Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நேற்றைக்கு ராதா

 

ஆசுவாசமாய் நிறம்பி கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச் சமாளிக்க, முடிந்தவரை முடக்கிவிட, அது முடியாமல் போக வரும் கோபத்தை யார் மேலாவது அல்லது எதன் மேலாவது காட்டுவது, சொல்லப்போனால் எல்லாருடைய வழக்கம்தானே. அதில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ விவரங்கெட்டுக் கிழிந்த மழையாடைகளும் உடைந்த குடைகளும்தான்.

அதிகப்பட்ச மக்களின் கவனம் சங்கமிக்கும் இடங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் யாருடைய மனமும் லயிக்காதச் சமாதிகளையே எப்போதும் விரும்பித் தொலைவது அவளது குணமாகிவிட்டது. அந்த நீர்க்காய்ச்சி வானவிருச்சங்கள் அவளது பட்டியலில் தப்பிப் பிழைத்துவிடுமா என்ன?

இன்னும் வந்துசேராமல் இருக்கும் அந்த ‘எவனோ ஒருவனை’ அவள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளை இவளுக்குப் பொழுதுபோகாத வேளை. அந்த வெற்று நிமிடங்களைப் பூர்த்திசெய்யத் தவறிய ஆஸ்ட்ரோவும் டீ.எச்.ஆர் ராகாவும் ஒதுங்கிக்கொள்ள முகில்களின் அழகிய நடனம் கொஞ்சம் அழகு பொழியும் பொழுதுபோக்குதான் அந்த ‘எவளோ ஒருத்திக்கு’.

ரம்பையும் ஊர்வசியும் முகில்களை மறைவிடங்களாகப் பாவித்து அதன் நிழலின் தயவில் நாட்டியப் போர் நடத்திக்கொண்டிருந்தது யார் கண்ணிலும் சிக்காமல் இருந்திருந்திருக்கலாம்; ஆனால், ராதாவின் கண்களில் மண்ணைத் தூவிவிடமுடியுமா?

கால்மணி நேரம், அறைமணி நேரம் என அவளது பொருமையை நிமிடங்கள் கொஞ்சங்கொஞ்சமாகக் களவாடிப் போய்க்கொண்டிருப்பதை அவள் கடைசி பத்து நிமிடத்தில்தான் உணர்ந்தாள். எவ்வளவு நேரம்தான் முகில்திரைக்குப் பின்னால் ஒளிந்து ஒளிந்து நடனமாடும் ரம்பையையும் ஊர்வசியையும் இடிமுழக்கம் மாதிரி கரவோசையையும் சலைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது? “இதோ வந்துவிடுகிறேன்” என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இன்னும் தலையைக் காட்டாமல் அரசியல் செய்துகொண்டிருக்கிறான் கண்ணன்.

இதோடு மூன்றாவது தடவையாக போனை எடுத்துவிட்டாள். பச்சை பட்டனை அழுத்தினாலேயே போதும்; ஆகக் கடைசியாக டயல் செய்த பத்து எண்களைக் காட்டிவிடும். மீண்டும் கண்ணனுக்கு அழுத்தினாள் அந்த நெஞ்சழுத்தக்காரனுக்கு அழுத்தம் கொடுக்க!

ரிங் போய்க்கொண்டிருந்தது.

இன்றைய பொழுது இப்படியே முழுகிவிடுமா? அச்சம் ஏமாற்றத்தை ராதாவின் மனக்களத்தில் பாய்ச்சி மைனாரிட்டி விளைவை ஏற்படுத்தியிருந்தது.

“என்ன டார்லிங்?” இந்தக் கொஞ்சலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை அவனுக்கு. ஆனால், வாக்கைக் காப்பாற்றும் வக்குதான் இல்லை. ராதா தைரியமாகக் கோபித்துக் கொண்டாள். உண்ணாவிரதப் போராட்டம் மாதிரி மௌன போராட்டம் சிந்தினாள், அவன் சிந்திப்பான் என்ற நம்பிக்கையில்.

கண்ணன்தான் மீண்டும் பேசினான். “கோவிச்சுக்காத டியர். நா என்னா செய்யிறது நீயே சொல்லு? பாதி தூரம் வந்துட்டேன்; திடுதிப்புனு மழ புடிச்சிக்கிச்சி. வீட்டுல இருந்து வெளியாவும்போதே தெரிஞ்சிருந்தா காடியக் கொண்டாந்துருப்பேன். ட்ராபிக் ஜேமுக்கு பயிந்துகிட்டுதான் மோட்டரக் கொண்டுவந்தேன். பாத்தா மழ வெச்சி வாங்குது! உனக்கே நல்லா தெரியுந்தானே எனக்கு மழைல நனஞ்சா ஒடம்புக்கு ஒத்துக்காதுன்னு. … ஹனி, பேசுடா”

ராதா சிவன் மாதிரி. வரம் கொடுப்பதற்கு முன்னால் சோதனைகள் கொஞ்சம் கடுமையாகத்தான் கொடுப்பாள் கண்ணன் விஷயத்தைப் பொருத்தமட்டில். கண்ணனுக்கு அதிலும் ஒரு ‘கிக்’ இருப்பதை அவள் அறிந்திருந்தாள். யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சின்ன வயசில் அம்மா சொல்லித்தந்த பாடத்தை என்றைக்குமே மறந்ததில்லை அவள்.

போனை பொத்தென்று வைத்ததில் இந்நேரம் என் வேதனையை அவன் உணர்ந்திருப்பான் என்ற நம்பிக்கையில் மீண்டும் சன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தாள். சலிப்படைந்துபோன ராதாவைத் தாஜா செய்ய ரம்பையும் ஊர்வசியும் மும்முறம் காட்டிக்கொண்டிருந்தனர்.

இந்த ஃப்ளாட் வீடு ராதாவுக்கு ரொம்ப பிடித்திருந்தது. இருபத்தி நான்காவது மாடியிலிருந்து சன்னல் வழியே எட்டிப்பார்க்கும்போது அண்டத்தோடு லயித்துப்போகிற ஒரு மன நகர்வு இருப்பது உண்மைதான். இறைவனும் இறந்துபோன அம்மாவும் இருக்கிற இடத்தையும் அந்த ஃப்லாட்டின் இருபத்தி நான்காவது மாடி ஏழாம் எண் பிண்டத்தையும் இணைக்கிற முடிச்சாக விளங்குகிறது அந்தச் சன்னல் விளிம்பு.

இரவுகளில் நட்சத்திரங்களை எண்ணி விளையாடுவதும் பகல்களின் இறைவன் போல் மேலே நின்றுகொண்டு தரையில், பாபம் செய்து மறுபிறவியெடுத்தும் திருந்தாமல் திரிகிற மனித மூட்டைகளின் நடவடிக்கைகளை கண்காணித்துக்கொண்டும் இருப்பது தனிமைப் பொழுதுகளில் அவளது பொழுதுபோக்குகள்.

போன் கூப்பிட்டதும் அவளது பிரக்ஞை முகில்களின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டுவிட்டது. எடுத்தாள்; மனசு கேட்காமல் மணியடித்துக் கூப்பிட்டவன் கண்ணன்தான். இந்த முறை கோபத்தைக் கொஞ்சம் தணித்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தாள்.

“ஹலோ ராதா, கோவிச்சுக்காத லா… தோ மழ நிக்குற மாதிரி இருக்கு. இன்னும் பத்தி பதினஞ்சி நிமுசத்துல நின்னுரும். பீ.ஜே.லருந்து புக்கிட் பிந்தாங் வர எனக்கு பதினஞ்சி நிமுசம்தான் ஆவும். அறமணி நேரத்துல டாங்னு அங்க வந்து நீப்பேன் பாரேன்,” மீண்டும் வாக்குறுதி.

ராதா மௌனம் கலைத்தாள். “சரி சரி… செய்யிறத செஞ்சிருங்க; அப்பறமா வந்து மன்னிப்பு கேளுங்க! வர்ரதே வாரத்துல ஞாயித்துக் கெழம லீவுல மட்டுந்தான். அதுலயும் இவ்ளோ கோளாரு! கொஞ்சம் வெள்ளனையே கெளம்பிருக்களாம்ல? என்னயும் வெட்டியா காக்க வெச்சிட்டீங்க,” கோபத்தைச் சொல்லில் மட்டும் காட்டி கொஞ்சலை தொனியில் மட்டும் காட்டும் திறமை எல்லாருக்கும் வருவதில்லை; ராதாவுக்கு அது உண்டு.

டிங் டாங்…

காலிங் பெல் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக ஓசை எழுப்பியது. இந்த ஓசையைக் கேட்டதும் தெரிந்துவிடும் கண்ணன் கண்ணாபின்னாவென துன்புறுத்துகிறான் அந்தக் காலிங் பெல்லை என்று.

ஓடி வந்து கதவைத் திறந்துவிட்டு அவன் முகத்தைப் பார்க்காமலேயே மீண்டும் போய் சோஃபாவில் வாஞ்சையாகச் சாய்ந்துகொண்டாள். “உனக்காக மழையென்று கூட பார்க்காமல் ஓடி வந்தேன் பார்” என்று காட்டுவதற்கு மாதிரி மழைத்துளிகளைக் மேலே தெளித்துக்கொண்டு வந்தவனுக்கு அவள் கண்டுகொள்ளாமல் போனது அவனது முயற்சிக்குச் சின்ன நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது போன்று இருந்தது.

அவளுக்கு விளக்கம் சொல்லித் தாஜா செய்யவேண்டிய அவசியம் கண்ணனுக்கு இல்லைதான். ஆனாலும், அந்த வாரத்து ஞாயிற்றுக்கிழமை நூறு சதம் மார்க்கு வாங்க இதெல்லாம் தேவைப்பட்டது.

சப்பாத்தை கழற்றிவிட்டு குளியல் அறைக்குச் சென்று தலையைத் துவட்டிக்கொண்டான். மீண்டும் ஹாலுக்கு வரும்போது போனில் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தாள் ராதா. ஆகக் கடைசியாக “நாளைக்கு வாங்களேன்” என்று சொன்னது மட்டும்தான் விளங்கியது. அதற்குமுன் என்ன பேசினாள்; யாருடன் பேசினாள் என்பதெல்லாம் தெரியாத சூட்சுமம்தான்.

அதையெல்லாம் துப்புத்துலக்க அவனுக்கு நேரமில்லை. மூன்று பேர் அமரும்படி நீளமாகச் செய்துவைத்திருந்த சோஃபாவில் டயானா இளவரசியை நினைவுக்குக் கொண்டுவரும் கண்கள், பாதி மூடிய மாதிரியும் மீதி திறந்த மாதிரியும் இருக்க மிதமாகச் சார்ந்து படுத்திருந்த அவளை அப்படியே அள்ளிக்கொள்ளவேண்டும் என்று மட்டும்தான் தோன்றிற்று.

பகல் பதுக்கிவைத்திருந்த வானத்து வைரங்களை இருள் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு இன்னும் ஏறக்குறைய இரண்டு மூன்று மணிநேரம் இருந்தது.

வரும்போதெல்லாம் ஒரு வீடியோ படத்தை எடுத்து வருவதும் அதை ராதாவோடு கட்டிலில் சாய்ந்துகொண்டு ஆவலோடு பார்ப்பதும் கண்ணனது விருப்பங்களில் ஒன்று. இந்த முறையும் ஏதோ ‘கசமுசா’ படத்தைத்தான் கொண்டு வந்திருந்தான் என்பது போகப்போகத்தான் அவளுக்குத் ‘தெரிந்தது’.

படம் முடிந்ததோ இல்லையோ, கண்ணன் வந்த வேலை திருப்திகரமாக முடிந்தது. அவள் மீண்டும் கசங்கிப்போனாள்.

கசங்கியதால் சரீரமெல்லாம் அசதி ஆதிக்கம் செலுத்த, இடையில் இரண்டு நிமிடங்களைத் திருடிக்கொண்டு உடைகளைப் போட்டுக்கொள்ளக்கூடிய நிதானத்தையும் இழந்து ஆழமாகத் தூங்கிப்போனாள் அவளது கண்ணனின் பஞ்சு முளைத்த நெஞ்சு மேல்.

அவளது அந்த ஆழ்ந்த நித்திரையைக் கலைத்துவிட்டது காலிங் பெல்லின் டிங் டோங். தற்காலிகமாகத் தப்பித்து ஒளிந்து கொண்டிருந்த பிரக்ஞை காலிங் பெல் ஓசையைக் கேட்டு பயந்து பதறியடித்து மீண்டும் சரணடைந்துவிட்டது அவளிடமே.

சிந்தி சிதறிக்கிடந்த உடை(மை)களைப் பொறுக்கியெடுத்து உரிய இடத்தில் சமர்பித்துவிட்டு போர்வையால் உடலைச் சுற்றிக்கொண்டு படுக்கை அறையை விட்டு வெளியே வந்தாள்.

கண்ணன் எப்போதோ கிளம்பிவிட்டார் என்பதைக் குறிசொல்லிக்கொண்டிருந்தது இரு நூறு வெள்ளி நோட்டுகள் சாப்பாட்டு மேசையின் மேலே.

காலிங் பெல் பொருமையை இழந்துவிடும் போலிருந்தது. சுற்றியிருந்த போர்வையோடே போய்க் கதவைத் திறந்தாள். நேற்றைய தினத்தில் வாக்குறுதி கொடுத்திருந்த சுப்பிரமணியன் நின்றுகொண்டிருந்தான்.

நேற்றுவரை ராதாவாகிய அவள் இன்றைக்கு வள்ளியாக கதவைத் திறந்துவிட்டாள்.

நன்றி; வல்லினம் – மலேசிய இணைய இதழ் 

தொடர்புடைய சிறுகதைகள்
எனது வாழ்க்கையின் பெரும்பகுதி செலவாவது எனது கட்டிலிலும் இந்தச் சாலையிலும்தான். கட்டிலில் எனை மறந்து உறங்கி வழியும் தருணங்களை நான் எப்போதும் குறை சொல்லியது கிடையாது. ஆனால், இரண்டாவதாகச் சொன்னேனே அதுதான் எப்போதும் எனது சாபங்களை அள்ளித் தின்று வளர்ந்து நிற்கும் ...
மேலும் கதையை படிக்க...
மாறனுக்குக் கண்ணத்தில் அறை வாங்கியதுபோல் இருந்தது. அவமானமும் ஆத்திரமும் ஜிவுஜிவுயென தலைக்குமேல் ஏறி உச்சந்தலையில் ஆணியடித்துப் பொறிகிளப்பின. ஒன்றும் செய்யமுடியாத வக்கற்ற நிலை அவனை ஏளனம் செய்து உட்கார வைத்துவிட்டது. பக்கத்து நாற்காலியில் எதிர்த்த வரிசையில் என்று எல்லாரும் தன்னைப் பற்றித்தான் ...
மேலும் கதையை படிக்க...
[என்றாவது ஒரு நாள் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்று நம்புகிறவர்களுக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இப்படைப்பு சமர்ப்பணம்] ஆரவமர பத்து மணிக்கு எழிஞ்சே பழக்கமா போயிடிச்சிப்போ. என்னாவோ கெட்ட பழக்கம்! கண்ண முழிச்சதும் சொவருல ஒட்டிவச்சிருக்குற அந்தப் படத்தப் பாத்துப்புட்டாதான் நமக்கு நாளே ஓடும். ...
மேலும் கதையை படிக்க...
“முடியவே முடியாது” என்று கறாராகச் சொல்லிவிட்டேன். விடவே விடமாட்டோம் என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பிள்ளைகளைப் பார்த்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. போனால் போகிறது என்று அவர்கள் போக்குக்கு ஒத்துப்போகலாம் என்றுதான் தோன்றிற்று என்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் எனக்கென்று ஒரு ‘இது’ இருக்கிறது அல்லவா? ...
மேலும் கதையை படிக்க...
ஆசுவாசமாய் நிரம்பிக் கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச் சமாளிக்க, முடிந்தவரை முடக்கிவிட, அது முடியாமல் போக வரும் கோபத்தை யார் மேலாவது அல்லது எதன் மேலாவது காட்டுவது, சொல்லப்போனால் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்
இன்னும் அரைமணிநேரத்தில்…
தமிழீழம் 2030
நான் பாடிய பாட்டு
ராதா : எண் 7, இருபத்து நான்காவது மாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)