நின்றா கொல்லும்?!!!!!..

 

மாடியிலிருந்து இறங்கும் போதெல்லாம் இரண்டிரெண்டு படிகளாகக் குதிக்கும்,மான்குட்டியாகத் திரிந்த செல்ல மகள் சுமையா, சோர்ந்து கிடப்பதைப் பார்த்துப் பரிதவித்தான் ஹுசைன்.

“ஏண்டீ பாத்திமா,என்னாடி ஆச்சு புள்ளக்கி?சின்ன பெருநாளைக்கு அவ ஐய்யா வீட்டுக்கு போய் வந்ததுலேர்ந்தே பாக்குறேன், சோந்தே கெடக்காளே?”.

அடுக்கலையில் இருந்தே குரல் கொடுத்தாள் ஃபாத்திமா..”தெரியலையேங்க!குப்பியும் மாமுவும் கூட இதையே தான் கேக்குறாக,நானும் எம்புட்டோ கேட்டுப் பாத்துட்டேன், பதிலே சொல்றா இல்ல”…

“வாங்க சாப்புட, உங்க மகளுக்குப் புடிக்குமுண்டு, கத்திரிக்கா, முருங்கக்கா போட்டு கறியானம் காச்சியிருக்கேன்”,என்றபடியே உணவு பரிமாற ஆயத்தங்கள் செய்யலானாள்.

அறைக்குள் சென்ற ஹுசைன், சின்னப் பாயில்,சுருண்டு கிடந்த மகளை அங்கலாய்ப்புடன் அழைத்தான்.

“சுமையா செல்லம், ரெண்டு நாளா ஏண்டா என்னன்டோ கெடக்க? நீ எந்திரிச்சி வருவியாம், அத்தா சோறூட்டி விடுவனாம்?”…பனிரெண்டே வயதான சுமையா செல்லம், சலித்துக் கொண்டே எழுந்தாள்.

“போங்கத்தா!..சும்மா என்ன ஏன் தொல்ல பண்ணுறீங்க?, நான் சாப்ட்டுக்க மாட்டனா?”..

அப்பனும், மகளும் குலவப் பொறுக்காத,ஹுசைனின் தாய் ஜைனப், கத்தக் கிளம்பினாள்.”அதிசயப் புள்ள வளக்குறாக!ஒத்த பொட்டப் புள்ளய பெத்துட்டு பெருமையப் பாரு!கெடுத்து எடுத்து வச்சு மூடுதுக அவளையும்.மதரசாவுக்கு அனுப்பாம பள்ளிக் கூடம் அனுப்புறதும், பாவட தாவணி உடுத்தி விடாம ,சுரிதாரும் முர்தாரும் போட்டு விடுறதும்..என்ன லூட்டி கொளுத்துதுக?அல்லா, ஆட்டுக்கு வால அளந்து தான வச்சிருக்கான்? இதுகளுக்கு மட்டும் ஆம்பளப் புள்ள ஒண்ணு இருந்துச்சின்னா புடிக்க முடியாது பயலையும், சிறுக்கியையும்!…சாப்புட மாட்டேம்பாளாம் மககாரி, கெஞ்சிக் கெதருதுக அப்பனும் ஆத்தாளும்!..பெத்தவரு கெடக்காரு இருமலும் சளியுமா முடியாம,…கேக்க பாக்க நாதியில்ல அவர!அல்லா எங்கள ஏண்டா இந்தப் பொளப்பு பொளைக்க வச்ச?”.

முகத்தத் தூக்கியபடியே இருந்த மகளுக்கு,சோற்றை அள்ளி ஊட்டி விட்டு ,அவசரமாய்த் தானும் இரண்டு வாய் அள்ளி விழுங்கி விட்டு….ஓடினான் தான் நடத்தி வந்த செருப்புக் கடைக்கு.

“இஸ்மாயில் பாய் சாப்புடப் போவணும் பாத்திமா, கல்லாவுக்கு வேற ஆள் இல்ல.புள்ளய கவனிடீ!மெதுவா என்ன விசயம்னு கேளு,ஒங்க அத்தா வீட்டுல, ஒங்கண்ணன் மக எதுவும் புதுசா சைக்கிள், பாவாடண்னு காட்டி புள்ள மனச கஸ்ட்டப்படுத்துச்சோ என்னம்மோ?நமக்கு இருக்குறது ஒரே புள்ள…அது மொகம் வாடிக் கெடக்குறது சங்கடமா இருக்குடீ.ஒனக்கு என்ன வேணும்னாலும் அத்தா வாங்கிக் குடுப்பாகன்னு சொல்லி அது மனச தேத்து,நான் மகரிப்புக்கு அங்கிட்டு சீக்கிரம் கடைய கட்டிட்டு வாரேன்”..என்றுவிட்டு விரைந்தான், மிதிவண்டியில்.

மகள் மீது கணவனுக்கு இருந்த பாசம் கண்டு பூரித்துப் போனாள் ஃபாத்திமா. என்றாலும் மகள் முகம் சற்றும் விடியாதது கண்டு கலக்கமும் அடைந்தாள் வெகுவாகவே! எத்தனையோ தோண்டித் துருவியும் சுமையா அசைந்து கொடுக்காததால் ,மாமியாரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

“குப்பி, சோறு, ஆனமெல்லாம் எசவா எடுத்து வச்சிருக்கேன், நீங்களும் மாமுவும் சாப்புடுங்க. நம்ம அனீசு மகளுக்கு மடி ரொப்புராக .போன வெள்ளிக் கெளம வந்து வீட்டோட விருந்துக்குச் சொல்லிட்டுப் போயிருக்காக. நான் மட்டுமாவது போகலேன்னா நல்லாத்தெரியாது.ஒங்க பேத்தி இன்னைக்கோ, நாளைகோன்னு சமயக் காத்திருக்கா.அப்பறம் நாம நம்ம புள்ளக்கி பூப்போட ஒரு சனம் வராது!செத்த பாத்துக்கிடுங்க நாஞ்சீக்கிரம் வந்துடுறேன்”…என்ற படியே துப்பட்டியை இழுத்துச் செருகிக்கொண்டு கிளம்பினாள் அடுத்த தெருவிலிருந்த அனீசின் வீட்டுக்கு.

மருமகளின் வியாக்கியானம் புரிந்து எரிச்சலோடே எழுந்தாள் கிழவி.”இந்தாங்க, எந்திரிச்சு கொஞ்சம் போல சாப்புட்டு ,இரும மருந்த குடிச்சிட்டு படுங்களேன்”..என்றபடியே கணவரைத் தாங்கி எழுப்பி அமரச் செய்தாள்.வற்புறுத்தி அவரை உண்ண வைத்து விட்டு, தானும் உண்டு, கணவன் உறங்கியபின் சென்றாள், படுத்தே கிடந்த பேத்தியிடம்.

” ஏம்மா,சுமையா எந்திரிடா தாயி, ஏன் என்னம்மோ போல இருக்க? அத்தம்மாட்ட சொல்லுடா”…என்றவளின் குரலைக் கேட்டு பதறி எழுந்த பேத்தியைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.பாட்டியின் மடியில் சாய்ந்து கதறித் தீர்த்தாள் பேத்தி.

“அத்தம்மா ,அத்தம்மா” என்றது தவிர வேறேதும் பேச முடியாது தவித்தாள்.ஏதோ தீர்மானித்துக் கொண்டவளாய் பேத்தியின் முதுகைத் தடவியவபடியே அமைதியாய் இருந்தாள் ஜைனப்.பேத்தி முழுவதுமாய் அழுது தீர்த்ததும் சிறிது தண்ணீர் அருந்தச் செய்து ஆசுவாசப் படுத்தினாள்.

பிறகு மெதுவான குரலில் கேட்டாள் “சொல்லுடாம்மா,எதுவாயிருந்தாலும் அத்தம்மாட்ட சொல்லு. அத்தா,அம்மா ரெண்டு பேருமே இல்ல. நான் பாத்துக்குறேன்…சொல்லு!ஒங்க ஐய்யா வீட்டுல ஒன்ன யாரும் திட்டுனாகளா, வஞ்சாகளா?சொல்லுமா?”…

பாட்டியிடம் கொட்டினாலாவது தன் பாரம் குறையும் என்ற எண்ணத்தில் மெதுவாகப் பேசலானாள் சுமையா.

“இல்லத்தம்மா, பெருநாளக்கி மொத நா ராத்திரி நானும் ஜாகிரா மச்சியும் மருதாணி வச்சுக்கிட்டே மாடியில கத பேசிக்கிட்டு கெடந்தமா? அப்பிடியே தூங்கிட்டேன் போல ,நடுராத்தியில என்னமோ போல இருக்கேன்னு முழிச்சிப் பாத்தேன்…அப்ப “மாமு….மாமு ….”என்றவள் மேற்கொண்டு சொன்ன வார்த்தைகளைக் கேட்டு உயிர் துடித்துப் போனாள்கிழவி.அல்லல்லா!..இதுக்காடாஒன்வீட்டுக்கு எம்பேத்தியஅனுப்பி வச்சேன்?உன்னையெல்லாம் அல்லா கேக்க மாட்டானா?” என்று அழுது அரற்றத் துவங்கியவள்..,வாயிலில் பேயறைந்தவனாக வந்து நின்ற மகனின் முகம் பார்த்து வாயடைத்துப் போனாள்.

கல்லாச்சாவியை மறந்தவனாய்க் கடைக்குச் சென்று திரும்பிய ஹுசைன், மகள் பேசிய செய்தி கேட்டு ஆடிப் போனான். நிற்க முடியாமல், கால்கள் மடங்கி பொத்தென்று பாயில் அமர்ந்து, முகத்தை இறுக மூடியவனின் கண்களில்…. சில வருடங்களுக்கு முன் தன் வீட்டுக்குச் சீராடவென, மான் குட்டி போல் துள்ளியவாறு வந்து, துவண்டு போய் ஊர் திரும்பிய தன் அண்ணன் மகள் ஹாஜிராவின் உருவம் முள்ளாய்க் குத்தியது!!!!!

- “அவள் விகடன்” நடத்திய கதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை.  

தொடர்புடைய சிறுகதைகள்
பஸ்ஸுக்காக நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தேன். இந்த அவினாசி சாலையில் நிறைய பஸ்கள் வரும், ஆனால் எதுவுமே நாம் எதிர் பார்க்கும் நேரம் வராது. பொதுவாக காலை வேலைக்கு போகும் நேரம் 8மணி முதல் 9மணி வரையிலும் வேலைமுடிந்து போகும் மாலை 6 ...
மேலும் கதையை படிக்க...
“இன்னைக்கு நான் ரெண்டுல ஒன்னு கேக்குறதே சரி!” கடுப்பின் உச்சத்தில் இருந்த எனக்கு, கற்று வைத்திருந்த யோகப் பயிற்சியும் வேலை செய்யவில்லை; ப்ளட் ப்ரஷர் மாத்திரையும் வேலை செய்யவில்லை. பொட்டில் நரப்புப் பொட்டலங்களில் சுண்டக் காய்ச்சின ரத்தம் அழுத்ததைக் கொடுக்க அதைத் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு வார்த்தைக்காக….
சதாசிவத்துக்கு நாளை பணி ஓய்வு. முப்பத்தாறு ஆண்டு காலம் சுற்றிச் சுற்றி வந்த அலுவலகம் இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்தில் அன்னியமாகிவிடப் போகிறது. எது எப்படிப் போனாலும் காரில் பத்து மணிக்கெல்லாம் போய் அலுவலக இருக்கையில் அமர்ந்து விட வேண்டும் என்பதற்காக ஓடின ...
மேலும் கதையை படிக்க...
தன் முதலாளியை நினைத்து ஏமாற்றமாக இருந்தது குமாருக்கு. போட்டிக்கு பல சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்ட ஏரியாவில் அவர்களுடையது ஒரு பலசரக்கு கடை. கல்லாவில் உட்கார்ந்து கடைக்கு வருபவர்களிடம் சிரித்தமுகத்துடன் பேசி மரியாதையாக நடத்துவார் முதலாளி. அப்படிப்பட்டவர் தன் மகளுக்குத் திருமணம் நடத்தும் இந்த சமயத்தில், ...
மேலும் கதையை படிக்க...
இந்தப் பள்ளியில் சேர்ந்து இரண்டு நாள்கள்தான் ஆகியிருந்தது. இதற்கு முன்பு வேலை செய்த பள்ளியின் உயர்ந்த, நீண்ட கட்டிடங்களும், அகன்று, விரிந்து, பரந்த மைதானமும், தழைத்து வளர்ந்த மரங்களும் நினைவிலாடிற்று. முழுவதும் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியாதலால் சூழ்நிலை எனக்கு வித்தியாச-மாய் இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
நடத்துனர்
உடைந்த மூக்கில் இன்னொரு அரசியல்
ஒரு வார்த்தைக்காக….
மரியாதை – ஒரு பக்க கதை
காற்றுள்ள பந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)