தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,142 
 

கெடாவ எப்ப வெட்டுவீங்க… மணி இப்பவே ரெண்டாயிடுச்சு… எப்ப கரகம் எடுத்துக், கூழ ஊத்தி, பொங்க வச்சு, கெடா வெட்டி சோறு போடுறது… கோயிலுக்கு வந்த சனமெல்லாம் பொழுதோட ஊர் போய் சேர வேண்டாமா…” பூசாரியிடம் கோபித்துக் கொண்டார் சம்பந்தி.

வருடா வருடம் ஆடி மாதம் பொண் வீட்டில் அவர்கள் குல தெய்வத்துக்குப் படையல் போடுவது வழக்கம். பொண்ணும், மாப்பிள்ளையும் கூப்பிட்டதால்தான் தட்டாமல் வருவார்கள். அது மட்டுமில்லை. மாப்பிள்ளை கரகம் வேறு எடுப்பதால் சம்மந்தி வரவேண்டும் என்பது அந்த ஊர் வழக்கம். ஆனால் இந்த வருடம் பூசாரியும், பம்பை உடுக்கை அடிப்பவர்களும் தாமதமாக வந்ததால் சற்று கோபமானார் சம்பந்தி. காரணம் காலையிலிருந்து இதுவரை சாப்பிடவில்லை. மதியம் கெடா வெட்டி… கறிச் சோறு சாப்பிடலாம் என்று காத்திருந்தவருக்கு, நேரம் ஆக ஆக எரிச்சலானார்.

சாமிக்கெடாஅருகிலிருந்த புங்க மரத்தில் ஆட்டைக் கட்டி வைத்திருந்தனர். அதற்குப் பக்கத்திலிருந்த மரத்தில் வேப்பந் தழையை ஒடித்து வந்து ஆட்டுக்குப் போட்டார்.

“”கொஞ்ச நேரத்துல கறியாகப் போற… நல்லா தெம்பா சாப்புடு…” கைகளிலும் அக்குள்களிலும் வைத்திருந்த தழையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டார். அவர் ஆட்டின் அருகில் சென்றாலே அது அவரை முட்ட முட்டதான் முயற்சித்தது.

பூசாரி பூங்கரத்தைத் தங்கத் தேர்போல பூக்களால் தகதகவென ஜோடித்துக் கொண்டிருந்தார். அதன் உச்சியில் எலுமிச்சம் பழத்தை வைத்தார். அதற்கு முழு நிலாப் போல் சிவப்பை நடுவில் பூசினார்.

மாப்பிள்ளையும் அவரது அண்ணன், தம்பிகளும் பக்கத்தில் ஓடும் காவேரி ஆற்றில் குளித்து முடித்து மஞ்சள் துணி கட்டி, விபூதி பூசி நின்றிருந்தனர். கூட்டம் கூடி நின்றது. சாமி உத்தரவு கொடுத்தால்தான் கரகத்தை எடுப்பார்கள். அதுவரை சாமி பாட்டு பாடியும், பம்பையையும், உடுக்கையையும் மாற்றி மாற்றி அடித்தும் யார் மேலாவது சாமி வரவழைப்பார்கள். அதற்குள் வானத்தில் கருடன் தென்பட்டால் கூட கரகத்தை எடுத்துவிடுவார்கள்.

“”என்ன பூசாரி.. என்ன மசமசன்னு நின்னுகிட்டிருக்க… சீக்கிரம்…” துரிதப்படுத்தினார் சம்பந்தி.

நேரம் ஆனாலும் ஆட்டுக் கறியின் காரசாரம் அவருடைய பொறுமையைக் கட்டிப் போட்டது.

ஆடு முட்டினாலும் பரவாயில்லை என்று அதனருகில் சென்று எங்கோ வேடிக்கைப் பார்ப்பதுபோல் அதன் தொடைப் பகுதியையும், உடல் பகுதியையும் தொட்டு நன்றாகச் சதைப் பற்றாக உள்ளதா என்று ஆராய்ந்து கொண்டிருந்தார் சம்பந்தி. மரநிழலில் நின்றிருந்தாலும் அவ்வப்போது தேங்காய் பூ துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

பூசாரியும், பம்பை உடுக்கைகாரர்களும் சாமியை உருக்கம் உருக்கமாக வர்ணித்துப் பாடிக் கொண்டிருந்தனர்.

“”அம்பிகையே வாரும்மம்மா….

அனைவரையும் கண் பாருமம்மா

ஆத்தா உன்னை விட்டா…

அகிலத்தில் யாரிருக்கா… எங்களுக்கு

பூவாலே பொன் கரகம்

பூட்டி வச்சேன் பாரம்மா

பூவாத்தா உன் அருளால்

பூங்கரகம் எடுத்துவர – எங்களுக்கு

ஆத்தா

ஆணையிடு ”

பூசாரி உரக்கப் பாடிக் கொண்டிருந்தார். கருடன் காட்சி தரவே கோவிந்தா, கோவிந்தா என்று பெருங்குரலெடுத்து ஆணும், பெண்ணும் கத்தினர்.பூங்கரத்தைப் பூசாரி தூக்கி மாப்பிள்ளைக்கு வைத்தார். மற்ற சின்ன கரகங்களை பங்காளி வீட்டு பிள்ளைகள் எடுத்துக் கொண்டனர்.

கூட்டத்தில் ஒருவர், “”சம்மந்தி, ஆட்ட அவுத்து புடிச்சுக்குங்க…” சொன்னதுதான் தெரியும் கூட்டத்தில் சொன்னவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. சம்பந்திக்கு விட்டு செல்ல மனமில்லை. அவிழ்க்கவும் முடியவில்லை. வெல்ளை வேட்டி சட்டையில் மைனர் போல இருந்த சம்பந்தி ஆட்டை எப்படிப் பிடித்து இழுத்து வருவார். வேறு வழி பெண்ணைக் கொடத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு ஆட்டை அவிழ்த்ததுதான் தாமதம், ஏன் அவிழ்த்தோம் என்றாகிவிட்டது. அவர் ஒரு பக்கம் இழுக்க, அது ஒரு பக்கம் இழுக்கிறது. இது ஆடா இல்லை மாடா என்று கூட சில நேரங்களில் அவருக்குச் சந்தேகம் வந்தது. அவரால் இழுக்க முடியாமல் அருகில் போய்க் கொண்டிருந்த ஒருவரிடம் கயிற்றை நைசாக அழுத்தினார்.

“”ஆட்டயெல்லாம் சம்மந்தி தான் கோயிலுக்கு இட்டுக்கிட்டு வரணும்” கும்பலில் அவர் சொல்ல சம்பந்தி வாயைத் திறக்காமல் அதை இழுத்துப் போராடிக் கொண்டிருந்தார்.

பம்பை உடுக்கை அடித்துச் செல்ல செல்ல கரகம் பின் செல்ல மக்கள் அதன் பின் ஒவ்வொருவராகச் சென்று கொண்டிருந்தனர் கோவிலுக்கு.

கெடா வெட்டி கறிச் சோறு போடப் போகிறார்கள் என்று தெரிந்ததும், ஊரில் பாதிப் பேர் இங்கேதான் கோவிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கோவிலை நெருங்க நெருங்க ஒலி பெருக்கியின் சத்தம் அதிகமாகிக் கொண்டே போனது.

எப்போது போய்ச் சேருவோம் என்றாகிவிட்டது சம்பந்திக்கு. புலி வாலைப் பிடித்தது போல் விடவும் முடியாமல், பிடிக்கவும் முடியாமல் தவித்தார். ஆவென்று கத்த வேண்டும்போல் தோன்றியது. ஆனால், கத்த முடியவில்லை. சத்தத்தை வாய்க்குள்ளேயே அடக்கிக் கொண்டார். காரணம் அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஆடு திடீரென்று அவருடைய பின்புறத்தில் ஓடி வந்து முட்டியதில் திருடனுக்குத் தேள் கொட்டியது போல் கத்த முடியாமல் தவித்தார்.

“”எவ்வளவு நேரந்தான் நீ சேட்டை பண்ணுவ” நெஞ்சில் கறுவிக் கொண்டார். அதிலும் ஒரு சின்ன சந்தோஷம், நல்ல வேளை பின்பக்கம் முட்டியது என்று ஆறுதல் பட்டுக் கொண்டார். வியர்வை முத்து முத்தாக முகத்தில் பூத்தாலும் இரண்டு கைகளால் சாமிக் கெடாவை இழுத்துக் கொண்டு வருவதால் தேங்காய்ப் பூ துண்டை வாயில் கடித்துக் கொண்டு வந்தார். அதனால் வியர்வையை துடைக்க முடியவில்லை.

உற்றார், உறவினர்கள், ஊர்க்காரர்கள் பெருகிக் கொண்டேயிருந்தனர். எத்தனை பேர் வந்தாலும் “”ஒரு பக்கச் சப்பையை ஒண்டியா தின்னாம வுட மாட்டேன்” என்று இப்போதோ ஆட்டை மனதில் கூறு போட்டுக் கொண்டிருந்தார்.

“ஆட்டை வேகமாக இழுத்து, அதனால் ஆட்டுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அவ்வளவுதான் சாமி குத்தமாகிடுச்சு அது இது என்பார்கள்’ என்று நினைத்து கொஞ்சம் மெதுவாகவும் இழுத்து வந்தார்.

கரகம் கோயிலை மூன்று சுற்று சுற்றி வந்தது. பூசாரி எலுமிச்சம் பழம் காவை கொடுத்து கரகத்தை கோவிலுக்குள் எடுத்துச் சென்றார்.

சம்பந்தி சாமி கெடாவை தரதரவென்று இழுத்து வந்து கோவிலுக்கு கிழக்குப் பக்கமாக உள்ள பாவாடைராயன் கோயில் பக்கத்தில் உள்ள பூவரசு மரத்தில் கட்டினார். சாமிக்குப் படைத்த கூழ், சுண்டல், பஞ்சாமிர்தம், பானகம், சர்க்கரைப் பொங்கலை எல்லா மக்களுக்கும் கொடுத்தனர்.

சம்பந்தி மட்டும் சாப்பிடவில்லை. “”மணி அஞ்சாவப் போவுது, சாமி பிரசாதத்தைச் சாப்ப்டுங்க…” மனைவி கெஞ்சினாள்.

“”எல்லாத்தையும் மொத்தமாகச் சேத்து கெடா வெட்டுன பிறகு சாப்புட்டுக்கறேன்”

அவருக்கு சாம்பார் ரசத்தைவிட கறிக் குழம்பு என்றால் ஒரு பிடி பிடிப்பார். ஆட்டைப் பார்க்க அவருக்கு நாவில் எச்சில் ஊறியது.

“”என்ன சம்பந்தி… வச்ச கண்ணு வாங்காம அந்த ஆட்டையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க… நீங்க பாக்கறதப் பார்த்தா ஒண்டியா தின்னுடுவீங்க போல ” சொல்லிக் கொண்டே சென்றார் ஒருவர்.

ஏதோ சிந்தனையில் இருந்த மீண்டெழுந்த சம்பந்தி, “”அவன் கண்ணுல கற்பூரத்த ஏத்த… இப்படி கண்ணேறு போட்டுத்தான்… இப்பெல்லாம் சரியாவே சாப்புட முடியலே… வூட்ல போய் மொதல்ல சுத்திப் போடணும்” என்று நினைத்துக் கொண்டார்.

கோவிலுக்கு வந்த ஊர்க்காரர்கள் வரிசையாக உட்கார்ந்து பிரசாதங்களையெல்லாம் வாங்கிச் சாப்பிட்டார்கள்.

பூசாரி சம்பந்தியைப் பார்த்து, “”ஆடு வெட்டறதுக்கு வந்த ஆளை எங்கன்னு பாருங்க” என்றார். சம்பந்திக்கு ஒரே குஷியாகிவிட்டது. துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டே தேட ஆரம்பித்தார். மாப்பிள்ளையிடம் சென்று விபரத்தைச் சொன்னார். அவர் அநத் ஊர் பெரியவர் ஒருவரைக் காண்பித்துவிட்டு ஏதோ வேலையாகச் சென்றுவிட்டார். அந்தப் பெரியவரிடம் விபரத்தைச் சொன்னதும், “”அவன் யென் பையந்தான் ரோட்டு டீ கடையில இருக்கான் பாருங்க” என்றார். பெரியவர் சென்றதும் அவர் குடித்திருந்த கள்ளின் மணம் விலகவில்லை.

பகல் போய் இருள் சூழ்ந்து கொண்டிருந்தது.

கடைக்குச் சென்ற சம்பந்தி, “”ஆடு வெட்றது யாருப்பா… பூசாரி கூப்பிடுறாரு” தணிவாகச்

சொன்னார். நம்ம ஏதாவது வேகமாகச் சொல்லப் போக இதுதான் சாக்கு என்று கிளம்பிவிட்டால் பிறகு ஆட்டை யாரு வெட்டுவது? அதட்டிப் பேசாமல் அப்படியே நின்றிருந்தார்.

அங்கு ஒருவரிடம் காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருந்த ஆடு வெட்டுபவர் சம்பந்தி நிற்பதைக் கண்டு, “”போன வருஷம் மத்தியானமே வெட்டியாச்சு… இந்த வருஷம் என் லேட்டாச்சு… இப்ப மணி என்னாவுது.”

இருட்டில் வாட்சை அப்படியும் இப்படியும் வளைத்து நெளித்து, சாலையோர விளக்கொளியின் உதவியால் “”ஏழாவுதுங்க” சொல்லி முடிப்பதற்குள் அவர் எழுந்து, நடக்க முடியாமல் நடந்தார். ஆடு வெட்டுபவரும் ஏற்கெனவே குடித்து இருப்பதால் அதே கள்ளின் வாசனை சம்பந்தி மூக்கை துளைத்தது.

இவன் எப்ப வந்து வெட்டி…

எப்ப சமைச்சி…

எப்ப படைச்சி…

எப்ப சாப்புடறுது?

விரக்தியில் மனம் உழன்றாலும், அதெப்படி ஒரு கை பார்க்காம போகக் கூடாது என்று கறிச்சோறு சாப்பிடுவதில் உறுதியாக இருந்தார்.

“”சீக்கிரம் உங்க வேலையை முடிச்சா தானே மத்த வேலையெல்லாம் நாங்க பார்க்க முடியும்”

கறியை உரிக்க வந்தவர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். ஆட்டை வெட்ட வந்தவர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மூன்றரை அடி உயரம் உள்ள கொடுவாளை எடுத்தார். கை, கால் தடதடவென நடுங்கியது.

“”ஏன்ய்யா… வேலையை முடிச்சுட்டுப் போய்க் குடிக்கக் கூடாதா?” இன்னொரு சொந்தக்காரர் சொன்னார்.

ஒருவர் கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆட்டைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து இழுத்துப் பிடித்துக் கொண்டார். பின்னங் கால்களை ஒருவர் இழுத்துப் பிடித்துக் கொண்டார். ஆடு கத்தி, கதறிக் கொண்டிருந்தது. ஆட்டை வெட்டும் முன் பூசாரி சொன்னார். “”கொழந்தைங்க, தலைச்சம்புள்ளைங்க, மாசமாயிருக்கிறவங்க யாரும் இங்க நிக்காதீங்க. அப்படியே கோயிலுக்குப் பின்னாடி போயிடுங்க” என்று சொல்லிவிட்டு கரைத்து வைத்திருந்த மஞ்சள் தண்ணீரை ஆட்டின் தலையில் தெளித்தார். தண்ணீர் தலையில் பட்டதும் அது தலையாட்டியது.

“”சாமி உத்தரவு குடுத்துடுச்சு” ரெண்டு மூன்று இளவட்டங்கள் சொன்னார்கள்.

உடனே ஆடு வெட்டுகிறவர் இரண்டு கைகளாலும் கத்தியைச் சேர்த்து பிடித்துக் கொண்டு அதைத் தூக்க முடியாமல் முக்கி முனகிக் கொண்டே தூக்கிப் போட்டார். சுற்றியிருந்தவர்கள் எல்லாரும் தலை தெறிக்க ஓடினார்கள். போதையில் அவர் கயிற்றின் மேல் கத்தியை போட்டுவிட்டார். கத்தி எந்தப் பக்கம் விழும் என்று தெரியாமல் பயத்தில் ஆட்டையும் விட்டுவிட்டார்கள். சாமிக் கெடாவுக்கு சாமி வந்ததுபோல் மேலும் கீழும் குதிக்க ஆரம்பித்து, பிடிக்க வந்தவர்களையெல்லாம் முட்டித் தள்ளிவிட்டு மனம் போன போக்கில் ஓடியது.

சம்பந்திக்குக் கோபம் பொசுக்கென்று வந்தது.

“”இந்தால எங்கிருந்தியா… புடுச்சாந்தீங்க” கையை அடிக்க ஓங்கியவர் “”எல்லாரும் போய் புடிங்கய்யா” என்று சொல்லிக் கொண்டே அவரும் ஓடினார். அது வாய்க்காலையும், வரப்பையும் ஒரு சேர தாண்டியது. இருட்டு வீட்டில் குருட்டுப் பூனை பாய்ந்ததுபோல் எங்கு சென்றது என்றே தெரியாமல் இருட்டில் முழி பிதுங்கி நின்றனர்.

சம்பந்திக்குப் பார்வையெல்லாம் அது போன கிழக்கு பக்கம்தான் கண்ணாக இருந்தது. ஏதாவது உருவம் அசைகிறதா என்று கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். இளவட்டங்கள் எல்லாம் தேடிப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தனர்.

“”அது என்னா வேகமா ஓடுது ” என்றனர் மூச்சிரைக்க.

இன்னொருவர், “”சவுக்குத் தோப்பு வரைக்கும் ஓடினோம். அப்புறம் எந்தப் பக்கம் போச்சுன்னு தெரியல” என அவரவர்கள் பிடிக்க முடியாததற்கு ஏதேதோ காரணங்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். பசியினால் சம்பந்தியின் காது வேறு அடைத்துக் கொண்டது. கறிச்சோறு…?

சம்பந்தி அந்த ஊர் பெரியவர்களிடம் புலம்பிக்க கொண்டே வந்தார். “”என்ன கெட்ட நேரமோ தெரியலை…. கெடா வெட்டலன்னா சாமி குத்தமாயிடும்” என கறிச்சோறு கிடைக்காத ஆதங்கத்தில் ஏதேதோ பேசி வந்தார்.

இவர்களுக்குக் கெட்ட நேரமோ இல்லையோ… சாமி கெடாவுக்கு நல்ல நேரம்.

– மே 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *