சோறு ஆறுதுங்க
நடராஜன் தன் போட்டோ ஸ்டுடியோவின் மாடி வராந்தா குட்டை கைப்பிடிச் சுவரில் சாய்ந்து வண்ணம் தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அன்று காலையிலிருந்தே அவனுக்கு வேலை எதிர் பார்க்காத விதமாய் ஒன்று மாற்றி ஒன்று சரியாய் இருந்தது. முதல் நாள் கல்யாண முகூர்த்த நாள் போலிருக்கிறது. மூன்று புதுமண ஜோடிகள், ஒரு பள்ளி தோழியர் கூட்டம், அம்மணமாய், அரை நிக்கருடன் என்று பல கோணங்களில் எடுக்கப்பட்ட குழந்தை ஒன்று என வாடிக்கைக்காரர்களின் பட்டியல் நீண்டு போனது.
பத்து மணி அளவில் ஸ்டுடியோவைத் திறந்தவனுக்கு மதிய உணவுக்குக்கூட நேரம் கிடைக்கவில்லை. மணி ஐந்தை நெருங்கும் இப்போதுதான் ஓய்வு கிடைத்ததால், வராந்தா சுவரில் சாய்ந்து நின்று சிகரெட்டை ஊதிய பொழுதில் தெருவையும் குனிந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
நடராஜனுக்கு அந்த டவுன் சொந்த ஊர் இல்லை, டவுனிலிருந்து இருபது மைல் தொலைவிலுள்ள கிராமத்தில் தான் அவன் பிறந்தது; வளர்ந்தது.
அப்பாவுக்கு விவசாயம் தொழில்…
அவன் ஒரே மகன் – சகோதரிகள் இருவர்.
எஸ்.எஸ்.எல்.ஸி.யை இரண்டு தடவை முற்றுகை இட்ட பிறகும் அதைத் தாண்ட முடியாமல் போனபோது, இவனுக்கு படிப்பில் நஞ்சம் இருந்த ஒட்டுதலும் மறைந்து போனது.
‘பேசாம என்னோட வயலுக்கு வந்துடுடா’ என்றார் தந்தை.
இவனுக்கு அதில் விருப்பம் இல்லை. சின்ன வயசிலிருந்தே சினிமா மோகம் உண்டு, எக்கச்சக்கமாய். அதன் காரணமாய், ஒரு நல்ல நாளில் ஒருத்தரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் கிடைத்த இருநூறு ரூபாயைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிப் போனான்.
நண்பன் ஒருவனிடம் உதவியோடு ஒரு ஸ்டுடியோவில் எப்படியோ புகுந்துவிட்டான்…
செய்யக்கூடாத வேலைகளையெல்லாம் செய்து, ஒரு வழியாய் காமிரா உதவியாளன் என்ற கௌரவமான அந்தஸ்தை அவன் அடையும்போது, வருஷங்கள் பல ஓடி விட்டன.
இருபத்தி ஆறு வயசு ஆவதற்குள், வேண்டாத பழக்கங்கள், அனுபவங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் நடராஜன் ஒரு கை பார்த்துவிட்டான்.
இரண்டு காசு கையில் புலங்கினதும், இனிமேல் சொந்த ஊருக்குப் போய் பெற்றோரைப் பார்க்கலாம் என்ற தைரியம் பிறந்ததும், சில்க் ஜிப்பாவும், ஜரிகை வேஷ்டியும், கூலிங் கிளாசுமாய் டாக்சியில் ஊருக்குப் போய், வீட்டு வாசலில் இறங்கினான்.
செத்துப் போய்விட்டான் என்று நினைத்துவிட்ட மகன் வந்து சேர்ந்ததில் தாய்க்கு ஏக சந்தோஷம்.
“உன் தங்கச்சிகளுக்கு கல்யாணம் ஆகி அவுங்க குடியும் குடுத்தனமுமாய் இருக்காங்கடா – அப்பாவுக்கு வயசாச்சி – எனக்கும் தள்ளலை – வீட்டோட வந்து நிலபுலனைக் கவனிச்சிக் கோடா மகனே” என்று தாய் அழுத கண்ணீருக்கு என்ன சக்தி இருந்ததோ, மறுபடி ஊருக்குப் போன நடராஜனால் பழைய வேளையில் பொருந்தி இருக்க முடியவில்லை.
கிராமத்து நிலபுலங்களின் உரிமையாளன் பட்டம், சௌகரியங்கள், சம்பாத்தியம் எல்லாம் வேண்டும்; ஆனால் அங்கேயே இருந்து மன்றாட முடியாது – என்ன பண்ணுவது?. நடராஜன் யோசித்தான்.
கிராமத்துக்கு இருபது மைல் தள்ளி இருந்த டவுனில், தன் இதுநாள் அனுபவத்தைக் கொண்டு ஒரு போட்டோ ஸ்டுடியோ திறப்பதென்று முடிவு செய்து, அதையே செயலாக்கினான்.
அம்மா ஐயாயிரம் ரூபாய் கொடுத்தாள் – இவனிடம் பாக்கி இருந்தது.
ஜனசந்தடி மிகுந்த அந்தத் தெருவில், ஒரு மாடிப் போர்ஷனை வாடகைக்கு எடுத்தான் – முன்பக்கம் பெரியதாய் இரண்டு அறைகள் – முதல் அறை பகல் நேரத்தில் வரவேற்பு, ஆபீஸ் அறை – இரவில் படுக்கை அறை – பின்னால் இருந்தது ஸ்டுடியோ – கூடவே இருந்த ஒரு சின்ன அறையை டார்க் ரூம் ப்ளஸ் பாத்ரூமாக அமைத்தான். வராந்தாவில் ‘அன்னை போட்டோ ஸ்டுடியோ’ என்று பல வர்ணங்களில் கோட்டை எழுத்தில் எழுதின போர்டை மாட்டினான். தொழில் சூடு பிடித்து விட்டது-
சனிக்கிழமை இரவு கிளம்பி கிராமத்துக்குப் போய்விட்டு, திங்கள் காலை வந்து விடுவான். வாரத்தில் இவன் மற்ற நாட்கள் தங்குவது ஸ்டுடியோவில் தான்; இவனுடைய மற்ற நடவடிக்கைகளும் ஸ்டுடியோவில் தான்.
அம்மா, ‘எப்படா தம்பி ஒரு மருமகளைக் கொண்டுவரப் போறே’ என்னும்போதெல்லாம் இவனுக்கு வேடிக்கையாய் இருக்கும்-
‘வீட்டு வாசலில் நல்ல கறந்த பால் கிடைகிறது. அதை விட்டுவிட்டு எதற்காக ஒரு பசுவை வாங்கிக் கட்டி மாரடிக்க வேண்டும்’ என்று சென்னை சினிமா நண்பன் ஒருவன் சொல்லுவது நினைவிற்கு வர, தாய் மருமகள் பேச்சை எடுக்கும் போதெல்லாம், நடராஜன் தனக்குள்ளேயே சிரித்துக்கொள்வது வழக்கம்.
சிகரெட் அடி வரைக்கும் புகைந்துவிட்டதால், ‘சுள்’ என்று சுட கையை உதறிக்கொண்டான் நடராஜன்.
இரண்டு கைகளையும் உயர தூக்கி உடம்பை முறுக்கி ஒரு சோம்பல் முறித்தவன், பக்கத்து வீட்டு வாசலை எதேச்சையாய்ப் பார்த்தான் -
வாசலை தெளித்துவிட்டு ஒரு பெண் குனிந்து கோலம் போடுவது அழகாய் கண்ணில் தெரிந்தது -
அவள் குனிந்திருந்த வாகு -
அவள் இளமை -
வாளிப்பான உடல் -
இது யார்? இவள் இதுவரை பார்த்தது கிடையாதே?
ஆவல் எழ உள்பக்கம் திரும்பி ‘கணேசா’ என்று கத்திக் கூப்பிட்டான் – உள்ளே காமிராவைத் தட்டு துடைத்துக் கொண்டிருந்த கணேசன் – பதினெட்டு வயது அஸிஸ்டென்ட் – வெளியே வந்தான்.
‘யார்ரா அது?’
‘எது?’ என்பதுபோல சுவரிடம் வந்து குனிந்து பார்த்தான் கணேசன்.
“ஓ, அதுவா – அவுங்க வீட்டுப் புது வேலைகாரி – சனிக்கிழமைலேந்து வேளைக்கு வர்றா-”
சனிக்கிழமை நிலத்தில் நாற்று நட்டதால் நடராஜன் முற் பகலிலேயே கிராமத்துக்குப் போய்விட்டான் – அதுதான் பார்க்க முடியவில்லையா?
“ஆள் எப்படி?”
கணேசன் சென்னையில் நடராஜன் வேலை பார்த்த ஸ்டுடியோவில் லைட்பாயாக இருந்தவன் – எல்லாம் அத்துப்படி – இந்த போட்டோ ஸ்டுடியோவை ஆரம்பித்த நாளாய், நடராஜனுக்குப் பக்கபலமாய் இருப்பவன்.
“தெரியாதுங்க – அதுங்கிட்டே நா பேச்சு கொடுக்கலை-”
குனிந்து இன்னொருமுறை அவளைப் பார்த்தான் நடராஜன் -
“இன்னிக்குக் கூட்டிட்டு வர முடியுமானு பாரேன்”
தலையை ஆட்டிவிட்டு கணேசன் உள்ளே போய்விட்டான்.
அவர்கள் நடுவில் அதிகம் பேசத் தேவையில்லை. கோடி காட்டினால் புரிந்துகொள்ளக்கூடிய பழக்கம்தான் -
***
இரவு மணி எட்டிருக்கும் -
ஸ்டுடியோ மூடியாகி விட்டது -
தெருவில் சந்தடி அடங்கத் தொடகிவிட்டது -
முன்னறையில் இருந்த சோபா கம்பெட்டில் அமர்ந்து, அன்றைய தினக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்த நடராஜன், ஆள் அரவம் கேட்டுத் திரும்பினான்.
மாலை ஏழு மணிக்கு வெளியே போன கணேசன் திரும்பி விட்டான் -
பின்னால் அவள்தான் -
‘பயப்படாம வா’ என்று சொல்லி கணேசன் பின்னால் வந்தான்.
“எல்லாம் சொல்லி கூடியந்திருக்கேன்” என்றவன் இவனிடம் பத்து ரூபாய் என்பதைப் போல் சைகை காட்டினான்.
மலிவுதான் -
அவள் ஓரமாய் நின்றிருந்தாள்.
“உட்காரு” என்றான் -
“பரவாயில்லிங்க” என்றால் அவள்.
புதுசா? பழக்கமில்லையா?
ஒருசில நிமிஷங்கள் மௌனமாகவே மறைந்தது -
“ஏதாவது சாப்பிடறயா?”
அவள் தலையை நிமிர்த்திப் பார்த்தாள் – கண்களில் பளபளப்பு.
அவளுக்குப் பசியென்று நடராஜனுக்குப் புரிந்து போனது.
“என்ன வேணும்?”
“………”
“சும்மா சொல்லு…பயப்படாதே…”
தயங்கிவிட்டு அவள் சொன்னாள் -
“பிரியாணிங்க” -
நடராஜன் கணேசனிடம் பணம் கொடுத்து பிரியாணி இரண்டு பொட்டலமும், மல்லிகைப் பூவும் வாங்கிவரச் சொல்லி அனுப்பினான் -
கணேசன் போய்விட்டான்.
“அவன்தான் போயிட்டானே – இப்ப உட்காரேன்…”
அவள் உட்கார்ந்தாள்.
“உம் பேரு என்ன?”
“மல்லிகா”
கிட்டத்தில் பார்க்கும்போது அவள் நன்றாகவே இருந்தாள். நல்ல இளமை. பகலில் பார்த்த புடவையை மாற்றிவிட்டு சுமாராய் ஒன்றை உடுத்தி இருந்தாள் – வயசு இருபதுக்குள்தான் இருக்கும், தளதளவென்று இருந்தாள் – வீட்டு வேலை செய்வதன் காரணமாகவோ என்னவோ, கை, கால், விரல்கள் அழுக்கை இருந்தன. அவளிடம் காணப்பட்ட ஆளுக்கு, தளப்பிசுக்கு நடராஜனுக்கு பிடிக்கவில்லை -
“உள்ளே குளிக்கிற அரை இருக்கு – அங்கேயே சோப்பு, ஜாலம் இருக்கு – போய் குளிச்சிட்டு தலை சீவிட்டு வரியா?”
அவள் தலையை ஆட்டிவிட்டு, மெதுவாய் எழுந்து உள்ளே சென்றாள்.
பத்து நிமிஷங்கள் ஆகிருக்கும் -
கணேசன் வந்துவிட்டான்.
“சரி – நீ போ – அப்புறமா வா” என்று அவனை அனுப்பினான் நடராஜன்.
மல்லிகையை பிரித்து முகர்ந்தான்.
பிரியாணிப் பொட்டலங்களை எடுத்து மேஜை மேல் வைத்தான்.
ஓரிரு நிமிஷத்தில் மல்லிகா வெளியே வந்தாள் -
ஆளுக்கு நீங்கி, சோப்பின் மனம் வீசியதில் அவளிடம் கவர்ச்சி கூடி இருந்தது.
“உட்காரு”
உட்கார்ந்தாள்.
“குளிச்சியா?”
“ம்” -
“பிரியாணி சாப்பிடறயா?”
“ம்” -
அவன் ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தான் -
பிரியாணி நல்ல சூடாக இருந்தது -
பொட்டலத்தைப் பிரித்து மல்லிகா இரண்டு வாய் போட்டுக் கொண்டாள் – பிறகு ‘அதுவும் எனக்குங்களா?’ என்று இன்னொரு பொட்டலத்தைக் காட்டிக் கேட்டாள்.
பாவம் – நல்ல பசி போலிருக்கிறது -
“ஆமாம் – எடுத்துக்க – ”
இரண்டாவது பொட்டலத்தைப் பிரித்த மல்லிகா, முதல் பொட்டலத்தில் இருந்த பிரியாணியையும் அதிலேயே கொட்டி, அழகை கட்டி காகிதத்தை இறுக்கிக் கட்டினாள்.
பிறகு நடராஜனைப் பார்த்து, “என்னை சீக்கிரம் அனுப்பிடுங்க-பிரியாணி ஆறுது” என்றாள் -
இவளை அனுப்பறத்துக்கும், பிரியாணிக்கும் என்ன சம்பந்தம்? – நடராஜனுக்கு வியப்பாக இருந்தது -
“ஏன் இப்ப பசிக்கலையா, அப்புறமா சாப்பிடப் போறியா?… ம்?… என்ன அவசரப்படறே? ம்?… பார்த்த புதுசு மாதிரி இருக்கே?… அவசரப்படறயே…” அசட்டுத்தனமாய் பேசின நடராஜன் நெருங்கி மல்லிகாவை அணைத்தான் -
ஜில்லென்று அவள் மேனி ஸ்பரிசம் அவனுக்கு இதமாக இருந்தது.
அவள் உடலை விறைப்பாக வைத்துக் கொண்டிருப்பது நடராஜனுக்குப் புரிந்தது -
“என்ன பயம் மல்லிகா?…பயப்படாதே…” சமாதானம் செய்யும் நோக்கில் பேசினவன், அவளை சகஜ நிலைக்குக் கொண்டு வருவதற்காக “உன் ஊரு எது? இந்த ஊரு பொண்ணா நீ?” என்றும் கேட்டான் -
தலை குனிந்து வண்ணம் அமரந்திருந்த மல்லிகா பேசத் தொடங்கினாள்.
“எனக்கு சொந்த ஊரு திருவண்ணாமலை பக்கம், நானு நல்ல பொறந்து வளந்தவ…போன வருஷம் கண்ணாலம் ஆச்சி..எங்க மச்சான் ரொம்ப நல்லது – ஆனா அதுக்கு திடும்னு பக்கவாதம் வந்திருச்சி – ஆறு மாசமா ஒரே கஷ்டம் – இத்தினு நாலா அது சம்பாரிச்சு நான் ராணியாட்டம் குந்திகினு இருந்தேன் – இப்ப அதுக்கு முடியலைனா நான் உட்கார வைச்சு சோறுபோட வேணாமா? இந்த ஊர்லே வைத்தியம் பார்க்க வந்து ஒரு மாசமாவுது – வூட்டு வேலை பண்ணி வர துட்டு வைதியத்துக்கே சரியாவது – வாய்க்கு ருசியா அதுக்கு எங்கே வாங்கிப் போடா முடியுது?. அதுதான் உன் ஆள் வந்து கேட்டப்போ நான் ஒத்துக்கிட்டேன் – என் மச்சானுக்கு கறி பிரியாணினா உசிரு – அதுவும் சூடா இருந்தா ரொம்ப பிடிக்கும் – அதனாலே நீ என்னைச் சட்டுபுட்டுனு அனுப்பிச்சா சூட்டோடே அதுக்குப் கொண்டு கொடுப்பேன் – அனுப்பிடறயா?” கண்கள் பளபளக்க பரிதாபமாக மல்லிகா கேட்ட மாத்திரத்தில், அவளைத் தீண்டி அணைத்துக்கொண்டிருந்த நடராஜனின் கைகள் தானே விலகியதும் அல்லாமல், மனசை, விவரிக்கத் தெரியாத ஒரு வேதனையும் ஆக்கிரமித்துக்கொண்டது.
- வெளியான ஆண்டு: 1977
