நாடகங்கள் தொடரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 7,791 
 

பாரிஸ்- 1997

இடம்-

உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற மேற்கு நாட்டின் தலைநகரமொன்றின் பெருவீதி. காதலுக்கும்,மனிதனின் நுண்ணிய உணர்வுகளின் பரிணாமத்தை விளக்கவும் மிகவும் சிறந்ததென்ற ஒரு மொழியைத் தனதாக்கிக்கொண்டதுமான நகரமிது. உலகிலுள்ள எந்த மூலையிலுள்ள கலைஞரென்றாலும், தன் வாழ்க்கையில் ஒரு தடவையாவது தரிசிக்கவேண்டும் என்று தவிக்கும் தாபத்தைக் கொடுக்கும் கட்டிடக்கலையில்,பெயர் பெற்றது. காதலர்களின் சொர்க்க பூமி என்று பரவசமாகப் பேசப்படும் நகரமது.

இரண்டாம் உலக யுத்தத்தில்,ஹிட்லரால் மேற்கொண்ட முற்றுகையில் அழிவு நேராமல்,மறைத்து வைக்கப் பட்ட அதியற்புத ஓவியங்களை,சிலைகளை,கலைப்படைப்புக்களை, இன்று உலகின் எண்ணிக்கையற்ற கலாரசிகர்கள் ரசிப்பதற்காகப் பல கண்காட்சிச் சாலைகளைக் கொண்ட அற்புத நகரமது.

நாகரீகத்தின் உச்சியில் நடமாடும்,பெண்களின் நவீன வெளிப்பாட்டை புதுமை விரும்பிகளின் கண்களுக்கு பொங்கல் விருந்து வைக்கும் நவநாகரிகப் பட்டணமது.

நேரம்-

வசந்த காலத்தில் ஒரு பின்னேரம். மலர்கள் பூத்துக்குலங்க,மங்கையர்; சிரித்தாட,ஆடவர்கள் அந்த அழகில் திளைத்திருக்க,குழந்தைகள் இளம் சூட்டில் அம்மணமாய் விளையாட,முதியோர்,தமது எஞ்சிய நாட்களை இதமாக அனுபவிக்கும் வசந்தகாலம்.

அந்த சந்தி நிறைந்த பனனாட்டுச் சனங்களால் நிறைந்த இடம்;, அடுத்தவன் எந்த உலகத்தின் மூலையிலிருந்து வந்திருக்கிறான் என்பதை,என்ன துயரை மறைக்க இப்படிக் குடித்துக் ;கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பாத, மேற்கத்தியர் சேர்ந்து குடிக்கும் ஒரு மதுபானக் கடையைச்சுற்றிய மாலை நேரமது.

மக்களின் சிரிப்பில்,துயரில்,காதலில்,கோபத்தில்,சிருங்காரத்தில்,சீரழிவில்,ஒரு மாற்றத்தையும் காட்டாமல், எப்போதும்போல் தன் மெல்லலைகளை மிதமாகத் தவழவிடும் பிரசித்தி பெற்ற ‘செயின்’ நதியை அண்டி நடந்து எத்தனையோபேர் துயர் மறக்கும் நேரமது.

பின்னேர ஆதவனின் முகத்தில் அவன, ;பூமிக்காதலி,தன் குங்குமத்தைத் தடவியோ என்னவோ அவன் சிவப்பாகத் தெரிகிறான்.அவனைச் சுற்றிய மேகம் பருத்தி மூட்டைகளை அவிழ்த்து விட்டுப் பேரம் பேச அந்த மூட்டைகள்,; காற்றால் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டு நாலாபக்கமும் ஓடும் நேரமது.

மேடையலங்காரம்-

நாடகம் நடக்கப் போகுமிடம் நடுச்சந்தி என்பதால்,அதைச் சுற்றிய எத்தனையோ’மதுபானக்’ கடைகள்தான் மிகவும் அலங்காரமாக இருந்தன. ஏனென்றால்,அந்த மதுக்கடைகள்,உலகில் பல பாகங்களிலிலுமிருந்து வரும் மக்களின் வண்ண வண்ண ஆடைகள் மாலைநேர மங்குவெயிலிற்; பள பளப்பதை வானவில்லின் வர்ணங்களாக, மதுபானக் கடைகளின் விளக்குகள் உலகுக்குப் பிரதிபலிப்பவை.

உயர்ந்தெழுந்த கட்டியங்கள்,அந்தக் கட்டிடங்களின் நடுவே பாம்பாக நெழிந்தோடும் ‘செயின்’ நதி,இடைவிடாமல் அந்த நதியில் பவனிவரும், படாடோபமாக அலங்கரிக்கப்பட்ட உயர்ந்த வகைப் படகுகள். மேடையைச் சுற்றிக் கிடக்கும் தெருக்களில் மின்னல் வேகத்தில் பறக்கும் மோட்டார்கள். அந்தத் தெருக்களில்,மெல் நடையிற் செல்வோர் ,அவசரத்துடன் ஓடுபவர் சிலர்,ஆறுதலாக உலகை ரசித்துக்கொண்டு அன்ன நடைபோடும் பலர் எத்தனையோ விதமான மனிதர்களால் அம்மேடையின் பல பக்கங்கள் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன.

ஓலியமைப்பு-

குழந்தையின் சிரிப்பு,குமரிகளின் நகைப்பு,’குடிமகன்களின்’ கும்மாளம், வாலிபர்களின் முறுக்கல்கள்.முதியோரின் முனகல்கள்,நதியின் நாததாளம், தென்றலின் இனிய கிசுகிசுப்பு.

மோட்டார் வாகனங்களின் மூர்க்கமான சத்தம்,மேகத்தைத் தொட்டோடும் விமானங்களின் உறுமல்கள்.

ஓளியமைப்பு-

பூமித்தாயின் மடியில் முகம் புதைக்கும்,சூரியக் குழந்தையின் தங்க நிறம்,உயர்ந்த மாளிகைகளில் ஏற்றப்படும்,மின்சார விளக்குகளின் கண்சிமிட்டு, மோட்டார்களின் கண்களைக் குருடாக்கும் வெளிச்சங்கள்.

பாத்திரங்கள்-

ஆஹா, எத்தனைபேர்?

முக்கிய பாத்திரம் என்று யாரைச் சொல்வது?

அதோ ,அந்தச் சந்தியின் நடுவில்,நாலைந்து ஆண்களுக்கு நடுவில்- துரியோதனன் சபையில் துகிலுரியப்பட அழைத்து வந்த திரவுபதிபோல் பரிதாபமாக நிற்கிறாளே அந்தப் பெண்ணா இந்கு தொடரும் நாடகத்தின் முக்கிய பாத்திரம்? அல்லது துச்சாதனன் மாதிரி அவளின் கன்னத்தில பளாரென்று முரட்டுத் தனமாக அறைகிறானே அவனா முக்கிய பாத்திரம்? அல்லது……

துரியோதனன் சபையில் அவன் போடும் சாப்பாட்டுக்காக.வாய் திறவாமல் மௌன சாட்சிகளாக ஒரு பெண்ணின் அலறலைச் செவி மடுத்தபடி இருந்த முதியோர்,படித்தோர்,பணபுள்ளோர்,அறிவாளர்,உற்றார், உறவினர்போல் அந்தச் சந்தியைச் சுற்றி நிற்கிறார்களே புலம் பெயர்ந்த தமிழர்களுமல்லவா முக்கிய பாத்திரங்கள்

அதெப்படி,மற்றவர்கள்,அதாவது சந்தியைச் சுற்றியுள்ள, மதுக்கடைகளில்,காப்பி, தேனிர்க்கடைகளில்,அமர்ந்து இந்த நாட்டுக்கூத்தை அதிசயமாகப் பார்க்கிறார்களே பல மொழிகள்,பல நிறங்களுடைய அந்நியர்கள் அவர்களுமன்றோ இந்த நாட்டுக்கூத்தின் அல்லது நாடகத்தின் உப பாத்திரங்கள்?

நாடகம்-

கண்ணீரும் கம்பலையுமாக நடுச்சந்தியில்,நிற்கும் அந்தத் தமிழ்ப்பெண்,(பொட்டுவைத்திருந்தாள்) முகத்தில் களையில்லை.கறுப்புப் பாவாடையும் வெள்ளை நிறச் சட்டையும் போட்டு ஒரு பழுப்பு நிறக் கோர்ட்டும் அணிந்திருந்தாள்.கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி,

‘தனியாக வந்த என்னிட்ட என்ன சண்டித்தனம் காட்டுறியள்?’ இப்படிக் கேட்கும்போது அவள் குரல் சோகத்தாலும் கோபத்தாலும் தடுமாறியது.

துச்சாதனன் மாதிரியிருந்தவன்,’ ஏனடி தனியா வாறதெண்டு மாயாஜாலக் கதை கதைக்கிறாய்? உன்ர கள்ளப் புருஷனைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே. கட்டிய புருஷன விட்டிட்டுக் கள்ளப் புருஷன் பார்க்கிறவளுக்கு தனியாப்போகும்போது மட்டுமல்லை, நாலு பேரோட இருக்கும்போதும் அடுத்தவன் வந்து சண்டித்தனம் மட்டுமில்ல உன்ர சட்டை சேலையையும் தொட்டுப்பார்ப்பான். உன்னை மாதிரித் தமிழ்ப் பெண்களை உயிரோடு எரிக்கவேணும்’

அம்மம்மா..அவன் சொல்வதை ஆயிரக் கணக்கான வருடங்களாக எங்கள் ஆண்கள் செய்து வருகிறார்கள்தானே,ஏன் இவன் புதிதாதக ஒரு அறிவித்தலை பாரிஸ் நகரச் சந்தியில் விடுகிறான்?

வண்ணான் சொன்ன கதை கேட்டு இராமன் சீதையைத் தீயில் இறக்கவில்லையா? (அந்தச் செய்கை ஒரு ஹியுமன் றைட் வயலேசன் என்று சத்தம் போட அம்னஸ்டி இன்ரர்நாசனல் அப்போது இருக்கவில்லையே)

அம்மாக்களும் பிள்ளைகளுமாய் சேர்ந்துதான்,இந்தியாவில் ஒரு வருடத்தில் எத்தனையோ இளம் பெண்களைச் சீதனக்கொடுமையால் தீய்க்குப் பலி கொடுக்கிறார்கள் இவன் என்ன புதிதாக நெருப்பிற்போட்டுப் பெண்களை எரிப்பதாகச் சொல்கிறான்?

இவன் சொன்னதை ரசித்து ஓரமாய் நின்றிருந்த ஒரு மீசைக்காரன் ஆரவாரமாகச் சிரித்தான்.அவன்,

‘எங்கள் இனம்,முன்தோன்றி மூத்த தமிழ் இனம் என்று அகப்பட்ட மேடையெல்லாம் ஏறி முட்டாள்த்தனமாக முழங்கித் தள்ளுபவன்

‘டேய் முட்டாளே, கல் தோன்றாக் காலத்தே என்ன வென்று எந்த உயிரினமும் தோன்றியிருக்கும்?’ என்று அவனின் முட்டாள்ப் பேச்சைக் கேட்கும் எந்த முட்டாள்களும் கேள்வி கேட்பதில்லை.

நவின விஞ்ஞானம் வளாந்து,செவ்வாய்க் கிரகத்தில் மசாலா தோசை செய்யுமளவுக்கு மனிதர் வளர்ந்து கொண்டிருக்கம்போது,எங்கள் சில தமிழர்களின் மர மண்டையில் ஒரு துளியாவது பொது அறிவு புகவில்லையா?

சார்ல்ஸ் டார்வின் என்றொரு ஆங்கிலேயன் உயிரியல் வளர்ச்சியைப் பற்றி எழுதினானே,அவனிடம்போய் நீங்கள்,கல்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த இனம் என்று புலம்பினால்,அவன் சிரித்திருக்க மாட்டானா?

இந்தத் தமிழரிடம் (ஆண்களிடம்) யார் இந்தக்கேள்விகளைக் கேட்கப்போகிறார்கள்?

எனவே அந்த மீசைக்காரனின் சிரிப்பை ஆமோதிப்பதுபோல் ஒரு சில பெண்கள் அவனை மரியாதையாகப் பார்த்தார்கள்.

அவர்கள் கல் என்றாலும் புருஷன் புல் என்றாலும் புருஷன் என்ற தத்துவத்தைக் கடைப் பிடிப்பவர்களாகவிருக்கலாம்.

அந்தத் தத்துவத்தைத் தாரக மந்திரமாக நினைக்கவென்றும்,அந்த நியதியின்படி வாழவென்றும்; வளர்க்கப் பட்ட இந்த முட்டாள் மனுஷிகளுக்கு கல்லையும் புல்லையும் தவிர பொதறிவுள்ள மனிதர் யாரும் புருஷனாகக் கிடைப்பார்களா?

ஏனென்றால், இந்தப் பெண்கள்,அந்த மீசைக்காரனின் கூற்றை ஆமோதிக்கும்இவர்கள்,உண்மையாகவே பெண்மையின் பலத்தை, தாற்பரியத்தை தன்மானத்தை உணர்ந்தவர்களென்றால்,இந்தச் சந்தியில் இந்த வெறிபிடித்த நாலைந்து மனிதர்களிடையே தனியாக அகப்பட்டு,கவலைப்பட்டுக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாகவிருக்கும் அந்தப் பெண்ணுக்காகப் பரிதாப்பட்டுக் குரல் கொடுக்க மாட்டார்களா?

எங்கேயோ,தூரத்தில்,நின்ற ஒரு தமிழ் இளைஞன் இந்தக்கூத்தை வெறுப்புடன் பார்த்து,தர்மசங்கடப்பட்டுக்கொண்டு நின்றான்.

அவன் அந்த அபலைப்பெண்ணின் சொந்தக்காரனாகவிருக்கலாம்.அல்லது அந்தத் துரியோதனர் கூட்டம் குற்றம் சாட்டும்,அவளுடைய ‘கள்ளப்புருஷனாக’விருக்கலாம்(??).

(அவள் ,நீண்டகாலமாக அவளுடைய கணவனைப் பிரிந்துவிட்டு,இன்னொருத்தனுடன் பகிரங்கமாக வாழ்கிறாள் அவன் எப்படி ‘கள்ளப் புருஷனாக முடியும்?)

அல்லது,இந்த வாலிபன், பலகாலங்களுக்கு முன் பாரிசுக்கு வந்து இங்கு படித்து வளர்ந்தவனாக இருக்கலாம். மேற்கு நாட்டுப்படிப்பின் அறிவுத் தாக்கத்தில்,மனிதர்களின் பண்பை,வாழ்க்கை நியதியில் சரி பிழைகளை ஓரளவு அறிந்தவனாக,புரிந்தவனாக இருக்கலாம்.இந்தக் கூத்து அருவருப்பானது என்று அவன் கருதுவது அவனது முகபாவத்திலிருந்து தெரிகிறது.

ஓரு சில நிமிட நேரத்தில் பெரிய கூட்டம் சேரத்; தொடங்கிவிட்டது. அக்கம் பக்கமெல்லாம பல தமிழ்க்கடைகள் இருப்பதால்,பாவற்காய்,புடலங்காய்,புழுக்கொடியல் போன்றவற்றைக்(யாழ்ப்பாணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை),காவிக்கொண்டு,அங்கு நடக்கும் நாடகத்தைக் காசு கொடுக்காமற் பார்க்க ஒரு திரண்ட கூட்டப் பார்வையாளர்கள் கூடியிருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் தற்போது கம்பங்களில் ஏற்றப்படும் நவின யேசுக்களை (தமிழ்த் துரோகிகளை) கண்டு; தரிசித்த பழக்கமாகவிருக்கலாம். நாடகத்தைத் தர்மசங்கடத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் வாலிபனுக்குப் பக்கத்தில்,அருகிலிருந்த தமிழ்ப் புத்தகக் கடையிலிருந்து வந்த ஒன்றிரண்டு இளைஞர்கள் வந்து நின்றார்கள்.

‘என்னடா மச்சான் நடக்குது?’ கொக்கோ கோலாவை உறிஞ்சியபடி ஒருத்தன் கேட்டான்.

‘அந்தப் பெட்டையை இந்த நாய்கள் அடிக்கிறான்கள்’ ஒரு பெண்ணைப் பலபோர் சேர்ந்து கொண்டு வதைப்பதையும் அடிப்பதையும் பார்த்து அருவருப்பு பட்ட முற்போக்கு முணுமுணுத்தது.

‘ தனியா வந்த பெண்புள்ளையை ஏன் அடிக்கிறான்கள்?’ புத்தகக் கடையிலிருந்து வந்த ஒருத்தன் கேட்டான்.

‘அந்தப் பெட்டை தன்ர புருஷனை விட்டிட்டு இன்னொருத்தனோட இருக்காளாம்’ (மேற்கு நாடுகளிற் சர்வ சாதாரணம்)

‘பப்ளிக்கில வச்சுப் பொம்புளய அடிக்கிறவர் அவளோட புருஷனோ?’

‘இல்ல’

‘அப்படி எண்டால் வாடகைக்கு ஆள் வச்சோ அடிக்கினம்?’

”இல்ல அடிக்கிறது அந்த பெண்ணுடைய கணவரின் சினேகிதன்’

கேள்வி கேட்டவன் இந்த மறுமொழியைக் கேட்டதும் திடுக்கிட்டு விட்டான்.

‘ஏன் அவளின்ர புருஷனுக்கு இல்லாத கோபம் இவருக்கு?’

‘ஓடிப்போன இவளின்ர முகத்தில முழிக்க மாட்டன் என்டு அவளின்ர புருஷன் சொல்லிப் போட்டாராம்’

‘அதுகாக,வாடகைக்கு ஆள்வைத்து அவளுக்கு அடிபோடுராறா?’

‘இல்ல,வெளிநாடுகளில் வாழுற தமிழ்ப் பெண்கள் முறை கெட்டு நடந்தால் அவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கத் தமிழ் உணர்வு கொண்ட கொஞ்சம் தமிழர் வெளிக்கிட்டிருக்கினமாம்.அவையில ஒன்றிரண்டுபேர்தான் இப்ப அவளுக்கு ஆக்கினை குடுக்கினம்’

‘என்ன பாடம்,தனியாக றோட்டில வந்த பொம்புளயக் கொண்டு வந்து நடுச்சந்திய வச்சு நாலு சனம் சிரிக்க அடிக்கிறதோ நியாயம்?’

‘அப்போதுதான்,இப்படியான பெண்கள்; கவனமாக இருப்பினம்,எங்கட கலாச்சாரத்த மறக்காம இருப்பினம்’

‘எங்களப் பற்றி இந்தப் பிரன்ஞ்சுக்காரன் என்ன நினைப்பான்?’;

‘என்ன நினைப்பான்? இவ்வளவு நாளும் காசு உழைக்க வந்த கறுப்பன்கள்,வியாதி பரப்புகின்ற வெளிநாட்டான்,கள்ளம் பண்ணுகிற ஆசியன் என்றெல்லாம் சொல்கிறவர்கள்,இப்போது.தங்கட பெண்களை நடுச்சந்தியில வச்சு நாய்மாதிரி நடத்துற காட்டுமிராண்டிகள் என்றும் சொல்லுவான்கள்’

தங்கள் தமிழ் இனத்தை ஒரு காட்டுமிராண்டி இனமாகக் காட்டுவதைக்கண்ட அங்கலாய்ப்பு அவன் குரலில் விரக்தியாக ஒலித்தது.

‘சும்மா சோகப் படாதே மச்சான்,எங்கட காப்பியங்களப் படிச்ச வெள்ளைக்காரன்கள், பாரிசில் ஒரு தமிழ்ப் பெண்ணைப் பலர் வதைப்பதை உணர்ந்து கொள்வார்கள்’

இன்னொரு புத்தகப்பூச்சி முணுமுணுத்ததது

‘ஏனடா அப்படிச் சொல்கிறாய்?’தங்கள்’கலாச்சாரம்’ தாழ்வு படுவதைச் சகிக்காத ஆத்திரம் அந்தக் குரலில்

‘அந்தக் காலத்தில ஐந்து புருஷன்மாரும்,பார்த்திருக்க நடுச்சபையில் அந்தப் புருஷன்களின்ர பொஞ்சாதி திரௌபதியைத் துரியோதனனின் தம்பி துகிலுரிந்தது இதிகாசமாக வணங்கப்படுகிறது.

இந்தக்காலத்தில,ஒரு ஊரே சேர்ந்து பூலாந்தேவியைப் பாலியல் பலாத்காரம் செய்தழித்தது சினிமாப் படமாக்கப் பட்டு விட்டது. இந்த பொம்புளயின்ர விஷயமும்,நாளைக்கு இந்த நாட்டு வெள்ளைக்காரன்ர பேப்பரில ஒரு சின்ன விடயமாகப் போகும்’

‘இப்படி நடுறோட்டில நாகரீகமில்லாம நடக்கிறவன்களின்ர நடத்தையப் பார்க்க நாக்கப் புடுங்கிக்கொண்டு சாகவேணும்போல இருக்கு?’முற்போக்குக் கூட்டம்(??) பொருமியது.

‘அது ஆரடா மச்சான் ஒருத்தன், அந்தப் பெண்ணின் முகத்தில காறித்துப்புறவன்?’

‘இந்த நீலச் சோர்ட்போட்ட மெல்லிய ஆளோ? அவர் ஒரு தமிழ்ப் பண்புவாதி.

-தெய்வம் தொழாள்,கணவனைத் தொழுதெழுவாள் பெய்யெனப்பெய்யும் மழை-என்று திருக்குறள் சொன்ன மாதிரித் தன்பெண்டாட்டி வாழ்வதாகப் புழுகிக் கொண்டு திரியிறவர் அவர்’

‘என்னடா மச்சான் உன்ர குரலில கிண்டல் வழியுது?’

‘அந்தத் தமிழ்ப் பண்புவாதியின்ர பெண்டாட்டி,பின்னேரங்களில ஒரு பார்ட்ரைம் வேலை செய்கிறா,அவவோட வேலை செய்கிற ஒரு சினேகிதரின்ர காரில போயிட்டு வர்றா.

எட்டு மணிக்குத் தொடங்குற வேலைக்கு ஆறமணிக்கே வெளிகிடுவா.மணக்க மணக்க வாசனைத் தைலங்களைப பூசிக்கொண்டு.இரண்டு மணித்தியாலம் முந்தி ஏன் வேலைக்குப் போகிறாய் என்று கேள்வி கேட்க வக்கில்லாதவர்,இன்டைக்குச் சந்தியில வந்து நிண்டுகொண்டு அடுத்தவன் பொஞ்சாதியின்ர நடத்தை பற்றிக் கொதிக்கிறார்’.

‘சும்மா இரு மச்சான்.கிளினிங் வேலைக்குப் போகேக்க யாரும் காரில லிப்ட் குடுத்தா நரம்பில்லாத நாக்கால இப்படி நாலையும் பேசக்கூடாது’

‘தன் தலையில மலத்தை வைத்துக்கொண்டு, அடுத்தவன் நாறுகிறான் என்று குற்றம் சாட்டுவது தப்பு’

”மச்சான், மச்சான்,அதோ ஒருத்தன் சிவப்புச் சேர்ட்டோட நின்று அவளைத் திட்டுகிறானே அந்த மெல்லிய மனிதன்; யார்?’

‘ஓ அவரோ, அவருக்கு உலகத்துப் பெண்கள் எல்லோரிலுமே கோபம். அவரின்ர மனைவி இவரின் அடிதாங்காம அண்ணன் வீட்ட போயிருக்கா.அண்ணன்மார் இரண்டுபேரும் சேர்ந்து இவருக்கு மாட்டடி கொடுத்திற்றினம். அவளும் இவர விடாம,கோர்ட்டுக்கு எடுத்துப் பிள்ளைச் செலவு கேட்டுப் பிடுங்கிக் கொண்டிருக்கிறாள். பிள்ளையளும், இவர் தங்கட தாய்க்கு அடித்த அடியைப் பார்த்த பயத்தில இவரப் பார்க்க மாட்டம் என்று சொல்லி விட்டார்கள்.இவருக்கு உலகத்துத் தாய்க்குலத்திலேயே ஆத்திரம்.இப்ப இவருக்குத் தன்ர மனைவியை அடிக்கமுடியாது.அதுதான் அடுத்தவன் மனைவியை நடுத்தெருவில வைத்து அடிக்கிறத ரசிக்கிறார்’.

‘என்ன கேவலம் மச்சான். நாட்டை விட்டோடி வந்து,அந்நிய நாட்டுச் சந்தியில் இப்படி நடக்கிறம்’

‘நாய்வாலை நிமிர்த்த முடியாது மச்சான்.எங்கட தமிழாக்களின்ர பழக்க வழக்கங்களை யாரும் மாத்த முடியாது. ஆரை எண்டாலும்,கையாலயோ வாயாலயோ,பேனையாலயோ அடிக்காட்டா எங்கட ஆண்களுக்குத் திருப்தி வராது’

‘என்னடா மச்சான் ஒரு பெண் தனியா வந்தா பல ஆண்கள் றோட்டில வைத்து அடிப்பதும் வதைப்பதும் ஆண்மையா?’

‘உண்மையாக, ஆண்மையுள்ளவன்,பெண்களுக்கு மட்டுமல்ல பெலவீனமான ஆண்களுக்கும் அடிக்க மாட்டான்.மனநோய் பிடித்த பேடிகள்தான் அந்த வேலையைச் செய்வார்கள்’

‘இவ்வளவு நேரம் இந்தக் கூத்து நடக்குது,ஒரு பொலிஸ்காரனையும் காணல்ல’

‘சுற்றி நிற்பதெல்லாம் தமிழாக்கள். போலிசுக்குப் போன் பண்ணாமப் புதினம் பார்க்கினம்.’

‘ஒவ்வொரு நாளும் வீட்டில விலர் நடத்துகிற நாடகத்தை இண்டைக்கு வெளியில நடத்துகினம். அதை மற்றவர்கள் புதினம் பார்க்கினம்’

அடிவாங்கிய பெண்ணின் அழுகையும் ஆத்திரக் குரலும், பக்கத்துப் பூங்காவில் போதையிலிருந்த,பல நாடுகளைச் சேர்ந்த,வேலை வெட்டியற்ற ‘குடி’மகன்களின் நெஞசங்;களை உலுக்கியதோ என்னவோ,ஓரிருவர் நாடகம் நடக்குமிடத்தை நோக்கி ஓடிவந்தார்கள்.

அதே நேரம், அந்த வழியால் காரில் வந்த ஒரு பிரன்சுப் பெண்ணும் ஒரு இளைஞனும் காரை விட்டிறங்கி வந்தார்கள்.

அழுத கண்ணுடன்,வீங்கிய கன்னங்களுடன் பல ஆண்களுக்கு நடுவில் நிற்கும் அந்தப் பெண்ணின் நிலை அங்கு வந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணுக்கு விளங்கியிருக்கவெண்டும்.

‘இது என்னு அநாகரீமான செயல். உடனடியாக நீங்கள் போகாவிட்டால் போலிசைக் கூப்பிடுவேன்’ அந்த வெள்ளைக்காரி நின்றிருந்த தமிழ் ஆண்மைகளைத் திட்டியது.

‘ஆமாம், உங்கள் தரவழி ஒர நாளைக்கு ஒருத்தனோட படுக்கிறவர்கள்,இப்படிப் பொம்புளயளுக்குத்தானே பரிந்து பேசுவீர்கள்’

தமிழக் கலாச்சாரம் பற்றி அடிக்கடி மேடையில் பேசுபவர் அதிர்ந்தார். அவர் அடிக்கடி பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் பற்றி மனமுருகப்பேசுவார்.ஒரு தமிழ்ப் பெண்ணின் கடமையை (ஆண்களுக்குத் தொண்டு செய்து திருப்தியடைவது),ஆணித்தரமாக அடித்துப்பேசுவார்.குடும்ப உறவுகளின் புனிதம் பற்றிப் பல உதாரணங்களுடன் விளக்குவார்;.பெண்மையின் புனிதம் ஆண்களின் மனதை நோகாமல் வைத்திருப்பது என்பதைப் பலமேடைகளில் வலுவுறுத்துவார்;.

அவருக்கு இந்த வெள்ளைக்காரப் பெண் இடையிற் புகுந்து தங்கள் வேலையைக் குழப்புவது ஆத்திரத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்.

‘இது ஒரு குடும்ப உறவு பற்றியது’ என்று பிரன்சு மொழியில் அந்த வெள்ளைக்காரிகச் சொன்னான்.

‘குடும்ப உறவுகள் சரியாயிருந்தால் ஏன் மச்சான் அது இந்த றோட்டில அடிபடுது?@

‘குடும்பம் ஒருகோயில் என்பதெல்லாம் உண்மையா மச்சான்?’ கொக்கோ கோலா குடித்துக்கொண்டு நின்றவன் குழந்தை மாதிரிக் கேள்வி கேட்டான்.

‘உலகத்துச் சண்டைகள் எல்லாம், பலமுள்ள நாடு; தங்கள் அரசியல் பலத்தைக் காட்ட ஒருத்தருடன் மோதிக் கொள்வதுபோல்,குடும்பத்திலும், ஆண்கள் தங்கள் வலிமையைக் காட்ட வன்முறையைக் காட்டும்போது குடும்பத்தில் பிரச்சினை வரும். குடும்பம் என்பதே ஒரு அரசியல் சதுராட்டம்தான்’ முறபோக்கு விளக்கியது.

‘அரசியலைக் குழப்பும் ஆண்களெல்லாம் இப்படியான குடும்பத்திலிருந்து வந்தவர்களா?’

‘ என்ன மச்சான் இப்படிக் கேடகிறாய்? எங்கள் சமுதாயத்தில் அடுத்தவனுக்குக் கொடுக்கும் அன்பும் மரியாதையும்தானே யாழ்ப்பாணப் பெரிய கடைகளிலும் கம்பங்களிலும் தொங்கிற துரோகிப் பிணங்களில பிரதி பலிக்குதே’

‘அப்படியான,குழப்பமான வரலாறுகளோட உள்ள குடும்பங்களில இருந்து இந்தப் பெண் பிரிந்து போனால் அதற்கேன் அந்தப் பெண்ணை அடிக்கிறான்கள்?’

‘அவள் செய்ததை-அதாவது பிடிக்காத திருமணத்திலிருந்து பிரிந்துபோவது சரியென்பதை ஒப்;புக்கொண்டால், தங்கட மனைவிமார் ஓடிவிடுவினம் என்ற பயம்தான்.’

‘இலங்கையில இப்படி நடக்கிறதில்லையா,பெண்கள் பிரிந்து போவதில்லையா?’ சின்ன வயதில் பாரிஸ் வந்த இளைஞன் கேட்டான்.

‘பிடிக்காத திருமணங்களில் இருந்து பிரிந்துபோக யாரும் உதவி செய்தால், இலங்கையில மட்டுமல்ல உலகத்தின் பல பாகங்களிலுமிருந்து எத்தனையோ பெண்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிடுவார்கள்’

தூரத்தில் போலிஸ் கார் சத்தம் கேட்டது. நடுச்சந்தியில் தனியாக வந்த தமிழ்ப் பெண்ணுக்கு ‘நியாயம்’ வழங்கிக்கொண்டிருந்த தமிழர்கள் மூலைக்கு ஒருத்தராய்ச் சிதறிப் பறந்தார்கள்.

அவிழ்ந்த தலைமயிரும்,வழிந்த கண்ணீருடனும் அழுதுகொண்டிருந்த தமிழ்ப் பெண்ணை அந்த பிரன்சிய ஆணும் பெண்ணும் அரவணைத்துக்கொண்டார்கள்.

போலிசார் வந்தார்கள்.

அவளை விசாரித்தார்கள். தன்னை நடுத் தெருவில் இப்படிச் செய்தவர்கள் அத்தனைபேரையும் அவளுக்குத் தெரியும்,ஆனாலும், தன்னை அடித்த மனிதர்களை தான் ஒருநாளும் முன்பின் கண்டதில்லை என்றாள்.

தான் உண்மை சொன்னால்,தனக்கும் தனது குடும்பத்திற்கும் என்ன நடக்கும் என்று அவளுக்குத் தெரியும்

‘நான் அவர்களைப் படம் எடுத்திருக்கிறேன்’ பிரன்சிய இளைஞன் ஆத்திரத்துடன் சொன்னான்.

அவனக்குத் தெரியாது,அடித்தவர்களிற் பலர் இரவோடிரவாக இன்னுமொரு நாட்டுக்கு ஓடிவிடுவார்கள்.

இதே இடத்தில் இந்த அழகிய பட்டணத்தில், இந்த நடுமேடையில் இப்படி ஒரு நாடகம் அடுத்த கிழமை தொடரலாம். இன்னொரு தமிழ்ப் பெண்ணுக்கு ‘நியாயம்’ வழங்கப் படலாம்.

இலங்கையில் இப்படிச் செய்த பல வேலைகள் இன்று ‘இன்டநாஷனல்’ லெவலுக்கு வந்து விட்டன!.

(யாவம் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *