நேர்காணல்

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 5,297 
 

பேப்பர்கார பையன் வீசிய அன்றையச் செய்தித்தாள் ராமின் காலடியில் வந்து விழுந்தது. கையில் வைத்திருந்த காபியை உதட்டின் நுனியின் உறிஞ்சியபடியே செய்தித்தாளின் கடைசிப்பக்கத்திலிருந்து ஒவ்வொரு பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கத்தில் விளம்பரக் கட்டம் ஒன்று இருந்தது. அவ்விளம்பரத்தில் “ஒப்பாரி” பற்றிய சிறந்த கட்டுரைக்கு ஐந்து இலச்சம் பரிசுத்தொகை மற்றும் இரண்டாம் மூன்றாம் பரிசுகளும் இலட்சத்தில் போடப்பட்டிருந்தன. ராம் மனம் மகிழ்ந்தான். எப்படியாவது ஒப்பாரி பற்றிய ஆய்வை மேற்கொண்டு கட்டுரையைத் தர வேண்டும். பரிசுகள் கிடைக்காவிட்டாலும் கட்டுரையை முன் வைக்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருந்தது.

படித்தவனுக்கு அறிவு அதிகம் இருக்கும் என்பார்கள். ஆனால் சில நேரங்களில் படித்தவன் தோற்று போவதையும் படிக்காத அனுபவமுள்ள சிலர் பல நேரங்களில் வெற்றியடைவதையும் பார்க்கின்றோம். ஒரு மனிதனுக்கு படிப்பும் அனுபவமும் அவசியம் வேண்டும். எவன் ஒருவன் ஏன்? எப்படி? எங்கே? என்ன? எப்பொழுது? என்று கேள்வி கேட்கின்றானோ அவனே வெற்றிக்கு சொந்தகாரனாகிறான். ராமும் அப்படித்தான். பிஎச்டி முடித்து விட்டு அரசு அலுவலகம் ஒன்றில் கிளர்க்காக வேலை செய்கின்றான். வேலை விட்டால் வீடு என்று இயந்திர வாழ்க்கையைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டிருப்பான். கிடைத்த வேலையைப் பிடித்த மாதிரி செய்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது பிஎச்டி என்ற எண்ணம் வரும். அப்பொழுதெல்லாம் எதையாவது யோசித்து ஏன்? எப்படி? எப்பொழுது? என்று தனக்குத்தானே கேள்வியைக் கேட்டு கொள்வான். அம்மாதான் சும்மா நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள். அம்மாவோட அண்ணன் பொண்ண கட்டிக்கினுமா! ஆனாலும் நான் இவ்வுலகத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கின்றேன்.

“டே ராம்… என்ன யோசனையில இருக்க. காலியான காபி டம்ளரை கீழே வச்சிட்டு அப்புறமா படிடா. அப்பப்ப மரம் மாதிரி அசையாம நின்னுற… எனக்கு வேற பயமா இருக்குடா!” என்று புலம்பித் தள்ளினாள் அம்மா சந்திரா.

“அம்மா… நீ தேவையில்லாம பயப்படாதம்மா.. எனக்கு ஒன்னும் இல்ல!”

“வயசாகிட்டே போவுது. காலகாலத்துல கல்யாணம் நடந்தா நா நிம்மதியா இருப்பேன்”

“சரிம்மா… உன் அண்ணன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன். போதுமா..” அம்மாவின் வாய்யடைக்க ராமின் தந்திரம்தான் இது. இதற்கு மேல் அம்மா எதுவும் பேசாமல் சமையல் கட்டிற்குள் நுழைந்தாள். மீண்டும் செய்தித்தாளில் மூழ்கினான்.

கள்ளக்குறிச்சிக்குப் பக்கத்தில உள்ள அந்தக் கிராமத்தைப் பற்றி பிஎச்டி ஆய்வு மேற்கொள்ளும் போதே அறிந்து வைத்திருந்தான். அக்கிராமத்தில் மேனாள் என்கிற கிழவி ஒருத்தி இருந்தாள். முடி நரைத்து கூன் விழுந்து தோல் சுருங்கி நடை தள்ளாடும் ஊருக்கு அழும் பிறப்பைக் கொண்டவள். அக்கிராமத்தில் யாருடைய இறப்புக்கும் மேனாள்தான் ஒப்பாரி வைப்பாள். அவளுக்கு கூலிக்கு மாரடிக்கிற வேலை. நடு ராத்திரி ரெண்டு மணி வாக்குல போனான்னா… செத்தவரை வச்சு புகழ்ந்தும் ஊர்க்கூட்டியும் மாரடிச்சு அழுவா. அழுததுக்கு விடிஞ்சவுடனே காச வாங்கிட்டு வந்து கொஞ்சமா கஞ்சிக் காச்சி குடிச்சிட்டுப் படுத்துக்குவா. ஏதோ மனசில நினைச்சவளாய் மீண்டும் மனதோடு மனதாய் அழுதுட்டே இருப்பா! மேனாளை ஏற்கனவே ராம் சந்தித்திருக்கிறான். மேனாள் அவ்வளவாக யாரோடும் பேச மாட்டாள். ராமிற்கு உடனடியாக சுந்தரம் மாமாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ராம் சென்ற சமயம் சுந்தரம் எங்கையோ வெளியில் செல்ல முற்பட்டிருந்தான்.

“வாடா மாப்ள… எங்க காலையிலயே இந்தப் பக்கம்” என்றார் சுந்தரம்.

“ஒரு வேல விஷியமா வெளிய போவனும். வா போகலாம்” என்று உரிமையோடு சொன்னான் ராம். அம்மாவின் மூன்றாவது தம்பிதான் சுந்தரம். மற்ற இரண்டு மாமன்களை விட சுந்தரம் மேல்தான் ராம் ரொம்ப பிரியமா இருப்பான். சுந்தரத்துக்கு இன்னும் குழந்தை இல்ல. ராம்தான் சுந்தரத்துக்கு எல்லாமே. வீட்டுல எதாவது செஞ்சாலும் சுந்தரமே மறந்து போனாலும் கூட சுந்தரத்தின் மனைவி அஞ்சலை உடனே கொண்டு போய் கொடுத்து விட்டு வருவாள்.

“உங்க அத்தை வெண்பொங்கல் செஞ்சி வச்சிருக்கிறா.. சாப்பிட்டுட்டு டிவி பாத்திட்டு இரு. செத்த நேரம் நான் வசூலுக்குப் போயிட்டு வந்துடறேன்” என்றான். சுந்தரத்தின் அடுத்தப் பதிலை எதிர்பாராமல் வீட்டின் உள்ளே நுழைந்தான் ராம்.

ஒற்றையடிச் சாலையாய் இருந்ததை இப்போது விசாலமாய் நான்கு வழிச்சாலையாய் மாறி இருந்தது. பைக்கில் சென்று கொண்டிருந்த ராம் பழைய நினைவுகளில் மூழ்கினான். நண்பர்களோடு இக்கிராமத்திற்கு ஏற்கனவே வந்திருந்த மகிழ்ச்சியை நினைத்துக்கொண்டான். மதிய வெயில் உச்சியைத் தொட்டு நின்றது.

“மாப்ள எங்கயாவது வண்டிய நிறுத்தி கூல்ரிங்ஸ் சாப்பிட்டு போலாமா?” – சுந்தரம். “இல்ல மாமா.. இப்பவே ரொம்ப லேட். சீக்கிரம் போலாம். மேனாள் பாட்டியைப் பாரத்துட்டு நேராநேரத்துக்கு வீட்டுக்கு வரனுமில்ல. அதுவும் இல்லாம உங்க வீட்டு வெண் பொங்கல்ல சாப்பிட்டு வயிறு தொம்முன்னு இருக்கு” – ராம். சுந்தரம் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

பொட்டல் காடு. ஈரப்பசை இல்லாத ஓட்டிய மணலாய் நீண்டதொரு பரப்பு. மணலை ஒட்டிய கரைகள். கரைகள் தோறும் பனை மரங்கள் விண்ணை தொட்டு நிற்கும் அளவிற்கு வளர்ந்திருந்தன. பனை மரத்திற்கு அடியில் முள் வேலிகள் போடப்பட்டிருந்தன. அவ்வேலியில் படப்பங்கொடிகள் படர்ந்திருந்தன. அக்கொடிகளைப் பசு மாடுகளும் ஓரிரண்டு ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. வேலிக்கு அடுத்து பத்து பதினைந்து குடிசை வீடுகள் குறுக்கும் நெடுக்குமாய் கட்டியிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் இருந்தன. மேனாள் கிழவி வீடும் அங்குதான் இருந்தது. வண்டியில் இருந்து இறங்கியவுடன் ராம்தான் முன்னே நடந்தான். மேனாள் கிழவியின் வீடு பூட்டு போடப்பட்டிருந்தது.

“மாமா.. பூட்டு போட்டுருக்கு. மேனாள் பாட்டி எங்க போயிருக்குன்னு தெரியல. பக்கத்துக் குடிசையில போயி கேட்டுப்பாத்துட்டு வாங்க..” சுந்தரம் போனவுடன் அக்குடிசையின் கதவுக்கு பக்கத்தில் இருக்கும் திட்டில் அமர்ந்து கொண்டான். அன்று மேனாள் பாட்டி அந்த இடத்தில் படுத்துக்கொண்டிருந்தாள். எதிர்புறம் உள்ள திட்டில் ராம் உட்காந்திருந்தான். ஆறு வருடங்கள் ஆனாலும் மேனாள் பாட்டியின் முகம் தெளிவாய் ஞாபகமிருந்தது ராமிற்கு. அதற்குள் சுந்தரமும் வந்து சேர்ந்தான்.

“மாப்ள.. பக்கத்தில இருக்கிற குடிசை எல்லாமே பூட்டு போட்டுருக்கு. இந்நேரத்துல எல்லோருமே வேல எதுக்காவது போயிருப்பாங்க போல… யாருமே இல்ல” இருவரும் வண்டி நின்ற இடத்திற்கு வந்தார்கள். அப்போது முள் வேலிப்பகுதியில் ஆடு மாடுகளை அதட்டிக்கொண்டிருந்தாள் அப்பெண்.

“மாமா… வரும் போது வெறும் ஆடு மாடுகள்தான மேய்ஞ்சிட்டு இருந்தது. அங்க பாரு மாமா… யாரோ ஒரு பெண் போல தெரியுது”

“ஆமாம் மாப்ள! உச்சி வெயிலுல பேயா இருக்குமா! உடனே கிளம்பிடலாம்பா..”

சுந்தரம் மாமாவை முறைத்தப்படியே.. “மாமா பேயும் இல்ல. பிசாசும் இல்ல.. வாங்க அந்தப் பொண்ணுகிட்ட போயி விசாரிக்கலாம்” என்றான் ராம். பயந்தபடியே சுந்தரம் ராமின் பின்னாடியே வந்து கொண்டிருந்தார்.

பின்புறமாய் தெரிந்தாள் அவள். பச்சைக்கலர் ஸ்கூல் பாவாடையும் அப்பாவோட பழைய முழுக்கைச் சட்டையோடு நின்றிருந்தாள். தலையை முடிச்சு கொண்டை போட்டிருந்தாள். கொண்டைப்போட்ட தலையில் வெயிலின் தாக்கம் தெரியாமலிருக்க கிழிந்து போன அழுக்குத் துணி ஒன்றினை வேடு கட்டிருந்தாள். கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு அந்த ஆட்டை அதட்டிக்கொண்டிருந்தாள்.

அப்பெண்ணின் முதுகுக்குப் பின்னால் இருந்து முதலில் ராம் பேசினான். “இந்தாம்மா… மேனாள் பாட்டி வீடு பூட்டியிருக்கு. அவுங்க எங்க போயிருக்காங்கன்னு தெரியுமா உனக்கு?” என்றான்.

“யாரு மேனாள் கிழவியா?” என்று திரும்பி ராமை பார்த்தாள். அவளின் உள்ளம் கருக்கெனச் சுருங்கிப் போனது. தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். உள்ள அழுகையும் கண்களில் தெரியும் நீரின் துளியும் பெருக்கெடுத்தன. அவ்விடத்தில் நிற்க முடியாதவளாய் கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓட முற்பட்டாள்.

என்ன நடக்கிறது என்பதைப் புரியாதவனாய் குழம்பிப் போனான் ராம். “ஹலோ.. ஹலோ.. நில்லும்மா… ஏன் ஓடுறா. நாங்க உங்ககிட்ட அட்ரஸ்தான விசாரிச்சோம். ஹலோ…” என்றார் சுந்தரம். இப்போது ராமும் சுந்தரமும் அப்பெண்ணின் பின்னாலயே ஓடினார்கள். அவள் திரும்பி, “என் பின்னால எதுக்கு வறீங்க… யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க. இது கிராமம். அப்புறம் கண்ணு காது வச்சு பேச ஆரபிச்சிடுவாங்க.. போங்க…” என்று தழுதழுத்தக் குரலிலே சொன்னாள். அவள் சொல்லிக்கொண்டே அந்த மாட்டுத் தொழுவத்தினுள் புகுந்தாள். இப்போது ராமும் சுந்தரமும் மாட்டுத்தொழுவத்தின் வாயிலில் நின்றிருந்தார்கள். உள்ளே அப்பெண் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது. அவ்விடத்தை விட்டு போய்விடலாமா என்று கூட தோன்றியது ராமிற்கு. அதற்குள் அப்பெண் வெளியே வாசலுக்கு வந்து ராமின் கண்களையே உற்றுப்பார்த்தாள். ராமும் அப்பெண்ணை கவனித்தான். அவளின் முகம் கறுத்துப் போயிருந்தது. உதடுகள் வெடிப்புகள் தோன்றி காய்ந்து போயிருந்தன. கழுத்துப்பக்கம் சிறுசிறு கொப்புளங்களாலோ அல்லது வெயிலின் உக்கிரத்தாலோ அல்லது அவள் அடிக்கடி கைகளால் சொரிந்ததனாலோ கறுப்பு தோலிலும் சிவந்து போய் தடித்துக் காணப்பட்டது. அவளின் முகவாய் தாடையில் ஒரு சின்னதாய் வெட்டு தழும்பு. ராமின் மனம் இப்போது எதையோ நினைத்து உருகியது. அப்படியே அவளின் கண்களைக் கூர்ந்து கவனித்தான். அக்கண்கள் அன்பையும் கருணையும் வெளிப்படுத்தின. கண்கள் முழுவதும் கண்ணீரால் நிரம்பியிருந்தது.

“ஜீவிதா… ஜீவிதா… நீயா.. நீ எப்படி? இங்க? ஜீவிதா.. ஜீவீ..ஜீவீ…” கேள்விகளை அடுக்கி பதிலுக்காக ஏங்கினான். மாட்டுத்தொழுவத்தில் ஆட்டுக்குட்டிகள் கட்டப்பட்டிருந்தன. பக்கத்தில் இரண்டு கயிற்றுக் கட்டில்கள். ஒரு கட்டிலில் சேலை முந்தானை கீழே கிடக்க சுருக்கங்களுடன் இரண்டு மார்பகங்களும் தொங்கிக் கொண்டு வாய் நிறை புகையிலையை அடக்கிக்கொண்டு கிழவி ஒருத்தி உட்காந்திருந்தாள். அடுத்தக் கட்டிலில் என்னையையும் மாமாவையும் உட்காரச்சொன்னாள். நாங்கள் இருவரும் தலைகுனிந்தே நின்றிருந்தோம். ஜீவிதா ஏதோ நினைத்தவளாய் அக்கிழவியின் முந்தானையை எடுத்து மாராப்பை மூடினாள். கட்டிலில் இருவரும் அமர்ந்தபின் எதிர்புறமாய் சாணி தரையில் அமர்ந்து கொண்டாள் ஜீவிதா.

கல்லூரியில் என்னுடன் படித்தவள். படிப்பில் கவனம் கொண்டவள். காரியத்தில் கண்ணாய் இருப்பாள். பேச்சுக்குப் பேச்சு ஏச்சுக்கு ஏச்சு என்றிருப்பவள். எம் வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஜீவீ.. என்றுதான் அழைப்போம். எதனால் அப்படி கூப்பிடுகிறோம் ஏன் அவ்வாறு கூப்பிடுகிறோம் என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் கூப்பிடிகிறோம். ஒருமுறை அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது விளையாட்டாக டிபன் பாக்சை அவளின் பின்பகுதியிலிருந்து எடுக்க முற்பட்டேன். அப்போது தெரியாதனமாக டிபன் பாக்சின் முனைப்பகுதி அவளின் தாடையில் பட்டு இரத்தம் கொட்டியது. நான் வௌவௌத்துப் போனேன். ஜீவீ மயக்கம் அடைந்து விட்டாள். மாணவர்களின் கூட்டம் சேர்ந்து விட்டது. மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றார்கள். ஓரிரு வாரங்களுக்குப் பின் ஜீவீ மறுபடியும் கல்லூரிக்கு வந்தாள். என் தாடையை உடைத்த மாதிரி ராமின் தாடையையும் உடைப்பேன் என்று என்னை கல்லூரி முழுக்க துரத்தியது அனைத்து மாணவர்களும் அறிவார்கள். கொஞ்ச நேர மௌனத்திற்குப் பிறகு… ஜீவிதாவே பேச ஆரமித்தாள்.

“நான் ஒரு பையன லவ் பண்ணேன். உங்களுக்கு யாருக்கும் இந்த விஷியம் தெரிய வாய்ப்பில்லை. நானும் எங்க வீடடுல எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். அவுங்க யாருமே என்னோட காதலுக்கு ஒத்துக்கல எங்க வீட்டுல என்னை பொண்ணுப் பாக்க வந்த அன்னிக்கு எங்க குடும்பத்தை எதிர்த்துகிட்டு அவரோட வந்துட்டேன். கல்யாணம் ஆனதும் என்னை அவரு நல்லா பாத்துக்கிட்டாரு. ஆனா கல்யாணம் ஆகி ஆறே மாசத்துல வயக்காட்டுல எலிக்கு வச்சிருந்த கரண்டுல என் வீட்டுகாரர் கால வச்சி அங்கயே கருகி செத்துட்டாரு..” சொல்லும்போதே தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து மூக்கைப் பொத்திக்கொண்டு அழத்தொடங்கினாள் ஜீவிதா.

விதவை, புருசன வாரிக்கொடுத்தவ.. புருசனயே கொன்னுட்டா… ராசி இல்லாதவன்னு என்னை கொஞ்ச கொஞ்சமா ஒதுக்க ஆரமிச்சாங்க. கேட்கறதுக்கு ஆளிள்ள. போகிறதுக்கு எங்கும் வக்கில்ல.. பொறந்த வீடும் என்னை தவிக்கவுட்டு தலைமுழுகிட்டாங்க. புகுந்தவூடும் அறுத்துவுட்டுடாங்க. சோறு தண்ணி கிடையாது. நல்ல துணிமணி கிடையாது. மாடு மாதிரி கால முத இரவு வரை வேலை செஞ்சிட்டே இருக்கனும். இல்லன்னா அடிதான். நெருப்புல சூடு கூட வைப்பாங்க தெரியுமா?

“யாரு சூடு வைப்பாங்க” – ராம்

“அந்த வூட்டுல இருக்கிற எல்லாரும்தான்” கண்கள் சிவக்க மூக்கு விடைக்க அழுத கண்ணீரோடு ஜீவிதா சொல்லுகின்றதை கேட்க கேட்க எனக்கு வயிறு பற்றி எரிந்தது. மனசு வேதனையால் துடித்தது.

“இதோ இந்த கிழவி என் வீட்டுக்காரரோட பாட்டிதான். வயசானதால வாய் பேச முடியறதுல்ல.. ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம் அங்கேயேதான். நான்தான் அள்ளிக் கொட்டுவேன். அந்த நாத்தம் அவுங்களாள தாங்கிக்க முடியல. அதான் கிழவியையும் துணைக்கு என்னையும் இந்த பொட்டல் காட்டிற்கு அனுப்பிட்டாங்க. எங்களுக்குன்னு இங்க யாரும் உறவுகள் இல்ல. தானா மழை பேஞ்சு மொழைக்கிற இடத்துல நின்னு இருக்கிற ஆட்டையும் மாட்டையும் காப்பாத்துறோம். ஏதோ எங்க பொழப்பும் ஓடுது” கண்ணைத் துடைத்துக் கொண்டாள் ஜீவிதா.

“ஆமாம்! நீ என்ன பண்ற ராம். கல்யாணம் ஆகிடுச்சா.. எத்தனை பசங்க..” – ஜீவீ

ராமிடமிருந்து ஜீவிதாவின் கேள்விக்கு பதில் வரவில்லை. மாறாக, “நீதான படிச்சிருக்க இல்லையா.. நல்ல வேலைக்கு ஏதாவது போகலாம் இல்லையா?” என்றான்.

“இந்தக் கிழவியை வச்சிக்கிட்டு நான் எங்கிட்டுப் போறது”

“ஜீவீ எனக்கொரு யோசனை. நீ குரூப் எக்சாம் – கு படிக்கலாம்மில்ல.. பாட்டியை பாத்துகிட்டே இருக்கலாம். வெளிய மாடு மேய்க்கும் போதும்கூட படிக்கலாம். பாட்டியும் உன்கூடவே வரப்போறது இல்ல. அதுக்கு அப்புறம் உன்ன யாரு பாத்துப்பா. உனக்குன்னு ஒரு அடையாளம் வேண்டாமா? நீ படிச்சு அரசாங்க வேலைக்குப் போ.. அதுதான் உன்னை வாழவைக்கும்” – ராம்.

“சரிதான் ராம். நான் இனிமேல் இவ்வுலகத்தில் வாழ வேண்டுமானால் எனக்கென்று அடையாளம் இருக்க வேண்டுமென்றால் படித்து அரசாங்க வேலைக்குச் சென்றே ஆக வேண்டும். இல்லையெனில் இம்மண்ணோடு மண்ணாக புழுவுக்கு இரையாக ஆக வேண்டியதுதான். என் வாழ்வு இனி படிப்பில் மட்டும்தான்” – ஜீவிதா

குரூப் எக்சாமிற்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் நானே வாங்கி தருவதாக உறுதியளித்தேன். என் தோழிக்கு நான் செய்த இரத்தக்கறையைத் துடைக்கவும் அதற்கு பரிகாரமாகவும் ஒரு வாய்ப்பாக எண்ணினேன். தொழுவத்திலிருந்து வெளியில் வரும்போது மனம் இரங்கலையும் அதிகப்படியானத் துன்பத்தையும் அடைந்திருந்தது. உள்ளேயிருந்து மீண்டும் ஜீவிதாவின் குரல்..

“ஆமாம்! நீ கேட்டல்ல மேனாள் கிழவி. அது கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் செத்து போச்சு”.

Print Friendly, PDF & Email

4 thoughts on “நேர்காணல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *