Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தெரிந்த வழி

 

தகசில்தார் அலுவலகத்தில் தனது மகள் சரசுவதிக்கு சாதிச்சான்றிதழ் வாங்கப்போய் நின்று நின்றுகால்வலித்தது முத்துலட்சுமிக்கு. மதியம் மூன்று மணி வரை பசியோடு காத்திருந்தும் சான்றிதழ் கிடைத்த பாடில்லை. பக்கத்திலிருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தபோது பியூண் வந்து அவளது பெயரை சொல்லி அழைத்தான்..

“ நீ கிறிஸ்டியன் சாம்பவர்ன்னு சர்டிபிகெட் கேட்டிருந்தா உடனே கிடைச்சிருக்கும், நீ எஸ்.சி இந்து சாம்பவர்ன்னு கேக்கறதனால நாளைக்கு உஙக வீட்டுக்கு அதிகாரிங்க வந்து பரிசோதனை பண்ணின பிறகுதான் சர்டிபிகெட் கிடைக்கும்!’’ சொல்லிவிட்டு பதிலுக்குகூட காத்திருக்காமல் அறைக்குள் நுழைந்தான் பியூண்.

பிளஸ் டூ முடித்து பல வருடங்களை தாண்டிய பிறகு வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து தபால் அலுவல உதவியாளர் வேலைக்கு நேர்காணல் வேண்டி சரசுவதிக்கு கடிதம் ஒன்று வந்திருந்தது.

தனது வாழ்நாள் கனவான அரசாங்க உத்யோகம் தனது மகளுக்கு கிடைக்கப்போகும்
சந்தோஷத்தில் படிக்கத் தெரியவில்லை என்றாலும் வந்த கடிதத்தை பலமுறை பார்த்து
பரவசமானாள் முத்துலட்சுமி.

கடிதத்தில் கண்டிப்பாக சாதிச்சான்றிதழுடன் வரவும் என்று குறிப்பிட்டிருந்த படியால்  முத்துலட்சுமி கிராம அலுவலகரிடம் ஓடினாள். விண்ணப்பத்தை வாங்கிக்கொண்டு அரைநாள் கழிந்தபிறகே கையெழுத் திட்டு தந்தார் கிராம அலுவலகர்.

அங்கிருந்து ஆர். ஐ அலுவலகம் சென்று அதிகாரியைச் சந்தித்து அவரிடமிருந்தும் கையெழுத்தை வாங்கிக்கொண்டு தாசில்தார் அலுவலகம் வந்தபோது மணி நான்கு கழிந்திருந்தது. தாசில்தார் மூன்று மணிக்கே புறப்பட்டுப் போனதாக பீயுண் சொல்லவே கவலைகளோடு வீடு திரும்பினாள்.

நேற்று போல் தாமதிக்கக் கூடாதென்று இன்று காலை பத்து மணிக்கு வந்து மதியம் மூன்று மணி வரை காத்து கிடந்ததுதான் மிச்சம். இனி வீட்டுக்கு வந்து பரிசோதனை செய்த பிறகாவது சாதிச் சான்றிதழ் தருவார்களா? என்ற கேள்விகளோடு சற்று நேரம் நின்று விட்டு வீட்டுக்கு நடந்தாள்.

மறுநாள் காலை வீட்டின் பூஜை அறையிலிருந்த முருகன் சாமி படத்தை ஈரத்துணியால்
துடைத்து சந்தனக்கிண்ணத்திலிருந்து சந்தனம் எடுத்து முருகன் போட்டோவுக்கு பொட்டு வைத்தாள். சரசுவதி மண்சட்டியில் கலக்கிவைத்திருந்த சாணத்தை எடுத்து அவளது குடிசை வீட்டு திண்ணையை  மெழுகிக்கொண்டிருந்தாள்.

மதியம் மணி மூன்றாகியிருந்தது. தாசில்தார் அலுவலகத்திலிருந்து மூன்று அதிகாரிகள் காரில் வந்து பஸ் நிறுத்தத்தின் அருகிலிருந்த டீக்கடையில் முத்துலட்சுமியின் வீடு எங்கிருக்கிறது என கேட்டதோடு அவர்கள் சர்ச்சுக்கெல்லாம் போவார்களா என்று விசாரித்தார்கள்.

கடைக்காரர் `எனக்குத் தெரியாது’ என்று சொல்லவே காரை விட்டு இறங்கி “ மூணு டீ போடுங்க’’ என்றார் அதிகாரிகளில் ஒருவர்.

“ பால் தீர்ந்துபோச்சு, பால் இல்லாம டீ போடட்டுமா!’’ என்றான் டீக்கடைக்காரர்.

“வேண்டாம்’’ என்றபடி முத்துலட்சுமியின் வீட்டை நோக்கி நடந்தார்கள். வழியில் ஒரு கல்லறையில் சிலுவை அடையாளம் வைக்கப்பட்டிருந்தது.

அதிகாரிகளில் ஒருவர் அந்த கல்லறையில் எழுதியிருந்த பெயரையும் பிறப்பு, இறப்பு
வருடங்களையும் ஒரு காகிதத்தில் குறிப்பெடுத்துக்கொண்டான்.

முத்துலட்சுமியின் வீட்டை அடைந்ததும் சரசுவதி வீட்டில் கிடந்த இரண்டு பிளாஸ்டிக் நாற்க்காலிகளை தூக்கி வந்து போட்டாள். அதிகாரிகள் மூவரில் வயதில் மூத்த  இருவரும் நாற்க்காலிகளில் அமர ஒருவர் கையிலிருந்த நாளிதழை திண்ணையில் விரித்து உட்கார்ந்தார்.

“ சார் சாயா குடிக்கிறீங்களா?’’ முத்துலட்சுமி மெல்லக் கேட்டாள்.

“ வேண்டாம், இப்பத்தான் குடிச்சுகிட்டு வர்றோம்!’’ அவளது வீட்டிலிருந்து சாயா குடித்தால் தீட்டு பட்டுவிடுமோ என்று பயந்தபடி மறுத்தார் வந்த அதிகாரிகளில் ஒருவர்.

“ வழியில கல்லறை கிடந்துதே யாரோடது!”’

“ என் கொழுந்தனாரோடது!’’

“ ஒரெ குடும்பத்துல அண்ணன் கிறிஸ்டியன் தம்பி பொண்டாட்டி நீ இந்துவா யார ஏமாற்றப் பார்க்கிற!’’ வந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் குரலைச் சற்று உயர்த்திச்சொன்னார்.

“ சார், என் கொழுந்தனார் முதல்ல இந்து தான், அப்பறம் கிறிஸ்டியனா மாறீட்டார், ஆனா நாங்க அப்பிடி இல்ல, இதுவரைக்கும் எந்த் சர்ச்சுக்கும் போனதில்ல, நானும் என் பொண்ணும் பக்கத்து சாஸ்தான் கோவில்லதான் சாமி கும்பிடப்போவோம். என் வீட்டுல கூட பூஜை அறை இருக்கு வேணுமுன்னா வந்து பாருங்க சார்!’’ . யதார்த்தமாய் சொன்ன அவளது வார்த்தைகள் அதிகாரிகளின் காதில் ஏற மறுத்தது.

“கிறிஸ்டியன் சாம்பவர்-ன்னு சர்டிபிகெட் தர்றோம் நாளைக்கு வந்து வாங்கிக்க!’ சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள் அதிகாரிகள்.

“ சார், சார், சார் நீங்க அப்பிடி எழுதி தந்தா அது பிற்படுத்தப்பட்டவர் பட்டியல்ல வந்துடும், பரம்பர பரம்பரையா எங்க குடும்பம் தாழ்த்தப்பட்ட இந்து குடும்பம்சார், இந்துவுன்னு எழுதி குடுத்தா நாங்க தாழ்த்தப்பட்டவங்க பட்டியல்ல வந்துடுவோம், என் புருஷன் சாகிறப்போ என் பொண்ணு என் வயிற்றுல மூணு மாசம், பெத்த அப்பாவோட முகத்த கூட அவ பார்க்கல, அவளுக்கு ஒரு வேல விஷயமாத்தான் இந்த சாதிச்சான்றிதழ் கேட்கிறேன், தயவு செஞ்சு எங்க மேல கருணை காட்டி இந்துவுன்னு எழுதி குடுத்திடுங்க சார்!’’ அதிகாரிகள் பின்னால் ஓட்டமும் நடையுமாய் கேட்டாள். அவளது வார்த்தைகள் அதிகாரிகளின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அவர்கள் திரும்பிப்கூட பார்க்காமல் காரில் ஏறிக்கொள்ள கார் விரைந்தது.

இதயம் கனக்க கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது முத்துலட்சுமிக்கு. தபால் அலுவலகத்தில் அவளுக்கொரு வேலை கிடைத்தால் இருண்ட தங்களது வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவளுக்கு அதிகாரிகளின் பேச்சு அச்சமூட்டியது.

மறுநாள் காலை பத்து மணிக்கே தகசில்தார் அலுவலகம் சென்று பீயுணிடம் அதிகாரிகளைப்பற்றி விசாரித்தாள். மூத்த அதிகாரி கதிரேசனைப் பிடித்தால் சர்டிபிகெட் கிடைக்கும் என்று தனக்குத்தெரிந்ததைச் சொன்னான் பீயுண்.

முத்துலட்சுமி கதிரேசனைப் போய் பார்த்தாள்.

“ வேற எதுவேணுமுன்னாலும் என்னால செய்ய முடியும் ஆனா சாதிச்சான்றிதழ் விஷயத்துல என்னால எதுவும் செய்ய முடியாது!’’ கதிரேசன் கையை விரித்தார்.முத்துலட்சுமிக்கு கண்கள் நிறைந்தது. அங்கேயே விங்கி விங்கி அழ ஆரம்பித்தாள்.

“நான் சொல்றபடி நடந்தா இந்துன்னு எழுதி எஸ்.சி சர்டிபிகெட் குடுத்திடுறேன்!’’ அவரது வார்த்தைகளைக்கேட்ட அடுத்த நொடியில் அவளது கண்ணீர் காணாமல் போனது. கண்களை துடைத்தபடியே ஆர்வமாய் கதிரேசனைப்பார்த்தாள். ஒரு துண்டு காகிதத்தில் எதையோ எழுதி அவளிடம் நீட்டினான் கதிரேசன்.

“ நாளைக்கு சனிக்கிழமை உன் பொண்ண கூட்டிக்கிட்டு இந்த அட்றஸ்சுக்கு வந்துடு,
உன்பொண்ணு ஒரு மணி நேரம் என்கூட இருந்தாப்போதும், நீ கேட்டபடி சர்டிபிகெட்
குடுத்திடுறேன்!’’

“டேய்’’ என்ற அலறல் சத்தம் பலமாய்க்கேட்க கதிரேசனின் சட்டையை பிடித்து பலமாய் உலுக்கினாள் முத்துலட்சுமி. அலுவலகமே ஸ்தம்பித்துப்போனது. வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தை சுக்கு நூறாக கிழித்து கதிரேசன் முகத்தில் எறிந்துவிட்டு கண்கள் சிவக்க வீட்டுக்கு நடந்தாள்.

  மறுநாள் காலை சரசுவதியை தன்னோடு வயல்வேலைக்கு அழைத்து வந்து களை பறிப்பது
பற்றி சொல்லித்தந்தாள். `நீதாண்டி மானமுள்ளவ’ என்று மானம் அவளைப்பார்த்து
கம்பீரமாய் கைதட்டியது.

மகள் நிமிர வேண்டும் என நினைத்து முத்துலட்சுமி வயலில் குனிந்தாள், ஆனால்
சமுதாயம் அவளை நிமிரச்செய்யாமல் மீண்டும் மீண்டும் வயலில் குனிய வைப்பதிலேயே
குறியாக இருந்தது..

தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து சாயா குடித்தால் அதிகாரிகளுக்கு வரும் தீட்டு, தாழ்த்தப்பட்ட பெண்களின் உடலைத்தொட வேண்டும் என்று நினைக்கும்போது மட்டும் ஏன் வந்து தொலைவதில்லை என்றபடியே வயலில் நின்ற களைகளை வேகமாய் பிடுங்கினாள்
முத்துலட்சுமி.

சரசுவதி எதுவும் அறியாதவளாய் அவளது அம்மா பிடுங்குவதுபோல களையை பிடுங்க
பழகிக்கொண்டிருந்தாள். எதிர்காலத்தில் அரசு உத்யோகத்தை நம்பாமல் பிழைப்பதற்க்கு தனக்கு தெரிந்த ஒரே வழி இதுதான் என்பதையும் உணர்ந்தாள்.

எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்ற பொதுவான வார்த்தைகளை நம்பி
சரசுவதியை வயல் பக்கம் அழைத்து வராமல் படிக்க வைத்தாள் முத்துலட்சுமி. சாதி
விஷயத்தில் இப்படியொரு குறுக்கீடு வருமென்று முன்பே தெரிந்திருந்தால் அவளை
படிக்க வைக்காமல் வயல்வேலைக்கு பழக்கப்படுத்தியிருப்பாள்.

விரக்தியோடு களையை விசுக் விசுக்கென்று பிடுங்கிக்கொண்டிருந்தாள் முத்துலட்சுமி. கூடவே சரசுவதியும்.

குறிப்பு: இந்த கதை உண்மை மாதமிருமுறை இதழில் வெளிவந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய இளமதியன் ஊரிலிருந்து வந்திருந்த தனது தாத்தாவைப் பார்த்ததும் சந்தோத்தில் திக்குமுக்காடிப்போனான். ”தாத்தா எப்போ வந்தீங்க..? ” கேட்டுக்கொண்டே அவர் மடியில் அமர்ந்தான். ”காலையிலேதான் வந்தேன், நல்லா படிக்கிறியா ராசா…’!’ ம்…தாத்தா, போனவாட்டி மாதிரி எனக்கு கதை சொல்லிகுடுங்க….! ”உன் அப்பாவோட கதையே ...
மேலும் கதையை படிக்க...
தொலைபேசி நிலையத்திலிருந்து வந்த கடிதத்தைப் பிரித்து, சென்ற மாத தொலைபேசி கட்டணம் எவ்வளவு என்று பார்த்தபோது ரகுவரனுக்கு மயக்கம் வராத குறையாக இருந்தது. வழக்கமாக எண்ணூறு ருபாய்க்குள் வந்துவிடும் தொலைபேசி கட்டணத்தொகை இந்த முறை மூவாயிரத்தை தாண்டியிருந்தது. சமையலறையிலிருந்து அப்பொழுதுதான் ரகுவரனின் ...
மேலும் கதையை படிக்க...
என்னைக் கடந்து செல்லும் எல்லாப் பார்வைகளிலும் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறது உனது பார்வை! என்ற கவிதை வரிகளில் ஆரம்பித்து இறுதி வரை கவிதையாகவே எழுதியிருக்கும் தனது தந்தையின் 1980 வருடத்திற்க்கான நாட்குறிப்புகளை திருட்டுத்தனமாக படித்தபோது நிரஞ்சனுக்கு ஒரு சிலிர்ப்பு வந்து ஒட்டிக்கொண்டது. இ-மெயில், எஸ்.எம்.எஸ் என்று காதலை வளர்க்கும் இந்த ...
மேலும் கதையை படிக்க...
ஏரியா மேனேஜர் வேலை எனக்கு சரிப்பட்டுவராது என்பதை நான் உணர ஆரம்பித்தபோது எனக்கு வயது நாற்பத்திரண்டை நெருங்கியிருந்தது. பஸ்ஸில் இரவு நெடுந்தூரம் பயணம் செய்யும்போது குறைந்தது இரண்டு முறையாவது டிரைவர் அருகில் சென்று பஸ்ஸை நிறுத்தச் சொல்லி சிறுநீர் கழிக்கச் சென்றுவிடுவேன் ...
மேலும் கதையை படிக்க...
ஆன்டி…இந்தப்புடவை உங்களுக்கு சூப்பரா இருக்கு…! எதிர் வீட்டு மாலா சொன்னபோது தெய்வானைக்கு முகம் மலர்ந்த்து. அன்று மாலை கல்லூரி விட்டுவரும்பொழுது வழியிலிருந்த கோயிலில் சாமி கும்பிடப்போன மாலா, எதிர்வீட்டு தெய்வானை ஆன்டியைப் பார்த்ததும் வலியச் சென்று பேச்சு கொடுத்து அவர்கள் கூடவே வீடு வந்து ...
மேலும் கதையை படிக்க...
பழசு – ஒரு பக்க கதை
மகன் தந்தைக்காற்றும் உதவி
ஒரு போர்வையாய் உன் நினைவுகள்
சலவைக்குப் போன மனசு
மருமகள் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)