கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 12, 2013
பார்வையிட்டோர்: 11,042 
 

வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்படிச் சொல்லக்கூடாது. வீடென்று எதைச் சொல்வது? வீடே இல்லை. கண்ணி வெடியில் சிதறிய சிங்கள இராணுவத்தின் கணக்குத் தெரியவில்லை. ஆனால் எரிந்த குடிசைகளின் கணக்குத் தெரியும். முப்பத்தியிரண்டு. இராணுவம் சுட்டு இறந்துபோன தமிழர்களின் கணக்கும் தெரியும். பதினெட்டு! கணக்கும் வழக்கும் சொல்ல வாழ்க்கை என்ன வகுப்பறையா? அம்மா இல்லாத எங்கள் குடும்பத்தின் நால்வரும் தேவாலயத்தில் தஞ்சமானோம். அப்படி நின்ற ஒரு நூறு பேருக்குப் பாணும் தேநீரும் கிடைத்தன. தாடிவளர்த்த அருட் தந்தையின் ஆறுதல் வார்த்தையும் கடற்கரை வெக்கையை மேவிக் குளிர்வித்தது.

“ஓடு ஓடு” என்று மனம் சொன்னது. அப்பாவையும், தம்பி, தங்கைகளையும் விட்டுவிட்டு எப்படிப் போவது? அப்பாவின் நரைத்த தாடி மயிர்களுக்குள்ளால் அடிக்கடி கண்ணீர் ஒழுகுகிறது. அம்மா போனதில் இருந்து அல்ல. இப்படி அல்லல்பட்டுத் திரிகின்ற காலத்தில் இருந்து.

இப்படி எவ்வளவு அப்பாக்கள், அம்மாக்கள், உறவுகள் அழுகிறார்கள்? மூத்தமகள் எனக்கு அப்பாவின் துக்கம் தாள முடியவில்லை. ஆனால் வேறொன்று உள்ளது. இந்தத் தேவாலயத்தினுள்ளும் இராணுவம் புகலாம். எதுவும் செய்யலாம். ஆகக்கூடியது என்ன? கொல்லல். அதை ஆணுக்கு, முதியவர்களுக்கு, குழந்தைகளுக்குச் செய்யலாம். பெண்ணுக்கு?

என் அச்சம் அதுவே. இளங்கோ அண்ணனுக்கு இது புரியவில்லை. அவர் ஆணென்பதால் இருக்குமோ? அக்காமார் ஆரினதும் தொடர்பு எனக்கு இல்லை. உள்ளே போனால்தானே தொடர்புவரும்? இளங்கோ அண்ணன் விடுகிறார் இல்லையே!

ஊத்தை உடுப்புப் போட்டிருந்த தம்பி, தங்கச்சியின் முகத்தை அன்பால் தடவினேன். நரை மயிரில் தாடி இருந்த அப்பாவின் முகத்தை மனதால் கொஞ்சினேன். காலமையில் பசி இருக்கக்கூடாதென்று மரவள்ளிக்கிழங்கையாவது அவித்துத் தந்தவர் அப்பா. தம்பி, தங்கச்சியைப் பசி இருக்கவிடமாட்டார். நானும் என்ன சாவை நோக்கியா போறன்? அப்பாவிடம் அடிக்கடி வருவன்.

2

“இப்படி வந்திருக்கக் கூடாது” என்றார் இளங்கோ அண்ணன்.

“ஆரும் அக்காவையளிடம் கொண்டு போய்விடுங்கோ. அவையளுக்கு என்னை விளங்கும்” என்றேன்.

தமிழரசியக்காவின் பாசறைக்குள் கொண்டு போய்விட்டனர். அதில் இருந்த பதின்மூன்று பேரும் அக்காமார் அல்ல. சில தங்கச்சிமாரும் இருந்தினம்.

எனக்கு இப்போது பயிற்சி இல்லை. பாசறையின் அனைத்துப் பொறுப்பும் எனக்கு. முற்றம் கூட்டுகிறேன். பாசறையைத் துப்புரவுபடுத்துகிறேன். தேநீர் தயாரித்தல், காலைப் பாணுக்குச் சம்பல் செய்தல். மதியத்திற்கும் இரவுக்கும் சமையல். உடுப்புத் தோய்த்தல். பாசறைக்கு வருவோரை உபசரித்தல் என்ற வேலைகள். உதவிக் குச்சில அக்காமாரும், எல்லாத் தங்கச்சிமாரும் வரீனம். எஞ்சிய நேரங்களில் புத்தகம் வாசிக்கிறேன். கவிதை எழுதிப் பார்க்கிறேன். எல்லா இரவுகளிலும் அப்பா, தம்பி, தங்கையை எண்ணி அழுகிறேன்.

இந்த ஆறு மாதத்தில் ஒரு வேலைக்கும் தமிழரசியக்கா என்னை ஏவியதில்லை. நானாகச் செய்தேன். “நீ ஏன் மாடு மாதிரி முறியிறாய்?” என்று வேலைகள் சிலவற்றைப் பறித்தா. திரும்ப அவற்றை நான் பறித்துவிட்டேன். தமிழரசியக்கா கோபமாயும் சிரிப்பாயும் என்னைப் பார்த்தா. தமிழரசியக்கா அழகி என்று அச்சிரிப்பு சொல்லிற்று.

இரவு பாத்திரங்களைக் கழுவிக் காய வைத்த பிறகு இருட்டோடு இருட்டா இளங்கோ அண்ணன் வந்தார். “ஒண்டும் எடுக்க வேண்டாம். வெளிக்கிடு” என்றார். எடுக்க என்ன இருக்கிறது? வழி அனுப்பி வைக்க தமிழரசியக்கா இல்லை. அந்த முகத்தைப் பார்த்துவிட்டுப் போயிருக்கலாம்.

3

ஆயிற்று. எவ்வளவு நாள் என்று கணக்கு வைக்கவில்லை. இருள்வதும் விடிவதும் மாத்திரம் தெரிகிற காட்டுக்குள் நாளும் கிழமையும் எப்படித் தெரியும்? கைகாய்த்துப் போயிற்று. நிமிர்ந்த நேரான நடை எனக்கு வந்துவிட்டது. இனிக் கொள்கையோ, முதுகோ கூன எதுவும் இல்லை. பாரதியாரின் ‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை’ பெண் நான்தான். நான் மாத்திரம் அல்ல. என்னுடன் பயிற்சி எடுத்த அத்தனைப் பெண்களும். அதுதானே தமிழரசியக்காவிடமும் இருந்தது.

இந்‘நேர்ப்பெண்’ணாக வந்த பின் தமிழரசியக்காவைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. அவா எங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைவா. அவாவும் நிமிர்ந்து நின்று நானும் நிமிர்ந்து நின்று கைகுலுக்கும்போது கம்பீரம் தெறிக்கும்.

அக்காவைக் காண வேண்டும். கையைப் பிடித்து “எப்படி அக்கா இருக்கிறீங்கள்?” என்று கேட்க வேண்டும். “எப்பிடியடி இருக்கிறாய்?” என்று அக்கா கேட்பா. “அக்கா நான் சினைப்பர் அடியில் கைதேர்ந்தவள்” என்று சொல்ல வேண்டும்.

எதற்கும் காலம் இயலவில்லை. ஓர் இராணுவத் தாக்குதலில் தமிழரசியக்கா வீரச் சாவடைந்துவிட்டார். இரட்டைப் பின்னல் கட்டித் தொப்பி அணிந்து வரிச்சீருடையில் புன்னகையுடன் புகைப்படத்தில் நின்றார். மனது கலங்கியது. நெஞ்சில் கை வைத்துக் கண்மூடி நின்றேன். கண் பொங்கித் தளும்பிற்று. சீருடை தரித்து, துப்பாக்கி தூக்கி, நேராய் நின்ற ஒரு பெண் அழலாமா? ஆனால் அதையெல்லாம் கேட்டா வருகிறது அழுகை?

அழுவது மாத்திரமல்ல அக்காவுக்கு என் வணக்கம். ‘அக்கா, உன் தலையில் கைவைத்து வணக்கம் சொல்கிறேன். உன் ஆயுதங்களை என்னிடம் தா. ஒரு கையில் என் ஆயுதம். மறுகையில் உன் ஆயுதம். இனி என் கைகளிலிருந்து இரண்டிரண்டு குண்டுகளாகப் புறப்படும். அதுவே உனக்கான என் வணக்கம்.’

ஒரு மாதத்தில் பன்னிரண்டு தாக்குதல் நாட்கள் எனக்கு வந்தன. அத்தனையும் சினைப்பர் தாக்குதலுக்குரியவை. வெற்றி என்ற சொல் தவிர வேறொரு சொல்லையும் என் காது கேட்டதில்லை. ஒரு வாக்கியம் கேட்டது. “இந்தச் சின்னப் பெட்டை என்ன வேகம் கொள்கிறாள் பார்.”

4

ஒரு மாதம் முடிந்த பிறகு எனக்கு சினைப்பர் தாக்குதலில் இருந்தும், வரிச்சீருடையிலிருந்தும் வெளியேற்றம் கிடைத்தது. வெள்ளைச் சீருடை அணியத் தொடங்கினேன். அதை அணியச் சொன்னது இளங்கோ அண்ணன் அல்ல. மாறன் அண்ணன். அவரை ‘அண்ணா’ என்றுதான் கூப்பிட்டேன். வேறு சிலர் ‘மண்டை’ என்றார்கள். அதற்கு மண்டை நிறைய ‘மூளை’ என்று அர்த்தம்.

என் பணி இப்போ கொப்பி, புத்தகம் தூக்கிப் பாடசாலை செல்வது. என் வயதுக்கு உயர்தர வகுப்பு என்றால்தான் நம்புவார்கள். உயர்தர வகுப்பிலும் பார்க்க ஒன்றிரண்டு வயது கூட. ஆனால் அதற்குக் கதை இருக்கிறது. மன்னார் மாவட்டத்தில் இராணுவ வன்முறையில் படிப்பைப் பாதியில் நிறுத்தியதாகவும், இப்போது படிக்கும் ஆசை துளிர்விட்டதால் மீண்டும் தொடர்வதாகவும் . . .

எனக்கு ஒரு பணி விதிக்கப்பட்டது. படிக்கிறதாக நடிக்கப் போகிறேன். அப்படி நடித்து ஒருவரைக் கண்காணிக்கப் போகிறேன். அவர் அருணன் ஆசிரியர்.

அண்ணை கூப்பிட்டு அதைத்தான் சொன்னார். “நீ அந்தப் பள்ளிக்கூடம் போறாய். அருணன் மாஸ்டரின் வகுப்பிலே படிக்கிறாய். அவர் என்ன கதைக்கிறார் எண்டு உன்னிப்பாகக் கவனிக்கிறாய். அவர் வித்தியாசமா என்ன செய்தாலும், என்ன கதைத்தாலும் அதைக் குறித்துவைக்கிறாய். அவர் எங்க போறார்? ஆரைச் சந்திக்கிறார்? அவருடைய வீட்டை ஆர் ஆர் வருகினம்? எண்டெல்லாத்தையும் கவனிக்கிறாய். மிக வித்தியாசமாக, ஆபத்தானதாக எதை அறிந்தாலும் உடனடியாக எங்களுக்கு அறிவிக்கிறாய். மற்றும்படி நீ படிக்கிறாய். ஒழுங்கான மாணவி.”

பரந்த குளம் ஒன்று தாண்டிப் பயணமானேன். செம்மண் கிறவல் ஒழுங்கையில் சைக்கிள் ‘சர்சர்சர்’ என்று சிரிக்கிறது. அப்படி ஆனந்தவயப்பட்ட சிரிப்பு. இப்படியான ஓர் இடத்திற்கு வர இந்தியனாமி அஞ்சுவான். இந்தியனாமி வந்த பிறகேயாவும் குழம்பி இருக்கிறது. இப்பொழுது யார் எதிரி யார் நண்பன் என்று தெரியவில்லை. தமிழீழம் என்றால் உயிரைக் கொடுக்கத் தயாரானோரும் இந்தியனாமியுடன் நிற்கிறார்கள்.

அருணன் சேர் முன்னர் வேறோர் இயக்கத்தில் இருந்திருக்கிறார். அதில் மத்திய குழு உறுப்பினர். ஆகவே பெரிய ஆள். இப்பொழுது இந்தியனாமி வந்த பிறகு, அவரது இயக்கமும் இந்தியனாமியுடன் சேர்ந்து இயங்குகிறது. ஆனால் அவர் இயங்கவில்லை என்றுதான் சொல்கிறார். அது எப்படி? உண்மைதானா? அல்லது நமது இயக்கத்துக்குள் ஊடுருவுவதற்காக நாடகமாடுகிறாரா? நமது இயக்கத்தை என்னவென்று நினைத்தார்? கல்லாலும் மண்ணாலும் சீமேந்தாலும் கட்டப்பட்ட கட்டிடமா இது? குருதியாலும், தசையாலும், உழைப்பாலும், உறுதியாலும், தியாகத்தாலும், முயற்சியாலும், மேலாக உயிராலும், ஆன்மாவாலும் கட்டப்பட்ட இயக்கம் இது.

இதை அருணன் சேர் புரியவில்லை. அதுதான் இந்த வேலை செய்கிறார். ஆயுதப் போரில் நான் வீராங்கனைகளில் ஒருத்தி. இதுதான் பணி என்றபோது மனம் குழம்பியது. இப்போதுதான் புரிகிறது. குழம்பியிருக்கத் தேவையில்லை. இதுவும் மிக முக்கியமான பணி. இதைத் திறம்படச் செய்வேன். களையெடுப்பும் வலு அவசியம். போருக்கு அதுவும் பெரும்பங்கு. இப்பொழுது தயக்கம் ஏதுமில்லை. இங்கு பாருங்கள், யானையின் இலத்திக் கும்பல். அதிலிருந்து ஆவி சிறு கோடாக எழுகிறது. இது ஜனவரி மாதப் பனிக்காலை. அதனால் இலத்தியிலிருந்து ஆவி வருகிறது என்றால் யானைக் கூட்டம் மிக அருகாமையில்தான் எங்கோ நிற்கிறது. லுமாலா சைக்கிளில் தனியாக ஒரு பெண். நெஞ்சு நிரம்பத் தைரியம். அதனால் அச்சம் ஏதும் எனக்கு வரவில்லை. நானா இப்படி ஆனேன்?

5

அதிபர் தந்த துண்டை அருணன் சேரிடம் கொடுத்தேன். “உங்கள் வகுப்புக்குப் புதிய மாணவி வந்திருக்கிறார். ம் . . . என்ன பெயர்? யசோதா. நல்ல பெயர். நாங்கள் யசோ எண்டு தான் கூப்பிடுவம். வாங்கோ, இருங்கோ. கீதாவுக்குப் பக்கத்திலை இருக்கலாம். கீதா எழும்பி இடத்தைக் காட்டுங்கோ. போங்கோ போய் இருங்கோ.”

நான் அருணன் சேருக்கு இணக்கமான சிரிப்பைச் செய்தன். அவரோ மனதால் சிரித்தார். இவரா? இவரையா வேவுபார்க்கப் புறப்பட்டேன்? அது ஒன்றும் பிழையல்ல. அவர் மனதால் சிரித்தது உண்மையேயாகிலும், நான் யாரென்பது அவருக்குத் தெரியாதல்லவா? அவர் கண்ணுக்கு நான் மாணவி. பெண்ணாயிருப்பதனாலும் இச்சிரிப்பு வந்திருக்கலாம்.

இளமையாக அழகாக இருந்தார். முகத்தில் இனிமையுடனும் கனி வுடனும் தாடியும் இருந்தது. (அந்த இயக்கத்தில் அனேகர் தாடி. அதன் தலைவரும் தாடிதான்.) சுத்தமாக இருந்தது உடை மாத்திரமல்ல. படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கடமை பிறழவில்லை.

இவையெல்லாம் அவரது நடிப்பு எனப் புரிவது கடினமல்ல. எனது அத்தனை பராக்கிரம செயல்களையும் நிறுத்தி ‘இவரை வேவு பார்’ என்று சும்மா அனுப்பவில்லை. இவரிடம் எங்கேயோ பிசகு இருக்கிறது. அது எங்கு? கண்டுபிடித்தேன் என்றால் முக்கால் திட்ட வேலை முடிந்துவிடும். ஆனால் கண்டுபிடிப்பது எளிதானது அல்ல. எல்லா மாணவர்களிலும் இவர் அன்பு வைத்திருக்கிறார். இவரில் எல்லா மாணவர்களும் அன்பு வைத்திருக்கிறார்கள். இரும்புக் கோட்டையை உடைப்பது இலகு அல்ல.

6

“யசோ, எப்பிடிப் பள்ளிக்கூடம்? உங்களுக்குப் பிடிச்சிருக்குதா?” அருணன் சேர் ‘திடுமுட்டாக’ என்னை இப்படிக் கேட்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உடனே எழுந்தேன். “ஓம்சேர் நல்லாப் பிடிச்சிருக்கு.”

“பிடிச்சிருந்தா படிக்கிறது ஈசியா இருக்கும் எண்டு நைக்கிறன். அப்பிடித்தானே?”

“ஓம்சேர்.”

“இப்பிடி எல்லாத்துக்கும் ‘ஓம்சேர், ஓம்சேர்’ எண்டு தலையாட்டாதையுங்கோ. நீங்கள் சிந்தித்து உங்களுக் கெண்டொரு கருத்தை உருவாக்க வேணும். என்ன விசயம் எண்டாலும் ஏன் எதற்கு, எப்படி எண்ட கேள்விகளைக் கேட்டுப் பார்க்கவேணும்.”

“ஓம்சேர்.”

சொன்னவுடன் சேர் சிரித்துவிட்டார். “இப்பத்தானே சொன்னேன்” என்று ‘பெலத்துச்’ சிரித்தார். பிறகு சொன்னார்: “மனிதன் என்பது சிந்திக்கின்ற பிறவி. மந்தைக் கூட்டம் இல்லை. மந்தைக் கூட்டத்திலைதான் முதல் ஆடு எப்பிடிப்போகுதோ அதே பாதையிலை எல்லா ஆடுகளும் கேள்வி ஒண்டும் கேக்காமல் போகும். அப்பிடி மனிசர் இருக்கலாமோ?”

‘ஓம்சேர்’ என்று இப்போது சொல்லவில்லை. புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். சொல்வது சரிபோலை இருக்கு. ஆனால் எங்களைத்தான் சொல்கிறாரோ? நான் அப்படித்தானே? சொன்னது யாவற்றையும் பழுதுபடாமல், ஒரு சொல்மாறாமல் செய்கிறேன். ஏன் என்ற ஒரு கேள்வி கேட்டேனா? இப்பொழுது பார் ஏன் என்ற ஒரு கேள்வி இல்லாமல் வேவுபார்க்க வகுப்பறையில் வந்து குந்தி இருக்கிறேன். . .

“அம்மா சொன்னார் அப்பா சொன்னார் அது சரியாத்தான் இருக்கும் உண்மையாத்தான் இருக்கும் எண்டு நம்பிக்கை வையாதையுங்கோ. பெரியவைக்கு மரியாதை கொடுக்கிறது வேறை. இது வேறை. ஆர் என்ன சொன்னாலும் அதை மனசுக்குள்ளை விசாரிச்சுப் பாருங்கோ. விசாரணையிலை இருந்து தொடங்குங்கோ. முடிவு எடுங்கோ. நம்பிக்கையிலை இருந்து தொடங்கி முடிவு எடுக்காதையுங்கோ . . .”

எனக்கு இறுதியில்தான் இடறத் தொடங்கியது. விசாரணை வேண்டும். நம்பிக்கையிலை இருந்து முடிவு எடுக்கக் கூடாது. நான் என்ன செய்கிறேன்? எவ்வித விசாரணையும் இல்லாமல் இளங்கோ அண்ணனை, தமிழரசியக்காவை நம்பினேன். இப்பொழுது மாறன் அண்ணனை நம்புகிறேன்.

இது சரியா, தவறா? சரிதான். நம்பியது ஒன்றும் தவறு அல்ல. அவர்கள் என்ன பிழைவிட்டார்கள்? இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கிறார்கள். தேவைப்பட்டபோது உயிரையும் கொடுக்கிறார்கள். நான் என் குடும்பத்தை விட்டு வரவில்லையா? உயிரையும் கொடுக்க மனம் சித்தமாய் இருக்கிறதே.

நம்பிக்கையில் அல்ல விசாரணையில் இருந்துதான் தொடங்க வேண்டும். அருணன்சேரின் மீதான விசாரணையிலிருந்து.

7

இரண்டு வாகை மரங்கள் நிழல் செய்த பள்ளிக்கூடத்தில் எனக்கு ஒரு கிழமை போய்விட்டது. வெயில் இப்படிக் கொளுத்துகிறதே என்று பள்ளிக்கூடம் விட்டுப் போகிற போதுதான் தெரிகிறது. வாய்க்காலில் திறந்துவிட்ட தண்ணீர் என்னுடன் கூடவர சைக்கிளில் அறைக்குப் போனேன்.

அண்ணை சந்தித்தார். எழுத்திலே விபரம் வைத்திருந்தேன். என்றாலும் வாயாலும் ஒப்புவித்தேன். “நீ இன்னும் ஆழமாக அவரைக் கண் காணிக்கவில்லை எண்டு நம்புகிறேன். இன்னும்கூட அவரோட புழங்கிறது நல்லது.”

அண்ணை சொல்வது சரி. ‘சேரோ’டை இன்னும் நான் நெருங்க வேண்டும். அண்ணை சொன்னார்: “எதையும் நம்பிக்கையிலை இருந்து தொடங்காதை. விசாரணையில் இருந்து தொடங்கு. ஏன் இவர் இப்படி இருக்கிறார்? ஏன் நல்லவராக இருக்கிறார்? அல்லது நடிக்கிறாரா? இவர் என்ன நலனில் அக்கறைகொண்டு இப்படி இருக்கிறார்? எண்டு எல்லாத்தையும் கேள்வி கேட்டு யோசிக்கவேணும். அவரின்ரை ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பா அவதானிக்கவேணும். அவருக்கு மாணவர் மத்தியிலை நல்ல பெயர் இருக்கு. அது எப்படி வந்தது? நீ இன்னும் கொஞ்சம் அவரை நெருங்குகிற வழியைப் பார் . . .

8

அதிகமான சிந்தனைகள் அவருக்கு. எதனினதும் மறுபக்கத்தைப் பார்க்கிறார். மாணவர் நலனில் அக்கறை கொள்கிறார். பள்ளிக்கூடம் வளம் பெற வேண்டும் என்று பாடுபடுகிறார். இவை யாவும் அவரது அரசியலின் ஒரு பக்கம்தானா? அல்லது அபாரமாக நடிக்கிறாரா?

இப்பொழுது நான் கேள்விகள் கேட்கிறேன். அண்ணை சொன்னது சரிதான். என்னுள் தேடலின் தினவு எடுத்துவிட்டது. எதற்கும் அவரை இன்னும் நெருங்க வேண்டும். அதற்கு இரண்டு வழிகள். ஒன்று, அவரது அன்பிற்குரிய மாணவி ஆதல். இரண்டு, அவரை இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணிக்கும் வழி அமைத்தல்.

அன்பிற்குரிய மாணவியாதல் மிகச் சிரமமாக இருந்தது. எனக்கு படிப்பு வரவில்லை. கீதாவை மேவிய கெட்டிக்காரி அல்ல நான். சினைப்பர் காவிய கை புத்தகம், கொப்பிகளைக் காவுவதென்றால்? மேலும் அருணன் சேர் அனைத்து மாணவர்களிலும் ஒரே அன்பு வைத்திருக்கிறார்.

கீதா மிகவும் கெட்டிக்காரி. ஒரு கிழமை அவகாசம் கொடுத்துச் சொன்ன வீட்டு வேலையை அடுத்த நாள் இதோ என்று காட்டுகிறாள். ‘சேரின்’ எந்த ஒரு கேள்விக்கும் கீதாவிடம் உடனடிப் பதில் இருக்கிறது. அதற்கு சேர் ஒரு நாள் சிரித்தும் ஏசியும் விட்டார். “மற்றாக்களும் பதில் சொல்லவிடுங்கோ கீதா.” கறுத்துப்போன கீதாவின் முகத்தைக் கண்டு கீதாவின் பக்கத்தில் போய் “கோபிக்காதையுங்கோ கீதா. மற்றாக்களும் படிக்கத்தானே வேணும்” என்று முதுகைத் தடவிற மாதிரி சொன்னார்.

நான் என்ன செய்கிறேன்? என் கட்டுரையில் எழுத்துப் பிழைகள் மலிந்தும் பரந்தும் கிடக்கின்றன. ளகர, ழகரக் குழப்பமும், னகர, ணகரக் குழப்பமும், அரவு, கொம்புக் குழப்பமும் இன்னும் முற்றாகப் போய்விடவில்லை. பாசறையில் கவிதை என்று ஏதோ எழுதினேன்தான். இந்தப் பிழைகளை யார் கண்டார்கள்?

இப்பிடியெல்லாம் யோசிக்கிறேன் என்றால்? அச்சம் வந்தது. தடம்மாறுகிறேனா? படிப்பில் என் புலன் செல்கிறதா? “அவலம் தந்தவனுக்கே அதனைத் திருப்பி வழங்கு”, தமிழரசியக்கா அதை அழகுற எழுதி சுவரில் மாட்டி வைத்திருந்தா.

பட்ட அவலம் மறக்கவொண்ணாதது. படிப்பும் கட்டுரை எழுதுவதும் என் தொழில் அல்ல. என் தேசத்தின் விடுதலை. அதுவே என் முன்னுள்ள பாரிய பணி. இப்போது எனக்கிடப்பட்டுள்ள பணியைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும்.

“சேர், பள்ளிக்கூடம் முடிய பின்னேரம் நான் உங்கன்ரை அறைக்குப் படிக்க வரட்டோ? கனக்கவிசயம் எனக்கு விளங்கேல்லை”

சேர் அதற்கு உடனடியாக மறு மொழி சொல்லவில்லை. சோளகக் காற்று கூவென்று குமுறிக்கொண்டிருந்தது. பக்கத்துத் தென்னந்தோப்பு சர்ரென்று இரைச்சலிட்டது. இக் காற்றுக்குள் காகங்கள் பறக்கச் சிரமப்பட்டன. வயல் வெளியில் கானல் நீர் எழுகின்றது. இவற்றையெல்லாம் சேர் பார்த்தபடி சொன்னார்.

“அது சரியில்லை யசோ. ஒரு மாணவிக்குப் பிரத்தியேகமாகப் படிப்பிக்கிறது அழகல்ல. நீங்கள் கெட்டிக்காரி. உங்களுக்குப் படிப்பிக்கிறது எல்லாம் விளங்குது. நீங்கள் ஒரு வாக்கியம் அமைக்கிறதிலைதான் கஷ்ரப்படுறியள். உங்களுக்குத் தெரிஞ்ச விசயத்தை எழுத்திலை சொல்ல முடியேல்லை. பரவாயில்லை. இன்னம் நாள் போகேயில்லை. நீங்கள் நிறையப் புத்தகம் வாசிக்கவேணும். படிக்கிற நேரம் போக மிச்ச எல்லா நேரமும் வாசியுங்கோ. நான் கொஞ்சப் புத்தகம் தாறன். கதைப் புத்தகம்தான் இப்ப நல்லது. கிழமைக்கு இரண்டு புத்தகமாவது வாசியுங்கோ.”

எனக்கு அது புரிந்துவிட்டது. சேரின் அறைக்குள் ஏதோ மர்மம் இருக்கிறது. பின்னேரம் அவரை வேறு யாரோ வந்து சந்திக்கிறார்கள். அல்லது இவர் எங்கோ போகிறார். நான் இடையிடை அவரது நடையுடையில் மயங்கிவிடுகிறேன். பேச்சில் இலயித்துப் போகிறேன். சேர் இலேசானவர் அல்லர். அதி புத்திசாலி.

9

அறைக்கு நான் வரவோ என்று கேட்டபிறகு சேர் இரண்டு காரியம் செய்தார். ஐந்து புத்தகங்களை உடனே என்னிடம் கையளித்தார். முகப்பைப் பார்த்தேன். தூரத்துப் பச்சை – கோகிலம் சுப்பையா, பஞ்சமர் – கே. டானியல், தாய் – மாக்சிம் கார்க்கி, அன்னை வயல் – சிங்கிஸ் ஐத்மாத்தவ், நினைவுகள் அழிவதில்லை – நிரஞ்சனா.

ஒவ்வொரு நாளும் காலை ஏழு மணியிலிருந்து எட்டு மணிவரை சிறப்பு வகுப்பு எடுத்தார். ஏழு மணி வகுப்புக்கு எல்லோரும் வரவேணுமென்றல்ல. படிக்கக் கஷ்டம் என்பவர்கள் வரலாம். அது இரண்டாவது காரியம்.

யாவற்றையும் அண்ணையிடம் சொன்னேன். தடித்த மீசையின் மயிர்களை நாக்கால் இழுத்து பல்லின் இடையில் வைத்துக் கடித்தார். “நீ ஆளை வடிவாக் கவனி” என்றார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு “இப்பிடிச் செய்தால் என்ன?” என்று கேட்டார்.

10

பெட்டிக்குள் யாவற்றையும் வைத்துக் கட்டினேன் நான். வீட்டுடுப்பு இரண்டு. பள்ளிக்கூடச் சீருடை இரண்டு. பாடப் புத்தகங்கள், கொப்பிகள் அவ்வளவுதான். எனக்கென்று இருந்த சைக்கிள் எடுத்து உழக்கி உன்னினேன். என்னிடம் இருந்த நிமிர்ந்த நேரான நடை கூனத் தொடங்குகின்றதா? இல்லை என்று முதுகு நிமிர்த்தி சைக்கிளைத் தெண்டினேன். ஞாயிறு பின்னேரத்துக்கு அடித்த காற்று, முகத்தில்பட்டு ஒரு மகிழ்வைத் தந்தது.

அந்த அறைக்குள் போனேன். பக்கத்து அறை அருணன் சேரினுடையது. நாளை திங்கட்கிழமை காலை கலைந்த தலையோடு, புழுதி படிந்து வாடிய முகத்தோடு, நித்திரை குறைந்து வதங்கிய கண்களோடு ஊரிலிருந்து சேர் வருவார். உறவை விட்டு வந்த வேதனை திங்கட்கிழமை முகத்தில் அப்பிக் கிடக்கும். அத்துடன் அறையில் என்னைக் கண்ட ஆச்சரியமும் நெளியலாம்.

இப்பொழுது என்னால் எதையும் நேராக யோசிக்க முடிகிறதில்லை. சினைப்பர் தூக்குகிறபோது வரும் வேகம், விவேகம், வீச்சு ஒன்றும் இப்போது இல்லை. சினைப்பர் தூக்க வேண்டிய தேவையும் இல்லை. ‘நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின’ என்கிற மாதிரி இந்தியனாமி போய்விட்டது. சிங்கள ஆமியும் சண்டை ஒன்றும் தொடங்குவதாக இல்லை. சினைப்பருக்கு இப்போது தேவையே இல்லை.

இந்தியனாமி போனால் என்ன? தமக்கு உதவுவோரை விதைத்துவிட்டே சென்றிருக்கிறது. இந்தியாவிலிருந்து சூழலை நாசமாக்கும் பார்த்தினீயச் செடிகளை ஈழத்தில் விதைத்தது போல.

நான் இப்பொழுதும் ஏமாறுகிறேன். வீட்டில் அறைவாசலில் என்னைக் கண்ட சேர் “என்ன இங்கால் பக்கம்?” என்றார். “இரண்டு மைல் சைக்கிள் ஓடிக் களைச்சுப்போறன். படிக்க முடியல்லே. அதுதான் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலை இருந்தா நல்லதெண்டு இந்த அறைக்கு வந்திருக்கிறன்.”

“நல்ல விசயம். இந்த நல்ல விசயம் செய்யிறத்துக்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்தது? வந்தது எல்லாத்துக்கும் நல்லது. படிப்பிலையும் ஏதும் பிரச்சினை எண்டால் என்னைக் கேக்கலாம்.”

நான் அடித்துச் சொல்வேன். சேரின் முகத்தில் எந்தக் கள்ளமோ கபடமோ களங்கமோ இல்லை. அந்தக் கண் பிரகாசித்தும் மலர்ந்தும் அதைச் சொல்கிறது. சின்ன ஐமிச்சமாவது இருக்கா? கானல் நீரைக் கண்டு கால் உழைய ஓடுகிறேனோ நான்?

திடுமுட்டாக அவரது அறைக்குள் போகக்கூட யாதொரு தடையும் இல்லை. பள்ளிக்கூடம் போகிற நேரம்போக சேரின் அறை திறந்தே கிடக்கிறது. சாமம்வரை எரிகிற வெளிச்சத்தில் சேர் புத்தகம் வாசிக்கிறார் . . .

11

அண்ணை சொன்னார்: “சினைப்பர் அடிக்கிறது வலு ஈசி. இலக்குப் பார்த்து வைக்கலாம் வெடி. ‘றெக்கி’ எடுக்கிறதிலும் பார்க்க இதைக் கஷ்ரம் எண்டுதான் சொல்லுவன்.”

இந்தக் ‘கஷ்ரத்தை’ ஏன் செய்ய வேணும்? இதற்கு என்னை ஏன் மினைக்கெடுத்தவேணும்? நான் என்ன வேலைக்கு வந்தனான்? இப்ப என்ன வேலை செய்கிறன்? இது தேவைதானோ?

அண்ணை சடக்கெண்டு சொன்னார்: “நீ என்ன யோசிக்கிறாய் எண்டு விளங்குது. ஏன் இப்பிடி மினைக்கெடுவான்? ஏதோ ஒண்டைச் செய்யலாம்தானே எண்டு.”

அண்ணை ‘மண்டைக்காய்’தான். மனதில் நினைப்பதை முகத்தில் வாசிக்கிறார்.

“செய்யலாம்தான். செலவும் குறைவு. ஒரு குண்டு காணும். ஆளை முடிக்காட்டியும் உள்ளை போடலாம். ஆனால் தங்கச்சி பிரச்சினை வேறை. நாங்கள் விடுதலைக்குப் போராடுறம். ஆருக்கு விடுதலை? மக்களுக்கு. அருணன் மாஸ்டரும் அந்த மக்களிலை ஒருத்தர்.”

அருணன் மாஸ்டர் பாவி அல்லது துரோகி. எப்படி அதை நிரூபிப்பது? எதற்கும் ஆதாரம் வேண்டும். நம்பிக்கையிலையிருந்து தொடங்க முடியாது. விசாரிக்க வேண்டும். நண்பனா, எதிரியா? எதையும் விசாரிக்க வேண்டும். இந்த மக்கள் திரளின் விடுதலைக்கு விரோதி என்றால் சும்மா விட முடியாது. விசுவாசி என்றால் விருதுகொடுக்க வேண்டும். இரண்டும் இல்லை என்றால் அதுகூடப் பாதகமில்லை. எதற்கும் ஆதாரம் வேண்டும். ஒரு சதம் செலவழிப்பதற்கே கணக்குக் காட்ட வேண்டும் என்றால், ஓர் உயிரைச் செலவழிப்பது என்றால் சும்மாவா?

“. . . தங்கச்சி, மாணவர் மத்தியிலை அவருக்கு நல்ல பெயர் இருக்கு. நடிக்கிறாரா, இல்லையா எண்டு தெரியேல்லை. கன விசயங்கள் அங்காலை கசியுது. ‘பேப்பர் கரெக்சன்’ எண்டு இடையிடை கொழும்புக்கும் போய் வாறார். இவரும் அதுக்குக் காரணமாயிருப்பாரோ எண்டது சந்தேகமாக இருக்கு. இந்த அஞ்சு நாளும் நீ அவரை கவனிக்கிறாய். ஊருக்குப்போற இரண்டு நாளும் அங்க ஓராளைப் போட்டிருக்கு. ஒண்டிரண்டு மாசத்திலை இந்த பைலை மூடிடவேணும். நிறைய வேலைகிடக்கு. உன்னைத் தளத்துக்கு அனுப்பட்டாம். சிங்கள ஆமி சண்டையைத் தொடங்க ஆயத்தமாய் நிற்கிறாங்கள். இந்த ஏ9றோட் இருக்குத்தானே. அதுக்கு இரண்டு பக்கமும் அரை மைலுக்கு . . .” இதன் பிறகு கதைக்கப்பட்டது எதுவும் இங்கு அவசியமில்லாதது.

12

ஓன்றை என்னால் உறுதிபட உரைக்க முடியும். சேர் அரசியலில் ஆழ ஈடுபட்டிருக்கிறார். அவர் மேசையில் முகம் குப்புறக் கிடந்த ஒரு புத்தகம் அதைச் சொல்கிறது. ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்.’ புத்தகத்தின் பெயர் அது. தாடியுடன் ஒருவரின் படம் ‘பிடல் காஸ்ட்ரோ’ என்றது. எழுதியவரின் பெயராக்கும். சேரின் முகத்திலும் அதே மாதிரி தாடி.

“நாங்கள் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதனை எதிரியே தீர்மானிக்கிறான்” என்று ஒரு புத்தகத்தில் வாசித்தேன். அதே புத்தகம் “துப்பாக்கிக் குழலிலிருந்து அதிகாரம் பிறக்கிறது” என்றும் சொல்கிறது. சொன்னது அத்தனையும் மகா உண்மை. எப்படி இவர்களால் இப்படியெல்லாம் சொல்ல முடிகிறது?

“என்ன சேர், உங்களுக்கு அரசியல் என்றால் அவ்வளவு விருப்பமோ?” என்று கேட்டேன். “அது ஒரு காலம்” என்று சோகமாய்ச் சிரித்தார். மேலும் அவரிடம் கேட்க எனக்கு ஒன்றும் இல்லை.

இவரா எங்கள் போராட்டத்தைக் காட்டிக்கொடுப்பார் என்று கேட்கிறமாதிரி ஒரு சம்பவம் நடந்தது. இதனைக் கண்டவளாக நான் இருப்பதனால் எனக்கு சேர் மீது எந்த ஐமிச்சமும் இல்லை. இந்தக் காரியத்தைக் கேளுங்கள்.

பள்ளிக்கூட நேரம். இன்ரேவல் வர முன்னம் அது நிகழ்கிறது. பள்ளிக்கூடத்தை பொம்மர் இரண்டு முறை சுற்றிவிட்டது. இது மூன்றாம் முறை. அப்படிச் சுற்றிக் குத்துண்ண கீழே விழுந்து எழுகிறபோது பொம்மர் குண்டைக் கக்கும்.

சேர் முன்வந்து உழைத்ததில் இருபது பதுங்குகுழிகள் பள்ளிக்கூடத்தைச் சுற்றித் தோண்டப்பட்டிருக்கின்றன. பொம்மர் மூன்றாம் முறை சுற்றுகிறபோதே. இருபது பதுங்குகுழிகளும் மாணவர்களால் நிரம்பிவிட்டன.

சேரைப் பார்க்கிறேன். மா மரத்தின் கீழ் இருந்த பதுங்கு குழிக்குள் சின்னவகுப்பு மாணவர்களைத் தூக்கித் தூக்கிப் போடுகிறார். கீதா கத்துகிறாள். “சேர் குண்டு போட்டிட்டான். விழுந்து படுங்கோ.”

கீதா பயப்படுகிறாள். எனக்குப் பயம்வர ஒன்றுமில்லை. ஆனால் சேர் பாவம். நானும் கத்துகிறேன். “விழுந்து படுங்கோ சேர்.”

நிலத்தில் படுத்தபடி குண்டு விழுவதைப் பார்க்கிறேன். மெல்ல மெல்ல அது இறங்குகிறது. நிலத்தில் படுகிறது. கண்களைப் பறித்த மாதிரி கும்பியாய் ஒரு வெளிச்சம். டொமார்.

எனக்கும் வெடித்த குண்டுக்கும் இடையே இருந்து சேர் எழும்புகிறார். வேலியோரத்தில் ஒருவன் புரண்டு கிடக்கிறான். அவனிடம் ஓடிப் போகிறேன். சத்தியமூர்த்தி. “சேர் இஞ்சை சத்தியமூர்த்தியை”

சேர் ஓடிவாறார். சத்தியமூர்த்தியைத் திருப்புகிறார். அவன் நெற்றி பிளந்து கிடக்கிறது. கண்ணை மூடிய சத்தியமூர்த்தி “ம். . . ம் . . .” என்று முனகுகிறான். சேர் சத்தியமூர்த்தியைத் தூக்குகிறார்.

“அய்யோ சேர் அடுத்த குண்டு போட்டிட்டான்.” நான் கத்துகிறேன். வீழ்ந்து படுக்கிறேன். சேர் சத்திய மூர்த்தியைச் சரித்துவிட்டுக் கிடையாக வீழ்கிறார்.

அட்டகாசம் செய்த பொம்மர் இரைந்துகொண்டு போனபிறகு சேர், விஜயன் சேரின் மோட்டர் சைக்கிளில் சத்தியமூர்த்தியைக் கொண்டு போகிறார் . . .

சேர் விம்மியழுததை அப்போதுதான் பார்த்தேன். சேரைக் கூட்டிக்கொண்டு விஜயன் சேர் அறைக்கு வந்தார். சேரின் அழுகை எனக்கு சத்தியமூர்த்தியின் சாவைச் சொல்லியது. சேரின் சட்டை முழுவதும் ஒரே இரத்தம். நான் என்ன செய்வேன்? சேர் அழுவதைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

13

என் கை துறுதுறுத்தது. அந்த உருக்குக் குழலை உயரே தூக்க வேண்டும். எந்த இரக்கமும் எழக்கூடாது. பொடிபட எதிரியைத் துவம்சம் செய்ய வேண்டும்.

அண்ணை அதொன்றையும் விளங்குகிறார் இல்லை. “உன் கடமையைச் செவ்வனே நிறைவேற்று” என்று ஒரு வாக்கியத்தில் முடிக்கிறார்.

பிறகு நீண்ட வாக்கியம் ஒன்றைத் தொடர்கிறார். “ஆரார், எப்பெப்ப, என்னென்ன செய்ய வேணுமென்டது எங்களுக்குத் தெரியும். இப்ப உனக்கு இதுதான் வேலை. இந்த வேலைதான் நெடுகத் தொடரும் எண்டில்லை. ஒண்டுக்கும் யோசிக்காதை. நான் எல்லாம் கதைப்பன். இப்ப உனக்குத் தந்த வேலையைத் திறம்படச் செய். அதுதான் இப்ப முக்கியம்.”

துக்கம் என்னைத் தின்று முடிக்கப் பார்த்தது. இல்லை என்று துடித்தெழுந்தேன். சேர் நல்லவர், இல்லை அது நடிப்பு. எதுவாக இருக்கட்டும். விசாரிப்போம்.

இதைக் கேளுங்கள். நான் என்னவாக அதை யோசிப்பது?

1990 ஆண்டு யூன் 11ஆம் நாள். இரவு ஹெலியிலிருந்து சிவப்புச் சிவப்பாகக் குண்டுகள் வீசி சிங்களவன் சண்டையைத் தொடங்கிவிட்டான். ஏதும் ஆயத்தமில்லை. எனக்கென்ன ஆயத்தம்? நான் பள்ளிக்கூடத்தில் சாதாரண மாணவி. வெள்ளைச் சீருடை மட்டும் இருந்தால் போதும்.

திங்கட்கிழமை காலையில் வருகிற சேருக்கு பஸ் இப்போது இல்லை. நிறுத்தப்பட்டது. ஆனையிறவு சிங்கள இராணுவ முகாம் யாழ்ப்பாணக் குடா நாட்டின் வாசலில் குந்தியிருந்து எங்கேயும் யாரையும் போகவிடவில்லை.

ஒரு திங்கட்கிழமை விடியப் புறத்தில் சேர் சைக்கிள் உழக்கினார். அது ஐம்பது மைல் இருக்கும். இயக்கச்சிச்சந்தி தாண்டிய பிறகு சைக்கிள் கொஞ்சம் பின்னடித்தது. உப்பு கலந்த காற்று, கடுஞ்சூரியனின் வெக்கையைப் போக்கவில்லை. இனி வரப்போவது ஆனையிறவு இராணுவ முகாம்.

அது காண ஒரு மைல் முன்னர் சேர் சைக்கிளை நிறுத்தினார். ஒரு மரத்தின் நிழலில் விறகு கொத்திய வேர்வை போக்க ஒருவர் நின்றிருந்தார். அவரிடம், “அங்கால் பக்கம் போக வேறேதாவது பாதை இருக்கிறதா?” என்று கேட்டார்.

“அது தம்பி . . .” அவர் பாதையை விவரித்தார். அந்த விபரிப்புச் சாவை நோக்கிச் செலுத்துவது. இராணுவ முகாமுக்குப் பின்னால் கால் மைல் தூரத்தில் வெட்ட வெளியில் ஒற்றை வரம்பில் பயணம்.

“. . . ஆமிக்காரன் தூரத்தில் நிண்டாலும் தெரியத்தான் பாக்கும்” முடிந்தார் அவர். எனக்கு அது தெரியும். சினைப்பருக்குக் கால் மைல் ஒரு தூரம் அல்ல.

பயம் தெரியக் கூடாது. சேர் முடிவெடுத்தார். இது படுபிழையான வேலை. வாய் முணுமுணுத்தது. ஆனால் அதனைச் செய்தார். கண்ட கள்ளுக் கொட்டிலில் நுழைந்து இரண்டு போத்தல் கள்ளு வாங்கிக் கொடுத்தார். வெறியிலை குண்டு துளைக்கிற நோ தெரியாது. சாகிறதுகூடத் தெரியாது.

அப்படி ஒன்றும் நடக்கவில்லை. சேர் பள்ளிக்கூடம் வந்தார். பள்ளிக்கூடம் முடிந்து பிள்ளைகள் போய்விட்டிருந்தனர். “நிழலுக்குள் நின்ற பள்ளிக்கூடத்தின் வெறுமை மிக வேதனை தந்தது” என்றவாறு சொன்னார்.

எனக்கு அது நெஞ்சைத் தளும்பச் செய்தது. “ஏன் சேர் இப்பிடி?” தாள முடியாது கேட்டேன். “இந்த உலகத்தையும் இழக்க விரும்பேல்லை” என்றார். சேரிற்குக் கண் கலங்கியது.

“நான் துலைச்சுப்போட்டன் எண்டு நம்பின எல்லாத்தையும் பள்ளிக்கூடம்தான் எனக்குத் திரும்பத் தருது” என்றார். எனக்கு அதைப் புரியக் கஷ்ரமாக இருக்கவில்லை.

14

வேறொன்றையும் அது என்னைப் புரியவைக்கிறது. இராணுவ முகாமின் பின்பாதையால் சேர் வந்திருக்கிறார். உயிர்ப்பயத்தில் கள்ளு குடித்திருக்கிறார். இதை நான் நம்ப வேண்டும்.

இப்படி ஒரு ஆசிரியரா என்று அன்று நான் ஆச்சரியப்பட்டேன். இன்று அந்த ஆச்சரியம் கேள்வியாக பாம்புபோல வளைந்து என்னை நோக்கி நாக்கை நீட்டுகிறது. ‘இப்படி வர வேண்டும் என்று என்ன கட்டாயம் இவருக்கு?’

இன்னொரு கேள்வி. இப்படித்தான், இதே பாதையால்தான் கள்ளு குடித்துவிட்டுத்தான் வந்தாரா? உண்மைதானா?

வந்த கதை, ‘நெஞ்சிடித்த’ கதை சொன்ன சேரின் முகம் இப்பவும் கண்ணில் படர்கிறது. அந்தக் கதையை வெறும் வாயால் சொல்லவில்லை. மனதால் சொன்னார். ஓம்தானே?

குழம்பிக் குழம்பி மனது தவிக்கிறது. சேர், சேர், நீங்கள் ஆர்?

15

சத்தியமூர்த்தியின் சாவுக்குப் பிறகு பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிட்டார்கள். பள்ளிக்கூடத்தை மூடுவதற்கு சத்தியமூர்த்தியின் சாவு மாத்திரம் காரணமல்ல. சோளகம் ஊஊ என்ற ஊளையிட்டு காற்று வீசிய அந்த நேரத்தில் பள்ளிக்கூடம் செத்தவீடு மாதிரித்தான் இருந்தது. சத்தியமூர்த்தி விழுந்து கிடந்த வேப்பமர மூலையில் சாவுக்காற்று சுழன்று சுழன்று வீசியது. பள்ளிக்கூட வளவெல்லாம் சுடலைச் சாம்பல் பறந்து திரிந்தது.

மாணவர்களும் இல்லை. ‘வாளேந்தவும் வலிய போரை எதிர்கொள்ளவும்’ சென்றனர் சில மாணவர்கள். உயிர் அச்சத்தில் பல மாணவர்கள் வரவில்லை. வெறும் வாங்குக்கும் மேசைக்கும் யார் பாடம் நடாத்துவார்? சேருக்கு வேதனை நெஞ்சைப் பிளந்து நின்றது.

சத்தியமூர்த்தியின் சாவில் இரத்தம் தோய்ந்த தனது சேர்ட்டை சேர் இன்னமும் தோய்க்கவில்லை. மாமரத்தின் கீழான கொடியில் அது ஆடிக்கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடம் மூடுகிற அன்று அவ்ரோ விமானம் ஐந்து பீப்பாய் குண்டுகளைப் போட்டது.

எட்டு மாணவர்கள் மாத்திரம் வகுப்பில் இருந்தோம். கண் சிவந்து முகம் இருண்டபடி சேர் வந்தார். “காலம் எங்களைப் பிரிக்கிறது” என்றார். “சரி வீட்டை போங்கோ. நானும் ஊருக்குப் போறன். வீட்டிலை சும்மா இருக்காதையுங்கோ. நிறைய வாசியுங்கோ. இப்பிடியான ஒரு சூழலிலை ஆருக்கும் உதவி செய்யுங்கோ. ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாக ஆக்குங்கோ. வேறை என்ன? போட்டு வாங்கோ. பிறகு சந்திப்பம்.”

“உயிரோட இருந்தால்?” என்றாள் கீதா.

“ஏன் அப்படிச் சொல்றீங்கள்? கீதா இப்பிடிக் கதைக்காதையுங்கோ. தாங்கேலாமல் இருக்கு. உயிரோட இருப்பம். நம்புங்கோ. நம்பிக்கைதானே வாழ்வு. சரி போட்டு வாங்கோ. இனி ஒண்டும் கதையாதையுங்கோ. அழுதுபோடுவன் . . .”

அழுதுவிட்டார் சேர். அழுவதாக நான் இல்லை. பொலபொலவெனக் கண்ணீர் வடிக்கிறாள் கீதா. காந்தனும் உதயனும் சேருடன் கூடப்போகிறார்கள். சேர் சைக்கிள் எடுத்துத் திரும்பியும் பாராமல் போகிறார் . . .

அந்த மனுசன் சாடையான கூனல்பட்ட முதுகோடை சைக்கிள் உழக்கினார்.

16

இனி இந்தப் பள்ளிக்கூடத்திலை எனக்கென்ன வேலை? வேலைகள் வேறு ரூபங்களில் என்னை நெருக்கின. சேரைத் தேடி அவரின் ஊருக்கு நான் போக வேண்டும். அவரை மேலும் துளாவி அறிய வேண்டும். ஒரு நாள் பயணம் பிடிக்கப் போனேன்.

கறுத்த ஒல்லியான அழகிய மனைவியை சேர் கொண்டிருந்தார். இனித்த ஐந்து கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களையும் கொடுத்தேன். சேரின் மூன்று வயது மகள் என்னிடம் வரமாட்டேன் என்றாள். அது சரிதானே? அவள் அப்பனுக்கு என் கடமையின் நிமித்தம் நான் நெருக்குதல் செய்கிறேன்.

மணல் விரித்த முற்றத்தில் “வாங்கோ வாங்கோ” என்ற சேரின் சிரிப்பும் மணல்போல் விரிந்தது. சேர் அழக்கூடச் செய்தார். “பள்ளிக்கூடத்தை விட்டிட்டு என்னால இருக்க முடியேல்லை. எல்லாரையும் நினைச்சு, எல்லாத்தையும் நினைச்சு . . .” சேர் பிறகு ஒன்றும் பறையவில்லை. கண்ணீர் வழிந்தது.

சேர் தன்னை ஒப்புவித்தார். “யசோ என்னிலை அன்புவைச்சு என்னைத் தேடி வீட்டை வந்திருக்கிறீங்கள். எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா? உங்கன்ரை சிரிப்பும், நீங்கள் சாப்பிட்டதும் மனசு நிறைஞ்சுப்போய் இருக்கு. எந்த நாளும் யசோ கனவுதான். கனவு என்னைக் கொல்லுது. வேர்த்து வடிய திடுக்கிட்டு எழுப்புறன். ‘அப்பாடா இது கனவு’ எண்டு சந்தோசமா இருக்கு. ஆனால் கனவிலை வந்த காட்சிகள் திரும்பத்திரும்ப வந்து பிறகு நித்திரை இல்லை . . .”

“. . . ஒரு கனவிலை கீதா பொம்மர் அடிச்சுச் செத்துப் போறாள். நான் அய்யோ என்டு அழுறன். . . உங்களுக்குக் கடும் காய்ச்சல். நான் பக்கத்து அறையிலையிருந்தும் எனக்குத் தெரியாமல் போச்சே எண்டு கவலைப்படுறன். ஆனால் நீங்கள் பக்கத்து அறையிலை இல்லை. இயக்கத்துக்கு ஓடிட்டீங்கள் எண்டு சொல்லினம்.”

சேர் விம்முகிறார். நான் அவரைப் பரிதாபமாகப் பார்க்கிறேன். இங்கு நான் எதற்கு வந்தேன்? சேர் என்ன செய்கிறார்? ஒழுங்காகத்தான் இருக்கிறாரா? அவரது குடும்ப அமைப்பு எப்படி. . ? என்னிடம் இன்னும் பல கேள்விகள் ஓதப்பட்டிருந்தன. துருவித் துருவிக் கேள்விகள் கேட்பதிலும், எவரும் உணரா வண்ணம் உளவு பார்ப்பதிலும் மிகுந்த பயிற்சி தரப்பட்டிருந்தது.

இங்கு சேர் அழுதுகொண்டிருக்கிறார்.

சேர் தன் வாழ்வைச் சொன்னார். நான் “உம்உம்” என்று கேட்டுக்கொண்டிருந்தேன். யாவும் என் நெஞ்சைக் குத்திக் கிழிக்கிறது. பிறகு ஒன்று சொன்னார். நான் அலமலந்து போனேன்.

“யசோ, உங்களுக்குத்தான் இதைச் சொல்ல வேணுமெண்டு. கொட்டித் தீர்க்க ஒருவருமில்லை. நீங்கள் கேட்பியளா? உங்களுக்குப் பொறுமை இருக்கா?”

“ஓம் சேர் நான் கேப்பன். நீங்கள் சொல்லுங்கோ”

17

பஸ்சில் சேர் போகிறார். கடகடத்த பஸ்சில் இருப்போர் கொஞ்சப்பேர். முகம் வாடி, ஒல்லியான கறுத்த ஒரு பெண் சேரை நோக்கி வருகிறார். பார்த்தால் சரோ அக்கா. சேர் மறக்க முயல்கிற மனிதர்களில் அவரும் ஒருவர்.

“நீங்கள் டேவிட் தம்பி அல்லோ? ஓம் டேவிட் தம்பிதான். என்ன தம்பி எங்களையெல்லாம் மறந்திட்டீங்கள்போல. அங்கால் பக்கமே காணேல்லை. ஆளே மாறிப் போட்டுது.”

சேர் ஒரு கணம் திகைத்தார். அக்கம் பக்கம் பார்த்தார். பலர் திரும்பிப் பார்க்கிறார்கள். சரோ அக்கா பக்கத்தில் இருந்துவிட்டார்.

“டேவிட்டா? அதார்? எனக்குத் தெரியாது. நான் டேவிட் இல்லை” சேர் இறுக்கமாக முகத்தை வைத்துச் சொன்னார்.

‘நான் பொய் சொல்லிவிட்டேன். பாவப்பட்ட அப்பாவிச் சனங்களுக்கு முற்று முழுதாக எங்களை நம்பிய சனங்களுக்கு எந்த ஈவிரக்கமுமில்லாமல் சவுக்கால் அடித்தது போல் பொய் கூறிவிட்டேன்.

பொய் சொன்னேன் என்றேனா? அல்ல, உண்மையையும் சொன்னேன். இடையில் தோன்றிய டேவிட் இடையிலேயே இறந்துவிட்டான். நான் எனக்குச் சூட்டிய பெயரை நானே அழித்துவிட்டேன். இப்போது நான் அருணன்.

சரோ அக்கா அதை நம்பவில்லை. குழப்பமான முகத்துடன் இன்னொரு ஆசனத்தில் போய் அமர்ந்தார்.

சாமம் என்றும் பாராது தோழர்களுடன் போனபோது புட்டு அவித்து முட்டைப் பொரியலுடன் தந்தார். குழம்பு இல்லாத புட்டுக்கு சரோ அக்கா தன் அன்பை ஊற்றிக் குழைத்து ஊட்டினார்.

எனது இறங்கும் இடம் வந்தது. சரோ அக்காவிடம் சென்றேன். “சரோ அக்கா, நான் டேவிட்தான். எப்பிடி இருக்கிறீங்கள்? சுகமா இருக்கிறீங்களா? முந்திப் பாத்ததுக்கு இப்ப நல்லா மெலிஞ்சுபோய் இருக்கிறியள். மணியண்ணை எப்பிடி இருக்கிறார்? ஊரிலை எல்லாரையும் கேட்டதாகச் சொல்லுங்கோ”

சரோ அக்கா திகைத்துத் திரும்ப முன்னம் நான் இறங்கிவிட்டேன்’ என்று சேர் சொல்லி முடித்தார்.

18

சேர் சொன்னார் “அந்த வலி என்னை இப்பவும் தாக்கிக்கொண்டுதான் இருக்கு. என்னை நம்பின அந்த மக்களை நான் கைவிட்டிட்டன். ஏமம் சாமம் பாராமல் முட்டை பொரிச்சுபுட்டு அவிச்சுத் தந்த சரோ அக்காவுக்கு நான் டேவிட் இல்லை எண்டு சொன்னால் . .? எப்பிடிப்பட்ட பாவி நான் யசோ!”

சேர் விசித்து விசித்து அழுகிறார்.

அவரது அழுகை என்னை ஒரு பனை உயரே தூக்கி எறிந்தது. விழுந்து எழுந்து கேட்டேன்.

“ஏன் சேர் இப்பவும் நீங்கள் அரசியல் வேலை செய்யலாம்தானே?”

“இல்லை யசோ. என்னால உடனை ஏலாது. நான் இப்ப ஒருத்தரையும் குறை சொல்ல விரும்பேல்லை. காலம் போகட்டும். காலம் கனக்கக் காயங்களை மாத்தும், பாப்பம்.”

சேர் என்மீது தன் சுமைகளை இறக்கி வைத்தார். என் முதுகு அதைச் சுமக்க இயலாமல் தவித்தது. “நீங்கள் இனி என்ன செய்யப் போகிறீங்கள் சேர்? அதைத் தெளிவாச் சொல்லுங்கோ” என்றேன்.

சேர் சொல்லலானார். “நான் முற்றாக அரசியலிலை இருந்து விலகேல்லை யசோ. விலகவும் ஏலாது. என்னட்டை இப்ப இரண்டு சொத்துத்தான் இருக்கு. என்னர குடும்பம். மற்றது பள்ளிக்கூடம். பள்ளிக் கூடத்திலை நேரான வழியிலை நிண்டு படிப்பிக்கிறதும் ஒரு அரசியல்தான். அதை ஒழுங்காச் செய்வம். மற்ற அரசியல் பற்றி நான் கதைக்கிறதெண்டால் . . . ம் . .?”

சேர் நீண்ட இடைவெளி விடுகிறார். முட்டைப் பொரியல் மணக்கிறது. காங்கையை அள்ளி வீசிய வெக்கை கன்னத்தில் நீரை வழியவிடுகிறது. ஸ்ஸ் என்று காற்று ஊதி வெக்கையைப் போக்க முயன்றார் சேர். சொல்லத் தொடங்கினார்.

“யசோ, தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஒரேயொரு தீர்வு பிரிஞ்சு போறதுதான். நீங்கள் அதை எப்பிடிப் பாக்கிறீங்களோ எனக்குத் தெரியாது. நாங்கள் அதிலை மனச் சுத்தியோடை ஈடுபட்டம். நிறையத் தியாகங்கள் செய்தம். ஆனால் அதுக் கெல்லாம் இப்ப எந்த அர்த்தமும் இல்லை. இப்ப போராடுகிறவை எங்களைப் போராட்டக் களத்திலை இருந்து அப்புறப்படுத்திச்சினம். போராட்டத்தைத் தங்கன்ரை கையிலை எடுத்திச்சினம். ஆனால் அதுக்கு நாங்கள் குடுத்த விலை அதிகம். மிக மிக அதிகம். கொன்று போடப்பட்ட என் தோழர்களை நினைச்சால் இரத்தக் கண்ணீர் வடியுது யசோ. பரவாயில்லை இதிலை சரி பிழை எண்டு கதைக்க ஒண்டுமில்லை. காலம் போகட்டும். எது சரி, எது பிழை எண்டது அப்ப தெரியும். தெரியேக்கை நான் ஆசிரியரா தொடர்கிறதா அல்லது போராளியா மாறுகிறதா எண்டதைக் காலம் முடிவெடுக்கும். அப்ப பாப்பம் யசோ. இதுதான் என்ரை நிலைப்பாடு.”

கண்மூடி சேர் தியானத்தில் இருக்கிறார். “சாப்பாடு ஆயத்தம்” என்ற குரல் குசினிக்குள்ளிருந்து கேட்கிறது. “சாப்பாடு ஆயத்தமாம். எழும்புங்கோ யசோ” கை கழுவ செம்பு தந்தார் சேர்.

19

அத்தனை காட்டு வெயிலையும் குடித்துவந்தேன். பின்னேரமாக உடம்பு நடுங்கத் தொடங்கியது. காய்ச்சல் பீடித்தது தெரிந்தது. இறுதி அறிக்கையை எழுதத் தொடங்கினேன். எழுத்துக்களும் என் கையைச் சுட்டன.

“1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் நாளிலிருந்து நேற்றைய நாள் (13-9-1991) வரை எனது கண்காணிப்பிலிருந்தும் விசாரணை, தேடலிலிருந்தும் நான் கண்டறிந்த உண்மைகளை இதில் பதிகிறேன். . .”

“. . . நிறைவு செய்கிறேன் நன்றி.” பைலை மூடிக்கட்டி அண்ணையிடம் கொடுத்தேன். “அண்ணை, என்னை மன்னிக்க வேணும். என்னாலை இனி இந்த வேலை செய்ய ஏலாது. வேறை வேலை தாங்கோ” என்றேன். சினைப்பர் தூக்கக் கைகள் பரபரத்தன. பேனாவைத் தூக்கினேன்.

“என் மக்காள் உமைக் கையேந்தி நிற்கின்றேன்

நெய்யிடுங்கள் நெய்யிடுங்கள்

என் நெருப்புப் பற்றியெழ நெய்யிடுங்கள்.”

(இரவி அருணாசலம் லண்டன்வாழ் எழுத்தாளர். இவருடைய ‘பாலைகள் நூறு’ தொகுப்பு தமிழியல்/காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. இக்கதை அடுத்து வெளிவரவிருக்கும் ‘ஆயுதவரி’ தொகுப்பிலிருந்து.)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *