தோட்டியின் பிள்ளை

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 8,118 
 

பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துக்கொண்டு போனது. கோவிந்தன் ரெண்டு கிளாஸ் பட்டைச் சாராயத்தை ஊத்திக்கொண்டு ஆடுபவரின் ஆட்டத்திற்கு தகுந்தார் போல் மேளத்தைத் தட்டிக் கொண்டிருந்தான். கையிலே பறை மேளத்தை வைத்துக்கொண்டு ஒரு பக்கமாய் தலைச்சாய்த்து கொட்டு அடிப்பதில் கோவிந்தனுக்கு அலாதி பிரியம்தான். அதிலும் சாவு என்று வந்துவிட்டால் தலையை ஆட்டி உடம்போடு காலும் சேர்த்து முன்னாலையும் பின்னாலையும் சென்று ஆடுவான். கோவிந்தனுடைய கொட்டும் ஆட்டமும் அந்த ஊர் மக்களிடையே ரொம்ப பிரசித்தி. யாராவது அவனிடம் “ஏண்டா கோவிந்தா சாவு வீட்டுகாரங்க ரொம்பவும் துக்கத்துல இருக்காங்க. நீ மட்டும் இப்படி ஆட்டம் போடுறீயே இது நல்லாவா இருக்கு” என்று கேட்டால், “பிறக்கும்போது எப்படி சந்தோசமா பொறக்குறோமோ அதுபோல இறந்து காட்டுக்கு போற இப்பவும் இவுங்க சந்தோசமா இருக்கணும்” என்று சொல்லுவான். அப்படித்தான் இன்றும் ஆடிக்கொண்டிருக்கின்றான். கால் கட்டை விரல் கட்டப்பட்டு கைகள் விரைத்த நிலையில் தலையில் ஒரு ரூபாய் நாணயத்துடன் பாஞ்சாலைக் கிழவி பாடையில் ஏற்றப்பட்டு சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டாள்.

நான்கு தூண்களால் தார்ஸ் போடப்பட்ட நிழற் கூடம். அதாவது யாரோ ஒருவரின் சமாதி. பணம் இருக்கிறவன் பலம் இருக்கிறவன் செத்தும் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவன். ஏழைகளோ பிணம் புதைத்த குழிக்குள் மீண்டும் விழுவார்கள். ஊர் தர்மகர்த்தா, மணியார் மற்றும் பாஞ்சாலை கிழவிக்குச் சம்பந்தகார்கள் அமர்ந்திருந்தார்கள். தோட்டி, ஏகாலி, குடிமகன் போன்றோர்கள் அவர்கள் செய்த வேலைக்கு கூலி வாங்குவதற்காகக் காத்திருந்தனர். ஏகாலி ரெண்டு பேர் எட்டு ரூபாய். “தோட்டி எத்தனை பேர்யா?” என்றார் மணியார். “சாமி நாங்க நாலு பேர்” என்றான் கோவிந்தன். இந்தா… என்று ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களையும் இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களையும் கொடுத்தார் மணியார். கோவிந்தன் முதலில் கை நீட்டி அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டான். குடிமகன், ஏகாலி ஆகியோர்க்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

இடுப்பில் கட்டிய துண்டும், குனிந்த முதுகுமாய், இருகைக் கூப்பி வணங்கியபடியே நின்றிருந்தார்கள். “என்ன எல்லாம் முடிஞ்சுதா? போயி அவுங்க அவுங்க வேலையைப் பாருங்க” என்றார் ஊர் தர்மகர்த்தா. தோட்டிகள் நிற்கிற இடத்தில் இருந்து கூச்சல் வருவது மணியாருக்குத் தெரிந்தது. “என்னாடா அங்க…” என்றார் மணியார். “காசு பத்தல… இன்னும் ரெண்டு ரூபா போட்டுக் கொடுங்க சாமி…” என்றான் கோவிந்தன். கண்டிப்பாக அவன் பேசியது அவனுக்கே கேட்டிருக்காது. பயந்து கொண்டே அவ்வளவு மெதுவாகத்தான் சொன்னான். ஆனாலும் மணியாருக்கு கேட்டுருச்சு. “போப்போ… அதெல்லாம் சரியாகத்தான் குடுத்திருக்கு. வேணுமின்னா அடுத்த சாவுக்குப் பாத்துக்கலாம். இங்கையே, மழ பெய்யாம வானம் வெளுத்துகிட்டு நிலமெல்லாம் பொளந்துகிட்டு நிக்குது. இதுல இவனுங்க வேற” என்று கோபமாய் முறைத்துப் பார்த்தார் மணியார். இதற்கு மேல் கோவிந்தன் மறுப்பு பேச முடியாதவனாய் தன் பங்காகிய பத்து ரூபாவையும் ரெண்டு பைசாவையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

அப்போது இரவு 11 மணி ஆகியிருந்தது. அந்தச் சேரியில் தெரு விளக்கு இல்லாததால் எப்பொதும் இருட்டாகவே இருக்கும். கதவு தட்டும் சத்தம் கேட்டு அலமேலு கதவைத் திறந்தாள். “என்ன பையன் தூங்கிட்டானா?” “ஆமா! மணி இன்னா ஆவுது இன்னுமா முழுச்சிட்டு இருப்பான்” என்று அங்கலாய்த்துக் கொண்டாள் அலமேலு. தன்னுடைய மகன் கருப்பையா ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான் என்பதை எண்ணிப் பெருமையாய் நினைத்தான் கோவிந்தன். தன் மகனுக்காக வாங்கி வந்த மிட்டாயைத் திட்டு மீது வைத்து விட்டு தூங்கபோனான். எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி தன்னோட மகனை நல்லா படிக்க வச்சிடனும். தான்தான் மத்தவங்க முன்னாடி கைக்கட்டி வாய்பொத்தி கூனிக்குறுகி நிக்கிறேன். தான் மகனாச்சும் படிச்சு அரசாங்க வேலைக்குப் போயி தலைநிமிர்ந்து நிக்கனும். யோசனையில் ஆழ்ந்து போனான் கோவிந்தன். இரவு முடிந்து காலையில் சூரியன் உதயமானான்.

கருப்பையாவுக்கு மீசை முளைத்தது. இன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதப்போகிறான். தன்னுடைய தாய்தந்தையர் காலில் விழுந்து ஆசிப் பெற்றான். அலமேலுவும் கோவிந்தனும் கண்ணீர் மல்க வாழ்த்தினார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ராந்தலை வைத்துக் கொண்டு அந்த வெளிச்சத்திலே படித்தான். அவனுக்காக அவ்வப்போது தூக்கம் வராமல் இருக்க கருப்பு டீயை போட்டுக்கொடுத்தாள் அலமேலு. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்று விட்டான் கருப்பையா. அடுத்து அவன் மேல்படிப்பு படிக்க வேண்டும். கோவிந்தனின் மனதில் ஆசைகள் இருந்தாலும் அதை நிறைவேற்றிக்கொள்ள முடியாதபடி அவனிடம் பணம் இல்லை.

ஓடினான். அலைந்தான். யார் யாரிடமோ பணம் கேட்டான். தெரிந்தவர் தெரியாதவர் என அனைவரின் காலிலும் விழுந்தான். எந்தவொரு வாய்ப்பும் அவனுக்கு கிடைக்கவில்லை. கோவிந்தனின் மனதில் எப்பாடுப்பட்டாவது மகனை பெரிய படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். இப்போது கோவிந்தனின் நினைவுக்கு தர்மகர்த்தா நினைவில் வந்தார். மகனையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு தர்மகர்த்தாவின் காலில் போய் விழுந்தான். “உங்களுக்கு எல்லாம் எதுக்கு பணம் தரணும். நீங்கல்லாம் படிச்சி என்ன செய்யப் போறீங்க… குடும்பத்தோட வந்து எங்க பட்டியில இருக்கிற எருமை மாடுகளை மேய்ங்கடா” என்று முறைத்துக்கொண்டார். மணியார் காலிலும் விழுந்தாகி விட்டது. ஒரு பிரயோசனமும் இல்லை. சிவந்த கண்களில் நீர் ததும்பியது கோவிந்தனுக்கு. அப்பா மற்றவர்களுடைய காலில் விழுவது கருப்பையாவிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. மனம் வெதும்பினான். மனிதன் இன்னொரு மனிதன் காலில் விழுவதா? கடவுளின் படைப்பபில் ஏன் இந்த பாகுபாடு. பணம் படைத்தவன் ஒருபுறம். அடுத்த சாப்பாட்டிற்கே வழி இல்லாத மக்கள் இன்னொரு புறம். இப்படி பாகுபடுத்திப் பார்ப்பதில் இறைவனுக்கு எவ்வளவு சுகம். இதுபோல பிள்ளையின் கண்முன்னால் பெற்றவன் அடுத்தவருடைய காலை பிடித்து கெஞ்சுவது எவ்வளவு அபத்தம். இறைவனே உன்னை நான் காணவேண்டும். உன்னைப் பார்த்து பரவசம் அடைந்து மகிழ்ச்சிக் கடலில் பொங்கி எழுவதற்காக அல்ல. நாக்கு புடிங்கி கீழே தொங்கற மாதிரி ஒரு கேள்வியை கேட்பதற்காகத்தான். அப்பாவின் கண்ணகளில் நீர் ததும்புவதை அதற்கு மேலும் கருப்பையாவால் பார்க்க முடியவில்லை. தலை கவிழ்ந்து முகத்தை திருப்பிக் கொண்டான்.

அன்று இரவு மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் கோவிந்தனின் வீட்டில் மூலைக்கு ஒருவாராய் மூஞ்சைத் தொங்கப்போட்டுக் கொண்டு உட்காந்திருந்தனர். “அப்பா நான் படிக்கலை.. உன் கூடவே மோளம் அடிக்க வரேன்” என்று கருப்பையா சொன்னதுதான் தாமதம் எழுந்து வந்து பளார் என்று அறைவிட்டான் கோவிந்தன். “நீ படிக்கணும். நல்ல வேலைக்குப் போகணும். நீ நல்ல இருக்கிறதுக்காக நான் யாரு கால்லயும் விழுவேன்” என்றான்.

வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டு கதவை திறந்தான் கோவிந்தன். சேரி மக்கள் அனைவரும் நின்றிருந்தனர். “ஏலே கோவிந்தா இந்த ரெண்டு மூணு நாளா உன்னை பாத்திட்டுதான் இருக்கேன். ஊர் மக்கள்கிட்ட தெரிஞ்சவ தெரியாதவகிட்ட எல்லாம் பணம் கேட்குற… இந்த சேரி மக்கள்கிட்ட கேட்கனுமின்னு தோனலியே உனக்கு…” என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கேட்டார். “நம்ம கருப்பையா படிச்சு பெரிய ஆளா வந்தான்னா நமக்குதான பெருமை. அதான் கருப்பையா படிப்புச் செலவை இந்த சேரி மக்கள் அனைவரும் ஏத்துக்கணுமுன்னு முடிவு பண்ணியிருக்கோம். இந்தா பிடி இந்த பணத்தை…” என்று கொஞ்சம் சேர்த்த பணத்தைக் கொடுத்தார் இன்னொருவர். கோவிந்தனின் கண்ணகளில் இருந்து இப்போதும் கண்ணீர் சிந்தியது. அது அழுது அழுது சிவந்த கண்ணீர் அல்ல. மகிழ்ச்சி பெருக்கில் நனைந்த ஆனந்த கண்ணீர்!

Print Friendly, PDF & Email

4 thoughts on “தோட்டியின் பிள்ளை

  1. விடுதலை வேட்கையை இதை விட வேறு விதமாய் வெளிபடுத்த முடியுமா ?

    1. தங்களின் கருத்துக்கு நன்றிகள் பல..பல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *