நானும் இந்தியன்

 

“தேவையில்லாமல் நம்ம நேரத்தை உறிஞ்சி எடுத்துக்கிற எந்த ஒரு விசயத்திலேயும் ஆர்வம் இல்லை தம்பி” புதுசா எங்க அபார்ட்மென்ட்ஸ்ல குடிவந்து இருக்கும் மோகனிடம் சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தைப் பற்றி பேச ஆரம்பித்தபோது, தனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லை என்பதை அவர் நாசுக்காக சொன்னதை நான் புரிந்து கொண்டு..

“நான் கிரிக்கெட் பத்தி பேசல சார், அந்த Racial abuse அப்படிங்கிற கம்ப்லைண்ட் ஜீரணிக்க முடியல, How can an Indian be a racist, இதை நம்ம கிரிக்கெட் போர்டு சும்மா விட்டுடக்கூடாது, வாபஸ் வாங்கலேன்னா திரும்ப வந்துடனும் ”

என்ன ஆளு இவர் எவ்வளவு பெரிய நாட்டோட தன்மானம் பத்தின ஒரு விசயம் சொல்லிட்டு இருக்கேன். கூலா சிரிச்சுட்டு வேற டாபிக் மாத்தினார்.

“தம்பி, நம்ம அபார்ட்மென்ட்ஸ் ல ஒரு லைப்ரரி ஸ்டார்ட் பண்ணா என்ன? என்னிடம் நிறைய புத்தகங்கள் இருக்கு ..பல துறைகள் சம்பந்தபட்ட புத்தகங்கள், ”

“குட் ஐடியா சார், நானும் நிறைய புக்ஸ் சும்மா வாங்கி வச்சு இருக்கேன், படிக்காம அலமாரில தூங்குது, ஈவ்னிங் செக்ரட்டரிக்கிட்ட இதைப்பத்தி பேசுவோம்”

மோகன் ரிடையர்டு ரயில்வே அதிகாரியான அவரின் ஒரே பொண்ணு அமெரிக்கால எம் எஸ் பண்ணுவதையும். சிட்டிக்குள் இருக்க வேண்டும் என்று போரூரில் இருக்கும் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு இந்த சிங்கிள் பெட்ரூம் பிலாட்ஸுக்கு வாடகைக்கு வந்திருப்பதையும் அவருடனான அடுத்த சில நிமிட உரையாடலில் தெரிந்து கொண்டேன்.

வீட்டுக்கு வந்ததும் ரம்யாகிட்ட “ரம்யா, புதுசா வந்திருக்கிற மோகன் ரொம்ப நைஸ் பெர்சனா இருக்காரு… ”

“ஆமாம் கார்த்தி, அவங்க மிஸஸ்கிட்ட கூட பேசினேன், சாஃப்டா பேசினாங்க, ஜக்கிவாசுதேவ், வேதாத்திரி என ஆன்மிக ஈடுபாடு நிறைய இருக்கு”

ரம்யாவிற்கு “ம்ம்ம்” கொட்டிக்கொண்டே டீவியில் “பூந்தென்றலே நீ பாடிவா” பாடலை பிரபுவும் லிசியும் பாடிக்கொண்டிருந்த சேனலை CNN-IBN க்கு மாற்றினேன்.

FlashNews : India stays in Sydney என ஓடிக்கொண்டிருந்தது..

“ஏ ரம்யா இங்கே பாரு, நம்ம போர்டு இப்போதான் ஒரு உருப்படியான காரியம் பண்ணி இருக்கு, டூரை டெம்பரவரியா சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க, குரங்கு மாதிரிதானே அவன் இருக்கான், குரங்கை குரங்குன்னு தானே சொல்லனும்… இவனுங்க மட்டும் குடும்பத்தை திட்டுவானுங்க..திரும்ப திட்டினா ரேசிசமா?!!!”

“கார்த்தி, உனக்கு கிரிக்கெட்டைத்தவிர வேற நினைப்பு இல்லியா, அந்த பாட்டை வை… நல்ல சாங்,”

திரும்ப அந்த பாட்டு சேனலில் வைத்துவிட்டு, “கிரிக்கெட் மட்டும் பொண்ண இருந்ததுன்னா உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு கிரிக்கெட்டை கல்யாணம் பண்ணி இருப்பேன் ரம்யா, சரி அஞ்சலிப்பாப்பா எங்கே”

“கீழே வாட்ச்மேன் பொண்ணோட விளையாடிட்டு இருக்கா”

“எத்தனை தடவை சொல்லி இருக்கேன், அங்க விளையாட அனுப்பாதேன்னு, ஏற்கனவே பாரு கையாண்ட , காலாண்ட, இட்டுக்கினு அப்படி எல்லாம் தமிழ் பேசுறா, டிஸ்கஸ்டிங்…” கடுகடுப்புடன் கீழேபோய் அஞ்சலியைக்கூட்டிட்டு மேலே வந்தேன். வரும்பொழுது, விளையாட்டைப் பாதியில் கலைத்து கூப்பிட்டு வந்த வருத்தத்தில் முகம் வாடிப்போயிருந்த அஞ்சலிப்பாப்பாவிடம்

“குட்டிமா, அங்க போய் எல்லாம் இனிமே விளையாடக்கூடாது சரியா!!! நீ சஞ்சய், காயத்ரி கூட மட்டும்தான் விளையாடபோகனும் ”

அஞ்சலிப்பாப்பாவை சமாதனப்படுத்தி தூங்கவைப்பதற்குள் போதுபோதும் என ஆகிவிட்டது.

அன்றிரவு ரம்யாவிடம் “ரம்யா, மோகன் பேமிலி என்ன ஆளுங்க? எனி ஐடியா?”

“ஆமா,பேசுறவங்ககிட்ட கேஸ்ட் கேட்டுட்டா பேசமுடியும், புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் நல்ல கலரா இருக்காங்க, சைவம் வேற, பிராமினா இருக்கலாம்”

“பிராமின் சான்சே இல்லை, நான் காலைல அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்ப முண்டா பணியன் தான் போட்டிருந்தார், சைவ பிள்ளையா இருக்கலாம்”

“கார்த்தி, ஒரு டவுட் நான் வேற ஜாதியா இருந்தா என்னை லவ் பண்ணி கழட்டி விட்டிருப்பியா?”

“இல்லடி செல்லம், நீ வேற ஜாதியா இருந்திருந்தா நான் உன்னை புரோபஸ் பண்ணியே இருக்க மாட்டேன்”

முறைத்துவிட்டு தன் வேலையைப்பார்க்கப்போனவளை உதாசீனப்படுத்திவிட்டு டீவியில் மூழ்கலானேன்.

ஒரு வாரம் கழித்து மோகன் அவரது வீட்டிற்கு அழைத்திருந்தார். வரவேற்பறையிலேயே அம்பேத்கார், பெரியார் படங்களை மாட்டி வைத்திருந்தார். அவருடைய புத்தகக்கலெக்ஷனைப் பார்த்தபோது பிரமிப்பாகத்தான் இருந்தது.
ஆனால் பெரும்பாலான புத்தகங்கள் தலித் முன்னேற்றம் , அவர்களின் பிரச்சினைகள் அவர்கள் சம்பந்தப்பட்ட இலக்கியங்கள் என்பனவாகவே இருந்தன. முக்கியத் தலித் தலைவரும் அவரும் நெருங்கிய சொந்தம் என்பதை அந்த தலைவருடன் மோகன் எடுத்துக்கொண்ட போட்டொவை சுட்டிக்காட்டியபோது சொன்னார். பிலாட் செக்ரடரி யிடம் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது அஞ்சலிப்பாப்பாவும் ரம்யாவும் ஸ்வீட் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

“ஏது ரம்யா ஸ்வீட், ”

“மிஸஸ் மோகன் கொண்டு வந்து கொடுத்தாங்க, அவங்க பொண்ணுக்கு பெர்த்டேவாம், அதுக்காக ஸ்வீட் செஞ்சாங்களாம்”

“ம்ம்ம்… சரி சரி…. இந்த ஸ்வீட்டை வேலைக்காரிக்கிட்ட கொடுத்திடு, நிறைய புள்ளைங்க அவங்க வீட்டுல ..பாவம் சாப்பிடட்டும்..” என ரம்யாவிடம் அதட்டலாகச் சொல்லி அஞ்சலிப்பாப்பாவை தூக்கி” நாமேல்லா ஈவ்னிங் பீச் போறோமாம், அப்படியே டின்னர் போறோமாம்” பாப்பாவின் கையில் இருந்த ஸ்வீட்டை குப்பையில் போட்டு டீவி ரிமோட்டை ஆன் செய்தேன்.

“வாவ், ரம்யா இங்க பாரு, ரேசியல் அப்யூஸ் ப்ரூவ் ஆகல, மாரல் விக்டரி பார் இண்டியன்ஸ்”

இந்தியாவோ இந்தியர்களோ எக்காலத்திலும் ரேசிஸ்டுகளாக இருக்க வாய்ப்பே இல்லை. இந்தியாவின் பாரம்பரியம் அப்படி, வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தாரக மந்திரம் . இது இந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி என முன்பு ஒருமுறை மேட்ச் பிக்ஸிங்கில் சிக்கி தப்பித்த ஒரு கிரிக்கெட்டர் ஆங்கிலத்தில் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லிக்கொண்டிருந்ததை நான் பெருமிதத்துடன் கேட்டுக்கொண்டே, வேலைக்காரியிடம் அந்த ஸ்வீட் பாக்ஸை கொடுத்துவிட்டாளா என்பதையும் ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டிருந்தேன்.

- பெப்ரவரி 07, 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
வெள்ளிக்கிழமை இரவு ஆதலால் என்னுடைய அறை நண்பர்கள் கார்ல்ஸ்க்ரோனா நகர இரவுக் கொண்டாட்டங்களுக்குச் சென்றுவிட்டார்கள். தனிமைதான் மனிதனின் முதல் எதிரி. பழைய சோகம் , புதிய மகிழ்ச்சி என எதைப்பற்றியும் யோசிக்காமல் தூங்க முயற்சித்தாலும் வரவில்லை. கண்ணாடி சன்னல் வழியே வெளியே ...
மேலும் கதையை படிக்க...
“கார்த்தி, டுமர்ரோ நதொ கார்ல்ஸ்க்ரோனா சர்ச்சுக்கு வஸ்தாவா?” இப்படி கேட்டது வாசுகிரெட்டி. பழைய காதல்களில் ஒன்று இந்நாளைய காதலியின் மூலம் நினைவுப்படுத்தப்படும் பொழுது , அதுவும் எந்த விசயத்திற்காக விலகினோமோ அதே விசயத்தின் வாயிலாக ஞாபகப்படுத்தப்பட்டால் கொஞ்சம் அசூயையாகவே இருக்கும். ஆந்திரா பழைய முதலமைச்சர் ...
மேலும் கதையை படிக்க...
பனிக்காலம் ஆரம்பித்துவிட்டது என்பதை காது மடல்களில் உரசிய வாடைக்காற்று உணர்த்தியது. நேற்றைப்போலவே இன்றும் லின்ட்புலோம்ஸ்வேகன் போக பேருந்திற்காக 8.45 மணி வரை காத்திருக்க வேண்டும், ரயிலை விட்டு இறங்கி நேராக பயணியர் காத்திருப்பு அறைக்குப் போனபோது அங்கு ஏற்கனவே போன வாரம் ...
மேலும் கதையை படிக்க...
பொய்யாக நான் உருவாக்கிய கதைகளை நம்பி என்னைத் திருமணம் செய்து கொண்ட கீர்த்தனாவிற்கு இன்று பிறந்த நாள். இதே செப்டம்பர் 4 ஆம் தேதி அன்றுதான் கீர்த்தனாவிடம் 7 வருடங்களுக்கு முன்னர் என் விருப்பத்தை முதன்முறையாகச் சொல்லி நிராகரிக்கப்பட்டேன். என் காதலை ...
மேலும் கதையை படிக்க...
மாணவர் விடுதியின் வரவேற்பறையில் இருந்த பொறுப்பாளர் மக்டலீனாவிடம் என் அறையின் சாவியைக் கொடுத்த பின்னர் , தலைக்கு மேலே படத்தில் இருந்தபடி சிரித்து கொண்டிருந்த நல்ல மேய்ப்பாளன் இயேசுவைப் பார்த்து நானும் புன்னகைத்துவிட்டு அருகில் இருந்த மளிகைக்கடைக்கு நடக்கலானேன். இத்தாலி வந்து இரண்டு வாரங்கள் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு தொலைபேசி அழைப்பு
அல்லேலூயா
சில சிணுங்கல்கள், ஒரு ஈரானியப்பெண் மற்றும் நான்
கனவுகள் மெய்ப்படும்
கறி வாங்க உதவிய கடவுள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)