தாயின் மணிக்கொடி

 

அதோ, எக்ஸ்பிரஸ்.

சென்னை – கொச்சி எக்ஸ்பிரஸ்,

எக்ஸ்பிரஸ் ஓட்டமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது!

அவன்….?

யாரோ ஒருவன்! என்னவோ ஒரு பேர்!

ஏதோ ஓர் ஊர்…..

ஊர் என்றவுடன் -

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்!’ என்று பாட்டு ஓட்டமாக ஓடிவரவேண்டாமோ?

அவன் …. கிடக்கிறான்!

எக்ஸ்பிரஸ் வேகம் அதிகமாகிறது. ஜாக்கிரதை!

நாட்டிலே இப்போதெல்லாம் ‘ரோஷ உணர்ச்சியைப் பற்றி ரொம்பவும் தூக்கலாகவே பேசப்பட்டு வருகிறது.

அதனால்தானோ என்னவோ, அந்தத் துரிதவண்டி கொச்சியைக் குறிவைத்துப் பூஞ்சிட்டாகப் பறக்கிறது; பறந்து கொண்டிருக்கிறது. ‘சற்றே விலகி இருக்கிறேன்!’ என்று சொல்லாமல் சொல்லி, தமிழ்மண் சற்றே ஒதுங்கியிருக்க வேண்டும்!

இங்கே, அவன் மனமும் ஓடத் தொடங்கிவிட்டது. அவனுக்கு இன்னமும் ஸ்தலம்’ கிட்டவில்லை. சென்னையில், சென்ட்ரல் ஸ்டேஷனில் தொடர்ந்த ஒற்றைக்கால் தவம் மேலும் தொடர்ந்தது; தொடர்கிறது. பாதங்கள் கெஞ்சின்; கொஞ்சின.

பாவம், உமையவள்!… முன் ஒரு காலத்திலே, ஒற்றைக் கால் தவம் செய்தாளாமே? அன்னையின் கால்கள் எப்படி எப்படியெல்லாம் வலித்திருக்கும்?

அவன் தவித்தான்; பாசத் தவிப்பாக இருக்கலாம்; பாசத்தின் தவிப்பாகவே இருக்க வேண்டும்! பட்டணத்தில் சாஸ்திரி நகரில் பெண்டு பிள்ளைகள் ! எல்லாம் நண்டும், சுண்டும் ! மஹேஸ்வரனே, நீயும் பிள்ளைக் குட்டிக்காரன்தான்; பாசம் படுகிற பாடு உனக்கும் தெரியத்தான் வேணும்! அதனாலேதான், உங்கிட்டே ஒரு சின்ன யாசகத்தை , ரொம்பச் சின்னதான ஒரு பிச்சையைக் கேட்கணும்னு இப்ப என் புத்திக்குத் தோணுது. என்னோட உசிரை இன்னும் ஒரு ஆறேழு வருஷத்துக்காச்சும் கட்டிக் காப்பாற்றி என் கையிலே ஒப்படைச்சிடுவியா, அப்பனே அம்மையப்பனே? உன் பெண்களுக்குக் கல்யாணம் காட்சி நடக்க வேணுமே! அவனுக்கு மட்டுமல்லாமல் அவனுடைய கண்களுக்கும் அழத் தெரிகிறது!… வெள்ளம்!…

காலம் ஓடுகிறது.

ரயிலும் ஓடுகிறது.

கொட்டாவி பீறிடுகிறது.

இப்போது நெஞ்சும் வலிக்கத் தொடங்கவே, ஆற்றாமை மேலிட்டது. பாதங்களை மாற்றிப் போட்டு நிற்கக்கூட முடியவில்லையே? ‘இந்நேரம் அரசாங்கத்துச் செலவிலே முதல் வகுப்பிலே ஜாம் ஜாம்னு பிரயாணம் செய்ய வேண்டியவன், இப்ப எப்படியெல்லாம் பிராண அவஸ்தைப்பட வேண்டியதாயிடுச்சு! கொச்சியிலிருந்து நேற்றைக்குத் தகவல் கிடைச்சிருக்குமே? அரசு முறையிலே மனிதர்கள் இயந்திரமாக அலுவல் பார்த்தாலும், வயது ஐம்பத்தெட்டு முடிந்துவிட்டால், உடனே பதவி ஓய்வு கொடுத்துவிடுவார்கள்! அவனுக்கு இப்போது சிரிப்புச் சிரிப்பாக வந்தது. ‘நாளை மறுநாள் எனக்கும் ஓய்வு கிடைச்சிடும். இந்த ஓய்வைக் கொண்டாட, என்னைக் கூப்பிட்டிருக்காங்க. நாளைக்கு நான் “நன்னி” பறையனும்!’ விதியோடு விளையாடுகிறவனுக்குச் சிரிப்போடு விளையாடத்தானா தெரியாது…?

கோடைக்கும் குளிர் அடிக்குமோ…?

தேய்பிறை நிலவு அதோ, நெடிதுயர்ந்த தென்னை மரங்களில் கண் சிமிட்டுகிறது.

கண்மூடி மௌனியாக மகிழ்ந்த அவனது ரசனை மனம் வாசனை மல்லியாய் மணக்கிறது.

என்னவோ சத்தம் கேட்டது.

ஒலவக்கோடு!

பின்சாமம் கொடிகட்டி உறங்கிய ‘சமயம்’ அது என்றாலும், ப்ரயாணம்’ விழித்திருக்க வேண்டாமா?

கிழவி ஒருத்தி இறங்கினாள்.

எங்கோ ஓர் இடம் காலி ஆகியிருக்கக்கூடும்.

‘ஞான் சோதிக்கட்டே?’

‘ஐய்யடா!’

இடப் பிரச்சினையில், பீடிகளின் முணுமுணுப்புகள் வந்த சுவடு தெரியாமலே தேய்ந்து விடுகின்றன.

காலியான இடம் அவனுக்காகவே காத்திருக்கவேண்டும்; முண்டியடித்துக் கொண்டு முன்னேறியவன், சரணம் சாமியே, ஐயப்பா! என்று சோர்ந்து உட்கார்ந்தான். நாவறண்டது; கோயம்புத்தூர் சந்திப்பில் காப்பி சாப்பிட்டதோடு சரி. காலாறத் தரையிலே கால் பாவி நின்று காப்பியைச் சுவைத்தும் ருசித்தும் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவன் உள்மனத்தில் ஆழமாகவே பதிந்து விட்டிருந்த சுதந்திர தினவிழாக் காட்சிகள் மறுபடி சட்டை உரித்துக் கொண்டு படம் எடுத்தன; படம் காட்டின. ஜங்ஷ்னில் கண்டெடுத்துப் பத்திரப்படுத்தின தாயின் மணிக்கொடி, மற்றும் காந்தி மகாத்மாவின் படங்கள் சட்டைப் பையில் இப்போதும் உறுத்தவே செய்கின்றன…! ஊம்!

சாயா வந்தது .

பைசா போனது.

ரயிலுக்குக்கூட பூங்குயிலாகக் கூவத் தெரிகிறது.

அவன் இப்போது நல்ல மூச்சு விட்டான். சென்னைக்கும் கொச்சிக்குமாக எத்தனை தரம்தான் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கொண்டிருப்பான் அவன்! விடிந்தால், எல்லாமே விடிந்துவிடும்! அசலான விதியைப் போலவே, அந்நியமான அவனுக்கும் சிரிக்கத் தெரியும். நேரங்கெட்ட அந்நேரத்தில் அவன் மறுபடி எழுத்துக்காரன் ஆனான். சிருஷ்டியின் கர்வம் அவன் நெஞ்சிலும் நினைவிலும் ஆலப்புழைப் பச்சை ரக ஏலக்காயின் மணத்தைக் கூட்டுகிறது! நினைவுகள் சிரிக்கவே, சுற்றிச் சூழ விழிகளைச் சுழலவிடுகிறான் அவன். இருந்திருந்தாற்போல், அவனிடம் ஒரு பதற்றம் மிஞ்சியது. அவன் அமர்ந்திருந்த பலகைக்கு அடியிலே கிடந்த அந்த முரட்டு மனிதனை அவன் மறந்துவிட மாட்டான்; மிதித்து விடவும் மாட்டான்!

ஆஹா!

யார், அந்தப் பூவை….?

ஓ…!

பூலோக ரம்பையாகத்தான் இருக்க வேண்டும். அவள் தான் உறங்குகிறாள்; ஆனால், அவள் அழகு உறங்கவில்லையே! நல்ல பருவம்; நல்ல வயது. சேர நல்நாட்டு இளம்பெண் அல்லவா? தமிழ்ப் பெண்மை குலுங்க, அடக்க ஒடுக்கமாகச் சாய்ந்து கிடந்தாள். அவளுடைய மார்போடு மார்பாக அணைந்து கிடந்த ஆண்குட்டி உறக்கக் கிறக்கத்தில் பாலமுதம் பருகிடத் துடிக்கிறது; தவிக்கிறது. பட்டு மேனியில் பட்டும் படாமலும் ஆடிவரும் தேனாகத் தவழ்ந்து கிடந்த ‘முண்டு’ ரொம்பவும் கெட்டிதான். மதி!….

அவனும் தவித்தான்; துடித்தான். ‘சேச்சி எழுந்திருக்க மாட்டாளா? குழந்தையின் அச்சன் எங்கே கிடக்கிறானோ? பாவம்! அதற்கு ஞானப்பால் வேண்டாமே, பரமாரி அம்மே!

‘குட்டி ‘ வீரிடுகிறது ……

அது, குழந்தை .

குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானாம்; ஒன்றேதானாம்….! ஒன்றே குலம்… ஒருவனே தேவன் ! நினைப்பதற்கென்று இப்படிச் சில விதிகள்…!

அவன் இப்பொழுது ‘பச்சைமண் ணின் செப்பு வாயைத் தேடினான். ஆனால், அவன் திருஷ்டியில் பட்டதோ, பட்ட மரம் தளிர்த்த மாதியான சௌந்தர்யமாய தரிசனம் ஒன்று. மெய்சிலிர்க்க, நினைவுகள் வீட்டுக்காரியிடம் தஞ்சமடைய, நல்லவேளையாக, அவன் மெய் உணர்ந்தான். க்ஷணப்பித்தமான குற்ற உணர்வுக்காகக் கழிவிரக்கம் கொண்டு, நேத்திரங்களை வேறுபுறம் திருப்பினான்.

அங்கே:

யாரோ ஒரு ‘சிர்ப்பக்காரன் இன்னமும் அந்தக் காட்சி யைக் கண்காட்சியாக்கி ரசிப்பதில் லயித்திருக்கிறானே? எதிர் ஆசனப்பலகையில், தலையும், காலுமாக நீட்டிக் கிடந்த அந்தப் பெண்ணின் அந்தத் தாயின் கால் மாட்டில் நின்றுகொண்டிருந்த அந்த இளவட்டம். பிரயாணச் சாதனங்கள் வைப்பதற்குப் பயன்பட்டுப் பயனளிக்க வேண்டிய பலகையின் விளிம்பிலே இரு கைகளையும் ஊன்றி அணை கொடுத்தவனாகக் காட்சியளித்தான். அவனுடைய முகத்தில் நிழலாடிய ‘மோக வெறி கூடுதல் அடைந்து கொண்டே இருந்தது.

சே….!

உடம்பில் உறைந்திருந்த தணிப்பு மாறி, ‘சூடு உறைக்கவே, கனைத்தான் அவன்.

மூச்…. அந்த வெறியனுக்குச் சொற்பமாவது பேடி உண்டாக வேண்டாமோ? … பேடி அவன் ஆத்திரப்பட்டான். சுத்தத் தள்ளிப்பொளி! -

அழகான தாயின் பூங்கரங்கள், அவளுடைய கச்சையின் பூவிலங்காக அமைந்த அடி முடிச்சை அத்தனை தூக்கக் கலக்கத்திலும் ஞாபகமாக இறுக்கிக்கொள்வதில் முனைந்தன; கண்கள் இன்னமும் விழித்துக்கொள்ளவில்லை. பிள்ளையைப் படுக்கை ஒண்டலில் மாற்றிக்கிடத்திவிட்டு, அவளும் இப்போது மாறிக் கிடக்க எத்தனம் செய்தாள். முண்டு சீர் அடைந்து, சீர் பெற்றது. கஞ்ச மலர்ப்பாதங்கள் சேலைக்கரையில் ஒளிந்து கொண்டன.

ஓ…!

எவ்வளவு நாணயமான அழகோடு அவள் தரிசனம் தருகிறாள்… அந்த அழகை நிதர்சனமான அழகென்றும் சொல்லவேண்டும்! அவன் எண்ணமிட்டான். குழற்கற்றையில் மூன்றாம் பிறையாகப் பூத்து மணம் பரப்பிய மல்லிகைப் பூச்சரம் எத்துணை கம்பீரமான தருமத்தோடும், சத்தியத்தோடும் அவளுடைய மாண்புமிக்க அழகைப் பிரகடனப் படுத்திக் கொண்டிருக்கிறது! தாலிப்பொட்டின் புனித நிறச் சரடு பின் கழுத்தின் பூஞ்சை மயிர்த்தொகுதியில் வனவாசம் செய்திருக்கலாம்.

அவன் அந்தக் காமவெறியனை மறுபடி நோக்கினாள்.

ஆனால், அந்தக் காமுகனோ, இன்னமும் கூட அந்தப் பேரழகுச் சிங்காரியையே ரசித்துக்கொண்டிருந்தான்….!

கைந்நொடிப் பொழுது கழிந்தது. என்ன அநியாயம்….!

அந்தக் காவாலிப்பயல் அவள் காலடியில் குந்தி, சில வினாடிகளுக்கெல்லாம் அவளுக்குப் பக்கத்தில் சாய்ந்துவிட்டான்!

அவனது ஆத்திரம் வளர்ந்தது… ‘யார் இந்தப் பொறுக்கி…? இவன் அந்தப் பெண்ணோட “பர்த்தாவு” அல்லவே ! அவள் இவனுக்குப் “பாரியாள்” ஆகுவும் இருக்க முடியாது. இவன் யாராம்? அப்படியானால், அவளோட புருஷன் எங்கே ? தவிப்பும் ஏக்கமும் வளரத் தொடங்கின. ஒரு வேளை, என் காலடியில் ஸ்மரணை தப்பிக்கிடந்த முரடன் தான் அந்தக் கேரளப் பைங்கிளிக்கு வாய்த்த காதல் கணவனாக இருப்பானோ? அவனுடைய கைகள் துருதுருக்கின்றன! அந்தத் தறுதலைப் பயலை ஹிப்பி முடியைப் பிடித்து அலக்காகத் தூக்கி வெளியே வீசியெறிந்தால் என்ன…?

பதினாலாம் ராவுத்தது மானத்தே!

இந்நேரத்தில் ஏது பாட்டு? யாரோ, எங்கோ பாடுகிறார்கள்.

கேரளத்தின் கள்ளங்கவடு இல்லாத, குழந்தைத் தனமான இயற்கையின் லாவண்யத்திலும் சிருங்காரத்திலும் ஓர் அரைக்கணம் அவன் சொக்கி மெய்ம்மறந்திருக்கத்தான் வேண்டும்!

இருந்திருந்தாற்போல , என்னவோ அரவம், அரவம் மாதிரி சீறியது.

சபாஷ்!

அந்தப் பெண்தாய் தாய்ப் பெண் இனம் விளங்காத அந்தப் புதிய ஸ்பரிசத்தின் தொட்டுணர்வை இனம் புரிந்து அறிந்து விழிப்புப் பெற்ற தவிப்பில், துடிப்பில், கோபத்தில் தட்டித் தடுமாறியவளாக வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, அந்த மனிதமிருகத்தின் மிருக மனிதனின் ஹிப்பி முடியை எட்டிப் பிடித்து நெட்டித் தள்ளிவிட்டாள் … ஒளங்கள் படத்திலே ஒரு கட்டத்திலே பூர்ணிமா கொடுங்களூர்ப் பகவதியாகச் சினந்து கொதித்தெழவில்லையா? அப்படித் தோன்றினாள் அவள் ‘சேட்டா! என்று கூவி, அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிவந்தாள், கீழே காலடியில் கும்பகரணனாக உறங்கிக்கிடந்த முரடனை எழுப்பினாள். அவனை ஒட்டி உரசியபடி அவனிடம் என்னவோ பறைந்தாள். அவன்தான் அவளுடைய சேட்டன்.’ சேட்டன் என்றால் இங்கே கணவன்தான்; அண்ணன் இல்லை!

லட்சணமான அழகிக்கு அவலட்சணமாக வாய்ந்த முரட்டுக் கணவன். கண்கள் இரண்டும் ரத்தமாகச் சிவக்க எதிர்ப்பக்கம் பாய்ந்தான். ஆடு திருடிய கள்ளனாக விழித்துக்கொண்டே, அங்கிருந்து தப்பிப் பிழைக்க முனைந்த அந்த அநாகரிகப் போக்கரியை அவனது கழுத்தில் கையைக் கொடுத்து இழுத்து நிறுத்தினான்.

“ராஸ்கல் வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே, பாரதத்தின் பாரம்பரியப் பண்பாட்டின் நன்றியை மறந்த அந்தப் பாவியை அடித்து நொறுக்கக் கைகளை ஓங்கினான்!

“நாயர்….”

அவன் தடுத்தான் மனிதத் தன்மையில் சிலிர்த்த மனிதாபிமானத்தோடு முரடனைத் தடுத்தான் அவன். ” சேட்டன் என்னைச் சமிச்சு மாப்புத் தரணும்!” என்று எச்சரித்தவனாக, அழகியின் முரட்டுக் கணவனிடமிருந்து அந்த அசிங்கமான மனித மிருகத்தை விடுவித்துத் தன் பக்கமாக இழுத்து, அந்த மிருக மனிதனின் நாகரீகமான, நயமான, சிவப்பான கன்னங்கள் இரண்டிலும் மாறி மாறி மாற்றி மாற்றி அறை கொடுத்தான் அவன் ! பட்டணமாக இருந்திருந்தால், இப்படிப்பட்ட அநியாயத்திற்குத் தண்டனை கொடுப்பதில் அவனுடைய பெண்டு பிள்ளைகளும் தோள் கொடுத்திருப்பார்கள்…!

மறுகணம்……

அடிப்பட்ட ஈனப்புலி, இப்போது அவன் மீது பாய்ந்தது!

அவன் சிரிக்கிறான்! அவனைத் தற்காத்துக்கொள்ள அவனுக்குத் தெரியும்!

அதர்மம்’ மண்ணைக் கவ்விற்றி!

‘மாத்ருபூமி’ படபடத்தது; நாட்டின் அமைதியுையம் ஒற்றுமையையும் பராமரிக்க வேண்டுமென்று பிரதமர் இமாசலப் பிரதேசத்தில் பொதுமக்களை கேட்டுக் கொண்டிருந்தார்!

மலையாளப் பொற்பாவை, இப்போது விதியாகவும், வினையாகவும் சிரிக்கிறாள்!

‘ஞங்ஞள் மலையாளியாண; ஞங்களிண்டே ஸ்வந்தக் காரியங்கள்லே எடை படண்ட்ட ஆவச்யம் உண்டாக்க நிங்ஙள் ஆராண…?’ அந்தப் பேடி, பேடி கொண்டு, குனிந்த தலையை நிமிர்த்தாமல், அவனிடம் சோத்தியம்’ கேட்கிறான்!

அவனைக் கேள்வி கேட்க இவன் யார்? அவனைப்பற்றி இவனுக்கு என்ன தெரியும்? என்ன புரியும்? அவனுக்கு ரத்தம் கொதிக்கிறது; தமிழனாகத் தலை நிமிர்ந்து நின்றான். நீங்கள் ஆராண? விடை சொல்ல வேண்டாமோ….!

‘ஞான் ஒரு இந்தியனாண’ அவன் உணர்ச்சிகளின் பிழம்பாகி விம்முகிறான்!

அந்த ரௌடி எங்கே…..?

கேரளத்தின் அன்பு பைங்கிளி கண்ணீர்த் தரிசனம் தருகிறாள்! அதோ … அதோ ……!

எக்ஸ்பிரஸ் ஓடிக்கொண்டிருக்கிறது!

அவனுடைய சட்டைப்பையில் ஊசலாடிய அந்தப் படத்திற்கு அப்போது மூச்சுத் திணறியிருக்க வேண்டும்…!

அது…அது… ‘தாயின் மணிக்கொடி!’…

- பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம் 

தொடர்புடைய சிறுகதைகள்
நடுச்சாமம். இரவு ஊர்ந்து கொண்டிருந்தது. ஒளி உமிழ்ந்து பரப்பி நின்ற மேஜை விளக்கின் பாதத்தில் விரிந்து கிடந்த வைத்திய சஞ்சிகை ஒன்றில் கருத்தை மையமிட்டுப் படித்துக்கொண்டிருந்தார் டாக்டர் சேகரன். "டாக்டர் ஐயா." "...." "டாக்டர் எசமான்" ஒன்றியிருந்த உள்ளத்தைத் திருப்பிவிட்டுக் குரல் குறுக்கிட்ட திசைக்குத் திருஷ்டியைத் திருப்பினார். வாசல் கதவு ...
மேலும் கதையை படிக்க...
அறந்தாங்கி ஸ்டேஷனில் ரயில் நின்றது தான் தாமதம்; ரயிலினின்றும் ஜனங்கள் கும்பல் கும்பலாக இறங்க ஆரம்பித்தனர்; அவர்களில் குமாரசாமியும் ஒருவன். தலையில் சுமந்திருந்த பெரிய மூட்டையுடன் ரயில் நிலையத்தை விட்டு ஊருக்குள் நடந்தான். வெய்யிலின் வெக்கை சற்று தணித்திருந்தது; அந்தி மயங்கும் ...
மேலும் கதையை படிக்க...
1 ஹாலிவுட் நட்சத்திரம் ஜிப்பி தமிழ்நாட்டின் தலை நகரான சென்னைக்கு வருகை தந்திருந்ததல்லவா? அதைப் பற்றி அன்றைய தினசரியில் செய்தி வெளியாகியிருந்தது. அந்த மனிதக் குரங்கை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் பூபாலன். அவனுக்கு வாயெல்லாம் பல்லாகிவிட்டது. சிரிப்பு அடங்கியது. ...
மேலும் கதையை படிக்க...
ஸ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு நவராத்திரி வந்து விட்டதென்றால், கூத்தும் கொண்டாட்டமுமே! நவராத்திரியின் போது, அந்த ஒன்பது நாட்களிலும் நாளைக்கோர் அலங்காரமும், வேளைக்கோர் ஆராதனையுமாக ஏற்பான் அவன் அவன் கால் மாறிக் குனித்தவன் அல்லவா? ஆண்டவனின் மகிழ்ச்சி வெள்ளம் அந்தக் கோயில் ...
மேலும் கதையை படிக்க...
அந்திக் கன்னி மஞ்சள் பூசிப் பொட்டிட்டுப் புன்னகை செய்து கொண்டிருக்கின்றாள் !. விடிந்தால், மகாத்மா காந்தி பிறந்த நாள்! 'காந்தி மகாத்மா செத்து விட்டாரென்று எந்த பயல் சொன்னவன்? சேரிச் சாம்பான் தனக்குத் தானாகவும், தன்னின் தானாகவும் சிரித்துக்கொண்டார். சிரிப்பின் அலைகளிலே, மாறிய காலத்தின் - ...
மேலும் கதையை படிக்க...
"காளி ஆத்தா பேரிலே ஆணையிட்டுச் சொல்லுறேன். அக்கரைச் சீமையிலேருந்து திரும்பியாந்ததும் உன்னைக் கட்டாயம் கண்ணாலம் கட்டிக்கிறேன், பவளக்கொடி?" தூணுடன் தூணாகப் பிணைந்து நின்ற பவளக்கொடியின் விம்மித் தணிந்த நெஞ்சில், அவ்வார்த்தைகள் எதிரொலித்தன. கடல் கடந்து செல்லும் மாலுமிக்குக் கலங்கரை விளக்கு உறுதுணையாக அமைவதுபோல், ...
மேலும் கதையை படிக்க...
மூன்று முடிச்சுக்கள் விழுந்தன. வத்சலைக்கு ஏற்பட்ட மகிழ்வு இவ்வளவு அவ்வளவு அல்ல. எல்லாமே கனாப்போலவே தெரிந்தது. மங்கல நாண் அவளது விழி விரிப்பில் இழைந்தது. தனக்குத் தாலிபாக்கியம் அருளிய அலகிலா விளையாட்டுடையவனை நன்றி நெஞ்சுடன் தொழுதாள். மேனி புல்லரித்தது. நாதசுர முழக்கம் ...
மேலும் கதையை படிக்க...
பச்சை மண்' சிரிக்கக் கண்டால், உள்ளம் கொள்ளை போய்விடுமல்லவா? அப்படித்தான் சுருளாண்டியும் மனம் பறிபோய் நின்றான். ஆனால், அவனை அவ்வாறு ஆக்கியது குழவியா? அல்ல! சம்பான் தளை' எழுபத்தெட்டுக் குழி நிலத்தில் நடப்பட்டிருந்த நாற்றுக்கள் பசுமை ஏந்திச் சிரிப் பினைச் சிந்திக்கொண்டிருந்தன். ...
மேலும் கதையை படிக்க...
ஊர் வெற்றிலை பாக்கு வைத்தாகி விட்டது. விடிந்தால் கல்யாணம். ரங்கூன் தேவர் என்று அழைக்கப்பட்ட சின்னத்தம்பித் தேவரின் ஒரே மகனான சிரஞ்சீவி முத்தையனுக்கும், சிங்கப்பூர்த் தேவரென்று கூப்பிடப்பட்ட பெரியண்ணத் தேவருடைய ஒரே மகளான சௌபாக்கியவதி பளவக்கொடிக்கும் திருமணம். இந்த சுபச் செய்தியைக் கேள்விபட்டதும், பணங்குளம் மட்டுந்தானா ...
மேலும் கதையை படிக்க...
1 தமதுரத் தமிழ் வாழ்த்துகின்ற பொங்குவிரி காவிரியின் வாழ்த்தைப் பெற்றது அல்லவா சோழவள நாடு! புலிக்கொடி வாகை சூடிக் கொடிகட்டி பறந்த சோழமண்டலத் திற்கு, அன்றைக்கு வழித்தடம் அமைத்துக் கொடுத்த முதல் மரியாதைக்குரியது சிருங்காரபுரி நாடு... அந்நாட்டின் பூலோக சொர்க்கமாகத் திகழ்ந்த அரண் ...
மேலும் கதையை படிக்க...
வாழப் பிறந்தவள்
உலகம் பொல்லாதது
அந்த நாய்க்குட்டி எங்கே?
பிட்டுக்கு மண்
மறுபடியும் மகாத்மா!
கடல் முத்தே
செந்தட்டீ மம்மே பாரே!
வட்டிற்சோறு
பவளக் கொடி
இளவரசி வாழ்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)