தலைமன்னர் ரெயில்

 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜீவகளை ததும்பி இயங்கிக் கொண்டிருந்த ஸ்டேசனில் மனிதக் கூட்டம் குறைந்திருந்தது. அப்போது நேரம் இரவு ஒன்பது மணி. சிலந்தி வலைப் பின்னலாய் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லும் தபால் வண்டிகளும் புறப்பட்டு விட்டன. மாலை நாலு மணி தொடக்கம் இரவு எட்டரை மணிக்கு மட்டக்களப்பு தபால் வண்டி புறப்படும் வரை கலகலப்பாக, சுறு சுறுப்பாக, களை பூண்டிருந்த ஸ்டேசன் சிறிது ஓய்ந்திருந்தது. இறுதியாக ஒன்பதரை மணிக்குத்தான் தலைமன்னார் தபால் வண்டி புறப்படும்.

சில நாட்களில் அந்த வண்டியில் கூட்டமதிகமா யிருக்கும்; சில நாட்களில் வெறும் வண்டியாக கடகட வென்று அது ஓடும். தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்குக் கப்பல் புறப்படும் நாட்களில் வண்டியில் கூட்டம் அதிகரிக்கும். அதுவும் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தால் வடபகுதிப் புகையிரதச் சேவைக்கு அடுத்ததாக இலாபம் தரும் பகுதியாக அதுதான் இருக்கிறதென்று கேள்வி.

அன்றொரு நாள்…

தெற்கே பாணந்துறைக்கு ஒன்பது மணிக்குப் புறப்படும் புகையிரதத்தை ஒரு சில நிமிடங்களில் தவற விட்டதால், அடுத்த ரெயில் வரும்வரை ஸ்டேசனில் காத்திருக்க வேண்டியிருந்தது. சும்மா இருக்க முடியாத மனித சுபாவத்தினால் ஸ்டேசன் காட்சிகளை வேடிக்கை பார்க்கலானேன்.

முதலாவது மேடையில் கூட்டம் நிறைந்திருந்தது. மெல்ல அவ்விடத்தை அணுகி விசாரித்தேன். தலை மன்னார் தபால் வண்டிக்காக காத்திருக்கிறார்களாம். அடுத்த நாள் இந்தியாவுக்கு கப்பல் புறப்படுகிறதாம்.

ஒன்பதேகால் மணிக்கு நீண்ட, மனித வாழ்க்கைப் பயணத்தைப் போல மிக நீண்ட அந்தப் புகையிரதம், ஸ்டேசனில் நுழைந்து புகையைக் கக்கிக் கொண்டு நின்றது. ஏதோ நினைத்துப் பெருமூச்சு விடுமாற்போல் அது ஓய்ந்து நின்றது. திடீரென்று பரபரப்பு, சலசலப்பு, சுறுசுறுப்பு, மனிதர்கள் – எதற்கோ அவசரம் கொண்ட மனிதர்கள் இடித்து நெரிந்து குமைந்து ரெயிலில் ஏறினார்கள். அப்படி அவர்கள் ஏறிய பின்பும் மேடையில் கூட்டம் நிறைந்து தானிருந்தது. பயணம் செய்பவர்களிலும் பார்க்க பிராயாணிகளை வழியனுப்ப வந்திருந்தோர் தொகை ஏராளம் போலும். மனிதனின் இறுதிப் பயணமும் அப்படித்தானே என்று நான் நினைத்தேன்.

பரபரப்பு அடங்கி குசுகுசுப்பு மேலோங்கி நின்றது. புகையிரதப் பெட்டியொன்றின் அருகே போய் நின்று பயணம் செய்ய வந்தவன் மாதிரி அல்லது வழியனுப்ப வந்தவன் மாதிரிப் பாவனை செய்து, அந்தப் பெட்டியில் இருந்த சனங்களை மேலோட்டமாக நோட்டம் விடலானேன். குடும்பஸ்தர்களும், குடும்பப் பெண்களும், குழந்தைகளும் குமரிகளும், காளைகளும் இருந்தவர்களிருக்க, நிற்பவர்கள் நெருக்கியடித்து நிற்க…

அந்தக் கிழவியில் என் கண்கள் படிந்தன. எழுபதையோ எண்பதையோ அவள் தாண்டிவிட்டிருந்தாள், வாழ்க்கையின் அனுபவச் சுருக்கங்கள் அவள் முகத்தில் பிரதிபலிக்க ஏதோ நோயினால் அவஸ்தைப் படுபவள் போல அவளிருந்தாள். காதில் பெரிய துளை களின் கீழ்த் தொங்கிய கடுக்கண்கள் அசைந்தாட ஏதோ தன் பாட்டிலேயே அணுங்கினாள். பூமிக்குப் பாரமாய் நெடுநாள் இருக்கமுடியாத, பூமியோடு இரண்டறக் கலக்க வேண்டிய அவளும் இந்தியாவுக்குப் போகிறாள், அல்லது போக்கடிக்கப்படுகின்றாள். மனிதாபிமானம் மிகுந்த மனித உரிமைகளை மதிக்கும் இன்றைய உலகில் மண்ணோடு மண்ணாகப் போகும் அவள் தான் பிறந்த இந்திய மண்ணில் சங்கமமாகப் போகின்றாள். தான் வளர்ந்த தான் வாழ்ந்த மண்ணில் தன்னால் வளர்க்கப்பட்ட தேயிலைச் செடிகளுக்கு அவள் மண் உரமாகக் கூடாதாம், இந்த உலகம் மனிதாபிமானமுள்ள உலகமாம்.

எனக்கு சிரிப்பு வந்தது. வேதனை கலந்த சிரிப்பு.

என் மனம் அவளைச் சுற்றி வட்டமிட்டது. அவள் இங்கு எப்படி வாழ்ந்திருப்பாளென நான் கற்பனை செய்து பார்த்தேன். பனியிலும், குளிரிலும் வெய்யிலிலும், மழையிலும் புயலிலும் மாளாத உழைப்பு, இரவினில் அவள் கணவனுடன் ‘மங்கியதோர் நிலவினிலே’…அனுபவங்கள்; தந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவிய நாட்டின் நினைவுகள் பிள்ளை குட்டிகள், பேரன் பேத்திகள், இன்ப துன்பங்கள்.

நான் பெருமூச்சு விட்டேன்.

அருகினில் மெல்லிய இனிய பெண் குரல் கேட்டது. திரும்பினேன். இரண்டு இளம் பெண்கள். அழகான பெண்கள். ஒருத்தி தமிழ்ப் பெண்போலச் சேலைகட்டியிருந்தாள். மற்றவள் சிவந்த பாவாடையும், சிவந்தச் சட்டையும் போட்டுப் பளபளத்தாள். நான் திரும்பவும், அவள் தலை குனிந்து நாணி நின்றாள். இருவரும் பிளாட் போமில் ரெயிலின் ஒரு ஜன்னலருகே நின்றார்கள். பெரியவள் உள்ளே ஜன்னலருகேயிருந்த வாலிபனுடன் எத்தனையோ உணர்ச்சிகள் பிரதிபலிக்க ஏதேதோ கதைத்துக் கொண்டு நின்றாள்.

வாலிபனைப் பார்த்தேன். உழைப்பினால் உருண்டு திரண்ட அங்கங்கள். இளம் அரும்பு மீசை; முகத்தில் ஒரு கவர்ச்சி. கண்களில் ஏதோ ஏக்கம்.

காதலர்களாக்கும்; நல்ல பொருத்தமான சோடி. சிங்களத்திலும் தமிழிலும் மாறி மாறிக் கதைத்தார்கள். அவளும் அழகாகத் தமிழ் பேசினாள். அவன் அவளின் வளையலணிந்த கரங்களைப் பற்றி மெதுவாக வருடினான். அவள் எதையோ நினைத்து ஏங்குவதுபோல மௌனமாக நின்றாள். சின்னவள் மெல்ல நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் தலை குனிந்தாள்.

பெட்டியில் ஒரு குழந்தையின் கலீர், கலீர் சிரிப் பொலி கேட்டது. அங்கே கண்களைத் திருப்பினேன், இரண்டு வயது மதிக்கத்தக்க அழகான மொழுமொழு வென்ற ஆண் குழந்தை தாயின் மடியிலிருந்து கைதட்டிச் சிரித்தது. வெளியில் ஜன்னலருகில் நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டி குழந்தையுடன் மழலை மொழியில் செல்லம் பாராட்டினாள். குழந்தையை வைத்திருந்த தாய் ஏதோ நினைவு லயிப்பில் ஆழ்ந்திருந்தாள். ஓரளவு செல்வம் கொழிக்கும் அவர்கள் தோற்றம் தோட்டத்தில் ஏதோ நதில் நிலையிலிருந்திருக்கிறார்களென யோசிக்க வைத்தது. அவர்களும் இந்தியாவுக்குப் போகிறார்கள்.

காதலர் பக்கம் திரும்பினேன். சிறிய பெண் என்னைப் பார்த்து விட்டுத் தலை குனிந்தாள். பெரியவள் அவனிடமிருந்து எதையோ எதிர்பார்ப்பவள் போல ஏங்கி நின்றாள். ரெயில் பெட்டியின் ஜன்னல் விளிம்புகளை அவள் தடவிக் கொண்டிருந்தாள். “கவலைப் படாதே. நான் கடிதம் போடுகிறேன். உன்னை மறந்து நான் வாழமாட்டேன்” என்றான் அவன். “உங்களை நினைத்து ஏங்கி ஏங்கி இங்கேயே ஒரு உயிர் காத்திருக்கும். நீங்களின்றி எனக்கு வாழ்க்கை இல்லை” என்று அவள் சிங்களத்தில் சொன்னாள். அவள் குரல் கம்மியிருந்தது. அவள் கையின் மெல்லிய விரல்கள் ஜன்னல் விளிம்பை விரைவாகத் தடவின. சின்னப் பெண் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலை குனிந்தாள்.

நான் நின்ற வாசல் அருகே யாரோ நிற்பது போல உணர்ந்து திரும்பினேன். ஓரளவு படித்தவன் போலக் காணப்பட்ட வாலிபன் காற்சட்டை சேட் அணிந்து, வாசலின் மேற்பகுதியைப் பிடித்துக் கொண்டு நின்றான். அழகான கைக்கடிகாரம் கட்டியிருந்தான். தென் இந்தியாவில் பிரபல்யமான ஒரு நடிகர் போலத் தலைவாரி மீசை விட்டிருந்தான். வெறுமே எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

விசும்பலொலி ஒன்று பெட்டியில் கேட்டது. நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி எதற்கோ அழுது கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் நின்ற வாலிபன் “அழாதே மாமி, இப்படி எத்தனை நடக்கப் போகுது” என்று சொன்னான். அவனுக்குப் பக்கத்தில் நின்ற இளம் பெண் அவன் மனைவியாக இருக்க வேண்டும். அழும் பெண்ணின் கையைப் பிடித்து ஏதோ மெதுவாகக் கூறினாள். எனக்கொன்றும் கேட்கவில்லை.

திரும்பினேன், வாசலில் நின்ற வாலிபன் அப்படியே நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்து நின்ற சின்னப் பெண் தலை குனிந்தாள். பெரியவள் நழுவுகின்ற சேலைத் தலைப்பை பிடித்துத் தோளில் போட்டுக் கொண்டே அவனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

வாசலில் நின்ற வாலிபனைப் பார்த்தேன். அவனு டன் பேச்சுக் கொடுக்க வேண்டுமென்று தோன்றியது. “தம்பி” என்றேன். அவன் என்னைத் திரும்பிப் பார்த்து விட்டு அலட்சியமாக நின்றான். “தம்பியும் இந்தியாவுக்குப் போகுதோ” என்றேன். அவன் பதில் பேசவில்லை

எப்படியும், அவனுடன் பேசுவதென்று நினைத்து மெல்ல ஒரு பொய்யை அவிழ்த்தேன். நான் ஒரு பிரபல்ய பத்திரிகையின் நிருபரென்று கூறி, அதில் பிரசுரிப்பதற்காக உங்களைப் போன்றவர்களின் நிலைகளை விசாரிக்கின்றேன் என்றேன்.

வாலிபனின் முகம் மலர்ந்தது.

என்னை இடையில் பேசவிடாமல் பேசத் தொடங்கினான். அடுக்கு வசனத்தில் படபடவென்று பொரிந்து தள்ளினான். “நாம் வளம் படுத்திய நாட்டில் எமக்கு வாழ உரிமையில்லை; நாங்கள் மனிதர்களாக நடத்தப் படவில்லை. மந்தைகளாக நடத்தப் படுகிறோம். நாங்கள் வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றோம்” என்றான் அவன். அவனின் பேச்சில் சில தென்னிந்திய, ஈழத்து அரசியல் தலைவர்களின் வாடை மணத்தது.

“தம்பிக்கு ஏது இவ்வளவு கோபம் வருகுது; எந்தப் பகுதியிலை இருந்தது” என்றேன்.

“ஹறன்” என்றான் அவன். ஹைலன்ஸ் கொலிச் சிலை எம்.எஸ்.சி. வரை படித்ததென்றும் சொன்னான். நாங்கள் படித்தவர்கள் யோசிக்கா விட்டால் யார் எமது உரிமைகளைப் பற்றி யோசிப்பார்களென்றும் கேட்டான். “எங்கள் அவலங்களை உங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டு, எங்களைப் போன்றவர்களுக்கு ஓரளவாகுதல் விமோசனம் வேண்டித் தாருங்கள் சார்” என்று பவ்வியமாகச் சொன்னான்.

றெயில் புறப்படுவதற்காகக் கூவியது.

அவனிடம் விடைபெற்று அவசரமாக பிளாட்போம் பாலத்தின் இரண்டாவது, மூன்றாவது படிகளில் ஏறிப் பார்க்கலானேன்.

கிழவி இருக்கையில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

குழந்தையை வைத்திருந்த தாய் குழந்தையை ஜன்னல் அருகில் பிடிக்க மூதாட்டிக் கிழவி, முத்தமாரி பொழிந்து கொண்டிருந்தாள்.

அந்த இளம் தம்பதிகள் அவசரம் அவசரமாக வெளியே இறங்க மெதுவாக அழுது கொண்டிருந்த பெண் பலத்து சத்தமிட்டு அழுதாள்.

காதலன், பெரியவளின் கைகளைப் பிடித்து முத்தமிட்டுவிட்டு தங்களை யாரும் கவனிக்கிறார்களோவென்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

சின்னவள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் என்னைக் காணாது தேடி, பாலத்தின் படிகளில் நின்ற என்னைக் கண்டு புன்னகை பூத்தாள்.

தலைமன்னார் றெயில் புறப்படுகிறது.

பிளாட்போமில் பரபரப்பு மிகுந்தது, விசும்பல் ஒலிகள் கேட்டன.

பெரியவளின் வளையலணிந்த கரங்கள், அவனை நோக்கி அசைந்தன. அவள் கண்களில் கண்ணீர் மணிகள் பளிச்சிட்டன.

வாசலில் நின்ற வாலிபன் என்னைக் குறிவைத்துக் கையசைத்தான். நானும் அசைத்தேன்.

சின்னவள் பெரியவளைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்துக் கையசைத்துப் புன்னகை பூத்தாள்.

றெயில் உஸ் – உஸ் சென்று பெருமூச்சு விட்டுக் கொண்டு விரைந்தது.

- 1970, சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை. 

தொடர்புடைய சிறுகதைகள்
"இன்றைய மாலைப் பொழுது எங்கள் எல்லோ ருக்கும் ஒரு இனிய மாலைப் பொழுதுதான். வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ மாலைப் பொழுதுகளை நாம் சந்தித்துவிட்டோம்; இனி மேலும் சந்திப்போம். கடந்து போன எத்தனையோ மாலைப் பொழுதுகள் உங்கள் மனதில் இனிய ஞாபகங்களைக் கிளர்த்தலாம். ...
மேலும் கதையை படிக்க...
(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அரியத்தின் அக்காவுக்கு, எப்படி இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. எவ்வளவோ நேரம் சிந்தித்தும் ஒரு முடிவுக்கு வர என்னால் முடியவில்லை. கொஞ்ச நேரமென்றாலும் - நீ என்னுடன் ...
மேலும் கதையை படிக்க...
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "நான் இனிமேல் இந்த ஊரிலேயே இருக்கப் போவதில்லை. நான் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து வந்த இந்த ஊருக்கு நான் இனிமேலும் வடுவை தேடிவைக்க போவதில்லை. குழந்தைப் பருவத்தில் உருண்டு ...
மேலும் கதையை படிக்க...
அவனுள் தவிப்பே மேலோங்கி நின்றது. திரு மணமானதின்பின் வந்த இந்த இரண்டு மாதங்களும் ஏதோ நிறைவின்றிக் கழிந்ததுபோல அவனுக்குப்பட்டது . வார்த்தைகளில் சொல்லமுடியாத, நெஞ்சினுள் கெம்பிக்கெம்பி மேலெழும்புகின்ற, முள்ளாய் உறுத்துகின்ற, மெல்லிய சோகமாய் உள்ளெல்லாம் இழையூடுகின்ற, அவனுக்கும் அவளுக்குமிடையில் உணர்ச்சிகளின் பூரணமான, ...
மேலும் கதையை படிக்க...
மார்பில் வலப்புறத்தில் கீழ்ப்பக்கமாக விட்டு விட்டுத்தான் வலித்தது - சுள்னிடு வதுபோல எந்தநேரம் அது வருமென்று சொல்லத் தெரியாது. எந்த சேரமும் வரலாம். நடு இரவில் நல்ல சித்திரையிலிருக்கும் போது கூட வரலாம். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே சுண்டிச் ..... ...
மேலும் கதையை படிக்க...
(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலையைச் சொறிந்து கொண்டாள் ஈஸ்வரி. எவ்வளவு நேரந்தான் இப்படியே இருந்து, இருந்து யோசிக்க முடியும். எவ்வளவு நேரந்தான் மனத்தில் நினைந்து நினைந்து ஏங்கி, ஏங்கி அழமுடியும். எவ்வளவு நேரந்தான் வாசற்படிக்கட்டில் ...
மேலும் கதையை படிக்க...
(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடகடவென்ற இரைச்சலுடன் புகையிரதம் விரைந்து கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நெரிந்து குமைந்தது. நானிருந்த பெட்டியின் வாசற்புறக் கதவருகில் நின்று வெளியே தெரிந்த காட்சிகளில் கண்களை மேயவிட்டுக் கொண்டிருந்தேன். கரையோரப் ...
மேலும் கதையை படிக்க...
‘எங்கள் தகப்பனாருக்கு மிகவும் விருப்பமான ஐயனார் கோவிலுக்கு இன்று போகக் கிடைத்தது. இந்த ஐயனார் கோயிலைப் பற்றியும், அதன் பின் கோபுரத்தோடு வேர்விட்டு வளர்ந்து, பல விழுதுகளை ஊன்றி நிற்கும் பெரிய ஆலமரத்தைப் பற்றியும், அதனயலில் மாரிகாலத்தில் பொங்கித் ததும்பி எப்போதும் ...
மேலும் கதையை படிக்க...
காலை வெளுத்தபின் ஏழுமணிபோல் எழுந்திருந்தான். அவன் சிறிய தங்கை "அண்ணை அண்ணை" என்று அவனை உருட்டிப் புரட்டி எழுப்பினாள், சோம்பல் முறித்துக்கொண்டு பாயைச் சுருட்டி சுவர்ப்புறமாக ஒதுக்கி வைத்தான். வீடு கலகலத்துக் கொண்டிருந்தது. அவன் தம்பி, தங்கைகள் பள்ளிக்கூடம் செல்வதற்காகப் பரபரத்துக் கொண்டிருந்தார்கள் "அம்மா ...
மேலும் கதையை படிக்க...
அவனருகிலிருந்த அவளை. அவன் வலு குறுகுறுப்பாகப் பார்த்தான். அவளின் அண்மை அவனை என்னவோ செய்தது. அவளிலிருந்து வீசிய 'சென்றி'ன் நறுமணத்தை அவன் நுகர்ந்தான். அவளின் சேலைத் தலைப்பின் தழுவலில் அவன் சுகமனுபவித்தான். அவளை எங்கோ கண்டதுபோல அவனுக்கு ஞாப கம் வந்தது. அவளை ...
மேலும் கதையை படிக்க...
ஒரு பாதையின் கதை
அரியத்தின் அக்காவுக்கு…
பைத்தியங்கள்
இணை
வலி
விடிவு வரும்
ஒரு றெயில் பயணம்
‘மோனலிசாப்’ புன்னகை
இலுப்பை மரமும் இளஞ்சந்ததியும்
உணர்ச்சிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)