நூத்தம்பது ரூபா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 6,116 
 

அவசர அவசரமாகக் கிளம்பி வேக வேகமாக பெடலை மிதித்துத் தொழிற்சாலையை அடைந்தான் சக்திவேல். தொழிலாளர்கள் அனைவரும் கும்பலாய்க் கேட்டருகே நின்றிருக்க உள்ளே மெஷின்கள் எதுவும் ஓடாமல் அமைதியாயிருந்தது.

“அண்ணன் வெகு வேகமா வர்றாப்பல இருக்கு… இன்னிக்கு ஸ்டிரைக்… உள்ளார போக முடியாது”

“ஸ்டிரைக்கா?..எதுக்கு திடீர்ன்னு,” சக்திவேல் அப்பாவியாய் கேட்டான்.

“ம்…வருசா வருசம் ரெண்டு செட் யூனிபார்ம் கொடுத்தாங்கல்ல… இந்த வருசம்… ஒரே செட்தானாம்… கம்பெனி நிதி நிலைமை சரியில்லையாம்… ஹூம்… இதெல்லாம் யாருகிட்ட விடற கதை?”

“ஏம்ப்பா ராஜேந்திரன்… கம்பெனி நிதி நிலைமை டல்லுங்கறது… நம்ம எல்லாருக்குமே தெரிஞ்சதுதானே?… எதோ ஒரு செட்டாவது குடுக்கறாங்களேன்னு சந்தோசப்படறதை விட்டுட்டு… இப்படி ஸ்டிரைக்… அது இதுன்னு… தேவையாப்பா இப்ப இது?”

“தெரியமப்பா… எல்லாருக்குமே நல்லாவேத் தெரியும்… அதுக்காக இவங்க செய்யறதுக்கெல்லாம் ஒத்துப் போகணுமா?”அந்த ராஜேந்திரன் ஆவேசமாய்க் கத்தினான்.

அவன் கத்தலைக் கேட்டு திரும்பிப் பார்த்த யூனியன் லீடர் சுந்தரமூத்தியும் அவன் ஜால்ராக்களும் இவர்களிடம் வந்தனர் .

“என்ன ராஜேந்திரா… என்ன சத்தம் ?”

“பாருங்க தலைவரே ‘கம்பெனி நிலைமை மோசமாம் … குடுக்கறதை நாம வாங்கிக்கணுமாம்.”

“அப்படியா சொல்றான் இவன்… ஏம்பா உடம்ப எப்படியிருக்கு?” மிரட்டலாய்க் கேட்டான் யூனியன் லீடர்.

“ம்… என்னோட உடம்பு கொஞ்சம் இளைச்சிருக்கு… உன்னோட உடம்பு கொஞ்சம் ஊதியிருக்கற மாதிரித் தெரியுது…” இடக்காய் பதில் சொன்னான் சக்திவேல்.

“என்னடா… கொழுப்பா?” கோபமாய்க் கேட்டபடியே அவன் சட்டையைப் பிடித்தான் யூனியன் லீடர்.

“எனக்கில்லே… உங்களுக்கெல்லாம்தான் கொழுப்ப ஏறிப்போய் கெடக்கு… அதான் சம்பளம் கட் ஆனாலும் பரவாயில்லேன்னு ஸ்டிரைக்குல ஈடுபடறீங்க! ஒரு நாள் சம்பளம்கறது உங்களுக்கெல்லாம் சாதாரணமா… சின்னத் தொகையா இருக்கலாம். ஆனா எனக்கு அப்படியில்லை… பெரிய விஷயம்… அந்த நூத்தம்பது ரூபா கொறைஞ்சதுன்னா… நான் எவ்வளவ கஷ்டப்படுவேன்… என்னோட மாதாந்திர பட்ஜெட்… எவ்வளவு பாதிக்கும்னு… எனக்குத்தான் தெரியும்” சக்திவேல் தன் வறுமை நிலையை யதார்த்தமாய்ச் சொல்ல,

“ஓ..அதனால…,”

“யார் வந்தாலும் சரி… வராட்டாலும் சரி… நான் உள்ளாரப் போகப் போறேன்… வேலை செய்யப் போறேன்..”

“ட்டாய்… கருங்காலிப் பயலே.! எத்தனை தைரியமிருந்தா… லீடர் பேச்சை மீறி உள்ளார போவேன்னு சொல்லுவே…” எவனோ ஒருத்தன் எங்கிருந்தோ கத்தினான்.

அதைக் கேட்டு லேசாய் முறுவலித்த சக்திவேல் “இந்த லீடர்… இப்ப உங்க கூட இருப்பான்… உங்களுக்கு ரெண்டு செட் யூனிபார்ம் கேட்டுப் போராடுவான்… நாளைக்கே மொதலாளி கூப்பிட்டு தனியாப் பேசி… தனியாக கவனிச்சதும்… உங்ககிட்ட வந்து… “போங்கடா… போய் வேலையப் பாருங்கடா… இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் ஸ்டிரைக் எதுக்குன்னு”ட்டு போய்க்கிட்டேயிருப்பான்… அவன் பாக்கெட் நிரம்பிடும்… நமக்குத்தான் ஒரு நாள் சம்பளம் நட்டம்” என்றான்.

“போயிருவே… என்னைய மீறி… உள்ளார போயிடுவே?..” கேட்டபடி அவன் எதிரில் வந்து நின்ற லீடரை நிதானமாக நகர்த்தி விட்டுத் தொழிற்சாலைக்குள் நடந்தான் சக்திவேல்.

ஸ்தம்பித்து நின்றான் யூனியன் லீடர்.

“கருங்காலி ஒழிக… முதலாளியின் கைக்கூலி ஒழிக” கோஷம் காதைப் பிளந்தது.

அதே நேரம் சக்திவேலுவைப் பின் தொடர்ந்து கிட்டத்தட்ட இருபது பேருக்கும் மேல் தொழிற்சாலைக்குள் நுழைந்து பணியில் ஈடுபட ஸ்டிரைக் பிசுபிசுத்துப் போனது.

மாலை ஐந்து மணி. பணி முடித்து வெளியே வந்த அந்த தொழிலாளர்களைப் பணிக்குச் செல்லாமல் காலையிலிருந்து வெளி கேட் அருகிலேயே பழி கிடந்த மற்ற தொழிலாளர்கள் சுற்றி வர நின்று திட்டித் தீர்த்தனர்.

“வர்றானுக பாரு… துரோகிக”

“நம்ம ஒற்றுமையை விட… ஒரு நாள் சம்பளம் பெரிசாப் போச்சு இவனுகளுக்கு”

“யூனியனுக்கு கட்டுப்படாத இந்தக் கருப்பு ஆடுகளை அடிச்சுக் கொல்லுங்கடா”

சக்திவேலைத் தடுத்து நிறுத்திய ஒரு முரட்டுத் தொழிலாளி “நூத்தம்பது ரூபாயை உன்னால விட்டுத் தர முடியலை… அப்படித்தானே?” கேட்டபடியெ ஓங்கி அறைந்தான். பேயறை. வாயின் ஓரத்தில் உப்புக் கரித்தது.

பதிலேதும் பேசாமல் அமைதியாய் நின்றான். இல்லையில்லை… அவன் பணக்கஷ்டம் அவனை அப்படி நிற்கச் செய்தது.

ஆனால்… சக்திவேலுவின் அந்தச் செயல் மற்றவர்களின் கோபத்தை மேலும் உசுப்பிவிட அவர்களும் அவன் மேல் பாய்ந்தனர்.

எங்கிருந்தோ வந்த யூனியன் லீடர், “டேய்..டேய்… விடுங்கடா அவனை போகட்டும்… இத்தோட சரி இனிமே இவனுக கூட… யாரும் பேச்சொ… பழக்கமோ வெச்சுக்கக் கூடாது”

அத்தனை பேரும் “ஹோ…ஹோ..ஹோ” என்று பரிகாசமாய்க் கத்தி அவர்களை வழியனுப்பக் கோபத்தோடு சைக்கிளை எடுத்து எரிச்சலோடு பெடலை மிதித்துக் கிளம்பினான் சக்திவேல்.

“எனக்கென்னமோ நான் பண்ணினது தப்பாவே தோணலே… போன மாசமும் இப்படித்தான் ஏதோ பந்த்ன்னு சொல்லி… கம்பெனிய லீவு விடப் பண்ணி… ஒரு நாள் சம்பளத்தைக் கெடுத்தானுக… அதைச் சமாளிக்கவே கண்ணாமுழி திருகிப் போச்சு… இவனுகளுக்கென்ன… கொள்ளை கொள்ளையாகக் காசை வெச்சுக்கிட்டு வட்டிக்குக் குடுத்திட்டிருக்கானுக” தனக்குத் தானே பேசிக் கொண்டு சைக்கிளைச் செலுத்தியவன் வீட்டை அடைந்ததும் நொந்து போனான்.

கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டு அவனை குழப்பத்திலாழ்த்தியது. “எங்க போயிருப்பா,” யோசித்தபடியே சைக்கிளை சுவரோரமாக சாய்த்து வைத்து விட்டு வாசல் திண்ணையில் அமர்ந்தான்.

அரை மணி நேரத்திற்குப் பிறகு வந்து நின்ற ஆட்டோவிலிருந்து இறங்கினாள் அவன் மனைவி விஜயா.

“வந்து ரொம்ப நேரமாச்சுங்களா?” கேட்டவாறே கதவைத் திறந்தவளின் பின்னால் அமைதியாய் நடந்தவன். உள்ளெ சென்றதும் மெல்லக் கேட்டான் “எங்க போயிட்டு வர;றே?… மேக்கப்பெல்லாம் பிரமாதமாயிருக்கு”

“அப்படியா? நல்லாயிருக்கா?… மேக்கப் பிரமாதமாயிருக்கா,” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு திரும்பத் திரும்பக் கேட்டாள் “நெஜமாச் சொல்லுங்க… நல்லாயிருக்கா?”

“ம்..ம்…சினிமா நடிகை தோத்தா போ”

அவன் சொன்னதைக் கேட்டு கல..கல..வெனச் சிரித்தவள் “அப்படியா?…அவ்வளவு அழகாவா இருக்கேன்?…”

சக்திவேல் எரிச்சலுடன் மேலும் கீழும் தலையாட்ட,

“அதுக்குத்தாங்க போயிட்டு வர்றேன்” என்றாள்.

அவன் புரியாமல் விழிக்க விவரித்தாள். “நம்ம மில் ரோட்டுல புதுசா ஒரு பியூட்டி பார்லர் வந்திருக்குங்க. அங்கதான் போயி… முகத்துக்குப் பளீச்சிங்… ஃபேஸியல்… எல்லாம் பண்ணிட்டு வர்றேன்…ம்… ம்… அதெல்லாம் பண்ணினப்புறம் நடந்து வந்தா வியர்த்துப் போய்… முகம் கெட்டிடும்னு ஆட்டோவுல வந்திட்டேன்”

“அதெல்லாம் சரி… பணம் ஏது?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான்.

“உங்க மேஜை டிராயர்ல…நூத்தம்பது ரூபாய் இருந்தது… அதைத்தான் எடுத்திட்டுப் போனேன்…பச்… மொத்தமும் செலவாயிட்டுதுங்க” என்றாள் கொஞ்சலாய்,

“ஏண்டா… நம்ப ஒற்றுமையை விட… அந்த நூத்தம்பது ரூபா பெரிசாப் போச்சா உனக்கு?” என்ற சக தொழிலாளிகள் கத்தல் காதுகளுக்குள் எதிரொலிக்க,

விக்கித்துப் போனான் சக்திவேல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *