கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 15,345 
 

கலைச்செல்வன் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த கூட்டத்தை வியப்பாகப் பார்த்தார். அந்தத் தலைமை அலுவலகத்தில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பிரிவுபச்சார நிகழ்வுகள் சாதாரணம். ஆனால் இதுவரை கான்ஃபரன்ஸ் ஹால் நிரம்பியதில்லை. இருபுறமும் ஊழியர்கள் ஆர்வமாக நின்றிருந்ததில்லை.

நேர்மை

பல்வேறு துறைகளிலிருந்தும் சகாக்கள் திரண்டிருந்தார்கள். திண்டுக்கல் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர், கலைச்செல்வன் பார்வையை உணர்ந்து வணங்கினார். செல்வனுக்கு ஆச்சரியம். வாழ்த்தி வழியனுப்பி வைக்க திண்டுக்கல்லிலிருந்து வந்திருக்கிறார்

செயலாளர் பேசிக் கொண்டிருந்தார்:

“”கலைச்செல்வனைப் பொறுத்தவரை இது ஒரு விடுதலை. பல துறைகளிலிருந்தும் அவருக்கு அன்புத் தொந்தரவுகள் அதிகம். எந்தத் துறையில் ஃபைலில் சந்தேகம் வந்தாலும், அவரைத்தான் கூப்பிடுகிறோம். அந்த அளவுக்கு சகலமும் கற்றவர். தனது பணியை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இவ்வளவு ஈடுபாட்டோடு வேலை பார்க்க முடியும். வேறு துறைக்கு அவர் மாற்றப்பட்டாலும் சில நாட்களிலேயே போராடி மீண்டும் கல்வித்துறைக்கு வந்து விடுவார். காரணம், கல்வி மீது அவர் கொண்டிருந்த ஆர்வம். . அவரது ஓய்வு கல்வித்துறைக்கு இழப்பு என்றே சொல்வேன்…”

கலைச்செல்வனுக்கு செயலாளரின் பேச்சு நினைவுகளைக் கிளறியது. அன்னப்பன்பேட்டையிலிருந்து தினம் பத்து கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று மயிலாடுதுறை மண்ணம்பந்தல் கல்லூரியில் எம்.ஏ. படித்ததும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் செகரெட்டேரியேட் சர்வீஸக்கு தேர்வெழுதியதும் நினைவுக்கு வந்தன.

எல்லாருக்கும் இது போன்ற பாராட்டுகள் அமைந்து விடுவதில்லை. அவர் பேட்ச் அலுவலர்கள் நான்கு பேர் இன்னும் பிரிவு அலுவலர் கிரேடைக் கூடத் தொடவில்லை. உத்யோகத்தில் உயர்வதற்கு நிறையக் காரணிகள் தேவைப்படுகின்றன. கலைச்செல்வன் அத்தனை காரணிகளையும் தனது உழைப்பு என்கிற குடைக்குள் கொண்டு வந்தவர். எந்த ஓர் அலுவலரின் பணியோடும் ஒப்பிட முடியாதவர்.

ஈடுபாடு. அர்ப்பணிப்பு, எடுத்த செயலில் முனைப்பு, எதற்கும் வளைந்து கொடுக்காத நேர்மை… அறியாமை தகர்த்து இந்த தேசம் முன்னேறுவதற்கு கல்வி அறிவைத் தாண்டி வேறெதும் இல்லை என்கிற விசாலமான எண்ணத்துடன் கூடிய உறுதியான நம்பிக்கை… அரசாங்கத்திற்கும் பள்ளிக்கூடங்களுக்கும் இடையேயான உறவுப்பாலம் கல்வித்துறை என்கிற எண்ணம்… அவரது முப்பத்தைந்து கால பணியில் அவர் சம்பாதித்து வைத்த சொத்துக்கள் இவை.

“”சார் திண்டுக்கல் கல்வி மாவட்டம் முட்லூர் கிராமத்திற்கு அருகே உள்ள செவந்தங்குடி பள்ளி இந்த வருடம் முதல் மேல்நிலைப்பள்ளியாக நிலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் எங்கள் ஊரிலிருந்து பிள்ளைகள் அந்த ஊருக்கு போக முடியாது. காரணம் காலம் காலமாக ஊர்ப்பகை. இதனால் எங்கள் ஊர் பள்ளி மாணவர்கள் ஊருக்கு மேற்காக பத்து கிலோ மீட்டர் சென்றால்தான் மேல்நிலை கல்வி கற்கலாம். அவ்வளவு தூரம் அனுப்புவதற்கு பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் தயங்குகிறார்கள். இதனால் இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என்கிற அரசு விதியை மீறி முட்லூர் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தினால் வருடத்திற்கு ஐம்பது பிள்ளைகள் பயன் பெறுவார்கள். ஆனால் அரசு விதியை சுட்டிக்காட்டுகிறார்கள். நீங்கள் உதவ முடியுமா?”

இப்படி ஒரு வேண்டுகோளுடன் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் கலைச்செல்வனை சந்தித்தபோது கலைச்செல்வன் யோசிக்கவேயில்லை. தலைமையாசிரியரை அழைத்துக் கொண்டு நேரடியாக அமைச்சரைச் சந்தித்தார். சூழ்நிலையை விளக்கினார். அமைச்சருக்கு யதார்த்தம் புரிந்தது. அரசு விதியை தளர்த்தி நாற்பத்தெட்டு மணி நேரங்களில் முட்லூர் பள்ளி மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அந்த பள்ளியின் தலைமையாசிரியர்தான் நானூறு கிலோ மீட்டர் பயணித்து இப்போது வாழ்த்துச் சொல்ல வந்திருக்கிறார்.

ஒருமுறை அவரது வேண்டுகோளை மீறி அமைச்சரின் நேரடி உதவியாளர் பதவி அவரிடம் திணிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து நீண்ட விடுப்பில் சொந்த ஊருக்குச் செல்ல மனு போட்டார்.

“”அடுத்த வாரம் கல்வித்துறை மான்யக் கோரிக்கை. கலைச்செல்வன் போன்ற அனுபவஸ்தர்கள் இருபத்தி நான்கு மணிநேரமும் எனக்கு உதவியாக, எனது நேரடி பார்வையில் இருக்க வேண்டும். இப்போது எதற்கு விடுப்பில் சென்றிருக்கிறார்?”

அமைச்சர் இப்படி கேட்டபோது, “”சார்… நேர்முக உதவியாளர் பணி சிக்கலானது. நிறைய வேண்டுகோள்கள் வரும். என்னால் வளைந்து கொடுக்க முடியாது. இது உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்” என்றார் கலைச்செல்வன்.

“”உங்களைப் போன்ற சின்சியரான ஆபீஸர்கள் இருப்பதால்தான் கல்வித்துறை சிறப்பாக இயங்குகிறது. உங்களுக்கு என்ன சிரமம் என்றாலும் என்னிடம் வாருங்கள்” என்றார். ஆனால் முப்பத்தைந்து ஆண்டு கால சர்வீஸில் கலைச்செல்வன் யாரிடமும் எதற்கும் சென்றதில்லை. ஓர் அங்குலம் கூட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததில்லை. ஆனால் அவரை தேடித்தான் பலரும் வந்திருக்கிறார்கள்.

“”சார்… ஒரு வேண்டுகோள்… நாளை உங்களுக்கு ரிடையர்மெண்ட். அண்டர் செகரெட்டரியா நீங்க வேலை பார்த்தாக் கூட செக்ஷன் ஆபீஸரா நீங்க இருந்தப்ப உங்கள கையால எழுதின அத்தனை ஜி.ஓ.வையும் எடுத்துத் தர முடியுமான்னு எங்க செகரெட்டரி கேட்டாரு…”

பொதுத்துறை அதிகாரி ஒருவர் நேற்று கலைச்செல்வனிடம் வைத்த வேண்டுகோள் இது. ஜி.ஓ. தயாரிப்பு என்பது பிரிவு அலுவலரின் வேலை. என்றாலும், எல்லாருக்கும் அது வந்து விடாது. சரியான வார்த்தைகளைப் போட்டு, நெளிவு சுளிவோடு ஜி.ஓ. எழுத வேண்டும். ஜிஓ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் அரசாங்க ஆணை, ஒரு பக்காவான ஆவணம். கல்வித்துறையில் அவர் எழுதிய ஒவ்வொரு ஜி.ஓவும் தெளிவானவை.

கலைச்செல்வன் சிரித்தார். அவரது வேண்டுகோளை ஏற்று காலையில் வழக்கத்தை விட முன்பாக அலுவலகம் வந்து அவர் எழுதிய அத்தனை ஜி.ஓ.க்களையும் பிரிண்ட் அவுட் எடுத்தார். திரும்ப ஒருமுறை படித்தார். ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவம் பளிச்சிட்டதை அவரால் உணர முடிந்தது. மனதில் அவரது பணி குறித்து ஒரு திருப்தி பரவியது. ரிடையர்மெண்ட் தினத்தன்று காலை எட்டு மணிக்கே அலுவலகத்திற்கு வந்து கடைசி நாளை தனது நாற்காலியில் அமைதியாக, தனது அனுபவம் பற்றி நெகிழ்வான நினைவுகளோடு கழிக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் இருந்தவருக்கு, தொண்டை கட்டிக்கொண்டு அழுகை வந்தது. மெனமாக அழுதார்.

“”இப்போது கலைச்செல்வன் பேசுவார்”

எழுந்து மைக் அருகே சென்றார்.

வார்த்தைகள் வரவில்லை. தடுமாறினார். நாக்கு புரள மறுத்தது. தொண்டை அடைத்தது. அனைவரையும் பார்த்து வணங்கினார். கலங்கிய கண்களோடு திரும்ப வந்து நாற்காலியில் அமர்ந்தார்.

அருகில் அமர்ந்திருந்த துறைச் செயலாளர், கலைச்செல்வனின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவரது கைகளை அழுத்தமாகப் பற்றினார்.

கண்களில் தேங்கி நின்ற கண்ணீர், எதிர்பார்த்திருந்தது போல மளுக்கென்று உடைந்து கன்னங்களில் வழிந்தது. மேடை மேல் இருந்த அத்தனை அதிகாரிகளும், நண்பர்களும் கண்கலங்கினார்கள். ஒரு நேர்மையாளரின் உழைப்புக்கு அங்கீகாரமும், மரியாதையும் அங்கே கண்ணீராக வெளிப்பட்டது.

தலைமைச் செயலகத்திலிருந்து வீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மினி பேருந்தில் ஏறி அமர்ந்தார். நெருங்கிய நண்பர்கள் அவரோடு ஏறிக் கொண்டார்கள். பேருந்து வீடு நோக்கி நகர்ந்தது. செல்போனில் மனைவியை அழைத்தார்.

“”ஆபீஸ்லேந்து புறப்பட்டுட்டேம்மா…”

மறுமுனை அமைதியாக இருந்தது. புரிந்தது. மனைவி அழுகிறாள். தினம் காலை டிபனும் மதிய சாப்பாடும் கட்டிக் கொடுத்தவள். கடந்த இரண்டு வருடங்களாக “”ஏங்க கிளம்பிட்டிங்களா… எங்க இருக்கீங்க?” என்று மணிக்கொரு முறை செல்ஃபோனில் கேட்டவள். இனி சம்பளம் வராதே என்கிற கவலை காரணமல்ல அந்த அழுகைக்கு. கணவன் மிகமிக நேசித்த ஒன்றை இழந்து வருகிறானே என்கிற எண்ணமே காரணம்.

“”அரைமணியில வந்திடுவேம்மா…”

பதில் எதிர்பார்க்காமல், ஃபோனை கட் செய்தார்.

“”கலை…. இனி என்னப் பண்ணப் போறீங்க…?”

அருகில் அமர்ந்திருந்த சார்புச் செயலாளர் பரந்தாமன் கேட்டார்.

சிரித்தார். “”ரெஸ்ட். ஒய்ஃபோட பேரனோட விளையாட்டு…”

“”நோ…” செல்லமாகச் சிரித்தார்.

“”உங்களோட அனுபவம், திறமை இதையெல்லாம் அந்த போரூர் டபுள் பெட்ரூம் வீட்டுல வேஸ்ட் பண்ணப் போறீங்களா?”

“”வேற என்ன பண்ணலாம்…”

“”எனக்கு வேண்டப்பட்ட ஒருத்தர நீங்க நாளைக்குப் பார்க்கறீங்க… காலைல பதினோரு மணிக்கு வரச் சொல்லி இருக்கார். சாரி… நீங்க போக வேணாம்… உங்க வீட்டுக்கு கார் வரும்… இனிமேதான் உங்களுக்கு வாழ்க்கையே ஆரம்பிக்கப் போவுது கலை…”

பென்ஷனுக்கும் சம்பளத்திற்கு இடையே விழுந்த இடைவெளியை பரந்தாமன் நிரப்புவாரோ? எப்படி நேரத்தைக் கழிக்கப் போகிறோம்? என்கிற தவிப்புக்கு முடிவோ?

“”ஏங்க வீடு கட்ட வாங்கின லோன் இன்னும் முடியாம பேங்க்ல இருக்கே… என்னங்க பண்ணப் போறீங்க…” என்று மறுகிய மனைவிக்கு ஆறுதலா

கலைச்செல்வன் புரியாமல் சிரித்து வைத்தார்.

வீட்டில் இறங்கியபோது பெரிய மாலை போட்டார்கள். துண்டு போர்த்தினார்கள். நண்பர்களும் உறவினர்களும் திரண்டு வந்திருந்தார்கள். ஏனோ மனது தனிமையை விரும்பியது. ஆனால் முடியாது போலிருந்தது

பக்கத்தில் இருக்கும் கக்கன் நகரிலிருந்து அவ்வப்போது அவரிடம் பாடத்தில் சந்தேகம் கேட்கும் சிறுவர்கள் வாசலில் நின்றிருந்தார்கள். அவரைப் பார்த்து கோரஸôய் “”வணக்கம் சார்”

“”சார்… நாங்க எல்லாரும் காசு போட்டு வாங்கினோம் சார்..”

அழகான பேனா ஒன்றை நீட்டினார்கள்.

“”இனிமே பாடத்துல சந்தேகம் கேட்க பகல்லயும் வரலாமா?”

“”எப்ப வீட்டுல இருப்பேன்னு நாளைக்கு சாயங்காலம் சொல்றேன்… வாங்க”

பேனாவை வாங்கி சட்டைப் பையில் சொருகிக் கொண்டார்.

மனைவி ஆரத்தி எடுத்தாள். நெற்றியில் திலகமிட்டாள். ஆதரவாய் அவளது தோளைப் பிடித்தார்.

மொட்டை மாடியிலிருந்து சாம்பார் சாதத்தின் மனம் நாசியைத் தாக்கியது. காலை சுதந்திரத் தினத்திற்கு கொடியேற்றுவதற்கான ஏற்பாட்டில் சில சிறுவர்கள் கொடி தோரணம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

உறவும், நட்பும் வாழ்த்திவிட்டு கலைந்தது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் பிரம்மாண்டமாய் கண்களை நிறைத்தது. காரிலிருந்து இறங்கியதும் அடையாளம் கண்டு கொண்ட ஒருவர், கலைச்செல்வன் அருகில் வந்து சிநேகமாய் கைகுலுக்கி மரியாதையாய் முன் நடந்தார்.

அறுநூறு ரூபாய் பேண்டும், நூற்றி நாற்பது ரூபாய் சட்டையும், எழுபது ரூபாய் செருப்பும், நெற்றியில் விபூதியும் அந்த சூழ்நிலையோடு பொருந்துகிறதா என்று யோசித்தபடி நடந்தார். லிஃப்ட் ஏறி நான்காவது மாடி வந்தார்கள்.

பெரிய அறை அது. விசாலமாக இருந்தது. ஏசி இயங்கிக் கொண்டிருந்தது. டிவியில் கிரிக்கெட்.

“”வெயிட் பண்ணுங்கள்… எங்கள் செகரெட்டரி வந்து கொண்டிருக்கிறார்” அவர் கூறிக் கொண்டிருக்கும்போதே கோட் அணிந்த அந்த நபர் உள்ளே வந்து விட்டார்.

பவ்யமாக கலைச்செல்வன் அருகே வந்து கைகுலுக்கினார்.

“”அமருங்கள்”

கலைச்செல்வன் சிரித்து அமர்ந்தார்.

“”பரந்தாமன் உங்களிடம் ஏதும் கூறியிருக்க மாட்டார். நான்தான் வேண்டாம் என்று கூறினேன். சஸ்பென்ஸ் வைக்க விரும்பவில்லை. உங்கள் அனுபவம் எங்களுக்குத் தேவை. கேள்விப்பட்டிருப்பீர்கள்… ஆர்ஆர் குரூப்”

கேள்விப்பட்டிருக்கிறார்.

எனவே, “”ஆம்” என்றார்.

“”கல்விச்சேவையில் இறங்கப் போகிறோம்.. ஆயிரம் கோடி புரொஜக்ட்… ஒரே நேரத்தில் தமிழகம் முழுக்க எட்டுக் கல்லூரிகள்… இதில் இரண்டு மெடிகல் கல்லூரிகள் அடக்கம்.

மத்திய அரசு அனுமதி வாங்கி விட்டோம். அடுத்த வருடம் கல்வி நிறுவனங்கள் இயங்க வேண்டும். ஆனால் இங்கே சில பிரச்னைகள். ஃபைல்கள் நகர மறுக்கின்றன. அதற்கான வழிமுறைகள் எங்கள் லயஸன் ஆபீஸருக்கு புரிபடவில்லை. அதற்காகத்தான் உங்களை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்… தலைமைச் செயலகத்தில் உங்களது செல்வாக்குத் தெரியும். இதுவரையில் கல்வித்துறையில் இருந்த அத்தனை அமைச்சர்களின் நேக்குபோக்குத் தெரிந்தவர் நீங்கள்… விறுவிறுவென பேப்பர்கள் நகர்த்த வேண்டும். இதோ இந்த நிமிடத்திலிருந்து நீங்கள் இயங்கத் தொடங்கலாம். இந்த நம்பருக்கு எஸ்எம்எஸ்ல் உங்கள் விருப்பங்களைத் தேவைகளை, அனுப்புங்கள் என்ன வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் வரும். இந்த ஷெட்தான் உங்களது அலுவலகம்… மாதம் லட்ச ரூபாய் சம்பளம். என்ன சொல்கிறீர்கள்…”

கலைச்செல்வன் சிரித்தார்.

அவர் குழப்பமாகப் பார்த்தார்.

“”எனக்கு அவகாசம் வேண்டும். யோசித்து சொல்ல வேண்டும்…”

“”டேக் யுர் ஓன் டைம்… பட் எங்களுக்கு பாஸிட்டிவ்வான ரிசல்ட் வேண்டும்… ஒரு திறமையான கல்வித்துறை அதிகாரியின் பங்களிப்பு எங்களுக்கு முழுமையாகத் தேவைப்படுகிறது”

ஒரு தேர்ந்த நிர்வாகியின் லாவகத்தோடு பேசினார்.

கலைச்செல்வன் எழுந்து கொண்டார்.

அப்பார்ட்மெண்ட் மொட்டை மாடியில் கலைச்செல்வன் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த கக்கன் நகர் சிறுவர்களைப் பார்த்தார். மனசு சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு பேர் அவரிடம் பாடம் படிக்க திரண்டு வருவார்கள் என்பது அவர் எதிர்பாராதது. ஏதோ ஒரு வகையில் தன்னை அவர்கள் அங்கீகரித்தது போல பட்டது.

கண்கள் அவரையறியாமல் மொட்டை மாடியில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடி மீது படர்ந்தது.

காலையில் நடந்த சம்பவம் நினைவில் ஓடியது.

அறுபத்தியாறு ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கல்வி குறித்து தெளிவான ஒரு வரைவு தேசிய அளவில் இல்லையோ என்று தோன்றிற்று.

தமிழகத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளி, தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி பலவற்றின் வரலாறு அவருக்கு அத்துப்படி. அரசுப் பள்ளிகள் தொடர்பாக வரும் அத்தனை ஃபைல்களும் அவரது பார்வைக்கு வந்த அடுத்த நிமிடமே தெளிவாகக் குறிப்பு எழுதப்பட்டு மந்திரியின் டேபிளுக்குச் சென்று விடும். குறிப்பிட்ட இடைவெளியில் ஃபைல் வெளியே வராவிட்டால் நேரடியாக மந்திரிக்கு முன்பு போய் நின்று விடுவார். ஆறு மாணவர்களுடன் தொடங்கப்பட்டு இந்த வருடம் பத்தாம் வகுப்பில் இருபது மாணவர்களை கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுக்க வைத்த தலைமையாசிரியர் அவருக்கு நெருக்கம். ரிசல்ட் வெளியானதும் முதலில் கலைச்செல்வனுக்குத்தான் போன் செய்தார். வாழ்த்துப் பெற்றார். நல்லாசிரியர் விருது பட்டியல் மந்திரிக்குப் போகும் முன் ஒபினியன் கேட்டு கலைச்செல்வனிடம்தான் வரும்.

கல்விச்சேவை… ஆயிரம் கோடி புரொஜெக்ட். எட்டுக் கல்லூரிகள்.. அனுமதி வாங்க பேப்பர்களை நகர்த்த என்னைப் போல அனுபவமிக்க ஓர் அதிகாரி… எனது பங்களிப்பை முழுமையாக வேறு பயன்படுத்த நினைக்கிறார்கள்…

யோசிக்க… சிரிப்பும் வெறுப்பும் சேர்ந்து வந்தது. தனது நேர்மை விலை பேசப்பட்டதால் வந்த வெறுப்பல்ல அது. தேச வளர்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம் சூறையாடப்படுகிறதே என்கிற வருத்தம். நண்பர் பரந்தாமன் மீது கோபம் வந்தது. தனது துறைக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆயிற்று. தன்னைப் பற்றி முழுமையாகத் தெரியாது என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.

“”சார்… எங்களுக்கெல்லாம் டாக்டருக்கு, கலெக்டருக்கு படிக்க ஆசை இருக்கு சார்… ஆனா பெரிய ஸ்கூல்ல படிக்க வசதி இல்லை… அப்பா அம்மா கூலி வேலை பார்க்கிறாங்க… எப்ப வேணும்னாலும் எஙகளையும் அந்த வேலைக்கு அனுப்பலாம்… குடும்ப சூழ்நிலை அப்படி சார்… இன்னும் பத்து பேர் எங்க நகர்ல உங்ககிட்ட பாடம் கேட்க ஆர்வமா இருக்காங்க சார்… அவங்க இங்க வர்றதுக்கு வெட்கப்படறாங்க…போன வருஷம் உங்ககிட்ட சந்தேகம் கேட்டு படிச்ச எல்லாரும் பாஸ்… ரெண்டு பேர் கணக்குல நூறு… எங்க நகர்ல ஒரு இடம் இருக்கு சார்.. தினம் சாயங்காலம் அங்க வர முடியுமா சார்.. எங்களுக்கெல்லாம் நல்லா படிக்கணும்னு ஆசையா இருக்கு பீஸ் கட்டிப் படிக்கவோ, ட்யூஷன் வச்சுக்கவோ வசதி இல்ல சார்…”

ஒரு மாணவன் சிறிதும் சுயநலமின்றி ஏக்கமாக பேசினான். அவருக்கு தனது கல்விப்பருவம் நினைவுக்கு வந்தது. அன்னப்பன்பேட்டையிலிருந்து மண்ணம்பந்தலுக்கு நடந்தும் சைக்கிளிலும் சென்று படித்தது நிழலாடியது.

கலைச்செல்வன், அவனை அருகில் அழைத்து கன்னத்தில் தட்டினார்.

“”நாளைலேந்து அங்கேயே பாடம் படிக்கலாம்”

மாணவர்கள் படபடவென கைதட்டினார்கள்.

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *