தோழியுடன் வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 4,043 
 

நானும் என் தோழி நாராயணியும் கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம்.

நாங்கள் இருவரும் இப்போது எங்களின் எழுபதுகளில் இருக்கிறோம். ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்தபோது எங்களுக்கு இருபத்தியெட்டு வயதுதான்.

அந்த இளம் வயதில்கூட, சாகசத்தைவிட வாழ்க்கையில் அமைதிக்காகவும் ஸ்திரத்தன்மைக்காகவும்தான் ஏங்கினோம். நாங்கள் ஒன்றாக வாழ்வது என்று முடிவு செய்ததற்கு இவைகளே மிகப்பெரிய காரணம்.

நாங்கள் இருவரும் வித்தியாசமானவர்கள். எனக்கு ஒளிரும் நிறங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வயதில்கூட உதட்டுச்சாயம் பூசுவதை நான் விரும்புகிறேன்.

ஆனால் என் தோழி நாராயணிக்கோ லேசான நிறங்கள்தான் பிடிக்கும். நான் எப்போதும் ஹீல்ஸ் செருப்பு அணிவேன். ஆனால் அவளோ கட்டையான செருப்பைத்தான் எப்போதும் அணிவாள்.

நான் டிவி பார்க்கும் போதெல்லாம், அவள் அதில் ஈடுபாடு காண்பிக்க மாட்டாள். ஆனால் பாலிமர் டிவி சேனலில் மட்டும் செய்திகள் பார்ப்பாள். மற்ற அனைத்து தமிழ்ச் சேனல்களும் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவை. ஏற்கனவே பணத்திற்கு விலை போய்விட்ட சேனல்கள் என்பாள்.

இது நமது வாழ்க்கை. சில சுவாரஸ்யமான வேடிக்கைகள் மற்றும் நம் வாழ்க்கையை நம் விருப்பப்படி வாழ்வதற்கான முழு சுதந்திரமும் நமக்கு உள்ளது.

நங்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறோம். ஆனால் ஒருவர் மற்றவரின் தனிப்பட்ட உலகத்தில் ஒருபோதும் தலையிடுவதில்லை.

நவீனகால திருமணங்களில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. உறவுகளுக்கு இடையே அதிக எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. அந்த எதிர்பார்ப்புகளின் பளு தாங்க முடியாமல் உறவுகள் முறிந்து விடுகின்றன.

அப்படி முடிந்துபோன திருமணம்தான் என்னுடையதும். ஆனால் அது முடிந்துபோன கதை. அதன் பக்கங்களை நான் மீண்டும் புரட்ட விரும்பவில்லை. என் குழந்தைகள் எல்லாம் வளர்ந்து தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.

எனது தோழி நாராயணி தனிமையில் வாழ்வதையே எப்போதும் விரும்புவாள். அதனால்தான் திருமணமே செய்து கொள்ளாமல் இப்போதும் அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஏனென்றால் ஒரு வகையில் நாங்கள் ஒன்றாக இருந்தாலும், தனியாகவே வாழ்கிறோம். பல ஆண்டுகள் நாங்கள் ஒன்றாக வாழ்ந்த போதிலும் கூட அடிக்கடி ஒருவருக்கு ஒருவரின் புதிய பழக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறோம்.

எங்கள் உறவின் அழகே என்னவென்றால் இப்போது வரை ஒருவரைப் பற்றி மற்றவருக்கு முழுமையாகத் தெரியாது என்பதுதான். இந்த உறவு இன்னமும் அழகாக இருப்பதற்கு இதுவே காரணம்.

ஒருவருக்கொருவர் மட்டுமே சேர்ந்து வாழும் வாழ்க்கை சலித்துப் போகாதா என்று பலர் எங்களிடம் கேட்பார்கள். ஆனால் உண்மையில் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதே அரிது.

நாங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், பல நேரங்களில் உணவருந்தும் மேசையில்தான் சந்திப்போம். பின்னர் அவரவர் வேலைகளில் சுறுசுறுப்பாகி விடுவோம்.

நாங்கள் வேலை செய்த காலத்தில் எங்களுக்கு இருந்த இந்தப் பழக்கம் இப்போதுவரை தொடர்கிறது. ஆரம்பத்தில் எங்கள் வீட்டுப் பணிப்பெண் முற்றிலும் குழம்பிப் போனாள்.

எங்களுக்கு உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா? வயதில் இளைய நபர் யாராவது வந்து எங்களுடன் இருக்க மாட்டார்களா? என்று அவள் எங்களிடம் அடிக்கடி கேட்பாள். அவளது கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை.

எங்களுக்கு நிறைய நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இருவரும் ஒன்றாக வாழும் வாழ்க்கையைத்தான் நாங்கள் விரும்பித் தேர்வு செய்தோம் என்றெல்லாம் விளக்கம் அளிக்க நான் விரும்பவில்லை.

ஓர் ஆண் துணை இல்லாமல் வீட்டில் தனியாக வாழ்ந்தால் கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக அவள் எங்களை பயமுறுத்துவாள். அவளது வார்த்தைகளைக் கேட்டால் எனக்கு சிரிப்புதான் வரும்.

ஒரு திருடன் திருட நினைக்கும் எந்த ஒரு பொருள் கூட எங்கள் வீட்டில் இல்லை என்று ஒருநாள் அவளிடம் விளக்கமும் அளித்துவிட்டேன். ,

இருண்ட வர்ணம் பூசப்பட்ட எங்கள் வீட்டுச் சுவர்களைப் பார்த்தாலே, எந்த மாதரியான ஆட்கள் இங்கு வசிக்கிறார்கள் என்பது அவனுக்கே தெரிந்து விடும். பணிப்பெண் என்னைப் புரிந்துகொள்ள முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது எங்கள் வாழ்க்கை குறித்து அவளது கவலையும் மறுப்பும் தெரிவிப்பாள்.

நல்ல சங்கதி என்னவென்றால் நாங்கள் ஒன்றாக எப்படி வாழ வேண்டும் என்று கற்பனை செய்திருந்தோமோ அத்தகைய வாழ்க்கையைத்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நான் அமைதியான சிந்தனையுடன் காலையில் எழுவேன். எங்கள் வாழ்க்கையில் எந்த அவசரமும் கிடையாது. எனது நாளை மன அழுத்தத்தோடு துவங்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை. மாறாக ஒவ்வொரு காலையும் என்னைப்பற்றி கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.

உறவுகளின் பொறுப்பில் இருந்து விலகி ஓடவே இத்தகைய வாழ்க்கையைத் தேர்ந்த்தெடுத்தோம் என்று இதற்கு அர்த்தமில்லை. பலர் எங்களைச் சந்தித்தாலோ அல்லது பார்க்க வந்தாலோ எங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை. கவலையற்ற வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள்.

ஆனால் தனிப்பட்ட முறையில் ஒருவரின் சொந்த வாழ்க்கையை அவரே நிர்வகிப்பது என்பது ஒரு பொறுப்பில்லையா என்ன? எங்களது தேவைகளுக்கு வேறு எவரையும் நாங்கள் சார்ந்திருக்கவில்லை. அது சிறப்பான விஷயமில்லையா?

முதலில் நாங்கள் ஒன்றாக இருப்பதைப் பார்த்து பலரும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாகவும்; எங்கள் இருவருக்கிடையில் ஏதோ இருப்பதாகவும் நினைத்தார்கள். சிலர் வக்கிர புத்தியுடன் நாங்கள் லெஸ்பியன் என்றும் கிசுகிசுத்தார்கள். ஆனால் மக்களின் பார்வையில் எங்களைப் பற்றிய அபிப்பிராயத்தை திருத்துவது அல்லது அதற்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுப்பது எனக்கு முக்கியம் இல்லை.

நான் குங்குமம் வைத்துக் கொள்வேன்; மெட்டி அணிவேன்; தங்க மூக்குத்தியும் அணிவேன். என் மனதில் ஆசைகள் உள்ளவரை இதையெல்லாம் அணிவேன். இவையெல்லாம் அலுத்துப் போன பிறகு இதை நானே நிறுத்தி விடுவேன்.

இந்த உறவிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், உங்கள் வாழ்க்கையை யாருடன் வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் உங்கள் வாழ்க்கையில் அதிகமாகத் தலையிடாதவர்களுடன்தான் உங்களால் உங்களுக்கான வாழ்க்கையை வாழ முடியும்.

மக்கள் எங்களது சீரான வாழ்க்கையை வினோதமாகப் பார்க்கிறார்கள். ஆனால் இது ஏன் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் எங்களது வாழ்க்கையை நாங்களே வாழ்ந்து கொண்டிருக்கும் இரு தோழிகள். அவ்வளவுதான்!!

நான் அவளிடம் அதிகமாக எதுவும் கேட்கமாட்டேன்; சொல்லவும் மாட்டேன். நாராயணியும் அப்படித்தான். எங்கள் வாழ்க்கையின் பக்கங்களில் நாங்கள் மட்டுமே. உள்ளடக்கம்.

இதில் என்ன வினோதம் இருக்கிறது? நான் சொல்வது சரிதானே?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *