திரு. திருடர்

 

சத்தம் வராமல் ஓட்டின் மேல் ஏறி நடந்து செல்லும் கலையை அவன் பூனையிடமிருந்துதான் கற்றுக் கொண்டான். ஒவ்வொரு முறையும் பாதம் பதியும் வரை கவனம் வேண்டும். தனது வீட்டில் ஓடுகளை பரப்பி வைத்து அதன் மீது ஏறி நடந்து அவன் பயிற்சி செய்ததுண்டு. பல்வேறு இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு ஓடுகள் சடசடக்கும் சத்தம் அவனிடம் தோற்றுப் போனது.

ஆனால் இன்று, இந்த ஓடு மிகப் பழைமையானதாக இருந்தது. ஒருவேளை தாத்தா சொத்து பேரனுக்குத்தான் என்கிற சட்டத்தின் படி, யாரேனும் ஒரு கொள்ளுத்தாத்தா கட்டிய இந்த வீடு அனாமத்தாக இந்த வீட்டுச் சொந்தக்காரனுக்குக் கிடைத்திருக்குமோ? இந்த வீட்டில் மிஞ்சிப் மிஞ்சிப் போனால் என்ன கிடைத்துவிடப் போகிறது. ஒரு வெண்கலப்பானை கிடைத்தால் கூட பெரிய அதிர்ஷ்டம் தான்.ஒரு வெண்கலக் கிண்ணம் கிடைத்தால் கூட விடக்கூடாது என உறுதியான பல முடிவுகளை வகுத்துக் கொண்டு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்தத் திருடன் கடுமையான வறுமையில் இருந்தான்.

பல நாட்களாக டி.வி.யில் வாஸ்து பற்றிய நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்து, பார்த்து எதுவும் புரியாமல், பின் தெரிந்தவர்களிடம் கேட்டு கேட்டு லேசாக புரிந்து, பின் புத்தகங்களில் படித்து படித்து முழுமையாக தெரிந்து கொண்டு வளர்த்துக்கொண்ட வாஸ்து அறிவை பயன்படுத்திக் கணித்ததில், நியாயப்படி தனது காலடியின் கீழ்தான் சமையலறை இருக்க வேண்டும் என தீர்க்கமாக தீர்மானித்தான் அந்தத் திருடன். இதுவரை தனது கணிப்பு பொய்யானதில்லை என்கிற தெனாவட்டில் ஓட்டைப் பிரித்துப் உள்ளே எட்டிப் பார்த்ததில் அவனுக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டது. அங்கு ஒரு கரடி உருமிக் கொண்டிருந்தது. அய்யோ…இப்படி நடக்க வாய்ப்பேயில்லை என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு, தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டு, கண்களை ஒருமுறை நன்றாக கசக்கிவிட்டுக் கொண்டு பின் மீண்டும் உற்றுப் பார்த்தான். அங்கு கருப்பு கம்பளியைப் போர்த்திக் கொண்டு வயதான கிழவர் ஒருவ​ர் கரடியைப் போல் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் ஓட்டின் மேல் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த குளுகோஸ் பாக்கெட்டைப் பிரித்து வாயில் கொட்டிக்கொண்டு, வியர்வையை நன்றாக துடைத்துவிட்டு, மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட்டான். தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டான். தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டான். சென்றவாரம் சோனி பிக்ஸ் சேனலில் பார்த்த மிஷன் இம்பாசிபிள் படத்தில் லாவகமாக திருடிவட்டு தப்பிச் செல்லும், டாம்க்ரூசை மனதிற்குள் நினைத்துக் கொண்டான். தனது பர்சில் உள்ள டாம்க்ரூஸின் புகைப்படத்தை ஒருமுறை எடுத்துப் பார்த்துக் கண்களில் ஒத்திக்கொண்டான். பின் தனக்குத்தனே 3 முறை கூறிக் கொண்டான் இவ்வாறு…

“பயப்படதாடா”

பின் ஓட்டைப்பிரித்து துளை வழியாக எட்டிப்பார்த்தான் திருடன். அந்தப் பெரியவர் உலகத்துக்கே சவால் விடும்படி குறட்டை விட்டுக் கொண்டிருந்தார்.

“எவனுக்கேனும் தைரியம் இருக்கிறதா? என் குறட்டையை மிஞ்சுவதற்கு” என்கிற கேள்வியை அவர் கேட்கவில்லையென்றாலும் அப்படி கேட்பது போல் பிரமையை தோற்றுவித்துக் கொண்டிருந்தது. நிச்சயமாக அசிங்கமாக ஏதோ ஒரு கேள்வியை கேட்டுவிட்டுத்தான் இந்த கிழவனின் மனைவி ஊரை விட்டு ஓடியிருப்பாள் என உறுதியாக நம்பினான் அந்தத் திருடன். குறட்டை விடுவதில் அப்படி என்ன சர்வாதிகாரத்தனம் என மண்டையில் ஓங்கி கொட்ட வேண்டும் போல் இருந்தது அந்த திருடனுக்கு. காதைப்பிடித்துத் திருகி, “ஊர் உலகத்தில் எவனும் குறட்டை விடுவதில்லையா? உனக்கு மட்டும் அப்படி என்ன திமிர்த்தனம் என இரண்டு கன்னங்களிலும் மாற்றி மாற்றி அறைய வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. எல்லாவற்றையும் தனக்குள் போட்டு மென்று, விழுங்கி கட்டுப்படுத்திக் கொண்டான் என்றால் அதற்கு ஒரே காரணம் அந்தத் திருடனின் கடமையுணர்ச்சி மட்டுமே. கடமை என்று வந்துவிட்டால் அவன் மானாட, மயிலாட நிகழ்ச்சியைக் கூட பார்க்காமல் தியாகம் செய்துவிட்டு கடமையை ஆற்றச் சென்று விடுவான். அப்படியொரு கட்ஸ் அவனுக்கு உண்டு.

வலுவான கொச்சைக் கயிறு ஒன்றை இடுப்பில் கட்டிக் கொண்டு அதன் மறுமுனையை ஓடு வேயப்பட்ட உத்தரத்தில் கட்டிவிட்டு, அதன் வழியாக வீட்டிற்குள் இறங்கினான். சகிக்க முடியாத அந்த குறட்டைஒலியை தாங்கிக் கொள்ள முடியாதவனாக, ஒரு காகிதத்தை இரண்டாக கிழித்து இரண்டையும் சிறிய உருண்டையாக உருட்டி காதுகளில் அடைத்துக் கொண்டான். இப்பொழுதுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

மௌனம் எவ்வளவு அழகான விஷயம் என ஒரு ஞானியைப் போல அநுபவித்துக் கூறினான். தன்னைச் சுற்றி ஒரு நோட்டம் விட்டான். சரிதான்… அவன் கணிப்பு என்றுமே பொய்யானதில்லை. அவன் லேண்ட் ஆகிய இடம் சமையல் அறையேதான். சமையல் அறைக்குள் வந்து இந்த கரடி ஏன் உறங்க வேண்டும் என்று சிந்தித்தவாறு ஒவ்வொரு பொருளாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். ஏதோ பாத்திரக் கடைக்குள் சென்று விலை கொடுத்து வாங்கப் போகிறவன் போல ஒவ்வொரு பாத்திரத்தையும் எடுத்து தட்டிப் பார்த்தான். தான் கொண்டு வந்திருந்த கல்லால் அவற்றை உரசிப்பார்த்தான். உரசிய இடத்தில் மூக்கை வைத்து ஆழமாக முகர்ந்துப் பார்த்தான். பின் அந்த இடத்தில் தொட்டு நக்கிப் பார்த்தான். அத்தனையும் சொக்க வெண்கலம். அவன் கண்களில் பிரகாசமான ஒளிவெள்ளம் தோன்றியது. இதையெல்லாம் விற்றால் ஒரு மாதத்திற்கு மட்டன் பிரியாணியாக சாப்பிடலாம் என்று கனவு கண்டான்.

ஆனால், ஒருவிஷயம் அவனை உறுத்தியது. எல்லா பாத்திரங்களிலும் ஏதோ ஒரு குறை இருந்தது. பாத்திரத்தின் ஏதோ ஒரு மூளை நெளிந்திருந்தது. நிச்சமாக அது கிழவியின் வேலையாகத்தான் இருக்கும். அந்த ஓடிப்போன கிழவி, இந்தக் கிழவனை படாதபாடு படுத்தியிருக்க வேண்டும். கொடூரமாக தாக்கியிருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு வெண்கலப்பானையை நெளிக்க யாரால் முடியும். அந்தக் கிழவனை நினைத்து மனதிற்குள்ளாக பரிதாபப்பட்டு உச் கொட்டினான். இவ்வளவு வலிகளையும் தாங்கிக் கொண்டு ஒரு ஆண்மகன் நிம்மதியாக உறங்குகிறான் என்றால், அவனை நிச்சயமாக பாராட்டித்தான் ஆக வேண்டும். திருடிவிட்டுச் செல்லும் போது அவனுக்காக ஒரு பாராட்டு கடிதத்தை எழுதி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். பயபுள்ள எவ்வளவு தைரியசாலியாக இருந்தால் இப்படி குறட்டை விட்டுக்கொண்டு தூங்குவான்.

அந்தத் திருடன் வியப்பில் ஆழ்ந்திருந்த சமயம், தென் கிழக்குத் திசையிலிருந்து ஒரு பொருள் 120 கிலோமீட்டர் வேகத்தில், 150 சிசி குதிரை திறன் சக்தியுடன் காதிற்கும், கழுத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் பறந்து வந்து தாக்கியது. 80 சதவீத சுயநினைவை இழந்து போன அந்தத் திருடன், அந்தச் சூழ்நிலையிலும், தன்னைத் தாக்கியது ஒரு வெண்கலச் சொம்பு என்பதை புரிந்து கொண்டான். அவனது வாய்க்குள் இருந்து ஒரு கடவாய்ப் பல், “இனிமேல் நான் உனக்கு உபயோகப்பட மாட்டேன்” என வெளியே தெரித்து வந்து விழுந்தது. தனக்குத்தானே மூன்று முறை சுற்றிவிட்டு கீழே பொத்தென்று விழுந்தான். இரண்டாவது முறை சுற்றிக் கொண்டு கீழே விழும் போது அந்தத் திருடன் 2 விஷயங்களை கவனித்திருந்தான்.

1. அந்தக் கிழவன் தன் கையில் நீளமான பொருள் ஒன்றை வைத்துக் கொண்டு ஏதோ 100 அடிக்கு அந்தப் பக்கமாக விழுந்து கிடப்பது போல் ஒற்றைக் கண்ணை மூடிக் கொண்டு குறிபார்த்துக் கொண்டிருந்தான். நிச்சயமாக அந்த நீளமான பொருள் ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கியாகத்தான் இருக்க வேண்டும்.

2. ஒரு கையில் தென்னங்கீற்றால் தயாரிக்கப்பட்ட துடைப்பத்தையும், மற்றொரு கையில் ஒரு வெண்கல அண்டாவையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு, பற்களை நறநறவென கடித்துக் கொண்டு, ஒரு வயதான கிழவி தெலுங்கு நடிகை விஜயசாந்தியைப் போல எந்த கிராபிக்ஸ் உதவியும் இல்லாமல் பாய்ந்து வந்து கொண்டிருந்தாள்.

அந்தக் காட்சியே திருடன் மயங்கி விழ போதுமானதாக இருந்தது. அந்தக் கிழவிக்கு தாக்க வேண்டிய அவசியமே ஏற்படாமல் போனது. சரி சொர்க்கத்திலோ, நரகத்திலோ திருடியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தப்படி திருடன் மயங்கி விழுந்தான்.

அவனை மேலுலகத்துக்கு அழைத்துச் செல்ல கிங்கரர்கள் வந்தார்கள். அவனை கைது செய்து அழைத்துச் சென்றார்கள். போகும் வழியில் அவனை சுத்தமாக குளிக்கச் செய்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அவதார் படத்தில் வருவது போல் அந்தரத்தில் வழிந்து கொண்டிருந்த அருவியில் அவனை நிற்க வைத்தார்கள்.

அப்பொழுது குளிர்ந்த நீர் அவனது முகத்தில் பளிச்சென்று பட்டுத் தெரித்தது. கண்விழித்துப் பார்த்தால் அந்தக் கிழவி ஏதோ கெட்டவார்த்தையை உபயோகித்து அந்தத் திருடனை திட்டிக்கொண்டிருந்தாள்.

‘உன்னையெல்லாம் தோலை உரித்து அதில் உப்பைத் தடவி, 2 நாட்கள் வெய்யிலில் காய விட வேண்டும். பச்சை மிளகாயை கசக்கி கண்கள் இரண்டிலும் வைத்து நன்றாகத் தேய்க்க வேண்டும். மிளகாய் பொடியை எடுத்து தோலை உறித்த இடத்திலெல்லாம் அழுத்திப் பூச வேண்டும்.”

இதையெல்லாம் மிரட்சியுடன் கேட்ட அந்தத் திருடன் “ஐயோ” என்கிற ஒற்றை வார்த்தையை மட்டும் உபயோகித்து கதறியபடி மீண்டும் மயக்கத்திற்குள் போனான். மறுபடியும் அதே அருவி கண்களுக்கு முன் தெரிந்தது. கிங்கரர்கள் சீக்கிரம் குளித்துவிட்டு வரும்படி கத்தினார்கள். குளிர்ந்த நீர் கன்னத்தில் பட்டுத் தெரித்தது. மீண்டும் மயக்கம் தெளிந்தது. அந்தக் கிழவி இன்னும் திட்டிக் கொண்டுதான் இருந்தாள். கிழவன் மட்டும் இல்லையென்றால் தன்னை உயிரோடு கொளுத்தினாலும் கொளுத்தியிருப்பாள் என்று தோன்றியது அந்தத் திருடனுக்கு. கிழவிக்குள் ஒரு ஹிட்லர் ஒளிந்திருப்பது திருடனின் கண்களுக்கு மட்டும் பளிச்சென்று தெளிவாகத் தெரிந்தது.

மயக்கத்திலிருந்து எழுந்த திருடனுக்கு நீராகாரம் கொடுத்தான் கிழவன். அதில் கிழவி விஷத்தை கலந்து கொடுத்திருப்பாளோ என்று பயந்தான் திருடன். ஒரு தேர்ந்த டி.டி.பி. ஆபரேட்டரைப் போல் அவனது விரல்கள் பயத்தில் டைப் அடித்துக் கொண்டிருந்தன. கையில் வாங்கிய நீராகாரத்தில் பாதியை உடல்மேல் கொட்டிக் கொண்டு, மீதியை வயிற்றுக்குள் கொட்டினான். பயத்தில் உறைந்திருந்த அவனது கண்களை உற்றுப்பா​ர்த்தார் அந்தப் பெரியவர். காட்ஷில்லாவை பார்த்த கிராமத்தானைப் போல் அவனது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கிழவியிடம் சற்று நேரம் அந்தப்பக்கம் வரவேண்டாம் என்று அதட்டலாகக் கூறினார் பெரியவர்.

பெரியவருக்கு அந்தத் திருடனைப் பார்க்கும் போது தன்னையே பார்ப்பது போல் தோன்றியது. தான் ஒரு காலத்தில் திருடனாக சுற்றித் திரிந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்தார். எத்தனை சவால்கள், எத்தனை துரத்தல்கள், எத்தனை அடிதடிகள், உலகத்திலேயே இத்தனை ரிஸ்க்கான வேலை வேறு எதுவும் இருக்க முடியாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும், ஆனால் எத்தனை காலம் திருடனாகவே காலத்தை ஓட்ட முடியும். அதில் ஜாப் செக்யூரிட்டி என்றும் எதுவும் இல்லையே.

மேலும் பிடிபட்டால் உயிர்பிழைத்து வருவது என்பது 20 சதவிகிதம் தான் சாத்தியம். மக்கள் கோடி கோடியாக திருடும் அரசியல்வாதிகள் மேல் உள்ள கோபத்தையெல்லாம் அப்பாவித் திருடன்கள் மேல் காட்டிவிடுகிறார்கள். சில சமயங்களில் கை, கால்களை கூட உடைத்து விடுகிறார்கள். அதிலும் சில மேதாவிகள் வீட்டில் பொண்டாட்டி மேல் உள்ள கோபத்தையெல்லாம் திருடன் மேல் தான் காட்டுவார்கள். தன் பொண்டாட்டியை பெல்ட்டை கழற்றி அடிக்க வேண்டும் என்கிற ஆசையை கணவன்மார்களும், தனது கணவனை செருப்பைக் கழற்றி அடிக்க வேண்டும் என்கிற ஆசையை மனைவிமார்களும் நிறைவேற்றிக்கொள்ள, அடுத்த வேளை சோற்றுக்காகத் திருடிய திருடனைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் தான் திருடிப் பிழைக்கும் பிழைப்பை தூக்கி போட்டுவிட்டு, உழைத்துப் பிழைக்க ஆரம்பித்தார். ஆனால் அதிசயக்கத்தக்க வகையில் உழைத்துப் பிழைப்பது என்பது திருடிப் பிழைப்பதைவிட எளிமையானதாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து போனார் அந்த கிழவர். இவ்வளவு நாளாக தனக்கு இந்த விஷயம் புரியாமல் போய்விட்டதே என வருத்தப்பட்டார். பிறகு அன்றிலிருந்து எளிமையாக வேலை செய்து, எளிமையாக வாழ்க்கை நடத்த ஆரம்பித்துவிட்டா​ர். இப்போது அவருக்குள்ள ஒரே துயரம் அந்தக் கிழவிதான். சீனாவுக்கு ஹுவாங்கோ நதிபோல.

அந்தக் கிழவர் திருடனுக்கு தன்மையாக எடுத்துக் கூறினார்.

“திருடிப் பிழைப்பதைவிட உழைத்துப் பிழைப்பது மிக எளிது என்கிற ரகசியம் எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று தன் கதையை கூற ஆரம்பித்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
இது புரிந்து கொள்ளவே முடியாத குழப்பமான விஷயமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுது விஷயம் தெளிவாகிவிட்டது. அவன் சாலையின் வலப்பக்கமாகத்தான் போவான். அவன் இடது கையால் தான் சாப்பிடுவான். அவன் 9 மணிக்குமுன் படக்கையைவிட்டு எழுந்ததேயில்லை. அவன் பல்துலக்கியதே இல்லை. அவன் தலையில் எண்ணெய் தேய்த்ததேயில்லை. ஆனால், அவன் பள்ளிக்கு ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகத்தின் ஒட்டு மொத்த பார்வையும் ஒரே நேரத்தில் ஈர்க்கக் கூடிய ஆற்றல் அவளிடம் அப்படி என்ன இருக்கிறதெனத் தெரியவில்லை. அவள் என்னவோ பார்ப்பதற்கு சுமாரான அழகோடுதான் இருக்கறாள். சரி.........சரி...... நான் பொய் சொல்ல மாட்டேன். (மானசீகமாக சத்தியம் செய்து கொண்டு 2 ...
மேலும் கதையை படிக்க...
1 தந்தை தனது 5 வயது குழந்தையிடம் 2 கையில் பிராகரஸ் ரிப்போர்ட் 3 பயந்து போன மனநிலையில் குழந்தை கண்ணன் 4 அவன் அமர்ந்த நிலையில் ஏதோ ஒரு இயற்கை காட்சியை படமாக வரைந்து கொண்டிருந்தான். இயற்கை தனது அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்த தேர்ந்தெடுப்பது குழந்தைகளை, ...
மேலும் கதையை படிக்க...
கழுத்தில் டையுடன் நீட்டாக உள்ளே வந்தவரைப் பார்த்தவுடன் சற்று மிரண்டு போனதற்கு காரணம், அந்த 28 வயது இளைஞர் இடுப்புக்‍கு கீழ் அணிந்திருந்தது அரைக்‍கால் டவுசர் மட்டுமே. அவரிடமிருந்து வார்த்தைகள் கோர்வையாக வெளிவரவில்லை. அவரது வார்த்தைகள் தெளிவற்று காணப்பட்டன. அதற்குக்‍ காரணம், ...
மேலும் கதையை படிக்க...
பரிதாபகரமாக பார்க்‍கப்படும் ஒரு பார்வைக்‍குப்பின்னர் பயங்கரத்தை பார்ப்பது இதுவே முதல் முறை.... அவனை சிறு வயதில் பார்த்த போது அவன் கண்களில் பரிதாபகரமான சிறு ஒளி தெரிந்தது. என்மீது பரிதாபமே இல்லையா என்பது போல் ஒரு பார்வை பார்ப்பான். அந்தப்பக்‍கமும் இந்தப்பக்‍கமுமாக எதையோ ...
மேலும் கதையை படிக்க...
ஆச்சரியமான ஆச்சரியம்
யார் புத்திசாலி?
அநாகரிகமான விவகாரம்
மனநல மருத்துவர்
அவன்

திரு. திருடர் மீது ஒரு கருத்து

  1. Nithya Venkatesh says:

    ஹாஹாஹா அருமையான விடயம் அழகாக நகைச்சுவையாக சிறந்த கருத்தை கூறிஉள்ளறீர்கள் .. வாழ்த்துக்கள் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW