சிவப்புப் புள்ளிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2014
பார்வையிட்டோர்: 9,799 
 

அவளுக்கு அன்றுதான் முதல்நாள் வேலை. மிகவும் உற்சாகமாக இதுநாள்வரை தனக்காகவும் தொழிலுக்காகவும் கற்றதெல்லாம் பயன்படப்போகிறது என்பதை நினைத்துத் தனக்குத் தானே ‘ஷபாஷ்’ சொல்லி தட்டிக் கொடுத்துக் கொண்டாள் கலைமதி.

தலைமையாசிரியர் அவளைத் தன் அறைக்கு அழைத்து, “பாரம்மா, அட்டவணையெல்லாம் பார்த்தாச்சா? நீ சொல்லிக் கொடுக்க வேண்டியது ஐந்தாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் கணிதமும் அறிவியலும். புரிஞ்சதா?” என்று ஆகக் கடைசியாகத் திட்டவட்டமாகக் கூறினார். “ஆம், விளங்கிருச்சு சார். இப்போது என்னுடைய பாடம்தான். ஐந்தாம் வகுப்புக்குக் கணிதப் பாடம்,” என்று அவள் தொழிலை ஆரம்பிக்கத் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது தலைமையாசிரியருக்குப் புரியவில்லை போலும்.

“பிரியா, இன்னொரு முக்கியமான விஷயம். இந்தப் பிள்ளைங்க எல்லாம் கொஞ்சம் கோளாறானவங்க. ரொம்ப இடம் கொடுத்துடாதே! ரொம்ப கண்டிப்பா நடந்துக்கோ! முடிஞ்சா கையில ரோத்தானோட போ, அப்பத்தான் அடங்குங்க!” என்று முன்னெச்சரிக்கை ஒன்றை செய்தார்.

மாணவர்களிடம் பாசத்தைப் பொழிந்து போதனை செய்ய எண்ணம் கொண்டிருந்த கலைமதிக்கு அவருடைய முன்னெச்சரிக்கை கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தாலும், அன்புக்குக் கட்டுப்படாதவர்கள் யாரும் இல்லை என மனதிற்குள் ஏதோ பழைய வேதாந்தம் ஒன்றைச் சொல்லி ஐந்தாம் வகுப்பைத் தேடிச் சென்றாள்.

மொத்தம் இருப்பது மூன்றே வகுப்பறைகள்தான். ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று பிரித்துவிட்டால் நான்காம், ஐந்தாம், ஆறாம், வகுப்புகள் எங்கு உள்ளன? அந்தப் பள்ளியின் ஒரே கட்டடத்தை இருமுறை சுற்றி வந்து விட்டாள். ஆனால் ஐந்தாம் வகுப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் ஆசிரியர் இல்லாத ஒரு வகுப்பில் இருந்து ஒரு மாணவனைக் கூப்பிட்டு ஐந்தாம் வகுப்பு எங்கிருக்கிறது என்று கேட்டாள். “இதுதான் டீச்சர் அஞ்சாம்பு” என்று கையைக் காட்டிவிட்டு உள்ளே ஓடிவிட்டான்.

கலைமதி வகுப்பறையில் நுழைந்து பார்த்தவுடன்தான் விஷயமே விளங்கியது. இருக்கிற மூன்று வகுப்பறையில் இரு ஆண்டு மாணவர்கள் என வீதம் ஆறு ஆண்டு மாணவர்களுக்குக் ‘கச்சிதமாய்’ இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆக, இந்த வகுப்பு ஐந்தாம் ஆண்டும் ஆறாம் ஆண்டும் பகிர்ந்து கொண்ட வகுப்பு.

‘நியூ கொக்னட்’ தோட்டத் தமிழ்பள்ளி மிகச் சிறிய பள்ளி என்று தெரியும். ஆனால் இந்த அளவு சிறியது என்று அவள் எதிர்பார்க்கவில்லை கலைமதி. மலேசியாவில் ஒட்டுக்கடைகளைப் போல் இன்னும் எத்தனையோ ஒட்டுப் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன என்பதனை அவள் அறியாமல் இல்லை. ஆனால் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்று இதற்கு முன் இதுபோன்ற தமிழ்பள்ளிகளில் கால் வைத்திராத கலைமதிக்கு சற்றே அதிர்ச்சிதான்.

ஒரு உரையில் ஒரு கத்திதான்; அதுபோல ஒரு வகுப்பறையில் ஒரு ஆசிரியர்தான். அப்படி பார்த்தால், எப்படி ஐந்தாம் ஆண்டு மாணவர்களையும் ஆறாம் ஆண்டு மாணவர்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்?

ஏன் பார்க்க முடியாது? ஐந்தாம் ஆண்டில் இருப்பதோ பத்து மாணவர்கள். ஆறாம் ஆண்டில் பன்னிரண்டு மாணவர்கள். இங்கே கொஞ்ச நேரம் சொல்லிக் கொடுத்து விட்டுப் பாடத்தைக் கொடுத்து விடுவோம். இவர்கள் பாடம் செய்யும் நேரத்தில் அங்கே அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம் என்று பல திட்டங்கள் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு கேள்வி வந்து குறுக்கே நின்றது.

நான் ஐந்தாம் ஆண்டுக்குத் தானே சொல்லித் தர வேண்டும்? ஆறாம் ஆண்டுக்கு ஆசிரியர் யார் என்று தேடும் போதுதான் தெரிந்தது, ஐந்தாம் ஆண்டு என்றால் அதில் ஆறாம் ஆண்டும் அடக்கம் என்று.

சரி, பாடத்துக்கு வருவோம் என்று அன்றைய பாடத்தை வெற்றிகரமாக முடித்தாள். வீட்டிலும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகக் கொஞ்சம் வீட்டுப் பாடங்களையும் கொடுத்து வைத்தாள்.

மருநாள் வகுப்பில் கொடுத்தப் பாடத்தைக் கேட்டால் ஒருவரும் வாயைத் திறக்கவில்லை. ஒவ்வொரு புத்தகமாய் எடுத்துப் பார்த்தாள். ஒன்றுமே தேரவில்லை. முதல் நாள் எச்சரிக்கையோடு விட்டுவிட்டாள்.

விடுத்த எச்சரிக்கை எந்த அளவு வேலை செய்திருக்கிறது என்று பார்க்க அடுத்த நாளும் வீட்டுப் பாடத்தைக் கேட்டாள். எவ்வளவு சத்தம் போட்ட பிள்ளையாயினும் இப்போது பார்க்க வேண்டுமே! ஒரு பேச்சு மூச்சு இல்லை. எங்கே அடிவிழப்போகிறதோ என்ற பயம் அவர்களின் கண்களில் நிழலாடுவதைப் பிரியா காணாமல் இல்லை.

வந்த முதல் வாரமே ஆசிரியர் தொழில் எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்து விட்டாள். பிள்ளைகளை அடிக்கவும் மனமில்லை; எக்கேடாவது போகட்டும் என்று தியாகு சாரைப் போலவும் பவானி டீச்சரைப் போலவும் மலாய்மொழி சொல்லிக் கொடுக்கும் அஹ்மாட் அஸாமைப் போலவும் விட்டுவிடவும் முடியவில்லை.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்ற காலத்தில் எத்தனையோ விரிவுரையாளர்கள் தமிழ்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்று ஏற்றியிருந்த உரம், தன்னுடன் படித்த மற்ற சிலருக்கு ஒன்றும் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால், கலைமதிக்கு அப்படியல்ல. ஒரு மாணவனும் பின்தங்கவே கூடாது எனும் லட்சியம் ஆணி போல அழுத்தமாய் அவள் நெஞ்சில் பதிந்திருந்தது. ஆனால் மாணவர்களின் ஒத்துழைப்பைப் பார்க்கும் போது கலக்கம் ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.

திடீரென பக்கத்துக் வகுப்பில் யாரோ ஒரு மாணவன் அலரும் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள்.

“அடிக்காதீங்க சார்! அடிக்காதீங்க சார்!” என்று நான்காம் ஆண்டு மாணவன் ஒருவன் ஆசிரியர் தியாகு கெஞ்சி மன்றாடிக் கொண்டிருந்தான். அவர் விடுவதாக இல்லை. கையில் உள்ள பிரம்பைக் கொண்டு நையப் புடைத்து விட்டார். என்ன ஏது என்று கேட்க மனதில் தைரியமில்லை பிரியாவுக்கு. தியாகுவின் முகத்தில் உள்ள விகாரம், எங்கே தனக்கும் பிரம்படி விழுந்து விடுமோ என்று அஞ்சி மறுபடியும் வகுப்பறைக்குள் ஓடிவந்து நுழைந்து கொண்டாள்.

பாடம் முடிந்தவுடன் இருபது நிமிட ஓய்வு வேளையின் போது அடிவாங்கிய அந்த மாணவனை தேடிக் கண்டுபிடித்து, என்ன காரணத்திற்காக ஆசிரியர் அடித்தார் எனக் கேட்டாள்.

“எனக்கு சார் சொல்லிக் கொடுக்குறது ஒன்னுமே புரியல டீச்சர். அதனால விடையைத் தப்பா போட்டுட்டேன். அதுக்குத்தான் அடிச்சிட்டாரு,” அழுதுகொண்டே கூறினான். அந்த அழுகை, காயத்திற்கு ஆறுதலை எதிர்பார்த்தா அல்லது இயலாமைக்கு அனுதாபத்தை எதிர்பார்த்தா என்று பிரியாவுக்கு விளங்கவில்லை.

தான் ஆரம்பப் பள்ளியில் இப்படியெல்லாமா படித்தோம் என்று யோசித்த அவளுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. தியாகுவைச் சொல்லியும் குற்றமில்லை தான். எவ்வளவு சொல்லிக் கொடுத்தும் மண்டைக்கு ஒன்றுமே ஏறாமல் இருந்தால் பின்னே யாருக்குத்தான் கோபம் வராது?

அதற்காக சிறு பிள்ளையைப் போட்டு இப்படியா அடிப்பது?

அன்பைக் காட்டி ஆதரவைக் காட்டி சொல்லிக் கொடுத்தாலும் ஏன் இவர்கள் சரியாக வீட்டுப்பாடம் செய்வதில்லை? ஏன் அவர்களுக்குப் புரிவதில்லை? போன்ற கேள்விகள் ஆசிரியர் தொழிலை விட்டே ஓடிவிடுகிறேன் என்று அம்மாவிடம் வந்து அழும்வரை விட்டுவிட்டன.

தான் இந்த வேலைக்கு இனி லாயக்கு இல்லை என்றும் அடுத்த வாரமே வேலையை விட்டு நின்று விட்டு அப்பாவின் வியாபாரத்தில் அவருக்கு உதவியாகக் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளப் போவதாகவும் அரற்றினாள்.

“ஏன்டி கலைமதி, பிள்ளைங்க சரியா வீட்டுப்பாடம் கூட செய்யிறதில்லன்னு சொல்லிப் புலம்புறியே, அது எதனால இருக்கும்னு நீ முதல்ல யோசிச்சியா?”

அம்மாவுடைய கேள்வி நல்ல கேள்விதான்.

“சரி! பிள்ளைங்க எதனால வீட்டுப் பாடம் செய்யிறது இல்லன்னு நான் உடனடியா கண்டுபுடிக்கிறேன்”

மருநாள் வகுப்புக்குப் போனபோது எதேச்சையாக ஆசிரியர் தியாகுவைச் சந்தித்தாள். மிகவும் சகஜமாகவும் இயல்பாகவும் பழகுவதைக் கண்டு இவர்தானா அன்று அவ்வளவு விகாரமாக இருந்தார் என எண்ணத் தோன்றியது.

“மாணவனுக்குப் புரியவில்லை என்றால், அடித்தால் மட்டும் புரிந்து விடுமா?” தனக்குள் எழுந்த கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா என்று மனதிற்குள் நடந்த போராட்டம் எல்லையை மீறி வார்த்தைகளாய் கொட்டி விட்டன.

“கேட்கிறேனேன்னு தப்பா நெனச்சிக்காதிங்க சார். நேத்து ஒரு பையன அடிச்சீங்களே, என்ன செஞ்சான் அவன்?” என்று கேட்டாள்.

முகத்தில் கோபமோ சஞ்சலமோ எதுவும் கிடையாது. மிகவும் தெளிவாகவும் இயல்பாகவும் பதில் சொன்னார். “நீங்க இந்த பள்ளிக்குப் புதுசு டீச்சர். இங்க உள்ள பிள்ளைங்களப் பத்தி சரியா தெரியாது. இதுங்க சரியான அறுந்த வாலுங்க! ரோத்தான எடுத்தாத்தான் அடங்குங்க!” என்றார்.

“தலைமையாசிரியர் முதற்கொண்டு எல்லாருமே பயத்தைக் காட்டித்தான் இந்தப் பள்ளியையே நடத்திக்கிட்டு வராங்க போலிருக்கு” என்று எண்ணம் தோன்ற எதிர்த்து இன்னொரு கேள்வி கேட்கா வண்ணம் தியாகு குறிப்பிட்டிருந்த “நீங்க புதுசா வந்த டீச்சர்” எனும் சொல் வாயை மூட வைத்தது.

“பயங்காட்டும் ஆசிரியருக்கும் இந்த மாணவர்கள் கட்டுப்படுவதில்லை; அன்பைக் காட்டும் எனக்கும் இவர்கள் மசியவில்லை. என்னதான் இவர்களிடம் உள்ள கோளாறு?” என யோசித்தாள்.

அன்றைக்கும் ஓரிரு பக்கங்கள் வீட்டுப் பாடங்களைக் கொடுத்தாள் கலைமதி. கண்டிப்பாகச் செய்துவிட்டு வரவேண்டும் என்று உத்தரவையும் பிறப்பித்தாள்.

பள்ளி முடிந்து எல்லாரும் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். இனி இரண்டில் ஒன்று இன்றே எனக்குத் தெரிந்தாக வேண்டும். இந்த மாணவர்களைத் திருத்த வழியுண்டா? இல்லையா? இவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்பதைக் கண்டுபிடித்தே தீருவேன் என்று கங்கணத்தோடு இருந்தாள். மதிய உணவை முடித்துக் கொண்டு நான்கு மணிவாக்கில் நியூ கொக்கணட் தோட்டத்தில் நடைபோட ஆரம்பித்தாள்.

அப்பள்ளியில் பயிலும் முக்கால்வாசி மாணவர்கள் அப்பள்ளி அமைந்திருக்கும் நியூ கொக்கணட் தோட்டத்தில் இருந்துதான் வருகின்றனர். மீதி கால்வாசி மாணவர்கள் பக்கத்தில் உள்ள வீடமைப்புப் பகுதியிலிருந்து வருகின்றனர்.

ஆறாம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கூட்டம் எஸ்டேட் முடக்கில் உள்ள சின்ன திடலில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டாள். விரைந்து ஓடி அந்த இடத்தை அடைவதற்குள், ஆசிரியையைப் பார்த்த அதிர்ச்சியில் பட்டமாவது கிட்டமாவது என்று தலை தெரிக்க ஓடியவர்களில் இருவரைப் பிடித்து விட்டாள் கலைமதி.

“ஏன்டா ஓடுறீங்க?”

பதில் ஏதும் இல்லை; திருட்டு முழியைத் தவிர.

“வீட்டுப் பாடத்த செஞ்சி முடிச்சிட்டீங்களா?”

“இன்னும் இல்ல டீச்சர்”

“ஏன் இன்னும் வீட்டுப் பாடத்தச் செய்யல?”

ஏதோ ஒரு பதில் சொல்ல இருக்கிறது. ஆனால் அதை எப்படிச் சொல்வது என்று அறியாமல் திணரிக் கொண்டிருந்தார்கள். இருவரில் ஒருவன் இன்னும் கொஞ்சம் விட்டால் அழுது விடுவான் போல.

“சரி சரி, இப்பவே போய் வீட்டுப் பாடத்தச் செய்ங்க. நான் பாத்துக்கிட்டே இருப்பேன்!” என்று இருவரையும் விட்டாள். அவர்களைப் போக விட்டுவிட்டு பின்னாலேயே தொடர்ந்து சென்று அவர்களது வீட்டை அடையாளம் கண்டாள்.

தோட்டப்புற வீடுகளுக்கு முன்னால் அந்தி வேளைகளில் ஹாயாக அமர்ந்து காற்று வாங்குவதற்கு ஏதுவாக வளர்த்து விடப்பட்டிருந்த ஆலமரத்தின் கீழ் வைக்கப் பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு முதலில் சிக்கிய மாணவன் ஒருவன் நுழைந்த வீட்டுக்குள் நடப்பதை நோட்டமிட்டாள்.

அவன் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டான். நிச்சயமாக அது வீட்டுப் பாட புத்தகமாகத் தான் இருக்க வேண்டும். நல்ல வேளை, இங்கிருந்து பார்த்தால் தெரியக் கூடிய இடத்தில்தான் அமர்ந்திருந்தான்.

ஐந்து நிமிடமாக வைத்தக் கண் மாறாமல் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு பென்சிலை வைத்துத் தலையை சொறிந்தான். பாடம் புரியவில்லை என்பது புரிந்து விட்டது. முதுகை வளைத்து புத்தகத்தில் கையை ஊன்றியிருந்தவன் நேராக நிமிர்ந்து இந்தப் பக்கத்தையும் அந்தப் பக்கத்தையும் திருப்பித் திருப்பிப் பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை போலும். அங்கும் இங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். பையனுக்கு படிக்க முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. அடுத்து என்ன செய்கிறான்?

அவனைத் தாண்டித் தாண்டி குசுனிக்கும் முற்றத்துக்குமாய் கத்தரிக்காய் கொய்ய ஒருமுறை, கறிவேப்பிலை உறுவ ஒருமுறை என்று ஓடிக் கொண்டிருந்த அம்மாவின் கைலியை பிடித்து நிருத்தினான் அவன்.

“அம்மா, தாவரங்க மூச்சு விட்டா ஒக்ஸிஜன் வருதுன்னா மனுசன் மூச்சு விட்டா என்னமோ வரும்னு டீச்சர் சொன்னாங்க. அது என்னம்மா வரும்?” என்று கேட்டான்.

“சே! போடா! கறி அடுப்புல கொதிச்சிக்கிட்டு இருக்கு. மனுசன் என்னாத்த உடுறான், தாவரம் என்னாத்த உடுதுன்னு கைலிய புடிச்சிக்கிட்டு… மொதல்ல கைலிய உடுடா!” என்று கைலியை வெடுக்கென விடுவித்துக் கொண்டு அரக்கப் பறக்க குசுனிக்கு ஓடினாள்.

பக்கத்தில் அக்காவைக் கேட்கலாம் என்று போனால், அவள் டீவி சீரியலில் மும்முரமாய் இருக்கிறாள். அண்ணனும் அப்பாவும் இன்னும் வேலை முடிந்து வரவில்லை. வந்தால் மட்டும் நான்கு கால்களால் பாய்ந்து சொல்லிக் கொடுத்துவிட்டுத் தான் அடுத்த வேளையைப் பார்ப்பார்கள்! வரும்போதே கையில் அப்பா கள்ளோடுதான் வருவார். அண்ணன் குளித்துவிட்டு மைனர் மாதிரி கிளம்பி விடுவான், ஊர் சுற்ற.

அறைமணிநேரம் புத்தகத்தோடு போராடிப் பார்த்துவிட்டு புண்ணியமில்லை என்று தெரிந்தவுடன், புத்தகத்தை மூடிவைத்து ஒரு மூலையில் கிடாசிவிட்டு வேகமாக வெளியே வந்தான். கூட்டாளிகள் யாராவது கண்ணில் படுகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.. ஆனால் கண்ணில் அகப்பட்டது என்னவோ கலைமதிதான்.

கலைமதியை அங்கு அவன் எதிர்பார்க்கவே இல்லை. கண்கள் மிரண்டு அரண்டு போனவன் தலைதெரிக்க மீண்டும் வீட்டுக்குள்ளேயே ஓடி ஒளிந்துக்கொண்டான்.

ஏதோ ஒன்று கலைமதிக்கு விளங்குவது போல இருந்தது. இன்னொரு ஆறாம் ஆண்டு மாணவன் வீட்டில் என்ன நடக்கிறது என்று அவன் வீட்டுக்கு முன்பு அமர்ந்து கொண்டாள்.

அடுத்த மாத்திரத்திலேயே அங்கு என்ன நடக்கப் போகிறது என்று அனுமானிக்க முடிந்தது. அந்த மாணவன் வீட்டில் மொத்தம் ஏழு பேரோ எட்டு பேரோ தெரியவில்லை. ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளி வீட்டுக்கு இந்தச் சனத்தொகை சற்று மிகைதான். அது ஏன், அதிகக் குழந்தைகள் பெற்று வளர்த்தெடுக்கும் வசதி உடைய தம்பதிகள் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளோடு நிருத்திக் கொள்கிறார்கள்; ஆனால் படிப்பறிவு குறைந்த, ஏழை எளிய தம்பதியினர் மட்டும் இறைவன் கொடுத்த வரம் என்று ஏழெட்டைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை. ஒருவேளை இது தலைகீழாய் இருந்தால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட நிறைய வாய்ப்புண்டு என எண்ணம் பறக்க அதைச் சற்று புறந்தள்ளி வைத்துவிட்டு நடப்பதை நோட்டமிட்டாள்.

காது கிழிய ரேடியோவைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தான் ஒருவன். டீவி ‘சேனலுக்காக’ சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் இருவர். கடமுட சத்தம் போடும் துணி தைக்கும் இயந்திரத்தில் துணியைத் தைத்துக் கொண்டிருந்தார் அம்மா, தரையைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தாள் ஒருத்தி. ஒருத்திக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி. இவர்களுக்கிடையே எப்படி அவன் படிக்கிறான்?

கலைமதிக்கு முழுவதும் விளங்கி விட்டது.

இங்கே கல்விக்கு யாருமே முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கல்வி கற்க பிள்ளைகளுக்கு ஒரு நல்ல சூழலை யாருமே ஏற்படுத்தித் தரவில்லை. குழந்தைகள் படிப்பதையே வெட்டியான ஒன்றாகப் பார்க்கும் சமுதாயச் சூழலுக்கிடையே இம்மாணவர்கள் இவ்வாறன்றி வேறெவ்வாறு இருப்பர்?

“இனி நான்தான் இவர்களுக்குப் பெற்றோர்! எப்படி இவர்களை வழிக்குக் கொண்டு வருவது என எனக்குத் தெரியும்.” மனதிற்குள் உறுதி பூண்டாள்.

மருநாள் காலையில் தலைமையாசிரியரைச் சென்று சந்தித்தாள் பிரியா.

“சார், இனிமேல் சாயந்திரம் மூனு மனியில இருந்து ஆறு மணி வரைக்கும் ஐந்தாம் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு அந்தி வகுப்பு வைக்க அனுமதி கொடுங்க முடியுமா? இந்தப் பிள்ளைங்களுக்கு கூடுதல் வகுப்பு வைச்சாதான் இன்னும் நல்லா சொல்லிக் கொடுக்க முடியும் சார். அதுக்கு உங்க அனுமதி வேணும்”

தலைமையாசிரியர் ஒன்றும் சொல்லவில்லை. புருவத்தை உயர்த்தி ஏளனத்தைப் பிரதிபலிக்கச் சின்னதாய் புன்னகைத்தார்.

“அவங்களுக்கு வீட்டில் படிக்க சரியான சூழல் இல்ல சார். அந்த சூழல நானே உருவாக்கித் தரத்தான் இந்த முயற்சியே!”

“கலைமதி, ஏற்கனவே அந்தி வகுப்பு எல்லாம் வச்சுப் பாத்தாச்சு. பயன் ஒன்னும் இல்ல. அதனாலதான் இப்பவெல்லாம் அந்தி வகுப்பே வைக்கிறதில்ல”

“எனக்கு நம்பிக்கை இருக்கு சார். என்னை நீங்க நம்பலாம். இந்த மாணவர்களை எப்படியாவது கெட்டிக்காரங்களா ஆக்கனும்”

தலைமையாசிரியருக்கு அதைத் தடுக்க மனமில்லைதான். ஆனால் இதற்கு முன் நடந்த அக்கப்போரெல்லாம் தான் அவருக்குத் தெரியுமே! அதைச் சிந்தித்துப் பார்க்கும் போதுதான் முடிவெடுக்கத் தயக்கம் ஏற்பட்டது.

ஓரிரு வாரத்தில் அனுமதியும் கிடைத்தது.

முன்பெல்லாம் ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் வீட்டுப் பாடம் கொடுப்பார்கள். மாலை வகுப்பில் மேற்கொண்டு சில பயிற்கிகள் வழங்குவார்கள். மேலும் மேலும் பாடத்தைக் கொடுப்பார்களே ஒழிய அதைச் செய்விக்க வழியைக் கண்டபாடில்லை. ஆனால் கலைமதி வீட்டுப் பாடத்தைக் கொடுத்துவிட்டு அதைச் செய்விக்க அந்த மாலை வகுப்பைப் பயன்படுத்திக் கொண்டாள். வகுப்பில் போதித்த ஒவ்வொன்றையும் வீட்டுப் பாடப் பயிற்சியில் மறுபடியும் விளக்கி அந்தப் பாடத்தைச் செய்து முடிக்க வைப்பாள்.

அடுத்த நாள் வகுப்பு நேரத்தில், யார் வீட்டுப் பாடத்தைச் செய்து விட்டார்கள் என்ற கேள்விக்கு எல்லாருமே கையுயர்த்த வைத்தாள்.

மாணவர்களின் அடைவு நிலையும் கட்டொழுங்கும் முன்பைவிட சன்னமாக முன்னேற்றம் கண்டிருப்பதைக் கண்டு இதர ஆசிரியர்கள் பெருமை பட்டதும் உண்டு, கலைமதியின் மேல் பொறாமை பட்டதும் உண்டு.

ஆறாம் ஆண்டு மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிந்தவுடன் அதன் முடிவுகளை அவள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். குறைந்தபட்சம் யாரும் சிவப்புப் புள்ளிகள் வாங்கியிருக்கக் கூடாது என்பதே கலைமதியின் பிரார்த்தனை.

ஆனால் அவ்வாண்டு தேர்வு முடிவுகளோ தேராத முடிவுகளாக இருந்ததில் கலைமதிக்கு முதலில் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தந்தாலும், ஓர் உண்மை அவள் உள்ளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிய வைத்தது.

“உன்னைப்போல் மற்ற ஆசிரியர்களும் இருந்திருந்தால் இந்த மாணவர்களுக்கு ஏனடி சிவப்புப் புள்ளிகள்?” என தனக்குத் தானே ஆறுதல் சொல்லியபடி அடுத்தாண்டு ஆறாம் வகுப்பு போகத் தயாராய் இருக்கும் ஐந்தாம் ஆண்டு மாணவர்களை ஏதோ ஓர் எதிர்பார்ப்புடன் தேடிச் சென்றாள்.

(தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் 2009, நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *