கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 13, 2013
பார்வையிட்டோர்: 20,265 
 

சந்திரமதிக்கு அடிமேல அடி வாங்குனது மாதிரி இருந்துச்சு. பத்து வருஷத்துக்கும் மேல அன்பு இல்லம் ஆஸ்டலுல வார்டனா இருக்குற அவளுக்கு இது புது அனுபவமாத்தான் இருந்துச்சு. “இத்தன வருஷத்துல ஒரு நா ஒரு பொழுது கூட பிள்ள கூட நம்மட்ட இப்பிடி பேசுனது அது இல்லையே.. இந்தச் சின்ன பெய இப்பிடி மூஞ்சில அடிக்கிற மாதிரி டாண் டாண்ணு எப்படிப் பேசுறான்! நம்ம செய்றதுதான் தப்போ! அந்தப் பெய செஞ்சதுதான் தப்பா”, கண்டமாணிக்க மனசுக்குள்ள பொலம்பிக்கிட்டா.

காட்டுப்பட்டி எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமம். அங்க இருந்து எங்க போகனும்னாலும் நடந்தேதான் போகனும், வரனும். அன்பு இல்லம் ஆஸ்டலுதான் அங்க பெரிய கட்டிடமாத் தெரியும். மீதிப்பூரா வீடுகளும் ஓலக் குடுசைகதான் ரொம்பாக் கஸ்டப்படுற பிள்ளைக, தாயிதகப்பனத்த பிள்ளைகள் இந்த ஆஸ்டலுல சேத்து பக்கத்துல இருந்த தொடக்கப்பள்ளிக் கொடத்துல படிக்க வப்பாக. எல்லாம் சுத்துவட்டாரத்துல படிக்க வப்பாக. எல்லாம் சுத்துவட்டாரத்துல இருக்குற கிராமத்துப் பிள்ளைகதான் ஆஸ்டலுல சேந்து படிக்கிறாக.

சந்திரமதியோடெ வீடும் ரொம்பாக் கஸ்டப்பட்டதுதான். அவளுக்கும் கிட்டத்தட்ட நாப்பது வயசுக்கு மேல ஆகிப்போச்சு. பத்தாங் கெளாசு படுச்சுருக்கா. கொறச்ச சம்பளம்னாலும் வேற வழி இல்லாமெ இங்கயே பத்து வருஷமா இருக்கா. குடும்பக் கஷ்டத்துனால அவா கலியாணங் காச்சினு எதுவும் முடிக்காமெ இங்கயே தங்கி வேல செஞ்சுகிட்டு இருந்தா. ஆஸ்டலு மேனேஜர் போடுற சட்டதிட்டங்கள் அப்படியே செஞ்சு நல்ல பேரு வாங்கிடுவா. பிள்ளைகளையும் அதே மாதிரி கண்டுசனா கொண்டு வந்தா. பிள்ளைகளுக்கு அவள அவ்வளாப் புடிக்கலன்னாலும், ஆஸ்டலு மேனேஜருகு அவல ரொம்பாப் புடிக்கும்.

சந்திரமதி அதுர்ந்து போயி ஒக்காந்துருந்தா. திருமலை ஆஸ்டலுக்கு வந்து சேந்த நாளு அவா கண்ணு முன்னால வந்துச்சு. நாலு வருஷத்துக்கு முன்னால, நண்டுக் குஞ்சி கெணக்கா வந்தான். அவுக பாட்டிதான் கொண்டுகிட்டு வந்தாக . கன்ணு ரெண்டும் துருத்திக்கிட்டு இருந்துச்சு. முன் மண்ட மயிரு நெத்தில உழுந்து கெடந்துச்சு. பல்லுகூட தெத்துனாப்புல இருந்துச்சு. கன்னமெல்லாம் ஒட்டிப்போயி மலங்க மலங்க முழுச்சுக்கிட்டு நின்னான். அவுக பாட்டியும் எலும்பும் தோலுமா நின்னாக. எடது கண்ணுல பூ உழுந்து வெளேர்னு இருந்துச்சு. வலது கண்ண சுருக்கிட்டுப் பாத்தாக. தன்ணி இல்லாமப் பாளம் பாளமா வெடிச்சுக் கெடக்குற நெலங்க கெணக்கா தோலெல்லாம் விறு ஓடிக் கெடந்துச்சு. பாட்டியோட கைய இறுக்கமாப் புடுச்சிக்கிட்டு நின்னான் திருமல. பாட்டி சொன்னாக, “ஏமா இவன் தாயத்த புள்ளமா; என்னாலயும் இவன வீட்டுல வச்சு வளக்க முடியலமா, ஒரு கண்ணு வள்ளுசாப் போச்சு. இன்னொரு கண்ணும் சரியா தெரியலே. எப்படியாச்சு இவன இங்க சேத்துப் படிக்க வைங்கம்மா. ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும்.”

“இவுக அப்பா இல்லியா பாட்டி?” சந்திரமதி கேட்டா.

“இருக்கான்மா. பாடைல போற பெய. அவனாலதாம்மா ஏம் மகா அநியாயமா இந்தப் பச்ச மன்ண உட்டுட்டு செத்துப் போனா; அதுல இருந்துதான் புள்ள இப்பிடிப் போனான்..” சொல்லிட்டு அழுதுச்சி பாட்டி.

“இவுகம்மா எப்பிடிச் செத்தாக? வேற புள்ளைக இல்லியா?”

“புருஷம் பொஞ்சாதி சண்டைல மண்ணென்னெய ஊத்தி கொளுத்திப்புட்டான்மா.. கட்டைல போற பெய. ஏங்கண்ணு முன்னாலியே பஸ்பமாயிட்டாம்மா.. நாம் பெத்த மகா.. ஏ வகுறு எரியுதும்மா.. பெத்த கொடலு எரிது.. இந்தப் பச்சப் புள்ளையும் அவா எருஞ்சு நின்ன கோலத்தப் பாத்து பயந்து அலறிட்டான். எல்லாம் போச்சு. இது ஒரு புள்ளதான். சேத்துக்கோமா.. இவுகப்பெ இன்னொருத்திய சேத்துக்கிட்டான். அந்தச் சிறுக்கி புள்ளைய பாக்க மாட்டாமா.. அதான் இங்க கூட்டியாந்தேன். மாட்டேன்னு சொல்லிடாதீங்க”. பாட்டி பேசி ஓஞ்சு போன மாதிரி திருமலய மடில வச்சிட்டு ஒக்காந்தாக.

“திருமலய சேத்து இப்ப நாலு வருஷம் முடுஞ்சு அஞ்சாவது வருஷமாச்சு. இத்தன வருஷத்துல இந்தப் பெய இப்படிபெ பேசுனது இல்லியே.. எத்தனையோ தடவ ஆஸ்டல உட்டு ஓடிப் போனவன புடுச்சு புடுச்சு கொண்டாந்து வச்சுத்தான் படிக்க வச்சோம். இப்ப எதுக்கு இப்பிடிப் பேசிட்டான். இம்புட்டுத் துணுச்சல் இவங்கிட்ட இருக்குதுனு இப்பத்தானெ தெரியுது..” சந்திரமதி யோசிச்சுகிட்டே இருந்தா.

திருமலய ஒன்னாங்கெளாசுல சேத்த புதுசுலேயே பள்ளிக்கொடம் முடுஞ்சதும் வீட்டுக்கு ஓடிப் போவான். அஞ்சாங் கிளாஸ் படிக்கிற ஆஸ்டலு பையங்க பின்னாலியெ ஓடிப் போயித் தூக்கிட்டு வந்துருவானுக. இப்பிடி பொழுதனிக்கும் ஓடவும் ஒரு நாளு சந்திரமதிட்ட ஒன்னாங் கெளாசு டீச்சர் சொன்னாங்க. “பாவம் ரொம்பச் சின்னப் பையனா இருக்கான். இந்த வருஷம் மட்டும் வீட்ல இருந்து வந்து படிக்கட்டும். பெறகு வேணும்னா ஆஸ்டல்ல இருக்கட்டும்.”

“அவுக வீட்ல ரொம்பாக கஷ்டம் டீச்சர். அம்மா கெடையாது பாட்டியும் பாவம்தான். அதான் இங்க இருக்கான். அவனோடெ நன்மைக்காத்தானெ பாக்கோம்”, சந்திரமதி சொன்னாள்.

“எடைல ஒரு தடவ வூட்டுக்கு விடுங்க. அப்புறம் சரியாகிடுவான்”, டீச்சர் சொன்னாங்க.

அடுத்த தடவ திருமல ஓடும்போதும் வழக்கம்போல பிள்ளைககிட்ட மாட்டிக்கிட்டான். பிள்ளைக தூக்கிட்டு வந்தாக. கையுங் காலும் ஒதறிக்கிட்டு கூப்பாடு போட்டு அழுதான். “திருமல..சரி இன்னைக்கு வேனும்னா நீ வீட்டுக்கு போயிட்டு நாளைலேர்ந்து ஆஸ்டலுக்கு வந்துடுறியா?”, சந்திரமதி கேட்டா.

திருமல மொதல்ல நம்பாதவங் கெணக்கா பாத்துட்டு பெறகு சரின்னு தலையாட்டுனான். எப்பிடியாச்சும் இங்கருந்து தப்புச்சு ஓடிரம்னு நெனச்சவனுக்கு இது புடுச்சிருந்தது. பைய எடுத்துகிட்டு வீட்டுக்குப் போக ரெடியானான்.

“நாளைக்கு கண்டிப்பா வந்துரனும் என்ன?” சந்திரமதி கேட்டதுக்கு வேகமாத் தலையாட்டிட்டு அதவுட வேகமா நடையக் கட்டுனான். சீக்கிரத்துல அந்த எடத்துலருந்து போயிரனும்ங்ற வேகத்துல ஓட்டமும் நடையுமா வீட்டுக்கு வந்து சேந்தான்.

சந்திரமதி எதிர்பார்த்தபடி மறுநாளு திருமல பள்ளிக்கொடத்துக்கு வரல. ரெண்டு நாளு கழுச்சு அவுக பாட்டி கூட்டிட்டு வந்தாக.

“சின்னப் புள்ளையாங்காட்டி வீட்டு நாவகத்துல ஓடியாந்துடுறான். இனி இப்பிடி வரமாட்டான். என்னயா, இருந்து படிக்கனுஞ்சாமி”, பாட்டி சொல்லி உட்டுட்டு போனாக.

அடிக்கடி ஓடுனாலும் திருமல படிப்புல கெட்டிக்காரனாத்தான் இருந்தான். எந்தக் கெளாசுலேயும் பெயிலாகாமெ அஞ்சாங் கெளாசு வந்துட்டான். அஞ்சாங் கெளாசு வந்தப் பெறவு கொஞ்சநாளு நல்லாத்தான் இருந்தான். பெறகு என்னாச்சோ, மறுபடியும் வீட்டுக்கு ஓட ஆரம்புச்சான். இப்ப வீட்டுக்கு ஓடுனாலும், பள்ளிக்கொடத்துக்கு ஒழுங்கா வந்து படுச்சான். ஆஸ்டலுக்குக்த்தான் போக மாட்டான். ஒன்னாங் கெளாசுல செஞ்ச மாதிரி, இப்ப யாரும் இவன வெரட்டி புடுச்சுக் கொண்டாந்து ஆஸ்டலுல வுட மாட்டாங்க. இவனே இப்ப அஞ்சாங் கெளாசு வந்துட்டதால யாரையும் தொடக்கூட வுடமாட்டான்,

ஒரு தடவ பள்ளிக்கொடம் போயி சந்திரமதி திருமலையக் கூப்புட்டுப் பேசுனா. “இங்க பாரு திருமல.. நீயி இப்பிடி ரொம்பா நாளு வாராமெ இருந்தீனா மேனேஜர் ஒம்பேர எடுத்திருவாரு. அப்புறம் என்ன செய்வே? நீ வந்தீனா, அஞ்சு முடுச்சப் பெறவு பக்கத்துல இருக்குற பெரிய பள்ளிக்கொடத்துல ஒனியச் சேத்துப் படிக்க வப்பாரு. வந்துருடா.. ஒங்க பாட்டி பாவம்டா.. என்ன, வர்ரீயா?”

சந்திரமதி சாந்தமாக் கேக்கவும், சரி வர்ரேன்னு சொல்லிட்டுப் போனான். அதுக்குப் பெறகு பள்ளிக்கொடத்துக்கே ரெண்டு நாளா வரல. மறுபடி தானா பள்ளிக்கொட வந்தான். இந்தத் தடவ பாட்டியும் கூட வந்தாக.

ரொம்ப புத்திமதி சொல்லி ஆஸ்டலுல உட்டுட்டுப் போனாக. ஒரு வாரம் போல இருந்தவ, இப்ப மறுபடி ஆரம்புச்சுட்டான்.

போன ஞாயிற்றுக்கெழமதான் அப்பிடிப் பேசிட்டான். அதுலருந்துதான் சந்திரமதி கொழம்பிப் போனா. வழக்கம்பொல காலச் சாப்பாட்டுக்குப் பெறகு பிள்ளைகள்ளாம் தோட்டத்துல புல்லு புடுங்கிட்டு இருந்தாக. சமயம்பாத்து திருமல ஓடும்போது மாட்டிக்கிட்டான். சந்திரமதிட்ட கொண்டாந்து உட்டாக. இந்தத் தடவ சந்திரமதிக்கே கோவம் வந்துருச்சு. ஒரு குச்சிய எடுத்துக்கிட்டு வந்தா. ரெண்டு அடி முதுகுல வச்சு¢ட்டு கோவமா கேட்டா,

“எத்தன தடவதாண்டா நாங்க பொறுமையா இருக்க முடியும்? இங்க என்னடா கொற ஒனக்கு? ஏண்டா ஓடுன?” திருமல எதுவுமே பேசல. ஆனா வழக்கம்போல இல்லாமெ நெஞ்ச நிமித்திக்கிட்டு திமிர நின்னுகிட்டு மொறச்சு பாத்தான். அவெ நின்ன தோரணய பாக்கையில சந்திரமதிக்கு ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு. கொஞ்சங் கோவந் தணுஞ்ச கொரலுல கேட்டா, “சொல்லுடா.. ஒனக்கு என்ன புடிக்கல? எதுக்காக இப்பிடி அடிக்கடி ஓடுற? நீ நல்லாதானெ படிக்கெ. அப்புறம் எதுக்கு இந்த மாதிரிச் செய்றெ?”

அமைதியா நின்ன திரும கோவமாக் கத்துனான். “எனக்குப் பள்ளிக்கொடம் புடிக்கிது; ஆஸ்டலுதான் புடிக்கல. நானு வீட்டு இருந்து வந்தே படிக்கேன்”.

“தெனமும் ரெண்டு மூணு கிலோமீட்டர் நடப்பியா?”

“நடப்பேன்”

“ஆஸ்டலு ஏன் புடிக்கல? ஒனிய இங்கெ என்ன செய்றாக?”

திருமல பேசல.

“சொல்லுடா சாப்பாடு புடிக்கலயா?”

“இல்ல. சாப்பாடு புடிக்குது.”

“அப்புறம்?”

“ஆஸ்டலுதான் புடிக்கல”

“பெறகு?”

“தெனமும் காலங் காத்தாலெ குளுருல பச்சத் தண்ணில குளிக்கச் சொல்றீக. அது புடிக்கல.”

“வேற என்ன புடிக்கல?”

“தூங்க உடாமெ எழுப்பி உட்டு சாமி கும்புடச் சொல்றீக.”

“ஆமா, ஒங்க வீட்லனாலும் காலைல எந்துருச்சு பச்சத் தண்ணில குளுச்சுட்டுத்தானெ பள்ளிக்கொடம் போகனும்? ஒங்க பாட்டி ஒனக்கு அப்படியே சுடுதன்ணி வச்சு குடுக்காகளோ?”

“வீட்லன்னா நானு இஸ்டப்பட்ட நேரம் எந்திருப்பேன். இஸ்டப்பட்ட நேரம் குளிப்பேன்.”

“அதுக்காகவா நீ வீட்ல இருக்கணும்ங்ற? ஒன்னுங் கெடையாது, வீட்ல இருந்தா இஸ்டத்துக்கு எங்குட்டாவது போயி டி.வி பாத்துக்கிட்டுத் திரியலாம். அதுக்குத்தான் போகனும்ங்றெ.”

“ஆமா டி.வி நாடகம் பாக்கலாம்.”

“இங்கயுந்தானடா டி.வி பாக்க உடுறோம்.”

“எங்க உடுறீகெ? ஒங்களுக்குப் புடுச்சத மட்டும் போட்டுக்கிட்டுப் பாக்குறீக”

“ஒனக்குச் சினிமா பாக்கனும். அதான் செய்திகள்ளாம் பாக்கச் சொன்னாப் புடிக்காது.”

“இல்லயே. வீட்ல சினிமாவும் பாப்பேன். செய்தியும் பாப்பேன்.” கோவமா கத்துனான்.

பொறுமையா பேசிக்கிட்டிருந்த சந்திரமதி “செய்தி பாத்துக் கிழிச்சே..எதுத்து எதுத்துப் பேச பழகிட்டே.. ஒன்னாங் கெளாசுல சேரும்போது கொரங்குக்குட்டி கெணக்கா வந்து நின்ன! இப்ப வளந்துட்டிலெ. பேசுவெ” சொல்லிட்டெ குச்சிய எடுத்து அடிக்கப்போனா.

குச்சிய கைல புடுச்சுட்டு திருமல கோவமா சொன்னான், “எனிய அடிக்காதீங்க… இனிமேபட்டு அடிச்சா.. அவ்வளவுதான்”

“என்னடா மெரட்டுறியா”ன்னு கேட்டுகிட்டு குச்சிய உருவித் திரும்பவும் அடிக்க ஓங்குனா.

“நானு திரும்பவும் சொல்றேன். எனிய அடிக்காதீங்க. நான் ஒன்னும் முன்னமாதிரி பயந்துகிட்டு கெடக்கல. அடிச்சா அவ்வளவுதான். ஆமா சொல்லிட்டேன்”, ரொம்ப சீரியஸா சொன்னான்.

திருமல நின்ன தோரணையும் பேசுன வெவரத்தையும் பாத்த சந்திரமதிக்கே என்னமோ மாதிரி ஆகிருச்சு. அதிர்ச்சியடைஞ்சி அப்படியே நின்னா. மேற்கொண்டு என்னத்த, எப்பிடிச் சொல்லி இவன வழிக்குக் கொண்டு வாரதுன்னு ஒன்னுமே புரிபடலே. கொஞ்சநேரம் எதுவுமே சொல்லாமே இருந்தா. பெறகு கோவப்படாம சொன்னா, “இனிமே நீயி வேணும்னா கொஞ்சம் லேட்டா எந்துச்சு லேட்டா குளி. ஜெபத்துக்குக் கூட வரவேண்டாம்.”

“வேண்டாம், நானு வீட்ல இருந்தே படிக்கேன்.”

“டி.வில நாடகம்கூட பாத்துக்கோடா.”

“தேவையில்ல. நானு வீட்ல இருந்தே படிப்பேன்.”

“அங்கன்னா வெறும் சினிமாதானடா பாப்பே. செய்தி பாக்கனும்டா நாலு எடத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கனும்”

“நானு ஊரு டி.விலெ செய்தி பார்ப்பேன்.”

“செய்தி பார்த்துக் கிழிச்சே. எங்க போன வாரம் கேட்ட ஒரு செய்தியச் சொல்லு பாப்போம்.”

ஒடனே சொன்னான், “அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மேலெ குண்டு போடுது.”

“எதுக்குப் போடுது?”

“பின்லேடன்ற ஆளப் புடிக்க.”

வாயடைச்சுப் போன சந்திரமதி எதுவும் பேசத் தோணாம நின்னா. சொல்றதுக்கெல்லாம் பட்டுபட்டுனு பேசறதப் பாத்து எருச்சலடஞ்சு போன சந்திரமதி எடுத்த எல்லா முயற்சிலயும் தோத்து போன மாதிரி ஒணந்தா.

கடைசியா கேட்டா, “நீ இங்க இருந்தீனா ஒனக்கு எல்லா வசதியும் கெடைக்கும்லெ.. இப்ப நீ போட்டிருக்க பனியன் கூட இங்க குடுத்ததுதானே.”

இதக் கேட்ட ஒடனே மடமடன்னு பனியன கழட்டிக் கீழ போட்ட திருமல, “இந்தாங்க ஒங்க பனியன், எனக்கு வேண்டாம். நாம் போறேன்” சொல்லிவிட்டு உறுதியா நடந்து வெளிய போனான். சந்திரமதி அவனத் தடுக்கல. மறுபடி அதுர்ந்து பொயி அப்பிடியே உக்காந்துருந்தா.

– தினமணி ஈகைப் பெருநாள் மலரில் (2001) வெளியான சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *