தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 8,776 
 

“”வாடியம்மா மகாராணி, ஸ்கூலுக்கு வர்ற நேரமா இது? மணி பத்தாகுது. லேட்டா வந்ததுமில்லாம கையில கொழந்தைய வேற தூக்கிட்டு வந்திருக்கியே… படிக்கப் போறது நீயா? இல்ல அந்தக் கொழந்தையா? போ… போ… ரெண்டு நாளா ஸ்கூலுக்கு வரல. இன்னொரு நாள் சேந்தாப்புல வீட்டிலேயே இருந்துட்டு நாளைக்கு வா. வறப்ப கொழந்தைய வீட்டில விட்டுட்டு கரெக்ட் டயத்துக்கு வந்து சேர்”

துளசி

மேரி டீச்சர் யார் மீது இப்படிக் கோபப்படுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள நிமிர்ந்து பார்த்தார் தலைமைஆசிரியர் சுசீலா. அந்த வகுப்பில் நடப்பது என்னவென்று அவரால் தன் வகுப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். தடுப்புச் சுவர் இல்லாத வகுப்பறைகள். இடையில் தட்டி மட்டுமே.

கையில் குழந்தையுடன் துளசி நின்று கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் அவளை ஒட்டிக் கொண்டு சாந்தி.

“”மேரி அவங்கள இங்க வரச் சொல்லுங்க”

“”போங்கடி ஹெட் மிஸ்ட்ரஸ் கூப்பிடுறாங்க” அவர்களோடு சேர்ந்து மேரி டீச்சரும் வந்தார்.

“”இன்னிக்கு மட்டுமில்லீங்க டீச்சர். அடிக்கடி இவ லேட்டாத்தா வர்றா. எத்தன தடவை சொன்னாலும் கேக்காம கொழந்தைய வேற தூக்கிட்டு வர்றா. இவ செவன்த். பின்னால நிக்கறது அவ தங்கச்சி. ஃபோர்த் படிக்கிறா, ஃபோர்த் கிளாஸ் சிவகுமார் சார் இன்னிக்கு லீவூங்கறதால அந்தக் கிளாûஸயும் நாந்தாம் பாக்கறேன்”

“”நா விசாரிச்சுக் கண்டிச்சு கிளாஸýக்கு அனுப்புறேன். நீங்க வகுப்புக்குப் போங்க டீச்சர்”

“”இங்க வாங்கடா. ஸ்கூல் ஃபஸ்ட் பெல் எத்தனை மணிக்கு அடிக்குது?”

“”ஒம்பதே காலுக்குங்க டீச்சர்” சொல்லும்போதே விழிமுனைகளில் நீர் முட்டிக் கொண்டு நின்றது.

“”இப்ப மணி என்ன?”

“”பத்தும் பத்துங்க டீச்சர் ”

“”அதெல்லாம் கரெக்டாத் தெரியுது. ஆனா நேரத்தோட வர்றதுக்கு மட்டும் தெரியறதில்ல. உம் பேரென்ன?”

“”துளசிங்க டீச்சர்”

“”ஏன் லேட்டு?”

“”ஸ்கூலுக்குக் கௌம்பறப்ப பைய ஆய்ப் போய்ட்டான் டீச்சர். ஆய்க் கழுவி வுட்டுட்டு… அப்புறம் மத்தியானம் வரைக்கும் பைய பசி தாங்க மாட்டான்னு சோறு ஊட்டிட்டு வந்ததுனால லேட்டாப் போச்சுங்க டீச்சர்”

“”ஏ? உங்கம்மா இதெல்லாம் கவனிக்க மாட்டாங்களா?”

“”அம்மா நூறு நாள் வேலக்கி எட்ரை மணிக்கே கௌம்பிப் போய்ட்டாங்க டீச்சர்”

“”உங்கப்பா?”

மெüனமாக நின்றாள் துளசி.

“”என்னாச்சும்மா? சொல்லு”

“”அப்பா செத்துப்போய் ஆறுமாசமாச்சுங்க” தொடர்ந்து பேச முடியாமல் அழுதாள். அவள் அழுவதைப் பார்த்துக் குழந்தையும் அழத் தொடங்கியது.

நெஞ்சில் சுருக்கென்று ஊசி குத்துவதைப் போல் உணர்ந்தார் சுசீலா டீச்சர். கண்களில் வழிந்த நீரைத் தன் பாவாடையால் துடைத்துக் கொண்டாள் துளசி.

“”அழாதீங்கடா, கிட்ட வாங்க. பயப்படாதீங்க. ஒண்ணும் பண்ண மாட்டேன்” துளசியின் கையைப் பிடித்து வாஞ்சையுடன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.

“”அதாரு உனக்குப் பின்னால ஒண்டிக்கிட்டு நிக்கறது?”

“”சாந்தீங்க டீச்சர். எந்தங்கச்சி”

“”அக்காதா பையனைப் பாத்துக்கறதுனால லேட்டாப் போச்சு, நீ நேரத்தில வந்திருக்கலாமில்ல?”

சாந்தி மெüனமாக நின்றாள். வெட்கமா? பயமா? தெரியவில்லை.

துளசி மாநிறமாக இருந்தாலும் பார்க்க அழகாகவே இருந்தாள். வறுமையின் சுவடுகள் படிந்திருந்தாலும் அது அவளுடைய அழகை முற்றிலுமாகக் குலைத்துவிடவில்லை. எண்ணெய் காணாமல் காய்ந்து கிடக்கும் தலைமுடியை நேராக வகிடெடுத்து அழகாய்த் தலைவாரியிருந்தாள். குழந்தையின் மூக்கில் வழியும் சளியைத் துடைப்பதற்குத் தன் பாவாடையையே பயன்படுத்திக் கொண்டாள். அவளைப் பார்க்கப் பார்க்க சுசீலா டீச்சருக்கு அவள் மீது பரிவும் பாசமுமே ஏற்பட்டது.

“”ஆமா நூறு நாள் வேலைத் திட்டத்தில கொழந்தைகளைப் பார்த்துக்கறதுக்குத் தனியா ஏற்பாடு பண்ணியிருப்பாங்களே, சரி, சரி. அதப்பத்தி உனக்கொண்ணும் தெரியாது. உங்கம்மா கிட்டப் பேசிக்கறேன். நாளைலிருந்து நேரத்தோட வந்திடணும். தெரியுதா? போங்க. வகுப்புக்குப் போங்க. சாயந்தரம் ஸ்கூல் விட்ட உடனே என்ன வந்து பார்த்துட்டுப் போ துளசி”

“”செரீங்க டீச்சர்” சொல்லிவிட்டுப் பெரிய பற்கள் பளிச்செனத் தெரியும்படி சிரித்துக் கொணடே சென்றாள்.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் மனப்பாடச் செய்யுளைச் சத்தம் போட்டு மனப்பாடம் செய்து கொண்டிருந்தனர். ஏழாம் வகுப்புக்குக் கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் மேரி. சுசீலா எட்டாம் வகுப்பு அறிவியல் பாடத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். இப்படி பல வகுப்புகளின் இரைச்சலுக்கு மத்தியில்தான் பாடம் நடத்த வேண்டியிருந்தது.

சுசீலா நேற்றுத்தான் ப்ரமோஷனில் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கிறார். அது நடுநிலைப் பள்ளி. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வரை துவக்கப் பள்ளியாகத்தான் இருந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் செய்த புண்ணியத்தில் அது நடுநிலைப் பள்ளியாக மாறி இருக்கிறது. எட்டு வகுப்புகள் இருந்தும் நான்கு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் நான்கு பேரே அதிகம். பாடத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் நடக்குமா என்பதும் சந்தேகம்தான். இவை பற்றியெல்லாம் சுசீலாவுக்கு வருத்தம் ஏதுமில்லை. ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை தான் ஒரே ஆசிரியராக இருந்து பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

இடையிடையே மேரி டீச்சரும் சுசிலாவும் வகுப்புகளை மாற்றிக் கொண்டார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் உரிய கால அட்டவணைகளில் ஏழு பீரியடுகளுக்கான பாடங்களை இவங்களே எழுதிச் சுவரில் மாட்டியிருந்தார்கள். அதெல்லாம் யாராவது அதிகாரி விசிட் வந்தால் காட்டுவதற்காக மட்டுமே. ஆனால் இவர்களுக்கு எந்த நேரம் வாய்க்குமோ, அப்போதெல்லாம் வகுப்பை மாற்றிக் கொள்வார்கள். மற்றபடி ” மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்டஸ்’ என்பதாகவே இவர்களுடைய வேலை இருந்தது.

மதிய உணவு இடைவேளைக்கு மணி அடித்தவுடன் யாரையோ துரத்திப் பிடிக்கும் நோக்கத்தோடு மாணவர்கள் வெளியே ஓடினார்கள். கை கழுவியதாகப் பேர் பண்ணிவிட்டுத் தட்டுகளை எடுத்துக் கொண்டு பள்ளித் திண்ணையில் அமர்ந்தார்கள். சத்துணவு ஆயாக்கள் உணவு பரிமாறினார்கள். இன்று முட்டை வழங்க வேண்டிய நாள். முட்டையும் பரிமாறப்பட்டது.

சுசீலா எழுந்து வந்து பார்வையிட்டார். துளசியைப் போலவே இன்னும் இரண்டு மூன்று பேர் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தனர்.

அனைவருக்கும் உணவு பரிமாறுகிறவரை யாரும் சாப்பிடக் கூடாது என்பது இப்பள்ளியின் நடை முறை. குழந்தைகளுக்குத் தெரியுமா அந்த நடைமுறை? குழந்தைகள் சோற்றை அள்ளக் கை நீட்டுவதும் அக்காமார்கள் அதைத் தடுப்பதுமாக இருந்தார்கள்.

உணவு பரிமாறப்பட்டவுடன் அனைவரும் எழுந்து நின்றார்கள். “பகுத்துண்டு பல்லுயில் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லம் தலை’ அத்தனை பேரும் சேர்ந்து சத்தம் போட்டுச் சொன்னதில் என்ன சொன்னார்கள் என்பதே சரியாக விளங்கவில்லை.

அதுமட்டுமல்ல,. அதன் பொருள் தெரியாமலேயே தினமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தனிமனிதனுக்காக மட்டுமே சொல்லப்பட்ட அறிவுரை அல்ல இது. பொருள் பொதிந்த அரசியல் தத்துவம் கூட இதில் உள்ளடங்கி உள்ளது என்பதை இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அளவில் இதன் பொருளைச் சொல்லித் தர வேண்டும் என்று சுசீலா மனதிற்குள் எண்ணிக் கொண்டார்.

துளசி முட்டையின் மேலோட்டை உடைத்து வெள்ளைக் கருவையும் மஞ்சள் கருவையும் தனித்தனியாக எடுத்துக் குழந்தைக்கு ஊட்டத் தொடங்கினாள். முட்டை முழுவதும் குழந்தைக்கே உணவாகிப் போனது. சோற்றையும் சாம்பாரையும் சேர்த்துப் பிசைந்து தான் ஒரு வாய் உண்பதும் குழந்தைக்கு ஒரு வாய் ஊட்டுவதுமாக ஒரு தாய்மைக்கே உரிய குணத்தோடு இந்த வயதில் இவளால் எப்படி நடந்துக்க முடிகிறது? சுசீலாவுக்கு வியப்பாக இருந்தது.

தன் மகள் பவித்ராவுக்கு இன்னமும் அவள் உட்கார்ந்த இடத்தில் சாப்பாடு வைக்க வேண்டும். அவள் சாப்பிட்டு முடித்ததும் தட்டிலேயே கை கழுவிக் கொள்வாள். சில சமயம் சாப்பிட மறுத்தால் ஊட்டிவிடுவதும் உண்டு. பிளஸ் ஒன் படிக்கிற அவள் இன்னமும் குழந்தையாகவே சுசீலாவுக்குத் தெரிகிறாள். பவித்ராவையும் துளசியையும் ஒப்பிட்டுப் பார்த்து நெஞ்சம் நெகிழ்ந்து போனார்.

அந்த ஊரைப் பற்றியும் டீச்சர்ஸ், பேரண்ட்ஸ் உறவு எப்படி என்றும் மேரியிடமும் வெற்றிவேல் ஆசிரியரிடமும் விசாரித்தார் சுசீலா.

“”மொத்தமாகவே எண்பது வீடுகள்தான் இருக்கும். மிடில் ஸ்கூலுங்கறதால பக்கத்து ஊர்களிலிருந்தும் ஸ்டூடன்ட்ஸ் வர்றாங்க. பெரும்பாலும் பெண் பிள்ளைகள் எய்த்தோட நினுடறாங்க. அது கூட நம்ம ஸ்கூல் மிடில் ஸ்கூலா மாறுனதால. பேரண்ட்ஸ், டீச்சர்ஸ் உறவு அவ்வளவொண்ணும் பெரிசா சொல்லிக்கற மாதிரி இல்ல. பாத்தா சிரிக்கிறதோட சரி” சலித்துக் கொண்டார் மேரி.

“”ஆனா பிரில்லியண்ட் ஸ்டூடன்ட்ஸ் நிறைய இருக்காங்க டீச்சர். அவங்கள்ல பல பேர் படிப்பைத் தொடர முடியாம போறதுதா வருத்தமா இருக்கு. துளசியவே எடுத்துக்குங்களே, படு சுட்டி” என்றார் வெற்றிவேல்.

“”ஆமாங்க டீச்சர், துளசி பக்காவ படிப்பா. எழுத்து முத்து முத்தா கண்ணுல ஒத்திக்றாப்பல இருக்கும். எப்பவுமே கிளாஸ் ஃபர்ஸ்ட் அவதா. ஆனா பாருங்க. இந்த வருஷத்தோட படிப்ப நிறுத்திடப் போறேன்னு அவ அம்மா சொல்றாங்க. உண்மையில எனக்கு வருத்தமா இருக்கு. இப்படி எத்தனை பேர் திறமையிருந்தும் வாய்ப்பில்லாம போறாங்க பார்த்தீங்களா? ”

அன்று மாலை ஐந்து மணி வரை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய தகவல்களை எழுதி முடித்துவிட்டு துளசியின் வீட்டுக்குக் கிளம்பினார் சுசீலா. பள்ளி வளாகத்தில் இன்னும் சில மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“”சரவணா துளசி வீடு எங்கப்பா இருக்கு?”

“”வடக்க போற வீதியில போ, அந்தக் கடைசில கௌக்க திரும்பிப் போனா, முக்குல இருக்குதுங்க டீச்சர். நா கூடவே வந்து ஊட்டக் காட்றேன் டீச்சர்” புது டீச்சர் கூடப் போவதில் அவனுக்கு ஏகப்பட்ட பெருமை. அவனுடன் இன்னும் சிலர் சேர்ந்து கொண்டார்கள்.

“”இது தாங்க டீச்சர்”

அவன் அடையாளம் காட்டிய வீட்டைப் பார்த்தார். சுற்றிலும் மண் சுவர். மேலே ஓடு வேயப்பட்டிருந்தது. தென்னை ஓலைகளாலும் குச்சிகளாலும் கட்டி வைக்கப்பட்ட படல்தான் கதவு.

வீட்டை ஒட்டி மேல்புறத்தில் தென்னத் தடுக்குகளால் நிறுத்திய தடுப்பு. அதுதான் குளியலறையாக இருக்க வேண்டும். வானமே மேற்கூரை, வெளிச்சத்துக்குக் குறைவில்லை. பகலில் கதிரொளி, இரவில் நிலவொளி, இலவச விநியோகம்.

வீட்டுக்குள் செல்ல முயலும்போது, “”டீச்சர்” என்ற குரல் கேட்டது. கொஞ்ச தூரத்தில் தலையில் விறகுக் கட்டுடன் வந்து கொண்டிருந்தாள் துளசி.

“”வெறகு பொறுக்கப் போயிருந்தனுங்க டீச்சர், வாங்க டீச்சர்” அவளுக்குத் தலைகால் புரியாத சந்தோஷம். உள்ளேயிருந்து துளசியின் அம்மா எட்டிப் பார்த்தார்.

“”அம்மா, இவங்க புதுசா வந்திருக்கிற பெரிய டீச்சர்”

“”உள்ளே வாங்க… உக்காருங்க”

ஒரு பாயை எடுத்து விரித்து அமரச் சொன்னாள் துளசி. குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. சாந்தி வெட்கத்துடன் கதவோரம் மறைவாக நின்று கொண்டாள்.

“”வரக்காப்பி போடறனுங்க. பால் கார்த்தால வாங்கறதோட சரி. சாயந்தரம் வாங்கறதில்லீங்க, மொத மொதலா வந்திருக்கீங்க. துளசி, சாமி படத்துக்கிட்ட காசு வெச்சிருக்கறேன், எடுத்திட்டுச் சீக்கிரமாப் போயி குடிக்கறதுக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வா. ”

“”அதெல்லா ஒண்ணும் வேண்டா… வரக்காப்பி போடுங்க அது எனக்கு ரொம்பப் பிடிக்கும் ”

துளசி அடுப்பைப் பற்ற வைத்துக் காப்பி போடுவதற்குத் தயாரானாள்.

“”உங்க வீட்டுக்காரர் இறந்துட்டார்னு கேள்விப்பட்டேன். இந்த சின்ன வயசிலே அவருக்கு என்ன உடம்புக்கு?”

“”குடிச்சுக் குடிச்சே உடம்பைக் கெடுத்திட்டாருங்க. வாரத்துக்கு மூணு நாளைக்கு வேலைக்குப் போவாரு. நாலு நாளைக்குக் குடிச்சிட்டுப் படுத்துக் கெடப்பாரு. மூணு கொளந்தைகளைக் குடுத்திட்டு நீயே செமன்னு பாரத்தை எந்தலையிலே சொமத்திட்டு போய்ச் சேர்ந்துட்டாரு” கேவிக் கேவி அழ ஆரம்பித்தார்.

சுசீலா கொஞ்ச நேரம் மெüனம் காத்தார்.

“”இனிமே நீங்க தைரியமா இருந்தாத்தான் இந்தக் கொழந்தைகளுக்கு நல்லது. இவங்கள வளர்க்கணும். படிக்க வைக்கணும். நீங்களே மனசுட்டுட்டா எப்படி? ஆமா, துளசியை இந்த வருஷத்தோட நிறுத்திடறன்னு சொன்னீங்களாமே”

“”நானொருத்தி வேலைக்கிப் போயி எப்டீங்க குடும்பத்தக் காப்பாத்தறது? அதா அவளும் காட்டு வேலைக்கோ டவுன்ல பனியன் கம்பெனிக்கோ போனா ஒத்தாசையா இருக்கும்னு தானுங்க”

“”துளசி படிப்பிலே கெட்டிக்காரி. கொஞ்சம் கஷ்டப்பட்டு படிக்க வச்சீங்கன்னா அவ எதிர்காலத்துக்கு நல்லது. அவ படிக்கறதுக்கு என்னாலான உதவியச் செய்யறேன். நீங்க வேணும்னா பாருங்க. எதிர்காலத்தில் பெரிய லெவல்ல வரப்போறா… ஸ்கூலுக்கு அனுப்புறத மட்டும் நிறுத்திராதீங்க”

கிட்டத்தட்ட கெஞ்சுவதைப் போல இருந்தது சுசீலாவின் பேச்சு.

“”எல்லாருந்தா சொல்றாங்க துளசியைப் பத்தி. அவ படுச்சி பெரிய ஆளா வரணும்னு எனக்கும் ஆசைதான். போன வருஷம் அவங்கப்பன் கெடையில கெடந்தாரு. அவரப் பாத்துக்கறதிலியே ஒரு வருஷத்து படிப்புப் போச்சு. இந்த வருஷம் நா படிக்கப் போறேன்னு அவ அடம்புடுச்சதனாலதான் அனுப்பி வெச்சனுங்க. முடிஞ்ச வரைக்கும் படிக்க வைக்கப் பாக்கறனுங்க”

தடை ஓட்டத்தில் இப்போதைக்கு ஒரு தடையைத் தாண்டியிருக்கிறோம் என்கிற மகிழ்ச்சியோடு வெளியே வந்தார்.

சுசீலா இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன. பள்ளிச் சூழல் ஓரளவு மாறியிருக்கிறது. ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான உறவு வலுப்பட்டுள்ளது. இருந்தாலும் மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடாமலிருக்க சுசீலாவுடன் மற்ற ஆசிரியர்களும் பகீரத முயற்சி எடுக்க வேண்டியிருந்தது.

துளசி இப்போது அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். மாலை நேரத்தில் ட்யூசனுக்கு ஏற்பாடு செய்து அந்தச் செலவைத் தானே ஏற்றுக் கொண்டார் சுசீலா.

துளசி படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜாராமன் அவளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார் சுசீலாவிடம்.,

“”ஸ்கூல் ஃபர்ஸ்ட் அவதா. அநேகமா டிஸ்ட்ரிக் ஃபர்ஸ்ட் வாங்கி இந்த ஸ்கூலுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுப்பான்னு எதிர்பாக்கறேன்” என்று அவர் சொன்ன போது சுசீலாவுக்குப் பெருமையாக இருந்தது.

அன்று இரவு வெகுநேரம் தூக்கம் வரவில்லை. துளசியின் நினைவாகவே இருந்தது. தான் மட்டும் தொடர்ச்சியாக முயற்சி எடுக்காமல் விட்டிருந்தால், துளசியின் படிப்பு எப்போதோ அறுபட்டு நின்று போயிருக்கும். சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டிய அறிவுச்சுடர் அது. அதை அணைந்துவிடாமல் தொடர்ந்து காத்த மகிழ்ச்சியில் திளைத்து, நீண்ட நேரம் கழித்தே உறங்கினார்.

அரை ஆண்டுத் தேர்வின் கடைசி நாள். மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சுசீலா அங்குமிங்குமாக நடந்து மாணவர்கள் தேர்வு எழுதுவதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

“”டீச்சர்”

சத்தம் கேட்டு வாசலைப் பார்த்தார். துளசியும் அவள் அம்மாவும் நின்று கொண்டிருந்தார்கள்.

“”வா துளசி. இன்னைக்கு ஸ்கூலுக்குப் போகலையா?”

“”போகலீங்க” மெல்ல முனகினாள். முகத்தில் வாட்டம் தெரிந்தது. துளசியின் அம்மா ஏதோ சொல்ல நினைக்கிறார். ஆனால் சொல்ல முடியாமல் தவிக்கிறார் என்பது தெரிந்தது.

“”என்னாச்சு? சொல்லுங்க”

“”சொன்னா சத்தம் போடுவீங்க. துளசி உங்ககிட்ட வாரதுக்கே பயந்தாளுங்க. நாந்தே தைரியஞ்சொல்லி கூட்டியாந்தனுங்க ”

“”எங்கிட்ட வர்றதுக்கு என்ன பயம்? ஒரு ஸ்டூடண்ட்டா அவளை நான் நெனைக்கறதில்லே. எம் மகளுக்கு எதிர்காலம் நல்லா அமையணும்னு ஆசைப்படற மாதிரித்தா அவளுக்கும் அமையணும்னு நெனைக்கிறவ நான். எதுவானாலும் தைரியமாச் சொல்லுங்க. பணம் ஏதாச்சும் வேணுமா? ”

“”நீங்க அவ மேலே இப்படி நம்பிக்கை வெச்சிருக்கீங்க. அதனாலதா எனக்கும் சொல்றதுக்குப் பயமா இருக்குதுங்க. துளசிக்கு… வர்ற தையில கலியாணம் வெச்சிருக்குதுங்க”

அதிர்ந்து போனார் சுசீலா. பதற்றம் உடலெங்கும் பரவியது.

“”என்ன சொல்றீங்க? அறிவிருக்கா? மடத்தனமா காரியம் பண்ணிட்டு வந்து நிக்குறீங்க. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?”

என்ன பேசுகிறோம் என்பதை நிதானிக்க முடியவில்லை. இவர்களை இப்படித் திட்டுவதற்கு நமக்கு உரிமையிருக்கிறதா என்று யோசிக்க முடியவில்லை.

“”துளசி நீ இதுக்குச் சம்மதிச்சயா?”

மளமளவென்று கண்ணீர் மட்டுமே பதிலாக வந்தது.

“”ஏம் பேசாம நிக்கற? மெரட்டிச் சம்மதிக்க வச்சாங்களா?”

“”இல்லீங்க டீச்சர். உன்ற விஷயத்தில நாம் பண்றது உனக்கு இப்பத் தப்பாத் தெரியும். ஆனால் இதைத் தவிர வேற வழி இல்லைன்னு எங்கம்மா அழுதாங்க. அதுக்கப்புறமும் நான் வேண்டாம்ன்னு சொல்றது சரியா இருக்காதுன்னு ஒத்துக்கிட்டனுங்க”

“”நா விடமாட்டேன். கண்டிப்பா விடமாட்டேன். அண்டர் ஏஜ்ல கல்யாணம் பண்றீங்க. ஸ்டேஷன்ல ரிப்போர்ட் பண்ணப் போறேன்.”

“”ஐயோ அப்படியெல்லாம் செஞ்சுறாதீங்க” கண்ணீர் வழியக் கையெடுத்துக் கும்பிட்டார் துளசியின் அம்மா.

“”எங்க பெரியப்பா பையன். எனக்குத் தம்பி முறையாகுது. கல்யாணமாயி ஒரு வருஷத்திலே காமாலை வந்து பொஞ்சாதி எறந்து போய்ட்டா. நகை, நட்டு ஒண்ணும் வேண்டா. நானே எல்லாச் செலவும் செஞ்சுக் கட்டிக்கிறேன்னா. கொஞ்சம் வசதியாவும் இருக்கறான். நகை, நட்டுப் போட்டுக் கலியாணம் பண்ற நெலமையிலயா நானிருக்கறேன்? சொல்லுங்க, தம்பிங்கறதால மத்த ரண்டு பேரையும் கரை சேத்தறதுக்குக் கொஞ்சம் ஒத்தாசையா இருப்பான். இதையெல்லாம் யோசிச்சுத்தா புள்ளையக் கட்டிக் கொடுக்க ஒத்துக்கிட்டேன். வேறென்ன வழி இருக்குது? சொல்லுங்க.”

எதுவும் சொல்லத் தோன்றாமல் திகைத்து நின்றார். அவர்கள் பக்க நியாயத்துக்கு என்ன சொல்வது? என்னதான் பெண்கல்வி, பெண் சுதந்திரம் என்று நாம் சிந்தித்தாலும் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருந்தால், படிப்புக்கு அதுவே தடைக்கல்லா வந்து வழிமறிக்கத்தானே செய்யும்?

துளசியும் அவள் அம்மாவும் வருத்தத்தோடு விடைபெற்றுச் சென்று நீண்ட நேரமாகிவிட்டது. மேசையில் வைக்கப்பட்டிருந்த துளசியின் திருமண அழைப்பிதழ் காற்றில் படபடத்தது, சுசீலாவின் மனதைப் போலவே.

சுசீலாவின் பதற்றம் தணிய வெகு நேரமாயிற்று.

– லட்சுமி ராயன் (ஏப்ரல் 2014)

Print Friendly, PDF & Email

1 thought on “துளசி

  1. மிக அருமையாக கிராமப்புற பெண் கல்வி பற்றி கூறப்பட்டுல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *