தேங்கும் மழைத்துளிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,840 
 

தலைநகரிலிருந்து சில மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஆயேர் பானாஸ் எனும் இடத்தில் நுழைந்தால் வரிசையாகப் பணக்காரர்களின் மாளிகைப்போல் வடிவிலான வீடுகள். அத்தனை வீட்டின் முன்பும் நான்கு ஐந்து வெளிநாட்டு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டிக்கிறதோ என கடந்து செல்லும் போதெல்லாம் தோன்றும். அந்தப் பாதையில் ஆயேர் பூத்தே, ஆயேர் ஹித்தாம், ஆயேர் ஜெர்னி, ஆயேர் பினாங் என்று தண்ணீரை இத்தனை வகையில் தரம் பிரிக்கலாமா என்று வியக்க வைக்கும் அளவுக்கு பலவாறாகப் பிரியும் சிறிய சாலைகளுக்குப் பெயர் சூட்டியிருந்தனர். தேனி வரவே பயப்படும், குப்பைவாடை தூக்கியடிக்கும் சாலையான ஜாலான் ‘ஆயேர் மாடு’ வில் நுழைந்தால் இருபக்கமும் அழகான உயர்தர மாளிகைகள். சற்று முன்னேறி சென்றால் இரும்பு சாமான்களை விலைக்கு எடுக்கும் கூடம் ஒன்று இருபுறத்திலும் பெரிய நீலக்கதவுகளோடு பயமுறுத்தும். இன்னும் மேலே சென்றால் பழைய மலாய் கம்பம் வீடுகளைப் போல் மூன்று படி வைத்து கட்டி இருக்கும் பலகை வீடுகள். முதல் வரிசை விட்டு இரண்டாவது வரிசையில் 4-வது வீட்டுக்குத்தான் புதிதாக குடியேறியிருந்தேன். என் அண்டை வீட்டுக்காரர்கள், எதிர்வீட்டுக்காரர்கள் அனைவரும் மலாய்க்காரர்கள். எந்த நேரமும் பெலாச்சான் வாடைக்கு குறைவில்லை.

வீட்டின் குசுனி கதவை திறந்தால் பின் வீட்டு குடும்பத்தைக் காணலாம். அவர்கள் தெலுங்கர்கள். மழை பெய்தால் என் வீட்டு குசுனி தண்ணி அங்கு போய்விட கூடாது என்பதற்காகவே இருவீட்டுக்கு இடையில் ஒரு அடிக்கு செங்கற்களால் அணை கட்டியிருந்த பெரிய மனதுக்காரர்கள்.

அறிமுகமில்லாத முதல் நாள், என் வீட்டு குசுனி கதவு சாத்தி இருந்தது. பின் வீட்டு பெண், திரைபட நடிகர்கள் சூரியா ஜோதிகா திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச்சில் வேதனை இருந்தது. கல்யாண மாலை அழகாக இல்லை. எளிமையான கல்யாணம் என்று அவளின் துயரம் நீண்டு சென்றது என்னை வினோதத்தில் ஆழ்த்தியது. பின் கதவை திறக்கவும் மனமில்லாமல் வேறு வேலை பார்க்க சென்றேன்.

அன்று மாலை என்னை அழைத்து அந்த குடியி ருப்பின் விதிமுறைகளை அவசரமாக அறிவித்தார்கள். அன்றாடம் கால்வாயை கடைசி எல்லைவரைக்கும் கூட்ட வேண்டும். மழை வந்தால் குசுனியில் தண்ணீர் பெருகும். அதை அன்றே கூட்டி விட வேண்டும். குப்பைகளை கட்டி வீட்டிற்கு பின்னால் வைத்துவிட வேண்டியதுதான். அதை ‘வைத்தா’ என்பவர் எடுத்து செல்வார். அவர் கேட்கும் போதோ அல்லது மாதத்திற்கு ஒரு தடவையோ ஒரு சிறு தொகையை அவருக்கு கொடுத்துவிட வேண்டியது தான்.வானொலியையோ தொலைக்காட்சி பெட்டியையோ அதிக சத்தத்துடன் பார்க்க அனுமதி இல்லை. அதன்பிறகு என்னைப்பற்றிய சில விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு விடைக்கொடுத்தார்கள். நான் தினமும் காலையில் எழுந்து துணிகளை துவைத்து உலர்த்திவிட்டு இறுதியாக கால்வாய் தண்ணீரை முச்சந்தியில் தள்ளிவிட்டு வருவேன். துணி துவைக்காத நாட்களில் பின்கட்டு கதவை திறப்பதையே தவிர்த்து விடுவேன்.

நான் குசுனி கதவை திறந்து வேலை செய்யும் நாட்களில் பின் வீட்டு குடும்பத்தின் மகள் என்னிடம் ஓரிரு வார்த்தை பேசுவாள். அன்று ஒருநாள் நடிகரின் திருமணத்தைப் பற்றி அங்கலாயித்துக் கொண்டிருந்தாளே அவளே தான் இவள் என்று பேசும் தொனியில் யூகித்துக் கொண்டேன். இறுதியில் உயிரில்லாத சிரிப்போடு எங்கள் சந்திப்பு முடியும். அந்தி சாயும் நேரங்களில் பின் வீட்டு குசுனி பக்கம் ஒரு பெண் அணி கூடும். உப்பு சப்பில்லாத விஷயங்களையும் மிக நேர்த்தியாக பேசுவதில் வல்லுநர்களாக இருந்தார்கள் அவர்கள். இடையிடையே சில கொச்சைகளையும் சிரிப்பொலிகளையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏனோ நான் பொழுது போக்குக்காககூட அவர்களிடம் ஒட்டுவதில்லை. மாறாக அடுத்தவீட்டு கதைகளை பேசும் அவர்கள் என்னிடமிருந்து அந்நியமாக்கப்பட்டிருந்தனர். ஆனால் அந்தப் பின் வீட்டுப் பெண்ணிடம் பேசுவது மட்டும் எனக்கு பிடித்திருந்தது. அவள் என் வயது ஒத்தவராக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். குப்பை எடுக்கும் வைத்தாவின் சோகக் கதையை அவள்தான் என்னிடம் கூறினாள். சுவாரஸ்யமாக இருந்தது. முழங்கால் சிலுவாரு, அழுக்கான சட்டை, அலுக்கான மேனி, சாராய வீட்சம், தள்ளாட்டமான நடை, பரட்டை தலை பார்ப்பவர் முகம் சுழிக்கவைக்கும்; இதுதான் வைத்தா. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சராசரியான வாழ்க்கைதான் வைத்தாவும் வாழ்ந்திருக்கிறார். கல்யாணமும் செய்துக் கொண்டார். குடும்பத்தார் பார்த்து ஏற்படுத்தின பந்தம். இரண்டு வருடமாகியும் புத்திர பாக்கியம் இல்லாமல் வைத்தாவுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருமாம். ஒரு நாள் அவர் மனைவி ஓடி போய்விட் டாளாம். அக்கம் பக்கத்தார் ஆளுக்கொரு விதமாக பேசி கள்ளக்காதலனோடுதான் அவள் போய் விட்டாள் என்று முடிவு பண்ணி இருந்தனர். வைத்தா குடிக்காரனானார். புத்தியும் சற்று பாதித்திருந்தது. அதனால்தான் இப்படி தெருவோரத்தில் கிடக்கிறார். அவள் சொன்ன கதையில் வைத்தாமீது பரிதாபம் பிறந்தது.

ஒரு மஞ்சள் வெயில் நேரத்தில் வேளை முடிந்து நான் வீட்டிற்கு வருகையில், வைத்தா சொந்தமாகவே மலாய், சீனம் அவசியம்படும்போது தமிழ்மொழி கெட்டவார்த்தைகளையும் கலந்து உரக்க கத்திக் கொண்டு வந்தார். காது கொடுக்க முடியாத அளவுக்கு அத்தனை கொச்சை. முக சுழிப்பை அப்பட்டமாக காட்டாமல் ஒரு வித பதற்றத்துடன் அவரை கண்டும் காணாமல் கடந்து சென்றேன். “ஏய் என்னா பாக்குர” என்றார்.

“ஒன்றும் இல்லை ‘ஸோரி’ ” என்றேன். உடனே என்னைப்பார்த்து கேவலமாக சிரித்துவிட்டு “இங்க பாருடா இது கெட்ட கேட்டுக்கு இங்கிலீசு” என்றபோது நான் மனதளவில் சிரித்தே விட்டேன். யார், யாரை ‘கெட்ட கேடு’ என்று கூறுவது என்றெண்ணிக் கொண்டே மேற்கொண்டு எதுவும் பேசாமல் வீடு வந்தேன்.

மற்றொரு நாள் தாமதமாக வேளை முடித்துவீடு திரும்புகையில் மீண்டும் வைத்தாவிடம் சிக்கிக் கொண்டேன்.

“எங்க போய்ட்டு வர.”

“வேலைக்கு.”

“இங்கதானே இருக்கு முத்துமாரியம்மன் கோயில், கோயிலுக்கு போக தெரியாதா?

“கோயிலுக்கா? இன்னிக்கு என்னா விசேஷம்” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே தூரத்தில் ஒரு இளைஞன்.

“ஏய் வைத்தா என்னா அந்தப் பெண்ணோடு தகராறு?”

“டேய் போடா, அவள் எங்க ஏரியா பொண்ணுடா” என்று அவனை நோக்கி போய் விட்டார். அப்பாடா என்று என் நடையில் வேகத்தை கூட்டி வீடுவந்து சேர்ந்தேன். “இன்று அந்த வைத்தாவை பார்க்கவே கூடாது” என்றுதான் ஒவ்வொரு தடவையும் கடவுளை வேண்டிக் கொண்டு சாலையில் நடப்பேன். சிலமுறை என் வேண்டுதல் பொய்த்துதான் விடுகிறது. வைத்தா தினமும் குடித்துவிட்டு அந்த ஏரியாவில் திமிராக நடந்து கொண்டாலும் அங்கு வசிக்கும் எந்த இனத்தவரும் அவரை ஏசுவதோ அவர் மீது புகார் கொடுப்பதோ இல்லை. அன்றாட காட்சிதானே என்று பழகி விட்டதைப் போல் அவர்களின் சகிப்புத்தன்மை புலப்படுத்தியது. நானும் அப்படியே பழகி கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறேன்.

இன்று கடுமையான மழை பெய்து விட்டிருந்ததால் பின் கதவை திறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருந்தது. விளக்கமாறோடு பின் கதவை திறந்தேன்.

பெண்கள் அணி கலந்துரையாடலை நடத்தி கொண்டிருந்தது. என் வயதை ஒத்த அந்தத் தெலுங்குப் பெண் என்னை நோக்கி வந்தாள்.

“உங்களுக்கு விஷயம் தெரியுமா?”

“என்ன?”

“வைத்தாவை அடையாளம் தெரியாத யாரோ அடிச்சி போட்டுட்டாங்க. உடம்பெல்லாம் காயம். வீட்டுலயே முடங்கி கிடக்குராரு”. இதில் சுவாரஸ்யம் ஏதும் இருப்பதாக
தெரியவில்லை. இருப்பினும் என்னிடம் சேதி சொன்னவளிடம் ஏதாவது சொல்லியே ஆக வேண்டும். “அப்படியா! சே…பாவம்” என்று கூறிவிட்டு தேங்கி நிற்கும் கால்வாய் நீரை கூட்டி விட தொடங்கினேன்.

நான் கூட்டிவிடும் லட்சணத்தை பெண்கள் அணி கவனித்து கொண்டிருந்தது. என் லட்சணத்தை யாரும் குறைத்து விடாத வண்ணம் நேர்த்தியுடன் நடந்து கொள்வதும் அப்படி நடந்து கொள்ள நடித்து கொண்டிருப்பதும் கஷ்டமாக இருந்தது எனக்கு. வந்த வேலையை முடித்து கொண்டு கதவை சாத்தும் போது மீண்டும் அந்த பெண் என்னைக் கூப்பிட்டாள். போலியான சிரித்த முகத்துடன் “என்ன” என்றேன். “முக்கியமான வேலை ஏதேனும் உண்டா”? என்றாள். “இல்லை” என்றேன்.

“மனது சரியில்லை. கனமாக உள்ளது” என்றாள் “உங்களிடம் மனதில் உள்ளதை சொன்னாள் ஆறுதலாக இருக்கும் போல் தோன்றுகிறது” என்றாள். கதை கேட்கும் பொறுமை எனக்கு இல்லை. புதிய இடத்தில் வலிந்து பேசும் அவளின் செயல் எனக்கு எரிச்சலை ஊட்டினாலும் தானாக வந்து பேசுபவளிடம் மறுப்பதற்கு எதுவும் இல்லை. “சரி” என்றேன்.

“போன வாரத்தில் ஒரு கனவு கண்டேன். இதுவரை இப்படி ஒரு கனவு வந்ததே இல்லை. கனவில் நீங்கள் வந்து… அம்மணமாக நிற்கிறீர்கள். ‘என்னக்கா இப்படி நிக்கிறீர்கள்’ என்று ஓடிவந்து கொடியில் காய்ந்து கொண்டிருந்த கைலியை எடுத்து போர்த்தும் போது என் தாலி அறுந்து உங்கள் காலடியில் விழுந்து விட்டது. அலறியடித்து கொண்டு எழுந்து கொண்டேன். அதன்பிறகு தூக்கமே வரவில்லை. மறுநாள் மீண்டும் கனவு. கருப்பு சேலையில் ஒரு சேவலின் தலையை வெட்டி அதன் இரத்தம் சொட்ட சொட்ட என்னை சுற்றி வருகிறீர்கள். வயிற்றில் இருக்கும் என் 3 மாதக் கரு கரைந்து விடுவதைப் போல் வலி ஏற்பட்டு எழுந்தேன். இப்படி உதிரி உதிரியாக கனவுகள் விரட்டுவதை தடுக்க முடியவில்லை. என் வீட்டில் கனவைப் பற்றி கூறினேன். அனைவரும் மிரண்டு விட்டனர். நம்பிக்கையான ஓர் இடத்தில் சாமி பார்த்தோம். யாரோ செய்வினை செய்கிறார்களாம். 1001 வெள்ளி தட்சணை பெற்று செய்வி னையை எடுத்தார்கள். எந்தப் பயனும் இல்லை. மீண்டும் மீண்டும் கனவுகள்” என்று தனித்தக் குரலில் சோகமாக கூறினாள்.

அவள் கனவில் நானும் ஒரு பாத்திர மாக இருந்ததை சொன்னபோது தயக்கமாக இருந்தது எனக்கு. கனவில் என்னை அம்மணமாக பார்த்த அவளை ஏறிட்டுப்பார்க்க தர்மசங்கடமாய் இருந்தது. அவளிடம் ஏதாவது ஆறுதலாக பேச வேண்டும். சிறு மௌனத்திற்குப் பிறகு “சாங்கியம் செய்த பிறகு எவ்வாறான கனவு வந்தது”? என்று கேட்டேன்.

பெரிய மலைப்பாம்பு தன்னை சுற்றி இருப்பதை போலவும், வீட்டில் வளர்க்கும் அவளின் செல்ல நாய் தன்னை கடித்துக் குதறு வதை போலவும் கனவு வந்ததாக சொன்னாள்.

“இதைப்பற்றி வீட்டில் சொன்னீர்களா” என்று கேட்டதற்கு “இல்லை இப்போதுதான் 1000 வெள்ளி செலவானது…மீண்டும் மீண்டும் பிறந்த வீட்டுக்கு செலவு வைக்க மனமில்லை” என்று கூறிவிட் டாள். கனவின் துயரங்கள் அவள் கண்களில் வெளிவருவதை அவளாள் மறைக்க முடியவில்லை. அவளின் பெற்றோர்கள் மூட நம்பிக்கையில் மூழ்கி போனவர்கள் என்று முன்பொரு சந்திப்பில் கூறி இருந்தாள். அந்தச் சூழலில் வளர்ந்த இவளிடமும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனால்தான் கனவின் காட்சிகள் மிகப்பெரிய அதிர்வுகளை எழுப்பி இருக்கின்றன. நான் அவளிடம் தொடர்ந்து பேசினேன்.

“எனக்கும் இது போன்ற கனவு பிரச்சினை இருந்தது. நான் வயதுக்கு வந்த புதிதில் அது ஆரம்பித்தது. மூன்று அறைகள் கொண்ட வீட்டில் தனி அறை என்றுடையது. தனிமை விரும்பி என்பதால் என் விருப்பம்தான் அதில் நிரம்பி இருக்கும். எனக்கு பிடித்த சுவரொட்டி, எனக்கு பிடித்த சுவர் கடிகாரம், புத்தகங்கள், சன்னல்விரிப்பு இப்படி எத்தனையோ. என்னையன்றி யார் அந்த அறையில் நுழைந்தாலும் கண்டு பிடித்து விட முடியும். அறையில் ஏற்பட்டிருக்கும் சிரு நகர்வையும் என் கண்கள் கண்டு பிடித்து விடும். அந்த அளவுக்கு கால்மிதி முதல் அழுக்கு துணிவரை அத்தனை நெருக்கம். ஆதலால் அப்பா அம்மா கூட என் அறைக்கு காரணமின்றி வர மாட்டார்கள். ஆனால் வயதுக்கு வந்ததும் மட்டை பாய் பின்னி அதில் படுக்க சொன்னார்கள். அசைவம் கொடுக்கவில்லை.இப்படி புதிதாக பல சம்பவங்கள் நடந்தன. அன்றுதான் மட்டையில் முதன்முதலாக படுத்தேன். தூக்கமே வரவில்லை. எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை. இறுதியில் தூங்கிதான் போனேன்.கனவு போல் ஏதோ வந்ததாக ஞாபகம்.ஆனால் அது என்னவென்றுதான் சரியாகத் தெரியவில்லை. உடம்பில் நிறைய நகக்கீறல்கள் . யாரிடமும் சொல்வதற்கான ஒரு விசயமாக இது இல்லை என்று பட்டது. எனக்கு சடங்கு செய்யும் விழாவில், மஞ்சள்நீர் பூக்குளியலின் போது என் பாட்டி காயங்களை பார்த்து விட்டு கேட்டார். நானும் கனவைப் பற்றியும் கீறல்கள் பற்றியும் சொன்னேன். இதை ஏன் அன்றே கூறவில்லை என்று பாட்டி திட்டித் தீர்த்தாள். வயதுக்கு வந்த பெண். முதல் தீட்டு கவனமாக இருக்க வேண்டாமா? உன்னிடம் பேய்தான் விளையாடி இருக்கிறது. இரவில் கனவின் வடிவில் புணர்ந்து சென்று இருக்கிறது. சடங்கு முடியட்டும். இதற்கு மாந்திரீக கட்டு கட்ட வேண்டும். அதுவரை நான் சொல்வதைப் போல் செய் என்று ஒரு வைத்தியத்தை சொல்லி கொடுத்தார்” என்று நிறுத்தி அவளின் முகத்தைப் பார்த்தேன். மிகவும் ஆழமாக என் கதையை உள்வாங்கி இருக்க வேண்டும். ” பாட்டி என்ன வைத்தியம் சொன்னார்” என்று ஆவலில் கேட்டாள்.

“படுக்கைக்கு போகும் முன் கைகால்களை கழுவ வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து விட்டு அன்றையச் சோகங்களையும் துயரங் களையும் கட்டி போட்டுவிட்டு படுக்கை அறைக்கு போக வேண்டும். கட்டிலின் மேல் தாராளமாக உட்கார்ந்து கொண்டு இடது உள்ளங்கையில் 3 முறை எச்சில் துப்பி அதை வலது ஆள்காட்டி விரலால் குழப்பி இரு உள்ளங்கால்களிலும் பூசிக்கொண்டு இறைவனை வேண்டி கொண்டு படுத்தால் பில்லி சூனியம், கெட்ட கனவு, காற்று சேட்டைகள் எதுவும் நெருங்காது. இந்த வைத்தியம் என் குடும்பத்தாருக்கும் பலித்திருக்கிறது. இதை நம்பிக்கையுடன் செய்வதுதான் முக்கியம்” என்று கூறி முடித்தேன்.

“கொஞ்சம் இருங்கள்” என்று கூறி சென்றவள் ஒரு காகித பேனா வுடன் வந்தாள். நான் சொன்னதை குறித்துக் கொண்டு சரி பார்த்துக் கொண்டாள்.

அதோடு அந்தத் தெலுங்கு பெண்ணின் சவகாசம் கூடாது என்று முடிவு கட்டி விட்டேன். இதற்காகவாவது நான் வேறு வீடு பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தேன். கனவில் என்னை அம்மணமாக பார்த்துவிட்டாளே… அவமானமாக இருந்தது. அந்தச் சம்பவம் என்னை எப்படி பாதித்ததோ தெரியவில்லை. இதனால் என் மீது ஏதேனும் சந்தேகம் ஏற்படுமோ என்று தேவை இல்லாத குழப்பத்தால் என் உறக்கமும் கெட்டது.

பாழாய் போன மழை மறுநாளும் வந்து என் கழுத்தை அறுத்தது. என் விதியை நொந்து கொண்டு பின்கதவை திறந்தேன். கொஞ்ச நேர மழை என்றாலும் வெளுத்து வாங்கி இருந்தது. விளக்கமாறை எடுத்து தேங்கி நிற்கும் தண்ணீரை பரக் பரக் என்று கூட்ட ஆரம்பித்தேன். நல்ல வேளை பெண்களின் அணி இன்று கூடவில்லை. ஆனால் துடைப்ப சத்தத்தை கேட்டவுடன் அந்த பெண் எதிர்பார்த்ததை போல் வந்தாள். முகத்தில் சிரிப்பு இருந்தது. முகம் தெளிந்து இருந்தது.

“உங்களுக்கு ரொம்ப நன்றி. நீங்கள் சொன்னதைப் போல் செய்தேன். கனவே வரவில்லை. நிம்மதியாக தூங்கினேன். மனம் லேசாக உள்ளது. ரொம்ப ரொம்ப நன்றி” என்று வார்த்தைக்கு வார்த்தை கூறினாள்.

தேங்கிய நீரை முழுதுமாக கூட்டாமல் பின் கதவை சாத்திவிட்டு கதவோடு சரிந்தேன். பல ஆண்டுகளாக நிம்மதியையும் உறக்கத்தையும் எண்ணற்ற முறை கெடுத்துக் கொண்டிருக்கும் எனது கொடுங் கனவுகளுக்கு ஒரு முறைகூட பாட்டியின் வைத்தியம் உதவாதது சங்கடமாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *