றம் சடுதியில் திருப்பாவை, திருவெம்பாவையை அச்சடித்து, இலவசமாக விநியோகித்துக் கொண்டிருந்தது.. துணிப் பந்தல் ஒன்று போடப்பட்டு, கீழே பித்தளை அண்டா ஒன்று, மஞ்சள் துணியால் வாய் கட்டப்பட்டு, அவசர உண்டியலாகியிருந்தது.. மக்கள் வெள்ளம் அலையலையாய் புரள, போக்குவரத்துஸ்தம்பித்துப் போய், பாதை திருப்பி விடப்பட்டது. கோஷங்கள் வானை முட்டின.

ஸ்ரீ ஹனுமான் கீ…ஜே!….ஸ்ரீஹனுமான்..கீ…ஜே!

ஜய…ஜய…ஹனுமான்,…ஜயராம  ஹனுமான்..ஜய..ஜய……..

நான் சுந்தரத்தைப் பார்த்து பெருமிதத்துடன் சிரித்தேன்.

“நீங்க என்னதான் கடவுள் இல்லை…இல்லவேஇல்லைன்னு கரடியாகக்  கத்தினாலும், எவருடைய காதிலும் விழப் போறதில்லை. நீங்க சொல்லச் சொல்ல மக்களிடம் பக்தியுணர்வு அதிகமாயிட்டுத்தான் வருது.. மக்கள் வெள்ளத்தைப் பாரு, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?..”——அதற்கு சுந்தரம் சிரித்தான்.

“வேணாம். நான் யதார்த்தத்தைச் சொன்னால் உன் மனசு புண்படும்.”

“பரவாயில்லை சொல்லு.”

“என்ன அர்த்தம்?. மக்கள் கிட்ட தவறுகள் மலிந்துப் போச்சின்னு அர்த்தம்..அதன் உறுத்தலின் வெளிப்பாடுகள்தான்

இதெல்லாம். சாமி கும்பிட்றது கூட ஒரு மாதிரி எஸ்கேப்பிஸந்தான் தெரியுமா?.. ஒரு சாரார் மண்ணிப்பு கேட்கிறாங்க. நீங்க விழுந்து விழுந்து கும்பிட்றீங்க..”—-

அடசட்! என்ன முரட்டுத்தனம்?. இவன்கிட்ட ஆர்க்யூ பண்றது வேஸ்ட். முரட்டடிதான் இவனுக்குத் தெரியும். மக்கள் வரிசையில் வந்து மலர்குவியல்களுகிடையில் மீளா உறக்கத்திலிருக்கும் ஹனுமனை தரிசித்துவிட்டு, உண்டியலில் காசு போட்டுவிட்டு நகர்ந்துக் கொண்டிருந்தார்கள்.. சேட்டுகள் கும்பல் கும்பலாய் புஷ்டியான தத்தம் மனைவி,மக்களுடன் வந்து கும்பிட்டு விட்டு, கட்டுக் கட்டாய் நோட்டுகளை உண்டியலில் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். பணம் ஒரு பொருட்டல்ல அவர்களுக்கு. அதற்காக வியர்வை வடிய உழைப்பவர்களுமல்ல. கிழவனும் அந்த வடநாட்டு கும்பல்களும் பிரமிப்பு தட்டிப் போய் கிடக்கிறார்கள்.. இத்தனை மக்கள் வெள்ளத்தையும், வந்து விழும் நோட்டுக் கற்றைகளையும் பார்க்கப் பார்க்க கண்களில் மிரட்சி தெரிகிறது. தூரத்தில் நின்றிருந்த ச.மு. தலைவரைப் பார்த்து விட்டு கிழவனும், தாடி இளைஞனும் அவரிடம் ஓடினார்கள்.

“டேய்! அவனுங்கள என்னான்னு கேளு.. காக்றீ பூக்றீன்னு அந்த பாஷை நமக்குப் புரியாது.”—–கேட்டுவிட்டு கைத்தடி சொன்னான்.

“தலைவா! இவனுங்க புத்திய பார்த்தியா?. வசூலாவற பணத்தில ஒரு பைசவைக் கூட யாரையும் தொட வுடமாட்டாங்களாம்.. மொத்த பணமும் கோவில் திருப்பணிக்குத்தானாம்…ஹ..ஹ..ஹா. துட்டு சேர சேர இவனுங்க காபரா ஆயிட்டனுங்கபா.”—–தலைவருக்கு சுறுசுறுன்னு கோபம் வந்துவிட்டது.

“என்னாங்கடா? ஆரம்பத்திலேயிருந்தே பாக்கறேன். என்னை நம்ப மாட்டேன்றீங்க. உனக்குத்தான்தெய்வம்,எனக்கில்லையா?. கோயில் கட்றானாம்கோயில்.நாங்க வரலேன்னா தெரிஞ்சிருக்கும். துண்டை விரிச்சிப் போட்டுட்டு உட்கார்ந்தியே ஒரு நானூறு ரூபா விழுந்திருக்குமா?. ஊழலாம் ஊழலு. தப்பு வரக்கூடாதுன்னுதானே டிரஸ்ட் ஃபார்ம் பண்ணோம்?. நீதானே பொருளாளரு.. பணம் உங்கிட்ட, கணக்குவழக்கு எங்க கிட்ட. அப்புறம் எப்படிய்யா ஊழலு வரும்?.. சே! யோவ்! ஒரு தெய்வ காரியம்னுட்டுதான்யா நாங்க இதில எறங்கியிருக்கிறோம். சும்மா சும்மா வேதனை பண்ணாதய்யா.”

“அச்சா சஹேப்…..அச்சா சாஹேப்!.”—-அவர்கள் சலாமடித்துவிட்டுப் போய்விட்டார்கள்.

எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து மாலை ஆறு மணிக்கு மேல் ஊர்வலம் கிளம்பியது.. மிகப் பெரிய ஊர்வலம். சரியானக் கூட்டம். இவ்வளவு பெரிய கூட்டத்தைத் திரட்டியதில் சமுதாய முன்னணி இயக்கத்தின் உழைப்பும்,செல்வாக்கும் தெரிந்தன. முன்னால் பாண்டு வாத்தியம், அடுத்ததாய் நாதஸ்வரம், தவில், அதற்குப் பின்னால் ஒரு மாருதியில் பேச்சாளர்களின் வர்ணனை, அதற்குப் பின்னால் ச.மு. தலைவர் தன் படைகள் சூழ ஒரு வேனில் வர, அதற்கும் பின்னால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அந்த வடநாட்டு கும்பல் திருதிருவென்று வ்திர்த்துப் போய் உட்கார்ந்திருக்க, நடுவில் எடுப்பாய் ஒரு சின்ன மேடை, அதில் மலர்க் குவியல்களுக்கிடையில் ராமதூதர் ஃபோகஸ் ஒளியில் பிரகாசமாய் தெரிய, அப்ப்பா! என்னா தேஜஸ்?. என்று ஆளாளுக்கு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அலங்கார வண்டியின் பக்கவாட்டில் ஆங்கிள் சட்டங்கள் பொருத்தப் பட்டு,, அதில் அந்த பித்தளை அண்டா உட்கார்ந்திருந்தது.. வழியெங்கும் மக்கள்ஸ்ரீஹனுமனை தரிசித்து விட்டு, ராமபிரானுக்கு உதவிய அணிலாய் காசு போட்டுவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் சுந்தரம் ரகசியமாக என்னை இழுத்துக் காட்டினான். சற்றுத் தொலைவில் தெருக் கோடியில் சில முஸ்லீம் இளைஞர்கள் கும்பலாய் வந்து நின்று ஊர்வலத்தைப் பார்த்துவிட்டு, வேகவேகமாய் மறைந்துக் கொண்டிருந்தார்கள். திக்கென்று இருந்தது.பகவானே!. நாங்கள் அலங்கார வண்டிக்கு அருகிலேயேஅ நடந்துக் கொண்டிருக்கிறோம். ஒரு கட்டத்தில் வீட்டிற்குக் கிளம்ப யத்தனித்தபோது சுந்தரம்தான் தடுத்து விட்டான். கோஷங்கள் விண்ணைத் தொட்டன.

”ஜய..ஜய.. ஹனுமான்,….ஜயராம…….ஹனுமான்,/ ஜய…ஜய…ஹனுமான்,….ஜயராம..ஹனுமான்.”

என்னதான் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசினாலும். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் கடவுள் நம்பிக்கை என்பது நீறுபூத்த நெருப்புதான். சமயங்களில் அதன் சிவந்த கங்குகள் வெளிப்பட்டு விடுகின்றன.. முன் பக்கமிருந்து திடீரென்று கூச்சல்கள் கிளம்பின.என்னாயிற்று? தெரியவில்லை. போய்க் கொண்டிருந்த ஊர்வலம் திடீரென்று நின்றது. கோஷங்கள் சடக்கென்று ஸ்தம்பித்துப் போக, முன் பக்கமாய் சலசலப்பு. ஊர்வலத்தை மறித்தபடி சர்ரென்று இரண்டு, மூன்று போலீஸ் ஜீப்கள் வந்து நின்றன. உதவி கமிஷனர் இறங்கி குருஜீயிடம் வந்தார்..

”இதோ பாருங்க சாமி ! இந்த ஊர்வலம் சட்ட விரோதமானது.. முன் அனுமதி வாங்கவில்லை..”—–தலைவர் இடைமறித்தார்.

“யார் சொன்னது?.பர்மிஷன் வாங்கியாச்சி சார்.டேய் மாதவா! என்னா சொல்றாரு இவரு/?..’

“பர்மிஷன் வாங்கியாச்சி தலைவா! இதோ ஆர்டரு.”

“வெய்ட். அப்படியே வாங்கியிருந்தாலும் கூட இந்த வழியாப் போகக் கூடாது. மசூதி இருக்கு.. இப்ப தொழுகை நேரம். தொந்திரவு பண்ணக் கூடாதுன்னு முஸ்லீம் இளைஞர்கள் நற்பணி மன்றம் பெட்டிஷன் கொடுத்திருக்காங்க..”

தலைவருக்கு கோபம் வந்துவிட்டது.

“பார்றா அவங்களை. சார்! போன வாரம் அவங்க ஊர்வலம் போனாங்களே, அப்ப நாங்க எதனா அப்ஜெக்‌ஷன் பண்ணமா?. சொல்லுங்க. வழியில காங்கியாத்தா கோயில் இருக்கு. அன்னைக்கு கோயில்ல விசேஷம் வேற.. இது வம்புதானே?.”

குருஜீ பின் பக்கம் திரும்பி கத்தினார்

”ராம…ராம…,ஜய..ஜய…ராம ராம…ராம…ஜய…ஜய…ராம”

ஊர்வலம் நகர ஆரம்பித்தது. உதவி கமிஷனர் உத்திரவிட, போலீஸ் பட்டாளம் திமுதிமுவென்று ஓடி வந்து, கேடயத்தால் நெட்டித்தள்ள, ஊர்வலத்தில் ஆக்ரோஷம் பற்றிக் கொண்டது.. தலைவரின் கையாள் திரும்பி கூட்டத்திற்கு ஏதோ சைகை காட்ட,

ராம…ராம..ஜய..ஜய..ராம/ சீதாராம….கோதண்ட ராம… / ஸ்ரீஹனுமானுக்கு!…ஜே!…ஸ்ரீ ஹனுமானுக்கு!…ஜே’

கூட்டம் போலீஸை நெட்டித் தள்ளிவிட்டு நகர ஆரம்பித்தது. நிலைமை விபரீதமாகும் உச்சக்கட்டத்தில் வேறு வழியின்றி கமிஷனர் கடைசி நிமிட சமரசத்திற்கு முயன்றார்..

“வெய்ட்!…வெய்ட்…நில்லுங்க…நில்லுங்கய்யா!.”—பாய்ந்து குறுக்கே மறித்து நின்றார்..

“ஓகே! தலைவர்கள் மட்டும் முன்னே வாங்க.நான் கொஞ்சம் பேசணும்.”

டிரஸ்ட் உறுப்பினர்கள் நால்வரும்,மற்றும் சில வெண் தாடிகளும் முன்னே வந்தனர்.

“சரி நான் உங்க ஊர்வலத்தை அனுமதிக்கிறேன். ஆனால் ஒரு கண்டீஷன். மசூதியைக் கிராஸ் பண்றப்போ சத்தம் போடாமல் போகணும். இது அவங்க தொழுகை நேரம். அவங்க மத கோட்பாடுகளை நாமளும் மதிக்கணும்.”

”அந்த அநாகரீகங்கள் எங்களுக்குத் தெரியாது சார்.. பரஸ்பரம் ஒருத்தர் மத உணர்வுகளை ஒருத்தர் மதிக்கணும் என்பதே எங்கள் கோட்பாடு.”

“சரி…சரி…இதில முக்கியஸ்தர்கள் நாலு பேரும் கையெழுத்த்ப் போடுங்க.”

“கையெழுத்தா ஏன்?, எதுக்கு?.”

உதவி கமிஷனர் கொஞ்ச நேரம் அவர்களை தீர்க்கமாக பார்த்தபடியே நின்றிருந்தார். அதற்குள் பின்னாலிருந்து கூச்சல் கிளம்பியது.. திடீரென்று கமிஷனர் மேல் ஒன்றிரண்டு ஜல்லி கற்கள் வந்து விழுந்தன.. அவர் அசையவில்லை..சர்ரென்று ஒரு செருப்பு பறந்து வந்து அவர் மேல் விழுந்தது.. அப்போதும் அவர் அசைய வில்லை. நால்வரும் பதைத்துப் போய் கூட்டத்தைப் பார்த்து அமைதியாக இருக்கும்படி கையை உயர்த்த அடங்கியது.

“சரிங்க சார்! நாங்க கையெழுத்து போட்றோம். அன்னைக்கு அவங்க காங்கியாத்தா கோயில் வழியாத்தானே ஊர்வலம் போனாங்க. அப்ப இதே மாதிரி கையெழுத்து வாங்கினீங்களா?.”

‘’ஹும்! இதே கேள்வியைத்தான் அவங்களும் கேட்டாங்கய்யா.. பிள்ளையார் ஊர்வலத்துக்கு வாங்கினீங்களான்னு. எங்க மண்டையை ஏன்யா இப்படி உருட்றீங்க?..”—-அவர் சலிப்புடன் பேச, நால்வரும் கையெழுத்து போட்டார்கள்.. ஊர்வலம் நகர ஆரம்பித்தது.. பின்புறமிருந்து யாரோ என் கையைப் பற்றினார்கள்., ஆராவமுது சார்.

“போதும் வந்திடுங்கோ.! சுந்தரம் சாரையும் கூப்பிடுங்கோ.. கலவரம் வெடிக்கப்போறது.. ரவுண்டானா பக்கம் இப்பவே ஆரம்பிச்சுடுத்தாம். ஒவ்வொருத்தரும் கத்திய வெச்சிண்டு அலையறாளாம். வாணாம் ரெண்டு பேரும் வந்துடுங்கோ..”—அவர் பயத்தில் பெருமூச்சாய் இழுத்து விட்டுக் கொண்டார்.. நான் சுந்தரத்தை பார்த்தேன்.

“நான் வரல. நீ போ. என்ன ஆனாலும் சரி,கடைசிவரைக்கும் இருந்து பார்த்திட்டுத்தான் வருவேன்..”—–பிடிவாதக்காரன்.

“நீங்க போங்க சார்! நாங்க பின்னாலயே வந்துட்றோம்..”—- அவர் மனசில்லாமல்  எங்களைப் பார்க்க, கட்டாயப் படுத்தி அனுப்பினேன்.. சுந்தரத்துக்கே இவ்வளவு வேகமிருக்கும் போது, நான் பயந்து ஓடிவிடுவது இழுக்கு. காலத்துக்கும் சொல்லி சிரிப்பான்.

“ராம…ராம…ஜயஜய….ராம, ராம…ராம…ஜய…ஜய….ராம.”

ஊர்வலம் போய்க் கொண்டிருக்க, சாலையில் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடியிருந்தது.. நடந்துப் போய்க் கொண்டிருந்த சிலரும் ஓட்டமும் நடையுமாய் விரைந்துக் கொண்டிருந்தார்கள்.. என்னவோ நடக்கப் போகிறது. நிஜமாகவே கலவரம் வெடிக்கப் போகிறதோ?. இல்லை இருக்காது. இவ்வளவு போலீஸின் பாதுகாப்பில் எதுவும் நடக்க முடியாது..அப்போது சுந்தரம் காட்டினான், வியாபாரிகள் அவசர அவசரமாக கடைகளை சாத்திக் கொண்டிருந்தார்கள். தூரத்திலேயே நாங்கள் பார்த்து விட்டோம், மசூதியைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் எங்களை முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர். அது முஸ்லீம்கள் ஏரியா என்பதில் வேறு அபாயம் கூடுகிறது.

முஸ்லீம் இளைஞர்களைப் பார்த்ததும் இங்கே டென்ஷன்களும்,,சேட்டைகளும், எகிறுகின்றன. இப்போது கோஷங்கள் காட்டுக் கூச்சல்களாய் மாற ஆரம்பிக்கின்றன. அங்கங்கே சீழ்க்கையொலி கிளம்ப,, சிலர் பாண்டு வாத்தியங்களின் தாளகதிக்கு ஏற்ப ஆடிக் கொண்டே சென்றனர். மசூதியை நெருங்கும் போது கமிஷனர் ஊர்வலத்தை நிறுத்தினார்.. நிறுத்தப்பட்ட அந்த நேரம் சரியாக மசூதியின் ஒலிபெருக்கியில் தொழுகைக்கு அழைக்கும் மவுஸன்ஸாவின் குரல் கணீரென்று எழுந்தது.. தலைவர் வேகமாக முன்னே சென்று உதவி கமிஷனரிடம் தகராறு சொல்ல, மசூதியைச் சுற்றி நின்ற இளைஞர்கள் விலக்கப் பட்டனர்..

“லுக்! இந்த இடத்திலிருந்து நான் அடுத்த விசில் தர்ற வரைக்கும் சத்தமில்லாமல் ஊர்வலம் போகணும். சரியாப் புரிஞ்சிக்கோங்க..”—- உதவிகமிஷனர் சொல்லி முடித்து, விசில் ஊதிவிட்டு நகர்ந்து வழிவிட, ஊர்வலம் பொட்டுச் சத்தமுன்றி அமைதியாக நகர ஆரம்பித்தது. ஆயிற்று…..ஆயிற்று…..முக்கால் பகுதி ஊர்வலம் மசூதியை தாண்டியாகி விட்டது.. ஒரு அசம்பாவிதமும் இல்லை. உதவி கமிஷனருக்கு பெருத்த நிம்மதி. அப்.ப்.பாடா!.. இனி பயமில்லை. பொதுவாக ஊர்வலங்களில் எப்போதும் மூன்று விதமான மனிதர்கள் உண்டு. முன்பாகத்தில் செல்பவர்கள் எழுச்சியுடன் செல்பவர்கள் முரடர்கள்.. அடிதடி முதல் எல்லா வன்முறைகளுக்கும் தயாராயிருக்கும் தீவிர வெறியர்கள்.. இயக்கத்திற்காக உயிரையும் கொடுக்கத் தயாராயிருக்கும் அப்பாவிகள். இரண்டாம் பாகத்தில் செல்பவர்கள் மிதவாதிகள், மற்றும் அனுதாபிகள். எப்பவும் சொல்லிவைத்தமாதிரி அந்தக் கட்சிக்கே அல்லது அது சுட்டிக் காட்டும் கட்சிக்கே ஓட்டு போடுபவர்கள். ஆனால் எதற்கும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்கள், ஒதுங்கிக் கொள்பவர்கள்.. மூன்றாம் பாகம் என்பது எப்பவும் ஒப்புக்குச்  சப்பாணி. கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள். இவர்கள் இறுதிவரையிலும் ஊர்வலத்தில் இருப்பார்களா? என்பதே சந்தேகம்.. இதில் முக்கால்பாக ஊர்வலம் மசூதியைக் கடந்து விட்டது என்பது உதவி கமிஷனருக்கு பெரிய ரிலீஃப்.. அவர் அ..ப்..ப்..பா.டா என்று நிம்மதி பெருமூச்சு விட, விட்ட அந்த வினாடியில் பயந்துக் கொண்டிருந்த, நடக்கக் கூடாத அந்த சம்பவம்…..சம்பவம் ..நடந்தேவிட்டது.. எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்த ஒரு ஒற்றைச் செருப்பு சரியாக ராமதூதர், ஸ்ரீஹனுமானின் மேல் வந்து விழ, அது பொறியாய் விழுந்து தீயாய் மூண்டது. அவ்வளவுதான்.

“ஐயய்யோ!…ஐயய்யோ!…நம்ம சாமிய செருப்பல அடிச்சிட்டானுங்களே. டாய்!…டாய்!…வுடாத அவன்களை.,.வுடாத  வெட்றா..வெட்டு…வுடாத.!.”—- அப்புறம் சர் சர்ரென்று பறந்த சரளைக் கற்கள் மசூதியின் கதவு,சன்னல்களைத் தாக்க, மக்கள் பீதியில் அலறி நாலாபுறமும் சிதறி ஓட, மசூதியிலிருந்து வெறிக் கூச்சலுடன் கிளம்பியது ஒரு இளைஞர் படை.. கைகளில் உருட்டுக்கட்டை, சைக்கிள் செய்ன், கத்தி, என்று சதிராட, இந்தப் பக்கங்களிலும் இளைஞர்கள் கைகளில் அதே வகை ஆயுதங்களுடன் பாய, எங்களுக்கு முன்னால் உருவங்கள் குறுக்கும்,நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தன.. ஒரே பீதிக் கூச்சல்., மரண ஓலம். எல்லோரும் ஓட ஆரம்பித்தோம். டி.எஸ்.பி. யின் சார்ஜ்….! என்ற காட்டுத்தனமான  கர்ஜனையில் திசை தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த எங்கள் முதுகுகளில் இரண்டு அடி விழ, கண்மண் தெரியாமல் ஓடஆரம்பித்தோம். ஓடி, சுந்தரம் சட்டென்று சாலையோரத்திலிருந்த காட்டுவா மரத்தில் மளமள வென்று ஏற ஆரம்பித்தான்.. நானும் டிட்டோ. பாதுகாப்பான ஒரு உயரத்தில் உட்கார்ந்துக் கொண்டோம்.. கீழே காட்சிகள் மங்கிய இருளில் நிழலுருவாய் தெரிகின்றன.. உதவி கமிஷனரின் ’சார்ஜ்’ என்ற காட்டுக் கத்தல் கேட்கிறது.. அதைத் தொடர்ந்து, தடதடவென்று பூட்ஸ் சப்தங்கள். எவரென்று பார்க்காமல் போலீஸ் சகட்டுமேனிக்கு மக்களைப் புரட்டியெடுக்கிறது.

எங்கும் ஐயோ….ஐயய்யோ! கூச்சல்கள்.. இன்னொரு பேட்ச் கண்ணீர் புகைக் குண்டை வீசிவிட்டு,, மாட்டிக் கொண்டு திணறிய கும்பலிடம் லட்டிச் சார்ஜ் ல் பிண்ணியெடுக்க, அடுத்த ஒரு மணி நேரம் அங்கே என்ன நடக்கிறது?. என்று புரியாமல் குழம்பிய, பயந்த தருணங்களாய், ஒரே அலறலும், அழுகையும், பூட்ஸ் சத்தங்களுமாய், ரொம்ப நேரம் வரைக்கும் கேட்டுக் கொண்டிருந்தது.. மிரண்டு ஓடிய கும்பல் ஒன்று, வழியில் நின்றிருந்த போலீஸ் ஜீப் ஒன்றை அடித்து நொறுக்கி, தீ வைக்க, ஜ்வாலை பனை மர உயரத்துக்கு எழும்ப, போலீஸ் துரத்தி துரத்தி அடித்தது.

எல்லாம் ஓய்ந்து நிலைமை கட்டுக்குள் வர, இரவு பத்து மணியாயிற்று.. ஆம்புலன்ஸ்களும்,, ஜீப்களும், ஃபயர் என்ஜின்களும்,, போவதும்,வருவதுமாய் இருந்தன.. ஊரெங்கும் கர்ஃப்யூ வந்துவிட, கண்களுக்கெட்டிய தூரம் வரையிலும் நிசப்தமாய் இருந்தது. புகையினூடே மெதுவாய் இறங்கி நடந்தோம்.. மனம் கனத்துப் போய், எங்களுக்குள் பேச எதுவுமில்லை.. உள்ளே அதிர்ச்சி அலைஅலையாய் இன்னும் மனம் முழுக்க வியாபித்திருக்கிறது. அந்தப் பெண்…? ஐயோ!. சுந்தரம் நகத்தை வறுக் வறுக் கென்று கொரித்துக் கொண்டிருந்தான்.

ஒரு முஸ்லீம் இளைஞனை நாலு பேர் சுற்றி நின்று உருட்டுக் கட்டையால் மடேர் மடேர் என்று அடித்துப்  பிளக்க,அவன் ஐயோ! என்று அலறி துடிதுடித்து விழுந்ததை, ஒரு பேச்சாளரை இரண்டு முஸ்லீம்கள் கத்தியால் குத்திக் கிழித்ததை, ஐயய்யோ! சற்று தூரத்தில் ஒரே கூக்குரல். பாதசாரியாய் வந்து நடுவில் மாட்டிக் கொண்ட பெண்கள் கூட்டம் ஒன்று வழி தெரியாது ஓடுகின்றது.. அதில் ஒரு பெண்ணை கதறக் கதற தூக்கிக் கொண்டு மறைவாய் ஓடிய இளைஞர்கள் கும்பலை,, ஐயோ! நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?.   .

.            மனசு ஐயோ…ஐயோ! என்று பதற, சுந்தரம் வேகமாக இறங்க எத்தனித்த போது, நான் அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன்.

‘வேணாண்டா! அவங்க பத்து பேராவது இருக்கும்.. எல்லார்கிட்டயும் கத்தி இருக்கு. இந்த வெறிபிடிச்ச நிலையில் அவனுங்க இந்துவாக இருந்தாலும், முஸ்லீம்கள் என்றாலும்  ரெண்டும் ஒன்றுதான்.. தடுக்கப் போனால் உன் உயிருக்கு ஆபத்து..வேணாம்டா. உன்னை இழக்க நான் தயாரில்லை..”

“முடியாது.பாவம்டா….அந்தப் பொண்ணு பாவம்டா.விட்றா என்னை.”—அவன் கத்திவிட்டு வேகமாக இறங்க முயற்சித்தான்.. நான் என் பிடியை விடவில்லை.. அதற்குள் எங்களுக்குக் கீழே கைகலப்பிலிருந்த ஒரு கும்பலை நோக்கி போலீஸ் புகை குண்டுகளை வீச, எழுந்த புகை மண்டலத்தில் நாங்களும் மாட்டிக் கொண்டோம். கண்கள் திறக்கமுடியாதபடிக்கு எரிய சுந்தரம் சோர்ந்து உட்கார்ந்து விட்டான்.

தூரத்தில் எங்கோ மறைவிலிருந்து அந்தப் பெண்ணின் அலறலும்.அழுகையும், ரொம்ப நேரம் வரைக்கும் விட்டுவிட்டு கேட்டுக் கொண்டேயிருந்தது. குன்றிப் போனேன்.நான் ஒரு முழுக் கோழை. இந்த மிருகத்தனத்தைத் தடுக்க, சிறு துரும்பையும் நான் எடுத்துப் போடவில்லை, அவனையும் போட விடவில்லை. விரைவாய் நடந்தோம்.. போலீஸ் கண்களில் படக் கூடாது. பாவம் அந்த பெண்ணின் கதி என்னாயிற்றோ?. மீண்டும் மீண்டும் அந்த அலறலும், அழுகையும்  சுற்றிச் சுற்றி வர, ஐயோ! பெண்ணே! நீ யாரோ எவரோ?,இந்துவோ,முஸ்லீமோ?, வேடிக்கை பார்க்க வந்து மாட்டிக் கொண்டாயோ?, இல்லை ஷாப்பிங் என்று கிளம்பி வந்தாயோ.?.. இருட்டில் முகந்தெரியாமல் நிழலுருவாய் அந்தக் காட்சிகள் முகத்திலறைய, கொஞ்ச தூரம் மவுனமாக நடந்திருப்போம்.

ஒரு திருப்பத்திலிருந்து தட்…தட்…பூட்ஸ் ஒலிகள் எங்களை நோக்கி ஒடி வரும் சத்தம் கேட்டது. குபீரென்று மயிக் கால்கள் சிலிர்த்துக் கொண்டன. மாட்டினால் அவ்வளவுதான். எல்லா பழியையும் எங்கள் தலையில் ஏற்றி வழக்கை முடித்து விடுவார்கள். உடம்பு புண்ணாகி விடும். வேகமாய் எதிர் திசையில் ஓட ஆரம்பித்தோம்.. ஓடி…ஓடி எதிர்ப்பட்ட, ஒரு மேற்கூரையில்லாத குட்டிச் சுவர் வீட்டின் மதில் சுவரை எம்பி குதித்து உள்ளே பாய்ந்தோம்.

அங்கே விழுந்துக் கொண்டிருந்த தெரு விளக்கின் வெளிச்சத்தில் முதலில் பட்டது  சிதறி கிடக்கும் காய்கறிகள்., சற்றுத் தள்ளி ஒரு பிளாஸ்டிக் கூடை, சுவரோரத்தில் கிடந்த நைலான் சேலை. சுந்தரம் பதட்டமாய் ”பத்தூ!…பத்தூ!…இது அந்த பெண்ணோட சேலை மாதிரி தெரியுதுடா.ஐயோ!.”.—-அவன் தலையில் கைவைத்துக் கொண்டான்.. காதோரங்களில் குபீரென்று உஷ்ணம் பரவ, இரண்டடி வைத்திருப்போம், தாறுமாறாய் கிழிந்துக் கிடந்த உள் பாவாடை. ஐயய்யோ!,எட்டி நாலடி வைக்க, சற்றுத் தொலைவில், கிணற்றுச் சுவற்றின் மறைவில் உருவம் தெரிந்தது.. பெண்தான். கால்கள பரப்பியபடி மல்லாந்துக் கிடந்தாள். உடலில் பொட்டுத் துணியில்லை..உடல் முழுக்க ரத்தக் கீறல்கள். பாவம் போராடியிருக்கிறாள்.கடைசி நிமிட போராட்டத்தில் கண்கள் முறைத்தபடி மேலே நிலை குத்தியிருந்தன.. சற்று முன்னர்தான் உயிர் போயிருக்க வேண்டும், இன்னமும் உடம்பில் கதகதப்பு இருந்தது. எனக்கு தொண்டையடைத்தது. திடீரென்று சுந்தரம் கேவிக்கேவி அழ ஆரம்பித்தான். இனி இங்கே நிற்பது ஆபத்து.. அவனை இழுத்துக் கொண்டு மெய்ன் ரோடுக்கு வந்தேன்..ஓடி வந்ததில் மூச்சு வாங்கியது.. சுந்தரம் இன்னும் விசும்பிக் கொண்டிருக்கிறான். ஆற்தலாய் அவன் தோள் மீது கை போட்டேன்.வெடுக்கென்று உதறித் தள்ளீவிட்டு கத்தினான். என்னவோ நான்தான் எல்லாவற்றிற்கும் ஒட்டு மொத்த பிரதிநிதி போல..

“சாவுங்கடா. மனுஷங்களா நீங்க?.பாவிங்க. இங்க நடந்திருக்கிற அக்கிரமங்களுக்கு ஒவ்வொருத்தனும் வெட்கப்படணும்டா. எதை சாதிக்க இப்படி கொலை வெறி பிடிச்சி அலையறீங்க?. மதம்…மதம்..இதுவா உங்க மதம்?. இதையா உங்க மதங்கள் சொல்லித்தந்தன?. அன்பையும், ஜீவகாருண்யத்தையும் போதிக்கும் மதங்கள், வன்முறையைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்., அவர்களை உசுப்பிவிட்டு பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளும், மதவாதிகளும்.. அந்த நாடு உருப்படாதுடா. ஐயா சாமீ! எனக்கு வேணாண்டா இந்த மதம். நீங்களே கட்டிக் கிட்டு அழுவுங்க. ஒரு விஷயம். இப்படியே மதங்களின் பெயரால் உயிர்பலி வாங்கிக்கிட்டே இருங்க . வளரும் இளைஞர் சமுதாயம் உங்களையெல்லாம்

ஒரு நாளைக்கு தூக்கி வீசத்தான் போகின்றன.. எங்களுக்கு கடவுள் இல்லை. இல்லவே இல்லை என்று அவர்கள் கர்ஜிக்கும் நேரம் ஒரு நாளைக்கு வரத்தான் போகிறது..”

எனக்கு நா எழவில்லை.இருப்பினும் எங்கள் பக்கமிருக்கும் நியாயத்தை யார் பேசுவது?.

“சுந்தரம்! நிறுத்து. இதுக்கு யார் பொறுப்பு?. அமைதியாகப் போன ஊர்வலத்தில் ஏன் செருப்பு வீசினார்கள்?. அவங்க தொழுகைக்கு நாம என்ன இடைஞ்சல் செய்தோம்?. சொல்லு.இனிமேல் முடியாது தப்பு எங்க பேர்ல கிடையாது. ஆரம்பிச்சி வெச்சவன் அவன் தான். அனுபவிச்சித்தான் ஆகணும்.”

சுந்தரம் இதற்கு பதில் சொல்ல வில்லை.சிறிது நேரம் தன் உள்ளங்கையையே வெறித்துக் கொண்டிருந்தான்.. பின்னர் நிமிர்ந்து என்னை தீர்க்கமுடன் பார்த்தான்.

“இப்ப நான் உனக்கு ஒரு ரகசியம் சொல்லப் போறேன்.. நான் பார்த்துவிட்ட ஒரு ரகசியம்.”

“என்னது?.”

“உங்க ராமதூதன் ஸ்ரீஹனுமான் மேல செருப்பை வீசியது யார் தெரியுமா?. டோலக்கைத் தட்டிக் கொண்டிருந்த, மேரா பாயீ! ன்னு என்னைக் கூப்பிட்டாளே, அந்த குண்டுப் பொண்ணு.. வேனிலிருந்து மெதுவாக இறங்கினாள். இறங்கி வேனுக்கு சற்று தள்ளிப் போய் நின்றாள்.. அப்புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு, செருப்பை குறி பார்த்து வீசினாள். நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன்..எல்லாம் ப்ளான்.. திட்டமிட்டு நடத்திய நாடகம்..”

எல்லாமே நாடகமா? திட்டமிட்டு நடத்தியதா?. அவநம்பிக்கையுடன் அவனைப் பார்த்தேன்.

“எஸ்! சத்தியம்..”

நடந்துக் கொண்டே அந்த சாலையை ஒரு வினாடி திரும்பிப் பார்த்தேன். சாலை முழுக்க ஒரே செருப்புக் குவியல்களாய்… சிதறிக் கிடந்தன. தூரத்தில் போலீஸ் நடமாட்டம் தெரிகிறது. ஒன்றிரண்டு மொபெட்டுகளும்.சைக்கிள்கள் சிலவும் கும்பலாய் சேர்த்து வைத்து தீயிடப்பட்டு எரிந்துக் கொண்டிருந்தன..ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே வர,

”ஆ! குவியல்களோடு குவியலாய், கேட்பாரற்று, கல்கி அவதாரத்துக்கு கட்டியம் கூற வந்த, ராமதூதன், ஸ்ரீ ஜெயராம ஹனுமான் மல்லாந்துக் கிடந்தார். பக்கத்தில் அண்டா உண்டியல் சுத்தமாய் துடைத்து போடப்பட்டு உருண்டுக் கிடந்தது.. அந்த வடநாட்டு கும்பல் ஆள் அட்ரஸ்ஸையே காணோம்.எப்போதோ பறந்துப் போய் விட்டிருந்தார்கள். சுந்தரம் அர்த்தத்துடன் என்னைப் பார்த்தான்.

விஷயங்களின் தன்மை இப்படியிருக்க, அங்கே இடுகாட்டிலும், மருத்துவ மனைகளிலும், ஜெயிலிலுமாக கூடிக்கூடி சமுதாய முன்னணித் தலைவர்களும்,அல்லாபக்‌ஷ்களும், தத்தம் பலத்தைக் காட்டிவிட்ட தன்மையில் பூரித்துப் போய், அடுத்தமுறை ஆடுவதற்கான உத்திகளை யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்தமுறை ஆட்டம் டிராவில் முடிந்தது. இது போன்ற  ஆட்டங்களெல்லாம் எத்தனை முறை ஆடினாலும் எப்போதும் டிராவில்தான் முடியும் என்ற யதார்த்தத்தை யோசிக்கத் தெரியாத, அல்லது யோசிக்க முயற்சிக்காத, யார் பெரியவன்?, அல்லது யார் பலமுள்ளவன்? என்ற ஈகோ வில் அலையும் குருடுகள் நாம். எஸ்! மனக்குருடுகள்.  நாம் எல்லோருமே சற்று சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது..அட்லீஸ்ட் இப்போதாவது. ப்ளீஸ்!.

—————————————————————————————————

திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் பொன்விழா இலக்கியப் போட்டி, சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. நாள்—25—05–1998.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *