Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

நிழலாட்டம்

 

நடந்து கொண்டிருந்தவன் காலில் ஏதோ இடறக் குனிந்து பார்த்தான். தடுக்கிய கல்லை ஓரமாய்த் தூக்கிப் போட்டு நிமிர்ந்தவனின் கண்களில் தெரிந்த காட்சி அவனைப் பதறச் செய்தது. அவன் அங்கேயே நின்றிருக்க அவனது நிழல் மட்டும் முன்னேறிப் போய்க் கொண்டிருந்தது.
நிழல் 3

வசதியான அந்த உணவு விடுதியின் ஓரத்து மேசையில் அவர்கள் அமர்ந்து இருந்தனர். அவன் பேசத் துவங்கினான்.

என்னுடைய மிகப்பெரிய பிரச்சினையே நான்தான். என்னுடைய இருப்பு அல்லது நான் யார் என்கிற கேள்வி வெகுகாலமாய் துரத்தி வருகிறது என்னை. கொண்டாட்டமும் நிராகரிப்பும் நாணயத்தின் இரு பக்கங்கள் என இயங்கும் இவ்வுலகில் நான் என்னவாக இருக்கிறேன். என்னைச் சூழ்ந்திருக்கும் அனைவரும் என்னைக் கொண்டாட வேண்டுமென விருப்பம் கொள்கிறது மனம். ஆனால் யாரிடமும் நூறு சதம் உண்மையானவனாக இருக்க என்னால் முடிவதில்லை. எந்தவிதமான பாசாங்கும் அற்று நான் நானாக இருக்கும் என்னை யாருக்கும் பிடிப்பதில்லை. மற்றவர்களுக்காக முகமூடி அணிந்து நடமாட வேண்டியிருப்பின் என்னை நானே வெறுக்கும் நிலைக்கு ஆளாகிறேன். எனக்கான நான் அல்லது மற்றவர்களுக்கான நான். எது சரி என்பது புரியாத குழப்பம். என்னை எப்போதும் துரத்தியபடி இருக்கும் இரண்டு விஷயங்கள் காமமும் மரணமும். இருளிலும் விலகாத நிழலென காமம் என்னைத் துரத்தியபடி வருகிறது. பெண்ணுடலென்றால் இன்றுவரை என்னவென்று அறிந்திடாத எனக்குள் சதா சர்வ காலமும் காமம் பற்றிய சிந்தனைகள் கடல் நுரையெனப் பொங்கியபடி இருக்கின்றன. பார்க்கும் பெண்களை எல்லாம் புணர வேண்டும் என்கிற ஆசை சுட்டெரிக்கிறது என்னுடலை. என்னை நானே துய்த்துக் கொள்ளும் சமயங்களில் விழிமுன் திடீரென வந்து போகும் முகங்கள் என் நெருங்கிய உறவுகளாய் மாறி என்னை பைத்தியமாக்கிச்செல்கின்றன. எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதா இல்லை உலகில் எல்லாருக்குமே இப்படித்தானா. காமம் ஒருபுறம் எனில் மறுபுறம் மரணம். அது இன்னும் என்னை அதிகமாக என்னைச் சித்திரவதை செய்கிறது. ஒருநாள் நாம் கண்டிப்பாக இறந்து விடுவோம். என் எண்ணங்களோ என்னைப் பற்றிய சிந்தனைகளோ நான் இருந்ததற்கான அடையாளங்களோ எதுவுமே இருக்காது என்பதை என்னால் எளிதில் ஒத்துக் கொள்ள முடியவில்லை. சரி மரணம் பற்றிய பீதிதான் என்னை இவ்வாறு அலைக்கழிக்கிறதா என்றால் வேறுமாதிரியான சிந்தனைகளும் எனக்குள் கிளர்ந்து கொண்டே இருக்கின்றன. உயரமானதொரு மாடியின் மீது நின்று எட்டிப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு குரல் கீழே குதித்து விடுவென கட்டளையிட்டபடியே இருக்கிறது. பேருந்தில் பயணிக்கும்போது உடனே நமக்கொரு விபத்து நேர்ந்து கை கால் எல்லாம் கூழாகி விடாதா என்றும் ஆசையாய் இருக்கும். நான் மரணத்தைக் கண்டு பயப்படுகிறேனா அல்லது அதனை விரும்புகிறேனா. இவை இயல்பான மனிதன் ஒருவனின் நடத்தையா அல்லது உங்கள் எல்லாரிடமும் இருந்து நான் வேறு மாதிரியானாவன் எனக் காட்டிக் கொள்வதற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்கிறேனா. ஆக என்னுடைய மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது நான்தான்.

இவன் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

பிளைன் நானா பட்டர் நானா.. என்ன சாப்பிடுற..

என்ன சொல்வதெனத் தெரியாமல் இவன் திகைத்து நிற்க மற்றவன் தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்தான். இருவரும் அமைதியாக சாப்பிடத் தொடங்கினார்கள்.
நிழல் 009

பெருமதிப்பிற்குரிய கவிஞர் வெங்கடசர்மா சுப்பிரமண்யத்துக்கு,

சமீபத்தில் நீங்கள் சிந்தாநதியில் எழுதிய “இனி நீங்கள் புரோட்டாவுக்கு ஊற்றுவது தமிழ்க் குருமாவாக இருக்கட்டும்” என்கிற கவிதையைப் படிக்க நேர்ந்தது. அசந்தும் ஆச்சர்யப்பட்டும் போனேன். கவிதையின் ஒரு வரியைக் கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. யாருக்கும் எளிதில் விளங்கிடாத இத்தனை அற்புதமானதொரு கவிதையை எழுதியவர் யாரென இணையத்தில் தேடத் துவங்கினேன். அப்போதுதான் சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் இயற்றிய “பப்பரப்பா” என்கிற மற்றொரு கவிதையும் கிடைத்தது. அந்தக்கவிதை முதற்கவிதைக்கு அப்பனாக இருந்தது என்னை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஒருசேர ஆழ்த்தியது. யாரிடம் சென்று இவற்றுக்கான விளக்கம் கேட்கலாம் என்கிறபோதுதான் தமிழின் மிக முக்கியமான கவிஞர் ஒருவர் சிக்கினார். கவிதைகளை வாசித்த அவர் இவை எத்தனை முக்கியமான அரசியல் கவிதைகள் என்பதை விளக்கிய பின்பாகத்தான் எனக்கு உங்கள் தீவிரம் புரிந்தது. இத்தனை நாட்களாக உங்களை நான் வாசிக்காமல் போனது எனக்கு ரொம்பவே வெட்கமாக இருக்கிறது. தூர்ந்து போனத் தமிழுணர்வை தமிழனின் தன்மான உணர்வை இனி கவிதைகளால் மட்டுமே தட்டியெழுப்ப முடியும் என்கிற உங்கள் உள்ளக்கிடைக்கை பற்றிப் பேசும்போதே எனக்கு புல்லரிக்கிறது. தமிழைக் கொலை செய்ய வருபவர்களை முறத்தால் அடித்து விரட்ட மறப்பெண்கள் இனி தேவையில்லை நீங்கள் எழுதும் கவிதைகளே போதும். நீங்கள் தொடர்ச்சியாக இதுமாதிரியான கவிதைகளாக எழுதி மக்களை பெருமகிழ்ச்சிக்கடலில் முக்கி சாகடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அத்தோடு ஒரு சின்ன விண்ணப்பமும் கூட. அசைவத்துக்காக புரோட்டா குருமா எல்லாம் எழுதி விட்டீர்கள். இனி என்னைப்போன்ற சைவபட்சிணிகளுக்காக அடுத்து தமிழ்ப்புளிச்சாதம், தமிழ்மோர்க்குழம்பு என்றெல்லாம் எழுதுங்களேன். இவை எல்லாமே எனக்கு மிகப் பிடித்தமானவை. நன்றி.

பிரியமுடன்,
சுனா.பானா

அன்பின் சுனா.பானா,

இந்நேரம் நான் உணரும் மகிழ்ச்சியினை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. யாருக்காக எழுதுகிறோமோ அப்படியானதொரு வாசகரிடம் இருந்து வரும் எதிர்வினைக்கு இவ்வுலகில் ஏதும் ஈடு இணை கிடையாது. நீங்கள் மிகச்சரியாகக் கவிதையின் ஆன்மாவைப் பிடித்து விட்டீர்கள் என்பது எனக்கு உங்கள் கடிதத்தில் இருந்து புலப்படுகிறது. உங்களுக்கு உதவிய கவிஞருக்கும் என் நன்றி. அண்டம் சூன்யம் ஆகாசம் தான்யம். என்னைச் சுற்றி நடக்கும் அவலங்களுக்கு எதிரான என் உணர்வுகளை வெளிப்படுத்த நான் சுழற்றியிருக்கும் தார்மீகச் சாட்டைதான் அந்தக் கவிதைகள். நீங்கள் அதன் தீவிரத்தை உணர்ந்ததுபோல உலகமும் ஒருநாள் உணரும். அதுவரைக்கும் நொந்து போயிருக்கும் நம் தமிழ்ச்சமூகத்துக்காக குருமா ஊற்றும் என் பணி அதாவது கவிதையெழுதுவதும் கண்டிப்பாகத் தொடரும். அத்தோடு உங்கள் விருப்பப்பட்டியலில் சொல்லி இருக்கும் கவிதைகளும் கூடிய விரைவில் வரும் என்பதைப் பெரு உவகையோடு இங்கே பதிவு செய்கிறேன். நன்றி.

அன்புடன்,
வெங்கடசர்மா சுப்ரமணியம்
நிழல் 7

சாலையின் ஓரமாகத் தனக்கான பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அவன். காலை மணி ஏழைத் தாண்டியிருக்கவில்லை. எதிர்சாரியில் ஓரமாக இருந்த தேநீர்க்கடையில் மக்கள் கூடத் தொடங்கி இருந்தனர். வெகு நிதானமாக தங்களுடைய தினத்தை ஆரம்பிக்கும் அவர்களுக்கு மத்தியில் பரபரப்பும் பதட்டமுமாக ஓட வேண்டி இருக்கும் தன்னை நினைக்கையில் ஆத்திரம் கூடியது அவனுக்கு. நாற்பது மைல் தொலைவில் இருக்கும் அலுவலகம் எங்கோ அயல்தேசத்தில் இருப்பதாகவும் அந்தக் காலைப்பொழுதின் சூழலில் தான் மட்டும் அந்நியனாயும் உணர்ந்தான். கோபத்தை மாற்ற கடையில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலின் மீது தன் கவனத்தை திருப்பினான் . மாலையில் யாரோ மனதோடு பேசவென ஸ்வர்ணலதா அந்தக் காலைப் பொழுதை மாற்றிக் கொண்டிருந்தார் ஒரு இனிய மாலையென. சிறிது ஆசுவாசம் கொண்டவனின் கண்களில் அந்தக் காட்சி இடறியது. சாலையில் சின்னதொரு வெள்ளை நிற மூட்டையென உருண்டு வந்து கொண்டிருந்ததை இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை அவனால். சற்று நெருங்கி வந்தபோதுதான் புரிந்து கொண்டான் அது பிறந்து சில நாட்களே ஆகியிருந்த ஒரு வெள்ளை நாய்க்குட்டியென.

மெதுவாக நடந்து வந்து சாலையின் முடிவை அடைந்திருந்த நாய்க்குட்டி விரைந்து செல்லும் நெடுஞ்சாலை வாகனங்கள் தாண்டி முன்னேற இயலாமல் தெருமுக்கிலேயே நின்று கொண்டது. அவன் ஆர்வம் கொண்டவனாக அதை கவனிக்கத் தொடங்கினான். அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் நின்ற நாய்க்குட்டி தலையை சிலுப்பியபடி இங்கும் அங்குமாய்ப் பார்த்து சாலையின் இடதுபுறம் நகரத் துவங்கியது. அது நடந்த திசையில் பைத்தியக்காரப் பெண் ஒருத்தி நின்றிருந்தாள். தலைமுடி பரட்டையாகத் தோளெங்கும் விரிந்து கிடக்க கிழிந்து நைந்து போன உடையொன்றை ஒன்றை அணிந்தவள் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தாள். திடீரென வெறிவந்தவள் போல உரத்த குரலில் யாரையோ வைவதும் இரண்டு நிமிட கடுமையான வசவுக்குப் பின்பு ஒடுங்கிப் போவதுமாக தொடர்ந்து கொண்டிருந்தவளின் காலடியைச் சென்று சேர்ந்திருந்தது அந்தக் குட்டி நாய் இப்பொழுது. தன் கால்களினிடையே வந்து சேர்ந்த புதிய ஜீவனை வினோதமானதொரு பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் விரியத் தொடங்கின.

தன் கால்களை உயர்த்தி நாய்க்குட்டியின் தலையை தரையோடு சேர்த்து நசுக்க முற்படுபவள் போல அவள் அழுத்த ஆரம்பித்தாள். மறுபுறம் இது அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்தவன் பதறிப்போனான். அவளை நோக்கி கால்களை நகர்த்தும்படியாக பதட்டமாக சப்தங்கள் எழுப்பினான். ஆனால் சாலையின் மறுபுறம் நின்றவளை அவனுடைய எந்தக் கத்தலும் பாதிக்கவில்லை. தனது தலை தரையோடு அழுத்தப்படுவதை மெதுவாக உணர்ந்து பயந்துபோன நாய்க்குட்டி சட்டென தலையை விலக்கிக் கொண்டு அவளை விட்டு நகர்ந்து நின்றது. அவள் அதனை சின்னதொரு குழப்பத்தோடு பார்த்தபடியே இருந்தாள். சற்று நேரத்தில் அந்தக்குட்டி மீண்டும் அவள் கால்களின் கீழே சென்று அவற்றை நக்கத் துவங்கியது. குரூரமானதொரு சிரிப்போடு அவள் நாயின் முகத்தை இப்போது தன் கால்களால் நிமிண்டினாள். தலையை அழுத்த முற்படுவதும் எத்துவதுமாக அவளிருக்க மீண்டும் மீண்டும் அவள் கால்களின் கீழேயே சென்று கொண்டிருந்தது நாய்க்குட்டி. நடக்கும் காட்சிகளைப் பார்த்தும் எதுவும் செய்ய மாட்டாமல் இருக்கும் இவன் தன்னை வெகு கொடூரமானவனாக உணர்ந்தான். பேருந்து வந்தால் வெகு சீக்கிரம் அங்கிருந்து கிளம்பி விடலாம் என்கிற எண்ணம் அவனுக்குள் தோன்ற ஆரம்பித்தது.

சிறிது சமயம் கழித்து அந்தப் பைத்தியம் அவ்விடத்தை விட்டு விலகி நடக்கத் தொடங்கியதும் இவன் நாய்க்குட்டி தப்பியதென சற்றே ஆசுவாசமாக உணர்ந்தான். ஆனால் அவன் சற்றும் எதிர்பார்த்திராத வகையில் அந்த நாய்க்குட்டியும் அவள் பின்னே போகத் தொடங்கியது. வெகு மெல்லிய குரைப்பொலி கேட்டு அது தன் பின்னே வருவதை உணர்ந்து கொண்ட அந்தப்பெண் சட்டென நின்றாள். சற்று நேரம் தன் கால்களின் கீழே நின்றிருந்த நாய்க்குட்டியை வெறித்துப் பார்த்தவள் திடீரென தன் பலமத்தனையும் சேர்த்து ஓங்கி அதனை உந்தித் தள்ளினாள். பலமாக எத்தியதில் வீசியெறியப்பட்ட நாய்க்குட்டி சாலையில் போய்க்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் சக்கரங்களுக்குக் கீழே போய் விழுந்தது. நடந்து கொண்டிருந்ததை அவன் இன்னதென்று உணருமுன் ஒரே நொடியில் எல்லாம் முடிந்து போனது. சாலையில் ரத்தமும் கூழுமாய்ச் சப்பளிந்து கிடந்த நாய்க்குட்டியை அவன் விக்கித்து பார்த்தபடி நின்றான். கண்கள் குளமாகி இருந்தவன் திரும்பிப் பார்த்தபோது அந்தப் பைத்தியமும் அலறி அரற்றிக் கொண்டிருந்தது ஓவென. திகைத்து நின்ற பொழுதில் அவன் போக வேண்டிய பேருந்து வந்து சேர அமைதியாக அதில் ஏறி அமர்ந்து கொண்டான்.
நிழல் 6

வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது அந்த மின்சார ரயில். வண்டியின் ஓட்டத்துக்குத் தகுந்தவாறு ஒத்திசைவோடு ஆடியபடி இருந்த கைப்பிடிகள் அவனுக்கு சர்க்கசில் கிளிகள் அமர்ந்திருக்கும் பிடிகளை ஞாபகப்படுத்தின. அத்தனை கூட்டமில்லாத பெட்டிக்குள் உட்கார இடமிருந்தும் கம்பி ஒன்றில் சாய்ந்து வசதியாக நின்று கொண்டான். பெருநகரங்களின் இரைச்சலும் அவதியும் அவனுக்கு மொத்தமாகப் பிடிக்காத ஒன்று. இருந்தும் பணி நிமித்தமாக வரும்போதெல்லாம் அவன் பிரயாணம் செய்ய பேருந்தைக் காட்டிலும் மின்சார ரயிலையே பயன்படுத்துவான். புதுவிதமான மனிதர்களைப் பார்க்கும் வாய்ப்பையும் பதட்டமில்லாத பயணாத்தையும் அது எப்போதுமே அவனுக்குக் கொடுக்கக் கூடியதாக இருந்ததுதான் காரணம்.

வண்டிக்குள் இருந்த பெரும்பாலான மக்கள் தங்கள் கைகளில் இருந்த அலைபேசியில் ஆழ்ந்து இருந்தார்கள். சரி தவறென்பதைத் தாண்டி இன்றைக்கு அதுவும் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. அருகிலிருக்கும் மனிதர்களோடு பேசி உரையாடுவதைக் காட்டிலும் இயந்திரத்தில் தொலைந்து போவதே மேல் என்கிற இடத்துக்கு மனிதர்கள் நகர்ந்து விட்டது அவனுக்கு சிரிப்பாய் இருந்தது. தன் பார்வையை வேறுபக்கம் திருப்பினான். ரயிலின் படியேறும் இடத்தில் அமர்ந்திருந்தான் ஒரு குருட்டுப் பிச்சைக்காரன். தானும் அவனைப் போல இருந்திருந்திருந்தால் எந்தப் பிரச்சினையும் இருக்காதெனத் தோன்றியது.

வண்டி ஏதோவொரு நிலையத்தில் நின்றது. எந்த இடமென எட்டிப் பார்த்துவிட்டு தலையை உள்ளிழுத்துக் கொண்டவனை அந்தக் குரல் கலைத்தது. அய்யா.. இது இன்னா ஸ்டேசனுங்க.. அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன்தான் கத்திக் கொண்டிருந்தான். யாரும் அவனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. சொல்லலாமா என்று வாய் திறந்தவன் என்னவோ நினைத்தபடி சட்டெனத் தானும் அமைதியாகிப் போனான். பிச்சைக்காரன் மீண்டும் குரலெழுப்பினான். அய்யா சாமி.. யாராவது சொல்லுங்க.. இது இன்னா ஸ்டேஷனுங்க..

அதற்குள் ரயில் நகர்ந்து விட்டிருந்தது. அந்தக் குருடன் தனக்குத் தானே புலம்ப ஆரம்பித்தான். தாயோழிங்க.. எவனாவது சொல்றானா.. நா இப்போ என்னா கேட்டேன்.. வாயத் தொரந்தா கொறைஞ்சா போயிருவானுவோ.. ப்பாடுங்களா.. சட்டென அருகில் இருந்தவர் அவனை அதட்டினார். டேய் நாயே.. நிறுத்துடா.. நீ எங்க இறங்கணும்.. அவன் குரல் இப்போது குழைந்தது. தான் இறங்க வேண்டிய இடத்தைச் சொன்னான். நீ எறங்க வேண்டிய ஸ்டேஷன் வரசொல்லோ சொல்றேன்.. அது தண்டியும் கம்னு கெடக்கணும்.. புரிஞ்சுதாடா தேவுடியா பயலே.. அவன் முகத்தில் யாதொரு உணர்ச்சியும் காட்டாமல் சரியென்று அமைதியாகி விட்டான். இவன் அவனைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.
நிழல் 4

இரவு நேரப் பேருந்து நிலையம் பரபரப்பாய் இருந்தது. எறும்புக்கூட்டம் போல மனிதர்கள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலை. பயணம் செய்வதற்கான ஏதோ ஒரு காரணம். அம்மா ஒருத்தி சனியனே தின்னு தொலை என்பதாகத் தன் குழந்தைக்கு பாசமாக ஊட்டிக் கொண்டிருந்தாள். அதீத ஒப்பனையுடன் அலைந்து கொண்டிருந்த பெண்கள் தங்களுக்கான வாடிக்கையாளரைத் தேடிக் கொண்டிருந்தார்கள். எந்த ஊர் சார் சொல்லு சார் என்று குலையாத நம்பிக்கையோடு ஒவ்வொருவரின் பின்னாடியும் ஓடிக் கொண்டிருந்தார்கள் பஸ் புரோக்கர்கள்.

எதையும் லட்சியம் செய்யாதவனாக அவன் ஓரமாக நின்று கொண்டிருந்தான். தான் முன்பதிவு செய்திருந்த பேருந்து வந்து நின்றவுடன் ஏறிக் கொண்டான். தன்னுடைய இருக்கை எண்ணைத் தேடி ஜன்னல் ஓரமாக அமர்ந்தவனின் முகத்தை மென்காற்று வருடியது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேருந்தில் ஏறத் தொடங்கி இருந்தார்கள். பேருந்து கிளம்ப இன்னும் எத்தனை நேரம் ஆகுமோ என்ற மெல்லிய சலிப்போடு தலையைத் திருப்பியபோது அவளைப் பார்க்க நேர்ந்தது

தேவதை என்றொரு ஒற்றை வார்த்தைக்குள் அவளை அடைக்க முடியாது. அதையும் மீறிய அழகு. அவள் கூடவே நடந்து வந்து கொண்டிருந்தது ஒரு குட்டி தேவதையும். பெரியதொரு பயணப்பையைத் தூக்க இயலாமல் இழுத்து வந்து அவனுக்கு முன் இருக்கையில் வைத்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் எந்திரிக்கிறீங்களா அது என்னோட சீட் எனக் கேட்ட குரல் அவனை மீண்டும் நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. திரும்பிப் பார்த்தால் திடகாத்திரமாக ஒரு மனிதன் நின்றிருந்தான். யார் இந்த பூஜை வேளைக் கரடி. நீங்க உட்கார்ந்து இருக்குற ஜன்னல் சீட் என்னோட நம்பர் சார். சாரி என்றபடி நகர்ந்து அமர மற்றவன் உள்ளே சென்று இருக்கையில் சாவகாசமாக சாய்ந்து கொண்டான். முன்னிருக்கை தேவதை இன்னமும் அந்தப் பையைத் தூக்கி மேலே வைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

மெல்லமாய் எழுந்து தான் வேண்டுமானால் உதவட்டுமா எனக் கேட்டவன் அவளிடமிருந்து பையை வாங்கி சிரமப்பட்டு உள்ளே திணித்தான். சின்னதொரு பார்வையினால் நன்றி சொன்னவளிடம் புன்னகைத்து விட்டு சந்தோஷமாக தன் இருக்கைக்கு திரும்பியவன் பக்கத்து இருக்கையில் மற்றவன் தன்னையே முறைத்துக் கொண்டிருந்ததை கவனித்து முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான். சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பிட எப்போது தூங்கிப் போனான் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. சட்டென்று முழிப்பு வந்த போது ஒளிர்ந்து கொண்டிருந்த கடிகாரத்தின் பச்சை முட்கள் மணி இரண்டு என்றன. தூக்கத்தை தொலைத்தவனாக சுற்றும் முற்றும் பார்த்தபோது மற்றவர்கள் எல்லாம் எட்டாம் ஜாமத்தில் இருக்க அவனருகே இருந்த கரடியும் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதெனத் தெரியாதவன் கைகளை நீட்டி சோம்பல் முறித்துக் கொண்டான்.

உடம்பை முறுக்கியபோது அவனையும் அறியாமல் முன் இருக்கைக்குக் கீழே சென்ற கால்கள் மெத்தென எதன் மீதோ இடிக்க சடாரென்று தன் கால்களை உள் இழுத்துக் கொண்டான். தான் இடித்துக் கொண்டது அந்த தேவதையின் கால்களோவென எண்ணியவனுக்கு உடம்பு சிலிர்த்தது. தேகம் மெலிதாக சூடேறுவதை உணர்ந்தான். யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்ய சுற்றுமுற்றும் பார்த்தபடி மெதுவாக அறியாமல் கால்களை விடுகிறவன் போல முன்னே நீட்டினான். அவனால் மென்மையான உடலின் ஸ்பரிசத்தை உணர முடிந்தது. தான் தொடுவதை உணர்ந்து அவள் முழித்துக் கொண்டுவிடுவாளோ எனறு அவனுக்குப் பயமாக இருந்தும் கால்களை அகற்ற மனம் வரவில்லை. மெதுவாக தன் கால்களைக் கொண்டு உரசியபடியே இருந்தான்.

அவன் பயந்தாற்போல அவள் எந்தக் கூப்பாடும் போடவில்லை. அசந்து உறங்குகிறாளோ அல்லது அவளுக்கும் இது பிடித்து இருக்கிறதோ என்பதான கேள்விகள் அவனுக்குள் சுழன்று அடித்தன. இருந்தும் தைரியம் வரப்பெற்றவனாக அந்த உடலின் மீது தன் கால்களைப் படர விட்டான். போதை. மயக்கம். அவனுக்கு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. தெரியாமல் தவற விடுவதாய் தன் கடிகாரத்தைத் தவற விட்டவன் குனிந்து அதை எடுக்க முயல்பவன் போல முன்னிருக்கையைப் பார்த்தபோது உடலில் முள் தைத்தாற்போல சுரீர் என்றது. அந்தப் பெண் தன்னுடைய இரு கால்களையும் நன்றாக மடக்கி வைத்து இருக்கைகளுக்குள் அடங்கியவளாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
அப்படியானால் கீழே இருப்பது யார் எனக் குழம்பியவன் மெதுவாகக் குனிந்து பார்த்தான். இத்தனை நேரம் எந்த எதிர்ப்பும் வராததன் அர்த்தம் இப்போது அவனுக்குப் புரிந்து போனது. அவள் கூட வந்திருந்த பெண் குழந்தை அங்கே படுத்துக் கிடந்ததைப் பார்த்து அவனுக்கு குப்பென வியர்த்தது. அந்தப் பத்து வயது பெண்பிள்ளையிடம்தாம் உரசிக் கொண்டிருந்தோம் என்பது புரிய தன்னை வெகு கேவலமாக உணர்ந்தவன் முகம் இருண்டு கண்களை மூடியத் திரும்பிப் படுத்துக் கொண்டான். சிறிது நேரமே போனபின்பு கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தான். எதுவும் தெரியாமல் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்க அவனுடைய உடம்பு இன்னும் தணலாக தகித்துக் கொண்டிருந்தது. ஆழிப்பேரலைகளென உணர்வுகள் அவனுக்குள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக மெதுவாகத் தன் கால்களை மீண்டும் முன் இருக்கைக்குக் கீழே நுழைத்தான்.

பொழுது விடிந்து இவன் கண் விழித்தபோது பேருந்து நிலையத்தின் உள்ளே நின்றிருந்தது. முன்னிருக்கை தேவதைப்பெண் மேலே இருந்த தன்னுடைய பையோடு போராடிக் கொண்டிருந்தாள். அவளை அமைதியாய் நகர்த்திவிட்டு அவளுடைய பயணப்பையையும் தன்னுடைய உடைமைகளையும் எடுத்துக் கொண்டவன் பேருந்தை விட்டு இறங்கினான். குழந்தையை கூட்டிக் கொண்டு அந்தப் பெண்ணும் இறங்கியவள் புஜ்ஜிமா அங்கிளுக்குத் தாங்க்ஸ் சொல்லு என்றாள். வெள்ளந்தியாக சிரித்தபடி நன்றி சொன்னது குழந்தை. ஒரு நிமிடத்தில் வருவதாக அவளிடம் பையைக் கொடுத்து விட்டு ஓடியவன் அருகில் இருந்த கடையில் இருந்து இரண்டு சாக்லேட்டுகளை வாங்கிக் கொண்டு வந்து குழந்தையிடம் நீட்டினான். தன் தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த குழந்தையை அவள் பரவாயில்ல வாங்கிக்கோ என சொல்ல சந்தோஷமாக வாங்கிக் கொண்டு இவனைப் பார்த்து சிரித்தது. சாக்லெட்டுகளை அது ஆசை ஆசையாய் சாப்பிடுவதைப் பார்த்தவன் குனிந்து குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான். பிறகு அங்கிருந்து விலகி நடக்கித் தொடங்கினான்.

- மார்ச் 2nd, 2012 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)