Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சுழற்பந்து

 

“வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அது
எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு சின்ன மாற்றம்,
ஒரு நிகழ்ச்சி நமது வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிடும். இதில் எனக்கு என்றும்
அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. நான் சொல்கிறபடி நடந்தால் நமது இலக்கை
நிச்சயமாக அடைய முடியும். இதுவரை நாம் ஏமாந்தது போதும். இந்த முறை நமது
லட்சியத்தை அடைய யார் உதவுகிறேன் என்று உறுதி கூறுகிறார்களோ அவர்களையே நாம்
வெற்றி பெறச் செய்வோம். என்ன சொல்றீங்க?” என்று கேட்டு விட்டு பந்தை
சிக்ஸருக்கு அடிப்பது போல் கிரிக்கெட் பேட்டை காற்றில் வீசிக் கொண்டிருந்தான்
மதியழகன்.

அவன் பேசிக் கொண்டிருந்த விதமும் அதை சுற்றிலும் அமர்ந்து கேட்டுக்
கொண்டிருந்த கூட்டத்தையும் புதிதாகப் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரட்சிகர சிந்தனை
கொண்ட சில இளைஞர்கள் ரகசியக் கூட்டம் நடத்துவது போலத் தெரியும். கோவையில்
இருந்து செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்கோ, புதிதாகக்
கட்டப்பட்ட மேம்பாலத்தை வெடி வைத்துத் தகர்ப்பதற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள
ஒரே வங்கியான வேளாண்மைக் கூட்டுறவு வங்கியைக் கொள்ளை அடிப்பதற்கோ அவர்கள்
திட்டமிடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வர்.

ஆனால் கணேசா கபே என்று சொல்லக்கூடிய ஒரு பாய்லர், சில கண்ணாடி டம்ளர்கள்,
ஓலைக் குடிசை, கால் உடைந்ததால் இருபுறமும் செங்கல் அடுக்கி அதன் மீது பாங்காக
வைக்கப்பட்ட பழைய மரப் பலகை, மேலே கிடக்கும் கசங்கி படிக்க லாயக்கற்ற அன்றைய
செய்தித் தாள் மற்றும் சில வறண்ட வடைகளைக் கொண்ட டீக் கடையில் இப்படி வேலை
வெட்டி இல்லாத அல்லது வெட்டி வேலை செய்யும் ஒரு 15 பேர் தினமும் அரட்டை
அடிப்பதை கவனிப்பதற்கு அந்த ஊர் மக்களுக்கு நேரமும் இல்லை, தேவையும் இல்லை.

“எவனாவது உருப்படற மாதிரி இருக்கறானா பாருங்க… அத்தன பேரும் வேலைக்குப் போகாம
எப்பப் பார்த்தாலும் டீக் கடையில உக்காந்துட்டு அரட்டை… ஏதோ உலகத்தையே
புரட்டுற மாதிரி மீட்டிங்கு…எல்லாம் இவனுங்க அப்பன், ஆத்தாளச் சொல்லோணும்’
உரக் கடை ராசுவிடம் புலம்பிச் சென்றார் பால்காரர் மணி.

“ஏண்டா மதி, நீ சொல்ற மாதிரி செஞ்சா நமக்கு வேண்டியது கிடைக்குமாடா?’- இது
எங்கே நடக்கப் போகிறது என்ற தொனியில் கேட்டான் சுரேஷ்.

“ஆமா… போன முறை முத்துச்சாமிக்கு செஞ்சோம்… அவரும் புது பேட், கிட்ஸ் எல்லாம்
வாங்கித் தாரேன்னு சொன்னாரு… ஆனா ஜெயிச்ச பின்னாடி என்னாச்சு… மனுஷன் ஒரு
டீயாவது வாங்கித் தந்தானா?’ கேட்டுவிட்டு எல்லோரையும் பார்த்தான் ராஜூ.

“இதெல்லாம் நமக்கு சரிவராது. ஆளுக்கு 100 ரூபா போட்டா நமக்கு வேண்டியது
எல்லாம் வாங்கிக்கலாம். எதுக்கு இவனுகள பிடிச்சுத் தொங்கோணும்’ என்றான் சிவா.

இல்லாட்டி அவருகிட்ட முன்னாடியே பணத்தை வாங்கிட்டா என்ன?…ஆளாளுக்கு ஒரு ஐடியா
சொல்லிக் கொண்டிருந்தனர்.

கவனமாகக் கேட்ட மதி பேசத் துவங்கினான். “அதெல்லாம் வேண்டாம். சுந்தரமூர்த்தி
தான் இந்த முறை பஞ்சாயத்துப் பிரசிடன்ட்டுக்கு போட்டியிடுறார். எலக்ஷனுக்கு
இன்னும் 15 நாள் இருக்கு. அவருகிட்ட ஆதரவு கொடுக்கறோம்னு சொல்லி பிரசாரம்
செய்வோம். அதுக்குப் பிரதிபலனா நம்ம டீமுக்கு வேணுங்கிறத கேட்டு வாங்கிக்கறது
அப்படின்னு ஒரு டீல் போட்டுக்குவோம். முன்னாடியே பணம் வாங்கிட்டம்னா அப்புறம்
வேணுங்கிற போது நாம் போய் நிற்க முடியாது’.

“எந்தக் காலத்துலடா இருக்கிற நீ. எந்த அரசியல்வாதியாவது சொன்னதச்
செஞ்சுருக்கானா? இவரு மட்டும் என்ன யோக்கியமா. தேர்தலுக்கு முன்னாடியே
கழுத்துல துண்டப் போட்டு வேணுங்கிறத கறக்கணும்..அதுதான் நமக்கு சேஃப்’- இது
சுரேஷ்.

எல்லோருக்கும் ஆறிப்போன டீ வந்தது. கடை பூட்டும் நேரமாகி விட்டது என்பதற்கு
அதுவே சாட்சி. டேய் கணேசா மணி 9 ஆயிடுச்சா என்றபடியே டீயை உறிஞ்சினார்கள்.
கடைய பூட்டறேன்…எல்லாரும் கிளம்புங்கடா என்று வாய் தவறி சொல்லி விடக் கூடாது
என்பதற்காக டீக் கடை கணேசன் செய்யும் வித்தைகளில் ஒன்று ஆறிப்போன டீ.

மறுநாள் காலை அணியின் மொத்த வீரர்களும் சுந்தரமூர்த்தியை பார்த்து என்ன
சொல்வது என்று பேசிக் கொண்டிருந்தனர்.

“”டேய் மதி அங்க பாரு…அந்தாளு வர்றாரு…” பிரசிடென்ட் வேட்பாளர் அவர்களை நோக்கி
புல்லட்டில் வந்து கொண்டிருந்தார்.

“தம்பிகளா வணக்கம். பதில் வணக்கத்தை தேர்தல் நேரத்தில் எதிர்பார்க்கக் கூடாது
என்று தெரிந்ததால் அவரே தொடர்ந்தார். போன முறை நம்ம எதிர் பார்ட்டி
ஜெயிச்சதுக்கு உங்க பிரசாரமும் ஓட்டும்தான் காரணம்னு எனக்குத் தெரியும்.
உங்களுக்கு எந்த பிரதிபலனும் அவர் செய்யலைங்கிறதும் எனக்குத் தெரியும். அதனால
இந்த முறை உங்க ஆதரவு அவருக்கு இருக்காது. எனவே எனக்கு பிரசாரம் செய்து வெற்றி
பெறச் செய்தால் உங்கள் அணிக்கு என்ன வேணுமோ அதை செஞ்சு கொடுக்கிறேன். என்னப்பா
சொல்ற மதியழகா?’
“சோடா குடிக்காதது மட்டும்தான் பாக்கி…மூச்சு விடாம பேசுறாண்டா’ மனதுக்குள்
நினைத்துக் கொண்டான் மதி.

“சரிங்ணா..ஆனா ரெண்டு பேரும் நம்ம வார்டா போயிட்டீங்க…அவரும் நம்மகிட்ட வரல.
போன முறை ஜெயிக்க வச்சதுக்கு ஒன்னும் பண்ணல. அதனாலகூட இருக்கலாம். நீங்க
முதல்ல வந்துட்டீங்க. அணி வீரர்களிடம் பேசி முடிவு சொல்றேனே. அப்படியே டீ, வடை
சொல்லீருங்க’ என்று தாடியை தடவிக் கொண்டான்.

கணேசா கபேவுக்கு பின்னால் உள்ள பாறைக் குழிக்கு விரைந்தனர். “டேய்
மதி…கொஞ்சமாவது அறிவு இருக்காடா…எவ்ளோ பெரிய மனுஷன் நம்மகிட்ட ஆதரவு
கேட்கிறார்..பெரிய இவனாட்டம் பந்தா பண்ற…சரின்னு உடனே சொல்ல வேண்டியது தானே’
செல்வராஜ் கோபப் பார்வை வீசினான்.
சட்டை பட்டனை கழட்டிவிட்டு பின்னால் இழுத்துக் கொண்டே பேசினான் மதி.

“நீ கொஞ்சம் சும்மா இருடா. நடக்கப் போறது பார்லிமெண்ட் எலக்ஷன் இல்லை.
பஞ்சாயத்து எலக்ஷன். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். முத்துச்சாமி, சுந்தரமூர்த்தி
ரெண்டு பேரும் ஒரே வார்டு. ஒருத்தன் நம்மள முன்னாடி ஏமாத்துனவன். இவனும் நம்மள
ஏமாத்திறக் கூடாது. மொத்தம் 4 வார்டு இருக்கு. அதுல 2000 ஓட்டு இருக்கு.
எப்படியும் 1200 தான் விழும். ரெண்டு பேருக்குமே செல்வாக்கு இருக்கு.
வெட்டியாத்தானே இருக்கிறானுக கூப்பிட்டா வந்துருவோம்னு நினைப்புல
வந்திருக்கார். பிரசாரம் பண்ண பெருசா எவனும் வர மாட்டான். நம்ம பண்ற கேன்வாஸ்ல
ஓட்டு எங்க வேணா விழும். அதனாலதான் நம்மளத் தேடி வந்திருக்கார். நாம கொஞ்சம்
பந்தா பண்ணாதான் மதிப்பானுக. சரி நம்ம தேவையை அவரே சொல்லிட்டார். சரின்னு போய்
சொல்லீற வேண்டியதுதான்’ டீ, வடையை காலி செய்து விட்டு எல்லோரும் எழுந்தனர்.

எலக்ஷன் ரிசல்டை விட இவனுக என்ன ரிசல்ட் சொல்லப் போறானுகளோ என்ற
எதிர்பார்ப்பில் பார்த்தார் சுந்தரமூர்த்தி. இரண்டு கைகளையும் பேண்ட்
பாக்கெட்டில் விட்டபடி சில விநாடிகள் மெüனமாகப் பார்த்த மதி, “உங்களுக்குத்
தான் பிரசாரம்னு முடிவு பண்ணியிருக்கோம்’ என்றான். ரொம்ப சந்தோஷம் தம்பி..அப்ப
இப்பவே ஆரம்பிச்சிடுவோம் என்றபடி புல்லட் நோக்கிச் சென்றார்.

“அண்ணா…எங்களுக்கு திருப்பூர்ல ஒரு மேட்ச் இருக்கு. அதுக்குப் போகணும்.
நாளைக்கு ஆரம்பிச்சிடலாமா? சுந்தரமூர்த்திக்கு தன் விதியை நினைத்து கடுப்பாக
இருந்தது. முகத்தில் எதுவும் காட்டாமல் ஆகட்டும் தம்பி என்றார். அவர் போகும்
முன் அணிச் செலவுக்கு 500 ரூபாய் வாங்க மதி மறக்கவில்லை.
மறுநாள் உங்கள் ஓட்டு சுந்தரமூர்த்தி அண்ணனுக்கே. உங்கள் சின்னம் பேனாக் கத்தி
என்று மதியழகன் தலைமையில் பிரசாரம் விண்ணைப் பிளந்தது.

சுந்தரமூர்த்தி தனது சகாக்கள், அணி வீரர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு
சேகரித்தார். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது. அதுதான் பஞ்சாயத்து
தேர்தலின் மகிமை. அதுதான் பிரச்னையும் கூட. யாருக்கு ஓட்டுப் போடுவது என்று
வாக்காளர்கள் குழம்பித் தவித்தனர்.

இரவு வீட்டில் சாப்பிட உட்கார்ந்தபோது மணி 10. “இப்படி வேலைக்குப் போகாம ஏண்டா
ஊரச் சுத்திட்டு இருக்கற’ தட்டில் சாப்பாடு போட்டபடி பேசினார் அம்மா. “நான்
சும்மா சுத்தல. தேர்தல் பிரசாரத்துல இருக்கிறேன்.’

“ஆமா இவரு பெரிய எம்.பி. ஆகப் போறாரு’ என்றார் கட்டிலில் படுத்திருந்த அப்பா.

“யாருக்கு பிரசாரம் பண்ணறீங்க?’

“நம்ம சுந்தரமூர்த்தி அண்ணனுக்குத் தான்.’

“ஏண்டா கொஞ்சமாவது ரோஷம் இருந்தா அந்தாளுக்குப் போய் பிரசாரம் பண்ணுவியா?’
வெந்நீர் காலில் பட்டது போல கொதித்தாள் அம்மா. அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.

கேபிள் டி.வி. கனக்ஷனுக்கு பணம் வசூலிக்க வந்திருந்தார் சுந்தரமூர்த்தி.
“ஏம்மா கற்பகம்…2 மாசமா பணம் கொடுக்க மாட்டேன்னு சொல்றியாமே…ஏன்?’
“உங்க கேபிள் டி.வி.யால ஒரு பிரயோசனமும் இல்ல. எப்ப பாத்தாலும் கோடு கோடா
தெரியுது. இல்லாட்டி கட் ஆகுது. மாசத்துல 15 நாள் இப்படித்தான் தெரியுது.
எதுக்குப் பணம் தரோணும்?’

“உங்க வீட்ல மட்டும் தான் இப்படி சொல்ற. மத்தவங்க வீட்டுல எல்லாம் நல்லா
தெரியுது. பணம் கொடுக்க வக்கில்லைனா கனக்ஷன கட் பண்ணிக்கோ…வார்த்தைகள் எரிந்து
விழுந்து தெருவில் உருண்டோடின.
பக்கத்து வீட்டுக்காரர்கள் சீரியல் பார்ப்பதை விட்டு விட்டு வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தனர்.

அம்மாவும் சளைக்காமல் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பேச்சு முற்றி
கையை ஓங்கியபடி அருகே வந்து போடி என்று கத்தினார் சுந்தரமூர்த்தி. எல்லோரும்
ஒரு விநாடி அதிர்ந்து பார்த்தனர்.

அம்மா அழுது கொண்டிருந்தார். எப்படி சமாளிப்பது என்று புரியாமல் பார்த்தான்
மதி. “நான் என்னமா பண்ணட்டும். டீம் பசங்க எல்லோரும் சேர்ந்து எடுத்த
முடிவுதான் இது. பிரசாரம் பண்ணாம இருக்க முடியாது’ என்று சொல்லிவிட்டு
போர்வைக்குள் புகுந்து கொண்டான்.

தேர்தல் நாள். நமக்குப் பார்த்து ஓட்டுப் போடுங்க என்று கெஞ்சிக்
கொண்டிருந்தார்கள் முத்துச்சாமியும் சுந்தர மூர்த்தியும். வெளியே
வந்தவர்களிடம் யாருக்குப் போட்டீங்க என்று கேட்டு அங்கேய தமது வெற்றியை உறுதி
செய்து கொண்டிருந்தனர்.

வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சூழ வாக்கு எண்ணிக்கை
துவங்கியது. மொத்தம் பதிவான 1267 வாக்குகளில் தங்களுக்கு எவ்வளவு வரும் என்று
சுந்தரமூர்த்தியும், முத்துச்சாமியும் தத்தமது பரிவாரங்களுடன் நின்று பேசிக்
கொண்டிருந்தனர். மதியும் தோழர்களும் கைகளில் பட்டாசுடன் அமைதியாக இருந்தனர்.

முதல் சுற்று எண்ணிக்கை முடிவு வந்தது. 2 ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில்
இருந்தார் சுந்தரமூர்த்தி. 2வது சுற்றிலும் இதே நிலைமை. மூன்றாவது சுற்றில்
சுந்தரமூர்த்தி உற்சாகத்துக்கு வேட்டு வந்தது. முத்துச்சாமி-499.
சுந்தரமூர்த்தி-500.

4வது வார்டு ஓட்டு எண்ணப்பட்டது. முடிவு தெரிய நகம் கடித்தபடி
சுந்தரமூர்த்தியும், எப்படியும் ஜெயிச்சுருவோம் என்று முத்துச்சாமியும் நின்று
கொண்டிருந்தனர்.

நம்ம பசங்க 15 பேர் வீட்லயும் நமக்குத்தான். நூர்ஜஹான் வீடு, ராமசாமி, நசீர்
பாய், கறிக்கடை சண்முகம், மெட்ராஸ்காரர் வீடு, நடுத்தோட்டம் பழனிசாமி வீடு,
நம்ம பங்காளிக வீடு என்று தனக்குத் தெரிந்த எல்லோர் வீட்டு ஓட்டுக் கணக்கையும்
மனதுக்குள் போட்டுப் பார்த்தார் சுந்தரமூர்த்தி. எங்கேயாவது மிஸ் ஆயிடுச்சா?
என்று யோசித்துப் பார்த்தார். எப்படியும் 2, 3 வித்தியாசத்துல ஜெயிச்சிருவோம்.
ஏம்பா நமக்கு பிரசாரம் பண்ணீங்களே ஓட்டுப் போட்டீங்களா என்று எல்லோரையும் ஒரு
முறை கேட்டுக் கொண்டார். என்ன இப்படி கேட்கறீங்க. உங்களுக்குத்தாங்ணா போட்டோம்
என்றான் மதி.

முத்துச்சாமி அன் கோ பட்டாசு வெடித்து கொண்டாடியது. நிரந்தர பஞ்சாயத்துத்
தலைவர் வாழ்க கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. முத்துச்சாமி-635,
சுந்தரமூர்த்தி-632. மூன்று ஓட்டுகளில் தோல்வியுற்ற சுந்தரமூர்த்தி தலையில் கை
வைத்தபடி உட்கார்ந்தார். மீண்டும் மீண்டும் கணக்குப் போட்டுப் பார்த்துக்
கொண்டிருந்தார்.

எல்லோரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். “இந்த
முறையும் நமக்குத் தோல்விதானா, பேட், கிட்ஸ் எல்லாம் அவ்ளோதானா’ என்று
கேட்டுக் கொண்டனர்.

“வெற்றிக்கும் தோல்விக்கும் ஒன்று தான் வித்தியாசம். அது எண்ணிக்கையாக
இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு சம்பவமாக இருக்கலாம்’ மெல்லிய சிரிப்புடன்
சொல்லிக் கொண்டான் மதியழகன்.

அதைக் கவனிக்காமல் எல்லோரும் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

*வெளியீடு: தினமணி கதிர் ஜூன் 2009* 

தொடர்புடைய சிறுகதைகள்
காற்றைத் தவிர மற்ற அனைத்தும் விற்பனைக்கு வந்துவிட்ட அந்த ஊரில் கான்கிரீட் ராட்சசன் போன்ற அடுக்கு மாடி கட்டடங்களைக் கட்டுவதற்காக அவன் வந்திருந்தான். தனது வேலைகள் முடிய இன்னும் சில தினங்கள் ஆகக் கூடும் எனத் தோன்றியது. அருகில் இருந்த ஊரில்தான் அந்த பள்ளிக்கூடம் இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
பனி பொழியும் ஓர் இரவில் தனது படிப்பறையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார் அந்த வங்கி அதிபர். 15 ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு நாளின் பொன் மாலைப் பொழுதில் அவர் அளித்த விருந்தில் நடந்த சம்பவம் மனதில் நகர்ந்து கொண்டிருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
ஆழ்ந்து உறங்குபவன் அசைவற்றுக் கிடப்பது போல் பின்னிரவில் அந்தக் கானகம் நிசப்தத்துடன் இருந்தது. மரம், செடி, கொடி என அனைத்தும் துயில் கொண்டுகிடந்தன. சில சிறு காற்றின் அலைக்கேற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தன. குடிசையின் உள்ளே கூரையில் பனியின் சுவடு தெரிந்தது. அம்பறாத்தூணியில்இருந்து கொத்துக் கொத்தாக அம்புகள் பாய்வது ...
மேலும் கதையை படிக்க...
திரு. ப்ரோஸ்கா வெட்டப்பட்ட தனது விரல் நகங்களை சேகரித்து வந்தார். தனது எட்டாவது வயதில் முதல் முதலாக தானாகவே விரல் நகத்தை வெட்டியதிலிருந்தே அவற்றை சேகரிக்கத் துவங்கிவிட்டார். அம்மாவின் உதவி இல்லாமலும் விரல்களைக் காயப்படுத்திக் கொள்ளாமலும் தானே நகங்களை வெட்டியதை நினைத்து ...
மேலும் கதையை படிக்க...
ஞாபக வெளி
பந்தயம்
ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன
நகங்களைச் சேகரிப்பவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)