தடக்… தடக்…., தடக்… தடக்…

 

ஒரு சீரான கதியில் அந்த இரயில் வண்டி சென்று கொண்டிருந்தது. டூ டயர் குளிர் வசதிப் பெட்டியின் தாராளமும் சொகுசும் இதமாக இருக்க நன்கு காலை நீட்டி ஜன்னல் பக்கம் தலை திருப்பி வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன். சென்னையின் நெரிசல்களை வேகமாகப் பின்தள்ளி வண்டி வேகம் பிடித்தது. எல்லாக் கதவுகளும் அடைக்கப் பட்டிருந்ததால் சென்னையின் அவலம் நாசிக்கு எட்ட வில்லை.

பார்வையை உள்ளே திருப்பினேன். எதிரே அமர்ந்திருந்தவர் நடுத்தர வயது தாண்டி சற்று தாராளமாக இருந்தார். உள்ளே செல்லும் உணவின் அளவிற்கும் வெளிப்படுத்தும் உழைப்பின் அளவிற்கும் உள்ள விகிதாச் சாரத்தில் ஏதோ முரண் தெரிந்தது. டூ டயரின் தாராளம் இல்லையென்றால் இட நெருக்கத்தை உணர்ந்திருப்போம். மெல்ல புன்னகைத்து கையில் கொரித்துக் கொண்டிருந்த பாக்கெட்டை என்னிடம் நீட்டினார்… புன்னகையால் மறுத்தேன்… ‘இம்போர்ட்டட்’ என்றார். அதே புன்னகையை மீண்டும் தந்தேன்…. (அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் கிளம்பும் முன் அடையார் கிராண்ட் சுவீட்சில் மூட்டை கட்டுவது கண் முன் வந்து சென்றது)

கையில் உள்ளதை ஓரமாக வைத்துவிட்டு என்னை சினேகமாகப் பார்த்தார். பேச்சுக் கொடுக்கப் போகிறார் என்று உணர்ந்தேன். மெல்ல அவரை எடை போட முயற்சிக்க சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் போல் தோன்றியது…. இவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்….

அதிகமாக ஆங்கிலத்தில் பேசுவார்கள், தமிழ் தெரிந்தாலும்.

தமிழ் கொஞ்சம் இழுவையாக இருக்கும்(ஆங்கிலமும் தான்). நிச்சையமாக நம் ஊரைப் பற்றி இழிவாகவும் அயல் தேசத்தைப் பற்றி பெருமிதமாகவும் பேசுவார். எனக்கு எரிச்சல் ஊட்டும்.

நான் பயந்தது போலவே “ஐ ஆம் ஷிவ்” என்றார் ஆங்கிலத்தில். (சிவா, சிவகுமார், சிவராமன் அல்லது சிவந்தி என்று பெயர் இருக்கும்)

நான் மையமாகப் புன்னகைத்தேன்.

“திஸ் கண்ட்ரி வில் நெவர் இம்புரூவ்…” என்றார்

தொடர்ந்து…

“ஏன் என்ன விஷயம்…” என்றேன் தமிழில்…

“பாருங்களேன் …. எங்க பார்த்தாலும் குப்பை… அழுக்கு… நோ டிசிப்ளின்…”

ஷூ காலைத் தூக்கி எதிர் இருக்கையில் போட்டார்.., உரிமையோடு.

நான் நெளிந்தேன்!

“இந்த பக்கிங்காம் கால்வாயைப் பாருங்கள்…. ஊரிலுள்ள கழிவெல்லாம் அதில்தான்…. குப்பையை எங்க போடுவது என்று ஒரு நியதி இல்லை…. குளிர் வசதிப் பெட்டி என்பதால் தப்பித்தோம்.. ” மீண்டும் பொட்டலத்தை எடுத்து கொரிக்க ஆரம்பித்தார்…

மௌனமாக கவனித்துக் கொண்டிருந்தேன்…. தொடர்ந்தார் (‘இன்னும் டீ வரல..’ மாதிரி) அந்தப் புகழ் பாடும் படலத்தை எதிர் பார்த்தேன். ஏமாற்றவில்லை…

“அமரிக்காவ பாருங்க எவ்வளவு சுத்தம்…. நீர் நிலையெல்லாம் எவ்வளவு சுத்தம்… குப்பையை அதற்கான தொட்டியில்தான்….. வேறெங்கும் காண முடியாது…. நமக்கு இந்த ஊரு ஒத்துக்காதுப்பா…. என்ன சத்தம், என்ன தூசி, என்ன பொலூஷன்… சீக்கிரமா கிளம்பிடுவேன்”

கையில் இருந்த நொறுக் காலி… பாக்கெட்டை நசுக்கி ஒரு பந்தாக்கினார். இந்தக் கைக்கும் அந்தக் கைக்கும் சிறிது நேரம் பந்தாடினார்…. நான் அவர் காலை எடுக்கச் சொல்லி ஜன்னலோரக் கண்ணாடியில் முகம் பதித்து வெளியே வேடிக்கை பார்ப்பது போல் பாவ்லா செய்தேன்… சட்டென்று பந்தை இருக்கைக்கு அடியில் போட்டார்….

தடக் தடக்…. தடக் தடக்…. என்று வண்டி தொடர்ந்தது….

எதிரே இருப்பவரை ஒரு சின்னக் கை தட்டி…

“அங்கிள் தேர் இஸ் எ ‘வேஸட் பின்’ நியர் த டாய்லெட்” என,

அந்த தடித்தவர் குனிந்து குப்பைப் பந்தைத் தேடுவது வேடிக்கையாக இருந்தது…

தடக் தடக்.. தடக் தடக்…. 

தொடர்புடைய சிறுகதைகள்
களம்: கல்லூரி காலம்: 1972 சீக்கிரமாக எழுந்து அவசர அவசரமாக கல்லூரிக்குக் கிளம்பினேன். அம்மா என் அவசரத்தைப் பார்த்து அதிசயமாகப் பார்த்தாள். நான் எப்பொழுதும் பின் தூங்கி பின் எழுபவன். இவ்வளவு சீக்கிரமாக நான் கிளம்பியதில்லை. அம்மாவின் தலைக்கு மேல் தெரிந்த ஆச்சரியக் குறியை ...
மேலும் கதையை படிக்க...
அம்மா! அம்மாவுக்கு இன்னொரு பெயர் 'உழைப்பு'. எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பாள். சும்மா இருப்பது என்பது ரொம்ப கம்மி. இப்பவும் நான் அந்த கல்யாண மண்டபத்தின் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க கீழே கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தன் தங்கையின் இரண்டாவது ...
மேலும் கதையை படிக்க...
சரியாக பிற்பகல் 3:40-க்கு பள்ளிப் பேருந்தில் அடுக்கு மாடி வளாக வாசலில் வந்திறங்கும் ஐந்து வயதுப் பேத்தியை நான் வாயிலில் சென்று வரவேற்கச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் ஒரு சின்னப் பிரளயமே நடக்கும். "நான் என்ன குட்டிப் பாப்பாவா.... என் ஃப்ரண்டு ...
மேலும் கதையை படிக்க...
நாம் சில சமயம் வெளியூர் பயணம் செல்லும் பொழுதோ, மலைவாச ஸ்தலங்களுக்கு விடுமுறையில் செல்லும் பொழுதோ அப்படியே அதன் அழகில், அமைதியில், குளிரிச்சியில் சொக்கிப் போய்விடுவோம். போகும் வழியெல்லாம் தோன்றும் வழிகளும், கிளைவழிகளும் நமக்கு ‘அது எங்கே போகும்..?, அதன் முடிவில் ...
மேலும் கதையை படிக்க...
வேலுவுக்கு தகவல் வந்த போது பதறி விட்டான்.  ஓரு கணம் என்ன செய்வது. ஏது செய்வது என்று புரியவில்லை.  மனைவிக்கு இரண்டாவது பிரசவம்....   மருதுவர் சொன்னபடி பார்த்தால் இன்னும் இரண்டு வாரம் தள்ளித்தான் ஆக வேண்டும்..... இப்பொழுதேவா.....?   உடனே மருத்துவமனை செல்ல ...
மேலும் கதையை படிக்க...
கதையல்ல
அம்மா
முதுநிலை மழலையர் இறுதித் தேர்வு
இனி
ஏ டீ எம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)