நிர்வாண தேசம்

 

[ குறிப்பு;-சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் ஒரு பெரிய நகரமாக இருந்தது. அங்கே கரிகாலன் காலத்தில் கப்பல் வியாபாரம் எவ்வளவோ சிறப்பாக நடந்துவந்த தாம்.கலங்கரை விளக்கம்,சுங்கமண்டபம் முதலிய இடங்கள் அங்கே இருந்தனவாம். இப்போது உள்ள காவிரிப் பூம்பட்டினத்தில் மீன்படகையும் வலைஞர் குடிசைகளையுமே பார்க்க முடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அப் பட்டினம் இருந்த நிலைமையைப்பற்றிச் சங்க காலத்துத் தமிழ் நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.அந் நகரத்தில் இருந்த ஒரு வணிகனைப்பற்றி "மணிமேகலை " என்னும் காவியத்தில் கண்ட வரலாறு ஒன்று பின் கண்ட கதைக்கு ஆதாரம்.]

இயற்கைக்குப் பிசாசுதான் பிடித்துவிட்டதோ? சண்ட மாருதம் உலகத்தையே சுழற்றி அடிக்கிறது. அலைகள் மலைகளைப்போலக் குமுறி எழுகின்றன. கப்பலை அம்மானையைப்போல மேலே தூக்கி எறிகிறது கடல். கப்பலில் உள்ளவர்கள் யாவரும் கதிகலங்கி உயிருக்கு மன்றாடிக் கத்துகிறார்கள். அந்தப் பெரும் புயலின் முழக்கத்தில் அவர்களுடைய புலம்பல் யாருக்குக் கேட்கப்போகிறது?

“படார்! படீர்! பட்!” என்ற சப்தம்; கப்பல் உடைந்துவிட்டது.”ஐயோ! அப்பா! அம்மா!” என்ற ஒலிகள் அதற்குள் இருந்த சிற்றுயிர்களின் உயிராசையை வெளிப்படுத்தின. கரையில்லாமற் படர்ந்து கிடக்கும் கடலுக்கு அந்த உயிர்கள் அன்று பலியாயின. அந்தக் கடலின் பசிக்குக் கப்பல் எம்மாத்திரம்!

கடலின் குமுறல் அடங்கியது; சண்டமாருதமும் சளைத்து நின்றது. கப்பலையும் அதிலுள்ள உயிர்களையும் விழுங்கிவிட்டுப் பழைய சாந்தியுடன் சமுத்திரம் பிரணவ கோஷம் செய்யத் தொடங்கியது. அந்தக் கப்பலில் பிரயாணம் செய்தவர்களுடைய ஆசைகள் என்ன என்ன விதமாக இருந்தனவோ, அவர்களுடைய வரவை எதிர்பார்த்து யார் யார் ஆவலாகக் காத்திருக்கின்றார்களோ? சமுத்திரத்திலே அடித்த சண்டமாருதம் தான் செய்த படுகொலையை அவர்களுக்குத் தெரிவிக்குமா என்ன? உயிரிழந்தவர்களுடைய சடலங்கள் கடற் பிராணிகளுடைய பசியைத் தணித்தன. அவர்களுடைய உயிர்கள் எல்லையற்ற ஒன்றிலே போய்ச் சேர்ந்தன.

அந்தப் புயலின் கதையை உலகத்துக்குச் சொல்ல ஒரு சாட்சிகூட இல்லை என்றுதான் தோற்றியது. அந்தத் தோற்றம் பொய். அதோ ஒரு மனிதன் ஒரு துண்டுக்கட்டையைப் பிடித்துக்கொண்டு கடலிலே மிதக்கிறான். அந்தப் பெரும் புயலின் வேகத்தோடு அவனுடைய விதி போராடி வென்றுவிட்டது. அவனுடைய வாழ்க்கை நூலை அந்தக் கயிற்றால் அறுக்க முடியவில்லை. அவன் கடலில் மிதந்து வந்தான்.

அவன்தான் சாதுவன். காவிரிப்பூம்பட்டினத்தில் அவன் ஒரு பெரிய வணிகன். கப்பல் வியாபாரம் செய்பவன். அவனுடைய மனைவி ஆதிரை. சாதுவனுக்கு அம்மனைவியால் மிக்க பெருமை உண்டாயிற்று. அவள் அத்தகைய கற்பரசி.கையில் இருந்த பணம் செலவழிந்துவிட்டமையால் திரைகடலோடித் திரவியந் தேட எண்ணிப் புறப்பட்டான் சாதுவன். ஒரு கப்பலில் ஏறினான். கப்பல் கடலுக்கு இரையாயிற்று. அவன் தப்பினான்.

ஆனாலும் என்ன? கடலிலே எவ்வளவு நாளைக்கு மிதக்க முடியும்? ஆகாரம் வேண்டாமா? குடிக்க ஜலம் வேண்டாமா? உடம்பில் பலம் வேண்டாமா? இடையிலே திடீரென்று ஒரு திமிங்கிலம் வந்து அவனை விழுங்கிவிட்டால் என்ன செய்வது? கடலின் வெள்ளலைக் கைகளோடு அவன் கைகள் போராடின. புத்த தேவனுடைய ஸ்மரணம் ஒன்றுதான் அவனுக்கு உற்சாகம் உண்டாக்கியது.

“ஹா!” என்று அவன் மகிழ்ச்சியோடு வீரிட்டுக் கத்தினான் அவன் கண்ணுக்கு ஒரு தீவு தெரிந்தது. பச்சைப் பசேலென்று அடர்ந்திருந்த மரங்கள் அவன் கண்ணுக்குப் புலப்பட்டன.அவனுடைய கைகளுக்கு முறுக்கேறியது. தன்னுடைய முழுப் பலத்தோடும் நீந்த ஆரம்பித்தான். நீந்த நீந்தத் தீவு விலகிக்கொண்டே போவதுபோல் இருந்தது அவனுக்கு. உண்மையில் அது நெருங்கியது. இதோ வந்துவிட்டான். இன்னும் பத்துமரர் தூரம் கூட இல்லை; அவன் கால் நிலைத்துவிட்டது. ஆனால் கால் கீழே ஊன்றவில்லை; அவனுடைய சந்தோஷம் அவனுக்கு அதிகப் பலவீனத்தை உண்டாக்கியது. தட்டுத் தடுமாறிக் கரைக்கு ஓடினான். அங்கிருந்த ஒரு மரத்தடியில் விழுந்தவன் தான்; இந்த உலகத்தையே மறந்துவிட்டான்.

எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தான் என்று அவனுக்கே விளங்கவில்லை. ஏதோ ஒரு கடுமையான குரல் அவனை எழுப்புவதுபோல் இருந்தது. கண்ணைத் திறந்து பார்த்தான். அடர்ந்த மயிரும் குரூபமான உடம்பும் நிர்வாண நிலையும் உடைய சிலர் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தார்கள்.

அந்தக் கோர ரூபங்களைப் பார்த்தவுடன் சாதுவன் திடுக்கிட்டான். உயிருக்காக அலைகளுடன் போராடிய போராட்டத்தில் அவன் மூளை குழம்பியிருந்தது. சுய ஞாபகம் வருவதற்கு நேரமாயிற்று.

அவன் எழுந்து உட்கார்ந்தவுடன் சுற்றிலும் நின்றவர்கள் அவனை மொய்த்துக் கொண்டார்கள். ஒருவன் சாதுவனின் கையைத் தொட்டுப் பார்த்தான். மற்றொருவன் அவன் காலைத் தொட்டுப் பார்த்தான். கசாப்புக் கடைக்காரன் சந்தையில் ஆடு வாங்கும் போது அதைப் பரிசோதிப்பது போல அவர்கள் அந்த வணிகனைப் பரிசோதித்தார்கள்.

அவர்கள் ஒருவரோடொருவர் ஆரவாரித்துப் பேசிய பேச்சில் சாதுவன் சிறிது அறிவைச் செலுத்தினான். அது தமிழ் அன்று. ஆனால், அவர்கள் பேசு வதன் கருத்து அவனுக்கு விளங்கியது; யாரோ ஒரு சந்நியாசியிடம் அவன் அந்தப் பாஷையைக் கற்றுக் கொண்டிருந்தான். தன்னுடைய ஞாபகத்தைச் சற்றே கிண்டிப் பார்த்தான். ‘ஆம்; இப்போது ஞாபகத் துக்கு வருகிறது. நமக்கு இந்தப் பாஷையைச் சொல் லித் தந்த பிக்ஷு இது நாகர்கள் பாஷை என்றல்லவோ சொன்னார்? “இந்தப் பாஷையைப் பேசுகிறவர்கள் நிர் வாணிகள்,நரமாமிச பக்ஷிணிகள்” என்று அவர் சொல்லியிருக்கிறாரே!’ இப்படி நினைத்தவுடன் அவன் உடம்பில் ஒரு நடுக்கம் எடுத்தது, ‘கடலுக்கு ஆகாரமாக வேண்டிய நாம் இவர்களுக்கு ஆகாரமாகவேண்டுமென்பது விதிபோலும்’ என்று அவன் எண்ணினான்.

ஆனாலும் அவர்களோடு அவர்கள் பாஷையிலே பேசிப் பார்த்தால் ஏதாவது நன்மை உண்டாகுமோ என்று ஒரு சபலம் தட்டியது. “பெரியவர்களே! நீங்கள் யார்?” என்று மெல்லிய தொனியில் பணிவோடு அவன் கேட்டான்.

பாசி நிறைந்த குளத்தில் கல்லைப் போட்டால் திடீரென்று அந்தப் பாசி விலகிவிடுவதுபோல இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவர்கள் திடீரென்று விலகிக் கொண்டார்கள். மறுபடியும் மொய்த்துக்கொள்ளவில்லை. அவர்கள் முகத்தில் ஆச்சரியக்குறி தோற்றியது. அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள். ‘நம்முடைய பாஷையை இவன் பேசுகிறான்! இவன் யாரோ! இவனைத் துன்புறுத்தக் கூடாது’ என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாயிற்று. தாய் மொழியின் அன்பு அந்தக் காட்டுமிராண்டி ஜனங்களீடத்தில்கூட இருப்பதைச் சாதுவன் அறிந்து வியந்தான். அப்பால் சிறிது கம்பீரமாகவே பேசத் தொடங்கினான்.

“சகோதரர்களே! நீங்கள் யார்?” என்று மறுபடியும் கேட்டான்.

“நாங்கள் இங்கே இருக்கும் நாகர்கள்” என்று விடை வந்தது. அதற்குள் ஒருவருக்கொருவர் ஏதோ பேசலானார்கள். சிறிது நேரங் கழித்து அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன், “நீ எங்களுடன் வா. அவரிடம் அழைத்துப் போகிறோம்” என்றான்.
சாதுவன் அவர்களைப் பின் தொடர்ந்தான். எங்கும் காடுகள், கனி மரங்கள், இடையிடையே எலும்புக் குவியல்கள்; இவைகளைத் தாண்டிக் கொண்டு ஒரு மலைக் குகைக்கு யாவரும் சென்றார்கள். அந்தக் குகையில் ஒரு கரடி தன் மனைவியோடு இருப்பதுபோல நாகர்களுடைய தலைவன் தன் ராணியோடு உட்கார்ந்திருந்தான். அவனை சுற்றிலும் எலும்புக் குவியல்கள் கிடந்தன.

சாதுவன் அந்தத் தலைவனுகு முன் நின்றான். “உங்களைப் பார்ப்பதற்காக என்னை இவர்கள் அழைத்து வந்தார்கள்” என்றான்.

நாகர் தலைவன் சந்தோஷத்தால் பல்லை இளித்துக் கொண்டு இரண்டு முழம் எழும்பிக் குதித்தான். அவன் மனைவி நல்ல ஆகாரம் வந்திருக்கிறதென்று பல்லைத் தீட்டிக்கொண்டாள்.

அந்த நிர்வாண தேசத்தில் அவன்தான் குரு, அவனே அரசன். அவனது ஆணையின்படி அந்த நிர்வாணப் பிராணிகள் சேவகம் புரிந்தன.

சாதுவன் நாக அரசனோடு சிறிது நேரம் பேசினான். அந்தப் பேச்சைக் கேட்பதில் அந்தத் தலைவனுக்கும் மற்றவர்களுக்கும் உண்டான இன்பத்திற்கு எல்லை இல்லை. ‘நாம் தினந்தோறும் இதைப் பேசுகிறோம். ஆனாலும் இவன் பேசும்போது என்ன இனிமையாக இருக்கிறது!” என்று அவர்கள் வியந்தார்கள். சாதுவன் அழகாகக் கருத்துக்களைக் கோத்துப் பேசினான். ” வெட்டு, குத்து, தின்னு, அடி, உதை” என்பவை போன்ற பிரயோகங்களுக்கே உபயோகப்பட்ட அந்த நாகர் பாஷை நாகரிக மனிதன் ஒருவனுடைய கருத்தை வெளியிட உதவும்போது அந்தப் பாஷைக்கே ஒரு தனியழகு உண்டாயிற்று. நாள் முழு வதும் பேசிக்கொண்டிருந்தாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாமென்று தோற்றியது, நிர்வாண தேச அரசனுக்கு. சாதுவன், பாஷையாகிய காந்தத்தால் அந்த நரமாமிச பக்ஷிணிகளின் இருதயத்தைக் கவர்ந்தான்.

”அடே! யார் அங்கே! இவனுக்கு நிறையக் கள் ளும் மாமிசமும் கொடுங்கள். மிகவும் அழகான பெண் ஒருத்தியையும் அளியுங்கள்” என்று உத்தரவிட்டான், நாகர் தலைவன்.

சாதுவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. “அவை எதற்கு?” என்று கேட்டான்.

“எதற்கா? சந்தோஷமாக இருப்பதற்கு!”

“இவைகளால் உடம்புக்குச் சந்தோஷமே ஒழிய உயிருக்கு என்ன சந்தோஷம்?”

“அதென்ன சமாசாரம்? உயிர் வேறு, உடம்பு வேறு என்று உண்டா?”

அவனுக்குச் சாதுவன் மெல்ல மெல்ல உபதேசம் செய்யத் தொடங்கினான். உடம்புக்குள் உயிர் என்ற பொருள் ஒன்று உண்டு என்பதையும், உணவு துயில் முதலியவை மட்டும் மனிதனுக்குப் போதா என்பதையும் உணர்த்தினான்.

“கப்பல் கரை தட்டி வந்த காலத்தில் அந்தக் கப்பலிலுள்ள ஜனங்களைக் கொன்று தின்று வாழும் எங்களுக்கு இந்த உபதேசம் ஒன்றும் விளங்கவில்லையே!” என்று நாகர் தலைவன் சொன்னான்.

”இனிமேல், நரமாமிச பக்ஷணம் செய்வதில்லை என்ற விரதத்தை மாத்திரம் அனுஷ்டியுங்கள். அதுவே போதும்” என்று சாதுவன் உபதேசம் செய்தான்.
அவன் வெறும் பழங்களை மாத்திரம் உண்டு பசி யாறியதைப் பார்த்தபோது நாக சாதியினருக்குப் பெரு வியப்பாக இருந்தது.

எவ்வளவோ கப்பல்களின் பாய்மரங்களும் உடைந்த பகுதிகளும் அந்தத் தீவில் சிதறிக் கிடந்தன. அக் கப்பல்களில் வியாபாரிகள் ஈட்டி வந்த மணியும் பொன்னும் மற்றப் பொருள்களும் நாகரிகமற்ற அந்தத் தீவிலே தீண்டுவாரற்றுக் கிடந்தன. அவைகளை என்ன செய்வதென்பதையே அந்த முரட்டுப் பிராணிகள் அறியார்கள்.

சாதுவன் அந்தக் குவியல்களை மூட்டை கட்டிக் கொண்டான். தினந்தோறும் கடற்கரைக்குப் போய், ‘ஏதாவது கப்பல் வராதா?’ என்று பார்த்துப் பார்த்து ஏங்கி நின்றான். கடைசியில் ஒரு நாள் வந்த கப்பலொன்றைக் கூவி அழைத்து அந்தக் கப்பல் நிறைய மணியையும் பொன்னையும் ஏற்றிக் கொண்டான். நாகர்களின் அரசன் வழி அனுப்பினான்; மீண்டும் வரவேண்டுமென்று உபசரித்தான். சாதுவன் காவிரிப்பூம்பட்டினத்திற்கு ஒரு பெரிய கோடீசுவர னாகத் திரும்பினான்.

நாகர்களுக்கு அவன் செய்த உபதேசம் சில வாரங் களே இருந்தது. அப்புறம் அவர்களுடைய நாக்கு, பழைய பழக்கத்தைப் பிடித்துக் கொண்டது. பழைய படியே அவர்கள் நர மாமிசத்திற்குச் சப்புக் கொட்ட லானார்கள்.

நன்றி: http://www.projectmadurai.org/ 

தொடர்புடைய சிறுகதைகள்
மலையைச் சார்ந்த சிறிய ஊர் அது. அங்கே இயற்கைத் தேவி தன் முழு எழிலோடு வீற்றிருந்தாள். மலையினின்றும் வீழும் அருவி எப்போதும் சலசல வென்று ஒலித் துக்கொண்டே இருக்கும். மலர், காய், கனி ஆகியவற்றுக்குத் குறைவே இல்லை. தினை, சாமை, வரகு ...
மேலும் கதையை படிக்க...
பொழுது போகவில்லை யென்று என் பெட்டியை ஒழித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பெட்டியில் ஒடிந்த நகைகளும் தங்கக் காசுகளும் கிடந்தன. அப்போதுதான் அந்த ஜடைபில்லையைக் கண்டேன். அதை எங்கே வைத்திருந்தேனோ என்று யோசித்துக்கொண்டிருந்தாலும், இந்தப் பெட்டியை மேலே இருந்து இறக்கிப் பார்க்கச் சோம்பல் இடங் ...
மேலும் கதையை படிக்க...
"கல்யாணி, உனக்கு இன்னும் பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகவில்லையா? எவ்வளவு நாழிகை அப்படியே உட்கார்ந்திருப்பாய்? எப்போது குளிக்கிறது, எப்போது சாப்பிடுகிறது?" "இன்றைக்குத்தான் பள்ளிக்கூடம் இல்லையென்று சொன்னேனே, அம்மா. எங்கள் பழைய தலைமை ஆசிரியர் இறந்து போனார். அதற்காக விடுமுறை." "மனிதர்கள் தினமுந்தான் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக ...
மேலும் கதையை படிக்க...
"ஏ அழகு, இத்தனை நேரம் என்ன செய்தாய்? இராத்திரிச் சோறு சமைக்க நேரம் ஆகவில்லையா?" என்றான் மாணிக்கம். அழகு சிரித்தபடியே உள்ளே விரைந்தாள். "என்ன சிரிக்கிறாய்? ஏழாய் விட்டது. இதுவரையிலுமா வேலை இருந்தது." "இல்லை, அப்பா, எனக்குக் கூலி கொடுக்கும் மேஸ்திரி, தனியே பேசவேண்டும் என்றார். ...
மேலும் கதையை படிக்க...
'உங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினால்கூட இவ்வளவு சிரத்தை இருக்காது போல் இருக்கிறது. விழுந்து விழுந்து செய்கிறீர்களே!' என்று வேடிக்கையாகப் பேசினாள் ராஜாராமின் மனைவி. 'ஆமாம். பாவம்! நல்ல பிள்ளை. நம்மை வந்து அண்டினான். குடியும் குடித்தனமுமாக இருப்பதைப் பார்த்துச் சந்தோஷப் படலாமே என்றுதான். ...
மேலும் கதையை படிக்க...
குழலின் குரல்
ஜடை பில்லை
பெண் உரிமை
குளிர்ச்சி
அவள் குறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW