Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

துக்க விசாரணை

 

துக்க விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். உலகத்தில் அன்றாடம் சிறிது சிறிதாக மானத்தை விற்று எத்தனையோ பேர் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலத்தானே ரோகிணியும். அவளுக்கு மட்டும் துக்க விசாரணை என்ற சம்பிரதாயம் வேண்டாமா ?

நான் கடற்கரைக் கட்டில் ஒன்றில் உட்கார்ந்திருந்தேன். கடலின் இரைச்சல் காதுகளுக்கு இதமாக இருந்தது. அந்த இரைச்சலில் எத்தனையோ சுகதுக்கங்களை மறந்துவிடுகிறோம். கடலின் கண்ணுக்கடங்காத பரப்பு வேறு! அந்தப் பரப்பில்தான் எப்படி ‘நான் ‘ என்ற உணர்வே கரைந்துவிடும் நிலையை எட்டி விடுகிறது! கடலின் அலைகள் கரையைத் தொடுவதும் தொடாததுமாக விளையாடிக்கொண்டிருந்தன. கீழ்வானத்தில் சில நிமிடங்கள் நிலைத்த சிவப்பொளி அவசர அவச்ரமாகக் கருமையைத் தொட ஆரம்பித்தது ஏதோ காணதததைக் கண்டுவிட்டது போல ஒருி ஈ மிகுந்த தன்னம்பிக்கையோடு என் மூக்கு நுனியில் வந்து உட்கார்ந்து கொண்டது, ஒரு கையால் அதனை விரட்டியத்தேன், என்மீது என்னவோ அதற்கு திடார் பாசம் ஏற்பட்டது போல ‘ஈ ‘ என்று ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு என் காதில் மீண்டும் உட்கார்ந்து கொண்டது. தலையை அசைத்தேன். அது காதிலிருந்து தலைக்குத் தாவியது. தலையைச் சொறிந்தேன். அது மீண்டும் என் முன் ‘ஈ ‘ என்று வட்டமிட்டது. செகண்டுக்கு தன் இறகுகளை ஆயிரந் தடவைகள் அடித்துக் கொள்ளும் அந்த ஈ! செகண்டுக்கு ஒரு முறை அடித்துக் கொள்ளும் மனித இதயம்.! ஈயின் இதயம் செகண்டுக்கு எத்தனை தடவைகள் அடித்துக் கொள்ளும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னும் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டிவிடும்; துக்க விசாரணைக்குச் செல்லவேண்டும்.

இடையே ஊதி அணைத்துவிட்ட மெழுகுவர்த்தியைப் போல ரோகிணி இறந்துவிட்டாள். ஒரு போதும் குரலை உயர்த்திப் பேசமாட்டாள். ஒரு முறை யாரோ ஒருவனோடு இருந்தாள். நான் வந்ததை அறிந்ததும் வந்து சமாதானம் கூறிச் சென்றாள். ‘இது என் தலை எழுத்துங்க ‘ என்று சொல்லிச் சிரித்துவிட்டுச் சென்றாள். நான் காத்திருப்பேன் என்று எதிர்பார்த்தாள். இரண்டு நாட்களுக்குப் பின் தான் நான் அவளிடத்துக்குச் சென்றேன். அப்போது, ‘அக்கா கடனையெல்லாம் தீர்த்திட்டு கன்னியாஸ்திரி ஆகிவிடுவேன் ‘ என்றாள். ‘இல்லாட்டி தற்கொலை பண்ணிப்பேன் ‘ என்று பிறகு சேர்த்துக் கொண்டாள். ‘தற்கொலையில் அர்த்தமில்லை ‘ என்றேன். ‘பின்னே எதில் ? ‘ என்று கேட்டுக்கொண்டே என் கன்னங்களில் முத்தினாள். அந்தப் பத்துப் பதினைந்தைக் கொடுப்பதைத் தவிர நான் ரோகிணிக்கு எதுவும் செய்தது கிடையாது. ஆனால் அவளுக்குத் தெரியுமோ என்னமோ, அவளைப் பற்றிப் பல தடவைகள் நான் நினைத்ததுண்டு. நினைப்பு என்ன அவ்வளவு பெரிசா ? பின் இல்லையா ? இறந்து போனவர்களைப் பற்றியோ உயிரோடிருப்பவர்களைப்பற்றியோ அவ்வப்போது நினைத்துக் கொள்வது பெரிசில்லையா ? ரோகிணியைச் சந்தித்த முதல்நாள், ‘நாளை உன்னை எங்கே பார்க்கலாம் ? ‘ என்றேன். ‘எட்டு மணிக்கு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் அக்கா வருகிறாள். அவளைச் சந்திக்க ஸ்டேஷனுக்குச் செல்வேன் ‘ என்றாள். காலை ஏழே முக்காலுக்கே ரயில் நிலையத்துக்குச் சென்று விட்டேன். ரயில் இருபது நிமிஷங்கள் தாமதமாக வந்தது. ரயில் முழுவதும், பிளாட்ஃபாரம் முழுவதும் தேடினேன். ரோகிணியையும் காணோம். அக்கா ஜெயத்தையும் காணோம். பிறகுதான் ஒரு முறை ஜெயத்தைப் பார்த்தேன். பிராண்டி குடித்துவிட்டு வெற்றிலைப் பாக்கு போட்டிருந்தாள். தடித்த வெண்மையான சரீரம்; ரோகிணியின் மென்மை இல்லை. சிலவகை ஆண்களைக் கவரும் முரட்டுத்தனம் அவளிடம் காணப்பட்டது.

ரோகிணி இறந்து இருபது நாட்களுக்கு மேலாகிறது. பத்திரிக்கையில் விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அவள் வீட்டுக்குச் சென்றபோது, ‘மூணுவாரமா ஊரில் இல்லை ‘ என்று சால்ஜாப்பு சொன்னேன். வழக்கம்போல் வீடு அடைத்துக் கிடந்தது. நான் கதவைத் தட்டவும், பக்கத்து ஜன்னல் அரைகுறையாய்த் திறந்தது. ‘நீங்களா ? ‘ என்றுவிட்டு கதவைத் திறந்தாள் ஜெயம். உள்ளே நான் நுழையவும் அவள் கதவையும் ஜன்னலையும் மூடினாள். ‘ஒரு மாதமா ஊரிலே இல்லே. நேத்துத்தான் கேள்விப்பட்டேன் ‘ என்று ஆரம்பித்தேன்.

‘உட்காருங்க ‘ என்றுவிட்டு, ‘அது என் தலையெழுத்து ‘ என்றாள் ஜெயம்.

‘டாக்டர்கிட்டே காட்டலயா ? ‘ என்றேன்.

‘மொதல்லே மூணு நாலு நாளைக்கு வெள்ளை வெள்ளையாப் போச்சுனது. ஆச்சி சொன்னாங்களேன்னுட்டு சந்தனத் தைலம் வாங்கிப் போட்டேன். கேக்கலே. முள்ளங்கிச் சாறு, வெங்காயச் சாறு, சீரகம் வெல்லம் எல்லாம் கலந்து மூணுநாள் சாப்பிட்டாப் போதும்னிச்சு தங்கமணி. எல்லாத்தையும்தான் செஞ்சு பார்த்தோம் ‘

‘இதுக்கெல்லாம் இப்போ இங்கிலீஷ் மருந்து இருக்கே. பென்சிலின்ஜி எம்பாங்க. அதை ஊசி போட்டாப் போதுமே ‘ என்றேன் நான்.

‘அதுதான் டாக்டர்கிட்டே வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சுதே! ரெண்டு மாதஹ்த்திலே எல்லாம் கொணமாயிட்ட மாதிரிதான் தெரிஞ்சிச்சு. ஆனா அப்பப்ப வயித்துவலி, வயித்துவலின்னு கத்திச்சு. நாமக்கட்டியை அரைச்சுப் போட்டோம். வலி கொஞ்சம் நின்னமாதிரி தெரிஞ்சது. நானும் அன்னைக்குச் சினிமாக்குப் போயிட்டேன். அத்தான் வளக்கம் போல சீட்டாடப் போயிட்டாரு. ஏதோ ஒரு தடியன் வந்து, ‘ஏண்டி, எனக்கு சீக்கா வாங்கி கொடுத்தேன்னு ‘ கேட்டுக்கிட்டு, செருப்பைக் களத்தி அடிச்சிருக்கான். அவன் போகவும் ரயிலடிக்குப் போனவதான்… ‘ ஜெயம் மேற்கொண்டு பேசவில்லை.

‘இந்த சீட்டாட்டம்தானே அத்தானைக் கெடுத்திரிச்சு ‘ என்றேன் நான், யோசனையோடு.

கனோரியாவைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். என் மாமா ஒருவர் அதனாலேயே கண்பார்வையை இழந்தார். சிறந்த டாக்டர்; இருந்தும் ஒன்றும் அந்தக் காலத்தில் செய்து கொள்ள முடியவில்லை. பிராண்டி குடித்தால் நோயின் கடுமையை மட்டுப் படுத்திக் கொள்ள முடியும் என்று எண்ணி அதிகம் குடிக்க ஆரம்பித்தார். அவரது அட்டகாசம் அதிகமாகவே, மூத்த மகன் அவரை ஒருநாள், ‘வீட்டை விட்டு வெளியே போங்க ‘ என்று உத்தரவிட்டான். மறுநாள் அவர் காலி. அவர்தான் ஒருமுறை சொன்னார். ஆயிரம் கனோரியாக் கிருமிகளை ஒன்றாக வைத்தால் ஒரு குண்டூசியின் தலையளவுக்குத்தான் வரும் என்று. ஆனால் இந்தக் கிருமிகள் ரொம்பவும் சொகுசாக வாழக்கூடியவை. மனித உடல்தான் இவற்றுக்கு லட்சிய இருப்பிடம். வேறு மிருகங்களின் உடல்களில் இவை உயிர் தரிப்பதில்லை. சுற்றுப் புறக் காற்று சற்று உலர்ந்து விட்டாலோ அல்லது உஷ்ணம் அடைந்தாலோ கூட இவற்றால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவற்றுக்கு அப்படி ஒரு தலைவிதி; இல்லை, மனிதனுக்கு அப்படி ஒரு தலையெழுத்து.

‘அந்தத் தடியன் அப்படி அடிச்சதுதான் ரோகிணி மனசைப் புண்படுத்தி இருக்கு. அவன் போனப்புறம் ரயிலடிக்குப் போனவதான்… ‘ என்று மீண்டும் ஆரம்பித்து அரைகுறையாய் நிறுத்தினாள் ஜெயம். ஆனால் ஜெயத்தின் மேலாடை சற்று அலங்கோலமாக இருப்பதைக் கண்டதும் எனக்கு விஷயம் புரிந்தது. பையினுள் கையை விட்டுப் பத்து ரூபாய்த்தாள் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினேன். அப்பொதுதான் ஜெயத்தின் புன்சிரிப்பில் ரோகிணியின் சாயலைக் கண்டதாக நினைத்துக் கொண்டேன். மூடிய கதவைத் தாளிட்டுவிட்டு, சன்னலையும் அடைத்துவிட்டு, ரூபாயை வாங்கிக் கொண்டே, ‘மேலே போகலாமா ? மெத்தை இருக்கு ‘ என்றாள் ஜெயம்.

- சதங்கை, மே 1973 

தொடர்புடைய சிறுகதைகள்
அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோல உடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை. கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தாள். ...
மேலும் கதையை படிக்க...
ராஜுவுக்கு துக்கம் பீறிட்டு வந்தது; சாகலாம் போலிருந்தது. ‘பெரிய சண்டியரு! இவர் எதைக் கேட்டாலும் கொடுத்துடணும்; இல்லாட்டி மாட்ட வைப்பாராம், மாட்ட!’ ராஜுவுக்கு கோபமெல்லாம் செல்லத்துரை மீது. ‘எருமைமாடு மாதிரி இருந்துக்கிட்டு இவன் எதுக்கு நாலாம் கிளாசிலே இருக்கணும்? அன்னைக்கு மாணிக்கம் வாத்தியார்கூட, ‘டே ...
மேலும் கதையை படிக்க...
1 ‘குத்தத்தை ஒத்துக்கிறயா ? ‘ என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார். ‘ஆமாங்க ‘ என்றான் கைதி. ‘இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ‘ என்றார் மாஜிஸ்ட்ரேட். ‘அய்யய்யோ எசமான்! ...
மேலும் கதையை படிக்க...
போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். ‘ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் இல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த ...
மேலும் கதையை படிக்க...
ஓடிய கால்கள்
கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா
பச்சைக்குதிரை
ஜி. நாகராஜனின் நிமிஷக்கதைகள்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)