தெரு ஓவியன்

 

ஒரு வாரத்திற்கான பூஜை சாமான்களை ஒட்டு மொத்தமாய் வாங்கிக் கொண்டு மார்க்கெட்டை விட்டு வெளியேறினார் பெருமாள் குருக்கள்.

“வணக்கம் சாமி”

“கும்பிடறேன் சாமி”

“நமஸ்காரம் குருக்களய்யா”

எதிரில் வருபவர்களின் விதவிதமான மரியாதை வெளிப்பாடுகளை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டு நடந்தார்.

பஸ் நிறுத்தத்தை அடைந்து காத்திருந்த போதுதான் அதைக் கவனித்தார்.

எண்ணை காணாத தலையுடன்… அழுக்கில் ஊறிய துணிமணிகளை அணிந்து கொண்டு… உடம்பெங்கும் புழுதி அப்பிய நிலையில், தெருவில் அமர்ந்து, அழகான… அம்சமான… தெய்வீகக்களை தெறிக்கும்படியான வெங்கிடாசலபதி ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தான் ஒருவன்.

அதை சிலர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்தில் விரிக்கப்பட்டிருந்த துண்டில் நான்கைந்து சில்லரைக் காசுகளும்… ஒன்றிரண்டு ரூபாய் நோட்டுக்களும் கிடந்தன.

பெருமாள் குருக்கள் அவன் வரைந்திருந்த அந்த வெங்கிடாசலபதியின் முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பரவசமெய்தினார். “ஆஹா…கர்ப்பக்கிருகத்தில் உள்ள மூலவரின் முகத்தில் தெரியும் தெய்வீகப் பிரகாசம்… ஒளி…. தேஜஸ்… எல்லாம் இந்த ஓவியத்தின் முகத்தில் அப்பட்டமாய் வந்துள்ளதே…”

வரைவதைச் சற்று நிறுத்திவிட்டு, எழுந்து நடந்து சிறிது தூரம் தள்ளி நின்று, அப்படத்தையே கூர்ந்து பார்த்தான் அந்த அழுக்கு ஓவியன். பிறகு தனக்குத் தானே தலையை ஆட்டிக் கொண்டு அழுக்குத் தலையை “வரட்…வரட்”டென்று சொறிந்தான்.

பெருமாள் குருக்களுக்கு அந்தத் தெரு ஓவியன் மேல் ஒரு தனி மரியாதையே ஏற்பட்டு விட்டது. “இந்த அழுக்கு அம்பி தோற்றத்துல எத்துனை கேவலமாய் இருக்கிறானோ… அத்தனைக்கத்தனை திறமையில ஜொலிக்கறானே… சாட்சாத் அந்த வெங்கிடாசலபதியை நேர்ல பார்க்கற மாதிரியோன்னா வரைஞ்சிருக்கான்!…ஆண்டவா…உன் திருவிளையாடலுக்கு அளவே இல்லையப்பா… யார்யார்ட்டே… என்னென்ன திறமைகளை நீ ஒளிச்சு வெச்சுண்டிருக்கேன்னு யாராலும் கண்டு பிடிக்க முடியாதப்பா…”

மெல்ல நகர்ந்து அங்கிருந்த ஒரு குப்பைத் தொட்டி அருகே சென்ற அந்த அழுக்கு ஓவியன், பாக்கெட்டிலிருந்த குவார்ட்டர் பாட்டிலை எடுத்து அதில் மீந்திருந்த கொஞ்சம் சரக்கை “படக்”கென்று வாயில் கவிழ்த்துக் கொண்டான்.

பெருமாள் குருக்கள் முகஞ் சுளித்தார்.

குடித்து முடித்ததும் கையிலிருந்த அந்தக் காலி பாட்டிலை குப்பைத் தொட்டியினுள் எறிந்த அந்த அழுக்கு ஓவியன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து பீடிக்கட்டையும், தீப்பெட்டியையும் எடுத்தான்.

பெருமாள் குருக்கள் முகத்தில் கோப ரேகைகள்.

பீடியைப் பற்ற வைத்து, அவசர அவசரமாக உறிஞ்சி விட்டுத் தூர எறிந்தவன், மீண்டும் ஓவியத்தினருகில் வந்தமர்ந்து வரைதல் பணியைத் தொடர ஆரம்பித்தான்.

ஆத்திரத்தின் எல்லை வரை போய் விட்ட பெருமாள் குருக்கள் அவனின் அந்தச் செயலில் கொதித்துப் போய் வேக வேகமாக அவனை நெருங்கினார்.

“அடேய் அபிஷ்டு…வாடா இங்க?”

அவன் எதுவும் புரியாமல் குருக்களின் முகத்தையே உற்றுப் பார்க்க,

“நீ செய்யறது நோக்கே நன்னாயிருக்கா?… இப்ப நீ வரைஞ்சிண்டிருக்கறது என்ன படம் தெரியுமோ?”

அவன் படத்தை ஒரு முறை குனிந்து பார்த்து விட்டு மீண்டும் அமைதியாகவே நின்றான்.

“படவா…அது ஏழுமலையான் படமாக்கும்…அத்தைப் போய் இப்படி தண்ணியடிச்சுண்டு… பீடி வலிச்சுண்டு வரையறேளே… உனக்கு இது அபச்சாரமாவே தோணலையோ?”

அவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் குறுஞ்சிரிப்பு சிரித்தான்.

“அடேய் பிரம்மஹத்தி… நான் பாட்டுக்குப் பேசிண்டிருக்கேன்… நீ பாட்டுக்கு சிரிச்சுண்டிருக்கியே… ம்ஹூம்… இந்த அக்கிரமத்தை நான் ஒத்துக்க மாட்டேனாக்கும்… நீ தொடர்ந்து வரைய நான் விட மாட்டேன்…” குருக்கள் சற்று உரத்த குரலில் கத்தலாய்ச் சொன்னார்,

அவ்வளவுதான் அது வரை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத் திடீரென்று கடவுள் பக்தி பொத்துக் கொண்டது.

“அதானே…இந்தப் பைத்தியக்காரப் பயல் நம்ம தெய்வத்தையல்ல அவமானப் படுத்தறான்… விடக் கூடாது இவனை…”

தன்னுடைய அன்றைய வயித்துப்பாட்டுக்கு வேட்டு வைத்து விட்ட பெருமாள் குருக்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அந்த இடத்தை விட்டு அகன்றான் அந்தத் தெரு ஓவியன்.

ஒரு மாதத்திற்குப் பிறகு,

பெட்டிக் கடையில் பீடி வாங்க வந்து நின்ற தெரு ஓவியன் கண்களில் அன்றைய செய்தித்தாளில் வெளியாகியிருந்த அந்தப் புகைப்படம் பட்டு விட, பெஞ்சில் அமர்ந்து அதைப் படித்துக் கொண்டிருந்தவனிடம் அதைக் காட்டி சைகையால் “என்ன?” என்று கேட்டான்.

“இவனா?… இந்தாளு பேரு பெருமாள் குருக்கள்…பக்கத்தூருக் கோயில்ல பூசாரியா இருக்கான்… கோயிலுக்குள்ளாரவே பல பெண்களோட அசிங்கம் பண்ணி… அதை வீடியோப் படமும் எடுத்து வெச்சிருக்கானாம்….அதைத்தான் பேப்பர்ல போட்டிருக்கான்… ஹூம்… இவனையெல்லாம் நடு ரோட்டுல நிர்வாணமா நிக்க வெச்சு மொத்த ஜனங்களும் கல்லாலேயே அடிச்சுக் கொல்லணும்….”

“படவா… அது ஏழுமலையான் படமாக்கும்…அதைப் போய் இப்படி தண்ணியடிச்சுண்டு… பீடி வலிச்சுண்டு வரையறேளே… உனக்கு இது அபச்சாரமாவே தோணலையோ?”

“ஹா….ஹா….ஹா…” வாய் விட்டுச் சிரித்தபடி சென்ற அந்தத் தெரு ஓவியனை வினோதமாய்ப் பார்த்தான் பேப்பர் படித்துக் கொண்டிருநதவன். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆபீஸ் டைனிங் ஹாலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த திவாகருக்கு, சக ஊழியர்களின் அந்தக் கேலிப் பேச்சு தன்னைக் குறித்துத்தான் என்பது நன்றாகவே புரிந்தது. 'காலேஜ் ஃபிகரை டாவடிக்கலாம்!… லெக்சரரை டாவடிக்கலாம்!... வேலைக்குப் போற பெண்ணை டாவடிக்கலாம்!…அட …க ல்யாணமான பொண்ணைக் கூட டாவடிக்கலாம்யா! ...ஆனா… ...
மேலும் கதையை படிக்க...
சவமாய்க் கிடந்த பவானியைச் சுற்றியமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர் உறவுப் பெண்கள். சற்றுத் தள்ளி நின்று வாயில் துண்டைத் திணித்துக் கொண்டு சன்னமாய் அழுது கொண்டிருந்த அவள் கணவன் குமாரசாமியிடம் ஊர்ப் பெரியவர் கிசுகிசுப்பாய்க் கேட்டார். ‘ஏண்டா…ரெண்டு பேருக்குள்ளார ஏதாச்சும் சண்டையா,..நீ எதையாச்சும் ...
மேலும் கதையை படிக்க...
மானேஜிங் டைரக்டர் ரகோத்தமனின் பர்ஸனல் செகரட்டரி மாலினி சொன்ன அந்தத் தகவலைக் கேட்டதும் என் ரத்த அழுத்தம் 'ஜிவ்”வென்று ஏறியது. “என்ன….என்ன சொல்லறீங்க…மாலினி…இந்த வருஷ ஆண்டு விழாவுல நடக்கற செஸ் போட்டில நான் கலந்துக்க வேண்டாம்னு எம்.டி.சொன்னாரா?...வொய்?” எனக்குள் கோபமும் ஆற்றாமையும் கொந்தளித்துக் ...
மேலும் கதையை படிக்க...
சர்வீசுக்கு வந்திருந்த யமஹாவை வேலை முடித்து சோதனை ஓட்டம் ஓட்டிப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினான் தண்டபாணி. “என்ன முதலாளி யோசிக்கறீங்க?…ஏதாவது வேலை பாக்கியிருக்கா இதுல?” தயக்கமாய்க் கேட்டான் கடைப்பையன். “ம்ம்ம்...ஏதோ வித்தியாசமாத் தெரியுதே?”.. “சொர..சொர” தாடியைத் தேய்த்தபடியே யோசித்தவன் “அது சரி... ஆயில் ...
மேலும் கதையை படிக்க...
அறை வாசலில் நிழலாட 'யாரது?" படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா. நடுத்தர வயதுக்காரனொருவன். 'அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்?" கேட்டபடி உள்ளே வந்தான். 'ஆமாம் நீ யாரு?" 'நான் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து வர்றேன், கலெக்டர் கோபிநாத் அய்யா அனுப்பிச்சார். போன வாரம் அவர் ...
மேலும் கதையை படிக்க...
பிச்சைக்காரியிடம் பரிவு…?
தூளி
புலி பூனையாகலாமா?
கபாலி கடன் வராமலிருக்கு!
நேரில் கடவுள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)