கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 2,751 
 

மஹாகவி பாரதியார் கூட ‘ரெளத்திரம் பழகு’ என்று சொன்னார்.

ஆனால் அவர் சொன்னது அமைதியான முறையிலான கோபத்தின் வெளிப்பாடு. கண்டிப்பாக சத்தம்போட்டு நம்மைக் கத்தச் சொல்லவில்லை.

நாம் ஏன் கோபத்தில் சத்தம் போட்டுக் கத்தணும்? கோபம் வந்தா நாம் என்ன செய்வோம்?

யார் மேல நமக்கு கோபமோ, அவங்ககிட்ட சத்தம்போட்டு சண்டை பிடிப்போம். இல்லையென்றால் சில சமயங்களில் பேசாம அப்படியே அமைதியாகி விடுவோம்.

ஆனா, எப்போதாவது சற்று யோசித்திருக்கோமா? யார் மேல நமக்கு கோபம் வந்தாலும், அவர்கள் நமக்கு மிக அருகில்தானே இருக்காங்க! பிறகு எதுக்கு ஊருக்கே கேட்கிற மாதிரி சத்தம் போட்டுக் கத்தணும்? கோபத்துடன் சொல்ல வேண்டியதை மெதுவா சொன்னாலே அவங்களுக்கு கேக்குமே!!

இப்படித்தான் ஒருமுறை ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அந்த இடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சத்தம்போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்க்க நேரிட்ட துறவி, தன் சீடர்களிடம் சிரித்துக் கொண்டே கேட்டார், “ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம் போட்டுச் சண்டை பிடிக்கிறார்கள்? சீடர்கள் சில நிமிடங்கள் யோசித்தார்கள்…

அதில் ஒரு சீடர், “கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம். அதனால் உரத்து சத்தமிடுகிறோம்…” என்றார்.

“அது சரி… ஆனால் உனக்கு மிக அருகில் இருக்கும் நபர்களிடம் ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்! கோபத்தில் நீ சொல்ல வேண்டியதை அல்லது திட்ட வேண்டியதை அவர்களுக்கு மட்டுமே கேட்கும் விதமாக எடுத்துச் சொல்லலாமே?”

சீடர்கள் ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை யோசித்துச் சொல்கிறார்கள். ஆனால் எந்த ஒரு காரணமும் வலுவாக இல்லாததால் அவர்களுக்குள் ஒரு உடன்பாடு ஏற்படவில்லை…

கடைசியாக துறவி புன்னகைத்தபடியே சொன்னார்.

“எப்பொழுது இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்று விடுகிறது. எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே சத்தம் போடுகிறார்கள்… மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம் போட வேண்டியிருக்கும். அப்பொழுதுதானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்…?

ஆனால் இதுவே இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும் அன்பான முறையிலும் தங்கள் கருத்துக்களை வெளிப் படுத்துவார்கள். காரணம், அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும். மனதிற்கு இடையேயான தூரம் மிகக் குறைவாக இருக்கும் அல்லது இரண்டு மனங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்.”

“…………………..”

“இதை விடவும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்? அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாகப் பேச தேவையே இருக்காது… அவர்களின் மனதுகள் இரண்டும் கிசு கிசுப்பாக பேசுவதில் இருந்தே அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்… இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தைகளே தேவைப்படாது! அவர்களின் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டு விடும்…

“…………………….”

“அதனால்தான் பெரும்பாலான காதல்கள் முதல் பார்வையிலேயே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டு உடலும் உள்ளமும் ஒன்றிணைந்து உருகுகின்றன… காதலர்களுக்கு தனிமை கிடைத்தவுடன் அங்கு வாய் வார்த்தைகளுக்கு இடமின்றி மனதில் மட்டும் இச்சைக் கிசு கிசுப்புகள் மட்டுமே பேசுகின்றன. அந்தக் கிசு கிசுப்புகளில் உடல் உஷ்ணமாகி ஆசையுடன் முயங்குதலில் முடிகின்றன… அதில் தவறு ஒன்றுமில்லை… மனிதகுலம் ஆசா பாசங்கள் நிறைந்தது. அன்பு, ஆவேசம், வீரம், காதல், காமம், கோபம், வெறுப்பு, பயம் போன்ற பல உணர்ச்சிகளால் ஆனது….”

“புரிகிறது ஸ்வாமி…”

துறவி சற்று நிதானித்து கடைசியாக சீடர்களைப் பார்த்துக் கனிவுடன் கூறுகிறார்…

“அதனால் இனி நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது, உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனதின் தொலைவை அதிகப் படுத்தும் வார்த்தைகளை கண்டிப்பாக உபயோகப் படுத்தாதீர்கள்.

ஒருவேளை அப்படிச் செய்யாமல் போனால் ஒரு நாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்று சேரும் பாதையே அடைக்கப்பட்டு விடும் நிலைக்கு வந்து விடும்… எனவே நிதானியுங்கள். வார்த்தைகளை கொட்டும் முன்பு சற்று யோசியுங்கள்… கொட்டிய வார்த்தைகளை திருப்பி அள்ளவே முடியாது…”

“வாஸ்தவம்தான் ஸ்வாமி…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *