தியாகம்?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 5,465 
 

“ஏன் அந்த தாத்தா வித்தியாசமா டிரெஸ் பண்ணியிருக்காரு?” டிவியில் ஏதோ செய்திகளுக்கு இடையில் காட்டப்பட்ட அந்த தேசத்தலைவரை பார்த்ததும் கேள்வி கேட்டான் நவீனன். பத்து வயது தான் ஆகிறது. பதினாறு வயதுக்கான அறிவு அவனுக்கு. கண்டது, கேட்டது எதையுமே கேள்விக்குள்ளாக்குவான்.

“அது ஒரு பெரிய கதை நவீனா!” மஜூம்தார் பதிலளித்தார். சமகால புரட்சி தமிழ் எழுத்துக்களை வாசித்தவர்கள் யாரும் மஜூம்தாரை புறக்கணிக்க முடியாது. மிகப்பிரபலமான மாற்று சிந்தனை எழுத்தாளர்.

“கதை கேட்பது எனக்கு பிடிக்கும் என்பது உனக்கு தெரியாதா? சொல்லு.. சொல்லு!” பேரன் கேட்கும் எல்லா கேள்விகளுக்குமே விடையளிப்பது மஜூம்தாருக்கு பிடித்தமான விஷயம். எழுதிக் கொண்டிருந்தவர் பேனாவை மூடிவிட்டு, கண்ணாடியை சரிசெய்து கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.

“நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு 25 ஆண்டுகள் முன்பாக நடந்த விஷயம் அது. நீ பார்த்த தேசத்தலைவர் அப்போதெல்லாம் முழுமையான உடையை தான் அணிந்து கொண்டிருந்தார். ஒருமுறை அவர் நம்முடைய மதுரைக்கு வந்திருந்தார். மதுரை தெரியுமில்லையா உனக்கு? ஒரு கோயிலுக்கு கூட கூட்டிச் சென்றிருக்கிறேனே?”

“தெரியும். மேலே சொல்லு!”

“மதுரையில் அப்போது நிறைய பேர் இப்போது நீ பார்த்தாயே அந்த தலைவரை போல தான் உடையணிந்திருந்தார்கள். அவர்களை பார்த்ததுமே அவருக்கு மனம் உடைந்துப் போனது. எனது நாட்டில் உடலை முழுமையாக மறைக்க உடை கூட இல்லாமல் மனிதர்கள் இருக்கிறார்களே? என்று நொந்துப் போனவர், நானும் இனி இவர்களை போல தான் உடையணியப் போகிறேன் என்று தனது வழக்கமான உடைகளை துறந்தார்”

“சாகும் வரை இப்படித்தான் உடையணிந்திருந்தாரா?”

“ஆம். அரசியல் பேச்சுவார்த்தை நிமித்தமாக அயல்நாடுகளுக்கு சென்றபோது கூட இதே உடையோடு தான் சென்றார். எப்பேர்ப்பட்ட தியாகம் பார்!”

“இதிலென்ன தியாகம் இருக்கிறது? அவரது உடையை அவர் துறந்து விட்டதால் நாட்டில் எல்லோருக்கும் முழுமையான உடை கிடைத்து விட்டதா என்ன? அவர் உடையை துறந்து எண்பத்தி ஐந்து ஆண்டுகள் கழித்தும் நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடவில்லையே? சென்ற வாரம் கூட ஒரு கட்டைவண்டி கிழவர் வெறும் கோவணத்துடன் வண்டி இழுத்துச் சென்றதை நீயும் தானே பார்த்தாய்?”

“மாற்றம் வந்துவிடவில்லை என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும் அவரது தியாகம் மெச்சக்கூடியது தானே? இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகனின் நிலையை தன் உடையில் கூட அவர் பிரதிநிதித்துவப் படுத்தினாரே?”

“ரெட்டைமலை சீனிவாசன் என்பவரை பற்றி உங்களுக்கு தெரியும் தானே? இதே தலைவர் சென்ற அயல்நாடுகளுக்கு அவர் கோட்டும், சூட்டும் அணிந்து சென்றாரே? அம்பேத்கர் என்றதுமே நீலக்கலர் கோட், சிகப்பு கலர் டை அணிந்த உருவம் தானே நமக்கு நினைவு வருகிறது? இவர்களெல்லாம் அவர்கள் சார்ந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்கிறீர்களா?”

“உன்னிடம் பேசி என்னால் கூட ஜெயிக்க முடியாது. அந்த தலைவர் இந்த உடையில் இருந்ததில் உனக்கு என்ன பிரச்சினை?”

“எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. நல்லவேளையாக நான் இப்போது இருக்கும் கோலத்தை கண்டு எந்தத் தலைவராவது உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது என்று விரும்புகிறேன்”

நவீனன் அப்போது ஜட்டி மட்டுமே அணிந்திருந்தான். ஒரு நாளைக்கு அறுபது முறை மின்சாரம் தடைபடும் நாட்டில் அவனுக்கு இந்த உடையோடு வீட்டில் இருப்பதுதான் வசதியாக இருக்கிறது.

– ஆகஸ்ட் 2009

Print Friendly, PDF & Email

1 thought on “தியாகம்?

  1. கதையின் முடிவில் புன்னகைக்க வைத்துவிட்டார் கதாசிரியர். ஆனாலும் உண்மையை நாசூக்காக உரசிச்சென்றிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சியே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *