சரோஜா ஆறணா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 16, 2021
பார்வையிட்டோர்: 2,459 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்னைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது அந்தச் சொல். மனப்பிராந்தியல்ல, என் செவியிலே தெளிவாக விழுந்தது அப்பேச்சு. என் மூச்சே திணறிவிட்டது. என்னை நிலை குலைய வைத்த அந்தச் சொல்லுரைத்தவரோ, நெற்றியிலே நீறு பூசி, வெள்ளை ஆடை அணிந்து, விளங்கினார். போக்கிரியல்ல, போக்கற்றவருமல்ல, புத்திதடுமாறி யவருமல்ல, அவர் தான் சொன்னார் சரோஜா ஆறணா என்ற சொல்லை. என்ன என்ன? என்று கேட்கவோ என்நா எழவில்லை. நமக்கென்ன என்றிருக்கவோ மனம் இடந்தாவில்லை. நடுவீதி நின்றேன், வண்டியோட்டிகளுக்கு அது பெருந்தொல்லை, என் நிலை காண அந்த ஆசாமிக்குக் கண்ணா இல்லை? புன்முறுவல் செய்தார். அருகில் சென்றேன். சரோஜா ஆறணா! என்ன அநியாயம், என்ன அக்ரமம் பட்டப் பகலில், பவர் கூடும் கடைவீதியில், சரோஜா, ஆறணா என்று ஏலங்கூறும் அளவுக்கா நாடு கெட்டுவிட்டது, நாகரிகம் பட்டுவிட்டது, என்று நினைத்தேன், பதறினேன், பெண் விற்பதா! வீதியில்! அந்த விலைக்கா!! ஆறணாவுக்கா அந்தச் சரோஜினி? என்னால் ஆத்திரத்தை அடக்க முடியாததால், நீறு பூசியவரைக் கோபப் பார்வையுடன் நோக்கி “என்னய்யா அநியாயம், சரோஜா ஆறணா என்று வாய் கூசாமல் கூவுகிறீரே” என்று கேட்டேன். அந்த ஆள் கோபியாமலில்லை. “அனியாயமா? பங்கஜா இன்று என்ன விலை தெரியுமா?” என்று என்னைக் கேட்டு, துடிதுடித்து நான் நிற்பதைத் துளியும் சட்டை செய்யாமல், “பங்கஜா, பத்தணா விலை” என்றான், அதற்குமேல் என்னால் பொறுக்க முடியவில்லை. பிறகு எங்களுக்குள் பின்வரும் காரசாரமான பேச்சு நடந்தது.

“என்ன அனியாயமய்யா! சரோஜா ஆறணா, பங்கஜா பத்தணா என்று கூவுகிறீர். காலம் இப்படியா கெட்டு விட்டது”

“காலம் கெட்டு விட்டதற்கு நான் என்ன செய்வேன்? நானா இவைகளுக்குப் பொறுப்பாளி. சரோஜாவும் பங்கஜாவும் போகிற போக்கை நானா தடுக்க முடியும்?”

“நீர் தடுக்கா விட்டாலும் அந்த அனியாயத்திலே நீர் பங்கெடுத்துக் கொள்ளாமலிருக்கக் கூடாதா? ஆளைப் பார்த்தால் நல்லவபாகத் தெரிகிறதே!”

“இதென்னய்யா காலையிலே யோர் பித்துக்கொள்ளியாக வந்து சேர்ந்தாய். நான் பங்கெடுத்துக் கொள்வது தானா உன் கண்களை உறுத்துகிறது. இதே தொழிலிலே, மாதத்திலே ஆயிரம் பத்தாயிரம் சம்பாதிக்கிறான் ஒவ்வொருவன். எனக்கு ரூபாய்க்குக் காலணா கூடச் சரியாகக் கமிஷன் கிடைப்பதில்லை, இதற்கு நான் படுகிற பாடும், போடுகிற கூச்சலும், நடக்கிற நடையும் எவ்வளவு. என்னைக் குறை கூற வந்துவிட்டாய்.”

“இது ஏனய்யா இந்த மானங் கெட்ட பிழைப்பு?”

ஓங்கி என்னை அடித்தான் அந்த ஆள். ஈனப் பிழைப்புக்காரா! என்னையா அடித்தாய், என்று கூவினேன். நானும் ஒரு அறை கொடுத்தேன். கும்பல் கூடிவிட்டது. ரோஷமும் நியாய புத்தியுமுள்ள யார் தான் என்னை ஆதரிக்கமாட்டார்கள் என்ற தைரியம் பிறந்தது. நான், அந்தத் தாசன் கரத்தைப் பிடித்துக்கொண்டு, “கேளுங்களய்யா! இந்த அனியாயத்தை. சரோஜா, ஆறணாவாம்! நடுவீதியிலே கூவுகிறான், தைரியமாக.” என்று கூறினேன்.

“உனக்குத் தேவையில்லையானால், நீ போய்விடு. அவனை அடிப்பானேன்.”

“உனக்கு அந்த விலை பிடிக்காவிட்டால், வாங்கவேண்டாம், போ. அடிக்கலாமா!”

“அனியாயம் என்றால் போய்க் கெவர்மெண்டைக் கேள். அதற்கு இவனை அடிக்க எவ்வளவு தைரியமடா உனக்கு”

இத்தகைய சொல்லம்புகள், நாலா பக்கத்திலிருந்தும் பாய்ந்து வந்து என்னைத் தாக்கின. என் திகைப்புக்கு அளவேயில்லை. என்ன அனியாயம்! நடுத்தெருவில் நங்கையை விலை கூறிப் பிழைப்பவனுக்கு, இவ்வளவு ஆதரவா? இது என்ன பட்டினம்! என்று எண்ணித் தத்தளித்தேன்.

அடிபட்ட ஆசாமி அழுதாலுடன், “நானும், இந்த மார்க்கட்டிலே பத்து வருஷமாக உலவுகிறேன். ஒருவர் கூட என்னை நாயே என்று சொன்னது கிடையாது. என் போராத வேளை இந்தப் போக்கிரியிடம் இன்று அடிபட்டேன். சரக்கு வாங்க வருகிறான் என்று நினைத்தேன். உள்ள விலையைத்தான் கூறினேன். வீண் வம்பு பேசி, வலிச்சண்டைக்கு இழுத்து, அடித்தான்” என்று கூறினான்.

உண்மையிலேயே அவன் பேசியது கேட்கப் பரிதாபமாகத் தான் இருந்தது. ஆனால், பெண்ணை விற்கும் பேயனை, அடிப்பது தவறா? .

“உன்னை அடித்தது தவறா? நீ செய்த காரியம், ஈனத் தனமல்லவா? பட்டப்பகலிலே, நடுவீதியிலே, ஒருபெண்ணை ஆறணாவுக்கு விலைக்கு விற்பதா?” என்று நான் கேட்டேன்.

“என்ன? என்ன? பெண்ணை விற்றாரா?” என்று பலரும் பதைத்துக் கூவினர்.

“ஆமாம், சரோஜா ஆறணா என்று சொன்னான்” – என்று கூறினேன்.

உடனே, “அட பைத்யக்காரா” என்று பலரும் கூறிச் சிரித்தனர்.

‘அட தடிராமா’ சரோஜா, ஆறணா என்று நான் சொன்னது, ஒரு பெண்ணின் விலை என்ற எண்ணிக்கொண்டாய்! முட்டாளே! சரோஜா மில் நூல் விலைபல்லவா நான் சொன்னேன் என்று அடிபட்டவன் கூறினான். ஒரே கேலிச் சிரிப்பு. அட பட்டிக்காட்டானே! மடைமன்னார் சாமி! என்று அர்ச்சனை ஆரம்பமாயிற்று. மேலாடையை இழுப்பவர்களும், காலைத் தட்டி விடுபவர்களும், சிறுகல்லை வீசுபவர்களுமாகப், பலர் என்னைத் தொல்லை கொடுக்கத் தொடங்கினார்கள். என் முகத்திலே அசடு சொட்டிற்று! நான், பூரா உண்மையும் தெரிந்து கொள்ள முடியாது திணறினேன். அடக்க ஒடுக்கமாகப் பேசலானேன்.

“ஐயா! எனக்கொன்றும் விளங்கவில்லை. இந்த ஆள், பெண்ணின் விலையைத்தான் கூறினார் என்றே எண்ணித்தான் கோபித்தேன், அடித்தேன். எனக்கு உண்மையைக் கூறுங்கள்” என்று கேட்டேன்.

அடிபட்டவனே, கூறினான்.

“இது நூல்மார்க்கட் தம்பி! நீ இதற்கு முன்பு இதைக் கவனித்ததில்லை என்று தெரிகிறது. இங்கு பல ஊர் மில்களின் நூல் பேல்கள் விற்பனை செய்யப்படும். நாங்கள் தாகுக்காரர்கள், விலை கூறுவோம், விற்பனைக்கு ஏற்பாடு செய்வோம். உன்னைப் பார்த்தபோது தான். கோவை சரோஜா மில் நூல் கட்டு ரூ. 44-6-0 என்று தந்தி வந்தது. நேற்று ரூ. 44-க்கு விற்பனை நடந்தது. ஆறனா என்றது, ஆறணா விலை ஏறிவிட்டது என்பது பொருள். இதைக் கூறிக்கொண்டிருந்தேன். பங்கஜா மில் சாக்கு, ரூ.44-10-0 என்றும் விலை கூறினேன். இந்தத் தாகு வியாபாரத்திலே, ஆயிரக் கணக்கிலே பலர் சம்பாதிக்கின் றனர்; எனக்கு ரூபாய்க்குக் காலணா கமிஷனே கிடைக்கும் என்றும் சொன்னேன். இவ்வளவும், ஓர் பெண் விஷயம் என்று எண்ணிக்கொண்டாய். என் விதி! உன்னிடம் அடியும் பட்டேன்” என்று விளக்கினான்.

“ஐயா! என்னை மன்னிக்க வேண்டும், நூல் விற்பனை என்றால், கடையிலே நடக்குமே தவிர, நடுவீதியிலே நடை பெறுமென்று எனக்குத் தெரியாது. அதிலும், சாக்கு மூட்டைபைக் காட்டி, வியாபாரம் நடத்தியிருந்தால் நான் தெரிந்துகொண்டிருப்பேன். நீர், கையிலே ஒன்றுமே. வைத்துக் கொண்டிருக்கவில்லை. சரோஜா ஆறணா என்ற தும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. யாரோ ஓர் பெண்ணைத்தான் விற்கிறீர், அதற்காகவே ஆள் பிடிக்கிறீர் என்று எண்ணி இந்த அடாத செயல் செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறினேன். கூட்டம் கலைந்தது. நான் வாட்டத்துடன் இரயிலடி வந்தேன்.

சரோஜா மில் நூல் 44-6-0விலைக்கு விற்கிறது. அதற்குப் பரபரப்பு. அதற்காகத் தரகர்கள் வீதிகளில் உலவுவர், என்ற வியாபார நடவடிக்கை அன்று தான் எனக்குத் தெரியவந்தது. நான் நூல் மூட்டைகள், நேராக நூல் கடைக்கு வரும், செய்பவர்கள், நேராகச் சென்று வாங்கு வர், என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்படிச் சரோஜா ஆறணு, பங்கஜம் பத்தணு என்று கூறுவார்கள் என்று எனக்குத் தெரியாது. அன்று, மேலும் பலரை, இவ்விஷயமாக விசாரித்தேன்.

“ஏனப்பா, கேட்கிறாய்! அனியாயமாகத்தான் விலை எறுகிறது. ஒன்றுக்கு ஒன்பது, பத்து, இருபது, என்று விலை ஏறி விட்டது. இன்றைக்கு இருக்கும் விலை நாளைக்குக் கிடையாது. மணிக்கு மணி தந்தி வருகிறது! இடையிலே இருந்து, பலர், இலாபமடிக்கின்றனர். இன்றைக்கு 200 மேல் “ஆர்டர்’ கொடுப்பார்கள், முப்பது ரூபாய் விலைக்கு; அந்த ஆர்டர் கொடுப்பவர், கெசவுத் தொழில் செய்பவரு மல்ல. அவருக்கு நூல் பேல் தேவையில்லை. ஆனால் பணம் இருக்கிறது, வியாபார சூட்சமம் இருக்கிறது. 200 பேல் வாங்குவார். ஒரு வாரத்திலே, 40 என்று விலை ஏறிவிடும், அவர் இலாபச் சாட்டு எறும்! இறங்குவதுமுண்டு, அதிலே சிலருக்கு இடர் வருவதுண்டு. ஆனால் இப்போது, விலை எறிக்கொண்டே போவதால், துணிந்து வாங்கி, விலை ஏதோ இறங்குவது போல இருந்தாலும், நஷ்டம் வருமோ என்று பயப்படாமல் சரக்குகளைக் கட்டிவைத்து விட்டால், பிறகு, தரகர்கள் வீதியிலே கூவுவர், சரோஜா, 44-6-0 பங்கஜா 44-10-0, என்று நூல் மூட்டைகளை வாங்கினவர், மகிழ்வார். புள்ளி போட்டுப் பார்ப்பார். இந்த அயிட்டத்திலே ஐந்தாயிரம் என்று கணக்கெடுப்பார்!

துணி விற்கும் கடைகளிலே,

“நேற்று இதே பீஸ், 3-12-0-க்குக் கொடுத்தீரே”

“ஆமாம்! இன்று நூல் விலை என்ன? நாலு ரூபாய் ஏத்தம். நாளைக்கு வந்தால் இதே பீஸ் ஆறு ரூபாய்” என்ற இப்பேச்சு நடக்கும். துனி வாங்குபவர்கள், நாட்டிலே நிர்வாணச் சங்கங்கள் ஏன் ஏற்படவில்லை என்று எங்குவர்.

இத்தனை கஷ்டங்கள், பண்டங்களை உபயோகிக்கும். மக்களுக்கு விளைய, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு, உற்பத்தியாகும் சரக்குகளை உபயோகிப் போரிடம் போய்ச் சேருமுன், குறுக்கே படுத்துத் தடுத்து வரும், தாகுத் தொழிலால், ஏராளமான இலாபம்! பணப் பெருக்கமும், இலாபப் பெருக்கமும் அதிகம். ஆனால் இதனால், எழை, களின் முகம் சோகத்தால் சுளித்துக் கிடப்பது, யாருக்குக் கஷ்டந் தரும்! அந்த ஏழையின் முகத்தைக் காண, நேரம் எது, சரோஜா, பங்கஜாவுடன் சரசமாடும் பேர்வழிகளுக்கு.

எங்கள் ஊர் திரும்பினேன், இவ்வளவு அனுபவமும், அறிவும் பெற்று. ஆடைகளைக் கண்டால் கூட எனக்குக் கோபம் வரத்தொடங்கிற்று உனக்காக, மக்கள் இவ்வளவு அலைகிறார்கள்! நீ, ஒரு சிலருக்குப் பெருத்த இலாபத்தைக் கொடுத்து, மற்றவருக்குக் கஷ்டமே தருகிறாய் என்று ஆடைகளை ஏசலாம் என்றும் தோன்றிற்று.

“ஏன், பட்டினத்திலே, சினிமா பாக்கலையோ, முகம் வாட்டமாக இருக்கே” – இது என் மனைவியின் கேள்வி அதற்கு நான் பதில் சொல்லவில்லை.

“புதுப்புடவையார் என்ன விலை இது” என்று கேட்டேன், முறைத்தபடி.

“அநியாய விலை. போன மாசம், இதே சேலை ஆறு ரூபாய். இப்போ, எட்டேகாலுக்குக் காசுகூடக் குறை பல்லே” இது என் மனைவியின் பதில்.

“என்ன விலை சொன்னாலும், வாங்க, நீங்கள் இருக்கவே தான், அவனவன் விலையை, இஷ்டபடி தூக்கிக்கொண்டே போகிறான்” என்று நான் கோபமாகக் கூறினேன். என் மனைவி சிரித்துவிட்டு, “வாங்காமல் என்ன செய்வது! அந் தப் பாவிகள் விலையை ஏற்றி விட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்வது” என்று சமாதானம் கூறினாள். ஆமாம், பாவம், தனம் (என் மனைவி) என்ன செய்வாள்.

அன்றிரவு என் கோபத்தை அவள் குளிர்ந்த மொழி பேசி உபசரித்துத் தணிவித்தாள்.

“ஒரு அநியாயம் தெரியுங்களா! கோடி வீட்டிலே பகுப்புசாமி தெரியு மேல்லோ, தறி நெய்யலே அந்த அண்ணன், அவருக்குச் செக்கச் செவேலுன்னு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்பவே அரை டசன். என்ன செய்வாரு பாபம். அதை ஆறணாவுக்கு, அடுத்த தெரு அகிவாண்டத்துக்கு விற்று விட்டாங்க. அகிலாண்டத்துக்குப் புள்ளே குட்டி கிடையாது. அவ, என் கண்ணே, பொன்னே என்று கொஞ்சிக் குழந்தையை ஆசையாத்தான் வைச்சிருக்கா!” என்றாள் என் மனைவி.

“பெற்ற குழந்தையை விற்றார்களா! என்ன பரிதாபம்”

“பாவந்தான், அவளுக்கு மனசே இல்லை. குழந்தை யைப் பார்த்துப் பார்த்து அழுதாள். என்ன செய்வாள். தரித்திரம் பிடிங்கித் தின்கிறது ஒரு நாளைக்கெல்லாம் அவ புருஷன் வேலை செய்தா, பத்தணா கிடைக்குமாம். கூழுக்குக் கூட அது, இப்போதுள்ள விலைவாசியிலே போதாது. குழந்தைக்கு ஒரு மாந்தம், ஜுரம் வந்தா, வைத்தியத்துக்கூடக் காசு கிடையாது. முன்னே துணி நெய்தா, உடனே கடையிலே விற்றுவிடுமாம். இப்போ, வேண்டாம், வேண்டாம், என்று கடைக்காரன் சொல்லி விடுகிறானாம். நூல் விலை, ஏறிவிட்டதாம். அந்த விலைக்கு வாங்கித் துணி நெய்ய முடியல்லையாம். சாசமாக இருக்கிற போது நூல் கொஞ்சம் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளப் பணம் கிடையாது. தவிக்கிறாரு, தறிகார அண்ணன்” என்றாள் தனம்.

ஆடை நெய்பவருக்கு அவதி, ஆடை வாங்குபவருக்குக் கஷ்டம், ஆடைக்குத் தேவையான நூலை, அவசியமே இல்லா தவர்கள் வாங்கி, அடைத்து வைத்து, இலாபமடிக்கிறார் களே, இது என்ன கொடுமை! நூல் விலை, இலாபப் போட் டிக்காரரால் ஏற்றப்பட்டும் இறக்கப்பட்டும், வருகிற அந்தச் சுமலிலே நெசவாளர் சிக்கிச் சிதைகின்றனர். குடும்பம் கதறுகிறது. இந்தக் கஷ்டம் எப்படி, எப்போது தீரும் என்று எண்ண ஆயாசமடைந்தேன்.

உறியடி உற்சவத்திலே, கம்பத்தில் களிமண்ணும் எண்ணெயும் கலந்து பூசிவிட்டு, உயரத்திலே சிறு பண மூட்டையை எடுத்துக்கொள்ளச் சிலரை அமர்த்துவார்கள். களிமண்ணும், எண்ணெயுங் கலந்த கம்பத்திலே, சாண் ஏறினால் முழம் சறுக்கும். அது மட்டுமா! ஏறிக் கொண் டிஞ்க்கையிலே, சிலர் கீழே இருந்து, கம்பத்தின் மீதும், ஏறுபவர் மீதும் தண்ணீ ரை வாரி வாரி இறைப்பர்! அது ஓர் விளையாட்டு, பகவான் பெயரால் நடப்பது ! அதுபோல, நெசவாளரை, வியாபாரம் எனும் சறுக்குக் கம்பமேறி, அதன் மேலே கட்டப்பட்டுள்ள வருவாய்” எனும் பண முடிப்பை எடுத்துக்கொள்ளச் சொல்லுவதுடன், உறியடி எறுபவன் மீது நீர் இறைப்பது போல, நெசவாளர் மீது தாக ரீன் தயவும் பொழியப்பட்டு, நெசவாளர்களின், வாழ்க்கை, உறியடி ஏறுபவன் படும் வேதனையை விட அதிகம் நிரம்பியதாக இருக்கிறது. நான் இவைகளை யோசித்துக்கொண்டு, சோகத்தி வாழ்ந்திருந்தது கண்ட தனம், “பரிதாபமாகத் தான் இருக்கிறது. ஆறணாவுக்கு விற்றார்கள். குழந்தைக்கு அகிலாண்டம், பேர் கூட வைத்துவிட்டாள், சரோஜா என்று – இதை என் மனைவி கூறினதும், என்னையுமறியாமல் என் உடல் குலுங்கிற்று, சரோஜா!- ஆறணா! அங்கு சென்னையிலே நூல் இச்சொல், இங்கே, என் கிராமத்திலே, குடும்ப பாரம் தாங்கமாட்டாமல், குழந்தையை விற்ற நெசவாளியின் பெண் குழந்தை சரோஜாவும் ஆறணாவுக்கு விற்கப்பட்டதாகச் சொல் கேட்டேன். என் இருதயம் அனலிடு மெழுகின உருகிற்று.

உருகி என்ன பயன்? உலகம், ஏழைகளின் கண்ணீரைக் கவனிக்கிறதா! இல்லையே!

– செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள், பரிமளம் பதிப்பகம், காஞ்சீபுரம். முதல் பாதிப்பு: மே 1950

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *