ட்யூஷன் வாத்தியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 6,592 
 

பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

காலை பத்து மணிக்கே வெயில் உக்கிரமாக தகித்தது.

மாணிக்கம் தன்னுடைய பலசரக்கு கடையின் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான். வேலைசெய்யும் மூன்று கடைப் பையன்களும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு வயதானவர் கடைக்கு வந்து, “ஒருகிலோ துவரம்பருப்பு கொடுங்க” என்றார். மாணிக்கம் அவரை உற்றுப் பார்த்தான். அட நம்ம சரவணன் வாத்தியார்….ட்யூஷன் வாத்தியார். பார்ப்பதற்கு மிகவும் ஏழ்மையில் இருந்த மாதிரி தோன்றியது.

மாணிக்கம் இன்று ஐந்து பெரிய மளிகைக் கடைகளுக்கு சொந்தக்காரனாக இருப்பதற்கு ஒருவிதத்தில் சரவணன் சார்தானே முழு முதற்காரணம்….

“சார்…சுகமா இருக்கீயளா? என்னைத் தெரியுதா?” குரலில் மரியாதையுடன் கேட்டான். .

சரவணன் சார், உற்றுப் பார்த்துவிட்டு, “யாரு தெரியலையே…” என்றார்.

“சார் எம்பேரு மாணிக்கம் முப்பது வருஷத்துக்கு முன்னால பாளை தூய சவேரியார் பள்ளியில் படித்தேன். உங்ககிட்டதான் ட்யூஷன் படித்தேன்…என்னை ஞாபகமில்லையா?”

“ஓ ஆமா…ஆமா…நீ மாணிக்கம் இல்ல. நல்லா ஞாபகம் இருக்கு, எப்படி இருக்க மாணிக்கம்? இந்தக் கடை உன்னோடதா?”

“ஆமா சார் மொத்தம் ஐந்து பெரிய கடைகள் வச்சிருக்கேன், ரொம்ப நல்லா போகுது. எல்லாம் உங்க ஆசீர்வாதம். நீங்க அடிச்சு என்னை திருத்தியதனாலதான் நான் இன்னிக்கி நல்லா இருக்கேன் சார்.”

கடையை விட்டு வெளியே வந்து அவர் கால்களை மரியாதையுடன் தொட்டுக் கும்பிட்டான். அவன் கண்கள் கலங்கின.

பருப்பு மட்டுமின்றி சாருக்கு வேண்டிய சாமான்கள் அனைத்தையும் இலவசமாக கொடுத்து அனுப்பினான்.

இரவு வீட்டுக்கு வந்தவன், தூக்கம் வராமல், ட்யூஷன் படிக்கும்போது தான் அத்துமீறி நடந்து கொண்டதையும், அதனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் எண்ணி வெட்கினான். அடுத்தமுறை சாரிடம் நேரில் மனம்விட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

அந்தச் சோதனையான வருடங்களை நினைத்துப் பார்த்தான்….

சிறுவயதில் படிப்பு அவனுக்கு எட்டிக்காயாக கசந்தது. ஒவ்வொரு வருடமும் ட்யூஷன் வைத்துக்கொண்டு பாஸ் செய்துவிடுவான். இரண்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே அவனுடைய அப்பா அவனுக்கு ட்யூஷன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

ராத்திரியில் வீட்டில் படிக்க வேண்டிய பாடங்களை, வாத்தியாரின் வீட்டிற்குச் சென்று படிக்கிற அவஸ்தைதான் ட்யூஷன்.

ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கூடம் துவங்கி புதிய புத்தகம் கொடுத்ததும், புது வாத்தியாரிடம் முதல் வேலையாக ட்யூஷன் படிப்பதற்கு சேர்ந்து விடுவான் மாணிக்கம்.

இந்த ட்யூஷன்கள் தினமும் மாலை இரண்டு மணி நேரங்களுக்கு நீடிக்கும். நடுவில் இடைவேளை பத்து நிமிடங்கள் உண்டு. அந்த இடைவேளையின்போது வாத்தியாரும் அவருடைய சாப்பாட்டை முடித்துவிட்டு சுகமாக பல்குத்த ஆரம்பித்து விடுவார். பசங்களை விசேஷமாகக் கவனித்து பாடம் எல்லாம் சொல்லித் தந்துகொண்டிருக்க மாட்டார். அவர் பாட்டுக்கு உட்கார்ந்திருப்பார் அல்லது ஈஸிச்சேரில் சாய்ந்து தூங்கி வழிந்து கொண்டிருப்பார். மாணவர்களும் அமைதியாக புத்தகத்தில் தலை குனிந்திருப்பார்கள். விழுந்து விழுந்து படித்துக் கிழித்து விடமாட்டார்கள். .

அதான் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்கிற பயம்தான் யாருக்கும் கிடையாதே!? ட்யூஷன் படிக்கிற பையன்கள் யாரும் பரிட்சையில் பெயிலானதாக சரித்திரமே கிடையாது. அதுஒரு எழுதப்படாத ஒப்பந்தம். பெயிலாகிவிட்டால் ட்யூஷன் படித்தும் பெயிலாகிவிட்டானே என்று அந்தப் பையனின் அப்பா பெரிய சண்டைக்கு அல்லவா வந்துவிடுவிடுவார்? அப்புறம் அடுத்த வருஷம் எந்தப் பையனும் ட்யூஷன் வரமாட்டானே? அதன் பிறகு வாத்தியாரின் மாத உபரி வருமானம் என்னாவது?

இம்மாதிரி ஒவ்வொரு வருடமும் மாணிக்கம் ட்யூஷன் வைத்து, தொட்டுக்கோ தொடச்சிக்கோன்னு மதிப்பெண்கள் எடுத்து ஒப்பேற்றிக் கொண்டிருந்தான்.

முப்பது வருடங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு பதினைந்து வயது. விடலைப் பருவம்.

பெண்களைப் பார்க்கவும், பேசவும் மனசும், உடம்பும் அலைபாயும் வயது. அதுவும் மாணிக்கம் நல்ல வளர்ச்சி. புஷ்டியான உடம்பு. டிரவுசரையும் தாண்டி புசுபுசுவென மயிருடன் திண்ணமான தொடைகள். அரும்ப ஆரம்பித்திருந்த மீசை. அவனுக்கு பெண்கள்மீது ஏராளமான ஈர்ப்பு அதிகரித்திருந்த காலகட்டம்.

அப்போதுதான் அவன் ட்யூஷன் வாத்தியாராக சரவணன் சார் இருந்தார். தனி வீட்டில் மனைவியுடன் குடியிருந்தார். சாருக்கு குழந்தைகள் கிடையாது. தினமும் அவர் வீட்டுக்கு மாலை ஆறரை முதல் எட்டரைவரை ட்யூஷன் போவான். ஞாயிறுகளில் மட்டும் காலை பத்துமுதல் மதியம் பன்னிரண்டுவரை ட்யூஷன்.

சரவணன் சார் வீட்டில் அவனுக்கு மிகவும் பிடித்த விஷயம் அவருடைய அழகிய மனைவி புஷ்பா. சிவந்த வளப்பமான உடம்பு. வட்ட முகத்தில் நேர்த்தியான காட்டன் புடவையில், சிரித்த முகத்துடன் அவளைப் பார்க்கும்போது அவனுக்கு ஒரு தேவதையைப் பார்ப்பதுபோல் இருக்கும். சார் ட்யூஷனில் தூங்கும்போது அவன் புஷ்பாவை வெறித்துப் பார்ப்பான். இந்த உலகத்திலேயே மிக அதிர்ஷ்டசாலி சரவணன் சார்தான் என்று உருகுவான். கடவுள் தன்னிடம் வரம் கேட்டால், புஷ்பாவை உடனே மணந்துகொள்ள வேண்டும் என்கிற ஒருவரம் மட்டும் போதும் என்று நினைத்துக் கொள்வான். புஷ்பாவை நினைத்து நினைத்து தினமும் ஏங்க ஆரம்பித்தான்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை…

பத்துமணிக்கு பதிலாக ஒன்பதரைக்கே ட்யூஷன் சென்றுவிட்டான். வீட்டில் புஷ்பா மட்டும்தான் நைட்டியில் இருந்தாள். சார் எதற்கோ வெளியே சென்றிருந்தார். வேறுயாரும் ட்யூஷன் வரவில்லை. புஷ்பா அவனை உட்காரச்சொல்லிவிட்டு, எண்ணை தேய்த்திருந்த தலைமுடியை தூக்கிகட்டி கொண்டை போட்டுக்கொண்டு, குளிப்பதற்காக கதவை சாத்திக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.

மாணிக்கத்துக்கு மனசும் உடம்பும் பரபரத்தது. வீடு அமைதியாக இருந்தது. சுவர்க் கடிகாரத்தின் சத்தம்மட்டும் கேட்டது. சமையலறையில் கறிக் குழம்பு காஸ் அடுப்பின் சிம்மில் கொதித்துக்கொண்டிருந்தது. வாசனை தூக்கியடித்தது.

சற்று தைரியத்துடன் எழுந்து ஓசைப்படாமல் மெதுவாக பாத்ரூமின் தகரக் கதவு ஓட்டையின் வழியாகப் பார்த்தான். உடம்பு முறுக்கேறி மனம் திக் திக்கென அடித்துக் கொண்டது. எவ்வளவுநேரம் பார்த்தானோ தெரியாது….திடீரென்று அவன் புடதியில் ஓங்கி ஒரு அறை விழுந்தது.

திரும்பிப் பார்த்தால் சரவணன் சார் ஆக்ரோஷத்துடன் நின்று கொண்டிருந்தார். அவன் காதை முரட்டுத்தனமாக திருகி வாசலுக்கு இழுத்துச் சென்றார். தன் ஸ்கூட்டரில் அமரவைத்து நேராக அவன் வீட்டிற்கு அழைததுச்சென்று அவன் அப்பாவிடம் நடந்த அசிங்கத்தைச் சொல்லி ஒப்படைத்தார். அவனுடைய அப்பாவேறு அவர் பங்குக்கு வாத்தியாரின் முன்னிலையிலேயே பெல்டால் மாணிக்கத்தை விளாசினார்.

அத்துடன் மாணிக்கத்தின் படிப்பு நின்றுபோனது. ஒரு ஆறுமாதம் அவனை மதுரைக்கு கண்காணாமல் அனுப்பி வைத்தனர். அதன்பிறகு அப்பா அவனுக்கு தன் பலசரக்கு கடையிலேயே வேலை கற்றுக்கொடுத்து, சிலவருடங்களில் அவனுக்கு ஒருகடை ஆரம்பித்துக்கொடுத்து நல்ல இடத்தில் திருமணமும் செய்துவைத்தார்.

மாணிக்கம் தற்போது ஒருநல்ல கணவன். மூன்று குழந்தைகளுக்கு பொறுப்பான அப்பா. ஐந்து பலசரக்கு கடைகளுக்கு மொதலாளி. சமூகத்தில் ஒரு மரியாதையான அந்தஸ்து.

அடுத்த வாரத்தில் ஒருநாள் சரவணன் சார், கடைக்கு சாமான் வாங்க வந்தார்.

“டேய் சார மொதல்ல கவனிங்கடா” என்று குரல் கொடுத்துவிட்டு, தணிந்த குரலில் “சார் புஷ்பா மேடம் எப்படியிருக்காங்க?” என்றான்.

சார் சோகத்துடன், “அவளுக்கு அஞ்சு வருஷமா கேன்சர்…ரொம்ப கஷ்டப்படறா மாணிக்கம். எவ்வளவோ செலவழிச்சு பாத்துட்டேன். ஒண்ணும் க்யூர் ஆகல.” என்றார்.

“மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்..” என்றவன் அவரை தன் காரில் அழைத்துக்கொண்டு .அவர் வீட்டுக்குச் சென்றான்.

வீட்டில் புஷ்பா ஒரு கட்டிலின்மீது கிழிந்தநாராக படுத்திருந்தாள். கன்னங்கள் வற்றி, கண்கள் குழி விழுந்து, தலைமயிர் அவ்வளவும் கொட்டிப்போய்… அவளை அந்த நிலையில் பார்த்த மாணிக்கம் ஒடிந்து போனான். .

‘வாழ்க்கையில் அழகு என்பது நிரந்தரமல்ல…அழகும், ஆரோக்கியமும் கடவுளின் கையில்’ என்று நினைத்தான்.

சார், “கீமா தெரபி கொடுத்து கொடுத்து அவள் தலைமுடி அவ்வளவும் கொட்டிப்போச்சு. அவ இப்ப இருப்பது டெர்மினல் இல்நெஸ்” என்றார்.

“சார்…தப்பா நினைக்காதீங்க. உங்களால நான் இப்ப நல்ல நிலைல இருக்கேன். இனிமே நீங்க கடைக்கு வராதீங்க. உங்களுடைய மாதச் சாமான்கள் அவ்வளவையும் என்னோட கடைப்பையன் உங்க வீட்டுக்கு எடுத்து வருவான். நீங்க எங்கயும் வெளியே போகாம மேடத்தை அருகில் இருந்து பாத்துக்குங்க….வேற எது வேண்டுமானாலும் எனக்கு தயங்காம போன் பண்ணுங்க.”

சார் அவன் கைகளைப்பிடித்து “ரொம்ப தேங்க்ஸ் மாணிக்கம்” என்றார்.

அவர் குரல் உடைந்து, கண்களில் நீர் முட்டியது.

அடுத்த ஒரு மாதத்தில் புஷ்பாமேடம் மரித்துப்போனாள்.

மாணிக்கம்தான் உடனிருந்து ஈமக்கிரியைகளுக்கான ஏற்பாட்டை கவனித்தான்.

மேடம் சாவுக்கான பதிமூன்றாம் நாள் விசேஷம் முடிந்ததும், சரவணன் சார் “நான் இனிமே திருநெல்வேலில வாடக கொடுத்துக்கிட்டு தனியா இருக்க வேண்டாம் மாணிக்கம்…என்னோட சொந்த ஊரான மார்த்தாண்டம் போகிறேன்” என்றார்.

“சரி சார்…எப்ப வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணுங்க…” என்றவன் தயங்கியகுரலில் “மேடத்துக்கிட்ட என் சிறுவயது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன் சார்…ஆனா அதுக்குள்ளே அவங்க….”

“யு டோன்ட் ஹாவ் டு பீல் கில்டி மாணிக்கம். நல்லவேளை நீ அவளிடம் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை.”

“ஏன் சார்?”

“நான்தான் அன்று உன்னை புடதியில் அடித்து, காதைமுறுக்கி வெளியே இழுத்து வந்துவிட்டேனே….அவளுக்கு எதுவுமே தெரியாது. நானும் அவளிடம் அதைப்பற்றி எதையும் சொல்லவில்லை மாணிக்கம்.”

“…………………”

“பொதுவாக என்னிடம் ட்யூஷன் படிக்கும் மாணவர்களைப் பற்றி எதுவுமே நான் அவளிடம் பேசமாட்டேன்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *