நல்ல நிலத்தில் நடவு செய்வோம்

 

“தேவராஜ்…நில்லுங்க.!”அவசரமாக அழைத்த குரலில் அந்தநாள் ஞாபகம்.

திரும்பிப்பார்த்தால் கோலப்பொடி கிண்ணத்தை ஓரமாக வைத்துவிட்டு ,முந்தானையில் கையைத்துடைத்தபடியே எதிர்பட்டாள் வேணி..சகவயது தோழி.

“நல்லாயிருக்கீங்களா தேவா?எங்கே இந்தப்பக்கம்?”

“சவுகரியம்தான் …இது”பெட்டிக்கடை வாசலில் தொங்கிய வாசகஅட்டையை கவனித்தபடியே கேட்டேன்.

“இது எங்களோட கடைதான் தேவா..இதை ஆரம்பித்து ரெண்டு மாசம்தான் ஆச்சு”என்றபடியே குளிர்பான புட்டியை நீட்டினாள்.

“அப்போ உன் கணவர் திவாகர் என்ன பண்றார்?கல்யாணத்தின் போது ஏதோ வெல்டிங் ஒர்க் ஷாப் வச்சிருக்கறதா கேள்விப்பட்டேனே.?”என்றேன்.

“வச்சிருந்தாரு தான்..கெட்ட சகவாசம் அதுஇதுன்னு அடிமையாகிப்போய் கடைசியில சூதாட்ட அகழியில விழுந்துட்டாரு..வெல்டிங் மிஷின்லேயிருந்து வெத்து இரும்பு வரைக்கும் எல்லாத்தையும் வித்து சூதாடியாச்சு..இப்ப வேறொரு ஆளுகிட்ட கூலிக்கு வேலை பார்க்கறார்.

அதுல கூட பத்துப்பைசா குடும்பத்துக்குன்னு கொடுக்கறதில்லை..அதனால நானே மகளிர் சுய உதவிக்குழுவுல லோன் வாங்கி இந்த பெட்டிக்கடையை ஆரம்பிச்சிருக்கேன். ஏதோ கொஞ்சம் வருமானம் கிடைக்குது..அதை வச்சு குடும்பத்தை ஓட்டறேன்”என்றாள்.

“கிடைக்கிற சொற்ப வருமானத்துல ‘புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது’ன்னு போர்டு வச்சிருக்கியே இது எப்படி சாத்தியம் வேணி?”அனுதாபம் மேலிட கேட்டேன்.

“போதாதுதான் தேவா.!ஆனா பக்கத்து வீட்ல புருசன் பொண்டாட்டி,மகன்னு மூனு பேரும் தையல்காரங்க..பக்கத்து கிராமங்களுக்கெல்லாம் போய் துணிகளை வாங்கிகிட்டு வந்து தைத்து கொடுப்பாங்க..அந்த துணிகளுக்கு பட்டன்கள் தைத்தும்..’எம்மிங்’வேலைகளும் செய்தும் கொடுப்பேன்.அதுல நாளைக்கு அம்பது ரூபா கிடைக்குது.

அதிகப்படியா அம்பது ரூவா கிடைக்கும்போது ஏன் ஒரு நல்லக்காரியம் செய்யக்கூடாதுன்னு தோணிச்சு.!”என்றாள்.

அப்போது சினிமா போஸ்டர் ஒட்டும் தோரணையோடு வந்தவர் சைக்கிளை நிறுத்தினார்.

அவரது கையில் சுருட்டப்பட்ட வண்ண காலண்டர் போன்ற அட்டை.

“இந்தாங்கம்மா…’பிரைஸ் அட்டை’எண்பது ரூவா கொடுங்க …நூத்திஅம்பது ரூவாய்க்கு விற்கலாம்..லாபம் எழுவது ரூவா”என்றபடியே கைப்பையை துழாவினார்.

குறுக்கெழுத்து புதிர் போல காட்சியளித்த அந்த காகிதம்…பிரைஸ் அட்டையின் புளுபிரிண்ட் என்பது தெளிவாக விளங்கியது…அதில் எதையோ பார்த்து பரிசுக்கூப்பன் அட்டையிலிருந்து ஒரு வில்லையை பிய்த்து எடுத்து வேணியிடம் தந்தவர் சொன்னார்

“இந்தாங்கம்மா…இது போனஸ்..’485_ம் நம்பருக்கு நூறுரூபா பிரைஸ்.இதை எடுத்தாச்சு என்கிற உண்மை நம்ம ரெண்டு பேரோட இருக்கனும்..இதை வச்சுத்தான் மொத்த கூப்பன்களையும் வித்தாகனும்”என்றபடியே பணத்தைப்பெற்றுக்கொண்டு நகர்ந்தார்.

“இந்த இடத்துல இது நல்லா வியாபாரம் ஆகுது தேவா.!..ஸ்கூல் பசங்க அதிர்ஷ்டத்தை தேடுறதில் ரொம்ப ஆர்வமாகிடறாங்க..கொஞ்ச நேரத்துல பாரேன் இனிப்பை மொய்க்குற ஈக்கூட்டம் மாதிரி ஓடி வருவாங்க.!”என்றாள்.

அவளின் வார்த்தையை மெய்ப்பிப்பது போல ஒவ்வொரு குழுவாக சிறுவர்கள் வருவதும் பரிசு வில்லைகளை ஆர்வமாக வாங்கி பிரிப்பதும்,கோமாளி உருவத்தை பார்த்து குதூகலிக்கும் குழந்தை மனம் … மாறாக கோமாளி சித்திரத்தை பார்த்து முகம் சுருங்கி ஏமாற்றத்தோடு திருப்புவதுமாக இங்கே விநோத நாடகம் அரங்கேறியபடியே இருந்தது.

அங்கு வந்து அதிஷ்டத்தை தேடிய பத்து பதினைந்து சிறுவர்களில் ஒருவனுக்கு மட்டும் ஐந்து ரூபாய் பரிசு கிடைத்தது.!..அதையும் வேணி..மூன்று ரூபாய்க்கு பரிசுக்கூப்பனும்..ரெண்டு சாக்லெட்டுமாக கொடுத்து அனுப்பிவிட்டு…’எப்படி என் வியாபார பு[யு]த்தி ‘என்பது போல என்னைப்பார்த்தாள்.

தூரத்தில் ஐந்து ரூபாய் பரிசு வென்ற சிறுவன் ஆனந்ததாண்டவம் ஆடியபடியே சென்றான்.திண்பண்டங்களுக்காக கொண்டுவந்த காசை அதிஷ்டகூப்பன்களில் தொலைத்துவிட்டு வெறுங்கையோடு திரும்பிய சிறுவர்கள் அவனை மொய்த்துக்கொண்டு ‘காக்காய்கடி’மிட்டாய்க்காக ஆளாய் பறந்தனர்.

“ஏன் வேணி..உன் புருசன் ஊதாரியா சீட்டாடி பணத்தை தொலைச்சிட்டு வந்து நிக்கறதுல உனக்கு சந்தோஷமா.?துக்கமா.?”

“என்ன தேவா..கேள்வி இது…இதுக்குபோய் சந்தோசப்படவா முடியும்..ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கறேன்..தெரியுமா.?”

“அப்ப…ஒரு திவாகரால ஒரு வேணி கஷ்டப்படறது போதாது…ஊரு பூரா திவாகருங்க உருவாகி …உன்னை மாதிரி நிறைய வேணிகள் கண்ணை கசக்கிகிட்டு போராட்ட வாழ்க்கையில உழலனும் இல்லியா வேணி.?!”

“என்ன சொல்ற தேவா.?!”

“இதோ…இந்த பரிசுக்கூப்பன் விக்கிறியே அதைத்தான் சொல்றேன்..வியாபார உத்தியை மட்டுமே கவனிச்ச நீ அந்த குழந்தைகளோட முகத்துல வெளிப்படற உணர்ச்சிகளை கவனிக்கல”

“திண்பண்டங்கள் வாங்க கொண்டுவந்த காசை இதுல விட்டுட்டு..இன்னொரு பையன்கிட்ட மிட்டாய்க்கு கையேந்தறான் ஒருத்தன்…வேறொருத்தன் கடன் கேட்கறான்…இயலாமையும்,குருட்டு அதிஷ்டம்ங்கற பேராசையும் ஏன் இந்த குழந்தைகளை திருடனாகக்கூட மாத்தாது…நினைச்சு பார்த்தியா.?”

“எனக்கென்னவோ..இப்படிதான் திவாகரும் சூதாட்டகாரனா மாறியிருக்கனும்னு தோணுது வர்றேன்..வேணி..”என்றபடியே நடந்தேன்.

இரண்டடி நடப்பதற்குள் காகிதம் எரியும் நெடி நாசியைத்தீண்டியது..இனி வேணி கூடுதலாக பத்து துணிகளுக்கு எம்மிங் செய்து வருமான இழப்பை சமன் செய்துகொள்வாள் என்ற நினைவோடு நடந்தேன்.

- ஏப்ரல்10_16, 2009 

தொடர்புடைய சிறுகதைகள்
'ஆற்றங்கரை மேட்டினிலே....அசைந்து நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை'...காரைக்கால் பண்பலையில் டி.எம்.எஸ் குரல் கசிய...தானும் சேர்ந்து பாடியபடியே சமையலில் ஈடுபட்டிருந்தாள் சரசு. பாதியிலேயே பாடலை நிறுத்தி விட்டு அறிவிப்பாளர் "நேயர்களே..ஒரு முக்கிய அறிவிப்பு...நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே இருநூற்றைம்பது கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு ...
மேலும் கதையை படிக்க...
"சீக்கிரம் அஞ்சலி..மணியாகிட்டு இருக்கு"இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து அமர்ந்தபடியே பரபரத்தான் மனோகரன். வாண்டுகள் அமுதனும்,அகிலனும் கூட ஏறியாகிவிட்டது..வீட்டைப்பூட்டிக்கொண்டு பின் சீட்டில் தொற்றிக்கொண்டாள் அஞ்சலி. கோடை விடுமுறை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரபல சர்க்கஸ் கலைநிகழ்ச்சியை காண செல்கிறார்கள் மனோகரன் குடும்பத்தினர். மனோகரனுக்கு நகரின் பல ...
மேலும் கதையை படிக்க...
"வளரு..வளரு..!".. குழந்தைகளுக்கு சிக்கெடுத்து தலைவாரிக் கொண்டிருந்த வளர்மதிக்கு குழைந்து இழையோடும் அந்தக்குரல் யாருடையது என்பது தெரியாமல் இல்லை. அதிகாலையில் வீட்டை விட்டு கிளம்புபவன்,இரவு வீடு திரும்புகையில் ...ஒருநாள் கூட இப்படி அன்பொழுக கூப்பிட்டதில்லை. யோசனையோடு தாழ்ப்பாளை விலக்கியவள் "என்ன மாமா.!..இந்நேரமே திரும்பிட்ட..பொழப்புக்கு போகலியா.?"என்றாள். "இல்ல..வளர்,பொழப்புக்குதான் போனேன்.தலைவரு தர்மலிங்கம் ...
மேலும் கதையை படிக்க...
"மாப்ளே.!நாளைக்கு மாசி மகம்டா...திருவிழாவுக்கு கோவில்ல நேர்த்திக்கடன் கிடா வெட்டுவாங்கடா...நம்ம ஊர் தலைகட்டுக்கு வீட்டுக்கு நூறுகிராம் கிடைச்சாலே பெருசு...பத்துநாள் விரதத்தை எலும்பு உறிஞ்சாம எப்படிடா முடிக்கறது..?..முந்நூற்றி எண்பது ரூவா விக்குதேடா ஆட்டுக்கறி..."கோவில் திண்டில் ஆரம்பித்தான் கண்ணன். "ஒங்க..கதை அரைகிலோ,முக்கா கிலோவுல முடிஞ்சிடும்டா,என் கதைய கேளு ...
மேலும் கதையை படிக்க...
"வணக்கம்..வருண்.!..எப்ப சென்னையிலிருந்து வந்தாப்ல...என்ன 'சினிபீல்டு'ல நுழைஞ்சிட்டீங்களா.!?நாங்களும் தியேட்டர்ல கலர்கலரா பேப்பர் துகள்களை பறக்கவிட்டுகிட்டு..எங்க ஊரு இயக்குனர் தந்த படைப்புன்னு காலரை தூக்கிவிட்டு அலைய ஆசைப்பட மாட்டோமா.!?"என்றான் டைலர் சிவா. "என்னப்பா செய்யறது..எட்டு வருசமா போராடற எங்க மாமாவே இப்பதான் கையில'ஸ்கிரிப்ட்'டோட கம்பெனி கம்பெனியா ...
மேலும் கதையை படிக்க...
குலச்சாமி
பசி படுத்தும் பாடு
‘பலான’எந்திரம்
கறிச்சோறு
முதல் சுவாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)