கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,271 
 

“வெளியே செல்லும்போது துப்பட்டா போடாமல் வரும் மகளைக் கண்டிக்கவும் முடியவில்லை. அவளின் கழுத்துக்குக் கீழே கண்களை துறுதுறுவென மேயவிடும் இளவட்டப் பசங்களின் சேட்டைகளையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’

முதுகு தெரியாதபடி முந்தானையைப் போர்த்திக் கொண்டு பதட்டத்துடன் பக்கத்தில் மகள் ப்ரியாவுடன் பஸ்ஸ்டான்டில் நின்று கொண்டிருந்தாள் சீதா.

பத்தடி தள்ளி நின்ற அந்தப் பையன் ப்ரியாவையே “அந்த’ இடத்தில் அநாகரிகமாக பார்த்தபடி சீதாவின் எரிச்சலையும் பி.பி.யையும் எகிற
வைத்துக் கொண்டிருந்தான்.

“கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம்னு இப்பொழுது இஷ்டத்துக்குக் கண்களை மேயவிடும் இந்தக் கண்றாவி சுதந்திரம் வேறு’

வார்த்தைகளை மனசுக்குள் பொசுக்கிக் கொண்டு அவன் பார்வை படாதபடி மகளுக்கு முன்னால் நின்று பாசக் கேட்யமானாள் சீதா!

நல்லவேளை… பஸ் உடனே வர பட்டென மகளை முதலில் ஏறவிட்டு தானும் தாவினாள்… எதிலிருந்தோ தப்பித்த மனநிலை…

அரசு விடுமுறை என்பதால் பஸ்சில் கூட்டம் குறைவுதான் என்றாலும் உட்கார இடமில்லை. இருக்கையெல்லாம் பள்ளி வாண்டுகள். இரண்டு
சிறுமிகள் எழுந்து இவர்களுக்கு இடம்தர, ஒருத்தி ப்ரியாவைப் பார்த்து, “அக்கா கொடியை தலைகீழா குத்தியிருக்கீங்க!’ன்னு அந்த
இடத்தில் கை காட்டினாள். ப்ரியாவும் ஷாக் அடித்த மாதிரி தலை கீழாய் வெளிப்படுத்திய தன் தேசப்பற்றை நேராக்கினாள்…

அந்த வினாடியில் சீதாவின் நெஞ்சில் சுருக்கென்றது.

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்… அவனும் பார்த்தான். மெலிதாகச் சிரித்தாள். இப்பொழுது சீதாவுக்கு எல்லாமே நேராகத் தெரிந்தது.

– அனிதாகுமார் (ஒக்ரோபர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *