கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 17,167 
 

பசி தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

அந்த இரண்டெழுத்து அரக்கன் மட்டும் இல்லாவிட்டால் என் வாழ்வின் கறை படிந்த அந்த அச்சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை.இன்று அதுநடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. வாழ்க்கை இப்போது எனக்கு சில விதிகளை உருவாக்கி தந்திருக்கிறது. சாலையில் நடந்து போகும் யாரை நிறுத்தி என் பெயரைச் சொன்னாலும் சட்டென பார்வை விரித்துப் புருவம் உயர்த்தி வியப்புடன் பார்ப்பார்கள்.

எனது இயக்கதில் இதுவரை இரண்டு படங்கள் வெளியாகி விட்டன.இரண்டுமே வெற்றிப்படங்கள். இப்போது மூன்றாவது படத்திற்கான வேலையில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். முந்தைய படங்களின் வணிகத்தன்மை கொஞ்சம் இல்லாமல் எனது அசலான கலைத்தன்மையுடன் ஆன்மாவுக்கு நெருக்கமாக இந்த படத்தை எடுத்து விடவேண்டும் என்ற உந்துதலடன் இரவு பகலாக மெனக்கெடுகிறேன்.

கிட்டதட்ட எல்லமே முடிந்துவிட்டது இன்னும் ஒரே ஒரு கதாபாத்திரம் “கருவேப்பிலை” ஒரு வேலைக்காரி பாத்திரம்.படத்தில் சிறிதளவே வ்ந்தாலும் துடுக்கான அந்த பாத்திரம் படத்தின் ஜீவனோடு சம்மந்தப்பட்டது. அதற்கு மட்டும் சரியான நடிகை அமையவில்லை.இன்றும் அசலான முகத்தை எனக்கு காண்பிக்காவிட்டால் ப்ராஜக்டை விட்டே அனுப்பிவிடுவேன் என ஏஜண்டை கடுமையாக எச்சரித்தேன். அதன் விளைவு தான் என் கையில் இப்போதிருக்கும் இந்த ஐந்து புகைப்படங்கள்.அதில் ஒன்று இந்த கதை காரணமாக இருக்கும் சிம்லியினுடையது.
புகைபடத்தில் இருக்கும் இந்த முகத்தை கூர்ந்து கவனித்தேன்.பன்னிரண்டு வருடங்களுக்கு முன் பாண்டியன் மேன்ஷனில் பசியைத் தீர்த்த அதே முகம் ;அதே கண்கள்;வெகுளித்தனமான சிரிப்பு.

’’அண்ணா இட்லி வாங்கலியாண்ணா’’

குரல் என்னை பன்னிரண்டு வருடங்களுக்கு முந்தைய ஒரு கோடைக்காலத்து வெக்கை நிறைந்த அறையில் தூக்கிப் போட்டது.பசி நிறைந்த நாட்களின் அந்த பறவைகளின் சப்தம் இப்போதும் எனக்குள் அவ்வப்போது கேட்பதுண்டு.

திருவல்லிக்கேணி பாண்டியன் மேன்ஷனைத் தெரியாத வெளியூர் வாசியே இருக்கமுடியாது. அப்படி ஒன்றும் அது வசதியான மேன்ஷன் அல்ல.பெரிய பெரிய மரக்கதவுகள்.காரை பெயந்த சுவர்கள் என தோற்றமே அதன் வயோதிகத்தைச் சொல்லும் இருந்த போதிலும் அந்த மேன்ஷனுக்கென ஒரு ப்ரத்யோக வசீகரம் இருந்தது.திட்டுத்திட்டான அழுக்கும் ஆங்காங்கே எண்ணெய்ப் பிசுக்குமாக காணப்படும் அதன் பால் வெள்ளை நிறமும் பச்சை நிறத்திலான ஜன்னல் மரக்கதவுகளும் அந்த கட்டிடத்திற்கென ஒரு பாரம்பர்யத்தின் வாசனையை உருவாக்கித் தந்தன.

“ப” வடிவத்திலிருந்த அந்த மூன்று அடுக்கு கட்டிடத்தின் நட்ட ந்டுவில் ஒரு அத்தி மரம்

பகல் நேரத்தின் பறவைகளின் இரைச்சல் அங்கே எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும்

இப்போதும் கூட அலுவல் காரணமாக சாப்பிட நேரமின்றிபசியுடன் தவிக்கும் நிமிடங்களில் அந்த பறவைகளீன் சத்தம் மனசுக்குள் கேட்பதுண்டு.காரணம் அந்த மேன்ஷனில் நான் கழித்தது என் பசி மிகுந்த காலங்களை…..

அப்போது நான் சென்னைக்கு வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகியிருந்தது.துர்பாக்கியம் அப்போது என் முதுகில் இருந்து எல்லா நாட்களிலும் மோசமான இடங்களுக்கு என்னை விரட்டிக்கொண்டிருந்தது.உதவி இயக்குநராக வாய்ப்பு தேடி பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்தது தான் மிச்சம்.தங்குவதற்கு கூட சரியான இட வசதி இல்லாத சமயத்தில் தான் இந்த மேன்ஷன் எனக்கு அறிமுகமானது.

இந்த மேன்ஷனில் எண் 28ம் அறையில் தங்கியிருந்த என் ஊர் நண்பன் கம்ப்யூட்டர் படிப்புக்காக சென்னையில் வசிப்பவன். மே, ஜூன் மாதங்களில் அவன் ஊருக்குச்செல்லவேண்டியிருந்ததால் அவனது அறையில் என்னைத் தங்கிக்கொள்ள அனுமதித்தான்.அவனுடைய அப்போதைய உதவிக்கு நான் இப்போது என்ன செய்தாலும் ஈடாகாது.என்றாலும் அதில் அவனுக்கும் ஒரு சுயநலம் இருந்தது.
எங்கே அறையைக்காலி செய்தால் மீண்டும் இங்கே இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அவனது அச்சம்தான் என்னை அங்கே தங்க வைத்தது.

அந்த இரண்டு மாத வாடகைப் பணமும் பின்னாளில் பணம் கிடைத்தபிறகு தந்தால் போதும் எனச் சலுகையும் தந்திருந்தான்.
மறுநாளே எனது சொத்தாக நான் சேகரித்து வைத்திருந்த சில புத்தகங்களையும் ஆடைகளையும் அழுக்கு ஷுவையூம் ஒரு பெட்டியில் போட்டு நிரப்பி அந்த மேன்ஷனுக்கு குடி பெயர்ந்தேன்.அடுத்த நாள் காலை எனக்கு அறிமுகமான பெண்தான் ’சிம்லி’.நீல பாவாடை, வெள்ளைச்சட்டை மடித்துக்கட்டப்பட்ட இரட்டைச்சடை பின்னலில் பச்சை ரிப்பனுடன் பள்ளிக்கு போகும் அவரசத்துடன் ஒரு கையில் இட்லி பொட்டலங்கள் நிறைந்த ஒயர் கூடையும் இன்னொரு கையில் எவர்சில்வர் சாம்பார் வாளியுமாக அறைக்குள் வந்து நின்றாள்.

“அண்ணா இட்லி வாங்கலியாண்ணா….”?

“யாரும்மா….”

“இட்லிண்ணா”

“வேணாம்மா நான் கீழே கடையில் சாப்டுக்கறேன்…”

அவள் போக வில்லை இட்லி கூடையை கீழே வைத்து விட்டு என்னைப் பார்த்து சிரித்தாள்.

“என்னம்மா சிரிக்கற”

“ஒண்ணுமில்லைண்ணா நீங்க டைரக்டுருங்களா….”

“யாரும்மா சொன்னாங்க ”

“தோ இந்த ரூம்ல இருப்பாரே கண்ணாடி போட்டுக்னு ஒரு அண்ணன் அவரு சொன்னாரு…. நாளையிலருந்து நம்ம ரூம்ல புதுசா ஒரு டைரக்டர் தங்கப்போறாருன்னு”

இன்னும் ஏதோ சொல்ல வந்த அவள் கண்களில் மகிழ்ச்சியும் பரவசமும் மின்னிக்கொண்டிருந்தன.

“பரவாயில்லையே நல்லா பேசறீயே …பொட்டலம் எவ்ளோம்மா….”

“அஞ்சு ரூபான்னே… ஒன்னு கொடுக்கட்டா…..”

அவளே ஒரு பொட்டலத்தைப்பிரித்து வாளியைத்திறந்து இட்லியின் மேல் சாம்பாரையும் ஊற்றித் தந்தாள்.

“எங்க ஸ்கூலுக்குகூட போன வருஷம் ஒரு டைரக்டரு வந்தாருண்ணா இப்போ கூட ஒரு படம் வந்துச்சே “குயிலு”ன்னு,அந்தப் படத்துல ஸ்கூல் சீன்ல ஒரு பொண்ணு நடிச்சதே அது எங்க ஸ்கூல்தாண்ண…” என்னைக்கூட அப்ப வரிசையில நிகச்சொன்னாங்க டைரக்டர் கையில ஒரு போட்டோவை வெச்சிக்கினு என் முகத்துல கூட வெச்சிப்பாத்தாரு……”

“……அப்புறம்…..”

“என்னாச்சின்னு தெரியலைண்ணா…. ’டி’ செக்ஷன்ல இருக்குற பார்வதியை கூட்டிக்கினு போய்ட்டாங்க … அவதாண்ணா அந்தப் படத்துல நடிச்சுருந்தா…

அதன் பிறகு இரண்டு நாட்களாக தொடர்ந்து காலையில் என் அறைக்கு வருவதும் இட்லி பொட்டல ஒயர் கூடையை என் அறையிலேயே வைத்துவிட்டு ஒவ்வொன்றாக கையிலெடுத்துச்சென்று மற்ற அறைகளுக்குத் தருவதுமாக இருந்தாள்.

அறைக்கு வந்த நான்காவது நாளில் துவங்கியது எனக்கான பிரச்சனை.வர வேண்டிய பணம் எதுவும் கைக்கு வராததால் பெரிய நெருக்கடி.புதிய இடத்திற்கு வந்தால் இது தான் பிரச்னை.
பழைய இடமாக இருந்தால் கை மாத்தாக ஏதாவது வாங்கி பிறகு திருப்பிக் கொடுத்து விடலாம்.

ஆனால் இங்கே யாரையும் தெரியாது.அப்படியே தெரிந்தாலும் கவுரவப்பிரச்னை.

காலையிலிருந்தே பசி கிள்ள ஆரம்பித்தது.சிம்லி வரும் நேரமாகப் பார்த்து கதவை அடைத்து வைத்திருந்தேன்.இரண்டு முறை தட்டிப் பார்த்து விட்டுப் போய் விட்டாள்.

கடன் கேட்டு சாப்பிட்டிருக்கலாம்.ஆனால் நான் அப்படி செய்யாததற்கு கவுரவ பிரச்சனை மட்டும் காரணமல்ல.சிம்லியின் அம்மா தான் ஒரே காரணம்.கடன் மட்டும் கொடுக்கவே கூடாது என சிம்லியிடம் கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் பாடம் எடுத்து அனுப்பி வைப்பாளாம்.முன்னொரு முறை யாரோ கடன் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு கணக்கில் எசகு பிசகாக மாற்றிச்சொல்ல மேன்ஷனுக்குள் சிம்லியின் அம்மா வந்து அத களம் பண்ணிவிட்டாளாம்.அதிலிருந்து சிம்லியிடம் யாரும் கடன் சொல்வதில்லை.அவளும் கடன் கொடுப்பதில்லை.இவையெல்லாம் இடைப்பட்ட நாளில் நான் வாட்ச்மேன் மூலமாகத் தெரிந்து கொண்ட விஷயங்கள்.

இதன் காரணமாகத்தான் சிம்லி வந்த போது கதவைக்கூட திறக்காமல் அமைதியாக இருந்து விட்டேன்.

ஆனால் கொடிய பகல் பொழுது வந்தது.

பசி என்னை மிகவும் இம்சித்தது.

கூடாததற்கு இந்த பறவைகளின் சத்தம் வேறு.

அறைக்கும் வராந்தாவுக்குமாக நடந்து கொண்டிருந்தேன்.

மாலை கடற்கரைச் சென்றேன்.இன்னும் ஒருநாள் ஓட்டிவிட்டால் போதும் திங்கள்கிழமை ஒரு நண்பனின் அலுவலகத்திற்கு சென்று பணம் வாங்கி சமாளித்துவிடலாம்.மறுநாள் காலை பசியுடன் விடிந்தது.தலை சுற்றல் வேறு.

காலையில் சிம்லி கூடையுடன் வந்தாள்.

நான் அமைதியாகச்சிரித்தேன்

“இட்லி வாங்கலியாண்ணா”

“உடம்பு சரியில்லைம்மா”

“கூடை இங்கயே இருக்கட்டும்ண்ணா”

வழக்கம் போல கூடையை வைத்துவிட்டு இரண்டொரு பொட்டலங்களுடன் மற்ற அறையை நோக்கிச் சென்றாள்.என் முன் இட்லிப் பொட்டலங்கள்.என் வயிற்றிலோ பசி.

அவள் திரும்பி வந்தாள்.நேரமாகிவிட்டது என அவசரத்துடன் கூறிக்கொண்டு கூடையையும் வாளியையும் எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

நண்பர்களே இந்த இடைப்பட்ட நேரத்தில் நான் செய்தது கேவலமான் காரியம்.என்றாலும் என் நிலையில் வேறு யார் இருந்தாலும் இதையே செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.நான் என் கரியத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை.என்றாலும் இதை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதன் மூலம் ஏதோ என் மனம் ஆசுவாசப்படுகிறது என வைத்துக்கொள்ளுங்கள்.

சிம்லி சென்றதும் அவசர அவசரமாக அந்த இட்லி பொட்டலங்களை பிரித்து அறையிலிருந்த சர்க்கரையைப்போட்டு வயிற்றில் தள்ளினேன்.பசியில் விழி பிதுங்கி நீர் தள்ளியது.கவனமாக அந்த பொட்டல காகிதத்தை மடித்து ஒரு உறைக்குள் போட்டு பத்திரப்படுத்திக்கொண்டேன்.வெளியே போகும் போது குப்பையில் போட, அடுத்த __ந்தாவது நிமிடம் வெளியே சத்தம் கேட்டது.சிம்லியின் அம்மா கூடவே சிம்லியின் அழுகுரல்

“எவன் கிட்டடி குடுத்த சொல்லு..”

“நானே அஞ்சுக்கும் பத்துக்கும் நாய் படாத பாடுபடறேன். நீ என்னடின்னா துட்டைத் தாரவாத்துட்டு வந்து நிக்கற,இட்லி குடுத்துட்டு காசை ஒழுங்காவாங்கினா தானா இருக்கும்.நீ ப்ராக்கு பாத்துக்குன்னு இருந்தா…..”

சிம்லியின் முதுகில் அடிவிழுந்தது.

எனக்கு வலித்தது.

சிம்லியின் அழுகுரல் எனக்குள் குற்ற உணர்ச்சியைத் தூண்டியது.அந்த அப்பாவிச்சிறுமி அடி வாங்க நான் தான் காரணம்.

சட்டென ஒரு பயம் அடிவயிற்றைக் கவ்வியது.

ஒருவேளை சிம்லி என்னை காட்டிகொடுத்துவிடுவாளோ!

அதோ இவரு தாம்பா அந்த இட்லி திருடன் …. அந்த டைரக்டர் இட்லியை திருடிட்டாருப்பா….
..
யார் யாரோ என் முதுகைக் காண்பித்து பேசுவது கேட்டது.மவுனமாய் அறையை விட்டு வெளியே வராமல் இருந்துவிட்டேன்

அடுத்த சில நொடிகளில் சத்தம் முழுவதுமாக அடங்கியது.அதன் பிறகு வெகு நேரம் சிம்லியின் அழுகுரல் எனக்குள் தொடர்ந்து ஒலித்து இம்சித்துக் கொண்டிருந்தது

திங்கட்கிழமை வந்தது.என் கவலைகள் தீர்ந்தன.

தொடர்ந்து ஒரு வாரத்துக்கு நான் சிம்லி வரும் நேரத்தில் முகத்தைக்காட்ட வெட்கப்பட்டு அறைக்குள் அடைந்து கிடந்தேன்.
சில நாட்கள் சென்றபின் இந்தச் சம்பவம் முழுசாக என் மனதை விட்டு நீங்கிய ஒரு காலையில் வாசல் பக்கமாக நின்றிருந்த போது கூடையுடன் சிம்லி வருவதைப்பார்த்தேன்.அவள் என்னைப் பார்த்து வழக்கம் போல “இட்லி வாங்கலியாண்ணா” எனக் கேட்பாள் என எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். என்னைப் பார்த்து எதுவும் பேசாமல் கடந்து சென்றாள்.எனக்கு யாரோ பின் மண்டையில் அடித்ததைப்போலிருந்தது.

அதன் பிறகு என் வாழ்க்கை எங்கெங்கோ உழன்று திரிந்து இறுதியில் உத்வி இயக்குனராக மாறி படிப்படியாக வளர்ந்து இன்று இயக்குனராகப் பேரும் புகழும் வசதியுமடைந்து விட்டேன்.ஆனாலும் என் பசி காலத்து அந்தப் பறவைகளின் சத்தம் எப்போதாவது ஒரு முறை என் நினைவில் வ்ரும் போதெல்லாம் சிம்லியின் முகம் என் நினைவில் ஆடும்.

அதனால் தான் இம்முறை அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் சட்டென பன்னிரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் அவளை என்னால் அடையளம் காண முடிந்தது. அன்று மாலையே ஏஜெண்டிடம் புகைப்படத்திலிருந்த மூவரைத் தேர்வு செய்து மறுநாள் தேர்வுக்கு அழைத்து வரும்படி கூறியிருந்தேன்.அதில் சிம்லியும் ஒருத்தி.காலையில் அலுவலகத்தில் நுழையும் போதே மூன்று பெண்களையும் பார்த்து விட்டேன்.

அறைக்குச் சென்று அமர்ந்து சில நிமிடங்களில் மூவரையும் அழைத்து வரும்படி கூறியிருந்தேன். சிம்லியின் தோற்றம் மாறியிருந்தது.நான் இரண்டொருமுறை அவள் என்னை அடையாளம் காண்கிறாளா எனக் கூர்ந்து கவனித்தேன் .

ஏஜெண்டை அழைத்து அதில் சிம்லியை அந்தப் பாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பதாகக் கூறினேன்.ஏஜெண்டுக்கு ஆச்சர்யம்
அரை மணி நேரம் கழித்து என் உதவியாளன் மகேஷ் என் அறைக்குள் வந்தான்.

“என்ன மகேஷ்”

“சார் அந்தப் பொண்ணு நடிக்கமாட்டேன்னுடுச்சாம்”

ஏன் என நான் மகேஷைக் கேட்கவில்லை

நன்றி: அமிர்தம் சூர்யா
கதிர்பாரதி
(ஜனவரி 2009 கல்கியில் பிரசுரமானது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *