சந்தேகச்சங்கிலி

 

ஊருக்கு நாட்டாமையான என் வீட்டிலேயே திருட்டா? எப்படி இது நடந்திருக்கும்? என் மூன்று வயது குழந்தை, அபிநவ் அணிந்திருந்த டாலர் சங்கிலியைக்காணவில்லை. வழிவழியாக நான், என் அப்பா, தாத்தா அணிந்திருந்தது. பரம்பரை நகையைக்காணோம் என்றவுடன் பதட்டமாகத்தான் இருந்தது. காலையில் என் மனைவி தூளியிலிருந்து குழந்தையைத்தூக்கும்போதே கழுத்தில் இல்லையாம். எங்கு தேடியும் காணோம் என்றாள். முதல்நாள் முற்பகல் வரை கழுத்தில் இருந்ததை கவனித்த ஞாபகம் இருக்கிறதாம். இது என்ன சோதனை? சாமிபக்தையான அவள் உடனே கிடைக்க பிரார்த்தித்துக்கொண்டாள். யார்யார் வீட்டிற்கு வந்தார்கள் என்று நினைவுபடுத்தி சொல்லச்சொன்னேன்

நேற்று மதியம் வந்தவர் அவள் மாமா. நல்ல வசதி படைத்தவர். நல்லவர் .ஆனால் அவர் மகன் ஊதாரி. அவனாலேயே அவர் குடும்பம் பலரிடம் கடன் பட்டிருந்தது. அடுத்து வந்தது என் தங்கை. அவள் மகனின் காதணி விழாவிற்காக அழைக்க கணவனுடன் வந்தாள். நீண்டநேரம் அபிநவ்வை தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள். அவள் கணவர் பள்ளிஆசிரியர். ஒழுக்கசீலர். பக்கத்து நகரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்க சேமித்துக்கொண்டிருக்கிறார். அதற்குப்பிறகு வந்தவன் என் நண்பன். தொழிலும் கூட்டாளி. பரந்த மனப்பான்மை படைத்தவன். தன் பெரியமகனை ஊட்டியிலுள்ள சர்வதேசப்பள்ளியில் சேர்க்கப்போகிறான். பின்னர் வந்தது அடுத்த வீட்டுப்பெண். அடிக்கடி வந்து அபிநவ்வுடன் விளையாடிக்கொண்டிருப்பாள். ஒருமுறை அபிநவ்வின் கொலுசு கழண்டு வெளியில் கிடந்ததை எடுத்துக் கொடுத்தாள். கடைசியாக வந்து நெடுநேரம் குழந்தையைப்பார்த்துக்கொண் டு, தூங்கியதும் தூளியில் போட்டது வேலைக்காரி தங்கம். அவளும்,அவள் கணவன் இறந்தபிறகு,பத்து வருடங்களாக இங்குதான் வீட்டுவேலை செய்துவருகிறாள். பிரசவத்தின்போது மிகவும் உதவியாக இருந்தாள். ஏதாவது எதிர்பாராத செலவென்றால் முன் பணம் வாங்கிக் கொண்டு, பின்னர் சம்பளத்தில் கழித்துக்கொள்ளச்சொல்வாள். ஆறு மாதத்திற்குமுன் அவள் பெண்ணின் கல்யாணத்திற்காக அப்படித்தான் வாங்கினாள். பத்து நாட்களுக்கு முன் அவள் மகன் வட்டிக்கடை ஆரம்பி த்திருப்பதாகச்சொன்னாள்.

என்னதான் சமாதானப்படுத்திக்கொண்டாலும்,சங்கிலித்தொடர்போல சந்தேகம் வந்தவர்கள்மீது ஏற்படவே செய்தது. ஒவ்வொருவர்பேரிலும் எழும் சந்தேகத்தினை முற்றிலுமாக புறம்தள்ள இயலவில்லை ஆழ்ந்து ஆராய்ந்து ஒவ்வொருவராக நீக்கம் செய்ய முயற்சித்தேன். ஆயினும், தங்கத்தின் மேல் சந்தேகம் வலுவாக விழுந்தது. இந்நேரம் சங்கிலியை மகனிடம் கொடுத்து அழித்திருப்பாளோ? அது பரம்பரை சொத்தாயிற்றே! இத்தனை தலைமுறையாக காப்பாற்றி வந்த விலைமதிக்கமுடியாத ஆபரணத்தை நான் தொலைத்துவிட்டேனே! ஆதாரம் இல்லாதபட்சத்தில் எடுக்கவே இல்லையென்று தங்கம் சாதிப்பாளோ? போலீசிடம் புகார் கொடுத்தால் அவ்வளவு விரைவான பலனைக்கொடுக்காது. சிலசமயம் ஊரில் பெரியமனிதர் என்றமுறையில், அழுத்தம் கொடுத்தால், அதற்கு ஈடானதை வைத்துக் கொள்ளுங்கள் என்று திருட்டில் கைப்பற்றிய வேறு சங்கிலியைக்கொடுத்து முடித்துவிடுவார்கள். உணர்வு ரீதியாக வேறொன்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. நாட்டாமையான நானே கேட்கவேண்டிய விதத்தில் கேட்டால் உண்மை தானே வெளிவந்து விடப்போகிறது. பத்துவருடங்களாக நம்வீட்டு உப்பைத்தின்றாலும், விசுவாசமில்லாத ஜென்மம். உடனே தங்கத்தை அழைத்து வர ஆளனுப்பினேன்

அப்பா இவ்வூர் நாட்டாமையாக இருந்தபோது தப்புசெய்தவர்களிடம் உண்மையை வரவழைக்க மரத்தில் கட்டிவைத்து சாட்டையால் அடிக்கும் வழக்கம் நினைவுக்கு வந்தது. தங்கம் உண்மையைச்சொல்லாமல் பசப்பினால் அதுபோன்ற தண்டனைதான். ஏனென்று கேட்க நாதியில்லாத குடும்பம். அவளுக்கு ஆதரவாக எத்தனைபேர் வரப்போகிறார்கள்? வந்தாலும் என் ஆதிக்கத்திற்கெதிராக எவன் பேசப்போகிறான்? ஏழ்மையின் பிடியில் இருக்கும் அவர்களை நாலு தட்டு தட்டினால் போதும். பயந்துபோய் வாயை மூடிக்கொண்டு கிடப்பார்கள்.

தங்கம் வந்தாள். அபிநவ் தூங்கியபின் தூளியில் போடும்போது சங்கிலி அவன் கழுத்தில் இருந்ததா என கேட்ட என் மனைவி, இப்போது அதைக்காண வில்லை என்பதையும் தெரிவித்தாள். அப்போது கழுத்தில் இல்லையென்ற தங்கம், வீட்டிற்குள்தான் எங்காவது இருக்குமென்றும், யார் இங்குவந்து எடுத்துவிடப் போகிறார்கள் என்றும், தோளில்தட்டி தூங்கவைக்க தோட்டத்திற்கு தான்சென்ற பகுதிகளில் தேடிப் பார்க்கிறேன் என்றும் சகஜமாக சென்றாள். எப்படி நடிக்கிறாள்! உண்மையை வரவழை க்க மனதில் எண்ணியுள்ள உபாயம் பலனளிக்குமா? யோசித்து யோசித்து கோபத்தில் கண்கள் சிவந்தன. வயதான பெண்மணியென்று பாவபுண்ணியம் பார்க்கக்கூடாது.

தண்டனையைப்பற்றி முடிவு செய்து தயாரானபோது, என் மனைவி பூஜைஅறையிலிருந்து சத்தம் போட்டுக்கூப்பிட்டாள். சங்கிலி பிள்ளையார்சிலையின் மேல் கிடக்கிறதாம். கோவிலில் அபிஷேகம் பண்ணும்போது பக்தர்கள் அவர்களின் நகைகளைக் கொடுக்க அவற்றை சிலைமேல் போட்டு சுவர்ணாபிஷேகம் செய்வதை என் மனைவி கோயிலுக்குத்தூக்கிக்கொண்டு செல்லும்போதெல்லாம், .அபிநவ் பார்த்திருக்கிறான். நேற்று வீட்டில் நடந்த விநாயகசதுர்த்தி அபிஷேகத்தின் போது அவனும் அதுபோல் செய்திருக்கிறான். அதை யாரும் கவனிக்கவில்லை. குழந்தைக்கு அதற்குள் எவ்வளவு கூர்ந்து அவதானிக்கும் திறன்! என் மனைவி சிலாகித்துக் கொண்டிருக்கிறாள். எனக்கென்னவோ சுழற்றப்பட்ட சாட்டை சுளீர் என்று என்னைப்பதம்பார்த்துச்சென்றதைப்போன்றிருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
அலுவலகத்தில் என்னுடைய கேபினுக்கு வெளியே, டை கட்டிக்கொண்டு மிடுக்காக ஒருவர், அவர் விசிட்டிங் கார்டை பியூனிடம் கொடுத்துவிட்டு காத்திருந்ததை கண்ணாடி வழியாகப்பார்த்தேன். நான் கையெழுத்திட்ட பைல்களை, அலுவலக உதவியாளர் எடுத்துச்சென்றபின், பியூனைக்கூப்பிட்டு அவரை அனுப்பச்சொன்னேன். விசிட்டிங் கார்டைப்பார்த்தபோது, நகரின் பிரபலமான கார்பொரேட் ...
மேலும் கதையை படிக்க...
"அப்பா! வரும் வெள்ளிக்கிழமை அண்ணன் இங்கு வருவதாக இ மெயில் அனுப்பியிருக்கிறது!" குதூகலமாக குழந்தையைப்போல் சொன்னாள் தேன்மொழி. நீண்ட இடைவெளிக்குப்பின் பிறந்தவள். மேல்நிலை இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். குதூகலம் தொற்றிக்கொள்ள, அவள் அம்மாவிடம் சொன்னேன், "அப்பாடா! ஐந்து வருடங்கள் கழித்து நம்மூருக்கு ...
மேலும் கதையை படிக்க...
நகரத்தின் பிரபலமான அந்த வணிக நிறுவனத்தின் கணக்கு வழக்குகள், பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றைச்செய்ய, வங்கிக்கு வழக்கமாக வெங்கோஜிதான் வருவார். சென்ற பத்துபதினைந்து தினங்களாக புதிதாக வந்துகொண்டிருப்பவரிடம், "வெங்கோஜி விடுப்பிலிருக்கிறாரா?" என்று கேட்டேன். அவர், "இல்லை சார்! அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் ...
மேலும் கதையை படிக்க...
கோவை எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் பத்தாவது நடைமேடையில் புறப்பட ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்தது. கோவையில் ஒரு திருமணம்: திருமணங்களுக்கு மனைவியும் நானும் தம்பதிசமேதராகத்தான் செல்வோம். இம்முறை அவளால் வரவியலாததால் நான் மட்டும். வண்டி புறப்படும் நேரத்திற்கு இருபது நிமிடங்களுக்கு முன்னதாகவே இருக்கைக்கு சென்று அமர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
சித்தி கடைசிவரை என்னுடன் வந்து இருப்பதற்கு ஏன் மறுத்துவிட்டாள் என்பதற்குத்தான் காரணமே புரியவில்லை. ஆயாவிடம் பையனுக்கு சாப்பாடு கொடுத்தனுப்பிவிட்டு, பின்னர் வந்த ஆபீஸ் பியூனிடம் கேரியரைக்கொடுத்துவிட்டு, சற்று ஆசுவாசமாக ஈஸிசேரில் அமர்ந்தவுடன் இந்தக்கேள்விதான் இன்னும் பூதாகாரமாக நின்றது. பலமுறை இதைப்பற்றி யோசித்திருக்கிறேன் நான். ...
மேலும் கதையை படிக்க...
அவசர சிகிச்சை உடனடி தேவை
வாழ்க்கைத்தரம்
மீளா வட்டம்
ஊதிய உயர்வு
குற்றமொன்றும் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)