சமூகக்குற்றம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 19, 2014
பார்வையிட்டோர்: 7,771 
 

ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. ‘டாக்ஸி’யில் இருக்கிற ஓட்டி ‘ஒவனு’க்குள் இருக்கிற மாதிரி துன்பப்பட வேண்டியிருக்கிறது.பின்னால் இருக்கிறவர்களுக்கு ஒருவித சொகுசுப் பயணம்.ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. ‘டாக்ஸி’யில் இருக்கிற ஓட்டி ‘ஒவனு’க்குள் இருக்கிற மாதிரி துன்பப்பட வேண்டியிருக்கிறது.பின்னால் இருக்கிறவர்களுக்கு ஒருவித சொகுசுப் பயணம். ‘டாக்ஸி’ விரைவு வீதியில் விரைந்து கொண்டிருந்தது.’பிளக்பெரி’ வந்த பிறகு பயணியின் தொண தொண அலட்டல்கள் எல்லாம் இல்லை. எங்கட பிரச்சனையே தீறவில்லை. இவர்களூக்கு எங்கட அரசியலும் தெரியாது.அதை அறிவதிலும் அக்கறை காட்டுவதில்லை . இவன் தனக்கென கீறின வட்டத்தை விட்டு வெளிய போவதில்லை. இந்த நிலையில் இவன்ட வியாபாரமும் பிரச்சனையும், எமக்கு மட்டும் எதற்கு? எங்களுடையது போல சமூக வாழ்க்கை இவனுக்கு இல்லை. அக்கறைப் படுவது என்றால் வியாபார வலை தொடர்புகளோடு மட்டும் தான்.

அவனை இறக்கிய போது மீற்றருக்கு கூடுதலாக 2 டொலர்கள் தந்தான்.

“உன்னுடைய நாள் நல்லாய் அமையட்டும்,நன்றி”என்று ராதா வாழ்த்தினான்.

உடனே அவன் முகத்தில் ‘பல்ப்’எரிந்தது. அவனும் முகமலர்ச்சியுடன் திருப்பி ..வாழ்த்தி விட்டு அகன்றான். , அதில்,ஒரு ‘பிச்சைக்காரத்தொனி’இருக்கிறதே என பார்க்கிறீர்களா?அவன் இவர்களிட‌களிடமிருந்து தான் அந்த பாசையையே பழகி இருக்கிறான். ஒன்று தெரியுமா? பிச்சைக்காரன் என்று …ஒருத்தன் உண்மையிலேயே இல்லை தான். ‘சாதியை’போல இதுவும் தர்மசிந்தையற்றவனால் பெயரிடப் பட்டது தான். முதலாளித்துவ உலகம் அவனை .. அப்படி அழைக்கிறது. சமதர்ம உலகமோ ‘தோழர்’என்கிறது. யாருக்குமே தெரியாது அவனுள் எந்த விஞ்ஞானி இருக்கிறான் என்பது? இவன் எல்லாம் சுதந்திரமாக ஒளிர அந்தந்த சமூக மக்களிடம் சுய‌ அரசியல் அதிகாரமும், , புத்திசாலித்தனமும்,காந்தியமும் இருக்க வேண்டும். எங்கையும் பேராசை மிக்க மக்கள், வஞ்சம் புரிந்து மற்றவர்களின் அதிகாரத்தை பறித்து.. உலகத்தைக் குழப்பி விடுகிறார்கள். அதனாலே சோகக்கதைக‌ள் அரங்கேறுகின்றன‌.

‘டாக்ஸியை’ அண்மையிலுள்ள டவூண்வியூ சப்வே நிலையத்திற்கு ஓட்டிச் சென்றான். அங்கே இருந்த ‘டாக்ஸி’ நிலையத்தில் ஏற்கனவே நான்கு டாக்ஸிகள் நின்றன. இவன் ஐந்தாவதாகப் போய் நிறுத்தினான். முதலாவதாக ‘ரோயல்’ கம்பனியைச் சேர்ந்தது.. சுத்தமாக‌ நின்றது. ஓட்டி வெளீயில் இறங்கி சிகரட் புகைத்துக் கொண்டிருந்தான். இரண்டாவது ‘சிட்டி’ கம்பனி.அந்த ஓட்டி அங்கையும் இங்கையுமாக நடந்து கொண்டிருந்தான். நெடுக வாகனத்தினுள் இருப்பதால் பல்வேறு உடற் தொல்லைகள் ஏற்படுகின்றன. அதனால் கிடைக்கிற நேரத்தில் உடற்பயிற்சி செய்ய சொல்கிறார்கள். செய்கிறான்.அடுத்து இருந்தவன் ‘பெக்’ .அவனுடைய ரகம். அவன் உள்ளே உள்ள காம்ரேடியோவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறான். முதலாவது ஆள். பயண அழைப்பு எப்பவும் வரலாம். தற்போது ‘பெக்’ இனம் தான் நகரத்தில் அதிகமான .. அழைப்புகளைப் பெறுகிறது. பெரிய நிறுவனம் போல பல பேர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு விதிமுறைகளுடன் இயங்கிறார்கள். ‘பணம் உழைக்கணும்’ என்றால் கருமியாய் இருக்கக் கூடாது என்பார்கள். அதைப் போல் இவர்களும் பத்திரிகை,வானொலி,தொலைக்காட்சியில் எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள்.அந்த நிலையை அடைய கஸ்டப்படுகிறார்கள் தான்.

மூன்றாவதாக நின்ற‌ ‘பெக்’ பயண அழைப்பைப் பெற்றுக் கழன்றது. அதை மற்றயவை ஒருவித பொறாமையுடன் பார்த்தன. யாருமே ரயில் நிலையத்திலிருந்து பயணிக்க வராத போது.. காத்திருக்கிறது அலுப்பை தரக் கூடியது தான். சொற்ப நேரத்தில், இரண்டாவது ‘பெக்’கும் கழன்றது. ராதாவின் முறை வந்தது. காம்ரேடியோவில் ..”யார் முதலாவதாக நிலையத்தில் நிற்பவர்?”எனக் கேட்டது.அவன் தன்னுடைய ”டாக்ஸி’ இலக்கத்தைச்’ சொன்னான்.

“1150 செப்பேர்ட் அவன்யூ மேற்கு, யக்சன்…போய் ஏற்று!”என்றது. பேப்பரில் குறித்துக் கொண்டேன்.. என்பதை தெரிவிப்பதற்காக‌”ரொஜர்”என்றான். வாகனத்தை இயக்கி அணியிலிருந்து விலகி செலுத்தினான். முன்னால் சிகரட்டை பத்தி முடித்தவன் “எங்களை விட்டுட்டுப் போறாயா?”என பகிடியாக கேட்டான். அப்போது அவனை நோக்கி ஒரு பயணி வர‌, வலக்கை விரல்களை’வி'(v )வடிவத்தில் சைகைப் பாசையில் ‘வெற்றியாய் அமையட்டும்’எனக் காட்டினான். அவன்.. வெகுளியாய் சிரித்தான்.

10 நிமிசத்தில் போய் ஏற்றினால் போதும். போதிய நேரம் இருந்தது. 5 நிமிசத்திலேயே அவ்விடத்தை அடைந்து விடலாம். வெளியான பகுதியிற்கு வந்த போது சிறிய ஈரப்பத காற்று தவழ்ந்து அவனையும், காரையும் குளிர்வித்தது. புற் தரையில் சிறிய குருவிகள் கீச் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. மத்தியான சாப்பாட்டை வெட்டுகின்றன. பேரிரைச்சலுடன் பக்கத்து லேனில் வந்த பேரூர்ந்து அக்குருவிகளை குழப்பி பறக்க வைத்து விட்டன‌. இந்த குருவிகளுக்கு மனிதன் கட்டாயம் ஏலியனாகவே தெரிவான். அப்படி நினைக்க சிரிப்பும் வந்தது.

நம்ம பழங்கதைகளில் வருகிற ராட்சத மனிதர்களும் ஒருவேளை இருக்கலாம் எனவே படுகிறது. டைனோசார் என மிருகம் இருந்திருக்கிறது. இந்தா குருவி, மனிதன் இருக்கிறான். ஏன் அதற்கு சாத்தியம் இல்லை!

‘அலன்’ ச‌ந்தியில் பச்சை விளக்கு எரிந்தது. வீதிகளின் சந்திப்புக்களில் பச்சை விளக்கு எரிந்தாலும் கூட அக்ஸிலேட்டரை அமுத்திக் கொண்டு செல்லக் கூடாது. பிரெக் பெடலிலே கால்ப்பாதம் இருக்க வேண்டும். யார் கட்டளை? அடியேன் தான். இங்கே எல்லாம் இயங்கிறதுக்கு சட்டம் இருக்க வேண்டும்.’செய்யக் கூடாது’ எல்லாவற்றுக்கும் அபராதம் விதித்து விடுகிறார்கள். மனிதம் சுவாசிக்கக் கூட சட்டம் விதிக்கிற நாடுகள் புலம் பெயர் நாடுகள். சாதாரண மனிதனை ரொபோவாக மாற்றும் முயற்சியில் படுவேகமாக இயங்கிறார்கள். அதைப் பற்றி மற்றவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.. விரைந்து சென்றார்கள். அவன் மெதுவாகவே செலுத்தினான்.

அலன் வீதியைக் கடக்க, ஈழத்தில்லுள்ள சிங்கள ராணுவம் வளைத்துப் போட்ட பரந்த காணி போன்று பல ஏக்கருடன் கூடிய ராணுவத்திற்குச் சொந்தமான நிலப்பகுதி எதிர்ப் பட்டது.அதில் சில பகுதிகளை தற்போது தனியார் நிறுவனங்களுக்கு விற்று விட்டார்கள்.சிறிய விமான நிலையத்தை சிறிய விமானங்களையும், கனரக‌ வாகனங்களையும் செய்கிற பொம்பார்டியா கம்பனி வாங்கியிருக்கிறது. அதிலே தனது பறப்புச் சோதனைகளைச் செய்கிறது. பழைய விமானங்களை சேர்த்து வைத்திருக்கிற காட்சியகமும் இருக்கிறது,பெரிய ‘டவூண்வியூ பார்க்’கும் இருக்கிறது.இதெல்லாம் செப்பேர்ட் வீதியின் தெற்குப் பகுதியில் தான்.

வீதியின் வடக்குப் பகுதியில் பெரிய புல்தரையுடன் கட்டிடக்கலை நேர்த்தியுடன் நிர்மாணீக்கப்பட்ட நவீனரக தளபாடக்கடை இருந்தது.வியாபாரம் இல்லை என விற்று விட்டார்கள்.அதில் பெரிய ‘கொண்டோ’க்கள் இப்ப‌ அரைகுறையாய் எழுந்து அதன் அழகையே கெடுத்துக் கொண்டு கிடந்தன.

இப்படித் தான் நகரத்தில் பொறுத்தமற்ற இடங்களில் எல்லாம் சீமேந்துக் கட்டிடங்கள் முளைக்கின்றன. ஒரு காலத்தில் நகரம் முழுதையுமே சீமேந்து தரைகளாலும், பாலம் தார் வீதிகளால் ஒரு அங்குல நிலத்தைக் கூட இயற்கைக்கு வழங்காமல் தெப்பம் போல கட்டிக் விடுகிற வெறி இவர்களுக்கு இருக்கிறது.

இயற்கைக் காட்சிகளை பார்க்க மாட்டோமா எனக் கண்கள் பூத்துப் போய் விடுகின்றன. ஒரு நகரபிதாவிற்கு கட்டிடக்கலை பற்றிய அறிவு இருக்க வேண்டியதின் அவசியம், சதா நெருடுகின்றது.

பொதுவாக வெளிநாட்டவர்களுக்கு இயற்கையை காப்பாற்றுவதில் அக்கறை குறைவு. அதில், ஜனநாயகத் தேர்தலில் தெரிவாகி வார அரைகுறை மனிதர்களின் முட்டாள் தனங்கள் அப்பப்போ தெரியத் தான் செய்கின்றன. இவர்கள் விரிந்த பார்வையும் புத்திசாலித்தனமும் உடையவர்கள் தான். இருந்தாலும் கூட .. தெரிவாகி வருகிற இவர்கள், இயற்கையைப் பற்றி கட்டாயம் படிக்க வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். அதாவது Refress கோர்ஸ் எடுக்க வேண்டியவர்கள்.கெளரவப் பிரச்சனையால் எடுப்பதில்லை.

‘போதுமடா சாமி’ என்று நகரத்திற்கு ஒரேயடியாய் ‘முழுக்கு போட்டு விட்டு கிராமப்புறம் போன்ற இடத்திற்குப் போய் வசிக்க மாட்டோமா?என்ற ஏக்கம் இப்பவெல்லாம் அவனுக்கு வருகிறது. அவனுடைய கிராமத்தில் போய் வசிக்க‌ மாட்டோமா? என்றிருக்கிறது!.

அங்கே கால் வைக்க முடியாதளவிற்கு முட்டாள்தனமாக நாமே போட்டுத் தொலைத்த சுய‌சிக்கல்களில் வேறு அகப்பட்டுப் கிடக்கிறோமே என்றது அவனை விரக்தி அடைய வைத்தது.

‘டாக்ஸி’,1150 செப்பேர்ட்டை விரைவில் அடைந்து விட்டது.நிறுத்தி விட்டு இறங்கினான்.

ஒல்லியான கறுப்பு இளைஞன், குறுந்தாடி, ‘தோப்பிளா’சான சேர்ட், டெர்னிம் நீள்காற் சட்டையின் தோள் பட்டை வார்கள் 2 பக்கமும் தொங்க,இடுப்பை விட்டு இறங்கிய காற்சட்டையில் உள் ஆடை சிறுது தெரிய சந்தோசக் களையுடன் கூடியவன், குழந்தை இருக்கிற ரோலரை உருட்டிக் கொண்டு வந்தான்.அக்குழந்தை கையும்,காலையும் ஆட்டிக் கொண்டு துடிப்பாகக் கிடந்தது.3‍ , 4 மாசம் இருக்கலாம். பின்னால் சிறிது வயிறு ஊதிப் போய்யிருந்த அவன் மனைவி,நடக்க முடியாதவள் போல நடந்து வந்து கொண்டிருந்தாள்.

“ஜக்சன்”ராதா கேட்டான்

‘ஓம்’ என தலையை ஆட்டினான்.

குழந்தைக் கூடையைக் கழற்றி அவன் பின் சீற்றில் வைத்து வார்களால் முறையாகப் பொறுத்த,ராதா ஸ்ரோலரை மடித்து பின்பெட்டியில் வைத்து மூடினான்.தாய்க்காரி குழந்தைக்குப் பக்கத்திலே அமர்ந்தாள். அவன் முன் பக்க சீற்றில் ஏறி அமர “எங்கே போகிறாய்?”என்று கேட்டான்.

“ஜேன் அன்ட் மேஜர் மக்கன்சி”என்றான். தூரமாக போகிறான்.பணத்தை தராமல் இறங்கி ஓடிப் போய் விடுவானோ?என்ற சந்தேகம் கண நேரத்தில் முளைத்தது. குடும்பமாக வருகிறான். சே..சே! என்ன நினைப்பு? என மனசு கண்டித்தாலும், அனுபவம் ஏன் இருக்காது எனச் கலகக் குரலை எழுப்பிக் கொண்டே இருந்தது. முதலில் உறவினர்,சினேகிதர் வீட்டில் …இறக்கி விட்டு,’அங்கே விடு!,இங்கே விடு!’என ‘டாக்ஸி’யை செலுத்த வைத்து,ஏதாவது பெரிய பாலத்தடி அல்லது நிறைய குடியிருப்புக்கள் உள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில் இறங்கி “உள்ளே போய் விட்டு வாரேன்”என்றால்..ராதாவால் என்ன செய்ய முடியும். நகரக்காவலரிட‌ம் முறையிடுவதில் அவனுக்கு இஸ்டம் இல்லை.எல்லாருமே அகதியாய் வந்து குடியுரிமை பெற்ற மக்கள் நாம்.’குற்றம் புரிகிறவர்களின் குடியுரிமையை பறித்து திரும்பவும் கொலைவெறி பிடித்துக் கிடக்கும் சொந்தநாட்டுக்கே அனுப்பி விடுவோம் என தாறுமாறாகவும் சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் போது…எங்களுக்கு கிடைக்க வேண்டிய சொற்ப பணமா பெரிசு? நகரக்காவலர்கள்,குற்றங்களைக் குறைக்க போராடுபவர்கக சிலவேளை தெரிவதில்லை.அப்பாவிகளை குற்றவாளிகள் என பதிவு செய்கிறதிலும் ஆர்வமுடையவர்களாகவும் இருப்பதாகப் படுகிறது. அவர்கள், வருசாவருசம் வீதிச்சட்ட விதிகளை மீறியது என வழங்கும் அபராதச் சீட்டுகளின் எண்ணிக்கை கின்னஸ் புத்தகப் பதிவுகளை ஒவ்வொரு தடவையும் உடைப்பவையாகப் போய்க் கொண்டிருக்கிறது. அதனால், சினிமா நாயகன் போல எல்லாம் அந்த வேலையை அவனாலும் பார்க்க முடியாது. நகர அரசால்… பயணச்செலவும் அதிகரிக்கின்றன.ஓரளவு வருமானம் குறைவான பஞ்சப்பாரிகளும் ‘டாக்ஸி’ப் பயணம் செய்கிறவர்கள். அவர்களை இந்த அதிகரிப்பு அதிகமாக பாதிக்கின்றன. ஓடுறது அதிகமாக இருக்கிறதுக்கு ..இதுவும் ஒரு காரணம். இப்ப இயல்பாக இருக்கிற‌வையை புதிதாய் வரும் அரசுகள் உலக,நாடுப் பொருளாதாரம் என வம்பளந்து வரிகளை கூட்டி விடுகின்றன‌. இங்கே குற்றம் உருவாக்கப் படுகிறது. எனவே தான் கள்ளன் பொலிஸ் விளையாட்டு ‘டாக்ஸி’ ஓட்டிகளுக்கும்,பயணிகளுக்குமிடையில் நடக்கின்றது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் கறுப்பினத்தவர்கள். இவர்கள் ஈழத்தமிழர்களை விட அதிகமான தொல்லைகளுக்கு உள்ளாகியவர்கள். சீரழிவுகளிலிருந்து மீள முடியாது அவதிப் பட்டுக் கிடக்கிறவர்கள். இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் தென் ஆபிரிக்காவிலிருந்தும், சூடானிலிருந்தும் தான் வருகின்றன. வலிகளின் சோகம் புரிந்தவர்கள். உலக அரங்கில் சர்வாதிகார ஆட்சியினர் விடை பெறுவது போல இன்றைய சிறிலங்கா ஆட்சியினரும் ஒரு நாள் விடை பெற வேண்டியவர்களே !

‘இந்த நாடு குற்றங்கள் புரியாது வாழ்கிற‌ பட்சத்தில் விரைவாகவே குடியுரிமையை அளித்து‍ (சிறிலங்காவைப் போல குடியுரிமையை பறித்து அல்ல..)இந்நாட்டு மக்களின் ஒருத்தராக ஏற்றுக் கொள்கிறது’என்ற காரணத்தால் அமெரிக்காவிலிருந்து நிறைய கறுப்பினத்தவர்கள்’அண்டர்கிறவுண்ட் ரயில்வேயில் இங்கே ஓடி வந்தார்கள். அன்று அப்படி ரயில்கள் ஒன்றும் ஓடவில்லை. அப்படி தப்பி வாரதிற்கு உரிய ரகசியச் சொல் அது!

ஆனால், நீண்டகாலம் அடிமை பட்ட இனமாக இருந்ததால் அந்த ஊறல்கள் தேசவழமை போல அவர்களிடம் படிந்து போய் விட்டிருந்தன. அதிலிருந்து மீண்டெழ முடியாத முட்டாள்களாக இருந்தார்கள். நம்மவர்கள் முறைகிறை பார்ப்பது போல, அவ்வினமும் சுதந்திரமாக அப்படி வாழ்றது பிழை, இப்படி வாழ்றது பிழை? என்றுஎனச் சொல்லிக் கொண்டிருந்தது.வேலையற்றவர்கள் தான் அதற்கு முயற்சிப்பவர்கள் என உள்ளுக்குள்ளேயே இளக்காரமாக கொச்சையாக விடுதலை முயற்சிகள் அனைத்தையும் பார்த்தன‌.அட பலவீனச் சிக்கல்களில்முற்றாக‌ மாட்டுப் பட்டுக் கிடந்தது.

ஊறல்களிலிருந்து மீள்ற‌து எல்லாருக்குமே கஸ்டமாகத் தான் கிடக்கின்றன. பிறகு ஜமேக்காவிலிருந்து கணிசமான கறுப்பினத்தவர்கள் இங்கே வந்தார்கள். அவர்கள் இவர்களோடு ஒட்டாது பிறிம்பானவர்கள் என விலத்தி இருந்தனர். இன்றும் அந்த விலத்தல் தொடர்கிறது. அதனால் அந்த கறுப்பர்களின் விடுதலை வரலாறை அறியத் தவறினர். வீரமானவர்கள் என்பதை உணரத் தவறியதால்.. அவர்களின் பிள்ளைகள் போதைப் பொருள் வர்த்தகர்களின் கைகளில் இலகுவாக வீழ்ந்து,தமக்குத் தாமே சுடுபட்டு சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.குற்றம் இழைத்தவர்கள் பட்டியலில் நிறையப் பேர் சேர்க்கப்படுவதால்.. நகர,அரச காவல‌ர்களிடம் ‘வெள்ளை இனமே மேம்பட்டது’நினைக்கிறவர்கள் இருக்க மாட்டார்களா!,அவர்களால் வேணுமென்றே பதியப் படுவதாலும்…அமெரிக்க கறுப்பர்கள், போல் படித்து அரசியலில் உயர்தரப் பதவிகளில்.. இருப்பவர்களாக இல்லாமல், ஏன்.இங்கே பாராளமன்ற உறுப்பினராகக் கூட இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்த கறுப்பர்கள் சுடுவது தமிழர்களைப் போல‌ வேற யாரையும் இல்லை ,அதிகமாக‌ த‌ம்மைச் சேர்ந்த கறுப்பர்களைத் தான். அதாவது சொந்தச் சகோதரர்களைத் தான். அதனால் ‘குற்றவாளிகள்’ என்ற வீணான‌ கெட்டபேர் . சிலவேளை மற்றய இனத்தவர்களும் இவர்களது சண்டையில் அகப்பட்டு விடுகிறார்கள். , அப்போது ‘பயங்கரமானவர்கள் ‘என்ற பழியும் அவர்கள் மேல் விழுந்து விடுகிறது.

தமிழர்களுக்கு கோழிச்சண்டைகளை விட்டு புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டிய பொறுப்பு இருப்பது போல இங்குள்ள‌ கறுப்பர்களுக்கும் ..இருக்கிறது.

மந்த புத்தியிலிருந்து இவர்கள் விடுபட்டேயாக வேண்டும். கறுப்பர்களின் சமூகப்பிரச்சனை குற்றப்பிரச்சனையாகவே நெடுக பார்க்கப் பட்டு வருவதால் அவர்களுக்கு மீண்டெழுவதற்கு மற்றைய மக்களின் தோழமைக் கரங்கள் தேவைப்படுகின்றன‌ .ஆபிரிக்க கறுப்பர்களின் ரத்தம் தோய்ந்த வீர வரலாறுகளை அறிய வேண்டும். அவை அவர்களுள் இறங்கவும் வேண்டும். இந்த நாட்டில், ஏற்கனவே அந்த கறுப்பர்கள்.. அவர்களடைய‌ பழைய‌ நினைவுச்சின்னங்களை அங்காங்கே நிறுவி வைத்தே இருக்கிறார்கள்.பல் கலாச்சாரநாடு என சிந்திப்பவர்களால் ஏற்பட்ட சாதகமான‌ மாற்றம். இங்குள்ள வலதுசாரிகளிடம் கூட சில நல்ல குணங்கள் காணப்படுகின்றன. இன்றைய சிறிலங்கா ஆட்சியாளரை நோக்கி “நீ போர்க் குற்றவாளி”திடமாக சுட்டுகிறார்களே.

‘டாக்ஸி’யை ஒழுங்கையில் இறக்கி, பெரிய வீதீயில் ஏற்றினான். கீல் வீதியில் ‘ஃபிஞ்சுக்கு மேலே வீதித் திருத்த வேலைகள் நடை பெறுகின்றன‌’என்ற அறிவித்தல் பலகை வீதியின் ஒரு பக்க புல்ப்பகுதியில் இருந்து இளித்தது.

அவ்வீதீயில் ஜமேக்கன் பலசரக்குக் கடையைக் கண்ட ஜக்சன் “நிறுத்து நிறுத்து”என்று கத்தினான். ‘டாக்ஸி’யை கடையின் பார்க்கிங்கில் கொண்டு போய் நிறுத்தினான்.” காத்திருக்க வேண்டி வரும்.மீற்றரை ஓட விடு”என்று விட்டு தனியே விறுவிறுவென உள்ளே போனான். தாராளமாக இருக்கிறானே?அது வேற சந்தேகத்தைக் கூட்டியது. பார்த்தால் வறுமையான குடும்பமாக தெரிகிறார்கள். மீற்றரில் ஏறுவதை நிறுத்தினான். மாணவர்களுக்கு,இப்படி பட்டவர்களுக்கு வீணாக ஏறுவதை நிறுத்தி விடுவது ராதாவின் வழக்கம் .’டாக்ஸி’ப் பயணச் செலவு இப்ப எல்லாம் அதிகம்.அதிகபட்ச சம்பளத்தைப் பெறுகிற அரசியல்வாதிகள்,தமது சம்பளத்தில் 10,15 வீதக் குறைப்பைச் செய்யாமல்,வரவு செலவுத் திட்ட‌த்தில் துண்டு விழுகிற போதெல்லாம் வரிகளைக் கூட்டி,விலைவாசியை அதிகரித்து மக்களையே வருத்துகிறார்கள். போனவன் 5 நிமிசத்தில், கையில் 2 ஆக உடைத்த கரும்புத் தடியுடன்,2,3 பைகளில் சாமான்களை வாங்கிக் கொண்டு வந்தான். கரும்பு தின்கிறான். இந்த கறுவல்களும் எங்களைப் போலத் தான்.நல்லூர்த் திருவிழாவில் கரும்பு தின்றது நினைவுக்கு வந்தது. வாகனத்தின் பின் பெட்டியைத் திறக்க அதனுள் வைத்து மூடினான்.மீற்றரின் பொத்தானை அமுக்க அது ஓட‌ ஆரம்பித்தது.

அவன் அப்பாவித் தனமாக கேட்டான். “விரைவு ஓட்ட வீதியை எடுக்கிறாயா?” ஜேன் வீதியேநகர எல்லைக்குப்பிறகு விரைவு ஓட்ட வீதியாகவே கிடக்கிறது. தவிர நிறைய வீதிருத்த வேலைகள் எங்குமே நடை பெறுவதால் சற்று தூரமாக இருக்கிற விரைவு வீதியை அடைவதே பிரத்தனமானது. அதை விட்டு ஒழுங்கையால் யோர்க் பல்கலைக்கழகத்திற்குள் போய் அதன் பக்க வீதியால் நகர எல்லையை சுலபமாக அடைந்து விடலாம். அந்த ஒழுங்கை வீதிகளை யாருமே அதிகம் பாவிப்பதில்லை. வீதி திருத்த வேலைகளும் எரிச்சல் மூட்டுறளவிற்கு அங்கே இருப்பதில்லை.விரைவானதும் கூட.!

.”குறுக்கு ஒழுங்கையால் விரைவாகவே போய் விடலாம்”என்றான். சிற்சில பகுதிகளில் நிறுத்தச் சைகைப் பலகைகளைக் கடந்த பிறகு ‘டாக்ஸி’ சீராக ஓடியது. பல்கலைக்கழக வீதியில் திரும்பியது.ஜக்சன்,பின்னுக்குத் திரும்பி மனைவியைப் பார்த்து கூறினான்.”என்னையும் இங்கே படிக்க வைத்திருந்தால்..இப்ப இங்கே படித்துக் கொண்டிருப்பேன்”

“கிழித்தாய்!,நீ படியாததிற்கு பெற்றோரிலே ஏன் பழியைப் போடுகிறாய்”என்று கோபித்தாள்.அவள் கூறுவதும் ஒரு விதத்தில் சரி தான்.இங்கே கல்வியை சிறிலங்கா ஆட்சியாளரைப் போல அவமிரியாதை செய்வதெல்லாம் இல்லை. தரப்படுத்தல், விகிதாசாரம்.. என்ற கண்ராவிகளை புகுத்தி பொருளாதார வளர்ச்சியை தடை செய்வதில்லை.’வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்,அதற்கு தகுதியானவர்களாகாக‌ வேண்டும்’என்ற முயற்சி, நோக்கம் நிலவுகின்றன. தகுதியற்ற பெரும்பானைமையினச் சிங்களவர்களைப் பதவிகளில் அமர்த்தித் திமிர்த் தனத்தை காட்டுவதுடன், சிறுபான்மைத் தமிழர்களுக்கு எலுப்புத் துண்டைப் போடுறது போல வேலை வாய்ப்புக்களை சுருக்கி ,அதற்குக் கூட பெருமான்மைச் சிங்கள அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து தான் பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுத்து அவற்றையும் தெரியக் கூடிய மாதிரி கண்டும் காணாமலும் இருக்கிற கொழும்பின் கொழுப்புத் தனம் எல்லாம்

இங்கே இல்லை.சட்டங்களை உருவாக்கிறார்கள் தான்.ஆனால், அவை அனைத்து மக்களுக்கும் ஒன்று தான்.அப்பப்ப இனவாதம் தனிப்பட்ட முறையில் தலைக் காட்டவே செய்கிறது.அவற்றை சட்ட ரீதியில் போராடி வெல்ல முடியும்.பெரும் பணத்தைக் கட்டி அவர்கள் பிணையில் வெளிய வரவே செய்கிறார்கள்.ஆனால் அந்த இனவாதப் போக்கு நாளடைவில் ஒரு கட்டத்தில் குறைந்து விடுகிறது.ஒருநேரத்தில் அவர்களே மனித உரிமைக்குப்போராடுறவர்களாக மாறுகிற‌ காந்தி மாற்றம் கூட நடக்கிறது.மகிந்தா போல, இனவாதப் பிக்குகளை எல்லாம் கண்டிக்காது வளர்த்து விடுற போக்குகள் இல்லை. மனிதன் நினைத்தால் மாற முடியாதில்லை.அதற்கு அவர்கள் சில விசயங்களை செய்து தான் ஆக வேண்டும்.கடந்த கால துரோகங்களை திருத்தாமல் எவருமே புனிதராக மாற முடியாது.இவர் மேலும் பிழை விடுறவராகவே இருக்கிறார்.இவருள் புகுந்த சாத்தான் அவரை ஆட்டி வைத்துக் . கொண்டேயிருக்கிறது.

சமகல்வித் தரம், நகரம் ,கிராமம் எல்லாம் பேணுவதால்,குக்கிராமத்தில் உள்ளவன் கூட சாதனைப் படைக்கிறான்;ஒலிம்பிக்கில் கூட பங்கு பற்ற முடிகிறது.ஜக்சன் படிக்க நினைத்திருந்தால் முடிந்தேயிருக்கும்.அதற்கு அவனுக்கு இலக்கை அடையிற உறுதி இருக்க வேண்டியது அவசியம்.அங்க இங்க என்று அலைபடுறவனாக இருக்கக் கூடாது.குடும்ப அலகுகளும் குழப்பாததாக இருக்க வேண்டும். அப்பன் ஓடிப்போறவனாக, இரண்டாவது அப்பனை எதிர் கொள்கிற சிக்கல்களும் குழப்பக் கூடியன.

அப்ப ஏன் படிக்கவில்லை.கறுப்பர்களுக்கு எல்லாம் சரியாக இருந்தாலும், ஏற்கனவே வாழ்ந்து தொலைத்து விட்டுப் போனவர்களால் ஏற்பட்டு விட்ட‌ பலவீனச் சூழல் சுழிகளாகிப்போய்க் கிடக்கின்றன. அவற்றிலிருந்தும் அவர்கள் தப்பி வெளியே வர வேண்டும். வந்தாக வேண்டும்.சமூகப் பிரச்சனையை குற்றப் பிரச்சனையாக பார்த்து.. சிறைகளும்,சட்டங்களும் அவர்களை மீண்டு வராத அளவுக்கு அடக்குகின்றன. பால் வடியும் முகங்களும், வாலிபர்களும் …போர்க்குற்றவாளிகள் போல் ‘சமூகத்தின் களைகள்’ போன்றவர்கள் என செய்தியாகக் காட்டுறார்கள்.

இதே மாதிரியான குற்றங்களைத் தான் இந் ‘நாட்டின் கதாநாயகர்’ என்கிற படையினரும் சாதாரணமாகச் செய்கிறார்கள்.அதாவது அரச ரீதியாக..சட்டரீதியாக.. செய்கிற போது அவை குற்றங்களே இல்லை.

இவர்கள் குற்றவாளிகள்.அவர்கள் கதாநாயகர்கள். ஜனநாயகத்தில் நிலவும் இந்த குறைப்பாட்டை நீக்க இன்னமும் புத்திசாலி ஒருத்தன் பிறக்கவில்லை

உலகம் முழுதும் சுதந்திரம் பெற்ற,அறிவாளிகளான கறுப்பர்கள் தமது சொந்த மண்ணில் காலூன்றியவர்களாக இருக்கிற போதிலும் இவர்களுடைய பிரதேச வாதத்தால் அவர்களின் வழிகாட்டல்கள் இவர்களுக்குக் கிடைக்கவில்லை.

ஈழத்து தமிழர்களும் அதே ஒத்த நிலையிலேயே இருக்கிறார்கள்.வடக்குத் தமிழர் தம்மை ‘ஈழத்துத் தமிழர்’ என பிரித்துக் காட்ட, அவர்களில் அரைவாசியரான கிழக்குத் தமிழர்கள் தாம் இன்னொரு சாதியனர் என கொடி பிடிக்கிறார்கள். ‘நாம் தமிழர்!’ என முற்போக்காக கொள்கையை வகுத்த ஈரோஸ் பிரிவினர் கூட அடுத்ததாக ‘நாம் ஈழவர்!’என்றே பிரிவினையையே எழுப்பினர். அதாவது தமிழ் நாட்டுத் தமிழர் ‘நாம் இந்தியர்!’என்பது போல.(இலங்கைக்கு ‘சிறிலங்கா’ என‌ தாமே சூட்டிக் கொண்ட பெயரை ஈழத்தமிழர் ஏற்கவில்லை.’ஈழம்’ என்ற பெயர் அதற்கு ஏற்கனவே இருக்கிறது.இந்தியர் போல ஈழவர்’ என்றனர்..ஒருமைப்பாட்டையே எழுப்பினர். அதாவது இலங்கைத் தமிழர்.அதிலே எவ்வளவு சரி,பிழை இருக்கிறது என்பது தெரியாவிட்டாலும்…சதா இனக்காச்சலில் இருக்கிற சிங்களவர்கள் அதைக் கூட‌ புரிந்து கொள்ளவே இல்லை.’ஈழம்’என்றால் தமிழர் காட்டுகிற வடக்கு,கிழக்கு நிலப்பகுதியைக்’ காட்டுகிறார்கள். அது ‘தமிழீழம்’.சிங்களவர் வாழ்றது ‘சிங்கள ஈழம்’. மொத்த‌ இலங்கையின் பெயர் தான் ‘ஈழம்’என்பது வரலாற்றாசிரியர்களுக்குத் தெரிகிறது.இவர்களுக்குத் தெரியவில்லை. பிழையான பாதையில் கால் வைப்ப‌தால், இங்குள்ள கறுப்பர்களுக்கும் யாரிலும் நம்பிக்கையும் இல்லை.இப்படித் தான் வாழ முடியும்,விதிக்கப் பெற்றிருக்கிறது என்பது போல கிடக்கிறார்கள்.போதைப்பொருளும்,துப்பாக்கிகளும் இவர்களை விடாது துரத்துகின்றன. ஈழத்தமிழர் கையில் துப்பாக்கி வந்த பிறகு, அவர்களே எதிர்பார்க்காதளவிற்கு மாறி அவர்களை எப்படி ஆட்டு வித்ததுவோ அதையேப் போல இவர்களையும் குழிகளில் வீழ்த்துகிறது,பதம் பார்க்கிறது.சந்தர்ப்பம் பார்த்து அரசும் மோசமான சட்டங்களையும் உருவாக்கி விடுகிறது. மஃபியா குழுக்களாக மாறிப் போன கறுப்பர்களிடமிருந்து மாணவர் தரவலியினர் தப்ப முடிவதில்லை. அதனாலே,அவனைப் போல பெரும்பாலானவர்களுக்கு படிக்க முடியாமல் போய் விடுகின்றன. இருவர் பேச்சிலும் உண்மை இருக்கிறன‌.

தூர இடத்தில் இருக்கிறான்.நல்ல வேலையில் இருக்கிறானா?அவனுடைய கோலம் …ம்…!,தெரியவில்லையே. சிலர் தூர இடத்தில் வீடு எடுத்து,கஞ்சா வளர்த்து பிடிபடுற செய்திகளும் பத்திரிகைகளிலும் வருகின்றன.ஒருவேளை அப்படியும் இருப்பவ‌னோ?எதையும் அறிய முடியாது.செய்தியாகி வருகிற போதே தெரிய வரும்.

‘டாக்ஸி’ மக்கன்சியை அடைந்தது.அதற்கு முதல் 2,3யோர்க் ரீஜனல் நகரக் காவலர்கள் காரில் அவனை கடந்து போனார்கள்.வேற காவலர்கள்.வேற நகரம்,வேற‌ அடையாளத்துடன் பயணிக்கிறார்கள்.ராதா எழுந்தமானமாக இங்கேயிருந்து பயணிகளை ஏற்ற முடியாது.ஏற்றுவதென்றால் களவாகத் தான் ஏற்ற முடியும்.இந்நகரத்திற்கும் பிறிம்பான ‘டாக்ஸி’கள் இருக்கின்றன. ஓடிப்போறவனாக இருக்கக் கூடாது. மறுபடியும் அந்த சிந்தனை வருகிறதே!

ஜக்சன் வழிகாட்ட ஒழுங்கையில் இறக்கி,ஒரு வீட்டின் முன் நிறுத்தினான்.. அவன் இறங்கி குழந்தையை ஸ்ரோலரில் வைத்து பொறுத்தி உருட்டிக் கொண்டு உள்ளே போனான்.திரும்பி வந்தவன்,பின்பெட்டியிலிருந்த சாமான்களை இறக்கி நிலத்தில் வைத்து விட்டு,மீற்றட்ருக்கு மேலே 2 டொலர் கூடுதலாகவும் தந்தான். ராதா “நன்றி”கூறி விடை பெற்றான்.சிற்றூர்ந்தில் தமிழ் சீடியை பாட விட்டான்.”இன்னும் என்ன தோழா..”7ம் அறிவுப் பாட்டு பாடியது.பாட்டு முடிய முதல் நகரத்திற்கு வந்து விடுவான்.

இவனைப் போல இன்னொருவனை ஏற்றுற போதும் சந்தேகப் படவே செய்வான். இவன் ஒருத்தன் நல்லவனாக இருந்தான் என்பதற்காக எல்லோரும் நல்லவராக இருந்து விடுவார்களா.என்ன!

– செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *