Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நடுக்கம்

 

நீல நிறத்தில் தங்க கீற்றுகளுடன் சற்று பொிதான எழுத்துக்களை கொண்ட அந்த அழைப்பிதழ் அட்டையின் மத்தியில் ‘கண்டேனடி ஆசைமுகம் ‘ என்ற தலைப்பும், அதன் கீழ், ஜீவா-மேகலா என்றிருந்தது. அதனடியில் சாய்ந்திருந்த எழுத்துகளில் ‘இளம் உள்ளங்களின் காதல் கவிதையை செலுலாய்டில் செதுக்கியிருப்பது ஜிகே ‘. தியேட்டர் விபரமும்,தேதியும், நேரமும் பக்கத்தில். ஜிகேயின் உதவியாளன் நேற்று வந்து கொடுத்துப் போனது.

இன்னும் ஒரு மணிநேரத்தில் என்று கைக்கடிகாரத்தை பார்த்தார்.

போவதா வேண்டாமா என்று ஒரு சில கணங்கள் குழப்பமாயிருந்தது அவருக்கு. மேகலா முந்தின நாளே பெங்காலி படப்படிப்புக்காய் கல்கத்தா சென்று விட்டாள். அடுத்த வாரம் தான் திரும்புவாள்.

ஜிகேவின் படங்கள் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயங்கள் கிடையாது. ஆனால் மேகலா நடித்திருப்பதால், மாறுபட்டதாயிருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு என அவருக்கு தோன்றியது. அவள் ஜிகேவின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே அவருக்கு மிகுந்த வியப்பாயிருந்தது முதலில். ஆனால், அவள் எடுக்கும் முடிவுகளில் அவர் தலையிடுவது இல்லை. அவளின் குழந்தை பருவத்திலிருந்தே அவளின் வாழ்க்கை கணங்களை அவள் தான் தீர்மானிக்க வேண்டும் என்ற போக்குடன் அவளை வளர்த்து வந்திருந்தார். அவளும் அந்த சுதந்திரத்தின் அர்த்தத்தை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொண்டு வருவதில் அவருக்கு திருப்தி நிறையவே.

மூன்று வருடங்களுக்கு முன் அவள் சினிமாவில் நடிக்கத் தீர்மானித்ததும் அவளாய் செய்தது தான். அவர் நாடகத்துறையில் இருபது வருஷங்களாக நடித்து வந்தது அவளுடைய நடிப்பு ஆசைகளை தூண்டி விட்டது என்பது அவருக்கு தொியும். அவர் நடித்த நாடகங்கள், சிாிப்புத்துணுக்குகளால் கோர்க்கப்பட்டு நாடகமென்ற பெயாில் மேடை கட்டப்பட்டதோ, அல்லது வித விதமான ஜொலிக்கும் தங்க ஜிகினாப் பேப்பர்களினால் அலங்காித்து கூர்வாளும், கவசமும் அணிந்து முழநீள தமிழ் வசனங்களை கொண்ட சாித்திர/புராண நாடகங்களோ அல்ல. அவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடும் ப்ரச்சினைகளையும், வாழ்க்கையின் முரண்பாடுகளையும் குறித்த சிறு நாடகங்கள். சிறு வயதிலிருந்து மேகலா அவர் நாடகங்களில் நடிக்கும் நாட்களில் அவருடன் ஒத்திகைக்கும், மேடைக்கும் வருவது வழக்கம். நடிப்பின் மேல் எல்லோருக்கும் இருக்கும் சாதாரணக் கவர்ச்சியில் தான் அவளும் ஈர்க்கப் பட்டு சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறாள் என்றெண்ணியிருந்தார்.

சினிமாவில் சங்கடங்கள், படுகுழிகள், நுண்ணிய உணர்வுகளையும், சுயத்தையும் அழித்து விடும் மிருகங்கள் ஏராளம். மேகலா அதில் சிக்கி கொள்ளாமல் தப்புவாளா. அவளிடம் தன் மன விசனங்களை

சொன்னப் போது அவள் அமைதியான சிாிப்புடன், ‘எனக்கு தைாியம் இருக்கு. என் மேல எனக்கு நம்பிக்கையும் இருக்கு ‘ என்ற பதிலில் இவருக்கு ஒரு ஆறுதல்.

அவள் அவருடைய அண்ணன் மகள். அண்ணனும் அண்ணியும் மேகலாவின் சிறு வயதிலேயே விபத்தில் உயிாிழக்க, இவர் தன் இருபது வயதிலிருந்து அவளுக்கு அப்பாவாக. கிட்டத் தட்ட பத்து வருஷம் இவாின் அம்மா இருந்தது, இவரின் கல்யாணமாகாத நிலைக்கும், மேகலாவுக்கும் பொிய ஆதரவாக இருந்தது.

இவருக்கு கல்யாணம் என்ற கட்டுமானத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், தனியாக வாழ்க்கை நடத்தி வந்தது மேகலாவை நிரம்ப பாதித்திருக்கலாம் என்ற சலனம் இப்போது இவருக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. என்னதான், தான் அவளின் அப்பாவின் நிலையிலிருந்து அவள் வாழ்க்கைக்கு ஆதரவு தந்திருந்தாலும், தாய்மை உணர்ச்சியின் இன்மையை அவள் ஒரு மிகப்பொிய குறையாக உணர்ந்திருக்கக் கூடும்.

இந்த நாற்பத்தைந்து வயதில், இவருக்கு தன் வாழ்க்கையில் ஒரு வித சலிப்பு ஏற்பட்டிருந்தது. தனியாக வாழ்ந்து எதை சாதித்து விட்டோம் என்ற கேள்விகள். எதிலும் ஒட்டாத ஒரு தன்மை. வெளியில் திருமணமான தன் வயதொத்தவர்களின் குடும்ப வாழ்க்கை இவரை கேலி செய்வது போன்றதொரு தோற்றம். மேகலாவும் தன்னுடன் இல்லாதிருந்தால் தன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கக்கூடிய சிதைவுகளை அவர் எண்ணிப் பார்க்கவும் அஞ்சினார்.

மேகலா இந்த மூன்று வருடத்தில் நடித்த படங்கள் இரண்டு தான். இரண்டும் திரைப்பட விழாக்களில் பாராட்டும், விருதும் பெற்ற கலைப் படங்கள். சிறு பத்திாிக்கைகள் இப்படங்களையும், மேகலாவையும் பாராட்டி விமர்சித்திருந்தன.

வெகுஜன பத்திாிக்கைகள் விருது பெற்றதை ஒரு மூலையில் சிறு தகவலாகவே வெளியிட்டிருந்தன. கலை படங்கள் எடுப்பதற்கு கலைஞர்கள் மட்டுமல்ல, பண பலமும் மிக முக்கியம். இந்த கூட்டின் பற்றாக்குறை காரணமாக மேகலாவுக்கு கடந்த ஒன்றரை வருஷமாக எந்த படமும் கிடையாது- ஆறு மாசத்துக்கு முன் வந்த ஜிகேவின் படவாய்ப்பைத் தவிர.

அவள் ஒரு வருஷமாக படங்கள் ஏதும் இல்லை என்ற நிலையில் சிதறிப் போய் ஜிகேவின் படத்தை ஒப்புக் கொண்டாளா ? அவளின் மன நிலையில், எதிர்பார்ப்புகளின் சேதாரங்களால் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தனவா என்று தீர்மானமாக தொியவில்லை. அப்படி இருந்திருந்தாலும் அதன் வெளிப்பாடுகளை தான் புாிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் கூட – பெற்றெடுத்த அப்பா என்று இல்லாவிட்டாலும், அப்பாவின் ஸ்தானத்தில் தானே அவர் இருப்பது.

அந்த அழைப்பிதழின் சாிகை துணுக்குகள் மின்னி இவர் கவனத்தை இழுத்தது. போய் விட்டு வரலாம் என தீர்மானித்து கொண்டார். இன்றைய மனநிலையில் தனிமை அவ்வளவு உகந்ததாகப் படவில்லை அவருக்கு. உடையை மாற்றிக் கொண்டு,

வீட்டை பூட்டிக் கொண்டு காாில் அமர்ந்தவருக்கு, அந்த படத்தின் தலைப்பு மனதில் ஓடியது. ‘கண்டேனடி ஆசைமுகம்! ‘. அனேகமாக பாிதாபத்தையோ அல்லது இரக்க உணர்ச்சியையோ காதலின் தோற்றுவாயாக உருமாற்றி காண்பிக்கும் படமாக இருக்கும் என்று தோன்றியது.

வெளியில் உலகம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. எங்கும் மனிதக் கூட்டம். இத்தனை மனிதர்கள் சுற்றி இருக்கையில் தனக்கு ஏன் இந்த தனிமை சூழல் என்று கேள்வி அவரை வட்டமடித்தது. இல்லை கூட்டமாயிருந்தும் ஒவ்வொரு மனிதனும் தனித் தனி தீவுகளாய் பதிந்திருக்கலாம்.

அதோ அந்த வாழைப்பழங்களையும், குவிந்திருக்கும் காய்களையும் கைவண்டியில் இழுத்து செல்லும் வியர்வை முத்துகள் முகிழ்ந்த கரும் உடலைக் கொண்ட நடுத்தர வயதுக் காரனைப் போலாக அவர் ஆசைப் பட்டார். அவனுக்கு தினசாி கறிகாய்களை விற்று பிழைப்பு நடத்துவது மட்டுமே கேள்வியாக இருக்க கூடும். பொழுது கழிந்த பின்னர், ஓலைகளோ ஒடுளோ வேய்ந்த வீட்டில், மங்கிப் போன ராத்திாியின் ஒளி ஒழுக, நிறம் வெளிாிப் போன கண்டாங்கிச் சேலையையும், கோடாலி முடிச்சையும் அணிந்த அவனுடைய தளர்ந்து போன மனைவியின் இதமான கரங்களில் அவன் பேரமைதியை காணக்கூடும். கேள்விகளின் மத்தியில் சிக்கி கொள்ளாமல் சராசாியானதொரு வாழ்க்கை அமையப் பெறுபவர்கள் அதிர்ஷடச் சாலிகள் தானே.

தனிமை தன்னை துன்புறுத்துகிறதா இல்லை பெண் துணையில்லாதது வலியை அளிக்கிறதா என்பதிலும் இன்னும் தெளிவில்லை. பெண் துணையை உடல் இச்சைகளுக்காக மட்டுமே தேடுகிறோமோ என்றும் தோன்றியது. வயதாக இச்சைகளின் தீவிரங்கள் குறைந்த பாடில்லை. சினிமாவின் கவர்ச்சிக்கு முன் நாடகங்கள் எடுபடாத காலத்தில், செய்வதற்கு ஏதுமற்று, காலத்தின் போக்கை பாரமான கணங்களாக உணருவதால் இத்தனை மன அலைச்சல்களா ? மனதின் யோசனை வலைகள் விடுபடாது பின்னப் பட்டுக் கொண்டிருந்தன. எண்ணங்கள் ஏதுமற்றதொரு நிலையை மனம் அடைந்தால் எத்தனை செளகர்யம் ?

கை தன்னிச்சையாய் ஸ்டியாிங் வீலை வளைத்து கொண்டும், கால்கள் ஆக்ஸிலேரேட்டருக்கும் ப்ரேக்கும் தானாய் மாறிக் கொண்டிருந்தன. தன் புற நிலையின் எளிதான போக்கும், அக நிலை குழப்பங்களும் அவருக்கு எப்போதும் ஆச்சர்யத்தை தருவன. தீவிரமானதொரு மன உளைச்சலில் மூழ்கியிருக்கும் பொழுதும், ஏந்த வித பாதிப்புகளுமின்றி,காரை சிகப்பு விளக்குக்கு

நிறுத்தவும், பச்சை விளக்கில் சாியான திசை நோக்கி செலுத்தவும் செய்வது வியப்பாய் இருந்தது.

தெரு முனையில் திரும்பி,கீழ்த்தளத்தில் இருக்கும் பார்க்கிங் லாட்டிற்குள் காரை நிறுத்தினார். படிக்கட்டுகள் ஏறி அந்த ப்ாிவ்யு தியேட்டருக்குள் நுழைய, அதன் லாபியில் பெர்வ்யூம்களின் மணமும், மதுவின் மணமும் கலந்து அவரை தாக்கியது. பெண்கள் பொதுவாய் சிாித்து கொண்டிருந்தார்கள். மின்னலாய் சதைகள் மின்னிக் கொண்டிருந்தன. ஜிகே

இவரைப் பார்த்து தன் குழுவில் பிாிந்து இவர் பக்கம் வந்தார்.

‘வாங்க .. மேகலா எங்கே ? ‘ என்றார்.

‘அவ கல்கட்டாவில் ஒரு பெங்காலி பட ஷுட்டிங்க்கு போயிருக்கா. ‘

‘பெங்காலி படமா ? ஹ்ம்ம்.. படம் முழுக்க நாலு வார்த்தைக்கு மேலே பேசமாட்டாங்களே! நமக்கு அதெல்லாம் புாியாது சார் ‘ என்று ஹோவென்று சிாித்தார். இவருக்கு சிாிப்பதற்கு என்ன இருக்கிறது என்று புாியாமல், முகத்தை சிாிப்பது போல வைத்து கொண்டார்.

‘சார்.. படம் ஏ கிளாசா வந்திருக்கு. பார்க்கறதுக்கு முன்னாடியே டிஸ்டிாிபியூட்டரெல்லாம் நல்ல ரேட்

சொல்றாங்கன்னா பாத்துக்கோங்க.. கண்டிப்பா ஹிட் ஆயிரும். மேகலாவுக்கு போட்டி போட்டு வரப் போறாங்க ப்ரொடுசர்ஸ் எல்லாம் ‘ மறுபடி அதே சிாிப்பு.

‘அடுத்த படம் கதை டிஸ்கஷன் போயிட்டுருக்கு. மேகலா கிட்டே டேட்ஸ் கேட்டுருக்கேன் ‘

இவருக்கு அய்யோ என்றிருந்தது.

‘சாி வாங்க ஜீவா கிட்டே அறிமுகப் படுத்தறேன். வொி டேலன்டட் பெஃல்லோ ‘ என்று அழைத்து போனார்.

தமிழ் சினிமாவின் ஹீீரோவுக்கு இருக்கக் கூடிய லட்சணங்களுடன் இருந்தான் ஜீவா. சுருள் சுருளாய் தொட்டியை கவிழ்த்து வைத்தாற் போல தலை மயிர். வரைந்திருந்த புருவங்கள். கற்றையாய் மீசை. விரலில் வழியும் புகை. இவர் பேரை சொன்னதும் அவன் கைகூப்பினான். ஜிகே எதோ சொல்ல அதிர்ந்து அதிர்ந்து சிாித்தான்.

இவாின் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. திடிரென பக்கத்தில் நின்று கொண்டிருந்தவளின் மேலாடை சற்றே விலகியிருக்க அங்கே தன் கண்கள் குத்திப் போய் நிற்பதை கண நேரம் கழித்து உணர்ந்து மனம் வெலவெலக்க பார்வையை பறித்து கொண்டார்.

‘சாி படம் ஆரம்பிக்க வேண்டியது தான். உள்ளே போகலாம் ‘ என ஜிகே நகர, எல்லோரும் மெதுவாய் கலைந்து தியேட்டாின் இருட்டு குகைக்குள் நுழைந்தார்கள். இவர் தன் வாிசையை சாிபார்த்து இருக்கையில் அமர்ந்தார்.

படம் ஆரம்பித்தது. கிராமத்தில் ஆரம்பித்த கதை ஏதோ அவருக்கு புாியாத ஒரு காரணத்தினால் திடாரென்று நகரத்தில் ஒரு கல்லூாியில் போய் நின்றது. மேகலா மின்னிக் கொண்டிருந்தாள் திரையில். அவளை பார்க்கும் போதெல்லாம், அவள் மீது பாதுகாப்புணர்வு அவருக்கு தோன்றியது. முதல் ஒரு மணி நேரத்தில் கதாநாயகன் தன் நண்பர்களோடு பாடும் ஒரு பாட்டு, அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூாி விழாவில் அவன் பாடுவது என்று கழிந்தது.

இடைவேளை அடுத்த பத்து நிமிடங்களில் அந்த பாட்டு வந்தது.

ஏதோ ஒரு காட்டின் ஊடே அவனும் அவளும் தனியே நடந்து போய் கொண்டிருக்கின்றனர். சட்டென்ற மழைத் தூறல் வலுக்க இருவரும் நனைந்து கொண்டு, பக்கத்தில் இருந்த ஒரு சேதாரமான கட்டடத்துக்குள். அவள் நனைந்த கோழியாய், உதறிக் கொண்டிருக்க, அவன் கைகள் அவளை வளைக்கின்றன. ட்ரும் ட்ரும் மென்ற ட்ரம்ஸின் அதிர்வுகள். திடாரென்று இருவருக்கும் மத்தியில் தீ நாக்குகள் பற்றிக் கொள்கின்றன. ஆறாது குதிக்கும் ஜ்வாலை வெளிச்சத்தில் தாளங்களுக்கேற்றபடி நனைந்த சேலை விலகிக் கொள்ள சுழன்று சுழன்று ஆடுகிறாள். பாட்டின் உச்சத்தில் அவளின் மார்புகளும் செழித்து குழையும் இடையும் அவன் முகமும் மட்டும் க்ளோசப்பில் திரை முழுவதும் துடிக்கிறது. அவர் கண்களை மூடிக் கொண்டார். அவன் ஸ்பாிசத்தில் அவள் கண்களை மூடிக் கொண்டு கீழுதட்டை உள்ளிழுக்க பாட்டு முடிந்து போனது.

இவருக்கு உடம்பு முழுதும் வியர்த்திருந்தது. விவாிக்க முடியாதொரு உணர்வு அடிவயிற்றில். அந்த தியேட்டர் இடிந்து விழுந்து விடக் கூடாதா என்றிருந்தது. சுற்றியிருந்த முகங்களின் மேல் திரையிலிருந்து வெளிச்ச கீற்றுகள் வண்ணங்களை பூசி கொண்டிருந்தன. தலையை குனிந்து கொண்டார். அந்த இருக்கை பிளந்து தன்னை உள்வாங்கி கொள்ளக் கூடாதா என்றிருந்தது. ஜிகேவும், ஜீவாவும் இவரைப் பார்த்து சிாிப்பது போலிருந்தது. அந்த திரை இவரை வெறித்து பார்ப்பதாய் உணர்ந்தார். எழுந்து அவ்விடத்தை விட்டு விலகி விடவேண்டும் என்றதொரு உணர்வு. அவரை நகர விடாமல் ஏதோ ஒன்று அவரை இருக்கையில் வைத்து அழுத்தியது. மனவெளியில் இனந்தொியா எண்ணங்கள் சுழன்று சுழன்று அவரை குலைய வைத்து கொண்டிருந்தன. கண்கள் திரையை வெறித்து கொண்டிருந்தன.

எப்போது படம் முடிந்ததென்று தொியவில்லை. விளக்குகளின் பிரகாசம் கண்களை உறுத்தியது. எல்லோரும் வாசலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சள சளவென்று பேச்சு சத்தம். இவருக்கு யார் கண்ணிலும் படாது விலகிட வேண்டும் என்று தோன்ற, வழி தொியாது சில கணங்கள் இயக்கமற்று கிடந்தார். வெளியில் மெதுவாய் வந்தவருக்கு ஜிகேவின் கண்ணில் படக்கூடாதென்ற அவசரத்தில் நின்றிருந்த கூட்டத்தை சட்டென்று கடந்து பார்க்கிங் லாட்டுக்குள் நுழைந்தார்.

மணி பத்தை தாண்டியிருந்தது. கைகளும், கால்களும் அதனதன் இயக்கங்களை சாிவரச் செய்து காரை செலுத்தி அவரை வீட்டிற்கு கொண்டு சேர்த்தன. பசியற்ற வயிறு. வெறுமை வீட்டுக்குள் எங்கும் அதிர்ந்துக் கொண்டிருந்தது.

உடை மாற்றி படுக்கையில் விழுந்தார். வெகு நேரம் தூக்கம் வராது எண்ணச் சிக்கலில் உழன்று கொண்டிருந்தது மனம். ஏதோ ஒரு கணத்தில் தூக்கம் போன்ற மயக்கத்தில் உள் ஆழ்ந்தது.

தியேட்டர் வெளியில் முந்தானை விலகியிருந்த அந்த பெண்ணின் முகமும் மார்பும் உள்ளுக்குள் விாிந்தது. கண நேரத்தில் அந்த முகம் மாறி மேகலாவின் முகம் அங்கே ஒட்டிக் கொண்டது. ஜோவென்று மழை வந்து ட்ரும் ட்ரும் என்று ட்ரம்ஸ் வாசிக்க தொடங்கியது. மேகலா இடையை நெளித்து, மார்புகளை முன் தள்ளி சுழன்று சுழன்று ஆடினாள். ஒரு மூலையில் ஜிகே நின்று கோரமாய் சிாித்து கொண்டிருந்தான். இவாின் கைகள் மேகலாவின் இடையில் வீழ்ந்தது. ட்ரும் ட்ரும் என்ற ட்ரம்ஸின் சப்தங்கள் ஒங்கி ஒங்கி ஒலித்து.. மேலும் கீழுமாய் எங்கும் மேகலாவின் பிம்பம் பரவ.. உச்சமாய் தொடைகள் உதறிச் சில்லித்துப் போக விதிர்த்து விழித்து கொண்டார். கனவின் மிச்சங்கள் கண்முன்னே துல்லியமாய் உறைந்திருந்தன.

மறுவாரம் மேகலா ஊருக்கு திரும்பினாள். விரைவில் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டதாய் இவர் சொன்னதும் சந்தோஷத்துடன் கை குலுக்கினாள்.

இவர் கையில் ஏற்பட்ட நடுக்கம் அடங்க வெகுநாளாயிற்று.

- செப்டம்பர் 1999 

தொடர்புடைய சிறுகதைகள்
தோளில் தொங்கும் பையுடன் அவன் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பினான். தெருமுனையில் ஆறுமுகத்தின் வாடகை சைக்கிள் கடை. பக்கத்தில் பிள்ளையார் கோயில். அங்கேதான் சதுர்த்திக்கு நாடகம் போடுவார்கள். சிவனுக்கும், நக்கீரனுக்கும் நடக்கும் விவாதம்தான் போன சதுர்த்தியிரவு போட்ட நாடகம். கோயிலைத் தாண்டி சற்றே சாயும் தெருவில் ...
மேலும் கதையை படிக்க...
அந்த ஊாில் முச்சந்தி மத்தியிலுள்ள வளாகத்து தரையில் அவன் கடை விாித்த போது முதலில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அக்கடையை எல்லோரும் கடக்கும்பொழுது அவன் தரையில் விாித்து வைத்திருந்த முகங்களை அருகில் பார்க்கும் ஆசை உள்ளுக்குள் இருந்தும் அதை வெளிக்காட்டாது ஓரக்கண்ணால் ...
மேலும் கதையை படிக்க...
அமெரிக்காவில் ஹார்ட்ஃபோர்ட் நகர மையத்தில் இருக்கும் கேப்பிடல் டவர்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் குடியேறியபோதுதான் ஜோஸலினைப் பார்த்தேன். பார்த்தவுடனேயே அவளைப் போன்ற அழகி உலகில் இருக்க முடியாது என்ற நிச்சயம் ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக அவள் உதடுகள். அவளை முத்தமிடக் கொடுத்துவைத்தவன் அதிர்ஷ்டசாலி. மெல்லிய புன்னகையுடன் ...
மேலும் கதையை படிக்க...
நான் படுமோசமான நிலையில் இருந்தேன். என் விரல்முட்டி எரிந்தது. மைஸ் மகேஷ், என்னைப் புழுவைப்போலப் பார்த்தான். இன்னும் நான் கோலியை முட்டியால் உந்தித் தள்ள வேண்டிய தூரம் கொஞ்சம்கூடக் குறையாமல் இருந்தது. தள்ளிய கோலி என் எரிச்சலைப் பொருட்படுத்தாமல் குழியின் திசைக்குக் ...
மேலும் கதையை படிக்க...
வலி அவ்வப்போது ப்ரக்ஞையின் முழுமையையும் சிறைப்படுத்தியது. அந்தக்கணத்தில் புற உலகத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டாள். பெருகி வரும் ஒவ்வொரு வலியலையும் புற உலகத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அவளை விசிறி அடித்தது. அங்கிருந்து மீண்டு மீண்டு வருவது ஆயாசமான தன்னிச்சை செயலாயிற்று. அவளால் தாங்கமுடியாதபடி ...
மேலும் கதையை படிக்க...
காலமும் நெருப்புத்துண்டங்களும்
முகங்களை விற்றவன்
ஜோஸலினின் உருமாற்றம்
ரேடியோ
இழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)