சதுரங்க புத்திசாலிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 6,206 
 

வீட்டு முன் ஹாலில் விடாமல் அடித்துக்கொண்டிருந்த டெலிபோன் சத்தம் கேட்டு அங்கு வந்து போனை எடுத்த தொழிலதிபர் மயில்சாமி,ரீசிவரை காதுக்குள் வைத்ததும் வந்த செய்தியை கேட்டவுடன் ஐந்து நிமிடங்கள் ஆடாமல் அசையாமல் நின்றார். அவருடனே அலுவலகத்துக்கு வரும் மகன், அங்கு வந்தவன் அப்பாவின் அந்த நிலையை பார்த்து என்னப்பா? என்ன விசயம்?

குரல் கேட்டதும் தன்னிலை பெற்ற மயில்சாமி “மந்திரி சுகவனம்” போயிட்டாராம்மா வருத்தத்துடன் சொன்னார்.

இதை கேட்ட மயில்சாமியின் மகன் மந்திரி போயிட்டாருன்னா நீங்க ஏம்பா ஷாக் அடிச்ச மாதிரி ஆயிட்டீங்க, அவர் உங்க ஜென்ம விரோதியாத்தான இருந்தாரு. அவரால உங்களுக்கு எத்தனை பிரச்சினை வந்தது.தேவையில்லாமல் நம்ப கம்பெனி மேல புகார் கொடுத்து ஆளுங்களை எல்லாம் கூட்டி வந்து போராட்டம் பண்ணி, இதை வச்சே கட்சியில சீட்டை வாங்கி,மந்திரியும் ஆனாரு. இப்ப என்னாச்சு, ஆளுதான் போய் சேர்ந்தாச்சு.இனி மேலயாவது கொஞ்சம் நிம்மதியாய் இருக்கலாம்.

சொல்லிக்கொண்டே போன மகனை நிமிர்ந்து பார்த்த மயில்சாமி” போய் மரியாதை பண்ணிட்டு வந்துடுவோம்”

ஆச்சர்யமுடன் பார்த்தான் மகன் ஏம்பா உங்களுக்கு என்ன பைத்தியமா? உங்க ஊர் ஆளா இருக்கலாம், அதுக்காக அந்த ஆளை போய் பார்த்து மரியாதை கொடுக்கணும்கறீங்க, நீங்க போறதுன்னா போங்க, நான் வரலை. அப்படி எல்லாம் பேசாதே, வருங்காலத்துல இந்த கம்பெனியை கட்டி காப்பாத்த போறவன் நீ இந்த மாதிரி உணர்ச்சிகளை வெளிப்படையா காட்டக்கூடாது, புரிஞ்சதா?

முணு முணுத்துக்கொண்டே தந்தையின் சொல்லுக்கு மரியாதை தருவது போல தலையை ஆட்டினான்.

மந்திரியின் உடல் வைக்கப்பட்டிருந்த்தை சுற்றி அவர் கட்சிக்காரர்கள் நின்று கொண்டு முகத்தை சோகமாக வைத்திருப்பது போல் நின்று கொண்டிருந்தார்கள். உள்ளே அடுத்த தலைமை இந்த இடத்துக்கு யாரை போடுமோ என்ற எதிர்பார்ப்புத்தான் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. மயில்சாமியும், அவர் மகனும் வரிசையில் மந்திரி சுகவனத்தின் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு வந்தனர்.மயில்சாமியின் முகம் அவரது சோகத்தை காண்பித்தது. மகனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த அப்பா இவன் இறந்ததுக்கு சந்தோசப்படுவதை விட்டு விட்டு ஏன் முகத்தை தொங்க வைத்துக்கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை..

மயில்சாமியின் முகம் உண்மையில் களையிழந்துதான் போயிருந்தது. மகனுக்கு தெரியுமா மந்திரி சுகவனம் இவருக்கு எப்படிப்பட்ட நண்பனென்று, வெளி உலகத்துக்கு மயில்சாமியின் கம்பெனியில் ஊழியர்கள் பிரச்சினை,சுற்று சூழல் பிரச்சினை என்று இடைவிடாமல் போராட்டாங்களை அறிவித்து இதன் மூலமே பெரிய ஆள் ஆனதற்கு இவர்கள் இருவரின் நட்புதான் காரணம், என்பது மகனுக்கு புரியுமா?

அரசியலில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று அலை பாய்ந்து கொண்டிருர்ந்த சுகவனத்துக்கு இந்த ஆலோசனையை கொடுத்தவரே மயில்சாமிதான்.. இதை மகன் நம்புவானா? தனக்கும், சுகவனத்துக்கும் உள்ள நட்பை இவன் அறிவானா?

நீ காலேஜ் ஜாயின் பண்ணறியா?

கேட்ட மயில்சாமிக்கு, “ச்”. என்று உதட்டை பிதுக்கி காட்டினான் சுகவனம்,

“ச்”’ ன்னா என்ன அர்த்தம்?

கவலையுடன் கேட்ட மயில்சாமிக்கு மேலேயெல்லாம் படிக்க வசதி இல்லையப்பா, பேசாம சென்னைக்கு போலாமுன்னு பாக்கறேன்,அங்க எங்க மாமா ஒருத்தரு இருக்காரு, அவர் கடையில ஏதாவது வேலை போட்டு தருவாரு.

சொன்னவனை கவலையோடு பார்த்த மயில்சாமி நல்லா மார்க் வாங்கியிருக்கே, நம்ம ஹெட்மாஸ்டர் கிட்ட கேட்டு பார்த்து மேலே படிக்கறதுக்கு உதவி வேணா கேட்டு பார்க்கலாமா?

கேட்ட,மயில்சாமியை சிரிப்புடன் பார்த்து நீ மத்தவங்களுக்கு கவலைப்படறதை நிறுத்து. நாங்களாவது எஸ்.எஸ்.எல்.சி வரைக்குமாவது படிச்சு வந்துட்டோம், நீ ஒன்பதாவதுலயே வசதிபடலையின்னு நின்னுட்டே, ஆமா இப்ப நீ செய்யற வேலை உங்க குடும்பத்துக்கு போதுமா?

இப்பொழுது மயில்சாமி “ச்” என்ற உச்சரிப்பை கேட்ட சுகவனம் சிரித்தான்.

பார்த்தியா? நான் “ச்” ந்னு சொன்னப்ப சூடானயே, இப்ப நீ அதையத்தான் சொல்றே.

சரி நான் ஒண்ணு சொல்றேன் கேளு, நான் சென்னை போறப்ப உன்னையும் கூட்டிட்டு போறேன் என்ன சொல்றே?

மயில்சாமி ஐந்து நிமிடம் யோசித்தவன் எதுக்கும் எங்கம்மா கிட்ட இதை பத்தி பேசிட்டு உங்கிட்ட சொல்றேன். சரி சீக்கிரம் சொல்லு, நான் அடுத்த வாரமே கிளம்பலாம்னுட்டு இருக்கேன்.

அடுத்த வாரம் அவர்கள் ஊரிலிருந்து கிளம்பிய இரயிலில் ஒரு செட் துணிகள் மட்டும் எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பி இருந்தனர். சுகவனம் கையில் ஐம்பது ரூபாய் இருந்தது. மயில்சாமியிடம் பத்திருபது ரூபாய் மட்டுமே இருந்தது. அவனுக்கு கிளம்பவே மனம் இல்லை, கையிலே பணமும் இல்லை. அவன் அம்மாவிடம் ஒரு குன்றுமணி அளவு கூட நகை இல்லை.

மயிலு இங்கனயே ஏதாவது ஒரு வேலை செய்யுடா, நீ ஒத்தை பையன், உங்கப்பாவும் இல்லை, அசலூருல பிழைச்சு என்னத்த பண்ணப்போறோம். சொன்ன அம்மாவின் மனதை மனமாற்றி அழைத்துக்கொண்டு வந்தவன் சுகவனம்.

ஆரம்பத்தில் கடையில் சுகவனத்தோடு, மயில்சாமிக்கும் தன்னுடைய கடையில் வேலை போட்டு கொடுத்த சுகவனத்தின் மாமா, பின்னாளில் தன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தார். இருவரையும் எல்லாரையும் போலவே கடையில் வேலை வாங்கினார்.

சம்பளம் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி எல்லாம் கிடைக்கவில்லை. அதெல்லாம் சாப்பிடறதுக்கும்,தங்கறதுக்கும் சரியா போச்சு என்று சொல்லி விட்டார். இருவருக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.

ஒரு நாள் சுகவனம்தான் சொன்னான், பேசாமல் இரண்டு பேரும் வெளியே போயிடலாம், வெளியே போய் எப்படி இருக்கறது?

கேட்ட மயில்சாமியை நான் நம்ப கடைக்கு சாமான் வாங்க வர்ற ஒருத்தருக்கிட்ட பேசி வச்சிருக்கேன், அவர் வீட்டுகிட்ட ஒரு ரூமு காலி இருக்காம், மாசம் இரு நூறு கொடுத்தா போதுங்கறாரு.

மயில்சாமி உடனே சரி என்று சொல்லவில்லை. இரண்டு நாட்கள் கழித்தே சரி என்று சொன்னான், மறு நாளே இவர்கள் இருவரும் எஸ்கேப் ஆகி விட்டனர்.

கிடைத்த இடத்தில் இருவரும் வேலை செய்தனர். மயில்சாமி வேலைக்கு சேர்ந்த முதலாளிக்கு, மயில்சாமியை மிகவும் பிடித்து விட்டது. சில நேரங்களில் அவனை கல்லாபெட்டியை கூட பார்த்து கொள்ள சொல்வார். மயில்சாமியும் அவர் நம்பிக்கையை காப்பாற்றுவது போல நடந்து கொண்டான்.

சுகவனத்துக்கு சொல்லிக்கொள்ளும்படி வேலை கிடைக்கவில்லை. என்றாலும் மயில்சாமி புண்ணியத்தில் இவன் வண்டியும் ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் ஆரம்பிக்கப்பட்டிருந்த ஒரு கட்சியில் மெல்ல தன்னை நுழைத்துக்கொண்டான் சுகவனம். எதோ அன்றன்றைக்கு கட்சி ஆபிஸ் சென்று கிடைக்கும் வாய்ப்பில் உணவு பிரச்சினையை தீர்த்துக்கொள்வான். இரவு மயில்சாமியுடன் வந்து தங்கி விடுவான். செலவுக்கு மயில்சாமி கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்வான்.இப்படி ஓடிக்கொண்டிருந்தது இவர்களின் காலம்.

அன்று கடை முதலாளியுடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.கடையில் கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருந்த மயில்சாமியை முதலாளி கூப்பிட்டு,

எதிரில் உட்கார்ந்திருந்தவரிடம் “மச்சான்” இந்த பையனை கூட்டிட்டு போ, உனக்கு கணக்கு வழக்குக்கு ஒத்தாசையா இருப்பான். இவன் என்ன ஏது என்று புரியாமல் முழிக்க “டேய் தம்பி இவர் ஒரு கம்பெனி வச்சிருக்காரு, அதுக்கு கணக்கு வழக்கெல்லாம் பாக்கணுமாமா? நாளையில இருந்து அங்கே போய் வேலை செய்.

சொன்னவரை பார்த்து ஆகட்டுங்கய்யா என்று பதவிசாக இவன் அளித்த பதிலால் மகிழ்ந்து போன அந்த புதியவர், இவன் தோளை தட்டிக்கொடுத்து நாளைக்கு நானே உன்னை வந்து கூட்டிட்டு போறேன். சொல்லி விட்டு விடை பெற்றார்.

இரவு சுகவனத்திடம் இந்த விசயத்தை சொன்னவுடன் மிகுந்த கவலை பட்டான்.

அவன் கவலையை கண்டு “நீ கவலை படாதே”இந்த ரூமுக்கு மாசமானா வாடகை நான் கொடுத்துடறேன். என்ன இனி அடிக்கடி என்னை பாக்க முடியாது.அவ்வளவுதான்.

சொன்னது போலவே மயில்சாமி அந்த கம்பெனியிலேயே ஒரு அறையில் தங்கி விட்டான்.இரவு பகல் இல்லாமல் அங்கு வேலை செய்தான். ஆறு மாதத்திலேயே கம்பெனியில் வேலை செய்யும் நாப்பது ஐம்பது தொழிலாளர்களுக்கு பொறுப்பாளாகி விட்டான்.

இடையிடையே சுகவனம் வந்து இவனிடம் செலவுக்கு பணம் பெற்றுக்கொள்வான். இப்பொழுது அவனும் அந்த கட்சியில் ஏதோ ஒரு பொறுப்புக்கு வந்து விட்டதாக தெரிவித்தான்.

மயில்சாமியின் முதலாளிக்கு திடீரென்று மாரடைப்பு வந்து படுத்து விட கம்பெனி தள்ளாட ஆரம்பித்தது. முதலாளி அவனை கூப்பிட்டு என்ன செய்யலாம், விற்று விடலாமா? என்று கேட்க இவன் துணிந்து நான் நடத்துகிறேன் என்றான்.முதலாளி மேலும் கீழுமாய் பார்த்தார்.

ஐயா உண்மையாய் சொல்றேன், ஒரு இரண்டு வருசம் கொடுங்க, அதுக்குள்ள இந்த கம்பெனிக்கு உண்டான தொகையை கொடுத்துடறேன், ஆனா இப்ப கேட்காதீங்க, என்று இவனின் கெஞ்ச்லை பார்த்தவர் என்ன நினைத்தாரோ, சரி ஆனா கம்பெனிக்குண்டான தொகைக்கு ஈடா வட்டி மட்டும் மாசா மாசம் எனக்கு வந்துடணும், என்ன சரியா?

இவன் மகிழ்ச்சியுடன் சரி என்று சொன்னான். பத்திரங்கள் எழுதப்பட்டன.

மாதம் முப்பதாயிரம் வட்டித்தொகையாகவும் இரண்டு வருடங்களில் அசல் தொகையை கொடுத்து முழுவதுக்குமான கம்பெனியை பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவாகியது.

மயில்சாமி இப்பொழுது கம்பெனியின் பொறுப்பாளனாகி நடத்த ஆரம்பிக்க அவனுடைய தொழில் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இரண்டு வருடங்களில் தவறாமல் அவர் கேட்ட வட்டி தொகை கொடுத்த்தால் அவர் அசல் தொகையை கொஞ்சம் குறைத்து வாங்கிக்கொண்டு கம்பெனியை அவனுக்கே முழுவதும் எழுதிக்கொடுத்து விட்டார்.

அடுத்த ஐந்து வருடங்களில் இவன் கம்பெனி அந்த ஏரியாவில் பெரிய கம்பெனி என்ற அந்தஸ்தை அடைந்து விட்டது. இடையிடையே வந்து கொண்டிருந்த சுகவனமும் அவனுடைய கட்சியில் ஓரளவு பேர் சொல்லும் அளவுக்கு வந்திருந்தான்.இருவருமே

ஊர் சென்று பெண் பார்த்து திருமணம் செய்து வந்திருந்தனர்.இப்பொழுதெல்லாம் சுகவனமும் கட்சி செல்வாக்கை வைத்து ஓரளவு வசதியாகி விட்டான். மயில்சாமியிடம் பணம் கேட்பதில்லை.

மயில்சாமியிடம் ஒரு நாள் சுகவனம் என்னுடைய தொகுதி எம்.எல்.ஏ இறந்து விட்டதால், அந்த இடத்துக்கு யாரை போடலாம் என்று கட்சி தலைமை யோசிப்பதாகவும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் நன்றாய் இருக்கும் என்று வருத்தத்துடன் சொன்னான். மயில்சாமி “உனக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறேன்” ஆனால் உன் சாமார்த்தியம், அதை பிடித்து முன்னேறுவது, என்றான்.

என்ன செய்ய சொல்லுகிறாய்?

நீ என் கம்பெனி ஊழியர்களுக்கு சங்க தலைவராகி விடு, அதன் பின் போராட்டங்களை வரிசையாக ஆரம்பி” சொன்ன மயில்சாமியை ஆச்சர்யத்துடன் பார்த்து உனக்கு எதிராகவா?

என்ன சொல்கிறாய், என்று வியப்புடன் கேட்டான். அவன் மெல்ல சிரித்து நான் சொன்ன படி செய்.

தொழிலாளர்களின், அவர்கள் கட்சி சார்ந்த சங்க தலைவராக (முதலாளி செல்வாக்கால்) சுகவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த மாதமே போனஸ் கேட்டு பெரும் போராட்டத்தை ஆரம்பித்தான். அந்த போராட்டம் மயில்சாமியின் சாமார்த்தியத்தில் பல பத்திரிக்கைகளில் வெளி வந்து சுகவனத்தின் பெயர் பிரபலமடைய ஆரம்பித்தது.ஒரு வழியாக பேச்சு வார்த்தை முடிந்து தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டவுடன், இவன் தொழிலாளர் தலைவன் என்ற இமேஜ் விழுந்ததால், கட்சி தலைமை இவனுக்கு எம்,எல்,ஏ. சீட்டை வழங்கியது.கூடவே

இதற்கு பண பட்டுவாடாக்களை கவனித்துக்கொண்டது மயில்சாமிதான்.

எதிர்பார்த்த்து போலவே இவன் எம்.எல்.ஏ வானான்.அடுத்து இவன் மந்திரி ஆவதால் தன்னுடைய கம்பெனிக்கு என்ன லாபம் என்று கணக்கு போட்ட மயில்சாமி அவனை கம்பெனிகளால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்பை காரணம் காட்டி உண்ணாவிரதம் இருக்க செய்தான், அதன் பின் பொது மக்கள் சார்பாக ஒரு போராட்டத்தையும் செய்ய சொன்னான். ஆளுங்கட்சியாக இருந்த சுகவனத்தின் கட்சி அவனை சுற்று சூழல் மந்திரி ஆக்கியது. இப்பொழுது மயில்சாமியை தனது மானசீக குருவாகவே மனதுக்குள் ஆக்கி இருந்தான் சுகவனம்.

வெளி உலகில் சுகவனம் “மயில்சாமிக்கு எதிரி” என்கிற இமேஜ் இன்று வரை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி இருந்தும் தொழிலதிபர் மயில்சாமி வந்து அவரின் உடலுக்கு மரியாதை செலத்தியதும் அல்லாமல் கண் கலங்கி நின்று கொண்டிருந்தது பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியாகி அவருடைய இமேஜ் பல மடங்கு உயர்த்தி இருந்தது.

இதன் மூலம் என்ன கணக்கு வைத்திருக்கிறாரோ மயில்சாமி?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *