த்ரில்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 6,942 
 

“தயவுசெய்து என்னைச் சுதந்திரமாக இருக்க விடுங்கள்…” மடக்கிப் போட்ட இரண்டு வரி விளம்பரத்தை தினசரிகளுக்கு வழங்கியிருந்தான் அச்சுதன். கீழே பெயரோடு சரி. முகவரி கொடுக்கவில்லை.

அட்ரஸ் இல்லாம எப்டி சார்? என்றார்கள் பத்திரிகை ஆபீஸில். என் முகவரியை தர்றேன்ல அத்தோட விடுங்க…என்றான்.

எதற்காக இப்படிச் செய்தோம் என்று மனது அரித்துக் கொண்டேதான் இருந்தது. யார் தன்னுடைய சுதந்திரத்தைக் கெடுத்தார்கள் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். விளம்பரம் தேவையானவர்களின் கண்ணில் பட்டிருக்குமா என்று யோசிக்கலானான். சுதந்திரமாக இருக்க விடுங்கள் என்று சொல்லிவிட்டு, தேவையானவர்கள் என்று ஏன் யோசிக்க வேண்டும் என்று ஒரு யோசனை வந்தது. தேவையல்லாதவர்கள் என்பவர் யார்? வெவ்வேறு விதமான மனிதர்களை வெவ்வேறு வேளைகளில் சந்திக்கும்போது அவரவரின் தேவை ஒவ்வொரு காலகட்டத்தில் நேரத்தானே செய்கிறது. அந்தந்த மனிதர்களின் தேவை அந்தந்த நேரத்தில், அத்தோடு அவர்களைக் கழட்டி விட முடியுமா, அவை பின்னும் தொடரத்தானே செய்கின்றன. அல்லது அவர்களுக்கு நம்மின் தேவை ஏற்பட்டுத்தானே போகின்றன. பின் எந்த மனிதர்களெல்லாம் தேவையானவர்கள், யார் யாரெல்லாம் தேவையற்றவர்கள் என்று எப்படிப் பிரிப்பது? குழப்பம்தான் மிஞ்சியது.

இந்த விளம்பரத்திற்குப் பின்னும் யார் யாரெல்லாம் தன்னைத் தேடி வருகிறார்களோ அவர்களெல்லாம் தேவையானவர்கள் மற்றவர் தேவையற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்தான். தன் மீது அக்கறை உள்ளவர்கள்தான் தனக்குத் தேவையானவர்கள். மற்றவர்கள் தேவையற்றவர்கள். மிகச் சுலபமான புரிதல்தானே இதற்கு ஏன் குழம்ப வேண்டும். தேடி வந்து தொல்லை தருபவர்கள் என்று ஏன் யோசிக்க வேண்டும்? தொல்லை தருபவர்கள் எப்படி தேவையானவர்களாக இருக்க முடியும்? அக்கறை கொண்டவர்கள்தானே அன்புத் தொல்லை தருவார்கள். மற்றவர்கள் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்களே?

அவன் சொல்றது சரிதான். அவனை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது…ஒரு கலைஞன் அப்படித்தான் இருக்க முடியும். அவன் எப்போதும் வான் வெளில சஞ்சரிக்கிறவன், ஏதாச்சும் யோசிச்சிக்கிட்டே இருக்கிறவன், என்னமாச்சும் உருவாக்கிக்கிட்டே இருக்கிறவன், எந்த சம்பிரதாயத்துக்கும் கட்டுப் படாதவன், எந்தக் கட்டுக்குள்ளும் வராதவன், எல்லாத்தையும் பரிசோதனை பண்ணிப் பார்க்கணும்ங்கிற எண்ணமுள்ளவன், சோதனை பண்ணிப் புரிஞ்சிக்கிறவன், கற்பனையை விட அனுபவங்களை நிரம்ப விரும்புறவன், அனுபவச் செழுமையில்தான் உண்மையான ஆக்கங்களை உருவாக்க முடியும்ங்கிற உறுதி உள்ளவன். இப்படி ஆழமா உணர்ந்து நியாயமா ஓதுங்கிக்கிறவங்க எத்தனை பேர் இருப்பாங்க…?

பலவாறு யோசித்தவாறே டீக்கடையை நோக்கிப் போனான் அச்சுதன். டீக்கு சொல்லிவிட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான். நாலைந்து பேர் தினசரி படித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் குறிப்பிட்ட தினசரியில் தான் கொடுத்த விளம்பரப் பக்கத்தினைப் படிப்பவர் யார் என்று கண்கள் தேடியது. ஒரே தினசரியை நான்கு பேர் பிரித்து வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தார்கள்.

பாருங்க சார், உலகத்துல எந்தெந்தமாதிரியோவெல்லாம் கிறுக்கனுங்க இருக்காங்க…இங்க ஒருத்தன் செய்திருக்கிறதப் பாருங்க….என்னச் சுதந்திரமா இருக்க விடுங்கன்னு விளம்பரம் கொடுத்திருக்கான்….எங்காவது இப்டிப் பார்த்திருக்கீங்களா? இந்த நாட்டுல எவன் சுதந்திரம் இன்னைக்குக் கெட்டுப் போச்சு, இவன் மட்டும் இப்டி அறிவிப்பு கொடுக்கிறதுக்கு? கிறுக்குப் பயலுங்க சார், கிறுக்குப் பயலுங்க…..

அருகிலே படித்துக் கொண்டிருந்தவர்கள் அமைதியாக அந்த ஆள் முகத்தைப் பார்த்தார்கள். எந்த உணர்ச்சியையாவது காண்பித்து விட்டால் அது என்னமாகவாவது அர்த்தப் பட்டுப் போகுமோ என்று வெகு ஜாக்கிரதையாக இருந்தது போலிருந்தது அவர்களின் பார்வை.

ஏதாவது பாவங்களை முகத்தில் காண்பிக்கப் போய், அதனால் தங்களின் சுதந்திரம் இந்த இடத்தில், இந்தப் புலர் காலைப் பொழுதில் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகி விடுமோ என்று அவர்கள் அச்சப்படுவது போலிருந்தது அச்சுதனுக்கு. மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கத்தான் விரும்புகிறார்கள். அதாவது வம்பு தும்பு வேண்டாம் என்று. அமைதியை விரும்பக் கூடியவர்கள். சோற்றுக்கிருக்கிறதோ இல்லையோ சண்டை வேண்டாம் என்பவர்கள். மெனக்கெட்டு சண்டையடித்துக் கொள்பவர்களைக் கூட ஏம்ப்பா இப்டி என்று கேட்காமல் வேடிக்கை பார்த்து விட்டுச் செல்பவர்கள். சண்டை போட்டவர்களே தீர்த்துக் கொள்ளட்டுமே, நாம் ஏன் குறுக்கே புகுந்து நம் நிம்மதியைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்? என்ற நினைப்பிலுள்ளவர்கள். மனிதனின் இயல்பு அமைதி, நிம்மதி. சந்தோஷம் கூட இல்லை. அன்றாடப் பிழைப்பு அப்படியே அவர்களை இழுத்துச் செல்ல வேண்டும். பாதகமில்லாமல் வயிறு நிறைகிறதா, வண்டி ஓடுகிறதா என்பதே. இல்லையென்றால் இப்படி ஒரு அமைதி அங்கே திகழுமா?

யாருமே எதுவும் சொல்லாமல் வெறுமே பார்ப்பது அந்த ஆளுக்கு எரிச்சலை ஊட்டியிருக்குமோ என்னவோ, மெல்ல என்னவோ முனகிக் கொண்டது போலிருந்தது.

அச்சுதன் சொன்னான். அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதுனால கொடுத்திருக்கலாம்….

அந்த ஆள் உற்றுப் பார்த்தார். என்ன சார் பாதிப்பு? இல்ல என்ன பாதிப்புன்னு கேட்குறேன்…எவன் சார் சுதந்திரமா இல்ல இந்த நாட்டுல? சுதந்திரம் சுதந்திரம்னு எல்லாத்தையும் அவுத்து விட்டுத்தானே நாடு இன்னைக்கு இந்த நெலமைல இருக்கு….எதுலயும் எந்தக் கன்ட்ரோலும் கிடையாதுன்னுதானே ஆகிப் போச்சு…அவனவன், அவனவன் இஷ்டப்படி எப்டியும் இருக்கலாம்னுதானே இருக்கு…தடியெடுத்தவன் தண்டல்காரன்னுதானே ஆகிப் போச்சு…? இதுக்கா இந்த நாட்டுக்கு சுதந்திரம் கெடச்சுது? சுதந்திரம்ங்கிற பேர்ல எங்க அடிப்படை ஒழுக்கம் பாழாகுதோ அங்கெல்லாம் எல்லாமும் இப்டித்தான் சார் கெட்டுக் போகும்….தனி மனுஷ ஒழுக்கம்னு மகாத்மா இதைத்தான் சொன்னார். யாரு கேட்குறா? ஏன், மீறினா என்னன்னு எல்லாமும் கோட்டைத்தாண்டின கதையாகிப் போய்க் கெடக்கு…இனிமே யார் வந்து ஒழுங்கு படுத்த முடியும்…இந்த லட்சணத்துல சுதந்திரமா இருக்க விடுங்கன்னு ஒரு விளம்பரம் வேறே….கேலிக் கூத்தா இருக்கு….

அது ஒரு தனிப்பட்ட மனுஷனோட விருப்பம் சார்…அதை ஏன் நீங்க தப்புங்கிறீங்க…?

யாரு தனிப்பட்ட மனுஷன்? இந்தாளா? வானத்துலேர்ந்து டேரக்டா கீழே குதிச்சானாமா? ஒரு தாயோட வயித்துக்குள்ளேர்ந்து வந்தவன்தானே? அந்தத் தாயி அவன் அப்பனோட கூடினதுனாலதானே அவன் உதிச்சான்…சுற்றம் சுழம் இல்லாம அவுங்க தனியாவா வந்திருக்க முடியும்? அப்போ அவுங்க மூலமா வந்த இவன் மட்டும் எப்படி தனிப்பட்ட மனுஷனாக முடியும்? இதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்ங்க…ஆத்தமாட்டாமத் திரியறவன் பூரா இப்டித்தான் இருப்பானுங்க….தன்ன என்னவோ பெரிஸ்ஸா தனக்குத்தானே நெனச்சிக்கிறது…. இந்த ஒலகத்தையே உய்விக்க வந்த ஆளு மாதிரி…இப்டித்தான் இருக்கும்னு மத்தவங்க எல்லாத்தையும் பார்த்து சலிச்சிக்கிறது….தன்னை அறிவு ஜீவின்னு நினைச்சிக்கிட்டு, நினைச்சிக்கிட்டுன்னு கூட இல்ல…எவனாவது சொல்லமாட்டானாங்கிற ஆதங்கத்துல கன்னா பின்னான்னு மனசுக்குத் தோணினதப் பேசுறது, செய்றது, எழுதுறது, அது மூலமா தான் என்னவோ மத்தவங்ககிட்டருந்து ரொம்ப மாறுபட்ட ஆள்னு தன்னைத்தானே காண்பிக்க முயற்சிக்கிறது…இதெல்லாம் வெட்டி வேலைங்க….பர்ஸனலா உள்ளே நுழைஞ்சு பார்த்தீங்கன்னா நிறையக் கெட்ட வழக்கம் உள்ளவனா இருப்பான்…மனசுக்குள்ள ஏராளமான அசிங்கங்களைப் புதைச்சிக்கிட்டு, வித்தியாசமாச் சிந்திக்கிறேன்னு சொல்லி எல்லாத்தையும் முரணாவே பார்க்கிறதை வழக்கமாக் கொண்டிருப்பான். இப்படியே நேரத்தையும், காலத்தையும் வீணாக்கி, உடம்பையும் மனசையும் கெடுத்துக்கிட்டு, அவனுக்கு அவனே பிரயோஜனம் இல்லாம இந்த சமூகத்துக்கும் உபயோகமில்லாம வாழ்ந்துக்கிட்டிருப்பான். இந்த நாட்டுல சோத்துக்கே இல்லாம எத்தனாயிரம் பேர் அன்றாடம் கஷ்டப்படுறாங்கன்னு என்னைக்காவது இவன மாதிரி ஆளுங்க யோசிச்சிருப்பாங்களா…? அரசாங்கம் எவ்வளவோ காரியங்கள் பண்ணுதே…ஒவ்வொரு வருஷமும் எத்தனாயிரம் டன் உணவு தானியங்கள் கெட்டுப் போயும், வீணாகியும், கடல்ல கொட்டியும், யாருக்குமே உபயோகமில்லாமப் போகுது…ஒரு பக்கம் மிகப் பெரிய பட்டினிப் பட்டாளம், இன்னொரு பக்கம் கொள்ளை கொள்ளையா உணவுப் பொருட்கள் வீணாக்கம்….யாராவது இதைப் பத்திக் கவலைப் படுறாங்களா… தொடர்ந்து இப்டியே நடந்திட்டிருக்குதே…இதை சுத்தமா சரி பண்ணனும்னு யாராச்சும் முயன்றிருக்காங்களா? யதார்த்தத்தைப் பத்தி நினைக்காம கற்பனைல மிதந்திட்டிருக்காங்க…எல்லாம் புளிச்சேப்பக்காரனுங்க சார்….பொத்திட்டுக் கெடக்குறியா, இல்ல ஒதைக்கவான்னு கேட்கணும்….

ஏன் சார், எவ்வளவோ தப்பு நடக்குதுன்னு கோபப்படுறீங்க…ஒரு ஆளு வெறும் விளம்பரம் கொடுத்ததுக்கே இத்தனை சங்கடப்படுறீங்களே…?

அதத்தான் சார் சொல்ல வர்றேன்…ஒவ்வொரு மனுஷனுக்கும் கிடைச்சிருக்கிற தனிப்பட்ட சுதந்திரத்துனாலதான இதுவும் சாத்தியமாகுது….நினைச்சதைச் செய்ய முடியுது….அதாவது எப்டி நினைச்சாலும்…அதானே…? இப்டித்தான் நினைக்கணும், செய்யணும்னு ஒரு வரைமுறை இல்லையா? கட்டுப்பாடில்லாமத் திரியறதா சுதந்திரம்? எல்லாக் கட்டுக்களையும் அவுத்து விட்டிட்டு அலையுறதா சுதந்திரம்? எப்டி வேணாலும் இருக்கலாம்ங்கிறதா சுதந்திரம்? எதை வேணாலும் செய்யலாம்ங்கிறதா சுதந்திரம்? இங்க அதுதான் சார் வளர்ந்திருக்கு….அதுனாலதான் இந்த நாடு இப்படிக் கெட்டுப் போய்க் கிடக்கு….சுதந்திரப் போராட்டத் தியாகி சிதம்பரம்பிள்ளை சாகுறபோது என்ன சொன்னார் தெரியுமா? இந்த நாடு சுதந்திரம் அடைஞ்சிடும், ஆனா அந்தச் சுதந்திரத்தைப் பாதுகாக்க மக்களுக்கு தேச பக்தி வேணும்னார். அந்தத் தேசபக்திங்கிறது எப்டி வரும்? தனி மனித ஒழுக்கத்துலேர்ந்து முகிழ்க்கணும்.அடிப்படை அதுதான். அது இன்னைக்கு சீரழிஞ்சு போச்சு. அதுதான் இன்னைக்கு உண்மை…

எது? மக்களுக்கு தேச பக்தி வந்திருச்சுங்கிறீங்களா?

அவர் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார். லந்தா? என்று கேட்பதுபோலிருந்தது. அவர் முகம் போக்கு இவனுக்குச் சற்று உதறலைக் கொடுத்தது.

இப்பத்தான் சார் எனக்கு சந்தேகமே வருது….அந்த விளம்பரத்தக் கொடுத்த ஆளு நீங்கதானோன்னு…இல்லன்னா இப்டித் தாறு மாறாக் கேள்வி கேட்பீங்களா? இப்படி விட்டேற்றியா கிடைச்ச சுதந்திரத்தைப் பயன்படுத்தற மக்கள்ட்ட தேசபக்திங்கிற ஒழுக்கம் படிப்படியா அழிஞ்சி போயிடும்ங்கிறேன் சார்….அழிஞ்சி போயிடுச்சின்னேதான் நான் சொல்லுவேன்….ஏன்னா தனி மனித சுயநலம் பெருகி, அதுனால ஒழுக்கம் குன்றிப் போய், எல்லா நல்லதுகளும் படிப்படியா அழிஞ்சிதான் போயிடுச்சி….இங்கே…! ஒண்ணு நல்லாத் தெரிஞ்சிக்குங்க…நம்மளோட எந்தச் செயல்னாலேயும், யாரோடு மனசையோ, செயலையோ புண்படுத்தறதுக்கோ, பாழ்படுத்தறதுக்கோ நமக்கு உரிமையில்லை…அப்படியான எந்தக் காரியத்தையும், ஒரு நல்ல மனசுள்ளவன், ஏத்துக்கவே மாட்டான். அப்டி யோசிச்சதுனாலதான் நடக்குற தவறுகளைப் பார்த்து, மகாத்மா தன்னை வருத்திக்கிட்டு அதைத் திருத்த முனைஞ்சார்…..இந்த மக்களோட தவறுகளை அவர்களுக்கு உணர்த்துறதுக்காக அவர் தன்னை வருத்திக்கிட்டார். அதுக்கு நானும் பொறுப்புதான்னு உணர்ந்து தன் அகத்தை மேலும் தூய்மையாக்கிக்க முனைஞ்சார்….அகம் தூய்மையாகணும்….ஒவ்வொரு மனுஷனும் தன்னை மேம்படுத்திக்கணும்…அப்பத்தான் சுயநலம்ங்கிற கொடுமையெல்லாம் வேறோட சாயும்….அன்னைக்குத்தான் நம்ம நாடு உண்மையான உயரத்துல போகும்…சுதந்திரம் முழுமையடையறது அப்போதான்.

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நிறுத்தியவர், சிறிது நேரம் அவனையே விலக்காமல் உற்றுப் பார்த்தார். அவர் கண்களை அவனால் நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை. அவனையறியாமல் பார்வை நிலத்தை நோக்கித் தாழ்ந்தது. தெளிந்து விட்டது அவருக்கு.

இனிமே இப்டியெல்லாம் விளம்பரம் கொடுக்காதீங்க….அபத்தமா இல்ல…? சொல்லிவிட்டு எழுந்தவர் இவன் பதிலுக்குக் காத்திராமல் நடையைக் கட்டினார்.

எப்படி இவரால் தன்னைக் கண்டு பிடிக்க முடிந்தது என்பது புரியாமல் அவர் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான் அச்சுதன். சாதாரணர்கள், சராசரிகள் என்று நினைப்பவர்கள் கூட எப்படிப் பேசி விடுகிறார்கள்? ஆழ் மனதில் எவ்வளவு நல்லவர்களாய் இருக்கிறார்கள்? அந்த உள்ளார்ந்த ஈரத்தை யாரால்தான் அழித்தொழிக்க முடியும்? என்னென்னவோ தோன்றியது அச்சுதனுக்கு.

சும்மா ஒரு த்ரில்லுக்கு….என்று தான் செய்ததைச் சொல்லியிருந்தால் ஓங்கிக் கன்னத்தில் விட்டிருப்பாரோ என்று நினைக்கத் தலைப்பட்ட அந்த நிமிடத்தில்…உடம்பு மெல்ல அநிச்சையாய் நடுங்கிக் கொள்வதைக் காண, தான் எதிர்பார்த்த த்ரில் இதுதானோ என்று எதிர்மறையாய் உணர வைத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *