நாடி ஜோஸ்யம்

 

சுமார் முப்பது வருடங்களுக்கு முன், நான் அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் மானேஜ்மென்டில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

அப்போது என்னுடன் வேலை செய்யும் என் நெருங்கிய நண்பன் அருணாச்சலம் என் வீட்டிற்கு வருகை தந்தான். பேச்சினிடையே வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோஸ்யம் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசினான்.

பின்பு திடீரென “நம் நண்பர்கள் ஐந்து பேராகச் சேர்ந்து வரும் சனிக்கிழமை நவஜீவன் எக்ஸ்பிரஸில் மெட்ராஸ் வரை சென்று அங்கிருந்து இன்னொரு ரயிலில் வைத்தீஸ்வரன் கோயில் சென்று ஸ்வாமி தரிசனம் முடிந்ததும் அப்படியே ஜாலியாக நாடி ஜோசியம் பார்த்துவிட்டு வரலாம்.. திங்கட்கிழமை காம்ப் ஆப் எடுத்துக் கொள்ளலாம்…” என்றான்.

அருணாச்சலம் எப்போதும் ஜாலியாகப் பேசக்கூடியவன். நகைச்சுவை உணர்வு அவனிடம் அதிகம்.

நண்பர்களுடன் ஜாலியாகப் பயணிப்பதால் நானும் “சரி” என்றேன்.

அதன்படியே சனிக்கிழமை காலை நான், அருணாச்சலம்; ஜெயராமன்; ராஜூ மற்றும் சிவா ஆகியோர் கிளம்பினோம். அனைவரும் ஐஐஎம்மில் ஒன்றாக வேலை செய்கிறோம்.

எங்கள் திட்டத்தின் படியே ஞாயிறு காலையில் கோயிலுக்குச் சென்று வைத்தீஸ்வரன் மற்றும் தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்துவிட்டு அருகேயிருந்த ஹோட்டலில் டிபன் சாப்பிட்டோம்.

அதன்பிறகு நாடி ஜோஸ்யம் பார்ப்பதற்காக ஒரு பழைய காலத்து விஸ்தாரமான வீட்டின் முன் போய் நின்றோம். வாசலில் வெயிலுக்காக பெரிய பந்தல் போடப் பட்டிருந்தது. உள்ளே ஏற்கனவே பத்துபேர் நாடி ஜோஸ்யம் பார்க்கக் காத்திருந்தார்கள்.

எங்களைப் பார்த்ததும் ஒருவர் உள்ளே இருந்து ஓடோடி வந்து வீட்டினுள் அழைத்துச் சென்றார். உள்ளே சென்று அமர்ந்துகொண்டு காத்திருந்தோம்.

ஹால் சுவற்றில் சிவாஜி, ஜெமினி போன்ற அந்தக் காலத்து நடிகர்கள் ஜோசியருடன் சிரித்தபடி போஸ் கொடுத்தார்கள். மிகப் பிரபலமான நாடி ஜோதிடர் போலும்.

சற்று நேரத்தில் நெற்றியில் ஏராளமான வீபூதியுடன் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் அங்கு பிரசன்னமானார். “முதலில் வந்தது யாரு?” என்று அங்கு இருந்தவர்களைப் பார்த்து மையமாக வினவினார்.

இரண்டு பேர் கையைத் தூக்கினர். அவர்களைத் தன் அருகில் அமரச் செய்தார். அவரருகே ஸ்டெனோ போன்று ஒருவர் அமர்ந்தார். ஒரு சாய்வு மேஜையில் பத்து நாற்பது பக்க நோட்டுப் புத்தகங்களும் கையில் பெரிய பேனாவும் வைத்திருந்தார்.

ஜோஸியர் வந்தவரின் வலது கட்டைவிரல் ரேகையை ஒரு நோட்டுப் புத்தகத்தில் பதித்தார். அந்த ஸ்டெனோ அதை எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்று அடுத்த நிமிடம் கையில் சில ஓலைகளை எடுத்து வந்து ஜோசியரிடம் கொடுக்க, அவர் அதில் ஒன்றைத் தேடி எடுத்து, கட கடவென பாட்டு வடிவில் வேகமாகச் சொல்ல, அதை அந்த ஸ்டெனோ தரையில் அமர்ந்து சாய்வு மேஜையில் நோட்டுப் புத்தகத்தை வைத்து எழுதிக்கொண்டே வந்தார்.

வந்தவர்கள் அந்த நோட்டுப் புத்தகங்களை பணம் கொடுத்துவிட்டு சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போனார்கள்.

எங்கள் முறை வந்தபோது அரைமணி நேரம் முடிந்து விட்டது.

எங்கள் ஐவரின் பெயரையும் தனித்தனி சீட்டில் எழுதச் சொன்னார். சீட்டைப் பார்த்து, “இதுல யாரு அருணாச்சலம்?” என்றார்.

அருண் கையைத் தூக்கி ஆமோதித்தான்.

“இன்று உங்கள் முறை. நீங்கதான் இன்று எல்லோருக்கும் சுடச் சுட ஆமை வடை வாங்கித் தர வேண்டும்…” அவர் சொன்னதற்கு அருண் மறுப்பே சொல்லவில்லை. நாடி ஜோஸ்யம் பார்த்தாக வேண்டுமே? (அப்புறம்தான் தெரிந்தது, இது அவரோட சைடு பிஸினஸ் என்று).

என் நண்பர்கள் நால்வரையும் பார்த்து முடிந்தபின் என்முறை வந்தது. என் கட்டை விரல் ரேகையைப் பார்த்து, “இது கும்ப வெள்ளி முச்சுடர் ரேகை… உங்கள் பெயர் கிருஷ்ண பரமாத்மாவின் நாமம், சரியா?” என்றார்.

அவர் சொன்ன உண்மை என்னை அவரிடம் அதிகம் ஈடுபடுத்தியது.

“உங்களுக்கு இரண்டு கிரகம் உச்சம். வாய்த்த மனைவியின் பெயர் கல்விக்கு அதிபதியான வீணை வாசிப்பில் ஈடுபாடுடைய அம்மனின் பெயர்…” இதுவரை அவர் சொன்னதெல்லாம் உண்மைதான்… .

ஆனால் இதன் பிறகு அவர் சொன்னதெல்லாம் கொஞ்சம் புருடா. .

கடைசியில் சொன்னாரே ஒரு வார்த்தை… “உங்களுக்கு கூடிய சீக்கிரம் நாலு கால் ஊர்தி கிடைக்கப் போகிறது.”

என்கூட வந்த நண்பர்கள் அனைவரும் பயங்கரமாக நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர். தட்சிணையை கொடுத்துவிட்டு வெளியே வந்து அனைவரும் விலா நோக வாய் விட்டுச் சிரித்தோம்.

ஏனென்றால் அப்போது என் மாதச் சம்பளமே எழநூறுதான். ஓ.டி செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி, மஞ்சள் தாளில் மாதா மாதம் கையெழுத்து வாங்கி மொத்தம் ஆயிரம் ரூபாய் தேற்றி விடுவேன். என்னுடைய ‘யோக்கியதை’ என்னுடன் வேலை செய்யும் என் நண்பர்களுக்குத் தெரியாதா என்ன? அதனால்தான் இந்தச் சிரிப்பு.

அருண் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து கிண்டலாக, “டேய் கண்ணா, எங்களையும் உன் காரில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்டு கூட்டிட்டுப்போய் காண்பிடா…” என்றான்.

ஜெயராமன், “உனக்கு கார் ஓட்டத் தெரியுமாடா?”

ராஜு, “இதுக்கு முன்னால கார்லயாச்சும் போயிருக்கியா?”

சிவா, “நீ அம்பாசடர் காரைத் தவிர வேறு எதயாவது அட்லீஸ்ட் பாத்திருக்கியா?”

ஒரே கிண்டலும் சிரிப்புமாக நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடித்து அனைவரும் அகமதாபாத் திரும்பிப் போய்ச் சேர்ந்தோம்.

ஆபீஸில் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அருண், “நாலுகால் ஊர்தியில் எப்படா எங்களைக் கூட்டிட்டு போகப்போறே?” என்று ஜோக்கடிப்பான்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் குளிக்கும்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்ததுதான் தெரியும்.

கண் விழித்தபோது ஹாஸ்பிடலில் இருந்தேன். வலது காலில் தொடை வரைக்கும் பெரிய கட்டுப் போட்டிருந்தார்கள். நண்பர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். டாக்டர், “ஹேர் லைன் ப்ராக்ச்சர்… இரண்டு மாதங்கள் கண்டிப்பாக ரெஸ்டில் இருக்க வேண்டும்…” என்றார்.

அருண் நையாண்டியாக “இவன் ஆபீஸிலேயே எப்பவும் ரெஸ்ட்லதான் இருப்பான் டாக்டர்…” என்று தமிழில் சொல்ல, அந்த குஜராத்தி டாக்டர் ‘ங்கே’ என்று முழித்தார்.

எனக்கு திடீரென்று கவலை வந்தது… மறுநாள் மாலை டிஸ்சார்ஜ் ஆகப்போகும் நான் எப்படி வீட்டுக்குப் போவேன்? வீட்டில் எப்படிச் சமாளிப்பேன்? வீட்டிலிருந்து எப்படி வெளியே வருவேன்?

மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகியவுடன், என்னருகே ஒரு அழகான புதிய வீல்சேர் வந்து நின்றது.

என்னுடன் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்த நான்கு நண்பர்களும் தங்கள் சொந்தப் பணத்தைப் போட்டு வாங்கி எனக்கு அன்பளிப்பாக கொடுத்த ‘வீல்சேர்’.

ராஜு என்னிடம் இந்த விவரத்தைச் சொன்னபோது என் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

அன்று சிரிப்பாய்ச் சிரித்த அவர்கள் இன்றும் விட்டுக் கொடுக்காமல் “நாடி ஜோஸ்யர் சொன்ன மாதிரியே உனக்கு நாலுகால் ஊர்தி வந்திருக்கிறது பாரடா..” என்று சொல்லிச் சிரித்தனர்.

புதிய வீல்சேரின் நான்கு சக்கரமும் என்னைப் பார்த்துச் சிரித்தன… 

தொடர்புடைய சிறுகதைகள்
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மணிவண்ணனைப் பிடிக்காதது சுகந்திக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. வங்கியில் தன்னுடன் வேலைசெய்யும் அவனை கடந்த இரண்டு வருடங்களாகக் காதலிக்கிறாள். அவனுக்கு போனவாரம் மதுரையிலிருந்து சென்னைக்கு ப்ரமோஷனுடன் டிரான்ஸ்பர் ஆகிவிட்டது. சென்னை செல்லும்முன் அவனை வீட்டிற்கு ஒருமுறை அழைத்துவந்து தன் பெற்றோர்களிடம் ...
மேலும் கதையை படிக்க...
செந்தில்குமாருக்கு வயது ஐம்பத்தி ஒன்பது. கடந்த மார்ச் மாதம்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பெங்களூரில் வசிக்கிறார். மிகவும் வசதியானவர். இந்த வயதிலும் துடிப்பானவர். கற்பனை வளத்துடன்கூடிய, ரசனை உணர்வுகள் அவரிடம் அதிகம். குளிப்பது, வக்கணையாகச் சாப்பிடுவது, விதவிதமாக அயல்நாட்டு மதுவகைகளை ருசிப்பது, ...
மேலும் கதையை படிக்க...
என்னுடைய பெயர் சங்கமித்திரை. வயது முப்பத்தியாறு. சென்னையில் மாநில அரசுப் பணியில் இருக்கிறேன். அன்று நான் அலுவலகத்தில் இருந்தபோது மதியம் பள்ளிச் சீருடையில் என்னை வந்து பார்த்த அந்தப் பெண்ணுக்கு பதின்மூன்று வயது இருக்கும். “என் பள்ளித் தோழி உங்களோடு பேச வேண்டுமாம். ...
மேலும் கதையை படிக்க...
இரவு எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ரகுராமன், மிகுந்த சோர்வுடன் வீட்டின் காலிங் பெல்லை அமுக்கினார். கதவைத் திறந்த அவர் மனைவி வசுமதியின் முகம் வாடி இருப்பதை எளிதில் புரிந்துகோண்டு, "என்ன வசு, இன்னிக்கு ரொம்ப டல்லா இருக்க... முகத்துல சுரத்தே ...
மேலும் கதையை படிக்க...
நாரைக்கிணறு, மணியாச்சியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். அந்த ஊர் தண்ணீர் வறட்சிக்குப் பிரபலம். நிஜமாகவே அந்த ஊரில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காது. ஒவ்வொரு பானைத் தண்ணீருக்கும் ஊரின் பெண்கள் குடத்தைத் தூக்கிக்கொண்டு நான்கு கிலோமீட்டர்கள் சென்று ...
மேலும் கதையை படிக்க...
சுகந்தியின் காதல்
பரத்தை உபதேசம்
பூப்பு
தண்ணீர்
சாப வறட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)