தலைவர் என்ற தோரணை

 

நமது காலனி குடியிருப்போர் சங்க கமிட்டி தலைவர் இப்பொழுது பேசுவார் என்று சொன்னவுடன் அந்த கூட்டத்தில் நான்கைந்து கைதட்டல்களே ஆதரவாய் எழுந்தன.இது எனது மனதுக்கு கோபத்தை வரவழைத்தது. நிறைய பேருக்கு நான் தலைவராய் இருப்பது பிடிக்கவில்லை, என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு முன்னால் வந்து பேச ஆரம்பித்தேன்.

“ஒரு நிமிடம்” என்று காலனி கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்தார்

நான் பேசி முடித்து விடுகிறேன், அதற்கப்புறம் உங்களது நிறை குறைகளை சொல்லுங்கள் என்று சொல்லவும், அதெல்லாம் முடியாது,இப்படியே ஒவ்வொரு முறையும் சொல்லி ஐந்து
வருடங்களை ஓட்டிவிட்டீர்கள். ஆனால் நமது காலனியில் இது வரைக்கும் எந்த வசதிகளும் வந்த பாடில்லை, அவர் பேசிக்கொண்டே போனார்.

எனக்குள் எழுந்த கோபத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு இதுவரை நான் எதுவும் செய்யாதத்து போல் பேசாதீர்கள், தண்ணீர் கஷ்டத்திற்கு கார்ப்பரேசனுடன் போராடி மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொண்டு வரவில்லையா? தெரு விளக்குகள் அனைத்தையும் சரி செய்து எரிய விடவில்லையா? நம்ம கவுன்சிலரை கூட்டிட்டு வந்து மூணு முறை மீட்டிங் போட்டு குறை எல்லாம் சொல்லவில்லையா?

எதிரில் இருந்தவர் நான் சொல்ல, சொல்ல அதெல்லாம் சரிங்க, இந்த விளையாட்டு கிரவுண்ட இந்த ஐஞ்சு வருசமா கார்ப்பரேசங்கிட்ட சொல்லி செய்யறேன்னு சொல்லிகிட்டிருக்கீங்க, வீட்டுக்கு ஐநூறு மாசமானா வாங்கறீங்க, ஆனா கணக்கு இதுவரைக்கும் சொல்ல மாட்டேங்ககறீங்க, முதல்ல கணக்க காண்பீங்க, அப்புறமா நீங்க பேசுங்க.

அந்த கூட்டத்தில் எனக்கு ஆதரவாக குரல் வராதா என பார்த்தேன்.ஒரிரண்டு குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்தாலும், பெரும்பான்மை அவர்கள் பக்கம் என்று
தெரிந்தவுடன் அந்த குரல்களும் மெல்ல அமுக்கமாகிவிட்டன.

சரி என்ன கேட்க விரும்புகிறீர்களோ? கேளுங்கள்,என்று மெல்ல பின் வாங்கி ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன்.

நானும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நான் சொன்னால் ஏனென்று கேட்காமல் சரி சரி என்று தலையாட்டிக்கொண்டிருந்த இந்த காலனி வாசிகள் இப்பொழுது என்னையே எதிர்த்து கணக்கு கேட்குமளவுக்கு வைத்து விட்டான் இந்த ஆள்.

இந்த ஆள் காலனிக்கு குடி வந்து நான்கைந்து வருடங்கள் தான் ஆகிறது. வந்தது முதல் என்னை தலைவராக ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவது, மாசமானா வாங்கற ஐநூறு ரூபாய்க்கு என்ன கணக்கு?என்று கேட்பது, நான் போட்ட ஒரு சில சட்டங்களை வேண்டு மென்றே மீறி நடப்பது போன்றவைகளை நான் அறிந்து கொண்டுதான் இருந்தேன். மாசமானால் டாணென்று ஐநூறு ரூபாய் நிர்மாண செலவுகளுக்கு இங்கு குடியிருக்கும் நூற்று ஐம்பது குடுமபங்களும் கொடுத்து விடும்.

இந்த ஆள் வீடு வாங்கி இங்கு குடி வந்த பின் மாசமானால் பணம் தர மறுப்பது, ஒழுங்காக கொடுத்துக்கொண்டிருக்கும் பலரையும் கொடுக்க விடாமல் பேசி மனதை மாற்றுவது, இதெல்லாம் என் காதுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது.இருந்தாலும் அமைதியாக போவோம் என்று மனதை இறுக்கிக்கொண்டு தான் இருக்கிறேன். இன்று இந்த கூட்டத்தில் பழி வாங்கி விட்டான். நான் பேசாமலேயே கூட்டத்தை முடிக்க வைத்து விட்டான். இனிமேல் தலைவர் பதவியில் இருப்பதில் என்ன மதிப்பு இருக்கிறது. அடுத்த கூட்டத்துக்கு முன் ராஜினாமா செய்து விடவேண்டும்.பெருமூச்சுடன் கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டேன்.

உங்களுக்கு எதுக்கு இந்த தலைவர் வேலை,தொண்டன் வேலை, பேசாம வீட்டுல இருந்தமா, வேலைக்கு போனாமா, சம்பளம் வாங்கினோமா, அப்படீன்னு இருக்காம,இப்ப
பாருங்க யார் யார்கிட்டயெல்லாம் வாய் கொடுத்து தலை குனிஞ்சு நிக்கறீங்க. மனைவியின் வார்த்தை என் நொந்த மனதை மேலும் ரணப்படுத்தியது.பசங்க இரண்டு பேரும் காலேஜுக்கு போறாங்க, அவங்களை கவனிங்க, அப்புறம் ஊரை கவனிக்கலாம், என்று அறிவுரை வேறு சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

பத்திருபது நாட்கள் ஓடி விட்டன. “ஒரு நாள்” அப்பொழுதுதான் அலுவலகம் கிளம்பலாம் என்றிருந்தவனுக்கு போன் அழைக்க, எடுத்தவன் செய்தி கேட்டவுடன் வெலவெலத்து போய் விட்டேன். இரண்டாமவன் காலேஜூக்கு வண்டியில் போகும்போது ஏதோ வண்டியில் மோதி தலையில் அடிபட்டு ஆஸ்பிடலில் சேர்த்திருப்பதாகவும், உடனே வரும்படியும் சொன்னார்கள். பதட்டத்துடன் மனைவியிடம் சொல்லக்கூட பேச்சு வரவில்லை.அவளும் என்னுடைய நிலையை பார்த்து ஏதோ நடந்திருக்கிறது என்று முடிவு செய்து கொண்டவள் என்னங்க என்னங்க, என்று என்னை பிடித்து உலுக்கினாள்.

அதற்குள் அன்று கூட்டத்தில் என்னை எதிர்த்து கேள்வி கேட்ட ஆளும், அவன் மனைவி,மற்றும் ஓரிரண்டு காலனி ஆட்கள், மற்றும் அவர்கள் வீட்டு பெண்கள் அனைவரும்
வீட்டுக்குள் வந்து என்னையும் மனைவியையும் அணைத்துக்கொண்டு “ஒன்றும் பயப்படாதீர்கள்” தைரியமாய் இருங்கள் என்று ஆசுவாசப்படுத்தி நம்ம ஆளுங்க ஆஸ்பிடல் போயிட்டாங்க, பயமில்லையின்னு சொல்லிட்டாங்க, வாங்க வண்டி வெளிய நிக்குது, என்று எங்களை வெளியே அழைத்து வந்தார்கள், அதற்குள் என் மனைவிக்கு என்ன நடந்தது என்று புரிய மயங்கி விழப்போனாள், அதற்குள் நான்கைந்து பெண்கள் தாங்கிக்கொண்டு காரில் ஏற்றினர்.

மருத்துவமனையில் உடனே சேர்த்ததால் உயிருக்கு ஆபத்தில்லாமல், கொஞ்சம் பலமான காயங்களோடு பிழைத்துக்கொண்டான். ஒரு மாதத்தில் சரியாகி விடும் என்று டாக்டர் சொல்ல அவருக்கு நன்றி சொன்னேன். அவர் எனக்கு நன்றி சொல்லாதீங்க, அந்த சமயத்துல உங்க பையனை கொண்டு வந்து சேர்த்துட்டு,உங்க பையனுக்கு தேவையான் ரத்தமும் கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டு, அதுக்கப்புறம்தான் உங்களை கூப்பிடவே உங்க வீட்டுக்கு வந்தாங்க. அவங்களுக்கு முதல்ல நன்றி சொல்லுங்க என்று நான் விரோதியாய் நினைத்து கொண்டிருக்கும் அவரையும் அவருடன் காலனிவாசிகள் சிலரையும் காட்டினார்.

காலனி நன்மைக்காகஎன்னிடம் போராடியவரை இதுவரை விரோதியாய் பார்த்த நான் இப்பொழுது தெளிவான மனதுடன் அருகில் சென்று கையை பிடித்து நன்றி சொல்லி
மற்றவர்களுக்கும் நன்றி சொன்னேன்.சார் நாம எல்லாம் ஒரே இடத்தில குடியிருக்கோம், நமக்குள்ள காலனி விசயமா ஆயிரம் சண்டைகள் வரலாம்,ஆனா பிரச்சினையின்னா
வந்தா ஒருத்தொருக்கு ஒருத்தர் உதவறதுதான், இதுக்கு போய் நனறி சொல்லி எங்களை பிரிச்சிடாதீங்க, சொல்லிக்கொண்டே அவரும், அவருடன் இருந்தவர்களும் மருத்துவமனையை விட்டு மெல்ல வெளியேறினர்.

அன்றுதான் காலனி தலைவர் என்ற தோரணையை விட்டு காலனிவாசியாய் நின்று கொண்டிருந்தேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த ஊருக்கே அடையாளத்தை கொடுத்துக்கொண்டிருந்தது அந்த குளம். சுற்றிலும் தோட்டங்களாகவும், குடிசைகளாகவும், ஒரு சில காரை வீடுகளாகவும் அமைந்திருந்த ஊருக்கு இந்த குளம் எல்லாவற்றிற்கும் தேவையாய் இருந்தது.ஊரே உபயோகப்படுத்தினாலும் நொய்யலின் புண்ணியத்தினால் கிளை வாய்க்கால் போல தண்ணீர் இந்த குளத்துக்குள் வந்து ...
மேலும் கதையை படிக்க...
அப்பா இந்த படத்தை பாரேன்? அகிலா கொஞ்சம் பேசாம போறியா, எனக்கு இங்க தலைக்கு மேல வேலையிருக்கு. மகள் முகம் சுருங்கி போப்பா நீ எப்பவுமே இப்படித்தான் ! சொல்லிக்கொண்டே நின்று கொண்டிருந்தாள் ஏங்க கொஞ்சம் அந்த குழந்தைகிட்ட பேசுனாத்தான் என்ன? பாருங்க ...
மேலும் கதையை படிக்க...
வெளி உலகில் தன்னை அதிகம் வெளிச்சத்துக்கு கொண்டு வராமலும்,தன்னை நம்பாமலும் பிரிந்து சென்று விட்ட தன் மகனை நினைத்து பெரிதும் கலங்கிக்கொண்டிருந்த தனவந்தரான சூரிய நாராயணன் தற்போது வந்த தொலை பேசி அழைப்பால் இறுதலை கொள்ளி எறும்பாய் தவித்துக்கொண்டிருக்கிறார். சூரிய நாராயணன் அந்த ...
மேலும் கதையை படிக்க...
அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி அதை ஒரு குறையாக சொன்னாள் " கரண்ட் பில் கட்டறதுக்கு உங்கப்பாவை அனுப்பலாமுன்னா காலையில வெளிய போன மனுசன் இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
கண் முன்னால் தன் தகப்பனை கற்பனையில் கொண்டு வந்து கண்டபடி பேச ஆரம்பித்தான் தனபால், இன்னதுதான் என்றில்லை, வாயில் வர்க்கூடாத வார்த்தை எல்லாம் பேசினான். கூட இருந்த மகேஸ்வரி “யோவ் போதும்யா” பாவம்யா அவங்க என்னா பண்ணுவாங்க, நீ நாதாறியா போனதுக்கு ...
மேலும் கதையை படிக்க...
குளம் குட்டையானது
நன்றாய் இருக்கும்போது உறவுகள் தெரிவதில்லை
நேர் காணல்
அப்பாவை காணவில்லை
உடன் பிறந்தவளானவள்

தலைவர் என்ற தோரணை மீது ஒரு கருத்து

  1. Nirmala Raghavan says:

    நல்ல கதை. மனிதத்தன்மை வெளிப்படுவதற்கு ஏதாவது ஆபத்து வரவேண்டியிருக்கிறது என்று உணர்த்துகிறது. பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)