நேர் காணல்

 

வெளி உலகில் தன்னை அதிகம் வெளிச்சத்துக்கு கொண்டு வராமலும்,தன்னை நம்பாமலும் பிரிந்து சென்று விட்ட தன் மகனை நினைத்து பெரிதும் கலங்கிக்கொண்டிருந்த தனவந்தரான சூரிய நாராயணன் தற்போது வந்த தொலை பேசி அழைப்பால் இறுதலை கொள்ளி எறும்பாய் தவித்துக்கொண்டிருக்கிறார்.

சூரிய நாராயணன் அந்த ஊரின் பிரபல புள்ளி. பல நிறுவனங்களை நடத்திக்கொண்டிருப்பவர், பலவித தான தருமங்களையும் அந்த ஊரில் செய்து கொண்டுள்ளவர், அன்று காலையில் அலுவலகத்தில் தனக்கு போன் மூலம் வந்த தகவலை பற்றி சிந்தித்து கொண்டிருந்தார்.

சிறிது நேரம் யோசித்தவர், எந்த முடிவுக்கும் வரமுடியாதவர் போல் யாரையோ அழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது மேசையில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். உள்ளே வந்த அலுவலக உதவியாளர் பாலுவிடம் கண்ணனை வரச்சொல்.

ஐந்து நிமிடத்தில் கதவை தட்டி வந்த கண்ணனுக்கு வயது அறுபது மேல் இருக்கும்.

ஏறத்தாழ சூரிய நாராயணனனின் ஆரம்ப காலத்திலிருந்து உடனிருப்பவர். என்ன சூரி எதுக்கு கூப்பிட்டே?

“விடி வெள்ளி” பத்திரிக்கையில இருந்து கூப்பிட்டிருக்காங்க.என்னை இண்டர்வியூ பண்ணனுமாம். எனக்கு தோதான டைம் கேட்டு போன் பண்ணாங்க. அதுதான் என்ன பண்ணறுதுன்னு யோசிச்சுட்டு உன்னை கூப்பிட்டேன்.

அந்த பத்திரிக்கை நல்ல பத்திரிக்கை தானே, அதை நடத்தறவங்க கூட..இழுத்தார், வேண்டாம் அதை பத்தி பேச வேண்டாம். பத்திரிக்கை நல்ல பத்திரிக்கைதான். ஆனா அதை நடத்தற கணேசன் குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேப்பானே?

அதனாலதாப்பா அந்த பத்திரிக்கைக்கே நல்ல பேர். சில கேள்விகள் அப்படி கேட்டாலும் மத்தவங்களோட சொந்த விசயங்களோ,இல்லை சினிமா செய்திகளோ வர்றதில்லையே.

தைரியமா போ, சொல்லிவிட்டு உன் மேல பரிதாப பட்டு அந்த கணேசன் கேள்வியே கேக்கமாட்டாரு, சொல்லி விட்டு சிரித்தார்.

அதுதாம்ப்பா என் கவலையே, நான் வருத்தப்படறேன்னு எல்லாம் கவலை பட்டிருந்தான்னா இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்குமா !. பெருமூச்சுடன் எழுந்தவர், சரி வர்ற சனிக்கிழமை காலையில டைம் கொடுத்துடறேன்.

சனிக்கிழமை காலை ஒன்பது மணி அளவில் அந்த பத்திரிக்கை அலுவலகத்துக்கே சென்ற சூரிய நாராயணனை அலுவலக வாசலிலேயே வரவேற்றார் கணேசன்.வாருங்கள் உங்களோட இண்டர்வியூ எங்களுக்கு தேவைப்படுது, அதனால உங்களை கொஞ்சம் சிரமப்படுத்திட்டோம், சொல்லிவிட்டு மென்மையாக சிரித்தார் கணேசன்.

எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு. சொன்ன சூரிய நாராயணனை, நீங்கள் கொஞ்சம் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துங்குங்க. நான் தான் உங்களை இன்டர்வியூ பண்ணப்போறேன்.

உங்களுக்கு எங்க பத்திரிக்கையை பத்தி நல்லா தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நாங்க அநாவசியமா பிறருடைய சொந்த விசயங்களை பத்தி எழுத மாட்டோம். சினிமா சம்பந்தபட்ட விசயங்களை கூட எழுதமாட்டோம்.மக்களுக்கு என்ன தேவை, இது மட்டும் தான் எங்க பத்திரிக்கையில எழுதறோம்.அதனால தைரியமா உங்க இண்டர்வியூவ கொடுக்கலாம்.

இந்த விளக்கத்தை கேட்டு கொஞ்சம் தெளிவான சூரிய நாராயணன், நான் தயார் என்று சொல்லவும் பேட்டி ஆரம்பமானது.

முதல்ல உங்களை பத்தி சொல்லிக்கலாமே தன் பெயரையும், இந்த ஊரில் தான் நடத்திக்கொண்டிருக்கும் நிறுவனகளையும் சொன்னார்.

அடுத்த கேள்வியே அவரை மிரள வைத்தது, நீங்க பரம்பரையாகவே இந்த நிறுவனங்களை நடத்திட்டு வர்றீங்களா?

இல்லை, நான் என்னோட நாப்பதாவது வயசுல இருந்துதான் இந்த நிறுவனங்களை நடத்த ஆரம்பிச்சேன்.

அப்ப அதுவரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க? இந்த கேள்வியை கணேசன் அழுத்தி கேட்டது போலிருந்தது.

ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தார், மனம் தைரியமாக பேசு? எதற்கு பயம்? என்று சொன்னதாக பட்டது. பட்டென கண்ணை திறந்து நான் அடிக்கடி சிறைக்கு செல்லும் அடியாளாகத்தான் இருந்தேன்.

இந்த நேரடி பதிலால் இப்பொழுது தடுமாறியது கணேசன் தான். சட்டென சமாளித்து அப்படியானால் அடியாளாக வேலை செய்து சம்பாரித்துத்தான் இத்தனை நிறுவனங்களை நடத்த ஆரம்பித்தீர்களா?

சூரிய நாராயணன் இப்பொழுது தைரியமாகி விட்டார்.இல்லை, நான் சிறையில் இருந்து வெளியே வரும்பொழுது அங்கு பணி புரிந்ததற்கு எனக்கு கிடைத்த தொகையும்,என்னையும் நல்வழி படுத்தவேண்டி அந்த சிறை அதிகாரி எனக்கு கடனாக கொடுத்த பணத்தையும் சேர்த்து ஒரு லேத் பட்டறை ஆரம்பித்தேன். அதிலிருந்து வளர்ந்ததுதான் இத்தனை நிறுவனங்கள்.

அடுத்த கேள்வியை நேரடியாகவே மனதை பாதிக்கும்படியே கேட்டார் கணேசன், இப்பொழுது நீங்கள் நல்லமனிதராக தென்பட்டாலும் உங்களது நாற்பது வயது வரை உங்களது அடாவடி செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?

கணேசனின் முகத்தை பார்த்தார், அதில் எந்த உணர்ச்சியையும் கண்டு பிடிக்க முடிக்கவில்லை,பதில் வேண்டும் என்ற எதிர் பார்ப்பே இருந்தது. பெருமூச்சுடன், உண்மைதான், நான் ஓரளவு வருமானத்தை ஈட்ட ஆரம்பித்த பின் என்னுடைய சம்பாதிப்பின் பாதி அளவு என்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கே செலவழித்துக்கொண்டிருக்கிறேன். இப்பொழுதும் அதாவது இந்த அறுபதாவது வயது வரை செலவு செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

இருந்தாலும் உங்களால் பாதிக்கப்பட்டவர் இதனால் நலமாகி விடுவாரா?

இல்லை நான் மறுக்கவில்லை, என்றாலும் அவர்கள் நலமுடன் இருந்தாலும்,அவர்கள் அந்த குடும்பத்திற்கு செய்வதற்கு மேல் நல்லது செய்துள்ளதாக நினைக்கின்றேன். சந்தேமிருந்தால் என்னால் பாதிக்கப்பட்டவர்களின் விலாசத்தை தருகிறேன், விசாரித்துக்கொள்ளவும்.

சரி ஒப்புக்கொள்கிறோம், இருந்தாலும் உங்கள் பழைய வாழ்க்கையை யாரும் சொல்லி உங்களை சுட்டிக்காட்டுவதில்லையா?

ஏன் காட்டாமல்? நீங்கள் கேட்டீர்களே அது மாதிரி நிறைய பேர் என் காது படவே பலரிடம் அடித்து பிடுங்கிய பணம்தானே என்று சொல்லியிருக்கிறார்கள் உண்மையை சொல்லுகிறேன்,

அன்று என்னிடம் இருந்த கூட்டம் இன்னும் அப்படியே இருக்கிறது.ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த அத்தனை பேருடைய குடும்ப உறுப்பினர்களும் இன்று நன்கு படித்து நல்ல நல்ல நிலைமையில் உள்ளார்கள். என்னுடன் சிறையில் இருந்த ஒருவரின் பிள்ளை இன்று கலெக்டராக கூட படித்து முன்னேறியிருக்கிறார்.ஏன் என் பிள்ளை கூட இன்று சமுதாயம் மதிக்க கூடிய நிலையில்தான் உள்ளார்.

உங்கள் முற்காலத்தை வைத்து உங்கள் ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் நீங்கள் எப்படி அறிவுரை சொல்ல முடியும்?

நல்லவர்கள் இல்லையென்றால் படித்தவர்கள், இவர்கள் மட்டுமே அறிவுரை சொல்லமுடியும் என்றால் இங்கு ஒருவரும் சொல்ல முடியாது.நான் நாற்பது வயது வரை பட்ட கேவலங்கள்தான், இன்று இவ்வளவு வசதிகள் வந்தும், என்னை இன்று ஒவ்வொரு நாளும் தவறுகள் செய்யாமல் செய்யாமல் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.

நீங்கள் அடுத்து என்ன செய்ய விரும்புகிறீர்கள்?

எனது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் இந்த ஊரின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த அளவு நன்மைகள் செய்ய முயற்சிகள் செய்து கொண்டுள்ளேன்.கடைசியாக ஒரு வார்த்தை சொல்லி விடுகிறேன்.ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளும் ஒரு வக்கிரம் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. அது வெளிவரும் போது பல்வேறு உருவங்களாக சாதி,மொழி,இனம்,மதம், மற்றும் ஆசை, பொறாமை,ஆங்காரம் இவைகளாக வெளி வந்து அந்த காலத்தில் எங்களை போன்ற ஆட்களை அணுகி பணம் கொடுத்து காரியத்தை சாதித்து கொள்ளும்படி தூண்டி விடுகிறது.

கடைசியாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன், நான் எப்பொழுது திருந்தி வாழவேண்டும் என்று நினைத்தேனோ அப்பொழுதில் இருந்தே என் உழைப்பால் வரும் பணத்தை மட்டும் அனுபவித்து,பிறருக்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

விடை பெற்று வெளியே வந்த பொழுது “அப்பாவை பார்த்து கூட்டி போங்கள்”என்று டிரைவரிடம் சொன்ன கணேசனை கண்ணில் நீர் மல்க பார்த்தார் சூரிய நாராயணன். தனக்கு விளக்கமளிக்க சந்தர்ப்பம் அளிக்காமல், சமுதாயத்தை துன்புறுத்தி சம்பாதித்த பணம் இது. எனக்கு தேவை இல்லை என்று தன்னை விட்டு பிரிந்து சென்ற மகனுக்கும் இந்த சமுதாயத்திற்கும் விளக்கமளிக்க ஒரு வாய்ப்பு இந்த பத்திரிக்கை வாயிலாக கிடைத்ததற்கு மகனுக்கு ஒரு நன்றியை கண்களின் வழியாக செலுத்தினார். 

தொடர்புடைய சிறுகதைகள்
அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி அதை ஒரு குறையாக சொன்னாள் " கரண்ட் பில் கட்டறதுக்கு உங்கப்பாவை அனுப்பலாமுன்னா காலையில வெளிய போன மனுசன் இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
சென்னை மெரீனா கடற்கரையில் கடலைலகளை பார்த்தவாறு உட்கார்ந்திருந்த கணேசின் தோளில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் ரம்யா. அடுத்த வருசம் எனக்கு படிப்பு முடிஞ்சிடும், படிப்பு முடிஞ்சிருச்சின்னா என் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்குள்ள நீங்க ஒரு ஏற்பாடும் பண்ண மாட்டேங்கறீங்க. நான் என்ன ...
மேலும் கதையை படிக்க...
தேதி:2/01/1971 அன்புடையீர் வணக்கம்! இந்தக்கடிதம் கண்டவுடன் நீங்கள் யார் எழுதியது என குழம்பிக்கொள்ள வேண்டாம். போன வாரம் வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டிற்கு வந்து பஜ்ஜி, வடை, காப்பி சாப்பிட்டுவிட்டு காரம் கொஞ்சம் தூக்கல் என்று அந்தக் கூட்டத்தில் உமது அம்மையார் ஏதோ பெரிய ...
மேலும் கதையை படிக்க...
நமது காலனி குடியிருப்போர் சங்க கமிட்டி தலைவர் இப்பொழுது பேசுவார் என்று சொன்னவுடன் அந்த கூட்டத்தில் நான்கைந்து கைதட்டல்களே ஆதரவாய் எழுந்தன.இது எனது மனதுக்கு கோபத்தை வரவழைத்தது. நிறைய பேருக்கு நான் தலைவராய் இருப்பது பிடிக்கவில்லை, என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு முன்னால் ...
மேலும் கதையை படிக்க...
இந்த கதையில் உங்களையும் ஒரு கதாபாத்திரமாக்கலாம் என நினைத்துள்ளேன். இந்த சாதாரண எழுத்தாளன் உங்களை கதாபாத்திரமாக்குவதால் சாதாரணமான கதாபாத்திரமாக, ஆக்குவேன் என நினைத்து விடாதீர்கள். பெரிய இடத்து பிள்ளைகள் நீங்கள். உங்களுக்கு வயது இருபத்தி இரண்டு அல்லது ஒன்றாக இருக்கலாம், பெண்ணாக இருந்தால் ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவை காணவில்லை
காதலாவது கத்தரிக்காயாவது?
அது அந்தக்காலம்
தலைவர் என்ற தோரணை
ஹவுஸ் புல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)