நெல்லுக்கு இறைத்த நீர்..!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 1,962 
 

சேலம் பாரத ரத்னா MGR பஸ் நிலையத்தை அடையும் பஸ்கள் எல்லாமே மந்திரித்து விட்ட கோழி மாதிரி நேராக கற்பகம் மெஸ்ஸின் முன்னால் வந்து நின்றுவிடும்.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு செல்லும் பெரும்பாலான பஸ்கள் சேலம் பஸ் நிறுத்ததைத் தாண்டி செல்லாமல் இருக்க முடியாது. காலைச் சிற்றுண்டியாகட்டும். பகல் உணவாகட்டும், இல்லை இரவு டிபனாகட்டும், கற்பகம் மெஸ்ஸில் தான் சாப்பிடுவது என்றே டிரைவர்கள் தீர்மானம் பண்ணி விடுவார்கள்.

முதலில் இறங்கத் தயங்கிய பயணிகள் கூட கற்பகம் மெஸ்ஸின் ருசியில் மயங்கி வீட்டில் சாப்பிடாமல் வருவதும் வாடிக்கையாகிவிட்டது….

***

கற்பகம் மெஸ்…

அதில் அப்படி என்னதான் இருக்கிறது? சேலம் பஸ் நிறுத்தத்தை ஒட்டி பெரிய உணவகங்கள் நிறைய காளான் போல் முளைத்து விட்டன. ஐந்து நட்சத்திர ஓட்டலிலிருந்து மூன்று நட்சத்திரம் வரை தடுக்கி விழுந்தால் உணவகங்கள் தான். இதற்கு நடுவில் கற்பகம் மெஸ் இருக்குமிடம் தெரியாது…. உள்ளே தள்ளி … சாயம் போன போர்டுடன் ஒரு ரோட்டோர டீக்கடை மாதிரி தோன்றும். மக்கள் ஈ மொய்ப்பதுபோல் மொய்க்க என்ன காரணம்? ஒரு ஈ கூட மொய்க்காமல் இருப்பதும் ஒரு காரணமாயிருக்கலாமோ?. ஆமாம், படு சுத்தம்!

வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. வெள்ளையப்பன்!

கடை முதலாளி, ஏக போக உரிமையாளர். பெயருக்கேற்ப போடும் சட்டையும், வேட்டியும் வெள்ளை…கறுத்த முகத்தில் பட்டை பட்டையாய் அணியும் திருநீறும் வெள்ளை வரும் கஸ்டமரை வரவேற்கும் போது பளீரென்று மின்னும் அவரது பற்களும் வெள்ளை!

எல்லாவற்றுக்கும் மேலாக வருபவர் வயிராற உணவருந்தி விட்டு போவது ஒன்று மட்டுமே தனது வாழ்வின் குறிக்கோளாக நினைக்கும் அவரது உள்ளமும் வெள்ளை. வெள்ளையப்பனின் மனைவிதான் கற்பகம்.. சொந்த அத்தை மகள்தான்.வெள்ளையப்பனின் குடும்பம் கடனால் தத்தளித்துக் கொண்டிருந்தபோது கைதூக்கி விட்டவர் கற்பகத்தின் தந்தை ஆறுமுகம். ஆரம்பத்திலிருந்தே வெள்ளையப்பன் தான் தன் மாப்பிள்ளை என்று தீர்மானித்திருந்தார்.ஆனால் மனைவியிடம் கூட மூச்சுவிடவில்லை. கற்பகத்துக்கும் மனதில் அப்படி ஒரு ஆசை இருக்குமென்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘அத்தை…அத்தை…’ என்று ஆசையாய் ஒட்டிக் கொள்வான் வெள்ளையப்பன்.

நேராக சமையலறையில் நுழைந்து விடுவான்.

“அத்த, நவருங்க!நானு தோசை சுடுறேன்.போயி ஒரு தட்டத்த எடுத்து போட்டு உக்காருங்க!”

“என்ன தம்பி…கேலி செய்யுற…? இன்னிவரைக்கும் கற்பகம் ஒரு நாக்கூட ஒரு தோச சுட்டு எனக்கு குடுத்ததில்ல. ஆம்பளப்புள்ள…போயி….நீ உக்காரு….நா சுட்டு போடுறேன்!”

“அதேல்லாம் முடியாது…. இன்னைக்கு ஒரு தோசையாவது எங்கையால எங்கத்தைக்கு போடாம இந்த இடத்த விட்டு போகமாட்டேன்…”

மாவை அழகாக கரண்டியில் வழித்து எடுத்து பொறுமையாய் தோசைக்கல்லில் ஊத்தி…… வட்டமாய் தேய்த்து… இரண்டு முட்டை எண்ணெய் ஊத்தி… வேகும் வரை காத்திருந்து திருப்பிப் போட்டு…மொறுமொறு தோசையைத் தட்டில் போடும் வரை வைத்த கண் வாங்காமல், அவனையே பார்த்துக் கொண்டிருப்பாள் அத்தை..

“இவன்தான் என் மாப்பிள்ளை”

கணக்கு போட்டுவிட்டாள்!

மூன்று பேர் போட்ட கணக்குக்கும் விடை ஒன்றாகவே இருந்தது. ஒரு அனாதை மாதிரி நின்ற தனக்கு, தங்க விக்ரம் மாதிரி பெண்ணையும் கொடுத்து, சொத்து முழுவதையும் எழுதி வைத்து விட்டுப் போய்விட்ட அத்தையும், மாமாவும் தான் வெள்ளையப்பன் கும்பிடும் தெய்வங்கள். கோவிலுக்குப் போய் சாமி கும்பிடும் பழக்கமெல்லாம் கிடையாது. படிப்பில்லை என்ற ஒரு குறையைக் தவிர வெள்ளையப்பன் மேல் ஒரு அப்பழுக்கு சொல்ல முடியாது. கடும் உழைப்பாளி. ஆறுமுகம் மாப்பிள்ளைக்கு ஒரு பலசரக்கு கடை வைத்துக் கொடுத்தார். ஆனால் வெள்ளையப்பனுக்கு தான் பேர் சொல்லும் விதம் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று மனதில் ஒரு அரிப்பு.

கற்பகம் கொடுத்த ஊக்கமும், தைரியமும் தான் ‘கற்பகம் மெஸ்’ ஸாக‌ மாறியது. ஆரம்பத்தில் வீட்டிலிருந்தே அத்தையும், கற்பகமும் சேர்ந்து சமைத்த உணவுதான். மாப்பிள்ளையும் தன் கைவண்ணத்தை அவ்வப்போது காட்டுவதுண்டு. ஒரே வருஷத்தில் நினைத்ததைவிட லாபம் தரவே இரண்டு ஆட்களை வைத்துக் கொள்ளவேண்டியதாயிற்று. மாமனார் கொடுத்த பணத்தில் சேலம் பஸ் நிறுத்தத்தை ஒட்டி ஒரு இடம் வாங்கி ‘கற்பகம் மெஸ்’ ஸை தொடங்கி விட்டார்…

இரண்டு நாள் காய்ச்சலில் படுத்த கற்பகம் அவரது வாழ்க்கையிலிருந்து மறைந்ததும், அவளைத் தொடர்ந்து அத்தையும் மாமாவும் அவரைத் தனியாக விட்டுப் போனதும், தனிமரமாய் நின்று கற்பகம் மெஸ்ஸை சேலத்தின் பெயர் சொல்லும் உணவகமாக மாற்றியதும், அதுவே அவரது குடும்பமாய் மாறியதும்- கனவாய்…கதையாய்…மாறிப்போனது…

***

“அண்ணாச்சி….. என்ன யோசனயில முங்கிட்டீங்க…அண்ணி நெனப்பு வந்திருச்சாங்காட்டியும்..???”

அண்ணாச்சி கண்ணில் லேசாக கண்ணீர் தளும்பி நின்றதைப் பார்த்து விட்டான் கந்தப்பன்…(கந்தப்பனைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்….)

கற்பகம் மெஸ்ஸில் உள்ள எல்லோருக்கும் வெள்ளையப்பன் ‘ அண்ணாச்சி ‘ தான்.

“கந்தா.. அவ நெனப்புலதாண்டா என்னோட உசிரு இன்னமும் ஒடம்புல ஒட்டிக்கிட்டு இருக்கு…. எனக்குன்னு யாரு இருக்காங்க….?”

“என்ன அண்ணாச்சி இப்பிடி சொல்லிட்டீங்க…எனக்குன்னு ஒரு பிள்ளையிருந்தா கூட உன்னிய மாதிரி இருக்க மாட்டான்னு வாய்க்கு வாய் சொல்லுவீங்களே…! நீங்க எனக்கு செஞ்ச உதவிக்கு என்னோடே உடம்பையே செருப்பா தெச்சு போட்டா கூட ஆகாதே…யாருமில்லன்னு மட்டும் இன்னொரு முற சொல்லாதீங்க…!”

அண்ணாச்சி அவனை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டார்..

கற்பகம் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்… பெரிய மல்லிகைப்பூ மாலை…

ஓட்டலில் நுழைந்ததும் காலையில் முதல் வேலையாக அவளது படத்தை நன்றாகத் துடைத்து , வாங்கி வந்த மல்லிகைப்பூ மாலையை தன் கையாலேயே போட்டு … தூபம் காட்டி விட்டு… எதிரில் மாட்டியிருக்கும் அத்தை ..மாமா..படத்தை வணங்கி விட்டுத்தான் கல்லா பெட்டியிலேயே கை வைப்பார்…

வேறு எந்த சாமிப் படமும் கிடையாது…

“அண்ணாச்சி… ஒரு முருகன் படம் மாட்டுங்க…அம்சமா இருக்கும்….”

“கந்தா… எனக்கு சாமி நம்பிக்கையே போயிருச்சுடா..எஞ்சாமி அவதாண்டா…!”

“அப்புறம் பட்ட பட்டயா விபூதி எதுக்கு பூசறீங்க….?”

“காரணம் இருக்கு கந்தா…முத முதல்ல வேலைக்கு கிளம்பயில கற்பகம் என்னிய கூப்பிட்டு…’மாமா…. நில்லுங்க..இந்த விபூதிய பூசிட்டுதான் நெதமும் நீங்க வேலைக்கு போவணும். நீரில்லா நெற்றி பாழ்னு அப்பா, அம்மா சொல்லிக் குடுத்து வளந்த பிள்ள நானு. இத மட்டும் எக்காரணம் கொண்டும் விடமாட்டேன்னு சத்தியம் பண்ணி குடுங்கன்னப்புறம் அத மீற முடியுமா..?”

“அண்ணாச்சி ஒண்ணு சொல்லட்டுமா? ‘கந்தா…கந்தான்னு’ நீங்க என்னியக் கூப்பிட்டாலும் அது அந்த முருகனையே கூப்பிடுற மாதிரியில்ல இருக்குது..

“உன்னோட மல்லு கட்ட என்னால ஆகாதுப்பா…”

***

கந்தப்பன் அவரிடம் வேலை கேட்டு வந்தபோது அவன் மீசை முளைக்காத பதிமூன்று வயது பையன்.

சிறுவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றம் என்பதை வெள்ளையப்பன் தீவிரமாகக் கடைபிடிப்பவர்..

கந்தப்பன் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவன்.. யார் யார் கையிலோ வளர்ந்தவன்..
பாசத்துக்காக ஏங்குபவன்.

இத்தனை துன்பங்களுக்கும் நடுவில் எட்டாவது முடித்துவிட்டான்.

அவனைப் படிக்க வைத்த மாமா அவனை ஒரு நாள் கூப்பிட்டார்..

“கந்தா, நீயும் வளந்திட்ட. எட்டாவது வரைக்கும்தான் என்னால படிக்க வைக்க முடிஞ்சுது. நீ புத்திசாலிப் பையன். நடுக்கடல்ல தள்ளி விட்டாக்கூட நீந்தி பொழச்சுக்கிடுவ. இந்தா பிடி ..இதுல ஐநூறு வச்சிருக்கேன். இதுக்கு மேலையும் குடுக்க ஆசைதான். ஆனா உனக்குப் புரியும் என்னோடே நெலம…இத வச்சிக்கிட்டு எப்படியும் பொழக்க வழி பாரு….”

நடுத்தெருவுக்கு வந்து விட்டது போல..போல என்ன?? திக்கு..திசை .. தெரியவில்லை. பார்க்காத வேலை இல்லை. கற்றுக் கொண்ட பாடம் ஏராளம். அதில் ஒன்றுதான் சமையல். அவனுக்கு ஒரு கை மணம் இருந்தது. கற்பகம் மெஸ்ஸில் வேலை கேட்டு வந்த நாள் இன்னும் பசுமையாக மனதில்…

“கந்தா..உனக்கு பதிமூணு வயசு கூட முடியல.உன்ன வேலைக்கு வைக்க முடியாது. நாந்தனியாத்தான் இருக்கேன். அலுத்திடுச்சுப்பா. உம்மேல எனக்கு ஒரு பாசம் தன்னறியாம வந்திரிச்சு. நானு ஒண்ணு சொன்னா கேப்பியா?. பேசாம எங்கூட தங்கிடு. எனக்கொரு மவன் இருந்தா…உன்னிய எம்மவனாத்தான் பாக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன். நீ படிக்கணும். இஸ்கோலுக்கு போவணும். மீதி நேரம் வீட்ல. நானும் நீயும். என்ன…?? ஒத்து வருமா?”

“அண்ணாச்சி..!!” காலில் விழுந்து விட்டான்….

கற்பகம் மெஸ்ஸிலிருந்து வீட்டுக்குள் நுழையும்போதே அண்ணாச்சிக்கு முன்னெல்லாம் வெறுப்பாயிருக்கும்.ஆனால் கந்தன் வந்தபின் கதையே மாறிவிட்டது.

“வாங்க…அண்ணாச்சி…முட்டை தோசையும் கருப்பட்டி காப்பியும் தயார்… கைகால் கழுவிட்டு வாங்க…”

“அண்ணாச்சி ..நீங்க இன்னொரு கல்யாணம்கட்டியிருக்கலாமில்ல…உங்க குணத்துக்கும். பணத்துக்கும்…வெள்ளந்தி சிரிப்புக்கும்….

நான்..நீன்னு..வரிசைசையா நின்னிருப்பாங்களே…..”

ஒரு நாள் கந்தப்பன் கேட்டான்..

“நெசந்தாண்டா… கற்பகம் போனப்புறம் அந்த இடத்தில் யாரையும் வச்சுப்பாக்க மனமொப்பலனெல்லாம் சொல்ல மாட்டேன்..பாக்யான்னு ஒரு பொண்ணு என் வாழ்க்கயில வந்தா…

அவளுக்கும் கல்யாணம் முடிஞ்சு இரண்டு வருஷத்தில் புருஷன் யார்கூடயோ ஒடிட்டான். ஒரு வருஷம் தனியாத்தானிருந்திச்சு… தங்கமான பிள்ளை..மெஸ்ஸூக்கு காய்கறி சப்ளை….

எல்லாம் கூடி வந்திச்சுடா கந்தா… கல்யாணத்துக்கு நகை…சேலையெல்லாம் எடுத்தாச்சு…

இன்னும் கல்யாணத்துக்கு ஒரு வாரங்கயில அவ புருஷனுக்கு சேதி தெரிஞ்சிட்டுது…

படுபாவி… ஒரு நாளு ராத்திரி அவள கத்தியில குத்திப் போட்டு போயிட்டான்.

ஒண்ணும் பண்ண முடியலடா சாமி…எம்மடிலதான் அவ உசிரு போச்சு….”

கந்தா …எனக்கு குடுப்பின இல்லடா…தனிமரமா இருக்கத்தான் விதிச்சிருக்கு….இப்போ மகனா நீ கிடச்சிட்டயே…அதுவே போதும்டா..!!!

அண்ணாச்சி….அவுங்களுக்குத்தான் கொடுப்பின இல்ல. சரி விடுங்க….”

***

கந்தன் +2வில் நல்ல மதிப்பெண் பெற்று தேறியிருந்தான். மெஸ்ஸில்வேலை பார்க்கலாமென்று நினைக்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது. பாவம்… அண்ணாச்சி ஓய்வில்லாமல் உழைத்து…யாருக்காக இந்த சொத்தும் சுகமும்…??

அவருக்கு நல்ல ஓய்வு தேவை… கோவில்..குளமென்று போகவும் மாட்டார். ஆக்ரா…பேலுர்..ஹாலபீடு என்று அனுப்பி வைக்க வேண்டும். காலையில் அண்ணாச்சிக்கு முன்பே மெஸ்ஸில் நுழைந்து விடுவான். அவர் வரும்போது ‘நம்ப பழைய மெஸ்ஸா இது?’ என்று நினைக்கத்தோன்றும். ஏழுமணிக்கேல்லாம்,

“நீங்க போங்க அண்ணாச்சி..இனி என் பொறுப்பு”

ஏழு மணிக்கப்புறம் கல்லாவில் உட்கார்ந்தால் ஒன்பதுக்குத்தான் எழுந்திருப்பான். கடையை மூடி விட்டுப் போகும்போது மீதியிருக்கும் இட்லி, தோசை, பணியாரங்களை நன்றாக பேக் பண்ணி எடுத்துக் கொண்டு பூந்தளிர் காப்பகத்தை நோக்கி நடப்பான்.

பூந்தளிர் அனாதை சிறுவர்களுக்காக இளங்கோவன் நடத்தும் காப்பகம். இரண்டு வயது முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள சிறுவர்கள். அவர்களுக்கென்று ஒரு உலகம். கூடப் பிறக்காத அண்ணன்.. தம்பிகள்..!!

“கந்தனண்ணா வந்தாச்சு….!!”

இரண்டு வயது அகிலன் தான் முதலில் வந்து கந்தனின் காலைக்கட்டிக் கொள்வான். கந்தன் ஊட்டினால்தான் சாப்பிடுவான். வீட்டுக்குப் போகும் போது பத்தாகிவிடும்.

ஒரு வருஷம் ஓடிப் போய் விட்டது.

***

“கந்தா … நாளையிலிருந்து நீ மெஸ்ஸூக்குப் போக வேண்டாம்…!!!”

தூக்கிவாரிப் போட்டது… இவரும் எல்லோரையும்போல ‘இனிமே போய் பொழச்சிக்கிடு’ ன்னு சொல்லப்போறாரா!

கந்தனுக்கு தலை சுற்றியது…

“அண்ணாச்சி…. அப்புறம் …?? நானு எங்கிட்டு போறது ??”

“மேல படிக்கப்போறடா….!!”

“இன்னும் என்ன இருக்கு….படிக்க ???”

“நிறைய இருக்கு..உன்ன கோவாவுக்கு அனுப்பப் போறேன்.. இரண்டு வருஷம் படிக்கணும். கற்பகம் மெஸ்ஸ, கற்பகம் ஹோட்டலா மாத்தணும். சேலத்திலேயே இது மாதிரி ஹோட்டல் இல்லைன்னு பேர்வாங்கணும்டா. நீ செய்வடா..உன்னால மட்டுந்தான் முடியும்..!”

குருவி தலையில் பனங்காயை வைத்துவிட்டார்… அவனும் சுமக்கத் தயாரானான். படிப்பு முடிய ஒரு மாசம் இருக்கும் போது ஒரு போன். அண்ணாச்சிக்கு மூளையில் ரத்தம் உறைந்து பக்கவாதம் வந்து படுத்து விட்டார்.ஆனால் டிப்ளமோ வாங்காமல் வீட்டுப் படி ஏறக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார். அண்ணாச்சியின் கோலத்தைப் பார்க்க முடியவில்லை. மெஸ்ஸுக்குப் போகாமலும் இருக்க முடியவில்லை.

‘சே.. எல்லாத்தையும் அனுபவிக்க வேண்டிய சமயத்தில இப்படி படுத்திட்டாரே. கையில செலவுக்கு காலணா இல்ல. மொத்த பணத்தையும் வழிச்சு தொடச்சு. எனக்கே செலவழிச்சிட்டாரு. கற்பகம் மெஸ்ஸோ … இன்னிக்கு, நாளக்கின்னு மூச்ச இழுத்து பிடிச்சிட்டிருக்கு. நினச்சது என்ன? நடக்கிறது என்ன?’

மனசு கிடந்து புலம்பியது. அகிலனைப் போய் பார்த்துவிட்டு வரலாமென்று கிளம்பினான். அங்கு இன்னொரு அதிர்ச்சி.

பூந்தளிர் மூடிக்கிடந்தது.

“வாங்க தம்பி…. இளங்கோவன் சாரையா தேடுறீங்க…..நீங்க போயி மூணு மாசத்திலேயே மூடிட்டு எங்கியோ போயிட்டாரே….

கட்டுபடியாவலையாம் தம்பி…. பாவம்..அந்த குழந்தைங்க….”

“அகிலன்னு இரண்டு வயசு குழந்த….???”

“சுருட்டமுடியோட துருதுருன்னு இருக்குமே, அதானே. அதுமட்டும் ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கணும். யாரோ வெளிநாட்டுகாரங்க குழந்தைய தத்து எடுத்திட்டு போயிட்டாங்கன்னு கேள்வி. மூணு நாலு வருஷம் ஆயிருக்குமில்ல தம்பி”

கந்தப்பன் மனது அவனிடமிருந்து நழுவிக் கொண்டு போனது பித்துப் பிடித்தவன் போலானான். வெள்ளையப்பன் படுத்த படுக்கையாகிவிட்டார்.ஒரு குழந்தையைப் போல பார்த்துக் கொண்டான் கந்தன்.

“கந்தா, கற்பகம், கற்பகம்….!” அதற்கு மேல் பேச முடியாது…

“அண்ணாச்சி, எல்லாம் நல்லா நடக்குது. கவலப்படாம உடம்ப பாத்துக்குங்க!”

ஒருநாள் கந்தப்பனைத் தேடிக் கொண்டு இரண்டு பேர் வந்தார்கள்…

“என்னப்பாக்கக்கூட ஆளு இருக்கா? யாருங்க அண்ணே?”

“வெளிநாட்டுக்காரங்க போல..பேசறதே புரியல….ஆனா உன் பேரையும் .. கற்பகம் மெஸ் பேரையும் நல்லா தெரியுது.

‘ராடிஸன்’ ஓட்டலாம்… ஏர்போர்ட் பக்கத்தில்.. ஒரு ஆறு மணி பக்கமா வந்து போகச் சொன்னாங்க…”

அண்ணாச்சியிடம் எழுதி காண்பித்து விட்டு,உள்ளதுக்குள் சுமாரான சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு.. கிளம்பினான்.

“Im Mario Ricci…My wife Sophie….!!”

ஒரு நிமிஷம் கந்தனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை…

“You are Kandan….Am i right..?”

“நாங்கள் உங்கள் ஊருக்கு வந்தபோது நீங்கள் படிக்கப் போயிருந்ததாய் வெள்ளையப்பன் சொன்னார் .அவர் எங்களுக்கு செய்த உதவியை மறக்கவே முடியாது. உங்களுக்கு இளங்கோவனைத் தெரியுமா?”

“பூந்தளிர்….???”

“அவரேதான்….”

“அவர் கொடுத்த புதையல்தான் …அதோ…அங்கே உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கிறானே……!!”

“அகிலன் ?????”

“அகில்….Come and meet your Kandan….!!!!”

“அகிலன்….. அகிலன்…!” பத்து வயது சிறுவனாய்…

கந்தனுக்கு நன்றாய் அடையாளம் தெரிந்து விட்டது.

அகிலன் கந்தனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்….

“வெள்ளயப்பனைப் பார்க்க முடியுமா?”

கந்தன் எல்லா விவரத்தையும் கூறினான்..

“Oh..we are very sorry !”

“நாங்கள் ஒரு உதவி எதிர்பார்த்து வந்தோம். இத்தாலியில் பெரிய ஹோட்டல் இண்டஸ்ட்ரி வைத்திருக்கிறோம். இந்தியன் உணவகங்கள் ஆரம்பிக்க எல்லா ஏற்பாடும் தயார். இங்கிருந்து ஒரு இந்தியன் chef தேவை. உன்னைக் கூட்டிக் கொண்டு போகலாமென்று….”

மேற்கோண்டு அவர் பேசியது எதுவுமே கந்தன் காதில் விழவில்லை. அண்ணாச்சியிடம் கூட்டிக் கொண்டு போனான்..

மரியோவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் அண்ணாச்சி.

‘நீ அவசியம் போகவேண்டும்…’ என்று சைகை காட்டினார். எவ்வளவு கெஞ்சியும் கந்தன் மறுத்து விட்டான்.

மறுநாள் மறுபடியும் பார்ப்பதாகக் கூறிச் சென்றார்கள் அந்த இத்தாலியன் தம்பதிகள். சொன்னபடியே வந்துவிட்டார்கள்.அகிலன் இப்போது கந்தனுடன் நன்றாகப் பழகி விட்டான்.

இன்றைக்கு மரியோ வாயே திறக்கவில்லை… Sophie தான் பேசினாள்.

“கந்தா, உன்னைப் பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிறது. எவ்வளவு பெரிய வாய்ப்பை சுலபமாக உதறித் தள்ளிவிட்டாய்..! என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்போது நாங்கள் வேறுவிதமாக முடிவு எடுத்திருக்கிறோம். இந்தியாவில் இத்தாலியன் உணவகங்கள் நிறுவப்போகிறோம்..! நீதான் அதன் நிர்வாகம் அனைத்தும் பார்த்துக் கொள்ளச் போகிறாய்…”

‘கற்பகம் மெஸ்’ எந்தக் குறையும் இல்லாமல் நடக்கும். வெள்ளையப்பன் மீண்டும் பழையபடி ஆவதற்கு எல்லா முயற்சியும் எடுப்போம்…!!!

“என்ன கந்தா…? நீ இந்தியாவை விட்டு எங்கும் போக வேண்டாம். சமயம் வரும்போது அகிலனை நீயே பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ள தயார் செய்…”

***

எங்கிருந்தோ அனாதையாக இருந்த தனக்கு அடைக்கலம் கொடுத்து சொந்த மகனைப் போல பார்த்துக் கொண்ட மாமா ஒரு பக்கம்..

வேலை கேட்டு வந்த தன்னை சொத்து முழுவதும் செலவழித்து ஒரு ஆளாக்கிய அண்ணாச்சி ஒரு பக்கம்..

ஆதரவில்லாமல் வளர்ந்த அகிலனை தன் குழந்தைபோல் பாவித்து கொஞ்ச நாள் உணவு ஊட்டியதற்கு நன்றிக்கடனாக பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்து பாசத்தைப் பொழியும் மரியோ, சோபியா தம்பதிகள் ஒரு பக்கம்…

இப்பேர்பட்ட மனிதர்களால் தான் மனிதம் இன்னும் சாகாமல் இருக்கிறது…

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை…….

ஔவையார் மூதுரை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *