திருடன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 8,146 
 

திரும்பத் திரும்ப அதையேதான் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். அந்தக் காவல் துறை அதிகாரியும் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வியையேதான் கேட்டுக்கொண்டிருந்தார். விசாரணைக்கு இடையில் அவளுக்கு ஒரு தேநீர் கிடைத்தது. அதை வாங்கிக் குடித்துவிட்டு தனது முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு தலைமுடியை அவிழ்த்து உதறி மீண்டும் கோடாலிக் கொண்டை போட்டுக் கொண்டாள். உள்ளே போன அதிகாரி மீண்டும் அவளிடம் வந்தார்.

“உண்மையைச் சொல்லுமா…ஒரு லட்சமா வெச்சிருந்த”

“ஆமாஞ் சாமி. ஒருலச்ச ரூபா சாமி. குருவி சேக்கரமாதிரி சேத்து வச்சிருந்த பணம். அவன் நாசமா பூடுவாஞ் சாமி. அவன் பொண்டாட்டி புள்ளைங்க நல்லா இருக்க மாட்டாங்க. காலைல தோட்டகாலுக்கு போயி வர்றதுகுள்ள தூக்கினு போயிட்டானே படுபாவி” வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டாள் அவள்.

“ஏமா… ஒப்பாரி வெக்கிறே. நீதான் சொல்லிட்ட இல்ல. எப்பிடியாச்சும் கிரிமினல கண்டு பிடிச்சிடுவோம். பயப்படாத”

“புடிங்க சாமி. புடிச்சி அவுனுக்கு குடுக்க வேண்டிய தண்டனய குடுங்க. நீங்க மவராசனா இருப்பீங்க”

“போதும் உன்னோட ஆலோசனை. எத்தினி மணிக்கி உன் வீட்ல திருடு போச்சி”

“காலம்பற ஐஞ்சி மணி பஸ்ஸு போறதுக்குள்ளதான் சாமி. திருடுனவன் எப்பிடியும் அந்த பஸ்ஸுலதான் போயிருக்கணும். நீங்களே பாத்தீங்களே. எப்பிடி எம்வூட்ட அலங்கோலம் பண்ணிட்டு போயிருந்தான் பாத்தீங்க இல்ல. தானியம் கொட்டி வெக்கிற பான சட்டிய கூடவா சாமி தூக்கி போட்டு ஒடச்சிட்டு போவான் அந்தப் பாவி. ஆனா ஒன்னு சாமி! என் சாபம் அவன சொம்மா உடாது பாத்துக்க நீ.” புறப்பட்ட வெற்றிலைப் போட்ட சிவப்பு நிற எச்சில் அவள் வாயிலிருந்து சிதறிக்கொண்டிருந்தது. சற்று விலகி நின்று கொண்டார் காவல் அதிகாரி.

“சரி…சரி! நீ போயி அந்தப் பக்கமா உக்காரு. நான் கூப்படறப்போ வா”

தனது மற்ற காரியங்களைப் பார்ப்பதற்குக் கிளம்பிப் போய்விட்டார் அந்த காவல்துறை அதிகாரி. அவள் அந்தக் காவல் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் ஒரு மரத்து நிழலில் போய் அமர்ந்துகொண்டாள். வருவோரையும் போவோரையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதற்கு ஏதுவாய் இருந்தது அந்த இடம். காவல்துறை அதிகாரியின் அழைப்பிற்காகக் காத்துக்கிடந்த அவள்இ அந்தக் காவல் நிலைய வாயிலையே திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருந்தாள். இடையில் தனது சுருக்குப் பையை விரித்து அதில் கிடந்த வெற்றிலையை எடுத்து அதில் சுண்ணாம்பைத் தேய்த்து மடித்து வாயில் போட்டுக்கொண்டவள்இ ஒரு பாக்கை எடுத்து கல்லால் நறுக்கி அதையும் சிறிது புகயிலையையும் சேர்த்து தனது வாயில் போட்டு மென்றுகொண்டே எச்சில் துப்புவதற்கு வாட்டமான ஒரு இடத்தைப் பிடித்து அமர்ந்துகொண்டாள். அப்போதும் அவளது கண்கள் அந்த காவல் நிலையத்தின் வாயிலிலேயே நிலைத்திருந்தன.

தூரத்திலிருந்து அந்த அதிகாரி சைகையால் கூப்பிடுவதைக் கவனித்துவிட்டவள்இ அவசர அவசரமாக வெற்றிலைப் பாக்கைத் துப்பிவிட்டு வாயைத் துடைத்துக்கொண்டு காவல் நிலையத்தை நோக்கி ஓடினாள். உள்ளே ஒருவனை வைத்துக் காவலர் ஒருவர் விசாரிப்பதை அறிந்துகொண்டவள்இ அந்த அதிகாரியின் பக்கமாகப் போய் அமைதியாக நின்றுகொண்டாள்.

“ஒரு லட்சமில்ல ஒரு பைசாகூட அந்த ஊட்ல இல்ல சார்”

“இன்னா பொய் பேசறான் பாருங்க சாமி. இந்த கையாலதான் முந்தாநேத்து எண்ணி துணியில போட்டு கட்டி வெச்சேன். இன்னா பச்சையா பொய் சொல்றான் பாருங்க”

“………..”

“இன்னிக்கி சாயங்காலத்துக்குள்ள பணம் வந்து சேரணும். இல்லனா கம்பி எண்ணவேண்டியதுதான்”

லட்டியடிக்கு வளைந்து வளைந்து கொடுத்துக்கொண்டிருந்தான் அவன். காவல்துறை வட்டாரத்திற்கு தெரிந்த முகம்தான் அவன். எந்தெந்த பகுதியில் அவன் கைவரிசையைக் காட்டுவான் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

“சார்இ வெறும் கந்த துணிங்களும் காலி பானைங்களும் தாங்க சார் அந்த ஊடு முச்சூட கடந்தது. அந்த கெழுவி கிட்ட எப்பிடி சார் ஒரு லச்ச ரூபா இருக்கும். அது பேச்ச கேட்டுக்குணு என்ன போட்டு அடிக்கிறீங்க. வுடுங்க சார்”

“எனுக்கு புள்ளையா குட்டியா ஒண்ணுமே இல்ல சாமி. சம்பாறிக்கிற துட்டெல்லாம் கெணுறு கொளத்துலயா போட்டு வெய்க்க முடியும். அவன் சொல்ற பானைலதான் சாமி போட்டு வச்சிருந்தேன். வுடாதீங்க அவன. எம் பணம் வந்தாவணும்”

மூக்கைச் சிந்தி சுவற்றில் துடைத்துவிட்டு அந்த அதிகாரியின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீ வீட்டுக்கு கெளம்பி போமா! அவங்கிட்ட இருந்து பணத்த வாங்கிட்டு சொல்லியனுப்புறோம்”

“செரி சாமி. நீ சொன்னா செரிதான். நான் போறன். அவன உட்டுடாதீங்க. இனிமே திருடனும்ன்ற எண்ணமே அவுனுக்கு வரக்கூடாது”

“அத நாங்க பாத்துக்கறோம். நீ கெளம்பு”

சாயங்காலத்துக்குள் பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தன் கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள் அவள்.

விசாரணையில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார் அதிகாரி.

“டேய் பலே கில்லாடிடா நீ! ஒரு லட்சத்த நீயே அமிக்கிடலாம்னு பாக்குறியா. ஒழுங்கா எங்களுக்கு குடுக்க வேண்டியத குடுத்துடு. உன்ன உட்டுடுறோம்”

“சார்! உண்மையாவே அந்த வூட்ல ஒன்னுமில்ல சார். அந்தக் கெழுவி பொய் சொல்லுது”

“அந்தக் கெழவியப் பாத்தா பொய் சொல்ற மாதிரி தெரியல. உண்மைய ஒத்துக்கோ! சாயங்காலத்துக்குள்ள அம்பதாயிரத்த எங்களுக்கு குடுத்துடுஇ மீதிய நீ வெச்சிக்கோ”

“சார்! சத்தியமா இல்ல சார். என்ன நம்புங்க சார்”

அவனை விசாரிக்கும் விதத்தில் விசாரித்துக்கொண்டிருந்தது காவல்துறை.

சற்று நேரத்தில் அவன் நண்பன் மூலமாக ஐம்பதாயிரம் வந்து சேர்ந்தது.

அவற்றை எண்ணி பாக்கெட்டில் திணித்துக்கொண்ட அதிகாரி! அவனைத் தன் கடைக்கண் பார்வையால் வெளியேற்றினார்.

Print Friendly, PDF & Email

1 thought on “திருடன்

  1. சூப்பர் சார், நன்று திருடன் போலீஸ் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *