தீ

 

(இந்தக் கதை கணையாழியில் வெளியாகி 1990ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. டெல்லியைக் கதைக்களனாகக் கொண்டது. இந்திரா காந்தி அம்மையார் கொலை செய்யப்பட்ட அன்று நடைபெறும் ஒரு சம்பவத்தைச் சித்தரிப்பது. அதிலிருந்து ஒரு பகுதி…)

சாதாரண விஷயமானால் பூனம் இந்நேரத்துக்கு இங்கு வரமாட்டாள். நிஷாவிடம் டெலக்ஸ் வேகத்தில் பேசிக்கொண்டிருப்பாள். பொருள்: மாமியார் கொடுமை – பாகம் 1466. முதல் நாள் மாலை 5 மணியிலிருந்து இன்று காலை 10 மணிக்கு ஆபீஸுக்குப் புறப்படும் வரை செய்யப்பட்டதாக நம்பும் விஷமங்களின் தொகுப்பு. பூனம் ஒவ்வொன்றாகச் சொல்ல நிஷா ‘ஆமாம்’ என்று தொடங்கி தன் வீட்டிலும் அப்படித்தான் என்பதாகச் சற்றே இடம் பெயர்களை மாற்றி விவரிப்பாள். ஒருத்தி பேசுகையில் மற்றொருத்தி தான் அடுத்தாற்போல் என்ன சொல்லலாம் என்பதை யோசிப்பாள். இதற்கிடையே மாறுதலுக்காகப் புடவை, புதுச்செருப்பு, தான் கடைசியாகக் குடித்த ஒயின் என்ன விந்தை செய்தது – இவையும் ஆங்காங்கே ·பில்லர்களாக வரும். ஊரில் பத்துத் தேய்த்துத் துவையல் அரைத்தே ரேகை அழித்துக்கொண்டிருக்கும் அக்கா நாகலக்ஷ்மியை இந்த சிந்திப் பசு மகளிரோடு ஒப்பிட்டு நெட்டுயிர்ப்பான்.

அத்தனை முக்கியமான காலைச் சம்பாஷணையை விட்டுவிட்டு ஓடிவருகிறாளே, நிச்சயம் ஏதோ இருக்க வேண்டும்.

அவளுடைய அண்மை சௌம்யமாய் இருந்தது. ‘பிறன்மனை நோக்காப் பேராண்மை’யைத் தலையில் தட்டி ஒரு மூலையில் உட்கார வைத்தான்.

வந்த புதிதிலெல்லாம் அவள் கண்ணைப் பார்த்தே பேசமாட்டான். பிறகுதான் தெரியவந்தது நீ எதைப் பார்த்தாலும் இவளுக்குப் பொருட்டல்ல என்பது. இப்போதெல்லாம் விபூதியை அழித்துவிட்டே ஆபீஸ¤க்கு வருகிறான். இச்சைப்படிக் குற்ற உணர்வில்லாமல் செய்வதைச் செய்யலாமே.

இவனுடைய குறுகுறுத்தலையும் கண்களையும், பரவலான நீண்ட மயிருடைய மீசையையும், மேலே கூர்த்து விடைத்த செவிமடலையும் உத்தேசித்து இவனுக்கு ‘முயல்’ என்று பெயர் சூட்டியிருந்தார்கள் பூனமும், நிஷாவும். இவனுக்கு அது தெரிய நியாயமில்லை.

“என்ன கனவு காண்கிறாய், ருக்மிணி ஞாபகமா?” என்று பூனம் கேட்டதும்தான் இவன் கிறக்கத்தில் இருந்து விழித்தான். ருக்மிணி இவனது மிகப் புதிய மனைவி. “நோ, நோ..” என்று சொல்லிவிட்டுப் பொய் தேடிக்கொண்டிருப்பதற்குள் அவள் மேலே பேசினாள். எதையாவது மெல்லாதிருக்கும்போது அவளுக்குப் பேசுவது ரொம்பப் பிடிக்கும். விட்டால் பேசிக்கொண்டே மெல்லுவாள். புருஷன்காரன் எப்படித்தான் சமாளிக்கிறானோ.

“சுனா ஹே பிச்சு? (இதைக் கேட்டாயா பிச்சு?) இப்போதுதான் போன் வந்தது. பெருந்தலைவியைக் கொன்றுவிட்டார்களாம்.” சூடான, பதட்டமான செய்தியை முதலில் உடைக்கும் ஆர்வப் பெருமை அவள் குரலில் தெரிந்தது.

“என்ன? விளையாடாதே. என்ன சொல்கிறாய் நீ?”
“கடவுள் சத்தியம். அவள் வீட்டிலிருந்த மெய்க்காப்பாளர்கள் செய்த வேலையாம். என் அங்கிள் யாரிடமும் சொல்லவேண்டாம் என்றார்.” அவளுடைய மாமா PTIயில் செய்தி ஆசிரியராக இருக்கிறார். ஆனால் இதில் ரகசியம் என்ன? மூடி மறைக்கவா முடியும்?

முடியும். முடிந்தது. அன்று மாலைவரையாகிலும். புழக்கடையில் நடந்த விஷயத்தை BBC சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. இங்கே எல்லார் மென்னியும் அழுத்திப் பிடிக்கப்பட்டிருந்தது.

இவனுக்கு அதிகாரத்திலிருக்கும் தலைவர்களைப் பிடிக்கும். கொலை பிடிக்காது. மிகச் சக்திவாய்ந்த தலைவர்களுக்குச் சாவில்லை என்றுகூட நினைப்பான். தன்போன்ற நிணமும் சதையும் ரத்தமும் மயிரும் தோலும்

கொண்டு செய்யப்பட்டவர்களல்லர்; ஏதோ அதிமானுடப் பிறவிகள் அவர் என்று நம்பிக்கை. இருவரல்ல, மூவரல்ல,

எத்தனை பேர் சுட்டால் என்ன, அவள் எப்படிச் செத்தாள்? இவனுக்கு வியப்பாகவும் பயமாகவும் இருந்தது. கலி முற்றித்தான் விட்டதா?

ஊழிப்பெருக்கு வந்து உலகை விழுங்கிவிடுமா? எங்கு பார்த்தாலும் அலை வீசிக் கொண்டிருக்கும் நீர்ப்பெருக்கத்தில் ஓர் ஆலிலைமேல் தான்மட்டும் வாயில் கால் கட்டைவிரலைச் சப்பிக் கொண்டிருப்பதாகக் கண்முன் தோன்ற அவனுக்குச் சிரிப்பு வந்தது.

- ஆகஸ்டு 2003 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)