சொல்ல முடியாத அனுபவம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 8,618 
 

சுயம்புலிங்கத்துக்கு தீராத மனக்குறை. யார் யாருக்கோ என்னென்ன அனுபவங்கள் எல்லாமோ எதிர்ப்படுகின்றன; தனக்கு ரசமான, ஜோரான, சுகமான அனுபவம் ஒன்று கூடக் கிட்டமாட்டேன் என்கிறதே என்றுதான்.

நினைக்க நினைக்கக் கிளுகிளுப்பூட்டும் இனிய நிகழ்ச்சிகள். சொல்லச் சொல்ல வாயூறும் – கேட்பவர்கள் காதுகளில் தேன் பாய்ச்சும் – மற்றவர்கள் நெஞ்சில் ஆசைக் கள்ளைச் சுரக்க வைக்கும் – ஒரு சிலரது உள்ளத்திலாவது பொறாமைக் கனலை விசிறிவிடும் அற்புதமான அனுபவங்கள்.

ஐயோ, பேசிப் பேசிப் பூரித்துப் போகிறார்களே பல பேர்! இரண்டு பேர் சந்தித்தாலே, “கேட்டீரா சங்கதியை! நேற்று…” என்று ஆரம்பித்து சுவாரஸ்யமாக வர்ணிக்கிறார் ஒருவர். “போன மாசம் அப்படித்தான், பாருங்க…” என்று தொடங்கி அளக்கிறார் மற்றவர்.

திண்ணைகளிலும், விசேஷ வீடுகளில் கூடுகிறபோதும், சும்மா நாலைந்து பேர் கூடிப் பேசிப் பொழுது பேர்க்குகிற சமயங்களில் எல்லாம் – எப்போதும் எங்கும் எல்லோருக்குமே, சுவையாக எடுத்துச் சொல்வதற்கு ஜிலுஜிலுப்பான அனுபவங் கள் இருந்தன. பலப் பலருக்கும் வாழ்க்கையில் அவை நிறையவே சித்தித்ததாகத் தோன்றின.

ஆனால் அவனுக்கு அப்படிப் பெருமையாக, மகிழ்ச்சயோடு எடுத்துச் சொல்வதற்கு ஒரு மண்ணும் இல்லை.

– என்ன வாழ்க்கை வேண்டிக் கிடக்கிறது! வெறும் காஞ்ச பய வாழ்க்கை! வயது ஆனதுக்கு மட்டும் குறைச்சலில்லை. குட்டிச்சுவருக்கு ஆகறது போல, ஐம்பதைத் தாண்டிவிட்டது! பசுமையான அனுபவம், இனிமையானது, மற்றவர்கள் மத்தியிலே – ஜவுளிக்கடைக்காரன் பகட்டாக, பளபளப்பாக, வசீகரமாக எடுத்துப் பரப்புகிற ஜோர் ஜோரான துணிகளைப் போல் அனைவரையும் கவரும்படி எடுத்துச் சொல்லக் கூடிய அனுபவங்கள் ஒன்றிரண்டுசுட்ட நம்ம வாழ்வில் இல்லையே!

சுயம்புவின் நெஞ்சு ஏக்கப் பெருமூச்சை நீள உயிர்க்கும். தானாகவே அவன் மனசில் குத்தாலம் பிள்ளை அண்ணாச்சியின் நினைவு நிழலிடும்.

குத்தாலம் பிள்ளை சுவாரஸ்யமான மனிதர். அவர் இருக்கிற இடத்தில் கலகலப்பும் இருக்கும். சிரிப்பு அடிக்கடி கலீரிடும். மத்தாப்பூப் பொறிகள் மாதிரி அவரிடமிருந்து ரசமான தகவல்கள் பொங்கிப் பூத்துச் சிதறிக் கொண்டே இருக்கும். பேச்சிலே மன்னன். பாவி மனிதனுக்கு அனுபவங்கள் எங்கிருந்து எப்படித்தான் வந்து சேருமோ!

சுயம்புலிங்கத்துக்கு அது பெரிய ஆச்சரியம். குத்தாலம் பிள்ளை பேசுவதைக் கேட்கிறபோதெல்லாம், இதிலே நூத்திலே ஒரு பங்கு நமக்கு ஏற்பட்டாலும் போதுமே! மீதி நாளெல்லாம் அசை போடுவது போல் ஆனந்தமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கலாமே!” என்று அவன் மனம் ஏங்கும்.

அநேகமாக ஆண்கள் அனைவரும் பொம்பிளைகள் பற்றித்தான் பேசினார்கள். தங்களுக்கு அந்த லைனில் கிடைத்த வெற்றிகள் பற்றி; எதிர்பாராது வந்து சேர்ந்த ரொமான்ஸ்கள் பற்றி, ரயில் பயணத்தில் கிடைத்த திடீர் காதல்; புதிய இடத்தில் அகப்பட்ட தொடர்புகள்; தேடிப்போன அனுபவங்கள்; ரிக்ஷாக்காரர்கள் துணையோடு நேர்ந்த உறவுகள்; பக்கத்து வீட்டில் பழுத்துக் கனிந்து தங்கள் கையில் வந்து விழுந்த உணர்ச்சிக் க(ன்)ணிகள் பற்றி எல்லாம் அலுப்பில்லாமல் சொன்னார்கள்.

சிலர் பேய்களுடன் நேரிட்ட பேட்டி பாம்பு அல்லது துஷ்ட மிருகத்தை எதிர்த்துக் கொன்றது; அபூர்வமாகக் கிடைத்த வாட்ச் அல்லது நகை அல்லது பர்ஸ் – இப்படி சந்தர்ப்பச் சூழ்நிலை களோடு விவரித்தார்கள். அதிர்ஷ்டசாலிகள்!

– நம்ம வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? பிஞ்சு போன முறத்தாலே அதை வெளும்பச் சாத்த அறுந்த பழைய செருப்பாலே அதன் மூஞ்சியிலே போட! இப்படி எல்லாம் எடுத்துச் சொல்வதுக்கு ஒரு அனுபவத்துக்குக் கூட வழி செய்யலியே அது!

சுயம்புவின் உள்ளம் காளவாயாய்க் கொதிக்கும். புழுங்கும். புகையும்.

ஒரு அனுபவம் நேரக்கூடாது? ஒரே ஒரு அனுபவம்! புதுமையானதாய்! சகஜமாக எதிர்ப்பட முடியாததாய்! நிகழ்ந்தால் என்ன?

இதுவே அவனது நித்திய, நிரந்தர ஏக்கமாக அமைந்து அவனை அலைக்கழித்தது.

சுயம்புலிங்கத்துக்கு உதவி புரிய காலம் மனம் கொண்டது போலும்!

அவனது ஊரிலிருந்து ஆறு மைல்களுக்கு அப்பால் உள்ள “ரெண்டுங் கெட்டான்” ஊருக்கு சுயம்பு போக வேண்டியதா யிற்று. அங்கே வசித்த உறவினர் அவனை வந்து போகும்படி அழைத்திருந்தார்.

அவன் போனபோது அவர் வீட்டில் இல்லை. எப்போது வருவார் என்று தெரியவுமில்லை.

அவன் சென்றது பிற்பகல் மூன்று மணிக்கு. சரி, ஐந்து மணி சுமாருக்கு வந்து பார்க்கலாமே என்று எண்ணி அவன் தெருக்களில் நடந்தான். ஒட்டலுக்குப் போனான். பிறகு ரயில்வே ஸ்டேஷனில் போய் உட்கார்ந்திருக்கலாம்; வசதிப் பட்டால் படுத்தும் கிடக்கலாம் என்று நினைத்தான். போனான்.

சுமாரான ஸ்டேஷன். அந்நேரத்துக்கு வண்டி எதுவுமில்லை. பெஞ்சுகள் காலியாகக் கிடந்தன. ஒரு சுவர் ஒரத்தில், கல்தரை மீது நீட்டி நிமிர்ந்து சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான் ஒருவன். அருமையான காற்று. அமைதியான சூழ்நிலை.

சுயம்பு சுற்றிலும் நடந்து பார்த்தான். ஸ்டேஷன் அலுவல் அறை பூட்டிக் கிடந்தது. தொழிலாளிகளும் இல்லை. வண்டி வருவதற்கு அதிக நேரம் இருக்கும் எனத் தோன்றியது.

சுயம்பு ஒரு பெஞ்சில் அமர்ந்தான். கருங்கல் தளத்தை, செம்மண் தரையை, நீல வானை, வேப்ப மரங்களின் பசுமையை, சுவர்களின் வெண்மையை – இவ்விதமான வர்ண விஸ்தாரங்களை ரசித்தபடி இருந்தான்.

அவன் கண்களுக்கு விருந்தாக வேறு விதக் கலர் வந்து சேர்ந்தது.

பளிர் வர்ண மில் ஸாரி கட்டிய ஒரு பெண். வயது என்ன இருக்கும்? முப்பதும் இருக்கலாம், நாற்பதும் இருக்கலாம்; இதற்கு இடைப்பட்ட எதுவாகவும் இருக்கலாம். இவ்வாறு கணக்கிட்டது அவன் மனம்.

அவளைப் பார்ப்பதும் பார்க்காதது போல் நடிப்பதுமாக இருந்த அவனை நைஸாக எடை போட்டபடி நடந்து வந்து அவள் எதிர் வரிசை பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தாள். அங்குமிங்கும் பார்த்தாள்.

“என்னங்க, வண்டி வர நேரமாயிடுச்சா?” என்று கேட்டாள்.

அங்கே வேறு எவரும் இல்லையாயினும், அவள் தன்னைப் பார்த்துத்தான் கேள்வியை விட்டெறிந்தாள் என்று புரிந்து கொள்ள அவனுக்கு நேரமாயிற்று.

அதற்குள் அவளே, “ஐயா, தெற்கே போற வண்டி எப்ப வரும்? நேரம் ஆயிடுச்சா?” என்று விசாரித்தாள்.

சுயம்பு அவளை நேரடியாகப் பார்த்தான். “எனக்குத் தெரியாதே. ரயில் எப்ப வரும்னும் தெரியாது” என்றான்.

அவள் சிரித்ததுபோல் பட்டது அவனுக்கு. தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

அவள் அவனை ஒரு தினுசாக நோக்கினாள். சிறிது நேரம் அங்கேயே இருந்தான். பின், எழுந்து ஸ்டேஷன் உள்ளே போனாள்.

சுயம்பு அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை சுற்றி நகர்ந்து, அவள் காலி செய்து போன இடத்தில் படிந்தது. வியப்புற்றது.

அந்த பெஞ்சில் ஒரு பை – சின்ன பிளாஸ்டிக் பை; நீல நிறத்தில் – கிடந்தது.

அவள் வருவாள், எடுத்துக் கொள்வாள் என்று பேசியது மனம்.

நேரம் மிக மெதுவாக ஊர்வது போல் தோன்றியது. அவன் பொறுமையைச் சோதிப்பதாகவும் இருந்தது அது.

கணிசமான நேரம் காத்திருந்து விட்டதாகப் பட்டதும் அவன் எழுந்தான். ஸ்டேஷன் உள்பக்கம் பார்த்தான். அவளைக் காணவில்லை. எங்கோ போய்விட்டாள். அவள் ரயிலுக்காக வந்தவளில்லை என்றே மனம் கூறியது. அந்த பெஞ்சு அருகே போய் அந்தப் பையை எடுத்தான்.

மீண்டும் அங்குமிங்கும் பார்த்தான். திறந்தான்.

பைக்குள் சில வெற்றிலைகளும் பாக்கும்தான் இருந்தன. ஒரு சிறு பொட்டணம். எடுத்து நோக்கினான் புகையிலை.

இவ்வளவுதானா என்றது மனம்.

ஏமாற்றத்துடன் அதைக் கீழே போட்டான்.

அதற்காகவே பதுங்கி நின்றவள் போல் வேகமாக முன் வந்தாள் அவள். “என் பையை ஏன் எடுத்தே?” என்று கேட்டபடி பாய்ந்தாள்.

குனிந்து பையை எடுத்தாள். உள்ளே பார்த்தபடி, “ஏ, இதிலே இருந்த நோட்டு எங்கே? அம்பது ரூபா நோட்டு. நைசா அமுக்கிக்கிட்டியா?” என்றாள்.

சுயம்பு பதறிப்போனான். எதிர்பாராத அதிர்ச்சி. “அதிலே ரூபா நோட்டு எதுவும் இல்லே. வெத்திலை பாக்குதானே இருந்தது?”” என்று சொன்னான்.

“களவாணி ராஸ்கல்! மரியாதையா ரூபாயைக் கொடுத்திரு. இல்லையோ, கூச்சல் போட்டு கும்பல் கூட்டுவேன்” என்று அவள் மிரட்டினாள்.

“அதிலே ரூபாயே கிடையாது. நான் அதிலிருந்து எதையும் எடுக்கவுமில்லை” என்றான் அவன். அவன் உள்ளத்தில் ஒரு பீதி கவிந்தது. என்ன அநியாயமாக இருக்கிறதே என்று ஒரு நினைப்பு.

“ஏ மரியாதையா ரூபாயைக் கொடு. இல்லே. நீ சீரழிஞ்சு போவே” என எச்சரித்தான் அவள்.

“நான் எடுத்திருந்தால்தானே தர முடியும்?”

“இங்கே என்ன தகரால்?” கரகரத்த குரலில் கேள்வி எழுப்பியபடி ஒரு காக்கிச் சட்டைக்காரன் அங்கே வந்தான். அங்கே கூலி வேலை செய்கிறவனாக இருக்கும்.

“இந்த ஆளை சரியா விசாரி. பகலு வேளையிலேயே ஐயாவுக்கு என்னமோ மாதிரி இருக்கும்தாம். என் கையைப் புடிக்கிறாரு” என்றாள் அவள்.

சுயம்புவுக்குப் பகீரென்றது. அடிப்பாவி! பழிகாரி என்ன துணிச்சல்! என்றது மனம். “பொய்! சுத்தப் பொய்” என்று கத்தினான்.

“தெரியும்டா! நீ பெரிய யோக்கியன்! உன்னை மாதிரி ஆசாமிகதான் என்னென்னவோ பண்றானுக!” என்று சுயம்புவை நெருங்கினான் முரடன்.

“என் பேக்லேயிருந்த ரூபா நோட்டைக் காணோம். அதை இங்கே வச்சிட்டு உள்ளாற டைம் பார்க்கப் போனேன். இவன் பையைத் திறந்து நோட்டை எடுத்திருக்கான். பக்கத்திலே வந்து கேட்கிறப்போ என் கையைப் புடிக்கிறான்” என்று பழி சுமத்தினாள் அவள்.

“அப்படியாடா நாயே?” என்று சுயம்புவின் சட்டையை இறுகப் பிடித்தான் முரடன்.

சுயம்பு அரண்டு போனான்; பாவம்.

“இல்லே. அப்படி எதுவும் நடக்கலே” என்றான். அவனுக்கு தொண்டை அடைத்தது. பேச்சு சரியாக எழவில்லை.

“பொறுக்கி பொம்பளை பொறுக்கி” என உறுமி அவனை உலுக்கினான் முரடன்.

“அவன் முழிச்ச முழியே அதைக் காட்டுச்சே!” என்றாள் அவள்.

முரடன் அவன் சட்டைப் பைக்குள் கைவிட்டான். ஒரு கவர் கிடைத்தது. எடுத்துப் பார்த்தான். இருபது ரூபாய் இருந்தது. ஒரு பத்து ரூபாய் தாளும், இரண்டு ஐந்து* ரூபாய் தாள்களும்.

“இது என் பணம்” என்றான் சுயம்பு.

“சரிதாம் போடா” என்று அவனைப் பிடித்துத் தள்ளினான் முரடன். “ஊளையிடாம இடத்தை காலி பண்ணு. வாயைத் திறந்தயோ உனக்குத்தான் டேஞ்சர். இவளைக் கற்பழிக்க முயன்றேன்னு போலீஸ்லே புடிச்சுக் கொடுப்பேன்” என்றான்.

சுயம்புவின் பயம் அதிகரித்தது. அவன் கீழே விழாமல் சமாளித்து நின்றதே பெரிது. அழுகை வேறு வந்தது. சே, எவ்வளவு அவமானம். இது போதும்; மேலும் அவமானம் சம்பாதிக்க வேண்டாம் என்று எண்ணியபடி நடந்தான்.

அவளும் தடியனும் கூட்டாளிகள்னு தோணுது என்றது அவன் மனம்.

– எப்படி இருந்தால் நமக்கென்ன! நம்ம பணம் போச்சு. மானமும் போச்சு!

“அனுபவம் புதுமை!” என்ற நினைப்பு வெடித்தது அவனுள். “எதிர்பாராதது! இதுவரை நடக்காதது”

– கேவலம், கேவலம்! வாயைத் திறந்து இதை யாரிடம் சொல்ல முடியும்? பெருமையாகப் பேசப்படுவதற்கு உரிய அனுபவமா இது.

சுயம்புலிங்கம் பெருமூச்செறிந்தான்.

“கையில் காசில்லை. நடந்து நடந்தே ஊர் போய்ச் சேர வேண்டியதுதான். ரெண்டரை அல்லது மூணு மணி நேரம் ஆகும்” என்றது அறிவு.

(“குங்குமம்”, 1982)

– வல்லிக்கண்ணன் கதைகள், ராஜராஜன் பதிப்பகம், 2000 – நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *