தனக்கு மட்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 6,347 
 

அந்த கடையின் கணக்குப்பிள்ளை ஏகாமபரம் அண்ணாச்சிக்கு இன்னைக்கு கோபமின்னா கோபம் இலேசுப்பட்ட கோபமில்ல, ஒரு பய அவருகிட்ட வாய கொடுக்க வரலை, அப்படி இருந்துச்சு அவர் முகம். யாரு போய் பேசறதுன்னு, பம்மிகிட்டு அந்தா இந்தான்னு மிரளுறானுங்க. என்னாச்சு இந்த அண்ணாச்சிக்கு?

விசயம் கொஞ்சம் முக்கியந்தான் கட்டிக்கொடுத்த பொண்ணு முழுகாம இருக்கா, அவளை மாப்பிள்ளை வீட்டுல இருந்து வளைகாப்பு பண்ணி கூட்டியாரணும். இது ஏழு மாசம், எப்படியும் இழுத்து புடிச்சு செலவு பண்ணாலும் ஏழெட்டாயிரம் கழண்டிடும். நேத்து இராத்திரி கடைய பூட்டற வரைக்கும் முதலாளி கூட இருந்து, கடை அடைக்கற நேரத்துல, அடைக்கறதை கவனமா பார்த்துகிட்டு இருந்த முதலாளிகிட்டே தலைய சொறிஞ்சு விசயத்தை அவர் காதுல ஓதுனாரு.

முதலாளி அதை காதில் வாங்கினதாவே தெரியலை, அவரு வேலையில கூர்மையா இருந்தாரு “எலேய் பூட்டை இழுத்து பாரு ! “கணக்கு” அந்த பாலுப் பய இரண்டு நாளா வேலைக்கு வரக்காணோம். நாளைக்கு வரலையின்னா சீட்டை கிழிச்சு அனுப்பிச்சிடு” இவரிடம் சொல்லி விட்டு மெல்ல நடக்க ஆரம்பிச்சுட்டாரு., ஏகாம்பரத்துக்கு அப்பவே ஆத்திரமா இருந்துச்சு,

இந்த முதலாளி கிட்ட பதினைஞ்சு வருசமாக இருக்கறேன், பொண்ணை கூட்டிட்டு வரணும்னு சொல்லிகிட்டு இருக்கேன், இந்த மனுசன் காதுல வாங்கறானா பாரு, மனதுக்குள் திட்டிக்கொண்டாலும், வெளியில் சொல்ல முடியாமல் “ஐயா” அப்படீன்னு மறுபடியும் தலையை சொறிய ஆரம்பிச்சாரு.

எல்லாரையும் பத்தி விட்டுட்டு கைப்பையை இக்குல வச்சுகிட்டு நடக்க ஆரம்பிச்ச மனுசன் ஏகாம்பரத்தோட “ஐயா”ன்னு குரலை கேட்டு எரிச்சலோட திரும்பி பார்த்தார். என்ன கணக்கு? எதுவானாலும் பகல்லயே கேக்கணும்னு சொல்லியிருக்கேனுல்ல.

அதில்லைங்கய்யா, பொண்ண வளைகாப்பு முடிச்சுட்டு புருசன் வூட்டுலயிருந்து அடுத்த வாரம் நம்ம வூட்டுக்கு கூட்டிட்டு வந்திடலாமுன்னு இருக்கேன், அதுக்கு கொஞ்சம் பணம் செலவாகும், நீங்க கடனா கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா.இழுத்தார், பார்ப்போம், பார்ப்போம் கணக்கு சொல்லிவிட்டு விறு விறுவென நடக்க ஆரம்பித்தார்.

அப்ப ஏகாம்பரத்துக்கு பிடுச்ச ஆத்திரம் வீட்டுக்கு வந்து உள்ளே நுழைஞ்சதும் சமயா சந்தர்ப்பம் தெரியாமல்”. ஏங்க உங்க முதலாளிகிட்ட கேட்டீங்களா? அப்படீன்னு கேட்டுட்ட சம்சாரத்து கிட்ட வெளிவந்துச்சு. .அவ்வளவுதான், முதலாளி காது கொடுத்து நம்ம பிரச்சினைய கேக்கலையின்னு இருந்த கோபம் அத்தனையும் அங்க வெளிவர முடியாததால சம்சாரத்துகிட்ட பொரிஞ்சு வெளியே தள்ளிட்டாரு..

இவரு பொரிஞ்சு முடிக்கற வரைக்கும் பேசாம வாயில கை வைச்சு பாத்துக் கிட்டிருந்த அவர் சம்சாரம் அதுக்கு ஏய்யா இங்க வந்து சத்தம் போட்டுட்டு இருக்கறே? முதலாளியின்னா அப்படித்தான் இருப்பாங்க, நீ கால் கையை கழுவிகிட்டு வாய்யா, சாப்பிட்டுட்டு அப்புறம் பாக்கலாம், அவரின் குணம் அறிந்து சமாளித்தாள் சம்சாரம்..

இராத்திரி சாப்பிட்டு முடிச்சு களைச்சு படுக்க போனாலும், மறு நா கடைக்குள்ளார நுழையற வரைக்கும் அவருக்கு முதலாளி தன்னோட பிரச்சினைய கண்டுக்காம கொள்ளாம போயிட்டாரு அப்படீங்கற கோபத்திலதான் இருந்தாரு. அப்பத்தான் இரண்டு நாளா டிமிக்கி அடிச்சுட்டு வேலைக்கு வராம இருந்த பாலு மாட்டிகிட்டான். பிடிச்சு உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாரு..

எலே என்ன நினைச்சுகிட்டு இருக்கே? சொல்லாம கொள்ளாம இரண்டு நாளா எங்கேயோ போய்ட்ட? இது என்ன உம் மாமியார் வீடுன்னு நினைச்சிட்டியா? உன்னைய சீட்டை கிழிச்சு அனுப்ப சொல்லிட்டாரு முதலாளி, பட பட வென பொரிந்த ஏகாம்பரத்தை வியப்பாய் பார்த்துக்கொண்டிருந்தார்கள் கடை பையன்கள்.

பாலு கொஞ்ச நேரம் தலை கவிழ்த்துட்டு நின்னு கிட்டிருந்தான். முதலாளி அப்பத்தான் கடைக்குள்ளார நுழைஞ்சவருக்கு அங்க ஏகாம்பரம் பையன் கிட்ட போட்டு கிட்டிருந்த “காச்” “மூச்சு” சத்தத்தை பார்த்தவருக்கு ஆச்சர்யம், தான் எவ்வளவு வைதாலும், கடை பையன்களை விட்டு கொடுக்காமல் பேசுறவரு இன்னைக்கு ஏன் இப்படி கடுமையா இருக்காருன்னு புரியலை. “சரி போலே” போய் வேலைய பாரு” பிரச்சினையை முடிக்கும் விதமாக சொல்லி அவனை அங்கிருந்து கிளப்பினார்.

முதலாளியே உள்ளே போன சொன்ன பின்னால கொஞ்சம் தெம்பு வந்தவனா பாலு உள்ளே போனான். ஏகாம்பரமும் முதலாளியின் அந்த வார்த்தைக்கு எதுவும் பேசாம எழுந்து நின்னாரு..

கடைக்கு ஆளுக வர ஆரம்பிக்க வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. காலை நேரம் மொத்த சரக்கு வியாபாரம். அதுக்கு மேல ஒருத்தனுக்கு ஒருத்தன் பேசறதுக்கு கூட நேரமில்ல. ஏகாம்பரம் பொண்ண பத்திய கவலை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு வியாபார கணக்குகளை பார்க்க ஆரம்பிச்சுட்டாரு..

இவங்க கடை மார்க்கெட்டுக்குள் இருக்கறதால, எப்பவும் கூட்டம் இருந்து கிட்டே இருக்கும், மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் சாமான்கள் வாங்க வந்துட்டு போயிட்டுமாவே இருப்பாங்க.. இடையில கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கறதுக்கு கூட நேரமிருக்காது, ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அஞ்சு நிமிசம் ஓய்வு எடுத்து விட்டு, இவன் கடைக்குள்ளார வந்துட்டு அடுத்தவனை அனுப்பி வைக்கணும்.. மதியம் சாப்பாட்டு வேலை கூட இப்படித்தான் நடக்கும்.

ஏகாம்பரத்துக்கு மதியம் சாப்பாடு அப்படீங்கறது பெரிய விசயமில்லை, சம்சாரம் சின்ன டிபன் பாக்சில் தயிர் சாதம் வைச்சிருப்பாங்க. அது போதும். வேற ஏதனாச்சும் தொட்டுக்க வேணுமின்னா, கடை ஊறுகாய எடுத்துக்குவாரு.. இல்லையின்னா எதிர்ல இருக்கற ஏதாவது ஓட்டல்ல வடையோ, போண்டாவோ வாங்கிக்குவாரு.. அதுக்கு கடை காசு கொடுத்துடும்.

மொத்தம் அஞ்சு பையன்கள் கடையில வேலை பார்க்கறாங்க., கணக்கு வழக்கு பார்க்க இவர் ஒருத்தர்தான்., அது போக கல்லா பெட்டியில் உட்கார முதலாளி வந்துடுவாரு., முதலாளி வர முடியாத நேரத்துல அவர் மகனோ, மகளோ வருவாங்க.. அவங்களும் ஒரு மணி நேரம்,அல்லது இரண்டு மணி நேரமோதான் இருப்பாங்க., மத்த நேரங்கல ஏகாம்பரமே முதலாளி மாதிரிதான். கணக்கு வழக்கையும் பார்த்து கடையையும் கவனிச்சுக்கணும்.. அத்தனை நம்பிக்கை அவர் மீது.

எத்தனை நம்பிக்கை இருந்தும், முதலாளி இவரோட பிரச்சினையை காது கொடுத்து கேட்காதது இவரோட மனதை இம்சை படுத்திக்கிட்டே இருந்துச்சு.. எத்தனை விசுவாசமாய் இருந்து என்ன பிரயோசனம்? முதலாளி எப்பவும் முதலாளியாத்தான் இருக்கறான், சிந்திக்கிறான்.,அவன் கிட்டே வேலை செய்யறவனோட கஷ்ட நஷ்டத்தை பாக்கறதே இல்லை. ஏகாம்பரம் கணக்குப் பிள்ளை இப்படியெல்லாம் முதலாளி தொழிலாளி வர்க்கமாக சிந்திக்க ஆரம்பிச்சுட்டாரு.

ஏகாம்பரம் இந்த கடையோட முதலாளியின் உறவுக்காரர் கடையிலதான் கணக்கு வழக்கு பாத்துகிட்டு இருந்தாரு..அவரு வியாபாரத்தை விட்டுட்டு பெங்களூரில பையன் வியாபாரம் பண்ணற இடத்துக்கே போறதுன்னு முடிவு பண்ணிட்டவரு இவரை இந்த கடையோட முதலாளிகிட்டே சேர்த்து விட்டார். அடுத்து வேலைக்கு எங்கு போறது அப்படின்ற திகில்ல இருந்த ஏகாம்பரத்துக்கு பெரிய நிம்மதியா போச்சு., பொண் குழந்தை வேறு படிச்சுகிட்டிருந்துச்சு. இந்த முதலாளிகிட்டே சேர்ந்து அதுக்கு பின்னாடி பதினைஞ்சு வருசத்தை ஓட்டி விட்டார். பொண்னையும் ஒரு பட்டம் வாங்க வச்சு ஒரு இடத்திலயும் கட்டிக் கொடுத்து விட்டார். கல்யாணத்துக்கு முதலாளி கொஞ்சம் கடனாவும், கொஞ்சம் இனாமாவும் கொடுத்தார்.

இவரும் கடனை “தவணை” முறையில மாச மாச சம்பளத்துல பிடித்தம் செஞ்சுக்க சொல்லி கடனையும் கொடுத்து கழிச்சுட்டார்.. அப்படி பொறுப்பா பணத்தை திருப்பி கட்டியும் நாணயமாக நடந்தும் என்ன பிரயோசனம்? கொஞ்சம் பணம் கடனாக கொடுக்க சொல்லி கேட்டா, காது கொடுத்து கூட கேட்க தோனாத மனுசன் கிட்டே என்ன சொல்ல? அவருக்கு நினைக்க நினைக்க கோபம் பொத்து கிட்டு வந்துச்சு..

கடைக்கு வார விடுமுறை, அப்படீன்னாலும் கடைக்கு போய் மதியம் வரைக்கும் கணக்கு வழக்கு பார்த்து கிட்டு வீட்டுக்கு மதியம் வந்து விடுவார். அன்னைக்குத்தான் மதியம் நிதானமாய் சாப்பிட்டுட்டு அப்பாடீன்னு ஒரு குட்டி தூக்கம் போடுவாரு. இன்னைக்குத்தான் விடுமுறை நாளாச்சே, மதியம் சாப்பிட்டு முடிச்சுட்டு, தூக்கம் போடறதுக்கு பதிலாக முதலாளி வீட்டுக்கே போய் இந்த விசயமாக பேசிடலாம் அப்படீன்னு முடிவு பண்ணுனவரு சம்சாரத்து கிட்டே விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்பினார்..

முதலாளி வீட்டுக்கு டவுன் பஸ்ஸில தான் போக முடியும்.. பஸ் ஏறி அந்த நிறுத்தத்துல இறங்கி அவரு வீட்டுக்கு நடந்து போனார்.. வீட்டில ஒருத்தரும் இருக்கறதா தெரியலை., வீட்டுக்கு முன்னாடி இருக்கற கேட் பூட்டியிருந்துச்சு. ரொம்ப ஏமாத்தமா போச்சு. ஏகாம்பரத்துக்கு.. சரி இன்னைக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான் அப்படீன்னு நினைச்சு திரும்ப எத்தனிக்குபோது, வீட்டில் வேலை செய்யும் பையன் ஒருத்தன் சைக்கிள்ள அங்க வந்து நிக்கிறான்., நீங்க இங்க என்ன பண்ணறீங்க

கணக்கு பிள்ளை அவங்க எல்லாரும் ஆசுப்பத்திரியில இருக்காங்க, இவருக்கு ஒண்ணும் புரியலை, ஆசுபத்திரியா? எந்த ஆசுபத்திரி?

பையன் விசயம் தெரியாதா? உங்களுக்கு, அவர் பையனுக்கு மூணு நாளைக்கு முன்னாடி வண்டியில போகுபோது ஆக்சிடெண்ட் ஆகி ஆஸ்பத்திரியில அட்மிசன் ஆகியிருந்தாங்க, சரியான அடி, பிழைப்பானான்னு ஆயிடுச்சு. பையனுக்கு இப்ப பரவாயில்லை. மெல்ல எநிதிரிச்சி நடக்கறாரு. நாளைக்கு டிஸ்ஜார்ஜ் பண்ணலாமுன்னு சொல்லிட்டாங்க, நான் அவங்களுக்கு காப்பி கொண்டு போக இங்கிருந்து பிளாஸ்க் எடுத்துட்டு போகலாமுன்னு வந்தேன், சொல்லி விட்டு கையில் கொண்டு வந்திருந்த சாவியால் கேட்டை திறந்து வீட்டையும் திறந்து உள்ளே சென்று பிளாஸ்கை எடுத்து வந்தான்.

வாங்க கணக்கு” சொல்லிட்டு சைக்கிளை தள்ளிக் கொண்டு நடக்க இவருக்கு வந்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் நஞ்சமல்ல. அந்த குற்ற உணர்ச்சியோடவே மெல்ல அவன் பின்னால நடக்கறாரு..

ஆசுபத்திரியில இவரை எதிர்பார்க்காத முதலாளி “வாங்க கணக்கு” அப்படீன்னு சொன்னார். இவரு குற்ற உணர்ச்சியில இது எப்ப நடந்தது முதலாளி” மெல்ல கேட்க, முதலாளி அன்னைக்கி இராத்திரி கடையை பூட்டி கிளம்பினமில்லா அப்பத்தான், செய்தி வந்துச்சு. அவர் சொன்ன அன்னைக்கித்தான் இவர் தன்னோட பொண்ணை வளைகாப்பு செஞ்சு கூட்டிட்டு வரணும்னு சொன்ன நாள். நான் என்னோட பிரச்சினையை சொல்லியும் முதலாளி கேட்டுக்க மாட்டேனுட்டாரே அப்படீன்னு மனசுக்குள்ள புழுங்கிட்டிருந்த நாள்.

மனம் முழுக்க வேதனையுடன் இப்ப நல்லாயிருக்காருங்களா? கேட்ட கணக்குவிடம் பையன் குணமாயிட்டான், நாளைக்கு கூட்டிட்டு போயிடலாமுன்னு இருக்கேன். சொல்லிக்கொண்டே இருந்தவர் “நாளைக்கு நான் வரமாட்டேன், நீங்க பாத்திக்கிடுங்க, அப்புறம் கணக்கு முடிச்சுட்டு உங்க பொண்ணுக்கு வளைக்காப்பு செய்யணுமுன்னு சொல்லிகிட்டிருந்தீங்களே, கணக்கில இருந்து எவ்வளவு வேணும்னு எடுத்திகிட்டு கணக்குல எழுதி வச்சிடுங்க” சொல்லிக்கொண்டே போன முதலாளியை கண்ணீருடன் பார்த்தார் ஏகாம்பரம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *