திருடன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 4,660 
 

அழைப்பின் பேரில் சேகர் காவல் நிலையம் சென்றபோது கபாலி சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் அருகில் கைகட்டி கூனி குறுகி நடுங்கியபடி நின்றான்.

”உட்காருங்க சார் !” சந்தானம் சேகருக்குத் தன் எதிர் இருக்கையைக் காட்டினார்

அமர்ந்தான்.

”ஆள் கெடைச்சதும் உங்களுக்குப் போன் பண்ணிட்டேன். இவன்தானே நேத்திக்கு உங்ககிட்டே இருந்து பணத்தைக் கொள்ளை அடிச்சிக்கிட்டுப் போனது?!”

”ஆமாம் சார்.”

”எப்படி நடந்தது?”

”பேங்கிலேர்ந்து ஒரு லட்சம் பணத்தை எடுத்துகைப்பையில வைச்சுக்கிட்டு வாசலுக்கு வந்தேன் சார். இவன் டக்குன்னு பையைப் பரிச்சுக்கிட்டு சிட்டாய்ப் பறந்துட்டான்.”

”ஆமானாடா ? ” சந்தானம் அருகில் நின்றவனை அதட்டி மிரட்டலாகப் பார்த்தார்.

”அ…ஆமாம் சார்.”

”இவ்வளவு சீக்கிரம் ஆளை எங்கே சார் படிச்சீங்க ? ” – சேகர்.

”இவனை மாதிரி ஆளுங்களுக்குப் பணம் கெடைச்சா உடனே ஸ்டார் ஓட்டல், நல்ல சாப்பாடு, பலான வீடு. கழுதைக் கெட்டா குட்டிச் சுவர். அந்த வகையில ஒரு முப்பதாயிரத்தைக் காலி பண்ணிட்டான். சார். இவனைக் கேசைப் போட்டு உள்ளாறத் தள்றேன். பணத்தை வாங்கிக்கோங்க”.

”மி…..மிச்சப்பணம் ?”

”கெடைக்க வாய்ப்பில்லே. அப்படியே கெடைச்சாலும் கோர்ட் கேசுன்னு கைக்குக் கிடைக்க நாளாகும். இப்போ கெடைக்கிறதை வாங்கிக்கிறது புத்திசாலித்தனம்.”

”சரி சார்.”

”சரி. இன்னத் தொகை இன்னாரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு வாங்கிப் போங்க.” வெள்ளைத்தாளை நீட்டினார்

சேகர் கடகடவென்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறினான்

அவன் தலை மறைந்த அடுத்த நிமிடம் சேகர் எழுதிக் கொடுத்த தாளைக் கிழித்து தன் காலடியில் உள்ள குப்பைக் சுடையில் போட்ட சந்தானம், ”கபாலி! இந்தா உனக்குப் பத்து எனக்கு இருவது. அடுத்த வருமானத்தைச் சீக்கிரம் கொடு.” என்று பணத்தை நீட்டினார்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *