Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தோழர்

 

பாரதி கலவன் பாடசாலை”என்ற மரப்பலகை,வளவின் வாயிற் பகுதியில் மழை,வெய்யிலில் காய்ந்து பெயின்ற்ரில் சில புள்ளிகள் உதிர்ந்து நின்றது.நகுலன்,நண்பன் மதியுடன் பள்ளிக்கூடத்திற்குள் நுழைகிறான்

. “டேய் கெதியாய் போவோம்,பெல் அடிக்கப் போறதடா”என்று மதி துரிதப் படுத்தினான்.

2‍..3.கிலோ மீற்றர் தூர சுற்று வட்டாரத்தில் குடியிருப்புக்களைக் கொண்ட கிராமம் அது!செட்டியார் பகுதியில் நகுலன் இருப்பவன் நட்பு வேரிட்டதால் வரும் போது,.ஒரு கிலோ மீற்றர் தூரம் தள்ளிய சந்தையடியில் மதி யையும். கூட்டிக் கொண்டு வருவான் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூர வட்டடத்திலே எல்லாரின் அயலும் இருந்ததால்,பள்ளிக்கூடம் மதியம் விட்டால் வீட்ட போய்யே சாப்பிட்டு விட்டு பொடி நடையில் திரும்புவார்கள்.தூர இடத்திலிருந்து வார ஆசிரியரை விட எவருமே சாப்பாடு கட்டி வந்து பள்ளியில் சாப்பிடுற பழக்கம் இருக்கவில்லை. மதி யமும் காத்திருப்பான். சேர்ந்தே வருவார்கள்

அவர்களுடைய 8ம் வகுப்பில் 15…20 பேர்களாக பெண்கள் இருந்தார்கள்.எல்லா வகுப்புகளிலும் சராசரியாக அப்படித் தான் இருந்தார்கள்.ஆண்கள் தம் மத்தியில் நட்புடன் பழகினார்கள் தவிர பெண்களை அவ்வளவாகக் கவனிப்பதில்லை. வெள்ளை நாரை போல ஒல்லிக்குச்சியாக சாரதா,கொஞ்சம் அளவாக சதை போட்ட புவனா‍,சிரிச்சா அழகாகத் தான் தெரிவாள்.குறுகுறுவென அளவெடுக்கிற மாதிரி பார்த்து ஏதாவது சொல்லி பெடியளை சினமேற்றி விடுற சியாமளா,ஓரே ஆண்டில் பிறந்திருந்தாலும் மாதத்தில் மூத்தவளாக இருப்பாள் போல தோன்றியது.சின்னப் பெட்டைகளாக ராசாத்தி,பவானி,சரசு..பெரும் கூட்டம் தான்.

இவர்களை பெடியள் பார்க்காட்டியும்,பெடியள்களை …பார்க்கவே செய்தார்கள்.வகுப்பில் சொல்லி வைத்தாற் போல பெட்டைகள் அனைவரும் படிப்பில் சுமாராகவே இருந்தார்கள்.கணக்குப் பாடத்தைப் பார்த்து வெகுவாகப் பயப்பட்டார்கள். சிலசமயம், ஆசிரியர்களிடம் திட்டு, ,ஏச்சு வாங்கிய பிறகு, பெடியள்களிடம் வந்து,”எப்படி விடை வந்தது?”என்று கேட்டு,கரும்பலகையில் போட்டுக் காட்ட கவனிப்பார்கள்.

கேட்டால் பெடியள் சொல்லிக் கொடுப்பார்கள்..என இருசாரார்களுக்குமிடையில் மரியாதை இருக்கவே செய்தது.பெடியள், அவர்களை பொருட்டாகக் கவனிக்கவில்லை என்பது தான் குறை. அந்த நாட்களில் படிக்கிறது,வீட்டு வேலை செய்வது,பெடியள்களுக்கிடையில் விளையாட்டு..என . மும்முரமாக இருந்ததால் பருவ வயது பற்றிய எண்ணங்கள் எழ‌ நேரமே இல்லாதிருந்தது.

சினிமாப்படங்களிலும் பெடியள்களுக்கு டூயட் பாடல்களில் எல்லாம் ரசனை இருக்கவில்லை சண்டைப் பகுதிகளில் தான் விருப்பம் அதிகம்.பிறகு உயர் வகுப்பில், படிக்கிறதே போராட்டமாகக் கிடக்க,கல்வியில் புகுத்தப் பட்ட அரசின் இனவாத தரப்படுத்தல் முறைகளாலும்,,வேலை வாய்ப்பு களிலும் கூட இனத்தை வைத்து வைத்து விளையாடியதாலும்…விடுதலை இயக்கங்களில் அள்ளுப்பட்டதால்…பிறகும் பெடியள்களிற்குப் பெண்களைப் பார்க்கிற‌தும் தவறி விட்டன.

இயக்கங்களிலும் பெண்களை சைட் அடித்தால்…போதைப் பொருள்களுக்கான குற்றமாக..இருந்ததால் பெண் தேவதையாய் தெரியாமலே போய் விட்டாள்.

பெண்கள் 8ம் வகுப்பு,9ம் வகுப்பு,10ம் வகுப்பு …மட்டுமே படித்தார்கள்.ஒல்லிகள் கையைப் பிடித்தால் முறிந்து விடுவார்கள் போல அப்படியே இருந்தார்கள்.வெளிறிய அவர்களது நிறம் அவ்வளவாக மாறவில்லை.11ம் வகுப்புக்கு அவர்களில் ஒருத்தரால் கூட தேற முடியவில்லை.முதலாம் தேர்வில் 5 பெடியள்..மதியும் நகுலன் உட்பட தேறியவர்கள்.2ம் முறையில் 10 பெடியள் என கிட்டத்தட்ட முழுப் பெடியள்களுமே உயர் வகுப்பில் கால் வைத்து விட்டார்கள்.உயர் வகுப்பு பாரதிக் கிராமத்தில் இருக்கவில்லை.எனவே அயலில் இருந்த பட்டின,,நகரசபைப் பகுதிகளில் இருந்தபள்ளிக்கூடங்களுக்கு என சிதறல்களாக அவரவர் விருப்பத்தின்படி விண்ணப்பித்து சேர்ந்து விட்டார்கள்.

10ம் வகுப்பு பெட்டைகளுக்கு முற்றுப் புள்ளி என்றால்,11ம் வகுப்பு பெடியள்களுக்கு முற்றுப் புள்ளியாகியது.

எவ்வளவு சூடிகையானவரும் கூட ஏனோ தேறி பல்கலைக்கழகம் போக முடியாது போய் விட்டது.

பழையபடி கிராம வாசம். தள்ளப் பட்டிருந்தார்கள்.

அவர்களுக்கு இப்ப தம்மோடு படித்த பெட்டை யார்?யார்? என்பது கூட தெரியாத அளவிற்கு மறந்து விட்டிருந்தது.கடந்த 2..3 வருசங்களில் பெட்டைகள் சிலர் அழகிகளாகவும் மாறி இருந்தார்கள்.பெடியள்களை சதா நக்கலடித்த சியாமளா கல்யாணம் கட்டி 2 பிள்ளைகளுக்கு தாயாகியும் விட்டாள்.அவளுக்கு உறவுக்காரனான உதயனை சந்திப்பதாலே நகுலனுக்கு தெரிய வந்தது.மதியோடு மதகடியில் கதைத்துக் கொண்டிருக்க..சாரதா அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு போனாள்.”யார் தெரிகிறதா?”என்று மதி கேட்டான்.”தெரியல்லை,அழகி படத்திலே வாரவள் போல இருக்கிறாளே யார்?”எனக் கேட்டான்.”நம்ம ஒல்லி நாரை சாரதாவடா அவள்”என்று மதி சிரித்தான்.நகுலனால் நம்ப முடியவில்லை.வெளிறிய நிறம்,கை,கால் எனப் பிடித்தாலும் ஒடிந்து விடும் போல மெலிந்து கிடந்தவள்.

இவர்களுக்குத் தான் தெரியவில்லை தவிர அவர்கள் அனைவருக்கும் தங்களோடு படித்த பெடியள் அனைவரையும் எப்பவும் தெரிந்திருந்தன.

இனி மேல்ப் படிப்பு இல்லை.இருக்கிற படிப்பை வைத்து வேலைக்கு விண்ணப்பம் அனுப்பலாம் என 2 கிழமைக்கொரு தடவை மதியும்,நகுலனும் தபால் கந்தோருக்கு வந்து வார கெசட்டில் பார்த்து அனுப்புவார்கள்.நயவஞ்சக சிங்கள அரசாங்கம் அவற்றை கிணற்றில் போடுற கல்லாகவே ஆக்கி விடும்.வெறுப்பு,விரக்தி.”சே! இருந்த‌ படிப்பு தொடர்ந்திருந்தாலாவது பொழுது போய்யிருக்குமே”என்று புலம்ப,உபதபால் அதிபர்”ஏன் தம்பிகளா தொழிநுட்பக் கல்லூரியில் படிக்கிறதுக்கு கெசட்டில் வருகிறதே விண்ணப்பித்து போய் படிக்கப் பாருங்களன்”என்று ஆலோசனை கூறினார்.

அவருக்கும் அனுபவம் இருந்தது.தமிழரசுக் கட்சி ஆட்சியில் இருந்த போது,அவருடைய அப்பாவிற்கு அவர்களுக்கிடையில் இருந்த செல்வாக்கால் அவ்வேலையைப் பெற்றுக் கொண்டார்.அது கேவலமில்லை. சில‌ தமிழ்ப் பெடியள் இப்படியான வழிகளாலேயே வேலை பெற்றுக் கொள்வதாக இருந்தது.

அதற்கும் கொடுப்பனை வேண்டும்.இவர்களுக்கு என்னவோ செல்வாக்கான உறவினர்கள் யாரும் அப்படி இருக்கவில்லை.தவிர ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு மாறியதால்..நல்ல தேர்வுப் புள்ளிகள் எடுத்த மாணவர்களுக்கு கூட பல்கலைக்கழக நுழைவதற்கான கதவுகள் மூடிக் கொண்டன.அது பெரிய குழப்பத்தையே ஏற்படுத்தி விட்டிருந்தது.இந்த நிலையில் இவர்களது பிரச்சனையை யார் கவனிக்கப் போகின்றார்கள்?

நயவஞ்சக சிங்கள அரசுக்கெதிராக விரக்தியடைந்த மாணவர்கள் குழுக்களாகி விரைவிலே ஆயுதங்களையும் தூக் கி விட்டார்கள்.ஆரம்பத்தில் அவர்களுக்கான ஆயுதங்கள் சிங்கள கிளர்ச்சி மாணவ இயக்கங்களிடமிருந்தே வந்து சேர்ந்தன.பிறகு ஊர் வழியே,வங்கி வழியே,சிறிய பொலிஸ் நிலையங்களைத் தாக்கியும் எடுத்துக் கொண்டார்கள்.தமிழர் பகுதியிலும் அக்குழுக்களின் பெருப்பித்த வடிவமாக இயக்கங்களாகத் தொடங்கின.

பாரதிக் கிராமத்திலும் வள்ளுவர் இயக்கம் செல்வாக்கு பெற்றிருந்தது.கிராமப் பொருப்பாளராக சேந்தன் புதிய முகம்.யாழ்ப்பாண ஜவுளிக் கடையில் வேலைப் பார்த்த கிராமத்துப் பெண் நந்தினியை காதலித்து கல்யாணம் முடித்து வந்த அயலூரைச் சேர்ந்தவன்.

மதி”நான் இயக்கத்திலே வரேலையப்பா,நீ வேணுமானால் போய்ச் சேர்ரு.ஆளை விடப்பா”என கழன்று விட்டான்.விரக்தியில் இருந்த நகுலன் போய் சேந்தனைச் சந்தித்தான்.வீட்டினுள் இருந்து எட்டிப் பார்த்து “நான் சொன்னேன்னில்லையா,என்னோடு படித்த நகுலன் இவர் தானப்பா”என்றாள் நந்தினி என்கிற அந்தப் பெண்.

இவள் என்னோடு படித்தவளா?நகுலனுக்கு ஆச்சரியமாக இருந்தது.அவளைப் பார்க்க வெட்கமாகவும் இருந்தது.பெட்டைகள் கூடப் படித்த‌ எல்லாப் பெடியள்களையும் தோழர்களாகப் பார்க்கிறார்கள் தெரிந்திருக்கிறது.மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.ஆனால் பெடியள்களுக்கோ பெட்டைகள் சொன்னால் தான் நம்மோடு படித்தவர்கள் என தெரிகிறது.

“வா!நகுலன்,என்ன விசயம்?”என்று சேந்தன் மரியாதையாக வரவேற்றான். “அங்காலப் போய்க் கதைப்போமா?”என்று கேட்டான்.நந்தினி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.இயக்கத்தில் சேர வந்திருக்கிறான் என்பது அவளுக்கு தெரியாதா?,அவள்”இதிலை இருந்தே தாராளமாக கதைக்கலாம்.நான் உங்களுக்கு ‘டீ’போடப் போறேன்”என்று விட்டு உள்ளே போனாள்.திரும்பவும் நகுலன் கூனிக்குறுகிப் போனான்.

மண் குந்திலே இருந்து சேர விரும்புறதைத் தெரிவித்தான்.சேந்தன் தோழனாக மட்டுமில்லை,நண்பனாகவும் ஏற்றுக் கொண்டான்.

இயக்க அரசியலில் ..ராணுவத்தின் கையில் அகப்படாது 2 வருடங்கள் உருண்டோடின

நகுலனும் இந்தியாப் போய் பயிற்சி எடுக்க விருப்பம் தெரிவித்த போது அவனை எ.ஜி.எ அமைப்பிடம் அனுப்பி வைத்திருந்தான்.

விதி என்பது வாழ்க்கையில் மட்டுமில்லை இயக்கங்களிலும் விளையாடும்.இந்தியாவுக்கு அனுப்பும் கடைசிக் குழுவில் அவன் உட்பட 15 பேர்கள் சேர்ந்திருந்தார்கள்.அத்தனை பேரையும் சுமார் ஒரு மாதம் வரையில் எ.ஜி.எ அமைப்பு போசித்து,இயக்க நிலவரங்களைக் கற்பித்து,சூழ்நிலைகளைப் பொறுத்து இரவுகளில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி,மாற்றி படகுக்காக காத்திருந்தது.

இவர்களை ஏற்றிச் செல்கிற படகு இந்தியாவிலிருந்து இங்கிருந்த ஒரு தோழரின் மனைவியையும்,பிள்ளையையும் ஏற்றி வார போது,ராணுவத்தால் துரத்தப்பட்டு,படகு கவிழ்ந்து ,அவர்கள் பரிதாப மரணத்தைத் தழுவ,கடலில் நீந்திக் கொண்டிருந்த ஓட்டிகள்,பிறகு ஒருவாறு படகை நேராக்கி..வலுவான உடல் வாகைக் கொண்டிருந்தவர்கள்..வந்து சேர்ந்தார்கள்.அந்த துயரச் சம்பவம் அத்தோழருடன் அப்பகுதி முழுதையும் அழ வைத்து விட்டது.

காற்றும் அலையும் வேறு கிடந்தன.அவர்களை ஏற்றிச் செல்கிற மனநிலையும் ஓட்டிகளுக்கு இருக்கவில்லை.எனவே மேலும் ஒரு மாசமாகவே நீண்டு விட்டது.

அதோடு பின்தளத்திலும்,களத்திலும் அவ்வியக்கத் தோழர்கள் மத்தியில் அரசியல் பிரச்சனைகள் எழுந்து கூர்மை அடைந்து விட்டன.கடைசியில், அப்பயண ஏற்பாட்டை கை விட்டே விட்டு விட்டார்கள்.

எப்பையோ தீர்மானிக்கப் பட்ட விதி அது !

சேந்தனுக்கு பிள்ளை பிறக்க நகுலனை பொறுப்பாளாராக்கி விட்டு,அவன் தோழனாகச் செயற்படத் தொடங்கி விட்டான்

.”பயப்படாதே!உன் கூட எப்பவும் இருப்பேன்”என்றான்.எ.ஜி.எ இலே இருக்கிற விசயனும் அவனுடைய தெரிவுக் கூட்டத்தில்”நீ பயிற்சிக்கு போகாததைப் பற்றி கவலைப் படாதே!ஒரு காலத்தில் இங்கே இருப்பதைப் பற்றி பெருமையாக நினைப்பாய்!ஏனேனில் ‘களம்’தான் பின்தளத்தை விட முக்கியமான பகுதி,பாரேன்! “என்று கருத்து தெரிவித்தான்.அங்கே இருந்த காலங்களில் அவனும் நண்பனாகி விட்டவன்.

பின்தளமும்,களமும் இரண்டாகி .. பிரிந்து விட்டதோ என்கிற அளவிற்கு குழப்பகரமான பிரச்சனைகள் எழுந்தன. .அங்கே, பெருமளவில் சேர்த்த ஆயுதங்களை இங்கே அனுப்ப முதல்,இந்திய புலனாய்வுக் காவலர்கள் கைப்பற்றிய பெரிய இழப்பும் நேர்ந்தது.எவ்வளவோ பேச்சு வார்த்தைகள் நடத்தியும் ‘தண்டிப்பது ‘போல‌ அவற்றைக் கொடாதே விட்டு விட்டது.

இயக்கங்களுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டதா?விளையாடியதா?எனத் தெரியவில்லை.அதேசமயம் நம் வீரத் தோழர்களும் ஆயுதம் ஏந்தி அங்கே வலம் வரும் போது நிறைய சினிமாத் தனங்களையும் நிறைவேற்றி,அட்டகாசமாக வெறுப்பேற்றி இருக்கிறார்கள்.சில தோழர்கள் மீது வழக்குகளும் கூட பதிவாகி இருந்தன.ஆனால் ஆயுதங்களை பறித்ததிற்கு அரசியல் காரணங்களே அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகின்றன.

ஆயுதமற்ற இயக்கங்கள் என்கவுண்டரில் போடப்படுற நிலையில் இருப்பவர்கள் போன்றவர்கள் தானே!

உட்கட்சிப் போராட்டம்,தவிர ஆயுதமில்லாத நிலை.பகை இயக்கம் வேட்டையாடல்களை ஆரம்பித்து விட்டிருந்தது.ராணுவத்திற்காக ஓடுபட்ட ஓட்டம் மாறி, இப்ப இயக்கத்திற்காக நேர்ந்தது துர்ப்பாக்கியம்.

நாளை இவனும் உதவியாக கரத்தைத் தருவான் என்ற ‘யதார்த்தம்’பகையால் மறந்தே போய் விட்டது.நாளை இவர்களுக்காக போராட இருப்பவர்களை இவர்களே இல்லாமல் செய்கிறார்கள்.

சேந்தன் குடும்பஸ்தன்! விலகின நிலைக்குள்ளானவன் என்பதால் ஆபத்து சிறிது குறைந்திருந்தது.நகுலன் பொறுப்பாளன்.குறி அவனை நோக்கி திரும்புறதை புரிந்து கொண்டான்.எ.ஜி.எ அமைப்பு, தோழர்களை “எவ்வளவு கெதியாய் ஏலுமோ கொழும்புக்கு மாறி விடுங்கடா” என்ற அபாய அறிவிப்பை அறிவித்து விட்டது.ஆயுதமில்லை.விட்டில் பூச்சிகளைப் போல இறப்பதே நிகழும்.தப்பிப் பிழைத்தால் ஒரு காலத்திலாவது அணி திரளமல்லவா!

ஆனால், விடுதலைப் போராட்டம் …யாருக்காக ஆயுதம் ஏந்தப் படப் போகிறது?எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.”உன்னை திருத்தாமல் உலகை திருத்த முடியாதடா”என்ற காந்தி அண்ணலின் வாக்கு இங்கேயும் ஆச்சரியமாக பொறுந்துகிறது.

கொழும்புக்கு ஓடிப் போக கிராமத்தவர்களும் கூட‌ உதவினார்கள்.விரைவு ஓட்டம்.இல்லாவிட்டால் வீதியில்…. கிடக்க வேண்டும்.

நகுலனின் சகோதரர்கள் வெளிநாட்டில் இருந்தார்கள்.ஆனால் உடனடியாக எடுக்க அவ்வரசாங்கள் விடுவதில்லையே!நிறைய விசாரணைகள்.வரி வசூலிப்பது போல ஒவ்வொரு தடவையும் வசூலிக்கும்.அகதியாக வர அதற்கு திருப்தி வர வேண்டும்.நீண்ட இழுத்தடிப்புக்கள்.அகதியாக முடியாமலும் தோல்வியைக் கூட‌ தழுவலாம்.

கொழும்பிலே இருந்தாக வேண்டும்.அவன் பாதுகாப்பாக தங்க இடம் கிடைக்கவில்லை.லொட்ஜ் ஒன்றிலே தங்க முடிந்தது.அவனோடு படித்த நண்பனின் அண்ணரின் குடும்பம் ஒன்று கொழும்பில் இன்னொரு பகுதியில் இருந்தது.”அவரைப் போய் சந்தி!ஏதும் உதவி செய்ய முடியும் என்றால் கட்டாயம் செய்வார்.”என்று அவன் போனில் கதைத்தான்.

புல்லும் ஆயுதம் தானே! போய் பார்த்தான் அண்ணருடன் நண்பனின் தம்பிக்காரனும் தங்கி இருந்தான்.அனைவரும் அன்போடு விசாரித்தார்கள்.”ஏதாவது வேலை எடுக்கலாமா என்று தேடிப் பார்க்கிறேன்,மனதை தளர விடாதே”என்ற அண்ணர் வேலைக்கு நேரமாகி விட வெளியப் போனார்.தம்பி, அவனை விட மூன்று,நாலு வயசு குறைந்தவன்.இருந்தாலும்,தன்னுடைய பிரச்சனையை சொன்னான்.”அண்ணர் காசு அனுப்பி இருக்கிறார்.லொட்ஜிலே இருக்கிறேன்.பாதுகாப்பாக வைத்திருக்க முடியாதிருக்கிறதடா,என்ன செய்யிறது என்று தெரியவில்லை”என்றான்.

“ப்..பூ!இது தானா பிரச்சனை.எங்கட அண்ணி யார் தெரியுமா?”என்று கேட்டான்.’டீ’கொண்டு வந்து தந்தவர் தான்.அவனுக்கு தெரியவில்லை.”யார்?”என்று கேட்டான்.”உங்களோடு படித்தவர் தான்.பவானி ஞாபகம் இருக்கிறதா?வெளிநாட்டு அண்ணர் இங்கே எங்களை வந்து பார்க்கச் சொன்னது..அண்ணி இங்கே இருக்கிறார்’என்ற தைரியத்தில் தான்”என்றான்.

வகுப்பில் சிறிய பெட்டைகளாக இருந்த ராசாத்தி,சரசு,பவானி..களில் ஒருத்தியா இவள் !இப்ப அவனை விடவே உயர்ந்து பெரிய பொம்பிள்ளையாக இருந்தாள்.இல்லாவிட்டாலும் கூட …அவனால் அடையாளம் கண்டு கொண்டிருக்க முடியாது தான்.”காசை நீ இங்கே பவானி அண்ணிட்ட கொடு.உனக்கு தேவைப்படுற போது எடுத்து தாரேன்”என்றான்.”உனக்கு எங்கையாவது வேலை எடுத்துக் கொடுக்கச் சொல்லி அவதான் பெரியண்ணையை வற்புறுத்தி இருக்கிறார்”என்றான்.

அவன் மறுபடியும் தோற்றுப் போய்யே விட்டான்.

அவர்கள் பெண்கள் தரப்பை ஒரு பொருட்டாகவே பார்த்ததில்லை.ஆனால் எல்லாப் பெண்களும் தங்களோடு படித்தவர்களை மரியாதையுடன் தான் பார்க்கிறார்கள்.இவர்களால் அவர்களை அடையாளமே காணவே முடியவில்லை.எல்லோரும் இவர்களை இலகுவாகவே கண்டு பிடித்தும் விடுகிறார்கள்.

பெண்கள் ,தோழர்களாக பார்க்கப் பழகி விட்டார்கள் இவர்கள் தான் பழக வில்லை. என்று தான் நிகழ போகிறதோ? 

தொடர்புடைய சிறுகதைகள்
கிருஸ்சை சந்திப்பதற்காக கொட்டக்காட்டுப் பக்கமாக சென்றபோது வீதியில் ஒரே சனப்புழக்கமாக இருந்தது. வசந்தி உட்பட சிறுவர் சிறுமிகள் நீர் நிரப்பிய வாளிகளுடன், கைகளில் சிறிய பிளாஸ்டிக் குவளைகளை வைத்தவாறு...பரபரப்புடன் காத்திருந்தார்கள். பொம்பிள்ளைப் பிள்ளைகளின் சிரிப்பும், பேச்சும், நளின அசைவுகளும் எப்பவும் ரசிக்ககூடியனவாகவே ...
மேலும் கதையை படிக்க...
ஆசிரியர் குறிப்பு: இந்தக் கதை 1990 களிலிருந்து கனடாவிலிருந்து, வெளியான 'தாயகம்'பத்திரிகையில் தொடராக வெளியானது.98இல் அண்ணரின் முயற்சியில் குமரன் வெளியீடாக 'வேலிகள்' என வெளியாகிய சிறுகதைகள் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. என்னுடைய முதலும் முடிவுமான ஒரே புத்தகம் அது தான்! நூலகத் தளத்திலும் ...
மேலும் கதையை படிக்க...
மருமகப்பிள்ளைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த கடிதத்தை சாவித்திரி தான் தபால்காரனிடமிருந்து வாங்கினாள்.அதிலிருந்த..விஜயாவின் கையெழுத்தை அவளால் மறக்க முடியுமா?சிறுபிராயம் தொட்டு ..A/L வரையிலும் ஒன்றாய் படித்ததில்..நட்பின் நெருக்கம் ஆழ்போல் வளர்ந்திருந்தது.சின்னச் சின்ன சந்தோசங்கள்..எத்தனை..எத்தனை!மற்றவர்களுடன் விளையாடுற போதும் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணித் தான் நிற்பார்கள்.உயிர்ச் ...
மேலும் கதையை படிக்க...
சீக்'இளைஞன் போல இருந்தான்.ஆனால்,தலையில் சிறிய கொண்டையோ,சுற்றிய துணியோ..இருக்கவில்லை.வேற யாரோவோ? வோக்கருடன்,அவனுடைய உடம்பு அங்கையும்,இங்கையும் ஆட காலை இழுத்து இழுத்து வந்தான்.பார்க்க பரிதாபமாக இருந்தான். என் வயசை விட குறைவாகவே இருப்பான்.உருவத்தில் என்னை விட பெரிய தோற்றம்.மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறிலங்கனை விட ...
மேலும் கதையை படிக்க...
ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. 'டாக்ஸி'யில் இருக்கிற ஓட்டி 'ஒவனு'க்குள் இருக்கிற மாதிரி துன்பப்பட வேண்டியிருக்கிறது.பின்னால் இருக்கிறவர்களுக்கு ஒருவித சொகுசுப் ...
மேலும் கதையை படிக்க...
மரதன் ஓட்டம்
வெகுண்ட உள்ளங்கள் (குறுநாவல்)
தடைகள்
சருகு இளைஞன்!
சமூகக்குற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)